Stories that touch hearts

Home  /  02. S.K (மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ)  /  Chapter 18

CHAPTER 18

முல்லைப்பூ – 18

By S.K Velan · November 14, 2026

7

🕊️ பாகம் 18

மயக்க நிலையில் கிடந்த நிலாவையும், முல்லையையும், அவர்களுடன் இருந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் காரில் ஏற்றிக்கொண்டு, ஆள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுக்குள் அமைந்திருந்த முக்தாவின் பங்களாவை வந்தடைந்தாள் மங்கலம்.

அங்கே முகேஷும் முக்தாவும் அவர்களுக்காகக் காத்திருந்தனர்.

மயக்கத்தில் கிடந்த முல்லையைப் பார்த்ததும், முகேஷின் முகத்தில் கொடூரமான புன்னகை மலர்ந்தது.

‘ஒருவழியாக உன்னை என் கைக்குள் கொண்டு வந்துவிட்டேன் முல்லை! இனி இந்த முகேஷை மீறி உன்னால் எங்கும் செல்ல முடியாது!’ என்று மனதிற்குள் கர்வத்துடன் நினைத்துக்கொண்டான்.

ஆனால், முக்தாவின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாகக் கோபமே தெரிந்தது. அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்தவள், குறிப்பாகக் கதிரின் பெண் குழந்தையைச் சுட்டிக்காட்டி,

“இந்தப் பெண் குழந்தை யாருடையது?” என்று மங்கலத்திடம் கேட்டாள்.

“தெரியலம்மா. அந்த வீட்டுல இந்தக் குழந்தையும், அன்னைக்கு நம்ம காட்டுல பார்த்த இந்தப் பெண்ணும் இருந்தாங்க” என்று நிலாவைக் காட்டினாள் மங்கலம்.

“யாருடைய குழந்தையா இருந்தா என்ன? இனி இவங்க யாரும் இங்கிருந்து உயிரோட வெளியே போகக்கூடாது!” என்று ஆத்திரத்துடன் கூறினாள் முக்தா.

“இனி எல்லாமே நம்ம திட்டப்படிதான் நடக்கும் அம்மா” என்று உறுதியளித்தாள் மங்கலம்.

பின்னர் முக்தா பூஜையைப் பற்றிக் கேட்டாள்.

“இன்னைக்கு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே பூஜையை ஆரம்பிச்சிடலாம் அம்மா. அதற்கான ஏற்பாடுகளை நான் பார்த்துக்கிறேன்” என்றாள் மங்கலம்.

“அதுவரைக்கும் இவங்க எல்லோரையும் ஒரே இடத்துல அடைச்சு வையுங்க. யாரும் தப்பிக்கக் கூடாது!” என்று கட்டளையிட்டாள் முக்தா.

அப்போது மங்கலம் முல்லையையும், நிலாவையும் பார்த்தபடி,

“அம்மா, குழந்தை நம்ம கையில கிடைச்சாச்சு. இனி இந்த இரண்டு பெண்களையும் என்னோட தேவைக்கு உபயோகப்படுத்திக்கலாம்னு நினைக்கிறேன்” என்றாள்.

அதைக் கேட்ட முக்தா அவளை முறைத்தாள்.

“தேவையில்லாத வேலை எதுவும் வேண்டாம். இந்தக் குழந்தையைப் பலி கொடுத்த அடுத்த நொடியே என் மகன் கண் விழிக்கணும். அவன் எழுந்து நின்றதும், இவங்க எல்லோருக்கும் என் கையாலேயே முடிவு கட்டுவேன்.”

முக்தாவின் முடிவைக் கேட்ட மங்கலம் அமைதியாகத் தலையசைத்தாள்.

