“நான் வேணா எங்கேயாவது போய்டட்டுமா?” என்ற பிருந்தா கேள்வியில் முழுதாய் உடைந்து அவள் அருகில் சென்றவன் முதன் முறையாய் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
அவன் வேதனை அவனுக்கு. அவள் வேதனை அவளுக்கு.
ஏற்கனவே இருந்த கவலையோடு அவனின் இந்த செயலில் அதிர்ச்சியாய் நின்றவளும் அவனில் அடங்கி நிற்க, அவளை பாதுகாக்கும் ஒரு அணைப்பினை மட்டுமே கொடுத்திருந்தான் தீரன். அதில் கொஞ்சமும் மாற்றில்லாமல் தான் இருந்தது.
நீண்ட நேரம் தன் இதயத்தில் அவளை வைத்திருந்தவன் எண்ணங்கள் எல்லாம் எந்தளவுக்கு அவள் மன உளைச்சலில் இருந்தால் இப்படி கேட்டிருப்பாள் என்பதில் நிற்க, அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அவனால்.
சில நிமிடங்களில் பிருந்தா தான் அவன் இதயத்தில் கைவைத்து மிதமான வேகத்தில் அவள் தள்ளவும் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிந்து தள்ளி நின்றான் மனோதீரன்.
மீண்டுமாய் தொடர்ந்தது இருவருக்குள்ளும் என சில நிமிட அமைதி.
“நான் இந்த ராசி ஜாதகம் இதையெல்லாம் நம்புறவன் இல்ல பிருந்தா. நான் வேற மாதிரி யோசிச்சு ஒண்ணு பண்ணினேன். அது வேற மாதிரி நடந்து இப்படி இங்க வந்து நிக்கிறோம்!” என்றவன் அவள் முகம் பார்க்க, அவள் தலை தாழ்த்தி நின்றாள்.
“நம்ம தலையெழுத்து நல்லாருந்தா ஏன் நம்ம வாழ்க்கை இத்தனை நாளும் இப்படி மோசமா இருக்க போகுது சொல்லு?” என்ற தீரன்,
“அப்படி பார்த்தா என் லைஃப்ல எனக்கும் கூட தான் எந்த நல்லதும் நடந்தது இல்ல. நானா எனக்குன்னு தேர்ந்தெடுத்த வேலையை தவிர. அப்போ நானும் ராசி இல்லாதவன் தான? நான் எங்க போறது?” என்றவனை நிமிர்ந்து அவள் பார்க்க,
“நிஜமா தான் சொல்றேன்! என்னோட பாஸ்ட் மாதிரி மோசமா யாருக்கும் நடந்திருக்கவே கூடாதுன்னு வேண்டிக்குறவன் நான். அப்போ எனக்கு ஏன் அந்த பாஸ்ட் வரணும்னு கடவுள் நினைச்சாரு? அவ்வளவு மோசமானவனா நான்?” என்று கேட்கவுள் பிருந்தா தலை இல்லை என்று அசைய,
“எல்லாருக்கும் மாதிரி தான் எனக்கும் ஊரைக் கூட்டி பயங்கர ஃபோர்ஸ்ஸா என் மேரேஜ் நடந்துச்சு. ஆனா என்னாச்சு? நானும் உன்னை மாதிரி யோசிச்சிருந்தா இப்ப எங்க இருந்திருப்பேன்?” என்றான் மீண்டுமாய்.
“நானா நினைக்கலையே! எல்லாரும் இது தான் இப்படி தான்னு என் மேல ஸ்டாம்ப் அடிக்குறாங்க. அதுக்கேத்த மாதிரி நடக்கவும் இப்போ எனக்கே….” என்றவள் தலை குனிய,
“இப்போ என்ன நடந்துச்சு? உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சே அதை தான் மீன் பண்றியா?” என்றதில் வேகமாய் இல்லை என்று தலையசைத்தாள் அவள்.
“அப்புறம்?”
“அதான் உங்களுக்கு காய்ச்சல் வந்துச்சே! எந்திக்க முடியாம இருந்திங்களே?”
