Stories that touch hearts

Home  /  02. S.K (மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ)  /  Chapter 15

CHAPTER 15

முல்லைப்பூ – 15

By S.K Velan · November 4, 2026

7

🕊️அத்தியாயம் – 15

முல்லை என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க, கதிருக்கும் அதே நிலைதான்.

கீதாவின் கேள்வி இருவரையும் ஒரே நேரத்தில் திகைக்க வைத்திருந்தது.

அப்போது கந்தன் திடீரென தொண்டையைச் செருமிக்கொண்டு, “அது எப்படி மாமி முல்லை கழுத்துல மாங்கல்யம் இருக்கும்?” என்று கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அவனைப் புரியாமல் பார்த்தனர்.

“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? தாலி இல்லாம எப்படி?” என்று கீதா குழப்பத்துடன் கேட்டார்.

“நீங்க உங்க கையால மாங்கல்யம் எடுத்து கொடுத்தால் தான், கதிர் முல்லை கழுத்துல தாலி கட்டுவேன்னு சொல்லிட்டான். அதனாலதான் அவங்க கழுத்துல இப்போ தாலி இல்லை.” என்றான் கந்தன்.

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் கீதாவை விட முல்லை, கதிர், நிலா மூவருமே அதிர்ச்சியடைந்தனர்.

‘இவன் என்ன உளறுறான்?’

என்று கதிர் கந்தன் மேல் பார்வையை வீசினான்.

முல்லைக்கோ கந்தன் சொன்னதைக் கேட்டு தலைசுற்றி கீழே விழாத குறைதான். திகைப்பு மாறாது நின்றிருந்தாள்.

கீதா மட்டும் இன்னும் குழப்பத்திலிருந்து மீளாமல், “டேய்! அதுக்காக தாலி கட்டாம எப்படிடா நீங்க ஒண்ணா வாழ்ந்து பிள்ளை பெத்துக்கிட்டீங்க?” என்று கேட்டார்.

அந்தக் கேள்விக்கு கந்தன் சற்றும் தயங்காமல், “ஏன் மாமி, நீங்க கூடத்தான் கதிர் அப்பா கையால தாலி கட்டிக்கிட்டீங்க. அதுக்காக நீங்க அவர் கூட வாழ்ந்தீங்களா என்ன?” என்று கேட்டான்.

அவன் கேட்ட அந்த ஒரு கேள்வியில் கீதாவின் முகம் இறுகிப்போனது. கந்தன் தன் கடந்தகாலத்தைப் பற்றிப் பேசியது அவருடைய காயத்தைக் கிளறி, கண்களில் வலியைத் தோற்றுவித்தது.

கதிரும், நிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கந்தன் எதற்காக இப்படி பேசுகிறான் என்பது இருவருக்குமே புரியவில்லை.

முல்லை மட்டும் தலைகுனிந்தபடி நின்று கொண்டிருந்தாள்.

அதற்குள் கந்தன் கீதாவை நோக்கி, “அதுவும் இல்லாம, நீங்க ஆசீர்வாதம் பண்ணினாதான் கதிர், முல்லை கழுத்துல தாலி கட்டுவான்.” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறிவிட்டு, நிலாவைப் பார்த்து கண்ணடித்தான்.

நிலா உடனே அவன் எண்ணத்தை புரிந்துகொண்டு மனதிற்குள் அது நிறைவேற வேண்டிக்கொண்டாள்.

ஆனால், கந்தன் பேசிய வார்த்தைகளுக்குப் பிறகு, கீதாவுக்கு அங்கே வேறு எந்த வார்த்தையும் காதில் விழவில்லை.

கதிரின் அப்பா, தாலி, வாழ்க்கை, அந்தக் கடந்த காலம், எல்லாமே ஒன்றாக அவருடைய மனதை அழுத்தியது.

ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வேகமாகத் தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார்.

