💜 அத்தியாயம் 13
அன்றைய தினம் வீட்டில் யாருமே சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்த நிலா, ஒரு முடிவுக்கு வந்து கீதாவின் அறைக்குச் சென்றாள்.
“சித்தி! வெளிய வாங்க. சாப்பிடலாம்.” என்றழைக்க, கீதா எதுவும் பதில் சொல்லவில்லை.
“சித்தி! நீங்க வரலைன்னா நாங்க யாரும் சாப்பிட மாட்டோம்.”
சில நொடிகள் கழித்து கதவு திறந்தது.
கீதா கோபத்துடனே வெளியே வந்தார்.
ஆனால், அவர் வெளியே வருவதற்கு முன்பே கந்தன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த நிலா அதிர்ச்சியுடன்,
“என்ன மாமா நீங்க. எங்கள விட்டுட்டு சாப்பிடுறீங்க?” என்று கேட்டாள்.
கந்தன் நிதானமாகச் சாப்பிட்டபடியே,
“தாயும் சேயும் ஒன்னுனா கூட வாயும் வயிறும் வேற வேற.” என்று சொல்லிவிட்டு ஒரு வாய் சாப்பிட்டான்.
பிறகு, “அதுவும் இல்லாம, சாப்பாட்டை மதிக்குற ஆளுங்க, சோறு மேல கோவத்தை காட்ட மாட்டாங்க.” என்றான்.
நிலா அவனை முறைத்துப் பார்த்தாள்.
கீதா எதுவும் பேசவில்லை. அமைதியாக வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
நிலா உடனே அவருக்குத் தேவையான மருந்தை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள்.
“சித்தி! இந்த மருந்தை சாப்பிட்டுடுங்க.” என்றதும் கீதா மருந்தை வாங்கிக்கொண்டு அமைதியாகச் சாப்பிட்டார்.
சில நொடிகள் அமைதியாக இருந்தனர்.
பின்னர் கந்தன் கதிரை நோக்கி,
“மச்சான், போய் சிஸ்டரை அழைச்சிட்டு வா. சாப்பிடலாம்.” என்றான்.
கதிர் எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குள் சென்றான்.
அங்கே முல்லை இன்னும் கட்டிலில் ஒடுங்கிப் படுத்திருந்தாள்.
அவளைப் பார்த்ததும் கதிருக்கு மீண்டும் பாவமாக இருந்தது. அவள் முகத்தில் தெரிந்த சோர்வும், கண்களில் இருந்த கலக்கமும் அவனுக்குப் பிடிக்கவில்லை.
ஆனால், எல்லோரும் சொல்லியும் அவள் சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வர அவனுக்குள் கோபமும் எழுந்தது.
“முல்லை…”
அவனுடைய குரல் கேட்டதும் முல்லை சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.
“சாப்பிட வாங்க.”
அவ்வளவுதான் கதிர் சொன்னான்.
முல்லை எதுவும் கேட்காமல் எழுந்து அவனுக்குப் பின்னால் அமைதியாக வந்து, சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்.
அங்கே நிலா ஏற்கனவே அவளுக்காக மீண்டும் சாப்பாடு பரிமாறி வைத்திருந்தாள்.
அந்தத் தட்டைப் பார்த்த கீதா அதை ஓரக்கண்ணால் கவனித்தார்.
முல்லை எதுவும் பேசாமல் தட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது கந்தன் நிலாவை நோக்கி, “நிலா! ஒருத்தவங்க தட்டுல சாப்பாடு வைக்கிறதுக்கு முன்னாடி, அவங்களுக்கு அது பிடுக்குமா? இல்ல அந்த சாப்பாடு அவங்களுக்கு ஒத்துக்குமான்னு கேட்டு வைக்கணும்.” என்றான்.
நிலா அவனை முறைத்துப் பார்த்தாள்.
“என்னை ஏன் முறைக்குற?” என்று கந்தன் அப்பாவியாகக் கேட்டுவிட்டு கீதாவைப் பார்த்து, “இது என் மாமி சொல்லிக்கொடுத்த பழக்கம் தான்.” என்றான்.
அந்த வார்த்தை கீதாவின் காதில் விழுந்ததும் அவருடைய முகம் மாறியது.
