🕊️பாகம் 19
பழனி செல்வத்தைப் பார்த்ததும் முல்லை அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“என் மாமா!” என்று கதறியவள், அவரை நோக்கி ஓட முயன்றாள்.
ஆனால், செல்வத்தால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. அரை மயக்கத்தில் உயிரற்றவர் போலக் கிடந்தார்.
அவரைக் கண்ட கீதாவும் பேச்சிழந்து நின்றாள். பல வருடங்களாக மறந்துவிட்டதாக நினைத்த முகம், இன்று தன் கண் முன்னே தோன்றியதை அவளால் நம்ப முடியவில்லை.
அந்த நேரத்தில் சட்டென்று துப்பாக்கியை எடுத்த முகேஷ், அதன் முனையைச் செல்வத்தின் நெற்றியில் வைத்தான்.
“ஏய்! அந்த வெடிகுண்டை என்கிட்ட கொடு. இல்லையென்றால் முல்லையோட மாமா தலை சிதறிடும்.” என்று மிரட்டினான்.
கந்தன் என்ன செய்வதென்று யோசிப்பதற்குள், கீதா அவனுடைய கையிலிருந்த வெடிகுண்டைப் பிடுங்கி ஓரமாக வைத்தாள்.
“வேணாம். பழனியை மட்டும் எதுவும் பண்ணிடாதீங்க.” என்று பதற்றத்துடன் கெஞ்சினாள்.
அவளுடைய செயலை கதிர், நிலா, கந்தன், முல்லை என அனைவரும் வியப்புடன் திரும்பிப் பார்த்தனர்.
தன் எதிரே இருந்த வெடிகுண்டைப் பார்த்து முகேஷ் ஏளனமாகச் சிரித்தான்.
“டேய்! இங்கே இருக்கிற எல்லோரையும் ஒண்ணா கட்டிப்போடுங்கடா!” என்று மங்கலத்தின் ஆட்களுக்குக் கட்டளையிட்டான்.
உடனே அவர்கள் கதிர், கந்தன், கீதா, செல்வம் ஆகிய நால்வரையும் கட்டிப்போட்டனர். நிலா, முல்லையுடன் இரண்டு குழந்தைகளையும் மட்டும் விட்டுவைத்தனர்.
பின்னர் முல்லையைப் பார்த்த முகேஷ்,
“என்னைக்காவது ஒரு நாள், உன் மாமாவை வச்சுத்தான் உன்னை எனக்குச் சொந்தமாக்கிக்கணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் அவரைப் பிடிச்சு வச்சிருந்தேன். இப்போ எல்லாமே என் கட்டுப்பாட்டுக்குள்ள வந்துடுச்சு!” என்றான்.
அந்தச் சமயத்தில் பங்களாவுக்குள் கமிஷனர் வெங்கடேஷ் நுழைந்தான்.
“டேய் முகேஷ்! என்னடா இது? அங்கே உன் பொண்டாட்டியும் பிள்ளையும் இறந்த செய்தியைக் கேட்டு ஊரே புலம்பிக்கிட்டு இருக்கு. நீ என்னடான்னா இங்கே உட்கார்ந்திருக்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.
எதிரே கதிர், கந்தன், கீதா, செல்வம் ஆகியோர் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும் அவன் முகத்தில் குழப்பம் ஏற்பட்டது.
“இவங்களை ஏன்டா இப்படிக் கட்டிப்போட்டு வச்சிருக்க?” என்று வினவினான்.
“எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு!” என்று பதிலளித்தான் முகேஷ்.
அப்போது அவனுடைய கைப்பேசி ஒலித்தது. அழைத்தது ஒரு தொழிலதிபர்.
அந்த அழைப்பைப் பார்த்ததும் எரிச்சலடைந்த முகேஷ், கைப்பேசியைத் தரையில் வீசி உடைத்தான்.