அனைவரும் அதிர்ச்சியுடன் அந்தக் கதவைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“டேய்! என்னடா நீ? ஏன் தேவையில்லாத கதையெல்லாம் பேசுற?” என்று கதிர் கோபத்துடன் கேட்க

“நான் எல்லாம் தெரிஞ்சிதான் பேசினேன்.” என்ற கந்தன் அவனைப் பார்த்து அமைதியாகச் சிரித்தான்.

“என்ன தெரியும் உனக்கு?”

“இப்போ பார்த்தியா. மாமி மேற்கொண்டு எதுவும் பேசாம பின்வாங்கிட்டாங்க.”

கதிருக்கு ஒன்றுமே புரியவில்லை. “நீ என்ன பேசுறேன்னே எனக்குப் புரியலடா.”

“உனக்கு ஒண்ணும் புரிய வேண்டாம்.” என்று கந்தன் அவன் தோளில் தட்டிக்கொடுத்து, “ரொம்ப நேரம் டிராவல் பண்ணிட்டு வந்திருக்கீங்க. நீங்க எல்லாரும் சோர்வா இருப்பீங்க. அதனால போய் ரெஸ்ட் எடுங்க.” என்று சொல்லிவிட்டு பேச்சை முடித்துவிட்டான்.

கதிரும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல், நிலாவின் கையில் இருந்த முல்லையின் குழந்தையை வாங்கிக்கொண்டான்.

குழந்தையைத் தூக்கியபடி தன்னுடைய அறையை நோக்கிச் சென்றவன், வாசலில் நின்ற முல்லையைப் பார்த்து, “முல்லை நீங்களும் உள்ள வாங்க.” என்று அழைத்தான்.

அவள் சற்றுத் தயக்கத்துடன் அவனைப் பார்த்தவள், பிறகு மெதுவாக மற்றொரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்து அறைக்குள் சென்றாள்.

அதே நேரம்,

தன்னுடைய அறைக்குள் தனியாக அமர்ந்திருந்த கீதாவின் மனதில் பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.

பல வருடங்களாக யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த கடந்தகாலம். இன்று கந்தனின் ஒரே கேள்வியால் மீண்டும் அவருடைய கண்முன்னால் வந்து நிற்க, கீதாவின் கண்களில் கண்ணீர் சுரந்தது.

அவர் மெதுவாகத் தன்னுடைய அலமாரியைத் திறந்தார். அதற்குள் பத்திரமாக வைத்திருந்த தன்னுடைய கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்தார்.

அதைப் புரட்டியபோது, அதற்குள் பழனி ஆண்டவரின் பழைய உருவப்படம் ஒன்று இருந்தது.‌ அந்தப் படத்தைக் கையில் எடுத்தவர், அதன் பின்புறத்தைத் திருப்பிப் பார்த்ததும் கண்கள் மீண்டும் கலங்கின.

“யாம் இருக்க பயம் ஏன்?” என்ற வாசகத்தின் கீழே, காலத்தால் மங்கிப்போயிருந்த PS என்ற இரண்டு எழுத்துக்கள் தெரிந்தன.

அந்த இரண்டு எழுத்துக்களை விரலால் மெதுவாகத் தடவியவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்தப் படத்தைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.

இத்தனை வருடங்களாகத் தனக்குத் துணையாகவும், தைரியமாகவும் நின்ற, அந்தப் படத்தில் இருந்த PS என்ற பெயருக்குச் சொந்தக்காரன் யார் என்பது கீதா மட்டுமே அறிந்த இரகசியம்.

அந்த பெயரை நினைத்ததும், அவர் கண்களை மூடிக்கொண்டார்.

கடந்த காலத்தின் ஒரு முகம், ஒரு குரல், ஒரு வாழ்க்கை… எல்லாமே மீண்டும் அவருடைய மனதில் உயிர்பெற்றது.

ஆனால், அந்த இரகசியத்தைக் கந்தனை தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.

இதே தருணம் கதிரின் அறைக்குள் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருக்க, முல்லையும் கதிரும் மௌன விரதம் இருப்பது போல அமைதியை கடைபிடித்தார்கள்.

