அத்தியாயம் 14
கதிரை அந்த நிலையில் பார்த்த கீதா, அடுத்த நொடியே அவனருகில் சென்று,
“கதிர், என்னாச்சுடா?” என்று பதறினார்.
அவருடைய குரலில் இருந்த பயத்தை உணர்ந்த கதிர், “சித்தி எனக்கு ஒண்ணும் இல்ல. நீங்க பயப்படாதீங்க.” என்று தைரியம் கூறினான்.
ஆனால், கீதாவின் பார்வை அவன் நெற்றியில் இருந்த கட்டிலிருந்து விலகவில்லை.
அவருடைய கண்களில் கண்ணீர் தேங்கியது.
அதைக் கண்ட கந்தன் உடனே,
“மாமி, பயப்படுற அளவுக்கு எதுவும் இல்லை. கார்ல வரும்போது சின்ன ஆக்சிடென்ட்.” என்று அவரைச் சமாதானப்படுத்தினான்.
“சின்ன விபத்துக்கா இவ்வளவு பெரிய கட்டு?” கீதாவின் குரல் இன்னும் நடுங்கியது.
கதிர் ஆறுதலாக அவருடைய கையைப் பிடித்து,
“சித்தி, உண்மையாவே எனக்கு ஒண்ணும் இல்ல. நெத்தில சின்னக் காயம்தான். நீங்க இப்படிப் பயப்படாதீங்க.” என்று அவன் சிரிக்க முயன்றான்.
ஆனால், அந்தச் சிரிப்பே கீதாவை இன்னும் கலங்கச் செய்தது.
அப்போது நிலா,
“சித்தி, நீங்க பதட்டப்படாம ரூமுக்கு வாங்க. இங்க நின்னுட்டு பதறிக்கிட்டே இருந்தா உங்களுக்குத்தான் உடம்பு முடியாம போயிடும்.” என்றாள்.
“ஆமா மாமி. இவனுக்குச் சின்னக் காயம் தான்.” என்று கந்தனும் சொல்ல,
அவனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் இருந்தாலும், அனைவரின் வற்புறுத்தலால் கீதா அவர் அறைக்குச் சென்றார்.
அதே நேரத்தில் கதிரின் அறைக்குள் இருந்த முல்லைக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதே சரியாகப் புரியவில்லை.
ஆனால், கதிரின் பெயர் அடிக்கடி அவளுடைய காதில் விழுந்துகொண்டே இருந்தது. குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாலும், வெளியே கேட்ட சத்தங்கள் அவளுடைய கவனத்தை முழுவதுமாக வாசல்பக்கம் திருப்பிவிட்டன.
பசி பாதியில் நின்ற குழந்தையோ அழத் தொடங்க, அந்த அழுகைகூட முல்லையின் காதில் சரியாக விழவில்லை.
‘கதிருக்கு என்ன ஆனது?’ என்ற ஒரு கேள்விதான் அவளுடைய மனதை முழுவதுமாக
ஆக்கிரமித்திருந்தது.
என்ன நினைத்தாளோ, அவசரமாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியே வர,
சோபாவில் அமர்ந்திருந்த கதிர் அவளுடைய கண்களில்பட்டான்.
நெற்றியில் பெரிய கட்டும், சட்டையில் இரத்தக் கறைகளும், முகத்தில் தெரிந்த சோர்வுமாக, இருவனைப் பார்த்த நொடியில் முல்லையின் மனம் தடுமாற, அவளுடைய இதயம் ஒரு கணம் நின்று, மீண்டும் வேகமாகத் துடிப்பது போல இருந்தது.
சட்டென சுதாரித்தவள், “ஐயோ! டாக்டர் சார்!” என்று பதறி, குழந்தையுடன் அவனருகில் ஓடிவந்தாள்.
“என்னாச்சு உங்களுக்கு?”
அவளுடைய குரலில் இருந்த நடுக்கம், கதிரையே அதிர்ச்சியடையச் செய்தது.
அவன் இதுவரை முல்லையை இப்படிப் பார்த்ததே இல்லை.
எந்தத் தயக்கமும் இல்லாமல் அவனருகில் வந்து நின்றவள் கை எதையும் யோசிக்காது, தன்னிச்சையாக அவன் நெற்றிக்குச் சென்றது. காயத்தின் அருகே விரல்கள் பட்டதும் அவளுடைய கண்கள் கலங்கின.