“இனி அந்த முக்தாவும் அவ பிள்ளையும் போய் சேர்ந்த கதையைக் கேட்டு என்னைத் தொல்லை பண்ணுவாங்க!” என்று ஆத்திரத்துடன் கத்தினான்.
“நடந்தது நடந்துபோச்சு. இனிமேல் ஊர் நம்புற மாதிரி நீ நடந்துக்கணும். அப்போதான் அமீர் முக்தாவோட மரணம் ஒரு விபத்துன்னு எல்லோரும் நம்புவாங்க!” என்று அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக வெங்கடேஷ்.
“ஒரு கமிஷனரா இருந்துகிட்டு இப்படிப்பட்ட கேவலமான வேலைகளைச் செய்ய உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என்று கந்தன் கோபத்துடன்,
கேட்டான்.
“டேய்! என் கை கட்டை அவிழ்த்துவிடு. இங்கேயே உன்னைப் புதைக்கிறேன் பாரு!” என்று கதிர் சீறினான்.
அவனை நெருங்கிய முகேஷ், கன்னத்தில் தட்டிக்கொடுத்தபடி,
“உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லைடா. ஏன் தெரியுமா? என் பிள்ளையையும், என் முல்லையையும் இத்தனை நாளா நீதான் காப்பாத்திட்டு வந்திருக்க!” என்றான்.
“என்னது? உன் பிள்ளையா?” என்று கதிர் திகைத்தான்.
கீதாவின் பார்வையோ, எதிரே அரை மயக்கத்தில் கிடந்த பழனி செல்வத்தின் மீதே நிலைத்திருந்தது.
“ஆமாம்டா! இவதான் என் முல்லை. இவ வயித்துல பிறந்த குழந்தைதான் என்னோட உண்மையான வாரிசு!” என்று முகேஷ் பெருமையுடன் அறிவித்தான்.
அவனுடைய பேச்சைக் கேட்ட மங்கலமும், வெங்கடேஷும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்தனர்.
முல்லைக்கோ அவனுடைய வார்த்தைகளைக் கேட்கவே அருவருப்பாக இருந்தது.
மங்கலத்தால் அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை.
“ஐயா… என்ன சொல்றீங்க? இந்தக் குழந்தை அமீர் ஐயாவுக்குப் பிறந்ததுன்னுதானே…” என்று ஆரம்பித்தாள்.
“ஏய்! வாயை மூடு!” என்று அவளை இடைமறித்தான் முகேஷ்.
முல்லையின் கையிலிருந்த குழந்தையைப் பிடுங்கிக்கொண்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து, “அமீர் என் மகனே இல்லை. இதோ இவன்தான் என் உண்மையான வாரிசு.” என்று குழந்தையைத் தூக்கிக் காட்டினான்.
அங்கே கூடியிருந்த அனைவரின் முகங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்தவன், தன்னுடைய கடந்தகால ரகசியத்தை வெளிப்படுத்தத் தொடங்கினான்.
“இந்த ஊர் உலகத்தை பொறுத்த வரைக்கும், எனக்கும் முக்தாவுக்கும் பிறந்த ஒரே பையன்தான் அமீர். அப்படித்தான் இத்தனை வருஷமா நானும் நம்பிக்கிட்டு இருந்தேன். அவங்க ரெண்டு பேர் மேலயும் நான் உயிரையே வச்சிருந்தேன். குறிப்பா, அமீரை என்னோட வாரிசுன்னு நினைச்சு அவனுக்காக என்ன வேணாலும் செய்வேன்!”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும், “ஆனா, சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு ஒரு புகைப்படம் கிடைச்சது. அதைப் பார்த்ததும் என் காலுக்குக் கீழே பூமியே நழுவிப் போன மாதிரி இருந்துச்சு!”
“அந்தப் புகைப்படத்துல, முக்தா என்னோட கார் டிரைவரோட ரொம்ப நெருக்கமா இருந்தா. முதல்ல அதை நம்ப முடியாம அவகிட்ட விசாரிச்சேன். ஆனால், அவ உண்மையைச் சொல்லாமல் என்னை ஏமாத்தப் பார்த்தா.” என்றவன் முகத்தில் கோபம் அதிகரித்தது.