அப்போது அந்த வீட்டின் பணியாளர் கண்ணம்மா, “கதிர் தம்பி…” என்றழைத்தார்.

“இதோ வரேன் அக்கா” என்றவன் கதவைத் திறக்க, கண்ணம்மா கையில் இரண்டு காட்டன் புடவையோடு நின்றிருந்தார்.

“என்னாச்சு அக்கா?” என்று கதிர் புரியாமல் கேட்க,

“கீதா அம்மா உங்க பிள்ளைங்களுக்கு தொட்டி கட்டச் சொல்லிருந்தாங்க.” என்று அவர் சொன்னார்.

“கொடுங்க அக்கா. நான் கட்டுறேன்.” என்று கதிர் சொன்னதும்,

“ஐயோ! உங்களுக்கு அதெல்லாம் தெரியாது தம்பி. நீங்க அந்த வலையத்துல புடவையை கோர்த்து மட்டும் தாங்க. நானே கட்டி தரேன்.” என்றார் கண்ணம்மா.

அவர் சொன்னபடியே கதிரும் செய்து கொடுக்க, இரண்டு குழந்தைகளையும் கதிரின் அறையில் இருக்கும் தொட்டிலில் முல்லை படுக்க வைத்தாள்.

குழந்தைகள் இருவரும் தொட்டிலில் அமைதியாக உறங்க ஆரம்பித்ததும், கண்ணம்மா அந்தத் தொட்டிலை ஒரு முறை பார்த்துவிட்டு,

“சரி தம்பி. அம்மா சொன்ன வேலையை முடிச்சிட்டேன். நான் வரேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும் கதிர் மீண்டும் கதவை மூடப்போக, “டேய்! இரு மச்சான்!” என்ற குரலோடு கந்தன் உள்ளே நுழைந்தான்.

அவன் பின்னாலேயே வந்த நிலா, “என்ன முல்லை, அந்தத் தாலியைக் கழட்டி வீசிட்டிங்களா!?” என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் சட்டென்று முகம் மாறிய முல்லை, “அந்த கயிறு எப்ப என் கழுத்துல இருந்து தொலைஞ்சு போச்சுனே எனக்கு தெரியாது.” என்றாள்.

“அட விடுங்க சிஸ்டர். என்னைக்குமே கட்டியவனை வச்சிதான் அந்த தாலிக்கே மரியாதை. நீங்க மயக்கத்துல இருக்கும் போது, உங்களுக்கே தெரியாம உங்க கழுத்துல இருந்த தாலியை எண்ணி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டியது இல்லை.” என்றான் கந்தன்.

முல்லை அவன் வார்த்தையில் கொஞ்சமாக நிம்மதியும் அடைந்தாள்.

“எல்லாம் சரிதான். அந்த முக்தா ஆளுங்க முல்லையை தேடி இங்கேயும் வந்துட்டா, நம்ம என்ன மாமா பண்ணுறது?”

என்று கேட்டாள் நிலா.

அவள் கேள்வியில் முல்லையின் முகத்தில் மீண்டும் பயம் பரவியது.

“அதுக்குத்தான் சூப்பரான பிளான் வச்சிருக்கேன்.” என்ற கந்தன் தன் கைபேசியை எடுத்து முல்லையிடம் நீட்டினான்.

“என்ன இது!?” என்று முல்லை புரியாமல் கேட்க,

“உங்களுக்கு நடந்த எல்லா பிரச்சனையையும் இதுல பதிவு பண்ணி, மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கும், தேசிய மகளிர் ஆணையத்துக்கும் நேரடியாக புகார் கொடுக்கப் போறோம்.”

என்றான் கந்தன்.

முல்லை மட்டுமல்லாமல் கதிரும், நிலாவும் அவனைப் பார்த்தனர்.

“மனித உரிமை ஆணையமா?”

என்று கதிர் கேட்டான்.

