அன்றைய நாள் முழுதும் கொஞ்சம் மனதிற்கு பிடித்த விதமாய் நகர, இரவு உறங்கும் நேரமும் தீரன் அழைத்தான் மனைவிக்கு.
இருவரும் பேசிவிட்டு தூக்கத்திற்கு செல்ல, இன்றுமே ஜன்னலை திறந்து வைத்து தான் தூங்கி இருந்தாள் பிருந்தா.
முந்தைய நாள் போலவே காலை எழுந்து உணவை தயார் செய்து வைத்துவிட்டு திருமண வீட்டிற்கு கிளம்பவென்று அறைக்குள் சென்றவள் எட்டு மணிக்கு தான் வெளி வந்தாள்.
இடையில் தீரன் அழைத்துப் பேச சென்றிருக்க, வெளியே வந்தவளைப் பார்த்ததும் ஒரு நிறைவு விசாலாட்சிக்கு.
பட்டுபுடவையில் தயாராகி வந்திருந்தாள். கூடவே விசாலாட்சி தன்னிடம் இருந்த அவளின் நகைகளோடு தன் நகையினையும் கொடுத்து அணிந்து கொள்ள சொல்லி கொடுத்தார்.
இரண்டு நாட்களாய் காலை எழுந்து அவளே யாரையும் எதிர்பார்க்காமல் சமைத்து முடித்து விடுவதும் வீட்டு வேலைகளை முன்வந்து செய்வதும் என பிருந்தா மேல் ஒரு நல்லெண்ணம் உருவாகி இருந்தது விடலாட்சிக்கு.
சிவஞானம் அப்பொழுது தான் சாப்பிட்டுவிட்டு தன் வேலையை முடித்துக் கொண்டு திருமண வீட்டிற்கு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார்.
“நிலா வர்றதா சொன்னாங்களே!” என பிருந்தா கேட்க,
“அவ பொண்ணு எழுந்துக்க நேரமாகிட்டாம். மண்டபத்துக்கு வர்றேன்னு சொல்லிட்டா!” என்று சொல்லிய விசாலாட்சி தனக்கும் மருமகளுக்கும் உணவை எடுத்து வந்து அமர, பிருந்தாவும் அவரருகில் அமர்ந்து சாப்பிட்டு முடிக்கவும் இருவருமாய் கிளம்பி இருந்தனர்.
அங்கே சென்றதும் பிருந்தா ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள, விசாலாட்சி சென்று தன் அண்ணனிடமும் அவர் உறவினர்களிடமும் என பேசிவிட்டு பிருந்தாவையும் கைகாட்டிவிட்டு வந்து அவளருகில் அமர்ந்தார்.
“அவங்களே வந்து பேசினா மட்டும் பேசு போதும்” என்று அவரே சொல்லிவிடவும் தானும் நிலாவை எதிர்பார்த்து அமர்ந்துவிட்டாள்.
அடுத்த கால் மணி நேரத்தில் சூர்யாவுடன் வந்து சேர்ந்தாள் நிலாவும். அதன்புன் தான் கொஞ்சம் இலகுவாய் இருக்கவும் முடிந்தது பிருந்தாவிற்கு.
மற்றவர்களின் கண் அவ்வபோது தன்னிடம் வந்து செல்வதை கவனித்ததில் இருந்தே சங்கடமாய் தான் இருந்தது அவளுக்கு.
“ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி! இங்க பாருங்க ஒரு போட்டோ எடுக்குறேன்!” என நிலா சொல்ல,
“ரெண்டு பேருமா எடுக்கலாம்!” என்றாள் பிருந்தா.
“அதுவும் எடுப்போம். இது சிங்கிள் பிக். அண்ணாக்கு அனுப்பிடுவேன்!” என்று சொல்லவும் எதுவும் கூறாமல் பிருந்தா பார்க்க நிலா கூறியதை செய்துவிட்டே அடுத்த புகைப்படத்தை இருவருமாய் சேர்ந்து தெரியும்படிக்கு எடுத்தாள்.
