Stories that touch hearts

Home  /  22. நதி (நதிபோகும் கூழாங்கல்)  /  Chapter 17

CHAPTER 17

நதி – 17

By Nadhi · November 20, 2026

0

“பிருந்தா!” என சமையலறையில் நின்று சத்தமாய் அழைத்தான் தீரன்.

“வந்துட்டேன்!” என சொல்லிக் கொண்டே வேகமாய் வந்தாள் பிருந்தா.

“ஸ்டவ் ஆன்ல வச்சுட்டு எங்க போய்ட்ட? பால் சிந்திடப் பாத்துச்சு!” தீரன் சொல்ல,

“கம்மி பண்ணி வச்சுட்டு தான் ட்ரையான டவல் எடுக்க போனேன்ங்க!” என்றவள் காபி தயாரிக்க எடுக்க, அவள் தலை துவட்டாமல் இருப்பதை கவனித்தவனும்,

“சரி போய் பாரு. நான் கலக்கிக்குறேன்!” என்றான்.

“இல்ல நானே பண்றேன். எனக்கும் வேணும்!” என்றவள் அவனை கவனிக்காமல் காபி தூளை எடுக்க,

” ரெண்டு பேருக்கு எவ்ளோனு எனக்கு தெரியாதா? போனு சொல்றேன்ல?” என அவள் கையிலிருந்த டப்பாவை அவன் பிடுங்கிக் கொள்ள,

“அப்போ சரி! உங்களுக்கு லைட்டா. எனக்கு ஸ்ட்ரோங்கா!” என சொல்லிவிட்டு பிருந்தா வெளிவர, செல்பவளை சிறு புன்னகையோடு பார்த்துவிட்டு காபியை கலந்தான் தீரன்.

சென்னை வந்து பத்து நாட்களை தாண்டிவிட்டது. இப்பொழுது தான் இருவருக்குள்ளும் நிறையவே தெரிந்து கொள்ள முடிந்தது.

தனித்தனியாய் அவர்களுக்கான நேரம் என்று நகர்ந்தது இப்பொழுது இருவருக்கும் செர்த்தேயான நேரமாகி இருந்தது.

தீரன் வீட்டில் இருக்கும் சமயங்களில் அவளுக்கு சமையலில் உதவுவதும், அவனுக்கென்று பார்த்து பார்த்து பிருந்தா செய்வதும் என இருவருமே இயல்பாய் ஒருவரை ஒருவர் அறிந்து தெரிந்து நட்பாகி உறவுக்குள் நுழைய முயன்று கொண்டிருந்த நேரங்கள் தான் அது.

கொஞ்சம் புதுமையாய் இருந்தாலும் அந்தந்த நேரங்களை தங்களுக்கான நேரங்களாய் இருவரும் உணர்ந்து உணர்த்தவும் தொடங்கி இருக்க, இதோ பத்து நாட்களில் அவனிடம் உரிமையாய் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றவளை எண்ணி தனியே சிரித்தபடி காபியை கலந்து கொண்டு வந்தான் தீரன்.

“என்ன சண்டே அதுவுமா காலைலயே குளிச்சு தயாரான மாதிரி இருக்கு?” தீரன் கேட்டு காபியை அவளிடம் நீட்ட,

“பக்கத்துல ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு இல்ல. அங்க போகலாம்னு தான். வந்து கோவிலுக்கு போகவே இல்ல. நேத்து மாடில துணி காயப் போட்டுட்டு சும்மா எட்டிப் பார்த்தப்ப தான் பக்கத்துலயே கோவில் இருக்குன்னு தெரிஞ்சது” என்றாள்.

“அன்னைக்கு சூப்பர்மார்க்கெட் போய்ட்டு வரும் போதே நான் காட்டினேன் தானே?” என தீரன் கேட்க,

“ஒரே நாள்ல எல்லாத்தையும் எப்படி மண்டைக்குள்ள ஏத்த முடியும்? தூரமா இருக்குறது எல்லாம் நீங்க சொல்ல சொல்ல நியாபகம் வச்சுக்க தான் ஸ்டோர் பண்ணினேன் மைன்ட்ல. இது பக்கத்துல தானேனு விட்டுட்டேன் போல!” என அவனிடமே வாயாடினாள்.

