Stories that touch hearts

Home  /  02. S.K (மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ)  /  Chapter 16

CHAPTER 16

முல்லைப்பூ – 16

By S.K Velan · November 6, 2026

4

🕊️பாகம் 16

அன்றைய தினம் முல்லையின் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி நிலவியது.

அனைவரும் மதிய உணவிற்காக ஒன்றாக அமர்ந்திருந்தனர். அப்போது சமையலறையிலிருந்து பலகாரத் தட்டுடன் வெளியே வந்தார் கீதா.

கதிரும், முல்லையும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, நிலாவும் கந்தனும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“கதிர், நாளைக்கு நம்ம வீட்டுல புண்ணியஸ்தானம் பண்ணிடலாம்” என்றார் கீதா.

“உங்க இஷ்டம் சித்தி” என்றான் கதிர்.

“அப்படியே குழந்தைகளுக்கு பெயரும் வச்சிடலாம்.”

“உங்க இஷ்டம் சித்தி.”

“என்னடா. எல்லாமே என் இஷ்டம்னா என்ன அர்த்தம்? ஏன், உன் பையனுக்கும், பொண்ணுக்கும் நீ எந்தப் பெயரையும் யோசிச்சு வைக்கலையா?” என்று கேட்டார் கீதா.

முல்லைக்கோ தன் குழந்தைக்கு தன்னை வளர்த்த மாமனின் பெயரை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

கதிருக்கோ தன் மகளுக்கு கீதா எந்தப் பெயரை வைத்தாலும் மகிழ்ச்சியே என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது.

“சரி. அப்போ நாளைக்கு நம்ம வீட்டுல அக்கம் பக்கத்தினரையும் கூப்பிட்டு, சின்னதா ஹோமம் வளர்த்து எல்லாம் முறையா பண்ணிடலாம்” என்றார் கீதா.

“ஓகே சித்தி” என்ற கதிர், ஒரு கணம் முல்லையைப் பார்த்தான்.

அவளோ தன் தட்டில் இருந்த உணவைச் சாப்பிடாமல் ஏதோ ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தாள்.

“கதிர், நீ சாப்பிட்டு உன் பொண்டாட்டியை அழைச்சிட்டு என் ரூமுக்கு வா” என்றார் கீதா.

அவனும் மதிய உணவை முடித்துவிட்டு முல்லையை அழைத்துக்கொண்டு கீதாவின் அறைக்குச் சென்றான்.

“இந்தாடா. இதை உன் பொண்டாட்டிகிட்ட கொடு” என்று ஒரு நகைப்பெட்டியைக் கதிரிடம் நீட்டினார்.

கதிரும் அதை மகிழ்ச்சியோடு வாங்கி முல்லையிடம் கொடுத்தான்.

“என்னங்க இது?” என்று முல்லை கேட்க,

“ஏய்! நீ என்ன வாங்க, போங்கன்னு கூப்பிடுற? ஒழுங்கா அத்தைன்னு கூப்பிடு” என்றார் அதட்டல் போட, அவளும் சற்று பயந்தபடி தலையாட்டினாள்.

“அப்புறம், என் அக்காவோட தங்கச் சங்கிலியைப் போட்டுக்கோ. அது பார்க்கச் சரடு மாதிரி இருக்கும். நிலாகிட்ட ஜாக்கெட் வாங்கிக்கோ. கதிரோட அலமாரியில அவன் பொண்டாட்டிக்காக… அதான், உனக்காக வாங்கி வச்ச புடவைகள் இருக்கு. அதுல உனக்குப் பிடிச்சதை எடுத்து கட்டிக்கோ” என்றார் கீதா.

முல்லையும் சம்மதமாகத் தலையாட்டினாள்.

“சித்தி, அப்போ குழந்தைகளுக்குத் துணி?” என்று கேட்டான் கதிர்.

“நிலாவும், மாப்பிள்ளையும் போய் குழந்தைங்களுக்கு துணி, பால் பாட்டில்னு எல்லாமே வாங்கிட்டு வருவாங்க” என்றார் கீதா.