பின்னர் முகேஷிடம் திரும்பிய முக்தா, “நீங்க இங்கேயே இருந்து எல்லாம் சரியா நடக்குதான்னு பார்த்துக்கோங்க. நான் போய் ஆம்புலன்ஸ்ல நம்ம பையனை பாதுகாப்பாக இங்கே அழைச்சிட்டு வர ஏற்பாடு செய்யணும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

முக்தா சென்றதும் முகேஷ் மயக்கத்தில் கிடந்த முல்லையைத் தவறான எண்ணத்துடன் பார்த்தான். பின்னர் தன்னுடைய நண்பனும் கமிஷனருமான வெங்கடேஷைத் தொடர்புகொண்டான்.

“வெங்கி, முக்தா அவளோட மகன் அமீரை ஆம்புலன்ஸ்ல அழைச்சிட்டு இங்கே வரப்போறா. அவங்க இந்த இடத்துக்கு வந்து சேர்றதுக்கு முன்னாடியே வழியிலேயே வேலையை முடிச்சிடணும். அது ஒரு விபத்தா தெரியணும். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது.”

“நீ கவலைப்படாதடா முகேஷ். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். வேலை முடிஞ்சதும் உனக்குத் தகவல் சொல்றேன்” என்றான் வெங்கடேஷ்.

“சரி. இந்தப் பொறுப்பை உன்னை நம்பித்தான் ஒப்படைக்கிறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் முகேஷ்.

அந்த நேரத்தில் பசியால் முல்லையின் ஆண் குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட முகேஷ், முல்லையை எழுப்ப முயன்றான். அவள் கண் விழிக்காததால் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

அதன் விளைவாக முல்லையுடன் சேர்ந்து நிலாவும் கண் விழித்தாள்.

தாங்கள் இருக்கும் இடத்தை உணர முயன்ற நிலா, எதிரே நின்றிருந்த முகேஷைப் பார்த்ததும் பதற்றத்துடன்,

“ஏய்! எங்களை எங்கே தூக்கிட்டு வந்திருக்கீங்க?” என்று கத்தினாள்.

உடனே ஒரு கையில் முல்லையின் குழந்தையை ஏந்தியிருந்த முகேஷ், மறுகையால் துப்பாக்கியை எடுத்து நிலாவின் நெற்றியில் அழுத்தினான்.

அந்தக் கண்ட முல்லை அதிர்ந்து, “என் குழந்தையை விட்டுடுங்க! தயவுசெய்து எங்களைக் கஷ்டப்படுத்தாதீங்க. நீங்க யாரு? எதுக்காக எங்களை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.

ஆனால் முகேஷ் வினோதமாகச் சிரித்து, “என்னது, உன் குழந்தையா? அப்படிச் சொல்லாத முல்லை. நம்ம குழந்தைன்னு சொல்லு. இந்தக் குழந்தைக்கு அப்பா நான்தான்!” என்றான்.

அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட முல்லையும் நிலாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“நீ எதற்கும் கவலைப்படாதே முல்லை. உனக்கும் நம்ம குழந்தைக்கும் எதுவும் ஆகாது. எதுவும் ஆகவிடவும் மாட்டேன். இனிமேல் நாம மூணு பேரும் சந்தோஷமா வாழப்போறோம். இனி உன் கண்ணில்  கண்ணீரைப் பார்க்கவேகூடாது.” என்று தொடர்ந்து உளறினான்.

அப்போது கதிரின் பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே ஓர் அடியாளை அழைத்து அந்தக் குழந்தையை எடுத்துவரச் சொன்னான். அவனோ குழந்தையைத் தூக்கி வந்து நிலாவிடம் கொடுத்தான்.

இரண்டு குழந்தைகளும் தங்களிடம் இருந்தாலும், அவற்றின் பாதுகாப்பு குறித்த பயம் முல்லையை வாட்டியது.

“தயவுசெய்து எங்களை விட்டுடுங்க. என் குழந்தைகள் ரெண்டு பேரையும் எதுவும் பண்ணிடாதீங்க!” என்று கதறினாள்.

முகேஷ் முல்லையின் ஆண் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு,

“இந்தா, நம்ம குழந்தையை நீயே வச்சுக்கோ. இனி எல்லாத்துக்கும் நானே ஒரு முடிவு கட்டுறேன். இனிமேல் நாம மூணு பேரும் சந்தோஷமா வாழப்போறோம் முல்லை!” என்றான்.

