🌿 மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ 🌿
பாகம் – 1
அந்தக் காட்டுக்குள் பகல் நேரமென்றாலும், இருள் சூழ்ந்திருந்தது.
பல வருடங்களாக மனிதர்களின் காலடிச் சுவடுகளையே காணாதது போல, வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நின்றிருந்தன.
அவற்றின் அடர்ந்த கிளைகளும், இலைகளும் சூரிய ஒளியையே கீழே வரவிடாமல் மறைத்திருந்தன.
மரக்கிளைகளுக்கு நடுவே காற்று உரசிச் செல்லும் சத்தம்…
எங்கோ தொலைவில் கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் அலறல்…
அவ்வப்போது புதர்களுக்குள் ஏதோ உயிரினம் ஓடும் சலசலப்பு…
என்று அந்தக் காட்டின் அமைதிக்குள் பலவிதமான சத்தங்கள் கலந்திருந்தன.
அப்படிப்பட்ட அந்த அடர்ந்தக் காட்டின் நடுவே இருந்த ஒற்றையடிப் பாதையில் மட்டும், ஒரு கார் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது.
காரின் டயர்கள் பாதையில் கிடந்த கற்களையும், உலர்ந்த மரக்கிளைகளையும் தாண்டிச் செல்லும்போதெல்லாம்,
சர்ர்ர்… சர்ர்ர்…
என்ற சத்தம் எழுந்தது.
ஸ்டியரிங்கை இறுக்கமாகப் பிடித்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தான் கந்தன்.
அவனுக்குப் பக்கத்து இருக்கையில் நிலா அமர்ந்திருந்தாள்.
காரின் பின்புற இருக்கையில் கதிர்வேலன் அமர்ந்திருந்தான்.
அவனுடைய பாதி முகம் ஒரு கைக்குட்டையால் மறைக்கப்பட்டிருந்தது.
ஜன்னலுக்கு வெளியே தெரிந்த அடர்ந்த காட்டையே பார்த்தபடி, எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய கண்களில் மட்டும் ஒரு விதமான ஏமாற்றம் தெரிந்தது.
அவன் மௌனத்தை உடைக்கும் விதமாக,
“நான் சொல்றத இங்க யாரும் கேட்டுடாதீங்க!”
என்று கந்தன் கடுப்புடன் சொல்லியபடியே, காரை காட்டுப் பாதைக்குள் திருப்பினான்.
அவன் முகத்தில் இருந்த எரிச்சல், காருக்குள் நிலவிய அமைதியையே கலைக்கும் அளவுக்கு இருந்தது.
“போதும் கந்தன். இன்னும் எவ்வளவு நேரம்தான் எங்களை இப்படித் திட்டிக்கிட்டே வருவீங்க?”
என்று நிலா அவனை முறைத்தபடி கேட்டாள்.
“பின்ன என்ன? இப்போ நீங்க ரெண்டு பேரும் லண்டன் போகலைன்னு யாரு அழுதாங்க?”
என்று கந்தன் கேலியாகக் கேட்டதும்,
“அவ்வளவு பெரிய இடத்துல இருந்து கதிருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்குதுன்னா சும்மாவா? ஏன், உங்களுக்குத் தெரியாதா? இந்த மருத்துவ சேவைக்காக கதிர் இழந்தது கொஞ்ச நஞ்சமா?”
என்றவள் குரலில் கதிர்வேலனைப் பற்றிய பெருமையும், அவன் செய்த தியாகத்தின் மீதான வலியும் கலந்திருந்தது.
அதைக் கேட்ட கந்தன் மீண்டும் அவளை முறைத்தான்.
“ஆமா… எது சொன்னாலும் திருப்பித் திருப்பிப் பேசு!”
என்று அவன் பற்களைக் கடித்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
“அரை மணி நேரத்துல போக வேண்டிய இடத்துக்கு இப்போ பாரு… காட்டைச் சுத்திக்கிட்டு போக வேண்டியதா போச்சு!”