அதன்பிறகு கதிர் முல்லையை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றவன், கொண்டு வந்த நகைப்பெட்டியை மேசையின் மீது வைத்து, “உங்களுக்கு எந்த நகை வேணுமோ அதை எடுத்துப் போட்டுக்கோங்க. புடவையும் அலமாரியில இருக்குன்னு சொன்னாங்களே…” என்று சொல்லிக்கொண்டே அலமாரியைத் திறந்தான்.

அங்கிருந்த சிவப்பு நிறப் பட்டுப்புடவையை எடுத்தவன், “உங்களுக்கு இந்தப் புடவை நல்லா இருக்கும்” என்றான்.

ஆனால், முல்லையோ ஏதோ யோசனையில் இருந்தாள்.

“என்னாச்சு? யோசனையா இருக்கீங்க?”

“நாளைக்கு உங்க சொந்த பந்தம் எல்லாம் வரும்போது என்னைப் பார்த்து என்ன சொல்லுவாங்க?” என்று கேட்டாள்.

“என்ன சொல்லுவாங்க? இந்த வீட்டு மருமக மகாலட்சுமி மாதிரி இருக்கா. நீ ரொம்பக் கொடுத்து வச்சவ கீதான்னு என் சித்தியைப் புகழ்ந்து பேசுவாங்க.” என்று அவளது கேள்வியைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டான்.

அவனது வார்த்தைகளில் மனம் நெகிழ, “உங்களை ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?” என்று கேட்டாள்.

“என்னை என்ன சொல்லப்போறாங்க?” என்று அவன் புரியாமல் கேட்க,

“அப்போ… என்னையும், உங்களையும் பார்த்து…” என்று இழுத்தாள்.

“உங்களையும், என்னையும் பார்த்து என்ன சொல்லப்போறாங்க?” என்று அவன் மீண்டும் கேட்க,

“டாக்டர் சார்… உங்களுக்கு புரியலையா? நாளைக்கு வரவங்க எல்லாரும் நான் உங்க பொண்டாட்டின்னுதானே நினைப்பாங்க!” என்றாள்.

அவளது கேள்வியில் ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தவன், “ஏன்? உங்களுக்கு அப்படி அவங்க நினைக்கிறது சங்கோஜமா இருக்குமா?” என்று கேட்டான்.

அவள் அதற்குப் பதில் சொல்லும் முன்னரே,

“முல்லை, குழந்தை அழறான் பாரு!” என்று கீதா அழைத்தார்.

அவள் கதிரை ஒரு கணம் பார்த்துவிட்டு, “இதோ வரேன் அத்த!” என்று குரல் கொடுத்தபடி அறையை விட்டு வெளியே செல்லத் தொடங்கினாள்.

“சொல்லிட்டுப் போங்க முல்லை. உங்களுக்கு சங்கோஜமா இருக்குமா?” என்று மீண்டும் கேட்டான்.

அவளோ பதில் சொல்லாமல் அவனை ஒருமுறை முறைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

மறுநாள் காலை, கதிரின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. வீட்டு வாசலில் அழகிய மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ண வண்ண மலர் மாலைகள் நுழைவாயிலை அலங்கரித்தன. முற்றத்தில் பெரிய கோலம் போடப்பட்டு, அதன் நடுவே குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

வீட்டின் ஒரு பகுதியில் ஓமம் வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.

உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தனர். வீட்டுக்குள் பெண்களின் சிரிப்பும், பேச்சும் குழந்தைகளின் மழலைச் சத்தமும் நிறைந்திருந்தது.

கீதா இரண்டு குழந்தைகளையும் அழகாகப் புத்தாடை அணிவித்து அழகு பார்த்தார்.

கதிரும் பட்டுவேஷ்டி, சட்டை அணிந்து வீட்டில் உற்சாகமாக வலம் வந்துகொண்டிருந்தான்.

அப்போது, “டேய் கதிர். எங்கடா உன் பொண்டாட்டி?” என்று கேட்டார் கீதா.

“இதோ போய் அழைச்சிட்டு வரேன்” என்றவன் தன் அறைக்குச் சென்றான்.

அங்கே முல்லை நைட்டியுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

“என்ன முல்லை. இன்னும் கிளம்பலையா?” என்று கேட்டான்.

“இல்லைங்க. எனக்குப் பட்டுப்புடவை கட்டத் தெரியாது” என்றாள் தயக்கத்துடன்.