அவனுடைய பேச்சைக் கேட்டு நிலா அருவருப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். முல்லையோ குழந்தையை மார்போடு அணைத்தபடி மனதிற்குள்,

‘கதிர் நீங்க எங்கே இருக்கீங்க? என்னையும் நம்ம குழந்தைகளையும் காப்பாத்த எப்படியாவது வந்துடுங்க.’ என்று மனதிற்குள் அழுதாள்.

அதே நேரத்தில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவின் கதவு திறந்தது. வெளியே காத்திருந்த கதிரும், கந்தனும் மருத்துவரை நோக்கி விரைந்து வந்து, “டாக்டர்… என் சித்தி இப்போ எப்படி இருக்காங்க?” என்று பதற்றத்துடன் கேட்டான் கதிர்.

“பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லை. உங்க சித்திக்கு ஏற்பட்டது சின்ன அதிர்ச்சிதான். இப்போ உடல்நிலை சீராக இருக்கு. நீங்க அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம்” என்று மருத்துவர் சொன்னதும், இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அறைக்குள் சென்ற கதிர், கண் விழித்திருந்த கீதாவைப் பார்த்ததும் மனம் உடைந்தான். இனியும் உண்மைகளை மறைக்க முடியாது என்பதை உணர்ந்து அவளுடைய கால்களில் விழுந்தான்.

“சித்தி… என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு விவாகரத்து ஆன விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சா, நீங்க தாங்க மாட்டீங்கன்னுதான் இத்தனை நாளா சொல்லாம மறைச்சேன்.”

அதிர்ச்சியடைந்த கீதா,

“என்னடா சொல்ற? இன்னும் என்னவெல்லாம் என்கிட்ட மறைச்சு வச்சிருக்க?” என்று கேட்டார்.

கதிர் கண்ணீருடன் நடந்த அனைத்தையும் கூறினான். கண்மணி தன்னை விவாகரத்து செய்ததையும், தன்னுடைய பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அதே நாளில், பிறந்த குழந்தையை வேண்டாமென்று விட்டுவிட்டுச் சென்றதையும் விவரித்தான்.

அதைக் கேட்ட கீதா அதிர்ச்சியில் உறைந்தார்.

“அப்போ அந்த முல்லையும், அவளுடைய ஆண் குழந்தையும்?”

விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்தபோது நடுக்காட்டில் நிறைமாத கர்ப்பிணியாகத் தவித்துக்கொண்டிருந்த முல்லையைச் சந்தித்தது முதல், நிலா மற்றும் கந்தனின் உதவியுடன் அவளுக்குப் பிரசவம் பார்த்தது வரை அனைத்தையும் சொன்னான்.

முல்லை அனுபவித்த வேதனைகளைக் கேட்ட கீதாவின் மனம் கனத்துப்போனது.

“ஏன்டா, இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்ச? என்கிட்ட சொல்லியிருக்கலாமே?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

“என்னை மன்னிச்சிடுங்க சித்தி. நான் தப்புப் பண்ணிட்டேன்.” என்று மீண்டும் அவளுடைய கால்களைப் பற்றிக்கொண்டான் கதிர்.

அப்போது கந்தனின் கைப்பேசி ஒலிக்க, அழைப்பை ஏற்றுப் பேசியவனுக்கு, கீதாவின் வீட்டில் வேலை செய்யும் கண்ணம்மா கூறிய செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யாரோ ஒரு பெண்மணி சில ஆட்களுடன் வீட்டிற்குள் புகுந்து முல்லை, நிலா மற்றும் இரண்டு குழந்தைகளையும் கடத்திச் சென்றுவிட்டதாக அவள் தெரிவித்தாள்.

“என்ன சொல்றீங்க? எப்போ நடந்தது இது?” என்று பதற்றத்துடன் கேட்க, நடந்தவற்றை முழுமையாகக் கேட்டறிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவனுடைய முகத்தில் தெரிந்த பதற்றத்தைக் கவனித்த கதிர்,

“என்னாச்சு கந்தா?” என்று கேட்டான்.