“ஓஹ்!” என்றவன் ஆச்சர்யமும் கிண்டலும் என தான் பார்த்தான் என்றாலும் வாய்விட்டு கிண்டல் செய்திடவில்லை.

இப்பொழுது தான் பேச ஆரம்பித்திருப்பவள் தனக்குள் சுருங்கிக் கொள்ளக் கூடாதே என அமைதியாய் நின்றான்.

“நீ மட்டுமா போற?” தீரனே மீண்டும் கேட்க,

“பின்ன? நீங்க இனி குளிச்சு கிளம்பி வர்றதுக்குள்ள நான் போய்ட்டு வந்துடுவேன்!” என பெரிதாய் தான் வந்தது அவள் பதில்கள் எல்லாம்.

“சேர்ந்து போகணும்னு எல்லாம் தோணல?” கேட்டேவிட்டான் என்ன தான் சொல்கிறாள் என பார்க்கலாம் என்று.

சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் முகமே மாறிவிட்டது. அதுவரை இருந்த இலகுத்தன்மை எல்லாம் மறைந்து முகம் மாற நின்றவள்,

“பக்கத்துல தானே போய்ட்டு வந்துடலாம்னு தான்…” என்றவளுக்கு அவனுக்கு தான் தனியே வெளியில் செல்வதில் விருப்பம் இல்லை போல என்ற நினைப்பு மாறி இருந்தது.

அவன் முகத்தில் சிரிப்பும் இல்லை என்பதில் அப்படி தான் என முடிவே செய்துவிட்டவள் கலங்கி விட்டாள் ஒரு நிமிடத்தில்.

“ஹே பிருந்தா!” என அவள் முகம் பார்த்து அருகில் வந்துவிட்டான் தீரன்.

“என்னாச்சு? நான் தப்பா எதுவும் கேட்கலையே!” என்றவனுக்கு என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்றே மறந்து போனது அவள் முகம் பார்த்தபின்.

“பிருந்தா! வாட் ஹப்பேன்ட்?” என இன்னும் அருகில் வந்தவன்,

“கோவிலுக்கு தானே போறேன் சொன்ன? நீ கிளம்பு. போய்ட்டு வா!” என்றான் இப்போது.

“இல்ல நீங்களும் வாங்க!” என்றவள் முகத்தில் சற்றுமுன் இருந்த அந்த ஒரு வெளிச்சம் இப்பொழுது இல்லை என்றதில்,

“ஏன்?” என்றான்.

“வேண்டாம். தனியா எங்கேயும் நான் போகல. அது பிரச்சனையாகிட்டா…” என தலையை அவள் உலுக்கிக் கொள்ள,

“ப்ச்! நீ வேற! ஒரு ஆசையா என்னையும் கூட கூப்பிடுவியானு தான் கேட்டேன். மத்தபடி எதுவும் இல்ல” என்றான் அவள் சலையில் தட்டி.

மெல்ல நிமிர்ந்து அவள் பார்க்க, “உனக்கு பிடிச்சதை பண்ணு பிருந்தா. நான் விளையாட்டா சொல்றதுக்கு எல்லாம் மீனிங் தேடாத!” என்று சொல்லவும் தான் கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகை மீண்டது அவளிடம்.

“இது இப்படியா அது அப்படியானு எல்லாருக்காகவும் பார்க்க ஆரம்பிச்சா அப்படியே போய்டும் வாழ்க்கை. இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி உன்னோட இயல்புல நீ இருந்தியே! அது தான் வேணும் இந்த வீட்டுக்கு. நான் கோவிலுக்கு போறேன்னு நீ சொன்னதுல தப்பே இல்ல. சுத்தி எங்க என்ன இருக்குனு தெரிஞ்சு வச்சுட்டு எங்க வேணா போய்ட்டு வா. நோ. ப்ரோப்லேம்!” என்று தீரன் சொல்லியவன்,

“தோணுச்சுன்னா என்னையும் கூப்பிடு. சரியான நேரமா இருந்தா நிச்சயம் நானும் வருவேன்” என்றவன் பேச்சை இப்பொழுது ரசிக்கவே கேட்டாள் பிருந்தா.