அவள் சொன்னதைக் கேட்டதும் கதிர் சத்தமாகச் சிரித்தான்.

அவன் சிரிப்பைப் பொறுக்க முடியாத முல்லை, சட்டென்று எழுந்து அவன் வாயைத் தன் கையால் மூடினாள்.

அவளது திடீர் செயலால் நிலைதடுமாறிய கதிர் பின்னால் சாய, முல்லையும் அவன் மீது விழுந்தாள்.

அடுத்த நொடியே இருவரும் ஒன்றாகக் கட்டிலில் விழுந்திருக்க, ஒரு கணம் இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கதிரின் மார்பில் சாய்ந்திருந்த முல்லை, தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழ முயன்றாள்.

இருவரும் அந்த நிலையில் ஒருகணம் தடுமாறிப் போனார்கள்.

“சாரி… சாரி…” என்று பதற்றத்துடன் கூறிய முல்லை, அவனை விட்டு விலகி எழுந்தாள்.

“பரவாயில்லை…” என்ற கதிர், தன்னைச் சமாளித்துக்கொண்டு, “நான் போய் நிலாவை அனுப்புறேன்” என்றபடி வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே கந்தனுடன் பேசிக்கொண்டிருந்தாள் நிலா.

“நிலா! முல்லை கூப்பிடுறாங்க. போய் என்னன்னு பாரு” என்று அவளை அனுப்பி வைத்தான் கதிர்.

அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் கந்தன்.

“என்னடா… என் முகத்துல படமா ஓடுது?” என்று கதிர் கேட்க,

“இல்ல மச்சான். ஆனா, உன் இதயத்துல ரத்தம் கசியுது!” என்றான் கந்தன்.

“என்னடா உளறுற?” என்று புரியாமல் கேட்டபடியே கதிர் தன் சட்டையைப் பார்த்தான்.

அப்போதுதான் அவனது சட்டையில் குங்குமம் படிந்திருந்ததைக் கவனித்தான்.

சற்று முன்பு முல்லை தன் மீது விழுந்த தருணத்தை நினைத்துப் பார்த்தவனின் இதழோரத்தில் மெல்லிய புன்னகை ஒன்று அரும்பியது.

அதே நேரத்தில், கதிரின் அறையிலிருந்து வெளியே வந்த முல்லை, சிவப்பு நிறப் பட்டுப்புடவையில் தேவதைபோல் காட்சியளித்தாள்.

முந்தானையை அழகாகச் சரிசெய்து தோளில் போட்டிருந்தாள். கழுத்தில் தங்கச் சங்கிலியும், காதுகளில் சிறிய ஜிமிக்கியும் அவளது அழகுக்கு மேலும் மெருகூட்டின.

நெற்றியில் சிறிய குங்குமப்பொட்டு, நீண்ட கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப்பூ என மங்களகரமாக ஜொலித்தாள். அவளைக் கண்ட கதிரின் பார்வை ஒரு கணம் அவளிடமே நிலைத்தது.

“டேய் கதிர். உன் பொண்டாட்டியை அழைச்சிட்டு வந்து ஐயர் முன்னாடி உட்காரு” என்றார் கீதா.

கதிர் முல்லையை அழைத்துக்கொண்டு ஐயர் முன்னால் சென்று அமர்ந்தான். கீதா இரு குழந்தைகளையும் அவர்களிடம் கொடுத்தார்.

ஐயர் முறைப்படி அனைத்து சடங்குகளையும் செய்து முடித்துவிட்டு,

“குழந்தைகளுக்கு என்ன பெயர் வச்சிருக்கீங்க?” என்று கேட்டார்.

“சித்தி! நீங்களே பெயர் வையுங்க” என்றான் கதிர்.

முதலில் கதிரின் பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்ட கீதா, “திரிபுரசுந்தரி” என்று பெயர் சூட்டினார்.

அடுத்ததாக முல்லையின் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, “பழனிதேவன்” என்று பெயர் சூட்டினார்.

அந்தப் பெயரைக் கேட்டதும், முல்லையின் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

தான் ஆசைப்பட்டபடியே தன் குழந்தைக்குத் தன் மாமனின் முழுப் பெயரின் முதல் பகுதியான ‘பழனி‘ என்ற பெயர் தற்செயலாக அமைந்ததில் அவளது கண்களே மகிழ்ச்சியில் மின்னின.

