Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 25

CHAPTER 25

மனசு – 25

By karuppiahrajesh70@gmail.com · November 17, 2026

0

​மதில் தாண்டுமா மனசு-25​

சந்தோஷின் இறப்பு கனகத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. அந்தத் துயரத்தில் உலகச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டவராக, அவர் ஒரு கூட்டுக்குள் முடங்கிப் போனார். தாயின் இந்த நிலையைப் பற்றி ஆனந்தன் மீனாவிடம் எடுத்துச் சொல்ல, மீனா தன் கணவர் சங்கருடன் இணைந்து கனகத்தை அந்தத் துயரத்திலிருந்து மீட்டெடுக்கப் புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்தத் தொடங்கினாள்.​மீனா, ஆனந்தனிடம் போனில் தொடர்பு கொண்டு, “அண்ணா… அம்மாவை கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறோம்” என்று கேட்க, ஆனந்தனும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.​அதனைத் தொடர்ந்து, கனகத்தைச் சந்தித்த சங்கரும் மீனாவும் அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். ஆனால் கனகமோ, “என்னால் அங்கிருந்து வர முடியாது” என்று மறுப்பு தெரிவித்து உறுதியாக நின்றார். வேறு வழியில்லாமல், “ஆனந்தனும் அனுஷாவும் இனிமேலாவது ஒண்ணா, சந்தோஷமா வாழ வழிவிட்டுக் கொஞ்ச நாளைக்கு எங்களோட வந்து இரும்மா…” என்று ரகசியம் சொல்வதைப் போலக் கனகத்தின் மனதை மாற்றினாள் மீனா.​கனகம், மீனா வீட்டுக்குச் சென்ற நாளிலிருந்து, அந்த வீடு முழுமையாக ஆள் அரவமற்ற வீடு போலக் காட்சி தந்தது. இதுவரை அனுஷா வீட்டுக்குள் தனியாக இருந்தாலும், கனகம் வீட்டின் ஒரு ஓரத்தில் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்தாள். ஆனால், இப்போது கனகமும் இல்லாததால், தனிமை அவளை அப்பட்டமாகச் சூழ்ந்தது. தனியாக இருக்கும் அனுஷாவிற்குத் தொலைக்காட்சிப் பெட்டியே துணையானது. எந்த நேரமும் தொலைக்காட்சியை ஓட விட்டுக்கொண்டு அதன் முன்பு அமர்ந்திருந்தாள். சமையல் வேலை செய்யவோ அல்லது வேறு எங்கு சென்றாலும் கூட, வீட்டில் ஒரு பேச்சுத் துணை இருப்பது போன்ற உணர்விற்காகத் தொலைக்காட்சி ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.​மூன்றாவது நாளில், ஆனந்தன் வேலைக்குச் சென்றுவிட, அனுஷா மட்டும் தனியாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தொலைக்காட்சியின் முன்பு வந்து அமர்ந்தாள். ஏற்கனவே பார்த்த பழைய படங்களையே திரும்பத் திரும்பப் பார்ப்பதற்குப் பிடிக்காமல், கார்ட்டூன் சேனலைத் திருப்பினாள். அதில் சந்தோஷ் எப்போதும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கும் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ நிகழ்ச்சியை ஓட விட்டுச் சோபாவில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.