அத்தியாயம் – 11 🌺
தன் முன்னால் மண்டியிட்டுக் கதறி அழுதுகொண்டிருந்த பெறாத மகன் கதிரைப் பார்த்த கீதாராணியின் கண்களும் கலங்கின.
அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் ஒருபுறம் இருந்தாலும், அவன் தன்னை மறந்து வாழ்ந்துவிட்டான் என்ற வருத்தம் மறுபுறம் அவருடைய மனதை அழுத்தியது.
அந்த நேரத்தில் அங்கே வந்த கந்தன், இருவரையும் பார்த்தபடி,
“என்ன… சித்தியும் மகனும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா?” என்று கேட்டான்.
அவனைத் தொடர்ந்து வந்த நிலா, “இனி நம்ம எல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியாது…” என்றாள்.
ஆனால் கீதாராணியின் கவனமெல்லாம் கதிரின் கண்ணீரில் இல்லை. அவர் கையில் ஏந்தியிருந்த இரண்டு குழந்தைகளின் மீதுதான் இருந்தது.
“என் பேரன், பேத்தியைப் பார்க்கத்தான் நான் இங்கே வந்தேன்…” என்றவர், முல்லையை ஏற இறங்கப் பார்த்தார்.
“நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? கட்டிக்கிட்டு வந்த உடனேயே என்னையும் என் மகனையும் பிரிச்சு வச்சு வேடிக்கை பார்த்திருக்க!” என்றார்.
அவர் சொன்னது எதுவும் புரியாமல் முல்லை குழம்பிப்போய் நின்றாள்.
“ஹ்ம்… இனி உன்னோட மூடி மஸ்தான் வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது. இந்தக் கீதாராணி யாருன்னு உனக்குப் புரிய வைக்காம நான் இங்கிருந்து போகமாட்டேன்!” என்று சபதமெடுத்தவர், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.
“சித்தி…” என்று கதறியபடி கதிரும் அவரைப் பின்தொடர்ந்தான்.
முல்லையும் வேறு வழியின்றி அவர்களுக்குப் பின்னால் சென்றாள்.
“என் பேரன், பேத்தி பிறந்த விஷயத்தைக்கூட நீங்க யாரும் என்கிட்ட சொல்லல. அந்த அளவுக்கு நான் கொடுமைக்காரியா ஆகிட்டேனா?” என்று குழந்தைகளைப் பார்த்தபடி புலம்பினார் கீதா.
அவரது காலடியில் நின்ற கதிர், “என்கிட்ட பேச மாட்டீங்களா? என்னைத் திட்ட மாட்டீங்களா? ‘ஏன்டா இப்படிப் பண்ண?’ன்னு கேட்கக்கூட மாட்டீங்களா? ஏன் சித்தி, என்னை இப்படித் தவிக்க விடுறீங்க?” என்று அழுதான்.
அவனுடைய கதறலைக் கேட்டுக் குழந்தைகள் இருவரும் அழத் தொடங்கினர்.
உடனே கதிரை நேராகப் பார்த்த கீதா,
“உன்னையும் நிலாவையும் நான் இதே மாதிரிதான் தூக்கி வளர்த்தேன். ஆனா இன்னைக்கு உனக்குன்னு ரெண்டு பிள்ளைங்க பிறந்ததும் என்னை மறந்துட்ட… அப்படித்தானே?” என்றார்.
அந்தக் கேள்வி கதிரின் நெஞ்சைத் துளைத்தது.
“என்னை மன்னிச்சிடுங்க சித்தி… நான் தப்புப் பண்ணிட்டேன். உங்களுக்கு நான் பண்ண பாவத்துக்குத்தான் இன்னைக்கு என் வாழ்க்கை…” என்று அவன் சொல்லத் தொடங்கியபோது, கந்தன் குறுக்கிட்டான்.
“டேய் மச்சான், அதான் உன் சித்தி வந்துட்டாங்களே. இனி எல்லாத்தையும் பொறுமையா பேசிக்கலாம். இப்போ நீ அழுறதை நிறுத்து.”
கீதாவுக்குக் கதிரின் மீது கோபத்தைவிட வருத்தமே அதிகம் என்பதை அவருடைய பார்வையும் பேச்சும் வெளிப்படுத்தின.