“ஆமா மச்சான். முக்தாவுக்கு கமிஷனர் சப்போர்ட் இருக்குன்னு நமக்குத் தெரியும். அதனால உள்ளுக்குள்ளேயே இதை முடிச்சிட நினைச்சா, நம்மளால அவங்களுக்கு எதிரா எதுவும் செய்ய முடியாது.”

“ஆனா நீயே ஒரு போலீஸ் ஆபீசர் தானே மாமா?” நிலா கேட்டாள்.

“நான் ASP தான். கமிஷனரை மீறி என்னால என்ன பண்ண முடியும்? அதனாலதான் இந்த விஷயத்தை வேற விதமா கையாளப்போறேன்.” என்றான் கந்தன்.

அவன் வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்த முல்லை, “இப்போ நான் என்ன பண்ணனும் அண்ணா?” என்று கேட்டாள்.

‘சட்டப்படி முல்லைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஆனால், சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பயன்படுத்தி குற்றவாளி தப்பித்து விடக்கூடாது.‘ என்று எண்ணியவன், இந்த விஷயத்தை சாதுரியமாக கையாளத் தொடங்கினான்.

முல்லையின் அருகே அமர்ந்து அவளுக்கு நடந்த அநியாயங்களையும், அதில் சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்களையும் ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

அவள் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகப் பதிவு செய்தான்.

பிறகு அந்த விவரங்களையும், தங்களிடம் இருந்த ஆதாரங்களையும் தொகுத்து மனித உரிமை ஆணையத்துக்கும், மகளிர் ஆணையத்துக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தான்.

சட்டம் ஒரு பக்கம் தன் வேலையைச் செய்யட்டும். ஆனால், உண்மை மக்களுக்கும் தெரிய வேண்டும் என்று எண்ணிய கந்தன், தன்னுடைய தோழியும் பத்திரிகையாளருமான, அக்னியை தொடர்பு கொண்டு, முல்லையைப் பற்றிய முழு விஷயத்தையும் அவளிடம் தெரியப்படுத்தினான்.

“பணம் படைத்தவன் நினைத்தால், ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து, அவளுக்குப் பிறந்த குழந்தையையும் பலி கொடுக்கலாம்” என்ற தலைப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புலனாய்வுக் கட்டுரை வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டவன், குறிப்பாக முல்லையின் பெயரும், அடையாளமும் வெளியே தெரியாதபடி பார்த்துக்கொள்ளும்படி சொன்னான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கதிர், “டேய், சட்டப்படி நீ மூவ் பண்றது எனக்கு ஓகேதான்டா. ஆனா, பத்திரிகையில கதை எழுதச் சொல்றது எல்லாம் எதுக்கு?” என்று கேட்டான்.

“காரணம் இருக்கு மச்சான். இப்போ இருக்குற பெரிய ஆளுங்க எல்லாம் சட்டத்துக்கு பயப்படுறாங்களோ இல்லையோ, சத்தியத்துக்கு கட்டுப்பட்டு எழுதுற சில பத்திரிகையாளர்களோட பேனா முனைக்கு பயப்படத்தான் செய்வாங்க.” 

“அப்போ நம்ம முல்லையோட கதை பத்திரிகையில வருமா மாமா?”

என்று கேட்டாள் நிலா.

“ஆமா. அக்னி ஒரு விஷயம் எழுதுனா அது உண்மையா தான் இருக்கும்னு பலரும் நம்புவாங்க. இப்போ முல்லையோட பெயரை மறைச்சு, இலைமறை காயா முகேஷ், முக்தா, மங்கலம், அப்புறம் என்னோட கமிஷனர் வரைக்கும் யாருன்னு நேரடியா சொல்லாம, ஆதாரங்களோட எல்லோருக்கும் புரியிற மாதிரி அக்னி எழுதுவாள். அவள் பேனா ஒரு முறை சுழல ஆரம்பிச்சா, உண்மையை மறைக்க நினைக்கிறவங்களுக்கு அது தூக்கு கயிறாக மாறும்.” என்று நம்பிக்கையாக சொன்னான் கந்தன்.