“அச்சோ! ரத்தம் வந்திருக்கே. என்ன டாக்டர் இதெல்லாம்?” அவள் கிட்டத்தட்ட அழுதபடியே கேட்டாள்.
கதிர் அவளை, அவளின் தவிப்பைப் பார்த்தபடி அமைதியாக இருந்தான்.
அவள் கையில் இருந்த குழந்தை இன்னும் அழுது கொண்டிருக்க, முல்லையின் கவனமோ முழுவதும் கதிரின் காயத்திலேயே இருந்தது.
“எப்படி அடிபட்டுச்சு? ரொம்ப வலிக்குதாங்க?” என்று பதறினாள்.
அவள் அழுகையைப் பார்த்து, “முல்லை, எனக்கு ஒண்ணும் இல்ல.” என்று அவன் சொன்ன வார்த்தைகள் அவளுடைய காதில் விழுந்ததா என்பதே தெரியவில்லை.
மீண்டும் அவன் நெற்றியை சுற்றி இருந்த கட்டை அவள் விரல்களால் மெதுவாகத் தொட்டுப் பார்த்தாள். அப்போது அவளுடைய கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்தது.
அந்தக் கண்ணீரைப் பார்த்த கதிரின் மனதில், இனம்புரியா மாற்றம் ஒன்று நிகழ்ந்து, அவனை அசைந்ததுப் பாய்த்தது.
இதுவரை, தன்னுடைய காயத்தைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என்று அனைவரையும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவன்,
முல்லையின் கண்களில் தெரிந்த அந்தப் பயத்தின் முன்னால், வார்த்தைகளின்றி நின்றான்.
அங்கே முல்லையின் கையில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டு இருக்க,
அப்பொழுதுதான் கதிரின் கவனம் அந்தக் குழந்தையின் மீது திரும்பியது. குழந்தையின் அழுகையை உணராது, தனக்காக கண்ணீரைத் துடைக்கக்கூட மறந்திருக்கும் அவளையும், அக்கண்ணீரையும் பார்த்த கதிருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“ப்ச்… அதான் சித்தி இங்க இல்லையே. ஏன் நீங்க இப்போ இப்படி அழறிங்க?” என்று கேட்டான்.
அந்தக் கேள்வி அவளுடைய மனதை சல்லி சல்லியாக உடைத்து எறிந்தது.
“என்ன பேசுறீங்க? உங்க சித்திக்காகத்தான் நான் அழறேன்னு நினைக்கிறீங்களா?” என்றவள், மேற்கொண்டு அங்கே நிற்க முடியாமல், குழந்தையை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அறைக்குள் ஓடிவிட்டாள்.
கதிர் அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது கந்தன்,
“டேய் மச்சான், அவங்க உண்மையாவே உனக்காகத்தான் பயந்துட்டு அழறாங்கடா” என்று உண்மையைச் சொன்னான்.
ஆனால் கதிர் உடனே, “இல்லடா. நான் அவங்க சித்திக்காகத்தான்…” என
அதற்கு மேல் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.
வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டன. அவனுக்குத் தெரியுமே அந்தக் கண்ணீரும், துடிப்பும் தனக்காக என்று.
அந்த நேரத்தில் நிலாவும் அங்கே வர, “என்னாச்சு?” எனப் பதற்றதுடன் கேட்டாள்.
“வெளிய நின்னு எதையும் பேச வேண்டாம். ரூமுக்குப் போய்ப் பேசிக்கலாம் வாங்க” எனக் கந்தன் இருவரையும் கதிரின் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அறைக்குள் முல்லை கட்டிலின் ஓரத்தில் குழந்தையுடன் அமர்ந்திருந்தாள்.
அவளுடைய கண்கள் முழுவதும் கண்ணீரால் கலங்கிச் சிவந்திருந்தன.
“இப்போவாது சொல்லுங்க. என்ன நடந்தது?” என்று நிலா கேட்க,
“முக்தாவின் ஆட்கள் உங்க ஹாஸ்பிடலுக்கு வந்து முல்லையையும், அவங்க குழந்தையையும் கேட்டுப் பிரச்சனை பண்ணிருக்காங்க” என்று கந்தன் உண்மையைச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்ட முல்லையின் உடல் பயத்தில் நடுங்கியது.
“ஐயோ அப்புறம் என்னாச்சு!?” என நிலாவும் பதறினாள்.
