Stories that touch hearts

Home  /  22. நதி (நதிபோகும் கூழாங்கல்)  /  Chapter 9

CHAPTER 9

நதி – 9

By Nadhi · October 23, 2026

0

அன்றைய தினம் அறையை விட்டு வெளிவரவே இல்லை பிருந்தா.

நிலா அன்னையின் பேச்சில் வெறுப்பாகி வந்த சில நிமிடங்களிலேயே கிளம்பி இருந்தாள்.

மதிய உணவையும் சாப்பிடாமல் அறைக்குள் மட்டும் சுருங்கிக் கொண்ட பிருந்தாவின் எண்ணம் எல்லாம் கணவனானவனை தான் சுற்றி வந்தது.

அவனிடம் இந்த விஷயம் செல்லும் நேரம் அவன் தன்னை என்ன நினைப்பான்? அவன் அன்னையை போலவே அவனும் நினைத்துவிட்டால்? என சில நாட்களாய் இல்லாத எண்ணமும் பயமும் என மீண்டும் அவளை துரத்தி தனக்குள் குறுகிக் கொள்ள வைத்தது.

இரவு தானே தான் எழுந்து சென்று சாப்பிட அமர்ந்தாள். அவளருகில் தான் விசாலாட்சியும் அமர்ந்திருந்தார் என்றாலும் அவரும் மருமகளிடம் பேசவில்லை பிருந்தாவும் அவரிடம் பேச நினைக்கவில்லை.

தீரன் அழைக்கும் பொழுது மணி எட்டு இருக்கும்.

“ஹெலோ!” என்றவள் உள்ளமெல்லாம் அவனுக்கு தெரிந்திருக்கும் தானே என நடுங்க,

“கால் பண்ணவே இல்ல? கல்யாண வீட்டுல பிஸியாகிட்டியா என்ன?” என எப்பொழுதும் போலவான தீரனின் அமைதியான குரலில் தொண்டைக்குள் என்னவோ அடைபடும் உணர்வானது பிருந்தாவிற்கு.

“எப்போ வந்திங்க? சாப்பிட்டியா?” என அவன் அடுத்தடுத்த கேள்விகளுக்கு சென்றுவிட்டான்.

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது அவன் வருவதற்கு. அதற்கு மும் இவர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும். இல்லையென்றால் அவன் வந்ததும் தானே சொல்லிவிடலாம் என பிருந்தா நினைக்க,

“என்ன சைலன்ட்டா இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்றான்.

“இல்ல! சும்மா தான்!” என்றவளால் சரியாய் பேசவும் முடியவில்லை.

“எனக்கும் கோல்டு மாதிரி இருக்கு. டேப்லெட் வாங்கிட்டு வந்தேன். இனி தான் போடணும்!” தீரன் சொல்ல,

“நான் மார்னிங் பேசவா?” என்றவளிடம் என்னவோ வித்தியாசம் உணர முடிந்ததாய் இருக்க, சரி என்று வைத்துவிட்டான் தீரனும்.

அடுத்த நாளும் தீரனிடம் பிருந்தாவின் பேச்சு என்னவென்று கேட்கும் அளவுக்கு சுருங்கிவிட, அதை சரியாய் கவனிக்க முடியாத அளவுக்கு தீரனின் உடல்நிலையும் சரி இல்லாமல் போனது.

வெள்ளிக்கிழமை மாலை தீரன் வரவை எதிர்பார்த்து விசாலாட்சி காத்திருக்க, கணவன் தன்னை என்னவென்று பார்ப்பானோ நினைப்பானோ என பிருந்தா சோர்ந்து போயிருந்தாள்.

என்னவோ பெரிதாய் தோற்றுவிட்ட ஒரு உணர்வு. பெரிதாய் எதையோ இழந்துவிட்ட உணர்வு. ஒரு நான்கு நாட்கள் அந்த வீட்டில் அத்தனை ரசித்து சுற்றி வந்திருக்க, மீண்டும் தன் வாழ்வே சிறை வாழ்வு தானோ என நினைக்கும் அளவுக்கு மீண்டுமாய் மாறி இருந்தது பிருந்தா மனநிலை.

விசாலாட்சி பிருந்தாவிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்தி இருந்தார்.

இரவு ஏழு மணியைத் தாண்டி மகன் வரவில்லை என்றதும் விசாலாட்சி தான் தீரனுக்கு அழைத்தார் முதலில்.

மகனிடம் பேசுகிறார் என உள்ளிருந்த பிருந்தாவிற்கும் அவர் பேச்சு கேட்க தான் செய்தது.