“கதிர்… முக்தா ஆளுங்க முல்லையையும் நிலாவையும், இரண்டு குழந்தைகளையும் கடத்திட்டுப் போயிருக்காங்க.”

அதைக் கேட்டதும் கதிரின் முகம் வெளிறிப்போனது.

“என்னடா சொல்ற?”

“ஐயோ! என் பேரனையும், பேத்தியையும் காப்பாத்துங்கடா! அந்தப் பாவிங்க ஏதாவது பண்ணிடப் போறாங்க!” கீதாவும் பதறினாள்.

உடனே கதிர் புறப்படத் தயாராக, அப்போது கந்தன் தன் ஸ்மார்ட் வாட்சை இயக்கி அதிலிருந்த தகவல்களைப் பார்த்தான். சில நொடிகளில் அவன் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“கதிர்… அவங்க முல்லையையும் குழந்தைகளையும் எங்கே கடத்திட்டுப் போயிருக்காங்கன்னு எனக்குத் தெரியும்.”

“எப்படிடா?”

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ அவங்களை உடனே காப்பாத்தணும்.” என்றவன் அவனுடைய தோழியான பத்திரிகையாளர் அக்னியை கைபேசி மூலம் அழைத்து சில திட்டங்களை வகுத்தான்.

“ஓகே அக்னி… வெற்றி நமக்கே” என்ற கந்தன் கைபேசி இணைப்பை துண்டிக்க,

அப்போது கீதா

“டேய்… நானும் உங்க கூட வர்றேன்.” என்றார்.

“சித்தி, உங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகலையே. நீங்க ஓய்வெடுங்க.”

“என் பேரனும் பேத்தியும் ஆபத்துல இருக்கும்போது என்னால எப்படி இங்கே நிம்மதியா இருக்க முடியும்?நானும் உங்ககூட வரேன்.”‌என்று அடம் செய்ய, அவளுடைய உறுதியைப் புரிந்துகொண்ட இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர்.

அதே சமயம் முக்தாவுக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில், பல மாதங்களாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த தன் மகன் அமீரின் அருகில் நின்றிருந்தாள் முக்தா.

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் படுக்கையில் கிடந்த மகனைப் பார்த்த அவளுடைய கண்கள் கலங்கின.

‘இன்னும் ஒரே ஒரு நாள்தான் அமீர். நாளைக்கு இதே நேரம் நீ முழுமையாகக் குணமடைந்து, என் கண் முன்னால் எழுந்து நிற்பாய். அதற்காகத்தானே இத்தனை நாட்களாகக் காத்திருக்கிறேன்‘’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

பின்னர் அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு,

“கவலைப்படாதே அமீர். உன்னைக் காப்பாற்றத்தான் இந்த அம்மா இருக்கேன். உனக்காக எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பலி கொடுப்பேன். உன்னை எப்படியாவது மீட்டெடுத்துடுவேன்.” என்றாள்.

சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அமீரை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். செயற்கை சுவாசக் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டன.

முக்தாவும் மகனுடன் ஆம்புலன்ஸில் ஏறிக்கொள்ள, மருத்துவக் குழுவினர் அமீரின் உடல்நிலையைக் கண்காணித்தபடி காட்டுப் பங்களாவை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர்.

ஆனால், எதிர்திசையிலிருந்து அதிவேகமாக வந்த லாரி ஒன்று ஆம்புலன்ஸின் மீது பயங்கரமாக மோதியது.

அடுத்த நொடியே ஆம்புலன்ஸ் சாலையோரமாகத் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்தது.

சிறிது நேரத்தில் அந்த விபத்துச் செய்தி கமிஷனர் வெங்கடேஷுக்குத் தெரிய வந்தது. அவன் உடனே முகேஷைத் தொடர்பு கொண்டான்.

“டேய் முகேஷ். நீ நினைச்ச மாதிரியே எல்லாம் முடிஞ்சிடுச்சு. முக்தாவும், அமீரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்துட்டாங்க. இருவருக்கும் ஸ்பாட் டெத்!”