​அருகில் சந்தோஷின் மர நாற்காலி வெறுமையாய்க் கிடந்தது. அதைப் பார்த்தவளுக்கு, அதில் சந்தோஷ் அமர்ந்து கைதட்டி, “அக்கா… அக்கா…” என்று மழலைக் குரலில் அழைப்பது போன்ற பிரமை தோன்றியது. பயந்து போனவள், வேகமாக எழுந்து சென்று வாசலில் நின்று கொண்டாள். அவ்வப்போது வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பதோடு, அந்த நாற்காலியையும் சேர்த்துப் பார்த்துத் தன்னுடைய பயத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டாளே தவிர, அங்கு யாரும் இல்லை என்று அவள் மனம் நம்ப மறுத்தது. மாலை ஆனந்தன் வீடு திரும்பும் வரை வாசலிலேயே அமர்ந்து, வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டு, தண்ணீர் கூடக் குடிக்க உள்ளே வரப் பயந்து அங்கேயே அமர்ந்து விட்டாள்.​ஆனந்தன் வந்தவுடன் அவனோடு வீட்டுக்குள் வந்தவள், அவனுக்கான உணவைப் பரிமாறிக் கொண்டே, “இன்னைக்கு சந்தோஷோட நாற்காலியில அவன் உட்கார்ந்திருக்கிற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்கா இருந்தது ஆனந்த்” என்றாள்.​”ம்… நீங்க பயந்துட்டீங்களா அனு?”​அனுஷா ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.​”அதனாலதான் வெளியே நின்னுட்டு இருந்தீங்களா? சரி, சாப்பிட்டீங்களா?”​அனுஷா இல்லை என்பது போல் தலையசைக்க, “சரி, என்னோட சேர்ந்து சாப்பிடுங்க” என்று அவளையும் அமரச் சொல்லி, இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டு முடித்தார்கள்.​கையைக் கழுவிக் கொண்டவன், “இத்தனை காலமும் நம்மளோட வாழ்ந்தவன் தானே… எதற்காகப் பயப்படுறீங்க?” என்றான்.​”ஆனந்த்… சந்தோஷ் உயிரோட இருந்திருந்தா எனக்குப் பயம் இருந்திருக்காது. அவன் இறந்து போனது தெரிஞ்ச பிறகு, அவனோட உருவத்தை நினைச்சாலே பயமாத்தான் இருக்கு.”​”சரி அனு, இன்னும் ஒரு நாள் தானே லீவுல இருப்பீங்க? அடுத்து ஸ்கூல் கிளம்பிடுவீங்க, ஒண்ணும் பயமில்லை.”​அனுஷா சற்றுத் தயங்கி, “அப்புறம் ஆனந்த்… நீங்க என்னோட கட்டில்ல படுத்துக்கோங்க” என்று தனது பயத்தின் பாதுகாப்புக்காகக் கோரிக்கை வைத்தாள்.​ஆனந்தன் மெல்லச் சிரித்தபடி, “சரி அனு” என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் இருவரும் படுக்கைக்குச் சென்று ஒரே கட்டிலில் படுத்துக் கொண்டார்கள். ஆனால், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் புறம் திரும்பிப் படுத்துக் கொண்டார்கள்.​மறுநாள் காலையில் முதல் ஆளாக விழித்திருந்தாள் அனுஷா. அவள் விழித்து எழுந்ததும் பார்த்த முதல் காட்சி ஆனந்தனின் மார்புதான். அனுஷா இரவு முழுவதும் ஆனந்தனின் நெஞ்சத்தில் தலை வைத்து உறங்கியிருந்தாள்!​’அச்சச்சோ! எப்போ இவர் மேல வந்து படுத்தோம்?’ என்று பதறியவள், மெல்லத் தலையை எடுக்க, ஆனந்தனும் விழித்துக் கொண்டான். அனுஷா சிரித்தபடி, “குட் மார்னிங்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து கொண்டாள்.