என்று அவன் மேலும் கோபம்க்கொண்டான்.
“நான் என்ன பண்ணுறது? GPS-ல இதுதான் குறுக்கு வழின்னு காட்டுச்சு.”
என்று நிலா அப்பாவியாகச் சொன்னவள்,
“சரி, சரி… கந்தா… சீக்கிரம் போங்க.”என்றாள்.
ஸ்டியரிங்கைத் திருப்பியபடி கந்தன் அவளை ஒருமுறை பார்த்தான்.
“இரு, இரு… போறேன். இவ்வளவு அவசரப்பட்டா நம்ம சரியான இடத்துக்குப் போறோமோ இல்லையோ… நேரா பரலோகத்துக்குத்தான் போகணும்!”
என்று எச்சரித்தவன், காரை சீரான வேகத்தில் செலுத்தினான்.
இருப்பினும் நிலாவின் பதற்றத்தைப் பார்த்தவன்,
“எப்படியும் நம்ம போகும்போது நல்ல செய்திதான் கிடைக்கும்.”
என்று நம்பிக்கையுடன் சொல்ல,
நிலா அவனைப் பார்த்தாள்.
அவன் சொன்ன அந்த “நல்ல செய்தி” என்ன?
அவர்கள் எங்கே செல்கிறார்கள்?
அவர்களுடன் பின்புறம் பாதி முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்திருப்பவன் யார்?
எதற்காக இவ்வளவு அவசரமாக அந்த அடர்ந்த காட்டைத் தாண்டிச் செல்கிறார்கள்?
என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்போது எந்தப் பதிலும் இல்லை.
ஆனால்…
அந்தப் பயணம் அவர்களின் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்பதை மட்டும், அந்த மூவரில் யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை.
—
அவர்கள் மூவரும் காரில் பயணித்துக் கொண்டிருக்க,
“காப்பாத்துங்க…!”
என்ற குரல் திடீரென்று காட்டின் அமைதியைக் கிழித்துக்கொண்டு கேட்டது.
“காப்பாத்துங்க…! யாராவது காப்பாத்துங்க…!”
என்று மீண்டும் அந்தக் குரல் கேட்க,
கந்தனின் கால்கள் தானாகவே பிரேக்கை நோக்கிச் சென்றன.
“என்ன சத்தம் அது?”
என்று நிலா பதற்றத்துடன் கேட்கும் முன்பே,
புதர்களை விலக்கிக்கொண்டு ஒரு பெண் அவர்களை நோக்கி ஓடி வந்தாள்.
அவளுடைய உடை முழுவதும் மண்ணாகியிருந்தது.
தலைமுடி கலைந்து, முகம் முழுவதும் வியர்வை வழிந்தது.
அவளுடைய கண்களில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பயம் தெளிவாகத் தெரிந்தது.
அதிலும்…
அவள் நிறைமாத கர்ப்பிணி.
ஒரு கையால் தன்னுடைய வயிற்றைப் பிடித்துக்கொண்டும், இன்னொரு கையால் புதர்களைத் தள்ளிக்கொண்டும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்தவள், அடுத்த நொடியே கந்தன் ஓட்டிய காரின் முன்னால் வந்து மோதினாள்.
தடாம்!
என்ற சத்தத்தோடு கார் திடீரென நின்றது.
“ஷீட்!”
என்று கந்தன் அதிர்ச்சியில் கத்தினான்.
அவனும் நிலாவும் வேகமாகக் காரிலிருந்து இறங்கினர்.
கந்தன் அந்தப் பெண்ணை நோக்கி ஓடிச் செல்ல, அவள் கீழே விழுந்து மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த கந்தனுக்கே கோபம் வந்துவிட்டது.
“என்னம்மா… காட்டுக்குள்ள ஓடி, பிடிச்சு விளையாடுறியா? நீ விழுந்து சாவதுக்கு என் வண்டிதான் கிடைச்சதா?”
என்று அவன் கத்தினான்.