“குழந்தைகளுக்கு இந்தப் பிரசாதத்தை வச்சிடுங்க” என்று ஐயர் குங்குமத்தை கதிரிடம் கொடுத்தார்.

கதிரும் இரு குழந்தைகளின் நெற்றியிலும் குங்குமம் இட்டு ஆசீர்வதித்தான்.

“உங்க மனையாளிக்கும் வையுங்க” என்றார் ஐயர்.

கதிர் முல்லையைப் பார்க்க, அவளோ அவனுக்கு வாட்டமாக தலையைத் திருப்பி, அவன் இட்ட திலகத்தை மறுக்காமல் பெற்றுக்கொண்டாள்.

இந்தக் காட்சியைக் கண்ட நிலாவும், கந்தனும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

அப்போது கந்தன் தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு சிறிய பெட்டிகளை எடுத்துக்கொண்டு வந்தான்.

“மச்சான்… குழந்தைகளுக்காக நான் ஒரு சின்ன பரிசு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றான்.

“என்னடா அது?” என்று கதிர் ஆர்வமாகக் கேட்டான்.

கந்தன் அந்த இரண்டு பெட்டிகளையும் திறந்து காட்டினான்.

அதற்குள் தங்கத் தாயத்து கோர்க்கப்பட்ட இரண்டு அழகான கருப்புச் சங்கிலிகள் இருந்தன.

“அடடா! ரொம்ப அழகா இருக்குடா!” என்றான் கதிர்.

“இரு… நானே போட்டுவிடுறேன்” என்ற கந்தன், முதலில் பழனிதேவனுக்கும், அடுத்ததாக திருப்புறசுந்தரிக்கும் தன் கையாலேயே அந்தச் சங்கிலிகளை அணிவித்தான்.

பிறகு இரண்டு குழந்தைகளையும் ஆசையாகப் பார்த்தவன்,

“மச்சான்… இது உங்க குழந்தைகளுக்கு அவங்க மாமன் கொடுக்கிற பரிசு. எப்பவும் குழந்தைகள் கழுத்துல இருக்கட்டும். மறந்துகூட கழட்டிடாதீங்க” என்றான்.

“சரிடா மாமா!” என்று சிரித்தான் கதிர்.

கந்தன் இரண்டு குழந்தைகளின் நெற்றியிலும் முத்தமிட்டு மகிழ்ந்தான்.

அந்தச் சிறிய தங்கத் தாயத்துகள் குழந்தைகளின் கழுத்தில் அழகாக மின்ன…

விசேஷம் முடிந்ததும் வந்திருந்த அனைவருக்கும் விருந்து

பரிமாறப்பட்டது.

அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி, கதிரின் பெண் குழந்தையைப் பார்த்துவிட்டு முகம் சுளித்தார்.

“என்ன இது. ஆண் குழந்தை ராஜா மாதிரி இருக்கான். ஆனா, இந்தப் பொம்பளப் புள்ள…” என்று இழுத்தார்.

உடனே மற்றொரு பெண்மணி, “அதானே! இந்த காலத்துல நல்லா இருக்கிற பொம்பளப் பிள்ளைகளையே கரை சேர்க்குறது படாத பாடா இருக்கு. இதுல இந்தப் பொம்பளப் புள்ளைக்கு ஒரு கையில் பாதியைக் காணோமே!” என்று ஏளனமாகக் கூறினார்.

அவர்களின் பேச்சை எதிர்பாராத விதமாகக் கேட்டுக்கொண்டிருந்த கதிரின் இதயம் உள்ளுக்குள் வெடித்துச் சிதறியது.

தன் மகளைப் பற்றிய அந்தக் கொடூரமான வார்த்தைகள் அவனை நிலைகுலையச் செய்தன. அவனது கோபம் மொத்தமும் கண்மணியின் மீது திரும்பியது. தன் குழந்தைக்கு இப்படியொரு நிலைமை வரக் காரணமானவளை நினைத்ததும் அவனுக்குள் ஆத்திரம் கொழுந்துவிட்டு எரிந்தது.