​மறுநாள் இரவு, அவனைக் கீழே படுக்கச் சொல்லலாமா என்று யோசித்துப் பார்த்தாள். ‘நாம வேணும்னா கட்டில்ல படுக்கச் சொல்லிட்டு, இப்போ வேண்டாம் கீழே படுங்கன்னு சொல்றது தப்பு’ என்று அவளுக்குள்ளேயே தீர்மானம் செய்து கொண்டவள், ‘இன்று அவன் அருகில் நெருங்கிச் சென்று விடக்கூடாது’ என்ற உறுதியோடு நெடுநேரம் விழித்துக் கொண்டே படுத்திருந்தாள். எப்போது உறங்கினாள் என்று தெரியாமல் உறங்கிப் போக, காலையில் முதலில் விழித்த அனுஷா, தான் படுத்திருந்த இடத்திலேயே படுத்திருந்ததை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டாள். ஆனால், ஆனந்தன் அவளைப் பின்புறத்திலிருந்து அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்!​இப்போது அவனது செய்கையில் அவளுக்குக் கோபம் வரவில்லை; மாறாக, அனுஷாவின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. அவனது கையை மெல்ல விலக்கி விட்டு எழுந்து சென்று குளித்து முடித்தவள், ஆனந்தன் எழுந்தவுடன் அவனுக்குப் புன்னகையுடன் “குட் மார்னிங்” சொன்னாள். அன்று பள்ளி வேலை நாள் என்பதால் பள்ளிக்குச் சென்று விட்டாள்.​மதிய உணவு வேளையில், எத்தனையோ நாட்களாக இல்லாத ஒரு புத்துணர்ச்சி தன் மனதில் இருப்பதை நினைத்துப் பார்த்தாள். அதற்குத் தன்னுடைய ஆழ்ந்த உறக்கமே காரணம் என்று புரிந்து கொண்டாள். ஆழ்ந்த உறக்கம் எப்போது வரும்? நிம்மதியும் பாதுகாப்பும் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் நேரத்தில் தானே உறக்கம் ஆழ்ந்ததாக வரும்! அப்படியென்றால், ஆனந்தன் அருகில் இருப்பதை அவள் மனது பாதுகாப்பாக உணர்ந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.​ஆனந்தனுக்கும் அதே உணர்வுதான்! ஆனால், ‘நேற்று போல் இன்றும் தொடருமா?’ என்ற ஏக்கமும் அவன் மனதிற்குள் இருந்தது. அனுஷா அன்றும் எதுவும் மறுப்பு சொல்லாமல் இருந்து கொள்ள, இந்த நெருக்கமான உணர்வு அவர்களுக்குள் ஒரு புதிய ஈர்ப்பை உண்டாக்கியது. சில நாட்கள் கண்ணியம் காத்தவர்கள், ஒருநாள் மனமொத்த கணவன் மனைவியாகவும் கலந்து விட்டார்கள்.​மறுபுறம், கனகம் மீனாவின் வீட்டுக்கு வந்து மூன்று மாத காலங்கள் ஆகிவிட்டிருந்தது. எப்போதும் சந்தோஷின் நினைவுகளே அவருக்குள் நிழலாடிக் கொண்டிருந்தது. தன் மகன் இறந்து விட்டான் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படியும் தன்னைத் தேடி அவன் வந்து விட வேண்டும் என்று வேண்டாத தெய்வங்கள் இல்லை.​மீனாவுக்கும் சங்கருக்கும், ‘கனகத்தை எப்படித் தேற்றப் போகிறோம்?’ என்ற கவலை ஒருபுறமும், ‘ஆனந்தனும் அனுஷாவும் எப்படி வாழப் போகிறார்களோ?’ என்ற கவலை மறுபுறமுமாகச் சுட்டுக் கொண்டிருந்தது. மீனாவின் மாமனார் மாமியாரான லட்சுமிக்கும் நாராயணனுக்கும் கனகத்தைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. அவரது நிலை இன்னும் மோசமடைவதைக் கண்கூடாகக் கண்ட அவர்கள், அவ்வப்போது ஆறுதல் தெரிவிக்கும் விதமாகக் கனகத்திடம், “உங்க சின்னப் பையன், உங்க மூத்த பையனுக்கு மகனாப் பிறந்து வந்துடுவாரு” என்று சொல்லி ஆறுதல்படுத்துவார்கள். கனகத்திற்கும், ‘அப்படி நடந்தால் சந்தோஷம்தான்… ஆனால் அனுஷாவும் ஆனந்தனும் எப்போதும் விலகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே!’ என்ற வருத்தமும் அவரை அரித்துக் கொண்டிருந்தது.