“அதுக்குப் பிறகு அந்த டிரைவரைப் பிடிச்சு மிரட்டினேன். அப்போதான் அவன் சொன்ன உண்மை என்னை நிலைகுலைய வச்சது.”
முகேஷ் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தான்.
“முகேஷ் சார். எனக்கும் முக்தா அம்மாவுக்கும் ரொம்ப வருஷமா பழக்கம் இருக்கு. எங்களுக்குள் இருந்த உறவுல பிறந்த குழந்தைதான் அமீர். அந்தப் பிள்ளைக்குத் தகப்பனே நான்தான்!”
“அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அவன் சொன்னதை அப்படியே நம்ப எனக்கு மனசு வரல. அதனால ரகசியமா DNA பரிசோதனைக்கு ஏற்பாடு பண்ணேன். ரிப்போர்ட் வந்த பிறகுதான் அவன் சொன்னது உண்மைன்னு தெரிஞ்சது. அமீர் எனக்குப் பிறந்த பிள்ளையே இல்லை!” என்றவன் குரலில் வெறுப்பு வெளிப்பட்டது.
“என்னோட நம்பிக்கையையும், அன்பையும் பயன்படுத்தி முக்தா இத்தனை வருஷம் என்னை ஏமாத்தியிருக்கா. அந்த டிரைவரை உயிரோட விட்டா, அவன் மூலமா உண்மை வெளியே வந்துடும்னு நினைச்சு, அவனைப் போட்டுத் தள்ளிட்டேன்.”
அதைக் கேட்ட மங்கலம் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“அதோட என் கோபம் அடங்கல. அமீரையும் உயிரோட விடக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். போன வருஷமே யாருக்கும் தெரியாமல் ஆளுங்களை ஏற்பாடு செய்து, அவனுக்கு விபத்து ஏற்படுத்தத் திட்டம் போட்டேன். அந்த விபத்துல அவன் இறந்துடுவான்னு நினைச்சேன். ஆனால், உயிர் தப்பிச்சு கோமாவுக்குப் போயிட்டான்!”
“அவனுக்கு விபத்து நடந்த விஷயம் வெளியே தெரிஞ்சா, எங்க குடும்பத்துக்கு வாரிசே இல்லைங்கிற நிலைமை வந்துடும்னு முக்தா பயந்துட்டா. அதனால அமீர் வெளிநாட்டுல படிச்சிட்டு இருக்கிறதா எல்லோரையும் நம்ப வச்சா. ஆனால், என்னோட தனியார் மருத்துவமனையில அவனுக்கு ரகசியமா சிகிச்சை நடந்துக்கிட்டிருந்துச்சு.”
“அமீரைக் காப்பாத்த முக்தா எந்த எல்லைக்கும் போகத் தயாரா இருந்தா. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டதுதான் நீ…” என்று மங்கலத்தைச் சுட்டிக்காட்டினான்.
“அப்போதான் எங்க குடும்ப வாரிசைப் பலி கொடுத்தா, கோமாவுல இருக்கிற அமீர் கண் விழிப்பான்னு அவகிட்ட சொல்லியிருக்க!”
இதைக் கேட்ட மங்கலத்தின் முகம் இருண்டது.
“நீ முக்தாகிட்ட பணம் வாங்குறதுக்காகப் பல கதைகளைச் சொல்லியிருக்க. அதுல ஒரு கதைதான் அமீரோட தலைச்சன் பிள்ளையைப் பலி கொடுத்தா அவன் பிழைச்சிடுவான்ங்கிற மூடநம்பிக்கை!”
அங்கிருந்த அனைவரும் மங்கலத்தைப் பார்த்தனர்.