ஆனால் அந்தப் பெண் அவன் பேச்சைக் கூட கவனிக்கவில்லை.
அவள் மீண்டும் மீண்டும் தன்னுடைய பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய முகத்தில் தெரிந்த பயத்தைப் பார்த்ததும் நிலாவின் பார்வை மாறியது.
“கந்தா…”
என்று அவள் மெதுவாக அழைத்தவள்,
“இவங்களைப் பார்த்தா ஏதோ பெரிய பிரச்சனையில இருக்கிற மாதிரி தெரியுது. முதல்ல இவங்களைக் காப்பாத்தலாம்.”
என்றாள்.
அப்போது,
“ஏய்! அதோ அங்க இருக்கிறாடா!”
என்ற ஒருவனின் குரல் காட்டுக்குள் இருந்து கேட்டது.
அனைவரும் அந்தத் திசையை நோக்கிப் பார்த்தனர்.
இரண்டு ஆட்கள் வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தனர்.
“அவளைப் புடி டா!”
என்று ஒருவன் கத்தினான்.
அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று வெண்மையாகிப் போனது.
அவள் உடனே கந்தனை நோக்கி ஓடி வந்து, அவனுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு கும்பிட்டாள்.
“அண்ணா… என்னைக் காப்பாத்துங்க…”
என்று அவளுடைய குரல் நடுங்கியது.
கந்தன் அவளைப் பார்த்தான்.
பின்னர் அவளைத் துரத்திக்கொண்டு வந்தவர்களைப் பார்த்தான்.
அவர்களில் ஒருவன் கந்தனைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.
“ஏய்… நீ என்ன ஹீரோவா? இவளைக் காப்பாத்த?”
என்று அவன் கேட்க,
“நான் ஹீரோவெல்லாம் இல்லை. நான் காமெடியன் தான். நீ ஹீரோவை பார்க்கணும்னு ஆசைப்பட்டா சொல்லு… சீக்கிரம் காட்டிடலாம்!”
என்று கந்தன் நக்கலாகச் சொன்னான்.
“ஏய்! இவன்கிட்ட என்ன பேச்சு?”
என்று ஒருவன் கோபமாகக் கத்தினான்.
“முதல்ல இவளை இழுத்துட்டு வா!”
என்று மற்றவனிடம் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை நோக்கி வந்தான்.
“வேண்டாம்…”
என்று அந்தப் பெண் பயத்தில் பின்னோக்கி நகர்ந்தாள்.
“நான் வரமாட்டேன்!”
என்று அழுதாள்.
அவளுடைய கை அவனுடைய பிடியில் சிக்கிக்கொண்டது.
அப்போது நிலா முன்னே வந்து,
“கந்தா… இவங்க ஏதோ பெரிய பிரச்சனையில இருக்காங்க. நம்ம இவங்களைக் காப்பாத்தணும்.”
என்றாள்.
“ம்… முதல்ல இவங்களைக் காருக்குள்ள கூட்டிட்டு போ!”
என்று கந்தன் சொல்ல,
நிலா அந்தப் பெண்ணைத் தாங்கிக்கொண்டு காரை நோக்கி அழைத்துச் சென்றாள்.
அவள் காருக்குள் ஏறி அமர்ந்தவுடன், அங்கிருந்த ஒருவன் மீண்டும் அவளுடைய கையைப் பிடித்து வெளியே இழுக்க முயன்றான்.
“வா வெளியே!”
என்று அவன் மிரட்ட,
அந்தப் பெண் பயத்தில் அலறினாள்.
“வேண்டாம்! என்னை விடுங்க!”
என்று அவள் கதறிய அந்த நொடி,
அதுவரை காரின் பின்புற இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்த கதிர்வேலன், முகத்தில் இருந்த கைக்குட்டையைத் தூக்கி வீசியபடி எழுந்தான்.
அவனுடைய கண்கள் மட்டும் தீப்பொறி போல மின்னின.