அந்தச் செய்தியைக் கேட்ட முகேஷின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

‘ஒரே கல்லில் மூன்று மாங்காய்! முக்தாவும் அவளுடைய மகனும் ஒழிந்துவிட்டார்கள். இனி அந்தச் சொத்துக்கள் அனைத்தும் என்னுடையவை. அதோடு முல்லையும் எனக்குச் சொந்தமாகப் போகிறாள்!’ என்று மனதிற்குள் கணக்குப் போட்டான்.

அப்போது அங்கே வந்த மங்கலம் பூஜைக்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாகத் தெரிவித்தாள்.

“ஐயா… சரியாகப் பன்னிரண்டு மணிக்கு பூஜையை ஆரம்பிச்சிடலாம். எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கு!”

அவளுடைய வார்த்தைகளைக் கேட்ட முல்லையும் நிலாவும் பதற்றத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

ஆனால், முகேஷோ அலட்சியமாகச் சிரித்து, “இனி எந்தப் பூஜையும் நடக்காது. எனக்கும் முல்லைக்கும் கல்யாணம்தான் நடக்கணும்.”

அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட மங்கலம் திகைத்துப்போனாள்.

“ஐயா! என்ன சொல்றீங்க? முல்லை உங்களுக்கு மருமகள்”‌ என்று சொன்னதும் முகேஷ் அவளை ஏளனமாகப் பார்த்தான்.

“அவ கழுத்துல என் பையன் அமீர் தாலி கட்டினானா?”

“இல்லை ஐயா. தாலி கட்டியது முக்தா மேடம்தான். ஆனா, முல்லை வயித்துல வளர்ந்தது உங்க பையனோட குழந்தைதானே?” என்று கேட்டாள் மங்கலம்.

அதைக் கேட்ட முகேஷ் சத்தமாகச் சிரித்தான்.

“முல்லை வயித்துல வளர்ந்தது அமீரோட குழந்தை கிடையாது. அதைவிட முக்கியமான விஷயம். அந்த அமீரே என்னோட பிள்ளை கிடையாது.”

அவன் சொன்ன வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தன.

மங்கலத்தால் அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை. முல்லைக்கும், நிலாவுக்கும் அந்த உண்மையின் பின்னணி புரியாவிட்டாலும், முகேஷின் பேச்சில் ஏதோ மிகப்பெரிய ரகசியம் மறைத்திருப்பதை உணர முடிந்தது.

மங்கலம் ஏதோ கேட்க வாயெடுத்தபோது முகேஷ் இடைமறித்து, “இப்போ என்னைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் உனக்கு முதலாளி நான் மட்டும்தான். நான் சொல்றதை மட்டும் செய்.” என்ற முகேஷ் மீண்டும் வெங்கடேஷைத் தொடர்புகொண்டான்.

“என்னடா, விபத்துல அவங்க ரெண்டு பேரும் இறந்துட்டாங்கதானே?”

“ஏற்கெனவே சொன்னேன்லடா. இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துட்டாங்க. நீ உடனே இங்கே வந்துடு. ஊர் உலகத்துக்கு முன்னாடி ஒரு நல்ல நாடகத்தை அரங்கேற்ற வேண்டியிருக்கு!” என்றான் வெங்கடேஷ் உறுதியாக.

“இதோ இப்போவே கிளம்புறேன்!” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் முகேஷ்.

பின்னர் முல்லையை நோக்கித் திரும்பி, “நான் ஏற்கெனவே சொன்னேனே முல்லை. இனி நம்மள யாராலும் பிரிக்க முடியாது.” என்றான்.

அவளுடைய பயத்தைப் பொருட்படுத்தாதவன், “இனி முல்லை மேல ஒரு சின்ன துரும்புகூடப் படக்கூடாது. அவளையும், என் குழந்தையையும் பத்திரமா பார்த்துக்கோ. நான் திரும்பி வர்ற வரைக்கும் அவங்களுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது!” என்று கட்டளையிட்டுவிட்டு பங்களாவிலிருந்து வெளியேறினான்.