“அதனால தான் ஹாஸ்பிடல்ல இருந்து போன் வந்ததும், நானும், கதிரும் அங்கே போய் என்னனு விசாரிச்சோம். ஆனா,
அந்தப் பேச்சு வார்த்தை கைகலப்பாக மாறிக் கதிருக்குச் சின்னக் காயம் ஏற்பட்டுருச்சு”
என்றான் கந்தன்.
அப்போது முல்லையின் பார்வை கதிரின் நெற்றிக் கட்டில் பதிந்தது.
“என்னாலதானே இவருக்கு இப்படி நடந்துச்சு. இனி நான் உங்க யாருக்கும் தொந்தரவா இருக்க விரும்பல. என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் என் குழந்தையைத் தூக்கிட்டு என் மாமா ஊருக்கே போயிடுறேன்.” என்றவளுடைய குரல் நடுங்கியது.
அந்த வார்த்தைகள் கதிரின் முகத்தை இறுக்கமாக்கின.
அவள் தன்னால் அவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக விலக நினைக்கிறாள் என்பதைக் கதிர் புரிந்துகொண்டான்.
கந்தன் உடனே,
“நாங்க எல்லாத்தையும் சமாளிச்சிட்டோம். நீங்க எங்க இருக்கீங்கன்னே தெரியாதுன்னு சொல்லிட்டோம். இனிமேல் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.” என அவளைச் சமாதானப்படுத்தினான்.
ஆனால், அவளின் மனமோ அதை ஏற்கவில்லை.
“இனி அவங்க சும்மா இருக்க மாட்டாங்க. என்னால உங்களுக்கு ஏன் பிரச்சனை வரணும்?”
அவளுடைய குரலில் இருந்த வேதனை கதிரை அமைதியாக்கியது.
முல்லையின் பேச்சில் கோவம் அடைந்தான் கந்தன்.
“சிஸ்டர். இன்னைக்கு நைட் நீங்க நிம்மதியா தூங்குங்க. நாளைக்கு முக்தாவுக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன்.”
அவ்வளவு மட்டும் சொல்லிவிட்டு நிலாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.
கதிரின் அறைக்குள் மீண்டும் அமைதி நிலவியது.
முல்லை குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்தாள்.
மற்றொரு குழந்தையைத் தூக்கி தன்னோடு அணைத்துக்கொண்டு கட்டிலில் படுத்தாள்.
அவள் கதிரை ஒருமுறைகூடப் பார்க்கவில்லை.
கதிரும் எதுவும் பேசவில்லை.
ஆனால் அவன் மனதுக்குள் முல்லையின் வார்த்தைகள் மட்டும் சுற்றிக்கொண்டிருந்தன.
‘என்னைப் பிரச்சனையிலிருந்து காப்பாத்தத்தான் அவ இங்கிருந்து போகணும்னு நினைக்கிறாளா?’
அவள் பிரிந்து செல்வதைப் பற்றிய எண்ணமே அவனுக்குள் ஒரு விதமான வெறுமையை ஏற்படுத்தியது.
அந்த இரவு ஒரே அறையில் இருந்தும், இருவரும் அந்நியர்களைப் போல அமைதியாகக் கிடந்தனர்.
முல்லை பயத்தையும், குற்ற உணர்வையும் சுமந்துகொண்டிருக்க,
கதிரோ அவள் அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற கவலையைச் சுமந்து கொண்டிருந்தான்.
மறுநாள் விடியலின் மெல்லிய வெளிச்சம் கதிரின் அறைக்குள் பரவியது.
முல்லை குளித்து முடித்துவிட்டு ஈரமான தலைமுடியைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
கதிரும் மெதுவாக எழுந்து குளிக்கச் சென்றவன், குளியலறையில் இருந்து வரும் போதே அவன் நெற்றியில் இருந்த கட்டை கழட்டி இருந்தான்.
அப்போது அறைக்கதவைத் தட்டிக்கொண்டு கீதா உள்ளே வந்தார்.
கதிரின் காயத்தைப் பார்த்துவிட்டு அவனுடைய உடல்நிலையை விசாரித்தார்.
அப்போது, “சித்தி, நீங்க என்னை மன்னிச்சிட்டீங்களா?” என்று கலங்கிய விழிகளுடன் கேட்டான் கதிர்.
“நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்.” என்ற கீதாவின் அந்த ஒரு வார்த்தை, கதிரின் மனதில் இருந்த பாரத்தைக் கொஞ்சம் குறைத்து, அவனுடைய கண்களில் நிம்மதி தெரிந்தது.
