Stories that touch hearts

Home  /  22. நதி (நதிபோகும் கூழாங்கல்)  /  Chapter 16

CHAPTER 16

நதி – 16

By Nadhi · November 17, 2026

0

“வீடு எப்படி இருக்கு?” தீரன் கேட்கவும் அவனை நிமிர்ந்து பார்த்துவள் சிறு புன்னகை கொடுத்து,

“ரொம்ப நல்லாருக்கு!” என்றாள்.

“வேலை தான் அதிகம் இல்ல?” என்றவன்,

“ரொம்ப நாள் ஆச்சு இங்க நான் வந்து. இவ்வளவு நாளும் வரணும்னு தோணினது கூட இல்ல. சில நேரம் வித்துடலாமான்னு கூட நினைச்சிருக்கேன்!” என்று சொல்ல, கதை கேட்கும் பாவனையில் அமர்ந்திருந்தாள் பிருந்தா.

“யாரோ பண்ணின தப்புக்காக நான் உழைச்சு சம்பாதிச்சு வாங்கின வீட்டை ஏன் விடணும்னும் அப்பப்ப நினைச்சுப்பேன்!” என்றான்.

“இப்ப கூட அத்தான் போன் பண்ணி அங்க நடத்தை சொல்லலைனா இந்த முடிவுக்கு வந்திருப்பேனானு டவுட்டு தான் பிருந்தா. இப்பவும் இது சரி வருமானு எல்லாம் நான் நினைக்கல. என்னை மாதிரி தான் நீயும் நிம்மதி இல்லாம இருந்திருக்க இவ்வளவு நாளும். அதுவும் என்னை கல்யாணம் பண்ணி வந்திருக்க. அப்போ என் பொறுப்பு தானே? நான் பாத்துக்கணுமேன்னு தான்… உன்னை நிம்மதியாவாச்சும் பார்த்துக்கணும்னு தான்!” என்று சொல்லவும் அவனையே பார்த்திருந்தவள் அவன் பார்வை இவளிடம் வரவும் தலை தாழ்த்திக் கொண்டாள்.

“இனி பழசை பேச வேண்டாம்னு தான் ஒவ்வொரு முறையும் நினைக்குறேன். ஆனாலும் பேசிடுறேன் இல்ல?” என்றவன்,

“சரி விடு. இனி நம்ம வாழ்க்கை என்னனு பார்ப்போம்!” என்று சொல்லவும் அவனைப் பார்த்து அவள் புன்னகை கொடுக்க, இருவருமாய் எழுந்து சென்றனர்.

மீதி இருந்த சிறு சார் வேலைகளையுமே காலை எழுந்தது முதல் நிலாவும் பிருந்தாவும் செய்ய,

“இனி நான் பார்த்துக்குறேன் சொல்றேன் கேட்கவே மாட்டேன்ற!” என்றாள் பிருந்தா நிலாவிடம்.

“இருக்கட்டுமே அண்ணி. என்ன இப்ப!” என்றவள் அனைத்தையும் முடித்து கொடுத்து எங்கெங்கு என்னென்ன இருக்கிறது என பிருந்தாவிடமும் காட்டி என எடுக்க எடுக்க வேலைகள் தொடர தான் செய்தது.

“இப்படி ஒவ்வொண்ணா பார்த்தா வந்துட்டே தான் இருக்கும் நிலா. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவீங்க. கொஞ்ச நேரம் அமைதியா உக்காரு. வந்ததுல இருந்து வேலை தான். வெளில கூட உங்களை கூட்டிட்டு போகல நான்!” என்றான் தீரனும்.

“இருக்கட்டும் ண்ணா. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும். நாங்க வந்து போய் இருக்கோம்!” என்றாள் நிலாவும்.

“அப்புறம் ண்ணா! எல்லாமே ஓரளவு நீட் பண்ணியாச்சு. அண்ணிக்கு அப்பப்ப ஹெல்ப் பண்ணிக்கோங்க. காய்கறி எல்லாம் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி வாங்கிட்டு வந்துடுங்க. வீட்டுக்கு என்னென்ன வேணும்னு கவனிச்சுக்கோங்க.!” என நிலா சொல்ல சொல்ல புன்னகையுடன் தீரன் சம்மதம் சொல்ல,

“இதெல்லாம் நான் என் வீட்டுல ஃபாலோவ் பண்றது. அதை அப்படியே உன்னையும் செய்ய சொல்றா!” என்று லோகேஷ் கூற, பிருந்தாவும் சிரித்தாள் அதில்.