அவன் திட்டம் கதிருக்கும் சரிதான் என்று தோன்றியது.

“இங்க பாருங்க சிஸ்டர். நீங்க இந்த வீட்டுல நிம்மதியா இருங்க. சீக்கிரமா உங்களுக்கு நியாயம் கிடைக்க நான் ஏற்பாடு பண்ணுறேன்.”‌ என்ற கந்தன் கதிரின் அறையிலிருந்து வெளியேறினான்.

“முல்லை, கண்ணம்மா அக்கா உங்களுக்கு சாப்பிட பழம், குடிக்க தண்ணின்னு எல்லாமே மேசை மேல ரெடி பண்ணி வச்சிருக்காங்க. உங்களுக்கு பசிக்கும் போது எடுத்து சாப்பிடுங்க. நம்ம லஞ்ச்க்கு மீட் பண்ணலாம்.” என்ற நிலாவும் வெளியேறினாள்.

அவள் சென்றதும் அறைக்குள் மீண்டும் அமைதி நிலவியது.

தொட்டிலில் இரண்டு குழந்தைகளும் எதையும் அறியாமல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

கதிர் மெதுவாக அறைக் கதவைத் தாளிட்டான்.

ஜன்னலருகில் நின்றிருந்த முல்லை, வெளியே வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். அவன் வந்ததைக்கூட அவள் கவனிக்கவில்லை.

மெதுவாக நடந்து வந்து அவள் அருகே நின்றவன், “முல்லை…” என்று மென்மையாக அழைத்தான்.

அந்த ஒரு அழைப்பின் ஈர்ப்பில் சட்டென்று அதிர்ந்து திரும்பிப் பார்த்தவள் கண்களில் பிடிவாதமும், மறைக்கப்பட்ட ஏக்கமும் ஒருசேரக் கலந்திருந்தது.

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” அவனது குரல் கவலையின் அரவணைப்போடு அவளைத் தொட்டது.

அவள் இதழ்கள் அசைந்தாலும், வார்த்தைகள் வெளிவர மறுத்தன. அவள் மௌனமே பல வேதனைகளை பேசியது.

“என்னாச்சுன்னு கேக்குறேனே?” என்றான்.

“என்னையா கேக்குறீங்க?” அவளது குரலில் லேசான நக்கல் மின்னியது.

“பின்ன இங்க யாரு இருக்காங்க? உங்ககிட்டதான் பேசுறேன்.”

“ஓ…”

“என்ன ஓ…?”

“நீங்க பேசலாம். ஆனா, நான் பேசுனா, உங்களுக்கு அது நடிப்பா இல்ல தெரியும்.” என்றதும் கதிரின் முகம் சற்றே மாற, அவளது வார்த்தைகள் அவன் நெஞ்சில் ஒரு முள்ளாய் இறங்கியது.

“என்ன முல்லை? இன்னும் நீங்க அதே கோவத்துல இருக்கீங்களா?” என்று கேட்டான்

“ஐயோ! எனக்கு கோவம் எல்லாம் இல்லை. என் அன்பு உங்களுக்கு நடிப்பா தெரிஞ்சிருக்கு. அதுக்கு என்மேல தான் எனக்குக் கோபம். உங்க மேல இல்ல சார்”

என்றவள் குரலில் ஏக்கம் வழிய, தன் கண்ணீரை மறைக்கச் சட்டென்று அங்கிருந்து நகர முயன்றாள்.

“முல்லை நில்லுங்க.”

அவள் நிற்கவில்லை, மெல்லிய கோவத்துடன் அடிமேல் அடி வைத்து நகர்ந்தாள்.

“முல்லை, நில்லுங்கன்னு சொல்றேன்ல?” அவனது குரல் சற்றே அதட்டலாக மாறியது.

ஆனாலும் அவள் மனம் கரையவில்லை.