“ஆமா! அப்போ அது என்னோட பாவக்கணக்கு இல்லையா? மே பீ என்னோட நேரம் என்னோட ராசியா கூட இருக்கலாம் தானே?” என்றதில் மலங்க விழித்தாள் பிருந்தா.
“என்னை நம்புறியோ இல்லையோ முதல்ல உன்னை நம்பு. யாரோ எதுவோ சொன்னாங்கன்னு மத்தவங்க நம்மளை பேசலாம். அதை நாம தடுக்க முடியாது. ஆனா நாமளும் அதை அப்படியே நம்பிட கூடாது!” என்றவன் சொல்லில் அவள் அமைதியாய் நின்றாள்.
இன்னும் அவளுக்கான எந்த ஒரு பேச்சுக்கும் பதில் கூறவில்லை தான் அவன். ஆனாலும் அவன் பேச்சு ஒரு விதத்தில் மனதை ஆசுவாசம் அடைய வைத்திருந்தது.
“எனக்கு வந்தது வெறும் ஃபீவர். அதுக்கு மத்தவங்க கதை கட்டினா நீயும் அதையே பிடிச்சுப்பியா? நிலாகிட்ட பேசட்டுமானு அன்னைக்கு என்கிட்ட கேட்டவ நேத்து நிலாவை அவாய்ட் பண்ணிருக்க. இது என்ன பழக்கம் ஒருத்தர் பண்ணின தப்புக்கு எல்லாரையும் தள்ளி வைக்குறது?” என்ற தீரன்,
“அப்போ இதனால தான் என்கிட்ட கூட ஒரு வாரமா நீ சரியா பேசல? என்ன பிளான் உன்னோடது? எங்ககிட்ட பேசாம இருந்தா எல்லாம் சரியாகிடுமா?” என்றும் கேட்க, மனநிலை சரியாகி வந்து இப்பொழுது தெளிவாகியதை போல தன் மேலுள்ள தவறுகள் எல்லாம் புரிவதை போல இருந்தது பிருந்தாவிற்கு.
“அடுத்து என்ன பண்ணலாம்னு யோசி பிருந்தா. ஒருவேளை நானே உன்னை புரிஞ்சிக்கலைனாலும் என்னை நானே பார்த்துப்பேன்ற நம்பிக்கை உனக்கு வேணும். இப்படி என்கிட்ட பேசும் முன்னவே அழுதுட்டு நிக்குற” என்றவன் சொல்லில் தான் எவ்வளவு சிறுபிள்ளைத் தனமாய் தான் நடந்து கொண்டோம்! என்று தோன்றியது அவளுக்கும்.
“இப்பவும் உன்னை எந்த விஷயத்துலயும் நான் உன்னை தடுக்க மாட்டேன். உனக்கு தனியா தான் போகணும்னா கூட உன்னால தைரியமா உன் வாழ்க்கையை பார்த்துக்க முடியும்னா உன்னை நான் தடுக்க மாட்டேன்!” என்றவனை அதிர்ச்சியாய் அவள் பார்க்க,
“இல்ல என்னை நம்பி என் கூட உன்னால வாழ முடியும்னா நிச்சயம் அந்த நம்பிக்கையை நான் இன்னொரு முறை இழக்கவும் மாட்டேன். சாய்ஸ் உன்னோடது தான்!” என்றவனை இப்பொழுது கொஞ்சம் கவனித்துப் பார்த்தாள் பிருந்தா.
“என்ன வேணாலும் நீ முடிவெடுக்கலாம். ஆனா அது கோழையா நீ எடுத்த முடிவா இருக்கவே கூடாது. உனக்கு சப்போர்ட்டிவ்வா எப்பவும் நான் இருப்பேன். அதை மனசுல வச்சுட்டு முடிவெடு!” என அவன் பேசி முடிக்கும் நேரம் முழுதாய் தன்னில் இருந்தே மீண்டிருந்தாள் பிருந்தா.