“இன்னும் ரெண்டு நாள் நீங்க இருக்கலாம்!” பிருந்தாவிற்கு நிலாவும் குழந்தையும் என அவர்களைப் பிரியவே தோன்றவில்லை.

“ஹ்ம்! இதே மாதிரி எப்பவும் நீங்க என்னை உரிமையா கூப்பிட்டா போதாதா எனக்கு? வேற எங்க போவேன் நானும்? உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் நார்மல் ஆகனும். எல்லாரையும் மாதிரி நீங்களும் சந்தோசமா உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும். அதுக்கப்புறம் வந்து தங்கினா தான் எனக்கு நிஜமான சந்தோசம்!” என்றுவிட்டாள் நிலா.அதில் அமைதியாகிவிட்டனர் இருவருமே.

“அம்மா பத்தி எல்லாம் இன்னும் ரெண்டு பேரும் யோசிக்காதிங்க ண்ணா. அவங்களா சரியாகிடுவாங்க. எல்லாமே அவங்களும் பழகணும். இத்தனை வயசான பையனுக்கு எல்லாம் தனியா பார்த்துக்க தெரியும்னு அவங்களுக்கு புரிய வேண்டாமா? கொஞ்ச நாள் பார்க்காம இருந்தா அவங்களா தேடி வருவாங்க. அப்ப தான் அவங்களுக்கும் நிதர்சனம் புரியும்!” என நிலா சொல்ல,

“எனக்கும் அது தான் சரினு தோணுது மாப்பிள்ளை. கொஞ்சம் நீ உன் லைஃப்பை பாரு. அப்ப தான் எல்லாம் பழக ஆரம்பிக்கும்!” என லோகேஷ்ஷும் கூற, அத்தனை அறிவுரைகளை முடித்துக் கொண்டு தான் அங்கிருந்து கிளம்பி இருந்தனர் நிலாவும் லோகேஷ்ஷும்.

அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு மாலை நேரம் காபியை கணவனுக்கு கொடுத்து தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள் பிருந்தா.

“நீங்க ஆபீஸ் எப்ப இருந்து போகணும்?” என பிருந்தா கேட்கவும்,

“நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் எடுத்துக்கலாம்னு இருக்கேன் பிருந்தா. உனக்கு ஓகே தானே?” என்றவன் அவள் தலையசைக்கவும்,

“மார்னிங் ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன். ஈவ்னிங் கூட செவென் ஆகிடும் வர” என நேரங்களையும் பகிர்ந்து கொண்டான்.

இருவருக்கும் ஒருவரிடம் ஒருவர் என பேச தோன்றினாலும் வார்த்தைகள் தான் அகப்படவில்லை.

என்ன பேச என்ற எண்ணத்தோடு தான் நேரங்கள் கடந்தது.அடுத்த நாள் காலை உணவை முடித்துக் கொண்டு அருகிலுள்ள கடைக்கு பிருந்தாவை அழைத்து சென்றான் தீரன்.

வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் ஏன அத்தியாவசியத் தேவைகள் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவளுக்கு தனித் தேவைக்கு என அந்த வழியை நினைவில் வைக்க என ஒவ்வொன்றயும் சொல்லிக் கொடுத்தவன் மதிய உணவிற்கும் வெளியே அழைத்து சென்றான்.

“என்ன வேணும் உனக்கு?” என்றதற்கு எதுவும் சொல்ல தெரியவில்லை அவளிற்கு.

“எது நல்லாருக்குமோ அது போதும்!” அவள். சொல்லவும் புன்னகைத்தவன் தானே மெனுவில் உள்ள உணவுகளை ஆராய்ந்து இருவருக்கும் ஆர்டர் செய்தான்.