கதிரோ யாரையும் பார்க்காமல் தன்னுடைய தட்டில் இருந்த உணவைப் பிசைந்து கொண்டிருந்தான்.
முல்லை தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தாள்.
அந்த மேசையில் யாரும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. ஆனால், ஒவ்வொருவருடைய மனதுக்குள்ளும் வெவ்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், முல்லை எழுந்து சமையலறைக்குச் சென்று பாத்திரங்களை விளக்க ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்த கீதா உடனே, “ஏய்! குழந்தை பெத்த உடம்பு, தண்ணியில கை வைக்கக் கூடாதுன்னு கூட அறிவு இல்லையா?” என்று சத்தமாகக் கேட்டார்.
முல்லை பயந்து அப்படியே நின்றுவிட்டாள்.
“போ… போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு, அப்புறமா போய்ப் படு.”
முல்லை எதுவும் பேசாது அமைதியாகத் தலையசைத்தாள்.
“குழந்தைகளை குளிக்க வச்சியா?” என்று கீதா கேட்டார்.
முல்லை தயக்கத்துடன்,
“நேத்து டாக்டர் சார் குளிக்க வச்சாரு”
என்றதும் கீதா முகத்தைச் சுளித்தார்.
“உன் புருஷனும் நாத்தனாரும் டாக்டர் தானே!? இதுல இன்னொரு டாக்டர் வந்து என் பேரன், பேத்தியை குளிக்க வைக்கணுமா?” என்று கேட்டார்
கந்தன் உடனே சிரித்துக்கொண்டே, “மாமி! இவங்க கதிரைத் தான் டாக்டர் சார்னு சொல்றாங்க.” என்றான்.
கீதா முல்லையைப் பார்த்து, “அது என்ன பழக்கம்? ஒழுங்கா அவனை வாங்க… போங்கன்னு கூப்பிடு. அதுவும் இல்லனா மாமா, மச்சான்னு கூப்பிடு. அதுவும் இல்லைனா ‘கதிர்னாவது கூப்பிடு.” என்றார்.
முல்லை சங்கடத்துடன் கதிரைப் பார்த்தாள்.
கதிரும் அவளைப் பார்த்தான்.
இருவருடைய பார்வையும் சில நொடிகள் சந்தித்தது.
கந்தன் உடனே, “மாமி… அவங்க எப்படியோ கூப்பிடட்டும். நீங்க போய் படுங்க.” என்றான்.
“அதெல்லாம் அப்புறம் தூங்கலாம்.” என்று கீதா சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
சிறிது நேரத்தில் கீதா, கதிரின் அறைக்குள் சென்று தூங்கிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் பார்த்தார்.
பின்னர், “நிலா இங்க வா.” என்றழைத்தார்.
“சொல்லுங்க சித்தி?” என்று நிலா அறைக்குள் வந்ததும்,
“ஆமா. உன் அண்ணனும், அண்ணியும் காதலித்து தானே கல்யாணம் பண்ணாங்க?” என்று கேட்டார்.
வீட்டிலிருந்த அனைவரின் முகமும் மாறியது.
“ஏன் சித்தி? என்ன திடிர்னு உங்களுக்கு இப்படியொரு சந்தேகம்?”
என்று நிலா கேட்டாள்.
“இல்லையே. இந்த வீட்டுல என்னமோ ஒன்னு சரியில்லையே.” என்றார் கீதா.
“என்ன மாமி? மறுபடியும் என்ன பிரச்சனை?”
என்று கந்தன் கேட்டான்.
“ஒண்ணுமில்ல…” என்ற கீதாவின் பார்வை கட்டிலின் கீழே இருந்த ஒரு புகைப்படத்தின் மீது பதிந்தது.
அறையின் வெளியே நின்றிருந்த கதிருக்கு, இந்த நொடியே தனக்கும், கண்மணிக்கும் விவாகரத்து நடந்த செய்தியைக் கீதாவிடம் சொல்லிவிடலாமா? என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால், அதற்குள் கீதா வேகமாக வெளியே வந்தார்.
“சித்தி…” என்று கதிர் அழைக்க,
“எனக்கு கொஞ்சம் மயக்கம் வர மாதிரி இருக்கு. என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.