அப்போது அந்தப் பெண்மணி, “பேசாம பிறந்ததுமே இந்தக் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்திருக்…” என்று தன் வார்த்தையை முடிப்பதற்குள்,

“இதுக்கு மேல உங்களுக்கு மரியாதை இல்லை. ஒழுங்கா வீட்டை விட்டு வெளியே போங்க.” என்று ஆவேசமாகக் கத்தினாள் முல்லை.

அவளது குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

அந்தப் பெண்மணியின் கையில் இருந்த கதிரின் பெண் குழந்தையைத் தன் கைகளில் வாங்கிக்கொண்ட முல்லை, குழந்தையைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

“என் குழந்தையைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

“என்னம்மா நீ. வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்படியா பேசுவ?” என்று அந்தப் பெண்மணி எதிர்த்துக் கேட்டார்.

“பேச மட்டும் இல்ல. இதுக்கு மேல என் பிள்ளையைப் பத்தி ஒரு வார்த்தை பேசினா, அடிக்கவும் செய்வேன்!” என்று முல்லை ஆவேசமாகக் கத்தினாள்.

அச்சத்தத்தில் அந்த இடமே அமைதியில் உறைந்தது.

மாற்றான் குழந்தை என்று பாராமல், கதிரின் மகளையும் தன் குழந்தையாகவே பாவித்து, அவளுக்காக முல்லை இவ்வளவு உரிமையுணர்வுடன் ஆவேசமாகப் பேசியதைக் கண்ட கதிரின் கண்கள் கலங்கின.

தன் மகளுக்காக அவள் காட்டிய அந்த அன்பு, அவனது மனதில் முல்லையின் மீது உள்ள மதிப்பை அதிகரித்து இருந்தது.

அன்றைய தினம்

விசேஷம் நல்லபடியாக முடிந்ததும், வந்திருந்த உறவினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர்.

வீட்டில் மீண்டும் இயல்பான அமைதி திரும்பியிருந்தது.

அப்போது கீதா கதிரையும், நிலாவையும் அழைத்தார்.

“கதிர், எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு. அதை நிறைவேற்றணும்னா ஒரு நாள் ராத்திரி கோவில்ல தங்கணும். இன்னைக்கே போயிட்டு வந்துடலாம்னு நினைக்கிறேன்” என்றார்.

“அதுக்கென்ன சித்தி, போயிட்டு வாங்க” என்றான் கதிர்.

“மாப்பிள்ளையையும், நிலாவையும் என்னோட கூட்டிட்டுப் போறேன்.” என்று கீதா சொல்ல, மூவரும் கோவிலுக்கு கிளம்பிச் சென்றார்கள்.

இப்போது வீட்டில் கதிர், முல்லை மற்றும் இரண்டு பச்சிளம் குழந்தைகள் மட்டுமே இருந்தனர்.

இரவு நேரம், குழந்தைகள் இருவரும் பால் குடித்துவிட்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

கதிர் சமையலறைக்குச் சென்று உணவை எடுத்து வைத்துவிட்டு, “முல்லை… சித்தி நைட் சாப்பாடு எல்லாம் பண்ணி வச்சிட்டுத்தான் போயிருக்காங்க. நீங்க சீக்கிரமா சாப்பிட்டுட்டுப் போய் படுங்க” என்றான்.

“என்னைத் தூங்க வச்சிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என்று கேட்டாள்.

அவளது கேள்வியில் கதிர் சிரித்தான்.

“குட்டீஸ் ரெண்டு பேரும் நல்லா தூங்குறாங்க. எனக்கும் போர் அடிக்குது. இவ்வளவு பெரிய வீட்டுல தனியா உட்கார்ந்து என்ன பண்றது?”

அப்போது பார்த்து வெளியே வாசலில்,‌டிங்… டிங்…‌ என்று குல்பி வண்டியின் மணி சத்தம் கேட்டது.

அந்தச் சத்தத்தைக் கேட்டதும் கதிரின் முகம் மலர, “முல்லை! குல்பி வேணுமா?” என்று கேட்டான்.

அவளோ உடனே, “ஐயையோ! வேண்டாம். பிள்ளைங்களுக்கு பால் கொடுக்கிறப்போ அதெல்லாம் சாப்பிட்டா சளி பிடிச்சிடும்” என்றாள்.