“ஒவ்வொண்ணா டேஸ்ட் பண்ணு. அப்புறம் நீயே உனக்கு பிடிச்சத சொல்லுவ!” என சொல்லியே ஆர்டர் செய்ய, அவளும் புதிதாய் தான் பார்த்தாள் அங்கிருந்த ஒவ்வொன்றையும்.

“எப்பவோ ஒரு டைம் என் பக்கத்து வீட்டு பாத்திமா அக்கா கூட ஹோட்டல் போன நியாபகம். அம்மா அப்போ ஊர்ல இல்ல. அவங்க சொந்தக்காரங்க வீட்டு விஷேஷத்துக்கு போயிருந்தாங்க. அப்ப தான் பாத்திமாக்கா என்னை கூட்டிட்டு போனாங்க. நானும் அவங்களும் மட்டும். ஏனக்கு என்ன வேணும்னு கூட சொல்ல தெரில அப்ப. அவங்களே தான் இப்ப நீங்க சொன்ன மாதிரி இந்த கார்ட் பார்த்து ஆர்டர் பண்ணினாங்க. ஹனி சிக்கன்னு வாங்கிக் குடுத்தாங்க. அந்த டேஸ்ட் இப்ப எனக்கு நியாபகம் இல்ல. ஆனா பாத்திமாக்கா நியாபகம் மறக்கவே இல்ல!” என்று சொல்லி அந்த நினைவுகளில் பிருந்தா புன்னகைக்க,

“இனி எல்லாம் நியாபகம் வச்சுக்கணும். புதுசு புதுசா ட்ரை பண்ணு. அடுத்து வர்றப்ப எனக்கும் சேர்த்து நீ ஆர்டர் பண்ற. நாம சாப்பிடுறோம்!” என்றவனைக் கண்டு நினைவின் தாக்கத்தில் புன்னகைத்தவள்,

“நல்லா இல்லைனா?” எனக் கேட்க,

“நெக்ஸ்ட் டைம் அது வாங்க வேண்டாம்!” என்றான் தோளைக் குலுக்கி.

புதிதாய் இருந்தாலும் பிடித்திருந்தது அந்த உணவு நேரம். இருவருக்கும் இருவிதமாய் நினைவலைகள் சுழற்றாமல் இல்லை. ஆனாலும் கடந்து வர நேரம் எடுத்துக் கொண்டனர்.

அடுத்தநாள் காலை எழுந்து சமையலை ஆரம்பித்துவிட்டாள் பிருந்தா. அன்று தீரன் அலுவலகம் செல்ல வேண்டும்.

காலைக்கும் மதியத்திற்கும் என சேர்த்தே உணவை சமைத்திட என விரைவில் எழுந்து கொண்டவள் அதில் பிஸியாகிவிட, நேரம் கழித்தே எழுந்த தீரனும் வெளியில் வந்து மனைவி என்ன செய்கிறாள் என பார்த்துவிட்டு குளிக்க சென்றான்.

அவன் கிளம்பி வரும் முன் அனைத்தும் தயாராய் இருந்தது. அதுவும் நிச்சயம் கவனித்து கவனித்து செய்திருக்கிறாள் என பார்த்ததும் உணரவும் முடிந்தது தீரனுக்கு.

“மார்னிங்க்கு மட்டும் பண்ணேன் பிருந்தா. மதியம் கேன்டீன்ல சாப்பிட்டுக்குறேன். எப்பவுமே அப்படி தான்!” என்று அவன் சொல்லவும்,

“கேன்டீனா?” என அவள் விழித்தாள்.

“பின்ன? இப்படி எனக்குன்னு யாரும் சமைச்சு குடுத்து விட்டதெல்லாம் இல்ல. கேன்டீன் தான். நானா சமைச்சு வேணா எடுத்துட்டு போயிருக்கேன்!” என்றான்.

“இனி எடுத்துட்டு போலாமே!” தயங்கியே அவள் சொல்லவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்க்க,

“இல்ல எனக்கு மட்டும் மதியத்துக்கு நான் சமைக்கணும். அதான் ரெண்டு பேருக்கும்னா ஈஸியா இருக்குமே!” என்றாள்.