கதிர்வேலன் ஒரே தாவலில் முன்னே வந்து, அந்தப் பெண்ணின் கையைப் பிடித்திருந்தவனுடைய மணிக்கட்டைப் பற்றினான்.
அவனுடைய பிடி இரும்புப் பிடி போல இறுகியது.
“கையை விடு.”
என்று தன் எதிரில் இருந்தவனை எச்சரித்தான்.
“யாருடா நீ?”
என்று அந்த அடியாள் கோபமாகக் கேட்க,
அடுத்த நொடி,
கதிர்வேலன் பளார்! என்று எதிரே இருந்தவனின் கன்னத்தில் அறைய, அவன் தடுமாறிக் கீழே விழுந்தான்.
அப்போது மற்றவன் கதிர்வேலனை நோக்கிப் பாய்ந்து வந்தான்.
ஆனால் கதிர்வேலன் அவனை எதிர்கொண்ட விதமே வேறு.
ஒரு அடி…
இன்னொரு அடி…
என்று அவன் தாக்கிய ஒவ்வொரு முறையும், எதிரில் வந்தவன் பின்னோக்கி வீசப்பட்டான்.
சில நொடிகளில் அந்த இருவரும் எழுந்து நிற்கக்கூட முடியாமல் தடுமாறினர்.
ஆனாலும் வந்த வேலையை முடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அந்த அடியாட்கள், கர்ப்பிணிப் பெண் என்பதைக்கூட பார்க்காமல் மீண்டும் காரில் இருந்த அவளை வெளியே இழுத்தார்கள்.
அவன் இழுத்த வேகத்தில்,
“ஆ….!”
என்று அந்தப் பெண்ணின் அலறல் கேட்டது.
அனைவரும் அவளை நோக்கித் திரும்பினர்.
அவள் தன்னுடைய வயிற்றைப் பிடித்துக்கொண்டு வலியால் துடித்தாள்.
“அம்மா…!”
என்று அவள் எழுப்பிய அலறல், காட்டின் நான்கு திசைகளிலும் எதிரொலித்தது.
அவளுடைய நிலையைப் பார்த்த நிலா, பதற்றத்துடன் அவளருகே ஓடினாள்.
“என்னாச்சு?”
என்று அவள் கேட்க,
அந்தப் பெண் வலியால் பேச முடியாமல் மூச்சை இழுத்தாள்.
“வ… வயிறு… ரொம்ப வலிக்குது…”
என்று அவள் கதறியதும்,
“கதிர்!”
என்று நிலா பதற்றமாக அழைத்தாள்.
அந்த நேரத்தில் கதிர்வேலன், அந்தப் பெண்ணைக் கீழே இழுத்தவனின் நெஞ்சில் காலை வைத்து அவனை மிதித்துக்கொண்டிருந்தான்.
“ஐயோ கதிர்… சீக்கிரம் வா! இவங்களுக்கு labour pain வந்துருச்சு!”
என்று நிலா கத்தியதும், கதிர்வேலன் உடனே அவர்களை நோக்கி ஓடி வந்தான்.
தரையில் நிறைமாத கர்ப்பிணியாக வலியால் துடித்தபடி கிடந்த அந்தப் பெண்ணை ஒரு பார்வை பார்த்தவனுக்கு, சூழ்நிலை புரிந்துவிட்டது.
அவசரமாக காருக்குச் சென்றவன், அதிலிருந்த தன்னுடைய மருத்துவப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தான்.
“டேய் மச்சான்… என்னடா பண்ணப் போற?”
என்று கந்தன் புரியாமல் கேட்க,
“டெலிவரி பார்க்கப் போறேன்.”
என்றான் கதிர்வேலன்.
அந்த ஒரு பதிலில் கந்தனின் கண்கள் விரிந்தன.
அந்தக் காட்டின் நடுவே இருந்த அந்த ஒற்றையடிப் பாதை
அடுத்த சில நிமிடங்களில் ஒரு தற்காலிக மருத்துவ அறையாக மாறியது.