“இப்ப சொல்லு. தனியாவா போற?” அடிக் கண்கள் சிரிக்கும்படி கேட்டான் தீரன்.

“ஆமா!” என முடிவாய் கூறியவள்,

“இன்னைக்கு நான் போய்ட்டு வர்றேன். இன்னொரு நாள் ரெண்டு பேருமா போகலாம்!” என சொல்லி உடனே அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் சிரிப்புடன்.

இப்பொழுதெல்லாம் முடிந்தவரை மாலை விரைவில் வீடு திரும்புகிறான் தீரன்.

சலிப்பாய் இருந்த அனைத்தும் தேடி ரசிக்கும்படி மாறி இருக்க, மாலை காபி நேரம் முதல் சமைக்கும் நேரம் வரை இருவருமாய் பகிர்ந்து தயார் செய்தபடி பேசிக் கொண்டு நிற்கும் நேரத்தை அத்தனை விரும்பினான் தீரன்.

காலை நேரம் அவன் கிளம்பும் அவசரத்தில் இருந்தால் அவன் கிளம்புவதற்கு முன் சமையலை முடிக்கும் அவசரத்தில் இருந்தாள் பிருந்தா.

இருவரும் சேர்ந்து தான் காலை உணவை எடுத்துக் கொள்வதும் கூட. அவனை வழியனுப்பி வைத்துவிட்டு அலைபேசியில் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு நிலாவிற்கு அழைத்து பேசி என நாட்கள் எல்லாம் பழக ஆரம்பித்தது அழகாய்.

இன்னும் இன்னும் இதே நாட்கள் வேண்டும் எனும் படி ஆசை கொள்ள வைத்தனர்.

எல்லாமிருந்தும் நிம்மதியுமிருந்தும் இரவில் மட்டும் அருகருகே தலை சாய்ந்துக் கொண்டபடி ஒரு தனிமை இருவருக்குள்ளும். சிறு இடைவெளி தான் அந்த படுக்கையில் இருவருக்குமிடையே. அதை நிரப்பும் வழி தான் தெரியவில்லை.

தீரனுக்கு தான் முதலில் நெருங்கி செல்ல ஒரு தயக்கம் என்றால் பெண்ணின் நிலை சொல்லவும் வேண்டுமா?.

ஒவ்வொரு இரவையும் கடக்க மட்டுமே அத்தனை மன வலிமை தேவையாய் இருந்தது இருவருவருக்கும்.

ஒருவரை ஒருவர் அணுகும் முறை தேடி மனம் தவிக்க தான் செய்தது. ஆனாலும் காட்டிக் கொள்ள முனையவில்லை.

இயற்க்கையான ஒரு உறவின் பந்தம் உருவாகும் இடம் தான். அதை தான் சமூகம் ஒரு பெயர் கொடுத்து மாற்றி வைத்திருக்க, இங்கே இவர்களுக்குள் உருவான ஏக்கங்கள் அங்கே கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை.

இரவின் நிழல் தான் அப்படி இருக்கும். அடுத்த நாள் காலையில் எழுந்து வழக்கம் போல ஓட ஆரம்பித்துவிடும் நேரங்கள்.

தீரனுக்கும் நிஜ வாழ்க்கை நன்றாய் புரிய ஆரம்பித்து அவன் மனமும் இப்பொழுது ஒருநிலைக்கு வந்து மனைவியையும் நன்றாய் புரிந்து கொள்ள ஆரம்பிய்திருந்தான்.

அதுவே தான் பிருந்தாவிற்குமே. அவளாலும் ஒரு ஆண் மகனின் குணம் எப்படி இருக்கும் என அவளின் எண்ணத்தை எல்லாம் முன்பில் இருந்து மாற்றி உண்மையை உணர ஆரம்பித்திருந்தாள் பிருந்தாவும்.