“அதோட நிறுத்தினியா? கோமாவுல இருக்கிற அமீருக்குக் கல்யாணம் பண்ணி, அவனோட விந்தணுவை எடுத்து ஒரு பெண்ணுக்குச் செலுத்தி, அவ பெத்த குழந்தையைப் பலி கொடுக்கலாம்னு வேற யோசனை சொல்லியிருக்க!”
அதைக் கேட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மங்கலத்தால் அவனுடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.
“நீ இதையெல்லாம் செய்யுறதுக்கு முன்னாடியே அமீரை மறுபடியும் கொன்னுடலாம்னு நினைச்சேன். ஆனால், அப்போதான் நீ என் முல்லைப்பூவோட படத்தை என்கிட்ட காட்டின!”
முல்லையைப் பார்த்தவனுடைய உதட்டில் விசித்திரமான புன்னகை மலர்ந்தது.
“இந்தப் பொண்ணுதான் உங்க வீட்டு வாரிசைச் சுமக்கப் போறான்னு சொன்ன. அந்த ஒரு வார்த்தையும், முல்லையோட அழகும் எனக்குள்ள தூங்கிக்கிட்டிருந்த இன்னொரு ஆசையைத் தட்டி எழுப்பிடுச்சு!”
முல்லை அருவருப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“அப்பவே முடிவு பண்ணிட்டேன். முல்லை வயித்துல என் வாரிசுதான் வளரணும். எனக்குன்னு ஒரு குழந்தை வேணும்”
அவனுடைய நோக்கத்தைப் புரிந்துகொண்ட கதிரும், கந்தனும் ஆத்திரமடைந்தனர்.
“எனக்கு இந்தச் சடங்கு, சம்பிரதாயங்கள் மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், நீ பணம் சம்பாதிக்கிறதுக்காக எங்கோ இருந்த முல்லையை என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தின. அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கிட்டேன்.”
“அடிப்பாவி! நீ நல்லா இருப்பியா?” என்று மங்கலத்தைப் பார்த்து முல்லை கதறினாள்.
அவளுடைய கண்ணீரைப் பொருட்படுத்தாமல் முகேஷ் தொடர்ந்தான்.
“முல்லை, அவளைத் திட்டாதே. அவள் மட்டும் இல்லையென்றால் நீ எனக்குக் கிடைச்சிருக்க மாட்ட!” என்றான்.
முல்லை கதறி அழுதாள்.
“உனக்கு உன் மாமனைத் தவிர வேற எந்தச் சொந்தமும் இல்லைங்கிற விஷயம் எங்களுக்குத் தெரியும். அதனாலதான் உன்னைத் தேர்ந்தெடுத்து, பெண் கேட்டு உன் ஊருக்கு மங்கலத்தை அனுப்பினோம்.”
“ஆனா, உன் மாமா உன்னைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதிக்கல. அதனால முக்தா ஒரு திட்டம் போட்டா. உனக்கு வேலை கிடைச்சிருக்குன்னு பொய் சொல்லி உன்னை ஊரிலிருந்து நகரத்துக்கு வரவழைச்சா. அதற்குப் பிறகு அவளே விபத்தை ஏற்படுத்தி, உன்னை எங்க காட்டுப் பங்களாவுக்குக் கொண்டு வந்தோம்.”
“கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீ கண் விழிக்கவே இல்லை. எங்க மருத்துவமனையில வேலை பார்க்கிற நம்பிக்கையான மருத்துவர்கள் உன்னைப் பார்த்துக்கிட்டாங்க. அந்தச் சமயத்துலதான் மங்கலம் அமீரின் குழந்தையை உன் வயித்துல வளர வைக்கிறதுக்கான ஏற்பாடுகளைச் செய்தா. ஆனால், நான் அந்தச் சந்தர்ப்பத்தை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கிட்டேன்!”
“மயக்கத்துல இருந்த உன் கருப்பையில கோமாவில் இருந்த அமீரோட உயிரணுவுக்குப் பதிலாக என்னோட உயிரணுவைச் செலுத்த ஏற்பாடு செய்தேன். அப்படித்தான் இந்தக் குழந்தை பிறந்திருக்கான்!”
