Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 6

CHAPTER 6

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!

By மோ.நித்யா சபரி · October 9, 2026

3

அத்தியாயம்-6-

மாணிக்கத்தின் ஒவ்வொரு அநியாயத்துக்கும் கொடுமைக்கும் பின்னணியில், அவன் தாய் பேச்சியம்மாளின் நச்சுத்தனமான வளர்ப்புதான் நிழலாடுகிறது…. என்பதை மங்கலம்  கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அனுபவத்தில் நன்றாகவே அறிந்திருக்கவும்…… 

   “  என் காசு… நான் அப்படித்தான் சாப்பிடுவேன்….!”

என்று தீர்க்கமான குரலில் வெட்டொன்று துண்டிரண்டாகப் பதிலளித்தவளால்,​ வாயடைத்துப் போன மாமியாரிடம்,   உதட்டோரம் ஒரு ஏளனச் சிரிப்புடன், யாருக்கும் தெளிவாகக் கேட்காதவாறு,

“மறுமணம்…!!!”

என்ற வார்த்தையை மங்கலம் மெல்ல  முணுமுணுக்கவும்…..அந்த வார்த்தை பேச்சியம்மாளின் காதில் ஏதோ இடிபோல விழ…, அவள் முகம் சுருங்கி…., 

“ஏய்… என்னடி…. என்னத்த வாய்க்குள்ளயே மெல்லுறவ….? என்ன சொன்னன்னு  சத்தமா சொல்லுடி….!”  

  “ஆமா… அப்படியே சொன்னா மட்டும் உங்களுக்கு உடனே புரிஞ்சிடுமா என்ன….? பொறுங்க மாமியாரே… நேரமும் காலமும் வரும்போது நிதானமா சொல்றேன்….!”

என்று அதட்டிய மாமியாரிடம்,  அலட்சியமாக  மங்கலம்  பேச்சை வீசி எறிந்தவளை….​பேச்சியம்மாளும் விடுவதாக இல்லை. தன் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு,

“எதேதோ சொல்லி மழுப்பாதடி….! அதெப்படி ‘என் காசு’ன்னு சட்டமா சொல்லுவ நீ…? ஓஹோ… என் மவன் உன் கையில தூக்கி குடுத்துட்டா, அது உடனே உன் சொந்த காசாயிடுமாடி…?”

என்று எகத்தாளமாகக் கேட்கவும்… மங்கலத்தின் உதடுகளில் நக்கலான புன்னகை விரிந்து,

“சரிங்க மாமியாரே… ஒரு பேச்சுக்கு இதெல்லாம் உங்க மகன் காசுன்னே வச்சுப்போம்….  அத நான் எப்புடி செலவழிக்கிறேன்னு கேட்கவும் உங்களுக்கு என்ன உரிமை இருக்கு….?, அதுல தலையிட நீங்க யாரு….?”

​

“அதெப்படிடி உரிமை இல்லன்னு சொல்லுவ…? அவன் காசுன்னா அது எங்க காசுடி…!”

“அதெப்படி உங்க காசாகும்…?, அது உங்க காசும் இல்லங்கோ மாமியாரே… நீங்க மார்தட்டிக்கிற இந்த சொத்தும் உங்களுடையது இல்லயே….!,,  சொத்து… சொத்துன்னு ஆடுறீங்களே மாமியாரே… இந்த வீடும் நிலமும் நீங்க உங்க பெத்தவங்க வீட்ல இருந்து சீதனமா வாங்கிட்டு வந்ததா என்ன….? நீங்களும் இந்த வீட்டுக்கு வாழ வந்த ஒரு மருமகள் தானே….? அப்படியிருக்க இது எப்படி உங்க சொத்தாகும்…?”

என்று கர்ஜித்தவளால் ​பேச்சியம்மாள் பதிலளிக்க முடியாமல் திகைத்து நிற்க…., மங்கலம் தன் குரலை மேலும்  உயர்த்தி,

​”உண்மைய சொல்லட்டுமா மாமியாரே….? சொத்து சொத்துன்னு அடிச்சுக்காதீங்க… இந்த பூமி, சொத்து எல்லாமே அந்த பூமாதேவிக்கும் பகவானுக்கும் சொந்தமானது…. நாம யாருக்குமே இது சொந்தமில்லைன்னு பகவத் கீதையில கண்ண பரமாத்மாவே சொல்லியிருக்காரு…!,,, அப்படியிருக்க…. நீங்க தினமும் மூணு வேளை கோவில் அறைய துடைச்சு…. மெழுகி…, விளக்கு ஏத்தி….   பூவச்சு….சந்தனம் குங்குமம் விபூதின்னு வச்சு மணி கணக்கா பகவானை பூஜை பண்றீங்களே… ஆனா மாமியாரே…., அவ்வளவு சுத்தமும் பூஜையும்  பண்ணியும் உங்க உள்ளத்துக்குள்ளாக அந்த இறைவன் இல்லைங்க மாமியாரே….! நான் கோவில் அறைய மணி கணக்கா சுத்தமும் பண்ணல விளக்கேத்தி பூஜையும் பண்ணல தான்… ஆனா, என் மனசுக்குள்ளாக இறைவன் தெள்ளத்தெளிவா இருக்காருங்கோ மாமியாரே….!”  