“அட, அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எப்பவாவது ஒண்ணு சாப்பிட்டா என்ன?” என்றவன், வெளியே சென்று இரண்டு குல்பிகளை வாங்கி வந்து,

ஒன்றை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கிக்கொண்ட முல்லை, “நான் குல்பி சாப்பிட்டா எனக்கு ஜுரம் வரும்னு, எப்போதாவது தான் என் மாமா எனக்கு இதை வாங்கித் தருவாரு” என்றாள்.

“அப்படியா?”

“ம்… நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது குல்பி வண்டி சத்தம் கேட்டாலே போதும். மாமாகிட்ட போய் காசு கேட்பேன். ஆனா, அவரு கடலைமிட்டாய் தான் வாங்கி தருவாரு.” என்றவள் முகத்தில் மாமனுக்கான‌ செல்லக்கோவம்.

அதைகேட்டு சிரித்த கதிர், சில நொடிகள் கடந்து,

“ஆமா. குட்டிப் பையனுக்கு நீங்க உங்க அப்பா பேரோ, இல்ல உங்க மாமா பேரோ வைக்கணும்னு நினைச்சிருப்பீங்க. ஆனா, சித்தி உங்ககிட்ட கேட்காமலேயே சாமி பேரை வச்சிட்டாங்களே. உங்களுக்கு அதுல ஏதாவது வருத்தமா?” என்று கேட்டான்.

அவள் உடனே மறுப்பாகத் தலையசைத்து, “இல்லைங்க. என் மாமாவின் முழுப் பெயர் பழனிசெல்வம் தான். அதனால் அத்தை வச்ச ‘பழனி தேவன்‘ என்ற பெயரைக் கேட்டதுமே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட கதிர்,

“ஓ… சூப்பர்! அப்போ சித்தி வச்ச பெயர்லயும் உங்க ஆசை நிறைவேறிடுச்சு!” என்றவன், அவளது முகத்தில் தெரிந்த நிறைவைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

அன்று இரவு இருவரும் இப்படிப் பல கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர்.

முல்லை தன் சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள, கதிரும் தன் கல்லூரி நாட்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான்.

அவ்வப்போது இருவரின் சிரிப்புச் சத்தமும் அந்த அறையை நிறைக்க, நேரம் சென்றதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் குழந்தைகள் இருவரும் தொட்டிலில் அசைவின்றி உறங்கிக் கொண்டிருக்க, கதிர், முல்லைக்கு இடையே இருந்த பேச்சும் மெல்லக் குறைந்து உறங்கிப் போனார்கள்.

நள்ளிரவு கதிரின் அறைக்குள் மெல்லிய மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்தது.

தொட்டிலில் படுத்திருந்த முல்லையின் குழந்தை பசிக்கான அழ ஆரம்பிக்க, வழக்கம்போல அவனுக்குப் பாலூட்ட முல்லை எழ முயன்றாள்.

ஆனால், அவளால் அசையக்கூட முடியவில்லை.

உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல அனல் அடித்தது. அவளுக்குக் கடுமையான காய்ச்சல் அடித்திருந்தது.

அவள் எழ முயற்சிப்பதைக் கவனித்த கதிர், உடனடியாக அவளருகே வந்தவன், “என்னாச்சு முல்லை?” என்று கேட்டான்.

அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அவள் கழுத்தில் கை வைத்துப் பார்த்து, “ஐயோ! ஜுரம் அடிக்குதே!” என்று பதற்றத்துடன் கூறியவன், அவளது முகத்தைப் பார்த்தான்.

“என்னங்க. பிள்ளை பசிக்காக அழுவுது…” என்று முல்லை மெல்லிய குரலில் சொல்ல,

“உங்களுக்கு ஜுரம் அடிக்குது. இப்போ பால் கொடுத்தா குழந்தைக்கும் ஜுரம் வந்துடும். நீங்க நான் தர மாத்திரையைப் போட்டுக்கிட்டு படுங்க. நான் குழந்தைக்குப் பால் பவுடர் ரெடி பண்றேன்” என்றவன், உடனடியாக எழுந்து முல்லைக்கு மாத்திரையைக் கொடுத்துவிட்டு, குழந்தைக்குத் தேவையான மாற்றுப் பாலைத் தயாரித்தான்.

