தோட்டத்தில் வந்து தனியே அமர்ந்திருந்தாள் பிருந்தா. என்னவோ மீண்டும் வாழ்க்கை வெறுமையாகிப் போன உணர்வு.
ஒரு வாரமேனும் மகிழ்ச்சியாய் இருந்துகொள் என கொடுத்துவிட்டு திருப்பி வாங்கிக் கொண்டாரோ அந்த கடவுள் தன்னுடைய நிம்மதியை என நினைத்து வருந்தி ஏன இரவெல்லாம் தூக்கமென்பதே இல்லை பிருந்தாவிடம்.
நிலா வந்ததும்,தன்னை அழைத்ததும் ஏன நன்றாய் கேட்டாலும் அவளிடம் கூட பேசவோ தன் கவலையை கூறவோ முடியவில்லை அவளால்.
தன்னைப் பார்ப்பதையே விசாலாட்சி வெறுப்பதை பிருந்தா உணர்ந்திருந்தாள்.
இப்படி இருக்க, அவரின் மகளின் முன் தான் சென்று நின்று அதனால் அவளுக்கு ஏதேனும் என்று கூறிவிட்டால்? என்றெல்லாம் தோன்றி எண்ணங்கள் அவளை அதிகமாய் பயமுறுத்தி இருந்தது.
சிந்தனையில் ஆழ்ந்து போனவள் வீட்டினுள் நுழைந்த வண்டியின் சத்தத்தில் தெளிந்து திரும்பிப் பார்க்க, அவளை மட்டுமே பார்த்தபடி என உள்ளே நுழைந்திருந்தான் தீரன்.
வழி முழுதும் என்னவோ தான் பெரிதாய் தவறு செய்து விட்டதாய் தான் மனம் நொந்தான்.சில நாட்களாய் பிருந்தா தன்னிடம்.
சரியே பேசவில்லை என உணர்ந்தாலும் அதற்கான காரணத்தை அறிய முடியாமல் அதை தேடவும் வழி இல்லாமல் வேலையில் அவன் நேரத்தை கொடுத்திருக்க, இவ்வளவு பெரிய விஷயத்தை எதிர்பார்க்கவே இல்லை மனோதீரன்.
அதுவும் நிலா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இப்பொழுது பயத்தையும் கொடுத்தது அவனுக்கு.அவர்களை மட்டுமே நம்பி அந்த பெண்ணை விட்டு வந்திருந்தால் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்களே என்று குமைந்து போனான் தீரன்.
அவள் முகத்தை எப்படி தன்னால் பார்க்க முடியும். இப்படி திருமணம் என்ற பெயரில் அவளை அழைத்து வந்து தான் அனுபவித்த வலியா அவளுக்கு வேறொரு விதத்தில் கொடுத்துவிட்டோமே என மனமே ஆறவில்லை.
இதை என்னவென்று சரி செய்ய என பல எண்ணங்களுடன் தான் வந்து சேர்ந்தவன் வீட்டு கேட்டை திறக்கவுமே பிருந்தா தோட்டத்தில் இருந்ததைக் கண்டு கொண்டான்.
அவளுமே இவனை திரும்பிப் பார்த்தவள் எதிர்பாராத அவன் வரவில் அதிர்ச்சியும் கூடவே துளி மகிழ்ச்சியுமாய் நின்றிருந்தாள்.
வண்டியில் இருந்து இறங்கி நின்றவன் ஆழமாய் மூச்செடுத்து தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்து ஒரு அமைதியான பார்வையை மனைவியிடம் கொடுக்க, மற்றவை எல்லாம் மறந்து சிறு புன்னகை கொடுத்து கணவன் அருகில் வந்தாள் பிருந்தா.
“வாங்க!” என்றவள்,
“இன்னைக்கு வருவீங்கன்னு சொல்லவே இல்லையே! என்ன திடீர்னு?” என்றாள்.கேட்டு முடித்த பின் தான் அவனுக்கு உடல்நிலை சரியில்லாத நியாபகமும் அதற்கு தான் காரணம் என்ற விசாலாட்சி பேச்சும் நினைவில் வர, முகம் கறுக்க அமைதியாகிவிட்டாள்.