கதிர் புரியாமல் கதவையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனருகில் வந்த கந்தன், “டேய்… அவங்களுக்கு சந்தேகம் வர மாதிரி எதுவும் பேசி வைக்காத.” என்றான்.
“நான் என்னடா பேசினேன்?”
“நீ பேசலன்னாலும் பரவாயில்லை. இனிமேல் பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சுப் பேசு.” என்றான் கந்தன்.
அப்போது கதிர் அறையில் இருந்து வெளியே வந்த நிலா,
“முல்லை! குழந்தைங்க தூங்கும்போதே நீங்களும் படுங்க. நான் சமையலறைக்குப் போறேன்,” என்றாள்.
முல்லை மெதுவாக எழுந்து கதிரின் அறைக்குள் சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும் கந்தனைப் பார்த்துக் கதிர் கடுப்புடன்,
“டேய்! ஏன்டா பொய் மேல பொய் சொல்லணும்? சித்திகிட்ட உண்மையை சொல்லலாம்.” என்றான்.
“இப்போ வேண்டாம். அவங்களுக்கு உடம்பு சரியானதும் சொல்லலாம்.” என்று கந்தன் சொல்ல, கதிர் பெருமூச்சு விட்டான்.
“சரி. நான் முல்லைகிட்ட சில விஷயம் கேட்டு தெரிஞ்சுக்கணும்.* என்று கந்தன் சொல்ல, இருவரும் கதிரின் அறைக்குள் சென்றனர்.
கதிரின் அறையில் முல்லை குழந்தைகளின் அருகில் அமர்ந்திருந்தாள் அவளுடைய முகத்தில் இன்னும் கலக்கம் தெரிந்தது.
கந்தன் அவளைப் பார்த்து, “என்ன சிஸ்டர். தூங்கப் போறீங்களா?”
என்றதும், முல்லை பதறி,
“ஐயோ1 இல்லிங்க” என்று சொன்னவள் கதிரைப் பார்த்தாள்.
ஆனால், கதிரோ அவளைப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
கந்தன் அதை கவனித்துக்கொண்டு சிரிப்பை அடக்கியவன்,
“சிஸ்டர்… எனக்கு உங்களோட சில details தெரியணுமே.” என்றான்.
முல்லை உடனே,
“கேளுங்க. என்ன தெரியணும்?” என்று கேட்டாள்.
சிறிது நேரத்தில் முல்லையின் ஊர், கல்லூரி, மாமாவின் பெயர் மற்றும் கைபேசி எண், வேலை தருவதாகச் சொன்ன இடத்தின் முகவரி என அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டான்.
கடைசியாக முல்லை,
“எனக்கு வேலை தரேன்னு சொன்னது சென்னை மயிலாப்பூர்ல.”
என்றாள்.
கந்தன் அனைத்தையும் மனதில் பதித்துக்கொண்டான்.
“சரி… இப்போதைக்கு இது போதும். பட், இப்போ நம்மளால உங்க மாமாவுக்கு போன் கூட பண்ண முடியாது.”
என்றான்.
முல்லை பதற்றமாக,
“ஏன்?” என்று கேட்டாள்.
“அவரோட நம்பருக்கு நாம போன் பண்ணினா, அந்த கால் டீடெய்ல்ஸ் கமிஷனர் மூலமா, முக்தாவுக்குக் கூட தெரிய வாய்ப்பு இருக்கு. அதனால கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.” என்றான்.
முல்லை முகம் வாட, “சீக்கிரமா என் மாமா எங்க இருக்காருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க. என்னால இந்த வீட்டுல ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.” என்றாள்.
அவளுடைய பயத்தைப் பார்த்த கதிரின் முகம் சற்று மாறியது.
சில நொடிகள் கழித்து கந்தன்,
“ஆமா. உங்களுக்கு ஏன் மீன் பிடிக்காது?”
என்று கேட்டான்.
“முன்னாடி எல்லாம் பிடிக்கும். ஆனா, ஒரு முறை மீன் முள் போய் நடு தொண்டையில குத்திடுச்சு. அது infection ஆகி, ரெண்டு மாசம் என்னால சரியா பேசவே முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். அதுல இருந்து மீனைப் பார்த்தாலே எனக்கு பயம்.”