அப்போதுதான் கதிருக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது.
“சித்தி… உங்களுக்கு என்னாச்சு? டேய், டாக்டர் என்ன சொன்னாங்க? சித்திக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்குன்னு சொன்னீங்க. அப்படியிருக்கும்போது ஏன் இவ்வளவு தூரம் டிராவல் பண்ண வச்சீங்க?” என்று கந்தனைக் கடிந்துகொண்டான்.
“மாப்பிள்ளையை எதுவும் சொல்லாத. நான் தான் என் பேரன், பேத்தியைப் பார்க்கணும்னு உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு கிளம்பி வந்தேன்,” என்றார் கீதா.
பின்னர்க் குழந்தைகளை ஆசையுடன் பார்த்தபடி,
“உனக்குப் பிள்ளை பிறந்திருக்குன்னு நிலா சொன்னா. ஆனா உன் அம்மாவைப் போலவே உனக்கும் ரெட்டைப் பிள்ளைங்க பிறந்திருக்குன்னு இப்போதான் தெரியும். இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்க என் அக்காவுக்குத்தான் கொடுத்து வைக்கல…” என்றார்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட கதிரும் முல்லையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“சித்தி… இல்ல… பாப்பா மட்டும் தான் என்னோட…” என்று கதிர் உண்மையைச் சொல்ல முயன்றான்.
அதற்குள் கந்தன் முந்திக்கொண்டான்.
“ஆமா, ஆமா… பாப்பா மட்டும் தான் கதிர் மாதிரி இருப்பா. தம்பி அப்படியே அவங்க அம்மா மாதிரி!”
கதிரும் முல்லையும் அதிர்ச்சியுடன் கந்தனைப் பார்த்தனர்.
ஆனால் கீதா அதற்கும் மறுப்பு தெரிவித்தார்.
“யார் சொன்னது? பாப்பா அப்படியே என் அக்கா மாதிரி இருக்கா. தம்பிதான் கதிர் மாதிரி இருக்கான்.”
அவர் சொன்னதைக் கேட்டு,“உன் சித்திக்கு ஐ பவர் அதிகம், நிலா!” என்று கந்தன் கிண்டலடித்தான்.
“சித்தி… இந்தக் குழந்தை…” என்று கதிர் மீண்டும் பேச முயன்றபோது, கந்தன் அவனைத் தடுத்தான்.
“கதிர், உன் சித்திக்கு அடுத்த முறை ஹார்ட் அட்டாக் வந்தா, அவங்களைக் காப்பாத்துறது ரொம்பக் கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனாலதான், ‘நான் கொஞ்சமாவது நல்லா இருக்கும்போதே என் பேரப்பிள்ளைகளைப் பார்த்தாகணும்’னு பிடிவாதம் பிடிச்சு எங்களோட கிளம்பி வந்தாங்க.”
கந்தனின் வார்த்தைகள் கதிரை உறைய வைத்தன.
அவன் நிலாவைப் பார்த்தான். அவளோ,
“சித்தி, இப்போ நீங்க எங்கேயும் போக வேண்டாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க,” என்று நிலா அன்புடன் கூறினாள்.
“என்ன ரெஸ்ட்டு? இனி எனக்குத் தூக்கமே வராது. நான் என் பேரன், பேத்தியோடதான் இருப்பேன். உனக்கு வேணும்னா நீ போய்த் தூங்கு!” என்ற கீதா, அப்போது முல்லையின் பக்கம் திரும்பினார்.
அவளை அழுத்தமாகப் பார்த்தவர்,
“ஆள் அழகா இருந்தா மட்டும் போதாது. வீட்டுக்கு வந்த மாமியாருக்கு வந்ததும் ஒரு கிளாஸ் தண்ணியாவது கொடுக்கணும்!” என்றார்.
“மாமியாரா!?” என்று முல்லை திகைத்தாள்.
“ஓ… உனக்கு நான் மாமியார் இல்லையா?” என்று கீதா கேட்க, முல்லை என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
“சிஸ்டர், நீங்கப் போய் ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வாங்க,” என்று கந்தன் நிலைமையைச் சமாளித்தான்.
முல்லை தயக்கத்துடன் சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.