அவளின் சிறு அசைவுகளையும் கவனத்தில் கொண்டு வந்து பார்த்தபடி தான் பதிலின்றி நின்றான் தீரன்.
“நீ எப்ப டா வந்த?” என்ற விசாலாட்சி சத்தத்தில் சட்டென்று இரண்டடி பின் வாங்கி வந்து நின்றாள் பிருந்தா.
அதை கவனித்தபடி அன்னையை தீரன் திரும்பிப் பார்க்க,
“ஏன் அங்கேயே நின்னுட்ட? வீட்டுக்கு வந்தா உள்ள வரணும். வாசல்ல நின்னு என்ன உனக்கு? இது கூடவா தெரியாது?” என்ற கேள்வியில் யாரைக் கூறுகிறார் என்ற எண்ணத்தோடு தான் நின்றனர் இருவரும்.
“உடம்பு சரியாச்சா இல்லையா? இன்னும் முடியலையோ? அதான் லீவு சொல்லிட்டு வந்துட்டியோ?” அடுத்தடுத்து கேட்டபடி விசாலாட்சி உள்ளே வர, அவரோடு உள்ளே வந்தனர் கணவனும் மனைவியும்.
“எதாவது சாப்பிடுறியா?” விசாலாட்சி கேட்க,
“ஹ்ம் நீங்க சாப்பிட்டாச்சா?” என்றான்.
“அதெல்லாம் முடிஞ்சது. இரு உனக்கு எடுத்துட்டு வர்றேன்!” என்றவர் உள்ளே செல்ல, இன்னமும் தன்னிடம் கணவன் பேசவில்லை என்பதில் அவனை மட்டும் பார்த்தபடி நின்றாள் பிருந்தா.
“அவன் சாப்பிட்டு வருவான். நீ போய் உக்காரு!” தீரனுக்கு உணவை வைத்துவிட்டு பிருந்தாவிடம் கூறினார் விசாலாட்சி.
வெகு நாட்களுக்கு பின் இன்று தான் பேசவே செய்திருக்கிறார். அதை நினைத்தபடி கொஞ்சம் தூரம் சென்று அமர்ந்தவள் பார்வை மீண்டும் கணவனிடம் கவனம் வர, அவனுமே அவளை தான் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான் அதுவரை.
“உங்க அப்பாக்கும் நேத்துல இருந்து காய்ச்சல் தான். மாத்திரை வாங்கிப் போட்டுட்டு தான் வெளில போனார். நீயும் இப்படி முடியலைன்னு வந்திருக்க. யாரைப் பார்க்க? என்னவோ நேரமே சரி இல்ல!” விசாலாட்சி சொல்லவும் பிருந்தா திரும்பிக் கொண்டாள்.
“லீவு சொல்லிட்டு வந்திருக்கியா?” என மகனிடம் அவர் கேட்க,
“போகணும்!” என்று மட்டும் கூறி சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டான்.
தீரனின் திருமணமான அன்று முதல் விசாலாட்சிக்கும் தீரனுக்கும் அவ்வளவாய் சரியான பேச்சு வார்த்தைகள் இல்லை.
இடையில் கூட அவரே தோன்றியதால் தான் மகனுக்கு அழைக்கவும் பேசவுமாய் இருந்தார்.
இப்பொழுதும் கூட அவராய் தான் தீரனிடம் பேச, அவன் ஒரு அளவோடு தான் பேசிக் கொண்டிருந்தான் அன்னையிடம்.
காரணம் தெரிந்தாலும் அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை அவர்.
இப்பொழுது பிருந்தாவைப் பற்றி தான் அறிந்ததை மகனிடம் சொல்லியர் ஆக வேண்டும் என்று தான் இரண்டு நாட்களாய் சிந்தித்துக் கொண்டே இருந்தார்.
இப்பொழுது அவனே வந்திருக்கவும் பேசும் நேரத்தை எதிர்பார்த்து தான் காத்திருந்தார்.