என்ற முகேஷின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.
அவன் தருபெருமை பேசிக்கொண்டு இருக்க,
“அடப்பாவி! நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்? எதுக்காக என் வாழ்க்கையில இவ்வளவு பெரிய கொடுமையைச் செய்த?” என்று கண்ணீருடன் கேட்டாள்.
அவளுடைய நிலையைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
“முல்லை… ஏன் இப்படி அழற? நீ யார் தெரியுமா? இந்த முகேஷோட மனைவி. இனிமேல் நீ கோடீஸ்வரி. நம்ம பையன்தான் கோடிக்கணக்கான சொத்துக்கும் பணத்துக்கும் ஒரே வாரிசு!” என்றான்.
அப்போது கந்தன் குறுக்கிட்டான்.
“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? உங்களைப் பார்த்தா இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது. இந்தக் குழந்தை உங்களுக்குப் பிறந்ததுன்னு சொன்னா நாங்க எப்படி நம்புறது?” என்று கேட்டான்.
“நான் ஏன் பொய் சொல்லப் போறேன்?” என்று முகேஷ் பல்லைக் கடித்தான்.
“அன்னைக்கு காட்டுல முக்தாவோட நீங்களும் சேர்ந்து முல்லையையும், குழந்தையையும் இழுத்துட்டுப் போக வந்தீங்கதானே?” என்று கந்தன் வினவினான்.
“ஏய் முட்டாள்! அன்னைக்கு முல்லை அங்கிருந்து தப்பிக்காம இருந்திருந்தா, நீங்க யாருமே அவளைக் காப்பாத்த வராம இருந்திருந்தா, நான் ஏற்பாடு செய்த ஆட்கள் முக்தாவை அப்பவே கொலை செய்திருப்பாங்க. அன்னைக்கே முல்லையோடும், என் குழந்தையோடும் என்னோட வாழ்க்கையைத் தொடங்கியிருப்பேன்.” என்று ஆணவத்துடன் பதிலளித்தான்.
அப்போது மங்கலம் குழப்பத்துடன்,
“ஐயா… எனக்குத் தலை சுத்துது. நான் இந்தக் குழந்தை அமீர் ஐயாவோட குழந்தைன்னு தானே நினைச்சேன்?” என்று கேட்டாள்.
“நீ மட்டும் இல்லை, முக்தாவும்கூட அப்படித்தான் நினைச்சிருப்பா. ஆனால், இந்தச் சிகிச்சையைச் செய்த டாக்டர் பல்லவியை நான் மிரட்டி, அமீருக்குப் பதிலாக என்னோட உயிரணுவைத்தான் முல்லையின் கருப்பையில செலுத்தச் சொன்னேன்!” என்றான் முகேஷ்.
“என்ன? டாக்டர் பல்லவியா?” என்று கதிர் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“யாரு? பல்லாவரம் பல்லவியா?” என்று நிலா வினவினாள்.
“ஆமாம், அவள்தான். உனக்கு எப்படி அவளைத் தெரியும்?” என்று மங்கலம் கேட்டாள்.
“அவ என்னோட தோழி. நாங்க ஒண்ணா படிச்சவங்க. ஆனால், அவ கண்டிப்பா இந்த மாதிரியான காரியங்களைச் செய்ய மாட்டா.” என்றாள் நிலா.
“எந்த மாதிரியான காரியங்கள்?” என்று முகேஷ் முறைத்தான்.
“ஒரு பெண்ணோட சம்மதம் இல்லாமல் அவளுடைய கருப்பையில உயிரணுவைச் செலுத்துவது தவறு. கண்டிப்பா அவ அப்படியொரு காரியத்தைச் செய்திருக்க மாட்டா.” என்று உறுதியாகக் கூறினாள்.