அதை வாங்கிக்கொண்ட கீதா,
“உன் பேர் என்ன?” என்று கேட்டார்.
“என் பேர்… என் பேர்…” என்று தடுமாறியவள், பின்னர், “என் பேர் முல்லைப்பூ,” என்றாள்.
அந்தப் பெயரைக் கேட்டதும் கீதாவின் முகத்தில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தது.
“என்ன? முல்லைப்பூவா? நல்ல பேர்தான்!” என்று புன்னகைத்தார்.
அதற்குள் கதிர் மீண்டும் தன் சித்தியை அழைத்தான்.
“சித்தி…”
“இங்க பாரு டா! நான் உன்னை இன்னும் மன்னிக்கவே இல்லை. வீணா என்கிட்ட பேசி என் கோபத்தை அதிகப்படுத்தாத. நான் என் பேரன், பேத்திக்காகத்தான் இங்கே வந்திருக்கேன்,” என்று அவனை எச்சரித்தார்.
“சரி, மாமி. நீங்கக் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நிலா, மாமிக்கு ரூம் ரெடி பண்ணிக்கொடு,” என்றான் கந்தன்.
குழந்தைகளை விட்டுச் செல்ல மனம் இல்லாமல் கீதா சிறிது நேரம் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“சரி… நான் போய்க் குளிச்சிட்டு வந்து உங்களைத் தூக்கிக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, ஒரு குழந்தையை முல்லையின் கையிலும் மற்றொரு குழந்தையைக் கதிரின் கையிலும் கொடுத்தார்.
“வாங்க சித்தி, அந்த ரூமுக்குப் போகலாம்,” என்று நிலா அவரை அழைத்துச் சென்றாள்.
அறைக்குள் நுழைந்த கீதா, “இந்த வீடு நான் ரெண்டு வருடத்திற்கு முன்னாடி வந்த மாதிரியே இல்லையே! எல்லாத்தையும் மாத்திட்டீங்க போல,” என்று சுற்றிப் பார்த்தார்.
அவர் சென்றதும் கதிர் கந்தனைத் தனியாக அழைத்தான்.
“டேய், சித்திகிட்ட கண்மணியைப் பற்றிய உண்மையைச் சொல்லலையா?”
“உண்மையைச் சொல்லி மறுபடியும் அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பப் போறியா?” என்று கந்தன் எதிர் கேள்வி கேட்டான்.
“டேய், என்ன பேசுற நீ? அவங்க முல்லையோட பிள்ளையை என் பிள்ளைன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்க!”
கதிரின் வார்த்தைகளைக் கேட்டதும் முல்லையின் முகத்தில் பதற்றம் அதிகரித்தது.
“புரியுது மச்சான். ஆனா இப்போ நம்ம இருக்கிற சூழ்நிலையில அவங்ககிட்ட எதையும் விவரமா சொல்ல முடியாது,” என்றான் கந்தன்.
“சார்… அவங்க என் குழந்தையை மட்டும் இல்ல, என்னையுமே அவங்க மருமகளா நினைச்சுத்தான் பேசுறாங்க,” என்று முல்லை கலக்கமாகக் கூறினாள்.
அந்த நேரத்தில் அங்கே வந்த நிலா, “ஆமா முல்லை. எங்க சித்தி உங்களைக் கதிரோட மனைவியாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க,” என்றாள்.
“ஐயோ! அவங்ககிட்ட அப்படியெல்லாம் இல்லன்னு சொல்லுங்க நிலா,” என்று முல்லை பதறினாள்.
“சொல்லலாம். ஆனா இப்போ என்னால எதையும் சொல்ல முடியாது. எப்படியும் உங்களுக்கிருக்கிற பிரச்சனைகள் முடியும் வரை நீங்க உங்க குழந்தையோட இந்த வீட்டுலதானே இருக்கப்போறீங்க? அதுவரைக்கும் எங்க சித்திக்குக் கண்மணி விஷயம் தெரியாம இருக்கட்டும்,” என்றாள் நிலா.
“ஏய், என்ன பைத்தியம் மாதிரி உளறுற? உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்? இரு, நானே போய்ச் சித்திகிட்ட எனக்கு விவாகரத்து ஆன விஷயத்தைச் சொல்லிடுறேன்!” என்று கதிர் வாசலை நோக்கி நடந்தான்.