“நிலா… நான் சொல்ற மாதிரி பண்ணு.”
என்று கதிர்வேலன் சொல்ல, தன் முழு கவனத்தையும் அந்தப் பெண்ணின் பிரசவத்தில் செலுத்தினான்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், வலியால் துடித்த அந்தப் பெண்ணின் அலறல் காட்டையே அதிர வைத்தது.
“இருங்க… அவ்ளோதான். இன்னும் கொஞ்ச நேரம்தான். தைரியமா இருங்க…”
என்று நிலா அவளைத் தைரியப்படுத்திக்கொண்டிருந்தாள்.
கதிர்வேலனோ, தன்னிடம் இருந்த மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி மிகவும் கவனமாக அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த நொடியில்…
வீல்… வீல்…!
என்று ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகைச் சத்தம் காட்டின் அமைதியைக் கிழித்தது.
குழந்தையின் அழுகை கேட்டதும் கந்தன் அங்கேயே உரைந்து போய் நின்றான்.
நிலாவின் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்ந்தது.
கதிர்வேலன் தன் கையில் இருந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்துவிட்டு, பிரசவித்த பெண்ணை நோக்கினான்.
“உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குது.”
என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்தப் பெண் தன் கண்களைத் திறந்து தான் பெற்றெடுத்த குழந்தையைப் பார்க்க முயன்றாள்.
அவளுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.
அந்தக் கண்ணீரில் வலி இருந்ததா…
நிம்மதி இருந்ததா…
அல்லது தன் குழந்தையைப் பார்த்த மகிழ்ச்சியா…
என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
அப்போது கதிரின் கையில் இருந்த குழந்தைக்கு நிலா அவள் சுடிதாரின் துப்பட்டாவைப் போர்த்திவிட்டவள், அந்தப் பெண்ணைப் பார்த்து திடீரென்று பதற்றமடைந்தாள்.
“கதிர்… இந்தப் பொண்ணுக்கு bleeding அதிகமா இருக்கு. உடனே stitches போடணும்.”என்றாள்.
“அப்போ உடனே நம்ம ஹாஸ்பிட்டலுக்கே அழைத்துக்கொண்டு போகலாம்.”
என்று கந்தன் கூறினான்.
அவன் அப்படிச் சொன்னதும், கதிர்வேலன் தன் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தான்.
பின்னர் தன் எதிரே அரை மயக்கத்தில் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான்.
அவளுடைய கழுத்தில் மாங்கல்யம் இருந்தது. பார்க்கவே மிகவும் இளம் பெண்ணாகத் தெரிந்தாள். அதிகபட்சம் இருபது, இருபத்தொரு வயதுதான் இருக்கும் போலிருந்தது.
யார் இந்தப் பெண்?
எதற்காக இவளை அந்த இரண்டு பேரும் துரத்திக்கொண்டு வந்தார்கள்?
என்று கதிர்வேலனின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.
அந்த நேரத்தில்
கந்தனின் கைபேசி சிணுங்கியது.
அவன் உடனே கைபேசியை எடுத்து,
“ஹலோ… சொல்லுங்க ராஜி.”
என்று பேசத் தொடங்கினான்.
மறுமுனையில் இருந்த ராஜி சொன்ன செய்தியைக் கேட்டதும் அவனுடைய முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.
“சார்… டாக்டர் கதிர்வேலனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.”
என்று ராஜி நற்செய்தியைச் சொன்னாள்.
“டேய் மச்சான்… உனக்கு—”
என்று கந்தன் உற்சாகமாக கதிர்வேலனிடம் சொல்ல வர,
“சார்… ஆனா அவரோட wife கண்மணி…”
என்று ராஜி ஏதோ சொல்ல முற்பட்டாள்.
ஆனால் அவள் தன் வார்த்தையை முடிப்பதற்குள்,
காட்டுக்குள் கருப்பு நிற ஜீப் ஒன்று வேகமாக வந்து நின்றது.