“ஏய்! உன்னைத் தான் கூப்பிட்டேன்.

நில்லுடி!” என்று சற்று குரலை உயர்த்தினான்.

அவளது நடையை அடியோடு நிறுத்தியது அந்தச் சொல். சட்டென்று திரும்பினாள்.

“என்ன டி-யா? நான் என்ன உங்க பொஞ்சாதியா? என்னை வாடி, போடின்னு கூப்பிடுறீங்க?”

அவள் முகத்தில் வழிந்த உரிமை கோபத்தைப் பார்த்து, கதிர் மெல்லச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் இனம் புரியாத காதலின் ஆழம் இருந்தது.

“பொஞ்சாதியா இருந்தாலும் பெண்களை ‘டி’ போட்டு கூடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்.” என்றான்.

“ஓ… அப்போ என்னை மட்டும் ஏன் அப்படிக் கூப்பிடுறீங்க?” கேள்வி கேட்டு கோவத்தில் நின்றவளின் விழிகளை

சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், தன் இதயத்திலிருந்து அந்த வார்த்தைகளை உதிர்த்தான்.

“பொஞ்சாதியை ‘டி’ போட்டு கூப்பிடலாம்னு நினைக்கிறது ஆண் ஆதிக்கம். அதுவே நம்மள புரிஞ்சுக்கிட்டவங்கள ‘டி’ போட்டு கூப்பிடுறது தான் பாசம்.”

அவன் வார்த்தைகள் அவளுக்குள் மழைச்சாரலாய் இறங்கி, சொல்ல முடியாத ஒரு பூரிப்பை ஏற்படுத்தின. சிலிர்த்துப் போன தன் இதயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், பவ்யமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஹான்… உங்க பாசம், பாயசம் எல்லாம் எனக்கு வேண்டாத கதை.” என்று மீண்டும் நகர முயன்றவளின் கரத்தை, காலம் தன் கையில் ஏந்திக் கொள்வது போல சட்டென்று பற்றிக் கொண்டான் கதிர்.

அவள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளது பிடிவாதம் அங்கே கரைந்து போனது.

“சாரி…” அவனது குரலில் இருந்த அப்பட்டமான உண்மை, அவளது இமைகளைத் தாண்டி முத்து முத்தான கண்ணீரை வரவழைத்தது.

தன் கண்ணீருக்குக் காரணமானவனின் கரங்களே, மெல்ல உயர்ந்து அவள் கன்னத்தில் வழிந்த அந்த உப்பு நீரை வாஞ்சையோடு துடைத்து, “என்னை மன்னிச்சிடுங்க…” என்றான்.

சில நொடிகள் அவனது கண்களையே வாசித்துக் கொண்டிருந்த முல்லை, தன் ஆன்மாவின் ஆழத்திலிருந்து,

“இனி என் அன்பை சந்தேகப்படாதீங்க. என் மாமாவுக்கு அப்புறம், நான் பெருசா மதிக்கிற ஆண் மகன் நீங்கதான்.” என்றாள்.

அவள் சொன்ன அந்த வார்த்தைகள் அவன் மனதை முழுமையாய் நெகிழச் செய்தன.

“இனி அப்படி சொல்ல மாட்டேன்.” என்று கதிர் சொன்னதும்,

“ம்… இனி நீங்க மனசுலகூட அப்படி நினைக்கக்கூடாது.” என்றாள் அவனை கண்டிக்கும் விதமாக.

“சரி. இனி அப்படி நினைக்க மாட்டேன். இப்போ என்னை மன்னிச்சிட்டீங்களா?” என்று கேட்டான்.

“இன்னும் இல்லை.” அவளது குறும்புக் குரல் அங்கே சிறுமியைப் போல ஒலித்தது.

“முல்லைப்பூ, என்னை மன்னிக்க நான் என்ன பண்ணணும்?” என்று அவன் பவ்யமாகக் கேட்க,

அவள் சற்றும் தயங்காமல், தன் உயிரின் மீதான உரிமையைப் போல, அவன் கழுத்தை நோக்கி தன் கரங்களை நீட்டினாள்.