“ஹான்… போ! போய் உண்மையைச் சொல்லி அவங்களை மண்ணுக்குள்ள அனுப்பிடு. அதுதானே தேவை உனக்கு? அடுத்தவங்களைப் பற்றி உனக்கு என்ன கவலை?” என்று நிலா கோபமாகக் கேட்டாள்.
கதிர் அவளை முறைத்தான்.
“என்ன பார்க்கிற? அந்தக் கண்மணிக்காக நீ சித்தியை எதிர்த்து அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. அந்தச் சம்பவத்திலேயே சித்தி பாதி உடைஞ்சு போயிட்டாங்க. இப்போ அவகூட விவாகரத்து நடந்த கதையைச் சொல்லி மொத்தமா அவங்களை முடிச்சிடு!” என்றாள் நிலா.
“நிலா, நீ சும்மா இரு,” என்று கந்தன் அவளை அடக்கிவிட்டு முல்லையின் பக்கம் திரும்பினான்.
“சிஸ்டர், எங்க மாமி இன்னும் ரெண்டு நாள்தான் இங்க இருப்பாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.”
“அட்ஜஸ்ட்னா எப்படி?” என்று முல்லை குழப்பத்துடன் கேட்டாள்.
“அவங்க உங்களைக் கதிரோட பொண்டாட்டியா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அதனால, அவங்க முன்னாடி அந்த மாதிரியே நடந்துக்கோங்க,” என்றான் கந்தன்.
“டேய்…” என்று கதிர் அவனை எச்சரித்தான்.
“நீ சும்மா இரு கதிர். நான் சொல்றதை முதல்ல கேளு,” என்ற கந்தன், முல்லையிடம் தொடர்ந்து பேசினான்.
“இங்க பாருங்க சிஸ்டர்… உங்க பிரச்சனையில சம்பந்தப்பட்டவங்க எல்லாம் பெரிய ஆளுங்க. நீங்கத் தனியா நின்னு அவங்களை எதிர்க்க முடியாது. உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் நியாயம் கிடைக்கணும்னா, முதல்ல நீங்கப் பாதுகாப்பா இருக்கணும். அதுக்கு நீங்க எங்ககூட இருக்கிறது அவசியம்.”
கந்தனின் வார்த்தைகளில் இருந்த உண்மையை முல்லையால் மறுக்க முடியவில்லை. தன்னையும் தன் குழந்தையையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், அவனுடைய ஆலோசனைக்குக் கட்டுப்படுவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை.
ஆனால் கதிரின் மனம் மட்டும் சமாதானமடையவில்லை.
“டேய், சித்திக்கு உண்மை தெரிஞ்சா அவங்க தாங்கமாட்டாங்க டா,” என்றான் வேதனையுடன்.
“அதைத்தான் நானும் சொல்றேன். கண்மணிபற்றிய விஷயம் தெரிந்தால் அவங்க மனசு தாங்காது. அதனால இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம்.”
“சார்… இருந்தாலும் பெரியவங்ககிட்ட பொய் சொல்லக் கூடாது தானே?” என்று முல்லை தயக்கத்துடன் கேட்டாள்.
“நாம ஒண்ணும் பொய் சொல்லல முல்லை. உண்மையைச் சொல்லாம கொஞ்சம் தள்ளிப்போடுறோம்,” என்று நிலா பதிலளித்தாள்.
“எனக்கு என்னவோ இதெல்லாம் சரியா வரும்னு தெரியல,” என்று கதிர் முணுமுணுத்தான்.
“டேய், நீயும் ஒரு டாக்டர்தானே? ஹார்ட் அட்டாக் வந்த ஒருத்தர்கிட்ட, உனக்கு விவாகரத்து நடந்த கதையையும், உன் பிள்ளையை விட்டுட்டு அவ ஓடிப்போன கதையையும் சொன்னா, அவங்க உடல்நிலை இன்னும் மோசமாகும்னு உனக்குத் தெரியாதா?” என்று கந்தன் கேட்டான்.
“இல்ல… என் சித்திக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது,” என்று கதிர் பதறினான்.
