அத்தியாயம் 1
காஞ்சிபுரம் பெருமாள் கோவில் பின்புறம் இருக்கும் குளக்கரையில் ஓரமாய் அமர்ந்திருந்தவன் உள்ளத்தில் என்னென்னவோ நினைவுகள். நெற்றியினை பெருவிரல் ஆட்காட்டி விரல் இரண்டையும் கொண்டு நீவியபடி பெரும் யோசனையோடு அமர்ந்திருந்தான் அவன் மனோதீரன்.
“அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க ண்ணா” என அவனருகே வந்து நின்றாள் நிலா. தீரனின் சகோதரி நிலா.
“வர்றேன் போ!” தீரன் சொல்ல,”ண்ணா!” என தயங்கியே நின்றாள் நிலா. “அத்தான் எங்க?” என தீரன் தன் தங்கை கணவனைக் கேட்க,
“சாமி முன்னாடி மாலையை வச்சு பூஜை நடந்திட்டு இருக்கு. அங்க தான் இருக்கார். நீங்களும் வந்து நில்லுங்க ண்ணா!” என்றாள்.
“எல்லாரும் வந்தாச்சா?” “ம்ம் வந்துட்டாங்க. அவங்க சைடுல அண்ணியோட அவங்க அம்மா அப்பா ரெண்டு அண்ணனுங்க மட்டும் தானே? அப்பவே வந்துட்டாங்க. இப்ப தான் போய் அண்ணியைப் பார்த்துட்டு பூ வச்சுட்டு வந்தேன்!” என்றவள் வார்த்தைக்கு வார்த்தை அண்ணி என்றதிலேயே தீரன் மனம் சுழன்றது. “அண்ணி அம்மா அப்பாவும் நம்ம அம்மா அப்பாவோட பேசிட்டு இருக்காங்க. என் வீட்டுக்காரர் கூட அண்ணியோட அண்ணனுங்க நிக்கிறாங்க. நீங்க மட்டும் தான் அங்க இல்லை. அதான் கூட்டிட்டு போலாம்னு வந்தேன்!” என மீண்டும் அவன் கவனத்தை திருப்பினாள் நிலா.
“ஹ்ம் சரி வர்றேன்” என்றவன் எழுந்து கொண்டான். “எல்லாம் சரி தானே ண்ணா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” கேட்க வேண்டும் என்று தோன்றவே கேட்டும் விட்டாள் நிலா.
“ஏன்?” தீரன் கேட்க,
“அண்ணியும் சரியா பேச மாட்டுறாங்க. நீங்க அன்னைக்கு அண்ணிகிட்ட பேசிட்டு வந்த அப்புறம் நீங்களும் ஒரு மாதிரி தான் இருக்கீங்க. அதான் கேட்டேன்!” என்றவள் சொல்லில் தலையை மட்டும் எதுவுமில்லை என்பதாய் ஆட்டினான் தீரன்.
“எதுவும்னா இப்பவே சொல்லிடுங்க ண்ணா” என்றவளுக்கு நிஜமாய் பயம் தான் அண்ணனின் வாழ்க்கையை நினைத்து.அதைப் புரிந்தவனும் சிறுபுன்னகை கொடுத்து சமாதானம் செய்தான். உடனேயே.
“கொஞ்சம் தலைவலி. அதான் உக்காந்துட்டேன். வேற ஒண்ணுமில்ல. வா!” என்றவன் முன்னே செல்ல, அதற்குமேல் எதுவும் கேட்க முடியாமல் பின்னோடு நடந்தாள் நிலா.
ஆனாலும் என்னவோ ஒன்று உள்ளுக்குள் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல ஆறு மாதங்கள் முழுதாய் இடைவெளிவிட்டு, வேண்டாம் வேண்டும் என்று பல பேச்சுவார்த்தைகளுக்கு பின் தான் இன்று நடக்க இருக்கிறது மனோதீரனின் திருமணம்.
சென்ற மாதம் கூட இந்த திருமணம் நடக்கும் என்று நிலா நினைக்கவே இல்லை. திடீரென தீரன் தான் கூறியதும் அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்று. தீரன் முதலில் புகைப்படத்தில் பிருந்தாவைப் பார்த்ததோடு சரி. இரு வீட்டாரும் பேசியபடி இருந்தது அவனுக்கும் தெரியும்.