“நிலா! பார்த்துக்கோ இதோ வர்றேன்!” என விசாலாட்சி நகர, சூர்யாவும் அவரோடு சென்றுவிட்டாள்.கதை பேசி அமர்ந்திருக்கும் போதே அருகில் வந்து அமர்ந்த விசாலாட்சி முகம் கடுகடுவென்று தான் இருந்தது. இருவருமே முதலில் அதை கவனிக்கவில்லை. திருமணம் முடியவுமே,
“நிலா நான் வீட்டுக்கு போறேன்!” என விசாலாட்சி சொல்ல,
“இப்பவேவா? இருங்க ம்மா. அப்புறம் போலாம். இன்னும் சாப்பிடணுமே!” என்று சொல்ல,
“ப்ச்! நீ இரு. எனக்கென்ன?” என்றவர் மருமகளைப் பார்க்க,
“நான் உங்களோடவே வர்றேன் த்தை!” என்றாள் அவள்.
“ப்ச்! இருங்க அண்ணி!” என்ற நிலா அப்போது தான் அன்னை முகம் கண்டு என்னவோ புரிந்தவள்,
“நீங்க சாப்பிடலைனா பரவால்ல. நான் அண்ணிக்கு காஃபியாவது வாங்கிக் குடுத்து கூட்டிட்டு வர்றேன்!” என சொல்லி பிருந்தாவை இழுத்து சென்றாள்.
“என்ன நிலா உன் வீட்டுக்காரர் வரலையா?” என உறவினர் கேட்கவும் நிலா அவரிடம் நின்று பேச, பிருந்தா பேப்பர் கப்பை எடுத்து காபியை இருவருக்கும் எடுக்கும் நேரம்,
“இது தான் தீரன் பொண்டாட்டியா?” என அந்த உறவினர் நிலாவிடம் கேட்பது தெரிந்தது.
“ஆமா பாட்டி! பேரு பிருந்தா!” என மகிழ்ச்சியாய் தான் கூறினாள் நிலா.
“ஹான்!” என்றவர் என்னவோ யோசனையாய் பார்த்துவிட்டு, நிலா கொஞ்சம் தள்ளி வரவும்,
“அந்த பொண்ணுக்கும் இரண்டாங்கல்யாணம் தானாம். அவனும் ரொம்ப கொடுமைப்படுத்தி வச்சானாம் இந்த புள்ளைய! அப்புறம் தான் அவனுக்கு என்னவோ அச்சிடேன்ட் நடந்து இறந்து போய்ட்டானாம்” என அவரருகில் இருந்தவரிடம் கதை கூறினார்.
நன்றாய் கேட்டது பிருந்தாவோடு நிலாவிற்கும். நிலா சட்டென முறைத்து திரும்ப நினைக்க,
“வேண்டாம் நிலா!” என கைபிடித்து தடுத்துவிட்டாள் பிருந்தா அவளை.
“அட ஆமா! நானும் கேள்விபட்டேன். இவ அத்தை என் அம்மா ஊரு தான். தீரனுக்கும் தான் அந்த பொண்ணு ஒத்து வரலையே. ரெண்டும் ஒரே மாதிரி தான். இவ தான் தீரனுக்குன்னு வாச்சிருக்கா.” என பேச்சு தொடர்ந்து,
“ம்ம்.. ரெண்டு பேரும் ரெண்டாம் தாரம். நல்ல பொருத்தம் தான். ஆனா இவளுக்கு கொஞ்சம் கூட ராசியே இல்ல போல. பாரேன், கல்யாணமாகி ஒரு வாரத்துல புருஷனை பிரிஞ்சு தனியா நிக்கிறா.” என்று சொல்லவும் மூச்சே அடங்கிவிட்டது பிருந்தாவிற்கு.
சட்டென தோன்றிய படபடப்போடு பிருந்தா நிலாவின் கையை விட்டுவிட, நிலா அடுத்த நொடி அவர்களிடம் சென்றுவிட்டாள்.
“பெரியவங்க தானே நீங்க எல்லாம்? இப்படி தான் பேசுவீங்களா? அதுவும் நாங்க இருக்கும் போதே.. என்ன ஆளுங்க நீங்க!” என கேட்க,
“நிலா!” என அவள் கைபிடித்து கூட்டி வந்துவிட்டாள் பிருந்தா.விசாலாட்சி அருகே வந்ததும்,
“போலாமா அத்தை!” என்று கேட்ட பிருந்தா கண்கள் எல்லாம் சிவந்து நிற்க, தாளவே இல்லை நிலாவிற்கு.