“நீ சொல்றது உண்மைதான். மயக்கத்துல இருந்த முல்லைக்கு இந்தச் சிகிச்சையைச் செய்ய பல்லவி முதல்ல ஒத்துக்கவே இல்லை. ஆனால், முக்தா அவளோட குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டி சம்மதிக்க வச்சா. முக்தா அமீருக்காகத்தான் அவளை மிரட்டினா. ஆனால், நான் பல்லவியோட குடும்பத்தையே அழிச்சிடுவேன்னு பயமுறுத்தி, அமீருக்குப் பதிலாக என்னோட உயிரணுவைச் செலுத்த ஏற்பாடு செய்தேன். இப்போ என் திட்டம் வெற்றியடைஞ்சிடுச்சு.”
முகேஷின் வார்த்தைகளைக் கேட்ட முல்லையால் கதறி அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.
தான் அனுபவித்த கொடுமைகளையும், தனக்குத் தெரியாமலேயே அவள் வாழ்க்கையில் நடந்த துரோகங்களையும் நினைத்து அவளுடைய மனம் நொறுங்கியது.
இதையெல்லாம் கேட்ட கந்தன், “அப்போ இந்தக் குழந்தை உங்க பிள்ளையா?” என்று மீண்டும் கேட்டான்.
முகேஷ் அவனை முறைத்தபடி, “ஆமா. இவன் என் பிள்ளை. இவன் மட்டும்தான் என் வாரிசு!” என்றான்.
பின்னர் அங்கிருந்த அனைவரையும் அழுத்தமாகப் பார்த்தவன்,
“எல்லோரும் நான் சொல்றதைக் கேட்டு நடந்துகிட்டா, இங்கிருந்து உயிரோட போகலாம்!” என்று எச்சரித்தான்.
“அப்படி என்னதான் சொல்லப் போறீங்க?” என்று கந்தன் கேட்டான்.
“நீங்க எல்லோரும் நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்குப் பணம் தர்றேன். ஆனா, இனிமேல் யாரும் முல்லையைப் பற்றியோ, என் குழந்தையைப் பற்றியோ வெளியே பேசக்கூடாது!” என்றான்.
அவனை கதிர் முறைத்துப் பார்க்க, முல்லையின் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.
“ஐ…! செட்டில்மென்ட்டா?” என்று கந்தன் மகிழ்ச்சியுடன் கேட்டான்.
“டேய்!” என்று கதிர் அவனை மிரட்டினான்.
“அட சும்மா இரு மச்சான். பேசாம பணத்தை வாங்கிட்டு நாம பக்காவா செட்டில் ஆகிடலாம்!” என்றான் கந்தன்.
அவனுடைய பேச்சைக் கேட்ட முல்லை கண்ணீர் வடித்தாள்.
“பரவாயில்லை கந்தா. இப்போதான் நீ எங்க வழிக்கு வர!” என்றான் வெங்கடேஷ்.
“பின்ன… வராம இருக்க முடியுமா?” என்று கந்தன் பதிலளிக்க, முகேஷ் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“முகேஷ் சார், இப்போதான் நாம எல்லோரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா, கண்ணுக்குள்ள கண்ணா ஆகிட்டோமே. இந்தக் கட்டுகளை அவிழ்த்துவிடச் சொல்லலாமே?” என்று கேட்டான்.
“ம்…” என்று முகேஷ் தலையசைக்க, மங்கலத்தின் ஆட்கள் அனைவருடைய கட்டுகளையும் அவிழ்த்தனர்.
“எப்படியோ, இத்தனை வருஷம் கழிச்சு உங்களுக்கு ஒரு நல்லது நடந்திருக்கே. வாழ்த்துகள் முகேஷ் சார்!” என்று கந்தன் கைகொடுத்தான்.
சிரித்தபடியே கைகொடுத்த முகேஷ், அவனை எச்சரிக்கும் விதமாக,
“என்கிட்ட சமாதானம் பேசிட்டு இங்கிருந்து போனதும் எனக்கே குழி பறிக்கப் பார்த்தீங்கன்னா, முக்தாவுக்கும் அமீருக்கும் நேர்ந்த கதிதான் உங்களுக்கும்!” என்றான்.