வெள்ளி மாலையானால இருவரும் அடுத்த தெருவரை நடந்தே சென்று காய்கறியோ, பழங்களோ வாங்கி வருவதும், நினைத்த நேரத்தில் கோவிலுக்கு இருவருமாய் சென்று வருவதும்,

“இன்னைக்கு நைட்டு ஹெவியா சாப்பிட தோணுது பிருந்தா. வெளில சாப்பிட போலாமா?” என கேட்டு மனைவியை அழைத்து செல்வதாகட்டும் என அனைத்திலும் முன்னேறி பல இன்னல்களை கடந்து தான் ஒரு இயல்பு வாழ்க்கைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

ஆனாலும் உள்ளுக்குள் எச்சரிக்கை செய்யும் ஒருவித அழுத்தம் அது கடந்தகால வாழ்க்கை கொடுத்த பயமும் பாடமுமாய் இரவினில் ஒரு திரையை உண்டு பண்ணி இருந்தது இருவருக்கும்.

தீரன் அதனை அழகாய் கடந்து வந்திருந்தான். உலகில் பலவகை பூக்கள் உண்டு தானே! ஒரே ஒரு பூவின் நறுமணம் சரி இல்லை என்பதற்காக மற்ற பூக்களையும் குறை சொல்வதில், குறைத்து பதிப்பிடுவதில் நியாயமே இல்லை என்று புரிந்து தெளிந்து வந்தான்.

ஆனாலும் பிருந்தாவிடம் சிறு இளக்கம் கூட இதுவரை வெளிப்படவில்லை இரவு நேரங்களில் என்பது தான் அவனை கொஞ்சம் நீதானிக்கவே வைத்தது.

அவளுக்காக என்றே பொறுமையை கையிலெடுத்து அமைதியாய் விலகி நின்றிருந்தான்.

ஆனாலும் நாட்கள் தான் பறந்து கொண்டிருந்ததே தவிர்த்து பிருந்தாவிடம் மாற்றம் வருவதாய் இல்லை.

அவளுக்கு உணர வைக்கவும் இவனுக்கு தெரியவில்லை. மனைவியாய் அவளை கண்களால் ரசிக்கவும் என இப்பொழுது அவன் மனம் அவனை மாற்றி இருக்க, தன் சிறு பார்வை வித்தியாசமும் அவளை பாதித்து விடுமோ என்று பயந்து தான் போனான்.

அதுவுமே ஒரு சில நேரங்களில் அவனையும் மீறிய அவனின் கள்ளப் பார்வைகள் என மனைவி அவனை அதிகமாய் இம்சிக்கத் துவங்கி இருந்தாள்.

தனித் தனியே இருந்த பொழுதுகளில் கூட மனம் இப்படிக்கு இத்தனை அலைபாய்ந்தது இல்லை.

ஒரே வீட்டில் ஒரே அறையில் ஒரே படுக்கையில் எனும் பொழுது மனைவியிடம் எத்தனை நாள் தான் தள்ளி இருப்பதாம்?

மன மாற்றம் என்ற ஒன்று பேச்சில் தடுமாற்றத்தைக் கொண்டு வந்து தீரனை அவன் மனைவியே கவனிக்கும் அளவில் வந்து நின்ற போது தீரன் மூச்சுக் காற்றின் வெம்மை அவளை சேர இருந்தது.

வலியும் வேதனையும் மட்டுமா வாழ்க்கை? ஒரு மனிதன் வாழ குறைந்தபட்ச அன்பாவது கொடுக்க உலகினில் ஒருவராவது வேண்டும் தானே?அன்பை அடைந்துவிட்டால் மனம் அடுத்ததையும் தேடும் தானே?.இங்கே தீரன் அவளுக்கு உணர்த்தும் முன் அத்தனைக்கு மனதுடன் போராடி அதில் தோல்வியுற்று மனைவியை தாகமாய் தேடி நாடியிருந்தான். அவளோடு கலந்திருந்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!