“அப்புறம் இந்த வீட்டுக்கு இன்னும் நீ விருந்தாளின்னு நினைச்சுட்டு இருக்க. நீயும் இந்த வீட்டுல ஒருத்தி தான். இந்த வீட்டுல எங்க இருக்கனும், என்ன சமைக்கணும், என்ன செய்யணும்னு நீயும் எல்லா முடிவுமே எடுக்கலாம். பயப்பட எல்லாம் தேவை இல்ல. யாரும் எதுவும் சொல்லுவாங்களா. நான் இருக்கேன் என்கிட்ட சொல்லு. பார்த்துக்கலாம். பேசிக்கலாம். இல்ல நீயே கூட பேசு!” என அவ்வளவு பேசினான் அவன்.
“சாப்பிடுற நேரம் தானே? எனக்கும் வேணும் யூ கேட்டு சாப்பிடலாம். இல்ல நீயே போய் எடுத்துட்டு வந்து என்கூட இருந்து சாப்பிட்டுருக்கலாம். இப்படி பார்த்துட்டு பயந்துட்டு இருந்தா ஓரம் கட்ட தான் செய்வாங்க. அசையலைன்னா கூட பொணம்னு நினைச்சு எரிச்சு விட்டுடுவாங்க. இந்த உலகம் அப்படி” என்றவன்,
“இப்போ போய் சாப்பிட்டு வா!” என்றான் அவள் முகம் பார்த்து.
‘இப்பவா?” என ஆதற்கு அவள் அதிர்ச்சி காட்ட, தீரன் முறைக்கவும்,
“பசிக்கல அப்புறம் சாப்பிடுறேன்!” என்றாள் வேகமாய்.
“அப்போ அடுத்து என்ன பண்ணலாம்னு இப்ப நீ எனக்கு சொல்லு!” என சொல்ல, இத்தனை வேகமாய் அவளால் முடிவெடுக்க முடியவில்லை.
“எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என்னென்னவோ தாட்ல என் மனைவியை விட்டுட்டு நான் கிளம்பி போய்ட்டேன் அது பிரச்சனையாகிடுச்சு. ஓகே நான் புரிஞ்சிக்கிட்டேன் இப்போ. எனக்கு என்ன தோணுதுன்னா இனி நான் என் குடும்பம்னு என் மனைவியை நான் இருக்குற இடத்துக்கே கூட்டிட்டு போகலாம்னு நினைக்குறேன்!” என்றவன்,
“ஆனா உன்னோட முடிவும் முக்கியம் இல்லையா? அதனால கேட்குறேன் . என்ன நினைக்குற? என்ன பண்ணலாம் நாம?” என்றான் முடிவை அவளிடம் கொடுத்து.
என்ன பதில் கூற? தான் முடிவெடுத்து அது நடந்துவிடுமா? என்ற நம்பிக்கையின்றிய பார்வையை அவனிடம் கொடுத்தாள் பிருந்தா.
“நான் மத்தவங்க லைஃப்ல என்னைக்கும் குறுக்க போக மாட்டன் பிருந்தா. உன்னோட லைஃப்னா அதுல நானும் இருக்கேன் தானே? அதனால தான் கேட்குறேன். நாம தனித்தனியா முடிவெடுக்க முடியாது. நீ வேற நான் வேற இல்லைனு நாம கல்யாணம் பண்ணிகிட்டோம் தானே? அது வற்புறுத்தலால நடந்திருந்தாலும் நடந்திருச்சு தானே? அப்ப நமக்கான முடிவை நாம தான் எடுக்கணும். என்னோட முடிவு இது தான். நான் உன்னை சென்னை கூட்டிட்டு போலாம்னு நினைக்குறேன். அதே மாதிரி உனக்கும் என்னோட வர இஷ்டமா இல்லையா? சொல்லு! இன்னைக்கே இப்பவே ஒரு முடிவுக்கு வருவோம்!” என தீர்மானமாய் நின்றான் அவன்.
“நீங்க சொல்றது சரி தான். ஆனா நாம மட்டும் எப்படி முடிவு பண்ண முடியும்? பெரியவங்க என்ன சொல்றாங்கனு பார்க்கணுமே?” என்றாள் பிருந்தா.