  ”  ஏய் …. இரு …. இரு …. இது என்ன புதுசா மாமியாரேன்னு அழுத்தி நக்கலடிக்கிற…. முதல்ல அத நிறுத்துடி….”      

“ம்ஹூம் மாட்டேன்…. ஏன்னா …. நீங்க வாடி…. போடி லூசு …. அப்புடி… இப்புடி…. சொல்லுறீங்களே….???, அத நிறுத்த முடியுமா உங்களால…??,  முடியாதுல்ல… அப்ப இனி மாமியாரேன்னு தான் நானும் கூப்பிடுவேன் …. அதையும் நிறுத்த முடியாது ச்ச்சோறி மாமியாரே……”        ​

என்றுவிட்டு சிரித்த மங்கலத்தின் இந்தச் சுடச்சுட நக்கலான பதிலடியிலும், ஆழமான  கேள்விகளுக்கும் பேச்சியம்மாள் பேச்சு மூச்சின்றி ஸ்தம்பித்துப்போய் நின்றாள்….அதுவரைக்கும் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாமனார் பாண்டியன், மீசையை முறுக்கியபடி நாட்டாமை தோரணையில் முன்வந்து,

​

“என்னம்மா மருமவளே… ரொம்பத்தான் வாய் நீளுது…! அவ உனக்கு மாமியார் மட்டுமில்ல… என் பொண்டாட்டி…! அதை மனசுல வச்சு பேசு, ஆமா…!”

என்றுவிட்டு தொண்டையைச் செருமி அதட்டவும்…மங்கலம் அவரை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவள். உதட்டில் அதே நக்கலான புன்னகையுடனே,​

“ஹலோ… மிஸ்டர் டீலக்ஸ் பாண்டியன்….!”

என்று அவள் அழைத்த விதத்திலேயே பாண்டியனின் மீசை சற்றே துவண்டது….​

“நீங்கெல்லாம் தமிழ் சினிமா போலீஸ் மாதுரி கடைசி கிளைமாக்ஸ் சீன்லதான் மாமனாரே வரணும்….! நடுவுல வந்து சும்மா ‘தம்’ காட்டக்கூடாது! கதை முடியுறப்போ எண்ட்ரி கொடுத்து கேஸை முடிச்சு வைக்க வேண்டிய ஆளு நீங்க…, இடையில வந்து டயலாக் பேசுனா எப்படி…?”

என்று அசால்ட்டாக நக்கல் அடிக்கவும்.​…. இவ்வளவு நேரமாகப் பெட்டிப் பாம்பாய் அடங்கிக்கிடந்த கணவன் மாணிக்கம், தன் அப்பாவை நக்கல் அடித்ததும் சீறிக்கொண்டு பாய்ந்து,

“ஏய்! போதும்டி… ரொம்ப ஓவராதான் போற….! எங்கப்பாவையே எதிர்த்து பேசுறியா…? என்ன திமிர் இருந்தா என் முன்னாடியே எங்கப்பாவ இப்படி நக்கல் அடிப்ப நாயே..?”ன்னு கையை ஓங்கியபடி சண்டைக்கு வந்தவனை கண்டு மங்கலம் கொஞ்சமும் பயந்து பின்வாங்கவில்லை.

  “இதோடா… என்ன ஒரு அப்பா மேல பாசம்…! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நீங்களும் உங்கப்பாவும் பஞ்சாயத்துக்கு வந்த சொந்தபந்தங்கள்   முன்னாடி அவங்க சிரிக்குற அளவுக்கு வாய் சொல் வீரனை போல பேச்சாலயே அடிச்சு புடிச்சு சண்டை போட்டுக்கிட்டீங்க… அப்போ மட்டும் இந்த பாசக்கார புளளக்கு நம்ம அப்பா இவருன்னு  தெரியாம போச்சோ…? நீங்க ரெண்டு ஆம்பளைங்களும் அடிச்சுக்கலாம், புடிச்சுக்கலாம்… ஆனா ஒரு பொண்ணு நியாயத்த கேட்டு பேசினா மட்டும் பொங்கிடுவீங்களே…? பொண்ணுங்க வாய் திறக்கக்கூடாது… பேசவே கூடாதுன்னு உலக சட்ட புத்தகத்துல ஏதும் எழுதி வச்சிருக்காங்களோ…?, தெரியாம தான் கேட்குறேன்  கொஞ்சம் சொல்லுங்கோ மாமே….!!!?”
   