என்றாள்.
கதிர் அவளைப் பார்த்தபடி,
“அதுக்காக எப்பவும் மீனைப் பார்த்து பயப்படலாமா? ஏன் உங்க பக்கத்துல நான் உக்காந்து தானே இருக்கேன். என்கிட்ட சொன்னா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டேனா?” என்றான்.
முல்லை உடனே,
“எனக்கு என்ன தெரியும்? நீங்க அதுக்காக சாப்பாடு வேண்டாம்னு என்னை முறைப்பீங்களா?” என்றாள்.
“ஆமா. முறைக்காம கொஞ்சுவாங்களா?” என்று அவன் மீண்டும் அவளை முறைத்தான்.
“பொறுமையா கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேன்.” என்றாள் முல்லை.
கந்தன் இருவரையும் பார்த்து சிரித்தான்.
“ஹலோ… ஹலோ… நீங்க புருஷன் பொண்டாட்டியா நடிக்கத்தான் செய்றீங்க. என்னமோ உண்மையாவே சண்டை போடுறீங்க!” என்றான்.
கதிரும் முல்லையும் ஒரே நேரத்தில் அவனைப் பார்த்தனர்.
“டேய்! முதல்ல எங்க ரூம்ல இருந்து வெளியே போ.” என்றான் கதிர்.
“என்ன உங்க ரூமா?”
என்று கந்தன் சிரித்துவிட்டு வெளியே சென்றான்.
கதிர் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டான்.
“உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே?” என்று கேட்டான்.
முல்லை அவனைப் பார்த்து, “நீங்க கோவமா கேட்டா நான் சொல்ல மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு குழந்தைகளின் அருகில் சென்று படுத்துக்கொண்டாள்.
அவளுடைய குழந்தைத்தனமான கோபத்தைப் பார்த்த கதிரின் இதழோரத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
மாலை ஆறு மணியளவில் கீதா கந்தனுடன் கடைக்குச் சென்றார்.
நிலாவும் தங்களின் மருத்துவமனை வரை சென்று வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றாள்.
கதிர் முல்லைக்காக காபி கொண்டு வந்து கொடுத்தான்.
அவள் குழந்தைகளின் துணிகளைத் துவைக்கப் போவதைப் பார்த்ததும்,
“நீங்க தண்ணில கை வைக்காதீங்க. நான் வாஷ் பண்றேன்.” என்று சொல்லி துணிகளை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு வெளியே சென்றான்.
சிறிது நேரத்தில் துணிகளைத் துவைத்து காயப்போட்டுவிட்டு அறைக்குள் வந்தான்.
முல்லை அதற்குள் குழந்தைகளைத் தூங்க வைத்து, “டாக்டர் சார்…” என்று சிறு தயக்கத்துடன் கதிரை அழைத்தாள்.
“ம்?” என்று புருவம் உயர்த்தினான்.
“உங்க சித்தி… என்னை உங்கள டாக்டர் சார்னு கூப்பிடக் கூடாதுன்னு சொன்னாங்க.” என்றாள்.
கதிர் சிரித்தபடி,
“அப்போ பேர் சொல்லி கூப்பிடுங்க.” என்று கிண்டலாக சொன்னான்.
உடனே முல்லையின் கண்கள் பெரிதானது.
“ஐயோ! புருஷனை பேர் சொல்லி கூப்பிடலாமா?” என்று கேட்டாள்.
“எந்த காலத்துல இருக்கீங்க நீங்க?”
என்று அவன் கிண்டல் அடிக்க,
“அடுத்தவங்க கூப்பிட்டா கூப்பிடட்டும். நான் அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன்.” என்றாள்.
“அப்போ வேற எப்படி கூப்பிடப் போறீங்க?”என்று கதிர் ஆர்வமாக கேட்க,சற்று யோசித்த முல்லை,
“வேணும்னா. ஏங்க, வாங்க, போங்கன்னு கூப்பிடவா?” என்றாள்.
கதிரின் முகத்தில் மெல்லிய புன்னகை.
“ம்… உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்பிடுங்க.” என்று சொல்லிவிட்டு அவளுடைய காபி கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த முல்லையின் உதடுகளில், அவளுக்கே தெரியாமல் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தது சாதாரணமான விஷயங்கள்தான்.