“பொண்ணு அழகா தான் இருக்கா. ஆனா இன்னும் நல்லா விசாரிச்சு பண்ணிருக்கலாம் நீ!” விசாலாட்சி தன் மருமகளை கைகாட்டி தன் அண்ணன் சம்மந்தியிடம் சொல்லவும் அவர் இவ்வாறு கூற, சட்டென்று முகத்தை மாற்றவும் முடியாமல்,
“என்ன சொல்றிங்க?” என்றார் விசாலாட்சி அவரிடம்.
“இந்த பொண்ணு குடும்பத்தை எனக்கு நல்லா தெரியும். பொண்ணோட அம்மாவே இவளை ராசி இல்லாத பொண்ணுனு தான் சொல்லுவா. இந்த பொண்ணோட அண்ணனுங்க வெளில கிளம்பும் போது இவளை எதிர்ல நிக்கவே விடமாட்டா இவ அம்மா. அவ முதல் கல்யாணம் கூட அவளோட ராசினால தான் நிலைக்கலனு பேசிக்கிட்டாங்க தெருவுக்குள்ள!” என்றெல்லாம் அவர் சொல்ல,
அங்கே தன் கோபத்தை காட்டிடவும் முடியாமல் முக மாற்றத்தையும் மறைக்க முடியாமல் நிற்க, எரிகிற தீயில் எண்ணெயாய் விசாலாட்சி அண்ணியும் வார்த்தைகளை விட்டிருக்க, மனம் உடைந்து தான் அங்கிருந்து நகர்ந்து வந்திருந்தார் விசாலாட்சி.
“ம்மா இந்த பிரேமாவோட பாட்டி அண்ணியை ரொம்ப பேசிட்டாங்க ம்மா!” என்ற நிலா தன் அன்னையிடம் மேலோட்டமாய் மட்டும் அங்கே நடந்ததை சொல்ல, விசாலாட்சி மண்டபத்தில் வைத்து வாயே திறக்கவில்லை.
“நான் வீட்டுக்கு போறேன். வந்தா வாங்க இல்லைனா இங்கேயே இருங்க!” என எழுந்துவிட்டார்.
அவருக்கு அத்தனை கோபம். யார் மீது என்றால் அனைவரின் மீதும். நிச்சயம் பிருந்தாவின் மீதும். மனமெல்லாம் என்னவோ செய்தது அவருக்கு.
நிலாவும் அவர்களோடேவே கிளம்பி வந்துவிட்டாள். பிருந்தா பட்டுப்புடவையை கூட மாற்றாமல் தோட்டத்து பக்கம் செல்ல நினைக்க,
“அண்ணி!” என அழைத்து அவளை தனியே விடவே இல்லை நிலா.
“என்னத்த கொண்டு வந்து வச்சிருக்கோம்னு தெரியல! வர்றவ போறவ எல்லாம் வாய்க்கு வந்ததை பேசிட்டு போறா!” என்று சமையலறையில் நின்று விசாலாட்சி சத்தமிட, இன்னும் உள்ளுக்குள் உடைந்து போனாள் பிருந்தா.
“ம்மா! அங்க நின்னு என்ன சத்தம் போடுறீங்க?” என்று கேட்கவும்,
“என்ன பாதில வந்துட்டிங்க எல்லாரும்? நீங்க ஆட்டோ ஏறினதை பார்த்து பின்னாடியே நானும் வந்துட்டேன்!” என்று சிவஞானமும் வந்திருந்தார்.
“வாய் இருக்குதுன்னு ஆளாளுக்கு என்னென்னவோ பேசுறாங்க ப்பா. என்ன உலகம்னு இருக்கு!” என்று நிலா சொல்லவும் பிருந்தா இதழ் மடக்கி அமர்ந்திருந்தாள்.