“என்ன சொல்றீங்க? முக்தா மேடத்துக்கு என்னாச்சு?” என்று கந்தன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“எனக்குத் துரோகம் பண்ண முக்தாவையும் அவ மகனையும் இதோ என் நண்பன் கமிஷனரை வச்சித்தான் போட்டுத் தள்ளினேன்!” என்றான்.
“என்ன… கொலையா?” என்று கந்தன் திகைத்தான்.
“ஆமா! இந்த முகேஷைப் பகைச்சிக்கிட்டா யாராக இருந்தாலும் அவங்களுக்கு மரணம்தான் தண்டனை!” என்று ஆணவத்துடன் அறிவித்தான்.
அப்போது மங்கலம், “ஐயா… இனிமேல் நாங்க என்ன செய்யணும்?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்த முகேஷ், “பலி கொடுக்கிறதெல்லாம் மூடநம்பிக்கைன்னு எனக்கும் தெரியும். ஆனா, முக்தாவோட அந்த நம்பிக்கைதான் என்கிட்ட என் முல்லையை கொண்டு வந்து சேர்த்தது.” என்றான்.
அவனுடைய பேச்சைக் காதில் வாங்காத முல்லை, கதிரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இனிமேல் நீயும் என் கண்ணுல படக்கூடாது. என் முல்லையை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்ததுல உன் பங்குதான் அதிகம். அதனாலதான் உன்னை உயிரோட விடுறேன். நான் தர்ற பணத்தை வாங்கிட்டு இந்த ஊரைவிட்டே ஓடிடு!” என்று மங்கலத்திடம் கூறினான்.
“பணம் கொடுத்தா நான் ஏன் ஐயா வாயைத் திறக்கப் போறேன்?” என்று அவளும் ஒத்துழைத்தாள்.
அப்போது வெங்கடேஷ், “சரி சரி. அதான் எல்லோரையும் செட்டில் பண்ணிட்டியே. அடுத்து என்ன செய்யப் போற?” என்று கேட்டான்.
“வேற என்ன? இவங்க எல்லோரும் கிளம்பினதும், ஊர் உலகத்துக்காக முக்தாவும் அமீரும் இறந்ததை நினைச்சு நாலு சொட்டு கண்ணீர் விட்டுட்டு, பதினாறாம் நாள் என் முல்லையையும் என் வாரிசையும் அழைச்சிட்டு வெளிநாட்டுக்குப் போய் சந்தோஷமா வாழப் போறேன்!” என்றான்.
அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட முல்லை மனதுக்குள் வெதும்பினாள். கதிருக்கும், நிலாவுக்கும் முகேஷ் மீது கோபம் கொப்பளித்தது.
மறுபுறம், கீதா பழனிசெல்வத்தின் நிலையை நினைத்துக் கலங்கிக்கொண்டிருந்தாள்.
ஆனால், முகேஷோ தன்னுடைய திட்டம் வெற்றியடைந்துவிட்டதாக எண்ணி மகிழ்ச்சியில் மிதந்தான்.
“அட… ஏன் பதினாறு நாள் வரைக்கும் காத்திருக்கிறீங்க? இன்னும் பதினாறு நிமிஷத்துல நீங்க திகார் போக நான் ஏற்பாடு பண்றேன்!” என்றான் கந்தன்.
அவனுடைய பேச்சைக் கேட்டு முகேஷ் முறைத்தான்.
“ஏய்! என்ன சொல்ற?” என்று வெங்கடேஷ் கேட்டான்.
“மச்சான்… நீ போய் என் தங்கச்சியையும் அவ குழந்தையையும் அழைச்சிட்டு வா!” என்று கந்தன் கூறியதும்,
முல்லையையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வருகையில், முகேஷின் அருகே வந்து கதிர் ஒரு நொடி நின்றான்.