ஜீப்பிலிருந்து கருப்பு புடவையில், நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு, மங்கலம் என்ற ஐம்பது வயது பெண்மணியும், அவளுடன் சில ஆட்களும் வேகமாகக் கீழே இறங்கினர்.
மங்கலத்தின் பார்வை நேராக கதிர்வேலனின் கையில் இருந்த பச்சிளம் குழந்தையின் மீது பதிந்தது.
“டேய்… குழந்தை பிறந்துடுச்சுன்னு உடனே அய்யாகிட்ட தகவல் சொல்லுங்க!”
என்று சொன்னவள், அடுத்த நொடியே குழந்தையைப் பெற்றெடுத்திருந்த பெண்ணை நோக்கி விரலை நீட்டினாள்.
“டேய்… முல்லைப்பூவை பத்திரமா ஜீப்புல ஏத்துங்க!”என்றாள்.
“முல்லைப்பூ …?”
“ஓ… இந்தப் பொண்ணு பேர் முல்லையா?”
என்ற நிலாவின் கேள்வி முடியும் முன்னரே, மங்கலத்தின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட அடியாட்கள் முல்லையை நெருங்கி வந்தனர்.
அவர்கள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த முல்லையின் கண்களில் மீண்டும் பயம் படர்ந்தது.
“என்னை அவங்க கூட அனுப்பிடாதீங்க…”
என்று கெஞ்சியவள்,
“என்னையும்… இந்தப் பிள்ளையையும் காப்பாத்துங்க…”
என்று கையெடுத்து கும்பிட்டாள்.
அடுத்த நொடியே அவள் அப்படியே முழுவதுமாக மயங்கி நிலாவின் மடியில் சரிந்தாள்.
“முல்லை!”
என்று நிலா பதறியபடி அவளைத் தாங்கிக்கொண்டாள்.
முல்லையை உற்றுப் பார்த்த கதிர்வேலனுக்கு, அவளுடைய பின்னணி என்னவென்று யோசிக்கக்கூட நேரமில்லை.
அவன் கையில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தை அழும் சத்தம் அவனுடைய காதில் விழுந்தது.
அதே நேரத்தில் கந்தனின் குரலும் அவன் செவியில் ஒலிக்க,
“மச்சான்… உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்குடா!” என்றான்.
அந்த நேரத்தில் கதிர்வேலனின் மனம் முழுவதும், தனக்கும் கண்மணிக்கும் பிறந்த பெண் குழந்தையைப் பற்றிய மகிழ்ச்சியிலேயே இருந்தது.
அதே சமயம், அவன் கைகளில் முல்லை பெற்றெடுத்திருந்த ஆண் குழந்தை இருந்தது.
அந்தக் குழந்தையை மங்கலம் அவனிடமிருந்து வாங்குவதற்காக அவனருகே வந்து கையை நீட்டினாள்.
கதிர்வேலன் குழந்தையை அவளிடம் கொடுக்க முயன்றபோது, அவனுடைய சட்டையைப் பற்றிக்கொண்டிருந்த குழந்தையின் சின்னஞ்சிறிய விரல்கள் அவன் கவனத்தை ஈர்த்தன.
ஒரு கணம்
அவன் அப்படியே நின்றுவிட்டான்.
அவ்வளவு சிறிய குழந்தை
அவனுடைய சட்டையை இறுகப் பற்றிக்கொண்டிருந்தது.
அந்தக் காட்சியைப் பார்த்த கதிர்வேலனின் மனதில் ஏதோ ஒரு சிறிய தயக்கம் தோன்றியது.
அதே நேரத்தில், நிலாவின் மடியில் மயக்கமாகக் கிடந்த முல்லையின் முகம் அவன் பார்வையில் பட்டது.
சில நிமிடங்களுக்கு முன்புதான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி வந்தவள்.
இப்போது தன் குழந்தையைக்கூட காப்பாற்ற முடியாத நிலையில் மயங்கிக் கிடந்தாள்.