ஆனால், வாசலைத் தாண்டிய அடுத்த நொடியே அவனுக்கு முன்னால் கதிரும், கந்தனும் வந்து நின்றனர்.

அவர்களை எதிர்பார்க்காத முகேஷின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. உடனே அடியாட்களை நோக்கி, “டேய்! என்ன பார்த்துட்டு நிக்கிறீங்க? இவங்க ரெண்டு பேரையும் பிடிச்சு உள்ளே இழுத்துட்டுப் போங்க!” என்று கத்தினான்.

அடியாட்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டு பிடித்து இழுத்துச் செல்ல,

அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த கீதா, “டேய்! என்னடா நடக்குது இங்கே? அவங்களை மட்டும் ஏன் உள்ளே கூட்டிட்டுப் போறீங்க? என்னை மட்டும் ஏன் விட்டுட்டுப் போறீங்க? நானும் வர்றேன்!” என்று குரல் கொடுத்தாள்.

அவளுடைய பேச்சைக் கேட்ட முகேஷ் கேலியாகச் சிரித்தான்.

“அடடா… இன்னொரு விருந்தாளியும் வந்திருக்காங்களா? அவங்களையும் உள்ளே கூட்டிட்டுப் போங்கடா.” என்றதும் அடியாட்கள் கீதாவையும் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றனர்.

ஆனால், கதிரும், கந்தனும், கீதாவும் எதிர்த்து எதுவும் செய்யவில்லை. முல்லையையும், குழந்தைகளையும் கடத்தியதன் பின்னணியில் இருக்கும் உண்மையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

அடியாட்கள் மூவரையும் முல்லையும் குழந்தைகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கதிரைப் பார்த்த அடுத்த நொடியே முல்லையின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. அவள் ஓடிச்சென்று கதிரைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.

முல்லையின் நிலையைப் பார்த்த கதிரின் மனமும் கலங்கியது. அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டான்.

ஆனால், அந்த நிமிடத்தைக்கூட நீடிக்க விடவில்லை முகேஷ். முல்லையின் கையைப் பிடித்து அவளைத் தன் பக்கம் இழுத்தான்.

“என்ன முல்லை? என்ன பண்ற? நான் உன்னோட சந்தோஷமா வாழணும்னு எத்தனை நாளா கனவு கண்டுக்கிட்டு இருக்கேன் தெரியுமா?” என்றான்.

அவனுடைய செயலைப் பார்த்த கதிரின் கோபம் எல்லை மீறியது.

அப்போது கீதாவும் ஆத்திரத்துடன் முகேஷை நோக்கி, “அட கிழட்டுப் பயலே. கட்டையில போற வயசுல உனக்குக் கனவுக் கன்னி கேக்குதா? இரு… உன்னை என்ன பண்றேன்னு பாரு.” என்று கத்தி, அருகிலிருந்த பூந்தொட்டியைத் தூக்கி முகேஷ் மீது வீசினாள்.

எதிர்பாராத தாக்குதலில் நிலைதடுமாறி முகேஷ் கீழே விழ, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட முல்லை கதிரின் அருகே ஓடிச்சென்று நின்றாள்.

இதைக் கண்ட மங்கலம் அவளை நெருங்கி, “ஏய்! இந்தப் பக்கம் வாடி!” என்றாள்.

ஆனால் கீதா அவளுக்கு முன்னால் வந்து நின்றாள்.

“நீ யாருடி? மூணு பைசா சில்லறையில முக்கா மூஞ்சியை மறைச்சிட்டு வந்திருக்க? என் மருமகளைத் தொட உனக்கு என்ன தைரியம்?” என்று சீறியவள், மங்கலத்தின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள்.

அதைக் கண்ட அடியாட்கள் கதிரையும் கந்தனையும் நெருங்கினர்.

அடுத்த நொடியே கந்தன் தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு வெடிகுண்டை எடுத்துக் காட்டினான்.