ஆனால், அந்தச் சாதாரணப் பேச்சுகளுக்குள், அவர்களுக்கே தெரியாமல் ஒரு உறவு மெல்ல உருவாகிக்கொண்டிருந்தது.
அவர்கள் நடிப்பதற்காக கணவன் மனைவியாக இருந்தார்கள்.
ஆனால், அவர்களின் மனதோ, அவர்களை அறியாமலேயே ஒருவரை ஒருவர் தங்களுடைய வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தது.
இரவு எட்டு மணியளவில் கந்தன், கீதா இருவரும் வீட்டுக்குள் நுழைய, அவர்களுடனே நிலாவும் வந்தாள்.
கீதா கையில் ஒரு பையுடன் கதிரின் அறைக்குள் நுழைய, அங்கே முல்லை குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவர், கட்டிலில் இருந்த ஆண் குழந்தையின் கழுத்தில் ஒரு சிறிய தங்கச் சங்கிலியை அணிவித்தார்.
பின்னர் இன்னொரு சங்கிலியை முல்லையின் கையில் கொடுத்து,
“இதைப் பாப்பா கழுத்துல போடு.”
என்றார்.
அவ்வளவுதான்.
வேறு எதுவும் சொல்லாமல் வெளியே சென்றார்.
முல்லை அந்தச் சங்கிலியைப் பார்த்தபடி நெகிழ்ந்து போனாள்.
சிறிது நேரத்தில் கதிர் உள்ளே வந்தவன், “என்னாச்சு?” என்று கேட்டான்.
“டாக்டர் சார். உங்க சித்தி என் பையனை உங்க பிள்ளையா எண்ணி சங்கிலி எல்லாம் போடுறாங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.” என்றாள்.
கதிர் அவளைப் பார்த்தபடி, “ஏன் இப்படி பேசுறீங்க? இந்தக் குட்டிப் பையன் எனக்கும் குழந்தை மாதிரி தான்.” என்றான்.
அவன் குழந்தையைத் தூக்கி, “இங்க பாருங்க. குட்டிப் பையன் என்னையே பாக்குறான்.” என்று கொஞ்ச ஆரம்பித்தான்.
முல்லையின் மனதில் இருந்த கலக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
இரவு உணவின்போது கீதா முல்லையின் உணவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
கதிர் அவளுக்காக மீன் குழம்பை வைக்கச் சொன்னான்.
முல்லை அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
கதிர் கண்ணால்,
‘பயப்படாதீங்க. நான் பார்த்துக்குறேன்.’
என்பது போல சமாதானப்படுத்தினான்.
அவளுடைய தட்டில் இருந்த மீனை எடுத்த கதிர், அதிலிருந்த முள்ளையெல்லாம் பொறுமையாக எடுத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து, அவளுடைய தட்டில் வைத்தான்.
அதைப் பார்த்த கீதா, “என்ன… இப்போ மட்டும் அவரு பொஞ்சாதி மீன் சாப்பிடுவாளா?”
என்று கேட்டார்.
கதிர் சற்றும் பதறாமல்,
“நான் கொடுத்தா சாப்பிடுவாங்க.” என்றான்.
முல்லை அமைதியாக மீனை சாப்பிட ஆரம்பித்தாள்.
கீதா இருவரையும் உற்றுப் பார்த்தார்.
அவருடைய முகத்தில் ஏதோ புரியாத எண்ணம் தோன்றியது. ஆனால் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.
உணவு முடிந்ததும் கீதா முல்லைக்கு ஒரு கோப்பை கொடுத்து, “குழந்தை பெத்த உடம்புக்கு இதெல்லாம் சாப்பிட்டாதான் நல்லது. ம்… குடி.”
என்றார்.
முல்லை அதை வாங்கிக்கொண்டாள்.
சில நொடிகள் கழித்து, “நீங்க மருந்து போட்டீங்களா?”
என்று கேட்டாள்.
“ம்… ஆச்சு.” என்று மட்டும் சொல்லிவிட்டு கீதா காலண்டரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கதிரின் கைபேசி ஒலிக்க, அழைப்பை எடுத்தவனின் முகம் மாறியது.