அழுதுகொண்டிருந்த குழந்தையைத் தூக்கி, பொறுமையாகப் பால் கொடுத்து அதன் பசியைப் போக்கியவன், அது அமைதியானதும் தொட்டிலில் மீண்டும் படுக்க வைத்தான்.

அதன் பின்னர் முல்லையிடம் திரும்பி வர, அவள் அப்போது மார்பு வலியில் நெளிந்துகொண்டிருந்தாள்.

அவளது அவஸ்தையைப் பார்த்தவன், “என்னங்க, வேற ஏதாவது பண்ணுதா?” என்று அவளருகே அமர்ந்து கேட்டான்.

“என்னால… சரியா மூச்சு விடக்கூட முடியலங்க…” என்று அவள் வலியுடன் கூறினாள்.

அவளது நிலையை ஒரு மருத்துவராக உடனடியாகப் புரிந்துகொண்ட கதிர், அவளுக்குப் பால் கட்டியிருப்பதை உணர்ந்தான்.

காய்ச்சலின் உஷ்ணமும், மார்பகத்தில் ஏற்பட்டிருந்த கடுமையான வலியும் சேர்ந்து அவளை வேதனைப்படுத்தியது.

அந்தச் சகிக்க முடியாத வலியைத் தாங்க முடியாமல், தன் கீழ் உதட்டைப் பற்களால் இறுக்கமாகக் கடித்துக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்.

“பதறாதீங்க முல்லை. நான் பார்த்துக்கிறேன்” என்று அவளுக்குத் தைரியம் சொன்னவன், உடனடியாக வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வந்து, அதில் ஒரு மெல்லிய துணியை நனைத்துப் பிழிந்தான்.

“கொஞ்சம் வலிக்கும் முல்லை, பொறுத்துக்கோங்க” என்றபடி, அவளது சேலை முந்தானையை லேசாக விலக்கி, அந்த வெதுவெதுப்பான துணியால் மார்பின் மீது மிகவும் கவனமாக ஒத்தடம் கொடுத்தான்.

ஒரு மருத்துவரின் கரங்கள்தான் அவளுக்குச் சிகிச்சை அளிக்கின்றன என்றாலும், அவள் மனதுக்குள் ஒருவித கூச்சமும், படபடப்பும் தொற்றிக்கொண்டது.

வலியின் வீரியத்தில், முல்லை அவளறியாமல்  கையை நீட்டி, கதிரின் சட்டை முனையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

பால் வெளியேறி வலி குறைந்த அந்த நொடியில், கதிரின் மூச்சுக்காற்று அவளது கழுத்துப் பகுதியில் சூடாகப் பட்டது.

முல்லை மெதுவாகக் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

இருவரின் பார்வைகளும் மிக நெருக்கமாகக் கலந்தன.

கதிர் அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தவன், ” இந்த புடவையை மாத்திட்டு நைட்டி போட்டுக்கோங்க” என்றான்.

தன் வலியைத் அவன் வலியாக உணர்ந்து, குழந்தையையும் கவனித்துக்கொண்டு, தன்னையும் ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக்கொண்ட அவனது அக்கறை, முல்லையின் மனதை ஆழமாகத் தொட்டிருந்தது.

அவள் மனதில் மெல்லத் துளிர்விடும் இந்த உணர்வின் பெயர் காதலா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

← Previous All Chapters Next →

4 comments

Sam Sam November 7, 2026 - 2:41 pm

சூப்பரா இருக்கு 👌👌ஹாப்பி தீபாவளி Sk

ராணி November 7, 2026 - 3:52 pm

செம்ம செம்ம கீதா பாட்டிக்கும் முல்லை மாமாவுக்கும் சம்மந்தம் இருக்கும் போலயே 😂

வென்மதி November 7, 2026 - 5:54 pm

Arumai sk 🫶🫶🫶🤩🤩🤩🤩🤩🤩🤩🤩love

Yashni Benjamin November 7, 2026 - 10:11 pm

Really Nice Storyy Sk 🤩🤩🤩🤩hapy diwali SK darlu

Leave a Comment

error: Content is protected !!