“அண்ணி வீட்டுல சரினு சொல்லிட்டாங்க. அம்மா தான் யோசிக்குறாங்க ண்ணா!” என ஒரு நாள் அண்ணனிடம் கூறிய நிலா, அடுத்த வாரமே “அவங்க வீட்டுல நேரம் கேட்டிருப்பாங்க போல!” என்றாள் அவனிடம்.
அவனுக்கும் பெரிதாய் இதில் ஈடுபாடில்லை அதனால் கண்டு கொள்ளவும் இல்லை. வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை அறிவான் தீரன்.
“அம்மா தான் ண்ணா வம்பு பண்ணுது. பொண்ணு நல்லாருந்தா போதும்னுட்டு இப்போ மாத்தி பேசுறாங்க. பொண்ணு வீட்டுல போய் நகையை கேட்டு இப்போ அந்த பொண்ணே வேண்டவே வேண்டாம்னு சொல்லிடுச்சாம்!” என்று சொல்லும் வரை தீரன் இந்த திருமணத்தை ஏற்கவே இல்லை. அதன்பின் அன்னையை நேரே திட்டியும் விட்டான். “அசிங்கமா இருக்கும்மா. வெளில என்னை வாழத் தெரியாதவன்னு பேசிட்டு இருக்காங்க. முழுசா ரெண்டு வருஷமாகல. இப்போ உங்க பங்குக்கு நீங்களும் அடுத்தவனுக்கு வாய்ல போட ஏதுவா என்னை இன்னும் அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க. நான் கேட்டேனா உங்ககிட்ட மறுபடியும் கல்யாணம் வேணும்னு?” என அவ்வளவு பேசி இருந்தான்.
எப்போதாவது தான் கோபத்தில் இப்படி தொடர்ந்து பேசுவான். இதோ இன்றும் தந்தை சிவஞானம் முன் அன்னை விசாலாட்சியை அவன் பேசிவிட, அப்படியே அமைதியாகிவிட்டார் விசாலாட்சி.
“பொண்ணோட அண்ணன் உன்கிட்ட பேசணும்னு சொன்னானாம் தீரா. நீ விருப்பமிருந்தா பேசிப் பாரு!” என்ற சிவஞானம் விதி இருந்து நடந்தால் நடக்கட்டுமே என கூறி மனைவியை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார்.
விருப்பமெல்லாம் இல்லவே இல்லை என்றாலும் அன்னை நகைக் கேட்டு பேசியது அவனுக்குள் அத்தனை வருத்தத்தைக் கொடுக்க, அதை தெளிவுப்படுத்த வேண்டியே தன் தங்கை நிலாவின் கணவன் லோகேஷ் மூலம் பெண்ணின் மூத்த அண்ணனை சந்தித்து வருத்தம் தெரிவித்திருந்தான்.
அதன்பின் என்ன நடந்தது என்று தீரனுக்கும் தெரியாது. இரு வீட்டாரும் சமாதானமாகி இதோ இன்று தீரன் பிருந்தா திருமணம் நடைபெற இருக்கிறது. லோகேஷ் நிலா இருவரும் பேசி புரிய வைத்து தீரனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க நினைக்க, “பொண்ணுகிட்ட நான் பேசணும் முதல்ல. அடுத்து பார்த்துக்குவோம்!” என்று கூறிய தீரன் பிருந்தாவுடன் பேசிய அன்று மாலையே திருமணத்திற்கு என்று சம்மதத்தைக் கொடுத்தது இன்னும் ஆச்சர்யம் தான் அனைவருக்கும்.
ஆனால் சொல்லிவிட்டு அத்தனை யோசனையானது என்னவோ அதே தீரன் தான். மீண்டும் எதையும் அவனை சிந்திக்க விடக் கூடாது என்று நிலா தன் தந்தையிடம் கூறி உடனே திருமணத்திற்கு நாள் பார்த்து என நிலா லோகேஷ் இருவர் தான் தீரன் வீட்டில் இந்த திருமணத்திற்கு முக்கிய காரணமே.ஆனாலும் அவள் பார்த்த வரை அண்ணனின் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியாமல் இருக்க, இதில் அண்ணியாய் வரவிருக்கும் பிருந்தாவின் முகத்தில் அதீத பயம் கண்டு பயந்திருந்தாள் நிலா.