“யாராவது ஒரு அடி முன்னாடி எடுத்து வச்சாலும் விளைவு மோசமா இருக்கும்!”

அவனுடைய எச்சரிக்கையைக் கேட்ட அடியாட்கள் அப்படியே நின்றுவிட்டனர்.

கந்தன் அனைவரையும் பார்த்தபடி, “அன்னைக்கு காட்டுக்குள்ள எதேச்சையா உங்களைப் பார்த்தப்பவே, உங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு முல்லையையும், குழந்தையையும் காப்பாத்திக் கூட்டிட்டுப் போனோம். இப்போ உங்களைத் தேடியே வந்திருக்கோம் என்றால், எந்தத் திட்டமும் இல்லாமல் தான் இங்கே வந்திருப்போம்னு நினைச்சீங்களா?” என்றான்.

அவனுடைய நிதானமான பேச்சு அங்கிருந்தவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கீழே விழுந்திருந்த முகேஷ் எழுந்து நின்று கந்தனின் கையிலிருந்த வெடிகுண்டைப் பார்த்தான்.

“டேய்… வேண்டாம்! எதுவும் பண்ணிடாத. நான் இனிமேல்தான் என் வாழ்க்கையை வாழணும்!” என்று பயத்துடன் கெஞ்சினான்.

அதைக் கேட்ட கீதா ஏளனமாகச் சிரித்தாள்.

“உன்னால ஒரு வாழைப்பழத்தைக்கூட தானா உரிக்க முடியாத வயசு. ஆனா, உனக்கு வாழணுமாக்கும். அதுவும் என் மருமகளோட வாழணுமா?”

கீதா தன்னை மருமகள் என்று அழைத்ததைக் கேட்ட முல்லையின் கண்கள் கலங்கின.

“அத்தை…” என்று அழுதபடியே ஓடிச்சென்று கீதாவைக் கட்டிக்கொள்ள, கீதாவும் அவளைப் பாசத்துடன் அணைத்துக்கொண்டாள்.

அந்தத் தருணத்தை முகேஷின் ஆத்திரக் குரல் கலைத்தது.

“ஏய்! என்னடா பார்த்துட்டு நிக்கிறீங்க? இவங்களைப் பிடிங்க.”

கந்தன் மீண்டும் வெடிகுண்டை உயர்த்திக் காட்டி, “என்கிட்ட நெருங்கினா இந்த இடமே பஸ்பமாகிடும்!” என்று எச்சரித்தான்.

வேறு வழியின்றி முகேஷ் முல்லையை நோக்கி, “முல்லை, ஒழுங்கா நம்ம பிள்ளையைத் தூக்கிட்டு என்கூட வந்துடு. இல்லையென்றால் உன்னோட மாமாவை உயிரோட பார்க்க முடியாது!” என்றான்.

அவனுடைய மிரட்டலைக் கேட்ட முல்லை திடுக்கிட்டாள்.

“மாமாவா? என் மாமா எங்கே இருக்காரு?”

“வேற எங்க இங்கதான்” என்ற முகேஷ் அடியாட்களிடம், “ஏய்! அந்தச் செல்வத்தை இழுத்துட்டு வாங்கடா.” என்று கட்டளையிட்டான்.

அடுத்த சில நொடிகளில் அடியாட்கள் அருகிலிருந்த இருண்ட அறைக்குள் சென்று, சுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரைத் தரதரவென இழுத்துக்கொண்டு வந்தனர்.

அவருடைய தோற்றம் மிகவும் பரிதாபமாக இருந்தது. முகத்தில் சோர்வும், உடலில் பலவீனமும் தெளிவாகத் தெரிந்தன.

அவரைப் பார்த்த அடுத்த நொடியே முல்லை அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.

“செல்வம் மாமா!” என்று கதறியபடி அவரை நோக்கி ஓட முயன்றாள்.

ஆனால், அவளைத் தடுத்த கதிர் நிலைமையைப் புரிந்துகொள்ள முயன்றான்.