அடுத்த நொடியே கீதாவின் கவனம் முல்லையிடம் சென்றது.
“ஈர முடியோட நிக்காத. நல்லா காய வச்சுட்டுச் சீக்கிரம் ரெடி ஆகு.” என்றார்.
கதிர் புரியாமல் அவரைப் பார்த்தான்.
“எங்க கிளம்பச் சொல்றிங்க?” என்று கேட்டான்.
கீதா பதில் சொல்லாமல் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துவைக்கத் தொடங்கினார்.
அப்போது வெளியிலிருந்து கந்தனின் குரல் கேட்டது.
“மச்சான். நாம எல்லாரும் சேர்ந்து மாமி கூடச் சொந்த ஊருக்குப் போய் ஒரு வாரம் தங்கிட்டு வரலாம்னு, நான் தான் சொன்னேன்.” என்றான்.
“சொந்த ஊருக்கா?” கதிரின் முகத்தில் ஆச்சரியத்தோடு சேர்ந்து ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சி மலர்ந்தது.
அங்கே முல்லையிடம் யாரும் அவள் சம்மதத்தைக் கேட்கவில்லை.
பயணத்திற்கான வேலைகள் தொடங்கின.
குழந்தைகளுக்குத் தேவையான துணிகள், பொருட்கள் அனைத்தும் தயாரானது.
முல்லை தனக்காக நிலா வாங்கிக்கொடுத்திருந்த துணிகளை மட்டும் ஒரு சிறிய பையில் வைத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் அனைவரும் தயாரானார்கள்.
குழந்தைகளை முல்லையும், நிலாவும் தூக்கிக்கொண்டு காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.
கந்தன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததும் கார் அந்த வீட்டை விட்டு மெதுவாகப் புறப்பட்டது.
மறுபக்கம், தங்களுடைய ஆட்கள் அடிபட்ட விஷயம் முக்தாவின் காதுகளுக்கு எட்டியதும், அவளுடைய முகம் கோபத்தில் இறுகியது.
“நம்மகிட்ட இல்லாத பணபலமா? இல்லை ஆள் பலமா!? ஆனா, எப்படி ஒன்னும் இல்லாத அந்த டாக்டர் பையனுக்கு, நம்ம ஆளையே அடிக்கிற அளவுக்குத் தைரியம் வந்துச்சு” என்று ஆவேசமாக எழுந்து நின்றாள்.
அப்போது முகேஷ் மேலும் சில அடியாட்களை அழைத்து, “அந்த டாக்டர் பையனையும், வீடியோ எடுத்த போலீஸ்காரனையும் போட்டுத் தள்ளிட்டு, அந்த முல்லையையும், இந்த வீட்டு வாரிசையும் என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க.” எனக் கட்டளையிட்டான்.
முகேஷின் கண்களில் தெரிந்தது கோபம் மட்டும் இல்லை. முல்லையை எப்படியாவது தன் கைக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற வெறியும் தான்.
இதே சமயம் கந்தன் ஓட்டிய கார் அவர்களுடைய சொந்த ஊரை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்க, முன்பக்க இருக்கையில் கதிர் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவனுக்குள் மட்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய ஊரைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருந்தது.
அவன் பிறந்து வளர்ந்த மண். சிறுவயதில் ஓடிய தெருக்கள். தன்னுடைய வீட்டின் முன்புறத் திண்ணை. பழைய நண்பர்கள். மரத்தடியில் கழித்த நாட்கள் என எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக அவனுடைய நினைவில் வந்து சென்றன.
அவனுடைய முகத்தில் இருந்த சோர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.
ஆனால், பின்புறம் அமர்ந்திருந்த முல்லையின் முகத்தில் மட்டும் அமைதி இல்லை. குழந்தையை அணைத்தபடி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘இங்க வந்த பிறகும் ஏதாவது பிரச்சனை வந்துடுமோ?’ என்ற பயம் இன்னும் அவளை விட்டு விலகவில்லை.
ஐந்து மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கார் மெதுவாகக் கிராமத்துக்குள் நுழைந்தது.
இருபுறமும் பச்சை வயல்கள். காற்றில் ஆடிய தென்னை மரங்கள். வீடுகளின் முன் பெரிய கோலங்கள். மரத்தடியில் பேசிக்கொண்டிருந்த வயதானவர்கள்.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவர்கள்.