“என்ன சொல்றீங்க?”
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “சரி. இதோ நான் வரேன்.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து, கந்தனை அழைத்து,
“வா… உடனே நம்ம ஹாஸ்பிடல் போகணும்.”
என்றான்.
கந்தன் உடனே எழ,
“என்னாச்சு?” என்று கீதா பதறினார்.
“ஏதாவது பிரச்சனையா?” என்று நிலாவும் கேட்டாள்.
முல்லை எதுவும் புரியாமல் கதிரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நான் வந்து சொல்றேன்.” என்று மட்டும் சொல்லிவிட்டு கதிர் கந்தனுடன் வேகமாக வெளியே சென்றான்.
நேரம் கடந்தது. இரவு வெகுநேரமாகியும் அவர்கள் இருவரும் திரும்பவில்லை.
கீதாவும் நிலாவும் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
“இன்னும் வரலையே சித்தி”
என்று நிலா வருத்தமாக சொன்னாள்.
அந்த நேரத்தில் வாசலுக்கு வெளியே கந்தனின் குரல் கேட்டது.
“பார்த்து வா மச்சான்.”
அந்தக் குரலில் இருந்த பதற்றம் அனைவரையும் திடுக்கிடச் செய்தது.
அடுத்த நொடி கந்தன் வாசலில் தோன்றினான்.
அவனுடைய தோளில் சாய்ந்தபடி கதிர் உள்ளே வந்துகொண்டிருந்தான். கதிரின் நெற்றியில் ஒரு பெரிய கட்டு. சட்டையிலும் ஆங்காங்கே இரத்தக் கறைகள்.
“ஐயோ!”
என்று நிலா பதறினாள்.
கீதாவின் முகம் வெளிறிப்போனது.
“கதிர்…!”
என்று பதறியபடி ஓடிவந்தார்.
அவனைத் தாங்கிக்கொண்டு வந்த கந்தன் சோபாவில் அமர வைத்து, “மெதுவா, மெதுவா.” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
கீதா நடுங்கிய குரலில்,
“என்னாச்சு? எப்படி இந்தக் காயம்?”
என்று கேட்டார்.
கதிர் எதுவும் சொல்லாமல் கண்களை மூடி சோபாவில் சாய்ந்திருந்தான்.
அந்த நேரத்தில், இந்த வீட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதே தெரியாமல், கதிரின் அறையில் முல்லை மட்டும் இன்னும் தூங்காமல்,
குழந்தையைத் தன்னுடைய மார்போடு அணைத்தபடி பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
குழந்தையின் முதுகை மெதுவாக வருடியபடியே, வெளியே கேட்டுக் கொண்டிருந்த பதற்றமான குரல்களை அப்பொழுதுதான் கவனித்தாள்.
கீதாவின் அழுகைக்குரல், நிலாவின் பதற்றம், கந்தன் ஏதோ அவசரமாகப் பேசும் சத்தம். எல்லாமே சேர்ந்து முல்லையின் மனதில் காரணமே தெரியாத பயத்தை ஏற்படுத்தியது.
‘என்ன ஆச்சு?’ என்று அவளுடைய மனம் பதறியது.
அவளுடைய கவனம் முழுவதும் கதவின் மீதே இருந்தது.
சில நொடிகளுக்குப் பிறகு, வெளியே கதிரின் பெயர் பதற்றத்துடன் அழைக்கப்படுவது அவளுடைய காதில் விழுந்தது.
முல்லையின் இதயம் வேகமாகத் துடித்தது.
அவள் குழந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
‘கதிருக்கு என்ன ஆச்சு?’ என்ற எண்ணம் வந்ததும் அவளுடைய கண்களில் பயம் தெரிந்தது.
கதிருக்கு ஏதோ ஆபத்து என்ற உணர்வு மட்டும் அவளுக்குள் தெளிவாகப் பதிந்தது.
பால் குடிக்கும் பிள்ளையை குழந்தையை மார்போடு அணைத்தபடியே, கதவை நோக்கி பார்த்துக்கொண்டிருந்த முல்லையின் கண்கள், கதிர் உள்ளே வருவதற்காக காத்திருந்தன.
தொடரும்…
1 comment
Ennachu kathirku mangalam aalunka etavathu panitangala