​என்றவள் குரல் சட்டெனக் கனத்து அவளிடமிருந்த அந்த நகைச்சுவையும் மறைந்து, ஒரு தாயின் ஆழமான வடுவும் வலியும் அவளுக்குள்ளாக வெளிப்படவும்…..

       ​”எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு மாமே… அன்னைக்கு நம்ம பையனுக்கு ரெண்டு வயசு இருக்கும்…. சின்ன புள்ள… ஏதோ ஒரு பொருள கேட்டு அடம் பிடிச்சான்… அவனுக்கு புரிய வைக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டுச்சு…. ஆனா, அதுக்குள்ள உங்க அம்மா தூண்டிவிட…, நீங்க ஓடிவந்து அந்த பச்ச மண்ண ஓங்கி அடிச்சீட்டீங்க…! அடி வாங்குன அதிர்ச்சியில அந்த பிஞ்சு  பையன் அழுதுக்கிட்டே மூச்ச அடக்கிக்கிட்டான் பாவத்த…. கொஞ்ச நேரத்துல பையன் உயிர் போயிடுமோன்னு ஒரு தாயா நான் பயந்து துடிச்சு போனேன் தெரியுமா…?!, அப்புறமா கஷ்டப்பட்டு அவன்கிட்ட போராடி, கொஞ்சி, அவனை அழுகைய நிறுத்த வச்சு தூங்க வச்சேன் தெரியுமா….?,.”​

என்றவள் தன் உதட்டை மெல்லத் தொட்டுக்கொண்டே,

​”அப்புறமா தான் மெல்ல உங்ககிட்ட வந்து, ‘ஏங்க…, எதுக்குங்க அவனை  அடிச்சீங்க…?, அவன் உடம்புக்கு முடியாத பையன் அது  தெரியாத உங்களுக்கு …?’ன்னு மென்மையாகத்தானே வந்து நின்னு கேட்டேன்…. அதுக்கும் உங்க அம்மாவும்  பின்னால இருந்து, ‘அவனையே எதிர்த்துக் கேக்குறியாடி?’ன்னு தூண்டிவிட, நீங்க பாய்ஞ்சு வந்து என் முகத்துல அடிச்சீங்க!… என் உதடும்  அதனால கிழிஞ்சு போய்  ரத்தம்  சொட்டுச்சு… எனக்கு அதுவும் நல்லா ஞாபகம் இருக்கு…! அப்பவும் உங்களுக்கு பொண்ணுங்க பேசுனா தப்புதானே…? நாங்க சாகுற வரைக்கும் ஊமையா வாழணும்…, அதானே….?


என்றுவிட்டு ​மங்கலம் இப்போது மாமனார் பாண்டியனைத் திரும்பிப் பார்க்கவும்….. அவளது பார்வையில் ஏளனமும் ஆழமான கேள்வியும் கலந்திருக்க….

​ “இதெல்லாம் கூட விடுங்க மாமனாரே… உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்….. இந்த மாமியார்! எனக்கு எந்த வழியிலயும் சொந்தமில்ல… அந்நியம் தான்….! ஆனா நீங்க….? நீங்க என் அம்மா வழி சொந்தக்காரர் தானே…? எங்க பாட்டிக்கு தாய்மாமன் முறை வருதே…! அப்படியிருக்க, உங்க பொண்டாட்டியும் மகனும் சேர்ந்து என்ன இந்த பாடுபடுத்துறப்ப… நியாயப்படி நீங்கதானே எனக்கு ஆதரவா நின்னிருக்கணும்..? என் தாய் வீட்டு சொந்தமா எனக்கு தோள் கொடுத்திருக்கணும் தானே….?, ஏன் மாமானாரே எனக்குன்னு எதுக்குமே ஆதரவா  நிக்கல…?, உங்க சொந்தத்த காப்பாத்தலனாலும் பரவாயில்ல…, மனுஷத்தனத்த கூடவா மறந்துட்டீங்க… அப்போலாம் எங்க போனீங்க நாட்டமை…..?”