“என்னையும் இந்தப் பிள்ளையையும் காப்பாத்துங்க…”
என்று அவள் கெஞ்சிய வார்த்தைகள் கதிர்வேலனின் காதுகளில் மீண்டும் ஒலித்தன.
ஆனால் அடுத்த நொடியே, அவன் மனதில் தோன்றிய அந்தத் தயக்கத்தை ஒதுக்கிவிட்டான்.
குழந்தையின் சின்னஞ்சிறிய கையை தன் சட்டையிலிருந்து மெதுவாக எடுத்தவன், குழந்தையை மங்கலத்திடம் கொடுத்தான்.
மங்கலம் குழந்தையை வாங்கிக்கொண்டவள், “தலப்பிள்ளை” என்று விஷமமாகச் சிரித்தாள்.
அதே நேரத்தில், அவளுடன் வந்த அடியாட்கள் மயக்கத்தில் இருந்த முல்லையைத் தூக்கிக்கொண்டு ஜீப்பை நோக்கிச் சென்றனர்.
முல்லையையும் குழந்தையையும் ஜீப்புக்குள் ஏற்றியதும், அவர்கள் அனைவரும் யாருக்காகவோ காத்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் எங்கே செல்லப் போகிறார்கள்?
எதற்காக முல்லையைத் தூக்கிச் செல்கிறார்கள்?
என்ற கேள்விகளுக்கு அங்கே இருந்த யாரிடமும் பதில் இல்லை.
“முல்லை…”
என்று நிலா பதற்றத்துடன் அழைத்தபோதும், மயக்கத்தில் இருந்த முல்லையால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.
குழந்தையையும் முல்லையையும் ஜீப்பில் ஏற்றிய பிறகும், கதிர்வேலன் மட்டும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.
அவனுடைய பார்வை ஜீப்புக்குள்ளிருந்த அந்தப் பச்சிளம் குழந்தையின் மீதே இருந்தது.
அவன் மனதில் முல்லையின் பயந்த முகம் மீண்டும் மீண்டும் தோன்றியது.
காதுகளில் அவள் கெஞ்சிய வார்த்தைகளும் ஒலித்துக்கொண்டிருந்தன.
“என்னையும் இந்தப் பிள்ளையையும் காப்பாத்துங்க…”
அந்தக் குரல் மட்டும் அவனை விட்டு அகலவில்லை.
அதே நேரத்தில், சில நிமிடங்களுக்கு முன்பு”தனக்கும் கண்மணிக்கும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது”என்று கந்தன் சொன்ன செய்தியும் அவன் நினைவுக்கு வந்தது.
ஒருபுறம் தனக்குக் கிடைத்த அந்த இனிய செய்தியின் மகிழ்ச்சி.
மறுபுறம் தன் கண் எதிரே ஒரு பெண்ணும், அவள் பெற்ற பச்சிளம் குழந்தையும் மர்மமான மனிதர்களின் கைகளில் சிக்கியிருக்கும் காட்சி.
இரண்டும் ஒன்றாக அவன் மனதை குழப்பியது.
கதிர்வேலன் ஜீப்பை நோக்கிப் பார்த்தபடி தனக்குள் பல கேள்விகளை கேட்டுக்கொண்டான்.
“யார் இந்த முல்லை?”
“எதற்காக இவளை இவர்கள் துரத்திக்கொண்டு வந்தார்கள்?”
“இந்தக் குழந்தையை எங்கே அழைத்துச் செல்லப் போகிறார்கள்?”
அவனுக்குள் எழுந்த எந்தக் கேள்விக்கும் அப்போது பதில் இல்லை.
ஆனால்…
அந்தப் பெண்ணும், அவள் பெற்ற அந்தப் பச்சிளம் ஆண் குழந்தையும் அவனுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இடத்தைப் பெறப் போகிறார்கள் என்பதை மட்டும் அப்போது கதிர்வேலன் அறிந்திருக்கவில்லை.
–தொடரும்…