“அப்படி எதுவும் ஆகக்கூடாதுன்னா, இன்னும் ரெண்டு நாளைக்கு வாயை மூடிக்கிட்டு இரு. மத்ததையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்,” என்ற கந்தன், முல்லையைப் பார்த்துக் கண்டிப்புடன் கூறினான்.
“சிஸ்டர், எங்க மாமியைப் பொறுத்தவரை நீங்கதான் கதிரோட பொண்டாட்டி. இந்த ரெண்டு குழந்தைகளும் உங்க ரெண்டு பேருக்கும் பிறந்தவங்கதான். புரியுதா?”
கந்தனின் பேச்சைக் கேட்ட முல்லை என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள்.
அந்த நேரத்தில் ஹாலிலிருந்து கீதாவின் குரல் கேட்டது.
“நிலா… நிலா, இங்க வா!”
சித்தியின் குரலைக் கேட்ட நிலா உடனே வெளியே சென்றாள். அவளைத் தொடர்ந்து கந்தனும் சென்றுவிட்டான்.
அவர்கள் சென்ற பாதையைப் பார்த்தபடி முல்லை நின்றிருக்க, தன் கையில் இருந்த குழந்தையை ஏந்தியவாறு கதிர் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“சார்… இங்க என்ன நடக்குது? என்னால உங்க குடும்பத்துல ஏதாவது பிரச்சனை வந்துடுமா?” என்று முல்லை கவலையுடன் கேட்டாள்.
“எனக்குமே ஒண்ணும் புரியலைங்க. ஆனா எனக்கு என் சித்தியோட உடல்நலம்தான் ரொம்ப முக்கியம்,” என்றான் கதிர்.
“புரியுது சார்… ஆனாலும்…” என்று முல்லை தயங்கினாள்.
அதற்குள் அறைக்குள் வந்த கீதா, இருவரும் குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.
“குழந்தைகளைத் தூங்க வைக்கச் சொன்னா, நீங்க என்ன ஆளுக்கொரு பிள்ளையை வச்சுக்கிட்டு கதை பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.
கதிர் உடனே எழுந்து நின்றான்.
“ஆமா… நீ ஏன் உன் பொண்டாட்டி, பிள்ளைங்ககூட உன் ரூம்ல இல்லாம நிலா ரூம்ல வந்து இருக்க?” என்று கீதா கேட்டதும், அவன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.
அந்தச் சமயத்தில் உள்ளே வந்த நிலா, “அது ஒண்ணுமில்ல சித்தி. கதிர் ரூம்ல இருக்குற பாத்ரூம்ல பிரச்சனை. அதைச் சரி பண்ற வரைக்கும் முல்லையையும் குழந்தைகளையும் என் ரூம்ல தங்கச் சொன்னேன்,” என்று சமாளித்தாள்.
“ம்… சீக்கிரமா எல்லாத்தையும் சரி பண்ண ஆள் ஏற்பாடு பண்ணுங்க,” என்ற கீதா, எதிரே நின்ற முல்லையை முறைத்துப் பார்த்தார்.
“சித்தி, நாங்க பார்த்துக்கிறோம். நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க,” என்ற நிலா, “சாப்பிட என்ன பண்ணட்டும்?” என்று கேட்டாள்.
“சாப்பாடெல்லாம் நீ பண்ண வேண்டாம். இங்க இருக்கிற ரெண்டு நாளும் நானே உங்களுக்குச் செஞ்சு தரேன்,” என்ற கீதா, குழந்தைகள் இருவரையும் சுட்டிக்காட்டினார்.
“குழந்தைகளைச் சும்மா தூக்கித் தூக்கி வச்சுக்காம, ரெண்டு பேரையும் கட்டில்ல படுக்க வையுங்க.”
அவரது பேச்சைக் கேட்ட முல்லை, தன் கையில் இருந்த கதிரின் பெண் குழந்தையை மெதுவாகக் கட்டிலில் படுக்க வைத்தாள்.
“பிள்ளைங்க தூங்கும்போதே நீயும் படுத்துத் தூங்கு,” என்று முல்லையிடம் கூறிவிட்டு கீதா அறையை விட்டு வெளியேறினார்.
அவரது பேச்சில் அன்பும் கண்டிப்பும் கலந்திருந்தன. தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தாலும், முல்லையின் மீதும் குழந்தைகளின் மீதும் அவர் காட்டிய அக்கறை அவளுக்குள் ஒரு சிறிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கீதா சென்றதும் கதிர் முல்லையைப் பார்த்தான்.