“முல்லை, அந்தக் கிழவனோட செட்டுப் பல்லு தெறிச்சு விழுற மாதிரி ஒரு அடி கொடுத்துட்டு வா!” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட முல்லை குழந்தையைக் கதிரின் கையில் கொடுத்துவிட்டு, முகேஷை அருவருப்புடன் பார்த்தாள்.
“என் விரல் நுனிகூட இந்த அசிங்கம் பிடிச்சவன் மேல படக்கூடாது!” என்று ஆத்திரத்துடன் கூறி, கதிரின் கையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளுடைய செயலைக் கண்டு முகேஷ், “ஏய்!” என்று கர்ஜித்தான்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாத கந்தன் வெங்கடேஷைப் பார்த்து, “கமிஷனர் சார், மிஸ்டர் முகேஷ் அவரோட போனைத் தூக்கிப் போட்டு உடைச்சிட்டாரு. பட், உங்க போன் வொர்க் ஆகுது தானே?” என்று கேட்டான்.
“என்னடா சம்பந்தமே இல்லாம பேசுற?” என்று வெங்கடேஷ் குழப்பத்துடன் வினவினான்.
“சம்பந்தம் இருக்கு! கமிஷனர் சார், உங்க போன்ல அக்னி லைவ் நியூஸ் பாருங்க!” என்றான் கந்தன்.
உடனே வெங்கடேஷ் தன்னுடைய கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.
அதில் முகேஷும் அவனும் பங்களாவுக்குள் நின்று கொண்டிருக்கும் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்ததும் அவனுடைய முகம் வெளிறியது.
“இது எப்படி சாத்தியம்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
முகேஷ் பதற்றத்துடன், “அப்போ நான் இதுவரைக்கும் பேசினதெல்லாம் லைவ்ல வந்திருக்குமா?” என்று வினவினான்.
“கண்டிப்பா வந்திருக்கும் தாத்தா. ஏன்னா, இந்த வீடியோ கேமரா உங்களைத்தான் ஜூம் பண்ணிக் காட்டும்!” என்று கந்தன் ஏளனமாகச் சிரித்தான்.
“என்ன… வீடியோ கேமராவா?” என்று மங்கலம், வெங்கடேஷ், முகேஷ் மூவரும் சுற்றிலும் தேடினர்.
“ரொம்பத் தேடாதீங்க. வீடியோ கேமரா அதோ அங்கதான் இருக்கு!” என்று கந்தன் கையைக் காட்டினான்.
அனைவரின் பார்வையும் அவர்கள் முன்னால் இருந்த வெடிகுண்டின் மீது பதிந்தது.
அதைக் கண்ட முகேஷின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.
“ஆனாலும் தாத்தா… உனக்கு இவ்வளவு வில்லத்தனம் ஆகாது!” என்று கந்தன் கிண்டலாகச் சிரித்தான்.
அடுத்த நொடியே முல்லை தன் மாமாவைப் பார்க்க ஓடினாள்.
அங்கே கீதா, மயக்கத்தில் கிடந்த பழனிசெல்வத்தின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.
முல்லை அவரை நோக்கி ஓட அதே நேரத்தில்…
டமார்!
அந்தப் பங்களாவையே அதிரவைக்கும் வகையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.
அதைத் தொடர்ந்து ஒலித்த குழந்தையின் அழுகுரல், அங்கிருந்த அனைவரின் இதயத்தையும் உலுக்க,
“முல்லை…” என்று கதிர் அலறிய சத்தம், அந்த இடத்தையே அதிர வைத்தது.
தொடரும்… 💐
2 comments
Super super super well done quality event is awesome…..🌷🌷🌷🌷🌷🌷🌷
💯🎯‼️💕🙏💕 கந்தா கலக்கிட்ட👍👍
Dr. பல்லவி… அவுங்க friend கதிர் ஓட உயிரனுவ முல்லை க்கு பண்ணி யிருந்தா நல்லா இருக்கும் 👍