கைகளை கழுவிக் கொண்டு வந்த தீரன் தன் அறைக்கு சென்றுவிட, அவன் செல்வதைக் கண்ட பிருந்தா தானும் செல்வதா வேண்டாமா என யோசனையில் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“கொஞ்ச நேரமாவது நிம்மதியா தூங்கி எந்திரிக்கட்டும். அங்க வசதியா இல்லை போல. அதான் இவ்வளவு தூரம் வண்டி ஓட்டிட்டு வந்திருக்கான்” போகிற போக்கில் சொல்லிக் கொண்டு விசாலாட்சி எழுந்து அவர் அறைக்கு செல்வது தெரிய, சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தாள் பிருந்தா.
வெகு சில நிமிடங்கள் தான். தான் உள்ளே செல்வது தொந்தரவாய் இருக்க கூடாதே என ஒரு எண்ணம் இருந்தாலும் அடுத்த நொடியே கணவனின் பார்வை என்னவோ சொல்வதாய் இருந்ததாய் தோன்றவும் எழுந்து கொண்டாள்.
சிறு தயக்கத்தோடு தங்கள் அறைக்கு அவள் செல்ல, கட்டிலில் அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அவள் வரவைக் கண்டான்.
அவன் பேசுவான் என எதிர்பார்த்து ஒரு ஆவல் கொண்டு பிருந்தா அவன் முகம் பார்க்க, அத்தனை கூர்மையான பார்வை தீரனிடம்.
விசாலாட்சி என்னவும் சொல்லி விட்டாரா எதுவும் பிரச்சனையா என ஆயிரம் எண்ணவோட்டங்கள் அலைஅலையாய் எழ,
“இன்னும் சரியாகலையா? ஹாஸ்பிடல் போகலையா?” என்றாள் அவனிடம் தானே.
இல்லை என்ற தலையசைப்பு மட்டும் அவனிடம் வர, எதாவது பேசினால் கூட பரவாயில்லை என சோர்ந்தவள் சில நொடிகள் நின்று பார்த்துவிட்டு அவன் பேசப் போவதில்லை என தெரியவும் வெளியில் செல்வதற்காக திரும்பினாள்.
“நான் இப்போ என்ன பண்ணனும்?” என்ற தீரன் குரலில் நின்று திரும்பியவள் புரியாமல் பார்க்க,
“என்னால முடிவெடுக்க முடியல. நான் என்ன பண்ணனும்? இல்ல நீ என்ன தான் பண்ண போற?” என்றவன் கேள்வியில் அதிர்வாய்க் கண்டாள் பிருந்தா அவனை.
“இவ்ளோ பிரச்சனை! யாரும் எதுவும் என்கிட்ட சொல்லல. என்னை என்னனு எல்லாரும் நினைக்குறிங்கனு ஏனக்கு தெரியல. இப்போ நான் என்ன பண்ணனும்னு கூட எனக்கு தெரியல!” என்று அவன் சொல்ல, இன்னும் முழுதாய் புரியவில்லை என்றாலும் இங்கு நடந்த ஏதோ ஒன்றை தான் கூறுகிறான் என்பதை புரிந்து பார்த்தாள் அவள்.
“உன்கிட்ட தானே பேசுறேன். சொல்லு!” என்றான் அவளையும்.
“என்ன கேட்குறீங்க?” என்றாள் பிருந்தா.
“கல்யாண வீட்டுல என்ன நடந்துச்சி? அம்மா உன்னை என்ன சொன்னாங்க? நிலா எப்ப வந்தா? அவளை ஏன் நீ அவாய்ட் பண்ணின?” என மொத்தமாய் அவன் கேட்க, பேச்சின்றி நின்றவள் உள்ளம் இரு மடங்காய் துடித்துக் கொண்டிருந்தது.