என்றதும் பாண்டியனின் தலை தானாகக் குனிய…

“அம்மாடி மங்கலம் நீ சொல்றதெல்லாம் சரிதான் …!!!, ஆனா இந்த உலகமும் மனுஷங்களும் எங்க இதெல்லாம் கேட்டு திருந்தப்போறாங்க…?”ன்னு விதியே தன் தலையில் அடித்துக்கொண்டதுதான் மிச்சம்…. ஏனெனில், மனிதப் புத்தி அத்தனை சீக்கிரத்தில் மாறிவிடாதே…!

இதனால் அங்கே சற்று நேரத்தில் சூழ்ந்திருந்த கனமான நிசப்தத்தைக் கலைத்தவளாக, மங்கலமே மீண்டும் அசால்ட்டாகத் தன் பேச்சைத் தொடர்ந்தவள்,

​”ஹ்ம்ம்… எங்க விட்டேன்?”

என்று யோசிப்பது போலத் தலையைச் சாய்த்தவள்,

“ஆஹான்! மாமியாரே…, இதோ வந்துட்டேன்… நான் விட்ட அதே பாயிண்ட்டுக்கு….! ‘என் காசு என் காசு’ன்னு குதிக்கிறீங்களே… அது உங்க மகன் காசே இல்லங்க மாமியாரே…! சந்தேகமா இருந்தா…?, வேணும்னா உங்க செல்ல மகனயே கேட்டு பாருங்களேன்…???!,”

என்றுவிட்டு, நக்கலாகத் தன் கணவன் பக்கமாக ஆள்காட்டி விரலால்   மங்கலம் கையை நீட்டி சுட்டிக் காட்டவும்….. ​பேச்சியம்மாளும் அதிர்ச்சியும் சந்தேகமும் கலந்த பார்வையோடு மகனைத் திரும்பிப் பார்க்க…, ​

“ஆமாம்மா… அவ சொல்றது நிஜம்தான்…. அது என் காசும் இல்ல… அவ போட்டுருக்கிற அந்த நகையெல்லாம் நான் வாங்கித் தந்ததும் இல்லை…!”

என்று உண்மையைப் போட்டு உடைத்தான்….. அதைக் கேட்டதும் பேச்சியம்மாளுக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்து,

​”என்னடா சொல்ற..? உன் காசு இல்லயா…???,, நீ வாங்கி தந்த நகையும் இல்லைனா… அப்புறம் ஏதுடா இவளுக்கு காசு…? எங்கிருந்து வந்துச்சு இவளுக்கு நகை நட்டு…? யாருடா குடுத்தா…?”

என்று பதறிப்போய் அடுகடுக்காய்க் குரலை உயர்த்தி கேள்விகளை கேட்கவும்…..

​”அதை என்கிட்ட கேட்டா எனக்கு எப்புடி தெரியும்…? அவகிட்டயே கேளுங்கம்மா… எனக்கும் ஒண்ணுமே தெரியாது…!”

என்று சொல்லி அப்படியே கைவிரித்து ஒதுங்கிக்கொண்டான்….​ உடனே அவன், அவன் அம்மா , அப்பா ,  மங்கலத்தின் அம்மா மற்றும் அவர்களின் இரு வீட்டார் சொந்தங்கள் என குழுமியிருந்த எல்லோர் பார்வையும் மங்கலத்தின் மீது விழுகவும்…  இதான் சாக்கு என கண்டும் காணததும் போல நடித்துக் கொண்டிருப்பவளின் உதட்டில் ஒரு விசித்திரமான, கம்பீரமான புன்னகை பரவ….. அதை கண்டவர்கள்  திகைத்துப்போய் அப்படியே அவளை வைத்த கண் வாங்கமல் பார்க்கவும்…, மங்கலம் நிதானமாக இருப்பது  போல தன் சேலைத் தலைப்பைச் சரிசெய்து கொண்டு,  அவர்களை அசட்டையாக எதிர்நோக்கி நின்றவள்….

​”என்ன…?, என்ன…?, எல்லாரும் என்ன அப்புடி பாக்காதீங்க…! அப்புறம் எனக்கு வெட்கம் வெட்கமா வந்திடும்….!”

என்றுவிட்டு, ஒரு மாதிரி நயம்பட இழுத்துச் சொல்லி, தன் சேலைத் தலைப்பால் முகத்தை ஒரு பக்கமாகப் பொத்திக்கொண்டு, செல்லமாகத் தலையைச் சாய்த்து, மறுமணம்! எனவும் லேசாக அவ வாய் முணுமுணுக்கவும்….

💒மறுமணாகும் ….

♥️ஆமா இந்த மங்கலம் ஏன் ஆனா ஊனா மறுமணம் என்று முணு முணுக்கிற பாவத்த…. உங்களுக்கு தெரியுமா பட்டூஸ்…???    

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!