சில நொடி அமைதியாய் யோசித்தான் தீரன். அவனும் திருமணத்திற்கு முன்பே அத்தனை உறுதியாய் வீட்டில் கூறி இருந்தான் சென்னைக்கு தன் மனைவியாய் வர இருப்பவளை அழைத்து செல்லவே மாட்டேன் என்று. அதை எப்படியும் அன்னை மறந்திருக்க மாட்டார்.
கூடவே இப்பொழுது நடந்ததை வைத்து நிச்சயம் ஒரு பிரச்சனை வீட்டில் வெடிக்க தான் போகிறது என அவனுமே அறிவான்.
“அப்போ வீட்டுல சொன்னா உனக்கு ஓகே?” தீரன் கேட்க,
“நிஜமா எனக்கு தெரியல. நான் எங்க இருக்கேன். எங்க இருக்கனும்? எதுவும் தெரியல. என்னால முடிவெடுக்க முடியல!” என அவள் கூற, அவள் மனநிலையை உணர முடிந்தது கணவனுக்கு.
“ஓகே! அப்போ உனக்காக நான் பேசினா எனக்கு சப்போர்ட் பண்ணுவியா?” தீரன் கேட்க, அதற்கும் விழித்தாள்.
“உன்கிட்ட தான் கேட்குறேன். இல்ல காலை வாரி விட்டுடுவியா?” என கேட்கவும் அதிர்ந்து அவள் பார்க்க,
“எனக்கும் என்ன பண்றதுன்னு தெரில தான். ஆனா இன்னும் உன்னை இங்க விட்டுட்டு போனா ஆளாளுக்கு பேசுவாங்க. நீயும் குழம்பிடுவ. அப்புறம் ஏற்கனவே முன்னாடி சொன்ன மாதிரி கட்டினவளைப் பார்த்துக்க தெரியாதவன்ற பேரு எனக்கு நிரந்தரமாகிடும். எனக்கு அதை எல்லாம் தாங்கிக்க முடியாது. நிச்சயம் நான் அவ்வளவு மோசமானவன் இல்ல!” என அவனின் முடிவில் உறுதியாய் இருந்தான் தீரன்.
“சொல்லு! உனக்கு என் கூட வர விருப்பமா?” என்றவனை இன்னும் அவள் பயந்து பார்க்க,
“உனக்கு பிடிக்காத எதுவும் அங்க இல்ல எங்கேயும் இனி நடக்காது. நான் நடக்க விடாம பாத்துக்குறேன். உன் விருப்பப்படி இருக்கலாம் என் மனைவின்ற பேரோட. இன்னைக்கு ஒரு நாள் டைம் எடுத்து யோசி. ஈவ்னிங் பதிலை சொல்லு. நான் வீட்டுல பேசுறேன்!” என்றவன்,
“போறதுன்னு முடிவாகிச்சுன்னா நாளைக்கு மார்னிங் நாம கிளம்புற மாதிரி இருக்கும். நம்ம கூட நிலா வந்து ரெண்டு நாள் இருப்பா உனக்கு துணையா!” என்றான்.
“எதுவும் பிளான் பண்ணி எல்லாம் வரல. ஆனா உன்னை இங்க விட்டுட்டு போக கூடாதுன்னு மட்டும் நினைச்சுட்டு தான் வந்தேன். அதனால தான் இவ்வளவும் சொல்றேன். மத்தபடி எதுவும் இதுல ஆராய்ச்சி பண்ண தேவை இல்ல. நிலா கூட உன்னோட சேஃடிக்கு தான்!” என்றதும் அவள் பதறி,
“நான் தப்பா எதுவும் நினைக்கல!” என்று சொல்ல,
“இருக்கட்டும். எல்லாமே எல்லாருக்கும் புதுசு தானே! பழகினா தானே தெரியும் யார் எப்படினு. அதுக்காக தான் நிலாவை அழைச்சுக்கலாம் சொல்றேன். யோசிச்சு சொல்லு!” என்றவன் கைகளை கண்களுக்கு மேல் வைத்து படுத்துக் கொண்டான்.