“நீயும் என்கிட்ட போன வாரம் என்னவோ சொல்ல வந்த! ஆனா சொல்லல. இப்ப இங்க இவ்வளவு நடந்திருக்கு. வாயே திறக்கல. நான் போன் பண்ணும் போதும் சரியா பேசல. ஆனா இப்ப எல்லா தப்பும் என்மேல. என் அத்தான் போன் பண்ணி என்னை தான் காரணம் சொல்றாங்க. அப்போ நான் தான் தப்பு?” தீரன் சொல்லவும் தலை தாழ்த்திக் கொண்டாள் பிருந்தா.
“பிருந்தா ப்ளீஸ்! இன்னும் இப்படி அமைதியா நிக்காத. அடிச்சு பிடிச்சு ஓடி வந்திருக்கேன். மத்தவங்க சொன்னதை விடு. நீ சொல்லு. என்ன நடந்துச்சு. இப்ப நான் என்ன பண்ணனும்?” என்றவன் மனதில் அத்தனை வலி.சொல்லவும் கேட்கவும் என தன்னிடம் மன உறுதி உள்ளதா என நினைக்குமளவுக்கு நிலா கூறியதிலேயே உடைந்து போயிருந்தான்.
அதையே பிருந்தா கூறிக் கேட்டால் தான் என்னாவோம் என்றிருந்தது.இதோ அவள் பேச பேச உடைந்த இதயம் தான் இன்னும் சில்லு சில்லாகிக் கொண்டிருந்தது மனோதீரனிடம்.
“இதை தான் அன்னைக்கே சொன்னேன். நீங்க போக சொன்னாலும் என்னால என் வீட்டுக்கு போக முடியாது. ஆனா நிச்சயம் உங்களுக்கு தொல்லையா மட்டும் இருக்கவே மாட்டேன்!” என்ற பிருந்தா,
“இடையில கொஞ்ச நாள் என்னவோ கனவு மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோசமா இருந்தேன். என்னை சுத்தி எல்லாமே அழகா தெரிஞ்சது. அத்தை என்கிட்ட உரிமையா பழகினாங்க. இந்த வீடு என் சொந்த வீடு மாதிரி தோணுச்சு. எல்லாம் கொஞ்ச நாள் தான்!” என்றவள்,
“நான் கூட என் அம்மா தான் என்னை தப்பா நினைச்சிட்டு இருக்காங்களோ நினைச்சேன். இப்ப நடக்குறதை எல்லாம் வச்சுப் பார்த்தா நிஜமாவே நான் ராசி இல்லாதவளோனு தோணுது. கல்யாணமாகி மூணு வாரம் ஆகல. என்னை வச்சு எவ்வளவு பிரச்சனை உங்க வீட்டுல? இவ்வளவு நாள் நல்லாருந்த உங்களுக்கும் இப்ப உடம்பு சரி இல்ல. இப்ப எனக்கே தோணுது. நிஜமா என் நேரம் அப்படிப்பட்டது தானோனு!” என்றவள் அழுகையை அடக்கி பேசி முடித்துவிடும் நோக்கில் இருந்தவள் பேசிக் கொண்டே இருக்க, இப்பொழுது தான் தன் பெரிய தவறை உணர்ந்தான் மனோதீரன்.
முதல் திருமணத்தில் ஒருத்தி செய்த தவறுக்காக இவளை இங்கே விட்டு சென்ற தன் தவறு மிகப்பெரிய பாவமாய் இப்பொழுது அவன்கண் முன் தோன்றியது.
தன்னை நிம்மதியாய் வாழ விடாதவளை தன் வாழ்வில் இருந்து நீக்கியது சரி என்றால் தன்னை நம்பி வந்த இவளை நிம்மதியாய் வாழ விடாத தான் எவ்வளவு பொல்லாதவன் என அவனை அவனே கேள்வி கேட்டு நின்றான் மனதினில்.
“உங்ககிட்ட அன்னைக்கே நான் பேசி இருந்தாலும் எனக்கு விபரீதம் புரிஞ்சிருக்காது போல. இப்ப தான் புரியுது. நான்… நான் வேணா எங்கேயாவது போய்டட்டுமா?” கண்ணீர் கன்னம் தாண்டி வடிய, கேட்டே விட்டாள் பிருந்தா.