அதே நேரத்தில் அந்த மனிதரைப் பார்த்த கீதாவின் முகமும் மாறியது. இத்தனை நேரம் கோபத்துடன் இருந்த அவளுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவர் வேறு யாருமல்ல.

பழனி செல்வம்!

அந்தப் பெயரும் முகமும் கீதாவின் மனதுக்குள் பல வருடங்களாகப் புதைந்து கிடந்த நினைவுகளை ஒரே நொடியில் உயிர்ப்பித்தன.

கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவளுடைய கண்முன்னே விரியத் தொடங்கின.

முல்லை தன் மாமாவைக் காப்பாற்றத் துடித்துக்கொண்டிருக்க, கீதாவோ பழனி செல்வத்தைப் பார்த்தபடியே கண்ணீருடன் நின்றாள்.

அந்த இருண்ட பங்களாவுக்குள் இப்போது இரண்டு பெண்களின் கடந்த காலமும் நிகழ்காலமும் ஒன்றாகச் சந்தித்திருந்தன.

தொடரும்… 🕊️

← Previous All Chapters Next →

7 comments

ராணி November 14, 2026 - 4:10 pm

செம்ம செம்ம கீதா பாட்டி சூப்பர் பழனி செல்வம் கீதாபாட்டியும் காதலர்கள் ஹா ஹா.. 😂😂 சூப்பர்
ஏன் பா கந்தா அந்த குண்டை எடுத்து அந்த கிழவன் மீது வீசு பா இவன் லாம் உயிரோடு இருக்க கூடாது கிழட்டுபய 😡😡

Sam Sam November 14, 2026 - 4:12 pm

Sama sama sk 🩷🩷🩷apadi podu…..podu…podu…podu

kanveer November 14, 2026 - 7:11 pm

இந்தப் பாகம் முழுவதும் எதிர்பாராத திருப்பங்களும் அதிரடியான சம்பவங்களுமாக விறுவிறுப்பாக நகர்கிறது. முகேஷின் உண்மையான முகமும், அமீர் அவனுடைய மகன் இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும் கதையின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்திவிட்டது. அதிலும் கீதா முல்லையை மருமகளாக ஏற்றுக்கொண்டு அவளுக்காக மங்கலத்திடம் எதிர்த்து நின்றது மிகவும் ரசிக்க வைத்தது.
கந்தனின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், முல்லையின் மாமா பழனி செல்வத்திற்கும் கீதாவிற்கும் இடையிலான கடந்தகாலத் தொடர்பு என்ன என்ற கேள்வியும் மனதில் எழுகிறது.
முகேஷின் பின்னணியில் இருக்கும் ரகசியங்கள், பழனி செல்வத்தின் வருகை என அடுத்தடுத்த முடிச்சுகள் அவிழப் போகின்றன என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். குறிப்பாக கீதாவின் கடந்தகாலம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகமாகிவிட்டது.
அருமையான விறுவிறுப்பான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் ஆசிரியரே!

வென்மதி November 14, 2026 - 7:46 pm

Comeback sk என்னவொரு speed mass போங்க இத தான் எதிர்பார்த்தேன்

கீது November 14, 2026 - 8:43 pm

சும்மா Theri💥💥💥💥💥👌👌👌👌👌👌👌blast 💯👏👏👏💯🎯✔️தூள்.. கந்தா செம்ம move 😍
கீதாக்கும் செல்வம் க்கும் ஒரு flashback இருக்கு போல 👌👌👌
முல்லை க்கு மாமா கிடைச்சிட்டாரு 👌
முக்தா சாகலை னு நினைக்கிறேன். முகேஷ் க்கு அவ தான் பாடை காட்டுவா னு நினைக்கிறேன்… அமீர் முக்தா பையன் ஆனா முகேஷ் சொத்துக்காக கட்டி இருப்பான் போல…
சூப்பர் ji 🥰🥰

Reva November 15, 2026 - 12:37 am

Sema super twist 🌟 பழைய நினைவுகளோ கதைகளம் அருமை…

jo November 15, 2026 - 2:23 am

Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe

Leave a Comment

error: Content is protected !!