“உனக்கு கஷ்டமேனு தான் சொன்னேன். முடியும்னா எனக்கு ஓகே தான். கேன்டீன்ல அவ்ளோ ஒன்னும் நல்லாருக்காது. சாப்பிடணுமேனு சாப்பிடுவேன்!” என சொல்லவும்,

“ஹ்ம்!” என உடனே ஏற்றுக் கொண்டாள்.

ஆயிரம் முறை பத்திரங்கள் கூறி அலுவலகம் கிளம்பினான் தீரன்.

அவன் சென்ற பின் மீதமிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு நிலாவிற்கு அழைத்து பேசி என நேரத்தை போக்கிக் கொண்டிருந்தாள் பிருந்தா.

மதிய உணவு இடைவெளியில் கணவனிடமிருந்து அழைப்பு வரவும் புன்னகையுடன் ஏற்று பேச, சாதாரண பேச்சு வார்த்தைகள் தான் என்றாலும் உள்ளுக்குள் என்னவோ ஒரே ரசனைகள் இருவருக்குமே தான்.

மாலை ஆறு மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டான் தீரன்.

“ஏழு மணியாகும் சொன்னிங்க?” என அவள் கேட்க,

“சொன்னேன். ஆனாலும் நீ என்ன பன்றியோன்னு இருந்துச்சு. முதல் நாள் வேற. நீ மேனேஜ் பண்ணிட்டியானு தெரிஞ்சுக்க தான்!” என நிஜத்தை அவன் கூறிவிட,

“காபி எடுத்துட்டு வர்றேன்!” என சென்றவளை புன்னகையுடன் பார்த்துவிட்டு குளியலறை சென்றான்.

“பேசாம உனக்கும் எதாவது வேலை பார்ப்போமா?” என குளித்து முடித்து வந்து காபியையும் குடித்துவிட்டு தீரன் கேட்க, கண்கள் மட்டும் அவ்வளவு விரிந்து கொண்டது பிருந்தாவிடம்.

“நீ கூட மேனேஜ் பண்ணிடுவ போல வீட்டுல. உன்னை தனியா விட்டுட்டு போறது ரொம்ப அஃபக்ட் பண்ணுது என்னை!” என்றவன்,

“வேலைக்கு போக உனக்கு இன்ட்ரெஸ்ட் இருந்தா தான். இல்லைனா கம்பல்ஷன் எல்லாம் இல்ல!” என்றான் அவனே.

“உங்களுக்கு பிரச்சனை இல்லையா?” இன்னும் ஆச்சர்யம் குறையாமல் அவள் கேட்க,

“இதுல என்ன பிரச்சனை? படிச்சிருக்க தானே? பிடிச்சா போலாம். என்கிட்ட கேட்குற!” என சிரித்தவன்,

“வீட்டுக்குள்ளயே இருக்க உனக்கு போராடிக்கும் தானே?” என்றான்.

இத்தனை சலுகைகளை நிச்சயம் இந்த வாழ்க்கையில் அவள் நினைக்கவோ எதிர்பார்க்கவோ இல்லை.

“போறேன். ஆனா இப்பவே இல்ல. இன்னும் கொஞ்சம் பழகிக்குறேன்!” முகம் முழுதும் பளிச்சேசென புன்னகைத்து கூறினாள் பிருந்தா.

“ஹ்ம் யுவர் விஷ்!” என்றவன்,

“என் ஆபீஸ்ல வெக்கேண்ட் எதுவும் இல்ல உன் படிப்புக்கு. இல்லைனா கையோட கூட்டிட்டு போயிருப்பேன்!” என்று சொல்லி காபி கப்பை வைத்துவிட்டு அலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டான் தீரன். வீடு முழுதும் எதிரொலித்தது அதன் வரிகள்.

“உனக்கென்று இடமுண்டு, அதில் நீயும் இடம்சேரு”

இரவு உணவுக்கு தீரன் உதவி செய்ய, வேலையை கவனித்தபடி கணவனையும் கவனிக்க ஆரம்பித்தாள் பிருந்தா.

ஏற்கனவே கவனத்தில் கவனமாய் விழுந்திருந்தான் மனோ தீரன்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!