​இந்நிலையில், அனுஷா ஒரு நாள் காலையில் எழுந்து கட்டிலில் அமர்ந்தாள். ஆனால், தலைகீழாக உலகம் சுழல்வது போன்ற உணர்வை அடைந்து, மீண்டும் ஆனந்தன் மேல் சரிந்து விழுந்தாள். ஆனந்தன் பதறியடித்து எழுந்தவன், “என்னாச்சு? என்னாச்சு?” என்று அவளது கன்னம் தட்டிக் கேட்டான்.​”என்னன்னு தெரியல ஆனந்த்… தலை சுத்துற மாதிரி இருக்கு.”​”நைட் அப்படி என்ன சாப்பிட்டீங்க? நேத்து நீங்க லேட்டா தான் சாப்பிட்டீங்க, ஜீரணித்திருக்காதுன்னு நினைக்கிறேன். இருங்க, சுக்குத் தண்ணி போட்டு எடுத்துட்டு வரேன்.”​”ஆனந்த், ஒண்ணும் பயப்படாதீங்க. அதெல்லாம் வேண்டாம்… சுகர் லெவல் கூடியிருக்குமோ என்னமோ?” என்று தடுத்தாள் அனுஷா.​”எதுவா இருந்தாலும் சுக்குத் தண்ணீர் சரி பண்ணிடும்” என்று ஆனந்தன் கைவைத்தியத்தைச் செய்து கொண்டு வந்தான். அனுஷா சிறிது நேரத்தில் எழுந்து சென்று முகம் கழுவிக்கொண்டு, மீண்டும் வாந்தி எடுத்தபடி ஓய்ந்து போனாள். ஆனந்தன் தான் கொண்டு வந்த சுக்கு நீரைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னான். அதையும் குடித்தாள், ஆனால் அதுவும் நெஞ்சில் இருந்து இறங்க மறுத்து வெளியேறிவிட்டது.​”அனு, எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. வாங்க உடனடியா ஹாஸ்பிடல் போகலாம்” என்று ஆனந்தன் பதற,​”இந்த நேரத்துல எந்த ஹாஸ்பிடல் திறந்திருக்கும்? கொஞ்சம் பொறுமையா இருங்க ஆனந்த், சரியாயிடும்” என்று அவளாகவே சமாதானம் சொல்லிக்கொண்டு கட்டிலில் சென்று படுத்தாள்.​அப்போதுதான் அவள் தன்னைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினாள். தான் தலைக்கு ஊற்றி இன்றோடு 35 நாட்கள் ஆகியிருந்ததை உணர்ந்தவள், ‘ஒருவேளை இது அதுவாக இருக்குமோ?’ என்று யோசித்துப் பார்த்தாள்.​மெல்ல ஆனந்தனைப் பார்த்து, “எனக்கு என்னமோ இது லேடி டாக்டரை கன்சல்ட் பண்ண வேண்டிய பிராப்ளம்னு தோணுது” என்றாள்.​ஆனந்தன் சிறிது நேரம் யோசித்தவன், “அனு… நிஜமாவா?” என்ற சந்தோஷத்தோடு அவளைப் பார்க்க,​அனுஷா வெட்கத்துடன், “ரொம்ப நாள் எல்லாம் தள்ளிப் போகல… ஜஸ்ட் ஒன் வீக் ஆகியிருக்கு” என்றாள்.​ஆனந்தன் மிகுந்த மகிழ்ச்சியோடு, “நீங்க எதிர்பார்த்தபடி உங்க வருண் உங்க வயித்துக்குள்ள வளர ஆரம்பிச்சுட்டான் போல…” என்றான்.​ஆனந்தன் நினைவுபடுத்தும் வரை, அனுஷாவுக்கு வருணனின் சிந்தனையே இல்லாமல் இருந்திருந்தது. அதை இப்போதுதான் எண்ணிப் பார்த்தாள். ‘நாம் சொன்னதை இத்தனை துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறானே!’ என்று வியந்தவளுக்கு, இப்போது ஆனந்தன் சொல்வது குத்தல் பேச்சா அல்லது சந்தோஷமாகத்தான் சொல்கிறானா என்று கூட ஒரு கணம் தோன்றியது.​அனுஷா ஆனந்தனிடம் மெதுவாக, “ஆனந்த்… ஒருவேளை நீங்க சொல்றபடி என் வயித்துல குழந்தை இருந்து, பிறந்துச்சுன்னா… அதுக்கு அவனோட பேரை வைக்கச் சம்மதிப்பீங்களா?” என்று கேட்டாள்.​ஆனந்தன் சிரித்தபடியே, “என்ன திரும்பவும் சந்தேகமா? தாராளமா வச்சிடலாம்!” என்றான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!