அந்தப் பழக்கமான காட்சிகள் கதிரின் கண்களில் பழைய நினைவுகளைத் திறந்தன.
கார் மண் பாதையில் திரும்பியதும் அவனுடைய முகத்தில் இன்னும் அதிகமான மகிழ்ச்சி தெரிந்தது.
சில நிமிடங்களில் ஒரு பெரிய பழமையான வீட்டின் முன் கார் வந்து நின்றது.
பெரிய மரக்கதவு. உயரமான தூண்கள். சிவப்பு ஓடுகளால் வேயப்பட்ட கூரை. நீண்ட திண்ணை. அதில் தொங்கியிருந்த பழைய மர ஊஞ்சல். வீட்டைச் சுற்றிலும் செம்பருத்தி, மல்லிகை, ரோஜா செடிகள். வாசலுக்கு முன் போடப்பட்டிருந்த பெரிய கோலம்.
அந்த வீடு மட்டும் காலத்தோடு மாறாமல் அப்படியே இருந்தது.
கதிர் சில நொடிகள் காரிலிருந்தபடியே அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் பழைய நினைவுகள் வந்து சென்றன.
கீதா காரிலிருந்து இறங்கினார்.
அவர்கள் வீட்டில் பணிபுரியும் கண்ணம்மா ஓடிவந்து கதவைத் திறந்தாள்.
தெருவில் இருந்த சில பெண்களும் கார் வந்து நின்றதைப் பார்த்து ஆர்வத்துடன் அருகில் வர,
கீதா அவர்களிடம் அதிகம் பேசாமல் வீட்டுக்குள் நுழைந்தார்.
பூஜையறையில் விளக்கேற்றி, ஆரத்தித் தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
முல்லை இன்னும் காரிலேயே அமர்ந்தபடி,
“என்னால உங்க யாருக்காவது பிரச்சனை வந்துடுமோன்னு பயமா இருக்கு.” என்று நிலாவிடம் தன் பயத்தைத் தெரியப்படுத்தினாள்.
“இனி எதுவும் ஆகாது. நீங்க கவலைப்படாம இறங்குங்க.” கந்தன் அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முயன்றான்.
முல்லையின் பார்வை மீண்டும் கதிரின் நெற்றிக் காயத்தில் விழுந்தது.
“என்னாலதானே இவருக்கு இந்த நிலைமை.” அவளுடைய குரலில் மீண்டும் குற்ற உணர்வு தெரிந்தது.
கதிர் உடனே, “எனக்கு ஒண்ணும் இல்ல.நான் நல்லாதான் இருக்கேன்.” என்றான்.
அவன் சொன்னபோது அவனுடைய முகத்தில் இருந்த மகிழ்ச்சி உண்மையாகவே அவள் கண்ணுக்குத் தெரிந்தது.
அப்போது கீதா ஆரத்தித் தட்டுடன் அவர்களருகில் வந்தார்.
“நிலா! என் பேரனை கதிர்கிட்ட கொடு.
டேய் கதிர். உன் பொஞ்சாதியைக் கீழே இறங்க சொல்லு.” என்றார்.
முல்லை குழந்தையைத் தூக்கிக்கொண்டு, காரிலிருந்து கீழே இறங்கினாள்.
“ரெண்டு பேரும் ஜோடியா நில்லுங்க.”
கீதாவின் வார்த்தையில் இருவரும் அருகருகே நின்றனர்.
கதிரின் கையில் முல்லையின் குழந்தை. முல்லையின் கையில் கதிரின் குழந்தை.
அந்தக் காட்சியைப் பார்த்த கீதாவின் முகத்தில் பெருமை மலர்ந்தது.
ஆரத்தி சுற்றி முடித்ததும் அவர் புன்னகையுடன்,
“வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாங்க.” என்றார்.
கதிர் முல்லையைப் பார்த்து,
“வாங்க முல்லை.”
என்று சிரித்த முகத்துடன் அழைத்தான்.
அவனுடைய குரலில் இருந்த இயல்பான உரிமை முல்லையை ஒரு கணம் திகைக்கச் செய்தது.
ஆனால் அதை வெளிக்காட்டிகொள்ளாமல் அவனைப் பின்தொடர்ந்தாள்.
அவர்கள் இருவரும் ஒன்றாக அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
வெளியில் நின்றிருந்த பெண்களின் முகத்தில் மகிழ்ச்சி.