கோவில் கருவறை முன் நின்றிருந்த பெரியவர்களிடம் வந்து சேர்ந்து நின்றான் மனோதீரன்.”அங்க என்ன தனியா உக்காந்துட்ட நீ?” என கேட்டு லோகேஷ் தீரன் அருகே வர,
“சும்மா தான்” என்றவன் கைகள் தன்னைப் போல நீண்டது லோகேஷ் கையில் இருந்த அவனது ஒன்றரை வயது குழந்தையைக் கேட்டு.”மாமா!” என தாவிவிட்டாள் அவனிடம் குழந்தையும்.
பெண்ணின் அண்ணன்கள். இருவரும் மரியாதை நிமிர்த்தம் இரண்டொரு வார்த்தைகள் பேச, பெண்ணின் பெற்றோர் அங்கிருந்து நகர்ந்து மகளிடம் வந்தனர்.கடவுளை சில நொடிகள் பார்த்து நின்ற தீரன் பார்வை மெதுவே அங்கு சுழன்று தூரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த பிருந்தாவிடம் சென்று நின்றது.
வெகு எளிமையான தோற்றம் தான் அவளிடம் தென்பட்டது. தீரனும் அப்படி தான் நின்றிருந்தான் வெள்ளை சட்டையும் கருநீல பேண்டும் என. இன்று தான் அவளை இரண்டாவது முறையாய் பார்க்கின்றான். மனம் மீண்டும் எடுத்த முடிவினை எண்ணியபடி கண்கள் அவளிடம் மட்டுமே இருக்க, “என்னவும் வச்சிருக்கியா என்ன கட்டிக்க போற பொண்ணுக்கு?” என்ற லோகேஷ் கேள்வியில் பார்வையை திருப்பிய தீரன்,
“அத்தான்!” என முறைக்க,
“இல்ல அவ்ளோ தூரமா இருக்க புள்ளைய முறைச்சு பார்க்குறியே அதான் கேட்டேன்!” என்றவன் கிண்டல் புன்னகையில்,
“சும்மா இருங்க த்தான்!” என்றான் மனோதீரன்.”தலைவலினு சொன்னியாமே! உன் அக்கா இப்ப தான் சொன்னா. காபி, மாத்திரைனு எதாவது வாங்கி தரவா?” என்றான் லோகேஷ் அக்கறையாய்.
“முடிச்சு வீட்டுக்கு போகணும். அது போதும்” என்றவன் சொல்லில்,
“அங்க போனாலும் உன் அம்மா வாய் அடங்கணுமே தீரா?” என்ற லோகேஷ் தன் மாமியாரை எண்ணி பல்லைக் கடிக்க,
“வேண்டாம்னு சொன்னேன். கேட்காம இவ்வளவு தூரம் வந்தாச்சு. இனி நடக்குறதை கவனிச்சு தானே ஆகணும்?” என்றான் தீரன் தெளிவாய்.
“நானும் உன்னை நம்பி தான் இந்த பொண்ணு ஜாதகத்தை உன் வீட்டுக்கு கொண்டாந்தேன். உன் அம்மாவை நம்பி எல்லாம் இல்ல. ரொம்ப நல்ல பொண்ணு. அதிகம் பேசாது. பேச விடமாட்டாங்கனு கூட வச்சுக்கோயேன்” என்றான் லோகேஷ்.
“வேண்டாம் த்தான். இப்ப வேற எதுவும் பேச வேண்டாம். இனி நான் பார்த்துக்குறேன்!” என்றான் தீரன்.
லோகேஷ் ஒன்றை சொல்ல நினைக்க, அதை கேட்க தான் தீரனுக்கு தோன்றவில்லை. பெரிதாய் என்ன இருந்துவிடப் போகிறது? கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும் இருவருக்குமே என்ற எண்ணம் தான் தீரனுடையது.