“ஏன்? என்னாச்சு?” என்ற சிவஞானம்,
“விசாலாட்சி!” என மனைவியை அழைக்க,
“ஊருல எல்லாருக்கும் என்னவோ தெரிஞ்சிருக்கு. நாம தான் ஒன்னும் தெரியாம பொண்ணைப் பார்த்து கல்யாணத்தையும் நடத்தி வச்சிருக்கோம். அங்க அண்ணனோட சம்மந்தி..” என அவர் சொல்லியதை விசாலாட்சி சொல்லவுமே பிருந்தா அதிர்ந்து பார்க்க,
“மண்டபத்துல என் அண்ணி என்ன சொன்னா தெரியுமா?” என்றவர்,
“இந்த பொண்ணு காலடி எடுத்து வச்ச நேரம் சரி இல்லயோ! ஆயிரம் இருந்தாலும் தீரன் அப்படி எல்லாம் பொண்டாட்டியை விட்டுட்டு தனியா போறவன் இல்லையேன்றாங்க. ஏற்கனவே தீரன் வாழ்க்கை எப்படி போச்சுன்னு உனக்கு தெரியாதான்னு கேட்குறாங்க. நான் என்ன பதில் சொல்ல? வாய மூடிட்டு நின்னேன்!” என்று ஆத்திரம் குறையாமல் பேச,
“ம்மா! அவங்க சொன்னா அதை இப்படி தான் மொத்தமா உடைப்பிங்களா நீங்க? அதுவும் அண்ணி முன்னாடி!” என நிலா பேச,
“நீ பேசாத டி. உன் புருசன் பார்த்த வேலை தான் இது. கொஞ்சமாவது வெளில விசாரிக்க விட்டாரா அந்த மனுசன்?” என விசாலாட்சிக்கும் தாங்க முடியவில்லை.
“நான்… நான் ஒன்னும் பண்ணல அத்தை.” என்றாள் பிருந்தா கண் கலங்கி.
“நீ ஒன்னும் பண்ணல தான்! எனக்கு தெரியும்! ஆனா ஊர் சும்மா இருக்காதுல்ல! ஏற்கனவே என் பையன் ஒருத்திகிட்ட ஏமாந்து நிக்கிறான். இப்போ மறுபடியும் உன்ன வச்சு ஏதாவது பேசுனா அவன் என்ன பண்ணுவான்? அவன் நிம்மதி என்ன ஆகும்?” என்றவர்,
“நான் உன்ன திட்டல பிருந்தா. எனக்கு பயமா இருக்கு. என் பையன் வாழ்க்கை மறுபடியும் கெட்டுடக் கூடாதுனு பயமா இருக்கு. அவங்க சொல்றது போல நீ ராசி இல்லாதவளா இருந்துட்டா…” என்று கம்மிவிட்ட குரலில் கூறியும்விட்டார்.
“விசா!” என்று சிவஞானமும்,
“ம்மா!” என்று நிலாவும் ஒருசேர அதிர்ந்து அழைக்க, சட்டென்று எழுந்து அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் பிருந்தா.
“ஏன் டி அறிவில்லையா உனக்கு? இப்படியா பேசுவ மருமக முன்னாடி? இதுவே தீரன் இருந்தா இப்படி பேசி இருப்பியா? அவன் இருந்திருக்கணும் பேசின வாயை தச்சு அனுப்பிருப்பான்!” என மனைவியை சிவஞானம் திட்டிவிட,
“கொஞ்சமாவது இங்கீதம் தெரியுதாம்மா உங்களுக்கு? மனசாட்சி இல்லையா? அடுத்தவங்க பேசினதை விடுங்க. நீங்களே அண்ணி முன்னாடி இப்படி பேசலாமா? இது அண்ணனுக்கு தெரிஞ்சா?” என நிலாவும் கேட்க,
“உனக்கென்ன டி தெரியும். என் முகத்துக்கு முன்னால எல்லாம் கேள்வி கேட்குதுங்க என்னை எனக்கு இருக்காதா என் புள்ளைய பத்தின அக்கறை?” என விசாலாட்சியும் சத்தமிட,
அறைக்குள் கால்களைக் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்திருந்த பிருந்தாவிற்கு வெளியில் பேசும் அனைத்தும் தெள்ளத் தெளிவாய் கேட்டுக் கொண்டிருந்தது.