“கதிரு இவ்வளவு நாளைக்குப் பிறகு பொண்டாட்டி பிள்ளையோட வந்திருக்கானே!” ஒரு பெண் ஆச்சரியத்துடன் சொன்னாள்.
மற்றொரு பெண் முல்லையைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி இருக்கா. கதிருக்கு ஏத்த ஜோடி தான்.”
முல்லை சங்கடத்துடன் தலைகுனிந்தாள்.
அவளுடைய முகத்தில் இருந்த தயக்கத்தைப் பார்த்த கதிரின் உதடுகளில் மட்டும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
பல வருடங்களுக்குப் பிறகு கதிர் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பியிருந்தான்.
ஆனால், இந்த முறை அவன் மட்டும் வரவில்லை. அவனுடைய வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக இணைந்திருந்த முல்லையும், அவளுடைய குழந்தையும், அவனுடைய குழந்தையும் சேர்ந்து அந்த வீட்டிற்குள் நுழைந்திருந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும் கீதா நேராக வீட்டின் நடுப்பகுதியில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தின் முன் சென்றார்.
அது கதிரின் தாய், தந்தையரின் புகைப்படம்.
சில நொடிகள் அந்தப் புகைப்படத்தைப் பார்த்த கீதாவின் கண்களில் பழைய நினைவுகளின் சாயல் தெரிந்தது. பின்னர், அவர் முல்லையைத் திரும்பிப் பார்த்தார்.
“முல்லை இங்க வா.” என்றதும் சற்றுத் தயக்கத்துடன் தன் கையில் இருந்த குழந்தையை நிலாவிடம் கொடுத்துவிட்டு, பயபக்தியுடன் கீதாவின் அருகில் சென்று நின்றாள்.
அவளுக்கு அருகில் கதிரும் வந்து நின்றான்.
அவர்களுக்குப் பின்னால் நிலாவும் கந்தனும் அமைதியாக நின்றுகொண்டிருந்தனர்.
கீதா அங்கிருந்த விளக்கை முல்லையின் கையில் கொடுத்தார்.
“இந்த விளக்கை நீயே ஏத்து.”
அதை வாங்கிய முல்லையின் விரல்கள் சற்றே நடுங்கின. அவள் விளக்கை ஏற்றிவிட்டு, கதிரின் தாய் தந்தையரின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
அந்த நொடியில் அவளுடைய மனதில் ஏதோ ஒரு அமைதி பிறந்தது. கண்களை மூடியவள் மனதார வேண்டிக்கொண்டாள்.
‘என்னால இந்தக் குடும்பத்துக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது.
என்னையும் என் குழந்தையையும் இவங்க நல்லபடியா பார்த்துக்கிட்டிருக்காங்க,
இவங்களுக்கும், டாக்டர் சாருக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது.’ என்று வேண்டிக்கொண்டவள் கண்களைத் திறந்தாள்.
அவளுடைய பார்வை மீண்டும் அந்தப் புகைப்படத்தின் மீது விழுந்தது.
அவளுக்குத் தெரியாமலேயே அந்த நொடியில்,
அவள் அந்த வீட்டின் ஒரு அங்கமாக மாறிவிட்டதைப் போல இருந்தது.
அதைப் பார்த்த கீதாவின் முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. தன் அருகில் இருந்த செந்தூரத்தை எடுத்து, “முல்லை…குங்குமத்தை நெத்தியிலும், மாங்கல்யத்திலும் வச்சிக்கோ.” என்றார்.
முல்லை ஒரு நொடி தயங்கினாள். பிறகு கீதா சொன்னபடியே குங்குமத்தை எடுத்தாள்.
தன் புருவங்களுக்கு நடுவில் அழகாக வைத்துக்கொண்டவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கி நின்றாள்.
அப்போது கீதாவின் பார்வை அவளுடைய கழுத்தில் நின்றது.
“ஏய்!! என்ன உன் கழுத்துல தாலியே இல்லையே!? என் பையன் கட்டிய மாங்கல்யம் எங்கே!?” என்ற கீதாவின் கேள்வியில் முல்லையின் விழிகள் பயத்துடன் கதிரை தான் உள்வாங்கியது.
– தொடரும்.
2 comments
😍😍😍eppadiyo mullai kathir homeku poayachu super super
Super super ஆஹா முல்லைக்கும் கதிர்க்கும் கல்யாணம் நடக்கும் போலயே … Waiting for next part…