“உங்க கழுத்துல இருக்குற உத்ராட்சம் எனக்கு வேணும்.”

கதிர் முதலில் திகைத்து பின் ஆச்சரியமாக, தன் கைகளால் அதைத் தொட்டுப் பார்த்து, “இதுவா? வேற ஏதாவது காஸ்ட்லியா கேளுங்க” என்று இதழோரம் புன்னகையுடன் கேட்டான்.

“ம்ஹூம்… எனக்கு அது தான் வேணும்.” என்றாள்.

மறுநிமிடமே யோசிக்காமல் அதைக் கழற்றி அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கிக் கொண்ட முல்லை, தன் புடவை முந்தானையில் ஒரு பொக்கிஷத்தைப் போல, பத்திரமாக அதை முடிந்துக் கொண்டாள்.

அவளையே கண் இமைக்காமல், சொல்ல முடியாத உணர்வோடு பார்த்துக் கொண்டிருந்த கதிரை, அவள் மெதுவாகத் தலைதூக்கிப் பார்த்தாள்.

அப்போது மீண்டும் அவன் நெற்றியில் இருந்த அந்தக் காயம் அவள் பார்வையில் பட, அவளது முகம் வாடிப் போனது.

“நா…நான் உங்க காயத்தைத் தொட்டுப் பார்க்கவா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

கதிர் பேச வார்த்தைகள் இன்றி, மெதுவாகத் தலையசைத்து அனுமதித்தான்.

மயிலிறகின் இறகை விட மென்மையாக, அவள் விரல்கள் அவன் காயத்தின் மீது மெல்லப் பதிந்தன.

அந்த நொடி முழுவதும், தன் மனதில் இருப்பது, அவன் மேல் எழுந்த காதலென்று அறியாமலேயே, முல்லை அவன் காயத்தை வருடிக்கொண்டிருந்தாள்.

முல்லைக்கே தெரியாமல் வெளிப்பட்ட அவள் அன்பில்,

கண்மணி தந்த மனக்காயத்தையும்

மறந்து கதிர் முழுமையாகக் கரைந்து கொண்டிருந்தான்.

ஆனால், இதே தருணம் கீதா தன் அறையில், கடந்த காலத்தின் வலியில் கண்ணீரோடு, யாரிடமும் சொல்ல முடியாத தன் இரகசியத்துடன் போராடிக்கொண்டிருந்தார்.

– தொடரும்…

← Previous All Chapters Next →

6 comments

வென்மதி November 5, 2026 - 1:09 am

Super Sk 💐💐💐kathirmullai love built aguthu romba super💐💐💐💐

Yashni Benjamin November 5, 2026 - 3:30 am

Kanthan idea supero super katir mulai scens super enjoyable storyline

Reva November 5, 2026 - 11:35 am

Super அழகான காதல் ஆரம்பம் போல அருமை waiting for nxt epi…

ராணி November 5, 2026 - 2:09 pm

ஏன் பா இதற்கு பெயர் காதல் இல்லையா
எங்களுக்கு பார்த்தல் அப்படி தெரியவில்லை உங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்துவிட்டது சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க 😀
பாட்டிக்கு ஒரு பிளாஸ் பேக் இருக்கு போலயே 😂

Sam Sam November 5, 2026 - 3:38 pm

காதலுணர்வு ரம்மியமாக இருக்கு 👍👌

Kishore Key November 5, 2026 - 5:17 pm

மொட்டு மலராக பூக்கும் தருணம், இரண்டு மனமும் இனையும் தருணம், உரிமையும் தொடும் தருணம், இது தான் காதலா…
கந்தனின் பேச்சில் நியாயம் இருக்கிறது கதைக்கு ஊக்கம் தருகிறது..
எழுத்து அருமை டியர்…

Leave a Comment

error: Content is protected !!