“நானும் இப்ப எதுவும் சொல்லல. ஆனா பொண்ணை நல்லா பார்த்துக்கோ. அவ்வளவு தான்!” என்றான் லோகேஷ்.
முஹூர்த்த நேரம் கூடி வரவும் நிலா பெண்ணை அழைக்க செல்ல, தன் தாய் அருகில் நடக்க, நிலாவின் கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு நடந்து வந்து நின்ற பிருந்தாவை மனோதீரனின் அருகில் நிற்க வைத்தனர் மற்றவர்கள்.
இரு குடும்பங்கள் மட்டுமே நிறைந்திருந்தனர் திருமணத்தில். வேறு எவருக்கும் அழைப்பு இல்லை. அழைக்கவும் தீரன் சம்மதிக்கவில்லை.பிருந்தா அன்னை சந்திரா என்னவோ பிருந்தாவின் காதில் சொல்ல, கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள் பிருந்தா.
கடவுளின் முன் வைக்கப்பட்ட திருமாங்கல்யம் மனோதீரனின் கைகளுக்கு வரும் நேரம் சின்னதாய் ஒரு நடுக்கம் மனோதீரனின் உள்ளே. மனம் தன் பழைய வாழ்க்கைக்குள் நுழைய முயல்வதை உணர்ந்து அந்த எண்ணத்தை சட்டென்று உதறிக் கொண்டு மாங்கல்யத்தை கைகளில் எடுத்தவன் அருகில் நின்றவளிடம் திரும்பினான்.
கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டிருந்தவள் தொண்டைக்குழி ஏறி இறங்கும் வேகத்தில் தீரன் கண்களை சுருக்கிப் பார்க்க,”நீங்க கட்டுங்க. அவ அப்படி தான். கொஞ்சம் பயந்த சுபாவம்!” என்றார் சந்திரா.
“அதுக்குன்னு கல்யாணத்துலயுமா ம்மா? போட்டோ எடுக்கணும்ல? கண்ணைத் திறந்து பார்க்க சொல்லுங்க!” என்றான் லோகேஷ்.
இதோ கண்களின் ஓரம் கண்ணீர் திரண்டு வர, அதை லாவகமாய் வெளிவரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த பிருந்தாவை தீரனின் கண்கள் கண்டுகொண்டது.
“இருக்கட்டுங்களே தம்பி. அவ அப்படி தான். சொன்னாலும் கேட்க மாட்டா!” சந்திரா தான் அடம்பிடிப்பதாய் தோன்றியது தீரனோடு மற்றவர்களுக்கும். நிலாவினை அழைத்து மனோதீரன் பேசிக் கொண்டிருக்க,
“என்ன சம்மந்தி! நாம தான எடுத்து சொல்லணும். பயந்த மாதிரி இருக்கு பொண்ணு. நீங்க தள்ளுங்க. நிலா நீ போய் அண்ணிகிட்ட நில்லு!” என சிவஞானம் சொல்ல,
சந்திராவை மறுக்க விடாமல் நிலா உள்ளே நுழைந்து கொண்டாள் பிருந்தாவின் வெகு அருகில்.”அண்ணி! அண்ணாவைப் பார்த்தா தான் அவங்க தாலி கட்டுவாங்களாம்!” என்ற சொல்லில் விதிர்விதிர்த்து கண்களை பட்டென்று திறக்க, அவளுக்கு முன் நின்றிருந்தான் மனோதீரன்.
இருவருக்குமே கடந்த கால வாழ்க்கை என்ற ஒன்று இருந்தது தான் என்றாலும் பிருந்தாவின் கண்களில் இப்பொழுது தோன்றும் அந்த மிரட்சியும் நடுக்கமும் என்னவோ கதை சொல்லுவதை போலிருந்தது தீரனுக்கு.
அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் பிருந்தாவின் பார்வையை கொண்டு அவளை கவனித்து, அவளைப் பார்க்க வைத்து என மாங்கல்யத்தை அவளிடம் சேர்ப்பித்து தன் மனைவியாக்கி இருந்தான் மனோதீரன்.