“முல்லை, நீங்க ரெஸ்ட் எடுங்க. கந்தன் சொன்ன மாதிரி இன்னும் ரெண்டு மூணு நாள்தான். அதுக்குள்ள கண்டிப்பா நான் சித்திகிட்ட உண்மையைச் சொல்ல முயற்சி பண்றேன்,” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
அவன் சென்றபிறகும் முல்லைக்கு உறக்கம் வரவில்லை.
தன் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற அச்சம் அவளை வாட்டியது. கதிரின் மனைவி என்ற தவறான எண்ணத்துடன் கீதா தன்னிடம் நடந்துகொள்வது ஒருபுறம் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், அவருடைய அன்பு அவளுக்குள் ஒருவிதமான குற்றவுணர்வையும் உருவாக்கியது.
இந்தப் பொய்யான உறவு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப்போகிறது என்பதே அவளுக்குப் புரியவில்லை.
அதே நேரத்தில்…
கையில் மதுபானக் குவளையுடன் கமிஷனர் வெங்கடேஷின் முன்னால் அமர்ந்திருந்தார் கோடீஸ்வரன் முகேஷ்.
“டேய், போதும் முகி! அதிகமா குடிச்சா உன் உடம்புக்கு ஆகாம போயிடும்,” என்று வெங்கடேஷ் எச்சரித்தான்.
“போகட்டும் டா… இனி இந்த உடம்பு இருந்து மட்டும் என்ன பிரயோஜனம்?” என்று கண்கள் சிவக்கக் கேட்டார் முகேஷ்.
அவரது நிலையைப் பார்த்த வெங்கடேஷுக்குப் பயம் அதிகரித்தது.
“டேய், முக்தா மேடத்துக்குத் தெரிஞ்சா உன்னோட சேர்த்து என்னையும் அழிச்சிடுவாங்க டா!”
முகேஷ் அவனைப் பார்த்து ஒரு கசப்பான சிரிப்பை உதிர்த்தார்.
“அவ என் பொண்டாட்டினா, நீ என் நண்பன் டா. இதுல உனக்கு என்ன பயம்?”
“ஆமா… நீ என்னை நண்பன் மாதிரியா நடத்துற? இன்னைக்குக்கூட அந்த முல்லை விஷயத்துல என்னை எப்படித் திட்டித் தீர்த்தன்னு நினைவு இருக்கா?” என்று கமிஷனர் வெங்கடேஷ் வருத்தத்துடன் கேட்டான்.
முல்லை!
அந்தப் பெயரைக் கேட்டதும் முகேஷின் முகம் சட்டென்று மலர்ந்தது.
சில நொடிகளுக்கு முன்பு வரை சோர்ந்து காணப்பட்ட அவரது கண்களில் இப்போது வேறொரு ஒளி தெரிந்தது.
“அடேய் வெங்கடேஷ்… எனக்கு உன் மேல கோபம் வரக் காரணமே, நீ என் முல்லையை இன்னும் என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கலங்கிறதுதான் டா!” என்றார்.
உடனே தனது கைப்பேசியை எடுத்தவர், அதிலிருந்த ரகசியக் கோப்புறையைத் திறந்தார்.
அதற்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த முல்லையின் புகைப்படத்தைப் பார்த்தபடி, அவரது உதடுகளில் ஒரு விசித்திரமான புன்னகை மலர்ந்தது.
“முல்லைப்பூ… பேருக்கு ஏத்த மாதிரியே இவ அழகிதான் டா, வெங்கி!” என்றார் அவர்.
எழுபது வயதை நெருங்கிய முகேஷின் பார்வையில் தெரிந்த அந்தத் தவறான ஆசை, முல்லையின் வாழ்க்கையைச் சுற்றி இன்னும் ஆபத்தான வலை பின்னப்பட்டுக்கொண்டிருப்பதை உணர்த்தியது.
கதிரின் வீட்டில் உறவுகளைக் காப்பாற்றுவதற்காக உண்மைகள் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் முல்லையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் முகேஷின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?
தொடரும்… 🕊️
1 comment
அடப்பாவி முகேஷ் பாவம் முல்லை