“சரி பார்த்துக்கோ. முடிஞ்சா நாளைக்காவது வா!” என சொல்லி விசாலாட்சி வைக்கவும் தான் அவன் வரவில்லை என பிருந்தா புரிந்துகொள்ளும் நேரமே,

“அடுத்தவ சொல்றதை நம்பவா வேண்டாமான்னு நினைக்கும் முன்ன வாரவாரம் வீட்டுக்கு வார என் பையன் இன்னைக்கு உடம்பு சரி இல்ல வரலைன்னு சொல்லுதான். கல்யாணமாகி பொண்டாட்டியை விட்டுட்டு போனவன் முதவாட்டி இப்படி அவளை பாக்க வரும் முன்னயே தடங்கலா இருந்தா நான் என்னத்த சொல்ல. ஊர் உலகம் சும்மாவா சொல்லும்னு தானே எனக்கும் இருக்கும். இதை சொன்னா வீட்டுல இருக்கவங்களே என்னை தான் குத்தம் சொல்லும்ங்க!” என்ற விசாலாட்சி புலம்பலில் தெளிவாய் தெரிந்தது அவன் வரவில்லை என்பதோடு அதற்கு காரணமாய் தன்னை கைக்காட்டுகிறார்கள் என்று.

இதற்கு மேல் என்ன இருந்துவிடப் போகிறது தனக்கு வாழ்க்கையில் என்ற எண்ணத்தில் கண்களை மூடி அமர்ந்துவிட்டாள் பிருந்தா.

அடுத்த ஐந்து நிமிடங்களில் எல்லாம் தீரன் அவளுக்கு அழைத்துவிட்டான். வெறுமையாய் பார்த்தவள் மனம் ஓய்ந்து அழைப்பை ஏற்க,

“என்ன பண்ற பிருந்தா? வரலாம்னு தான் நினைச்சேன். ஒர்க் முடியவே லேட். இதுல ஃபீவர் வேற. உடம்பெல்லாம் வலி. சுத்தமா முடியல. இப்ப தான் தூங்கி முழிச்சேன். அதான் கால் பண்ணவும் இல்ல!” என அத்தனை மிருதுவாய் சொல்லியவன் குரலில் அமைதியாய் இருந்தவள் கன்னங்களை நனைத்தது கண்ணீர்.

“தேடுனியா?” என்றவன் வார்த்தைக்கு பதில் வராமல் இருக்க,

“என்னாச்சு? கேட்குதா?” என்றவனிடம் பேசவும் முடியாதபடி மனம் கனக்க,

“ஹெல்த்தை பார்த்துக்கோங்க!” என்று சொல்லி வைத்துவிட்டாள்.

அந்த நேரம் தான் சிறு சந்தேகம் தீரனுக்கும். ஆனாலும் யாரிடமும் கேட்க முடியாத சூழல் அவனுக்கு.

முதலில் இருந்த பிருந்தாவின் குரலுக்கும் இப்பொழுது இரண்டு மூன்று நாட்களாய் இருக்கும் அவளின் குரலுக்குமான வித்தியாசம் உணர முடிந்தது.

‘தன்னை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டாளோ!’ எனும் எண்ணத்திற்கு மேல் அவனால் அந்த நிமிடம் யோசிக்கவும் முடியவில்லை.

அடுத்த நாள் அவன் நினைத்தது போல வர முடியாமல் போக, விசாலாட்சியும் புலம்பலை நிறுத்தாமல் போக, இப்பொழுதெல்லாம் வெளியில் வருவதே இல்லை பிருந்தா.

அப்படியே வந்தாலும் தோட்டத்தில் இருந்து கொள்வதோடு சரி. தான் சமைத்தால் சாப்பிடுவார்களா என்றும் தான் அவர்கள் முன் சென்றால் என்னவும் பேசுவார்களா என்றும் என அவள் எண்ணங்கள் அவளை ஒரு செயலை செய்ய விடவே இல்லை.

விசாலாட்சியும் அவளை தேடவில்லை எந்த வேலையும் கூறவில்லை என்பதில் அவர் மனதை புரிய முடிந்தது அவளுக்கு.

செவ்வாய் கிழமை மதியம் வேலையில் இருந்த தீரனுக்கு லோகேஷ் அழைக்க,

“சொல்லுங்க த்தான்! எப்படி இருக்கீங்க?” என்றான் தீரன்.

“ஹ்ம் இருக்கோம்!” என்றவன் குரலில் சுரத்தே இல்லை.

“ஏன் த்தான் குரல் ஒரு மாதிரி இருக்கு?” என தீரன் கேட்க,

“இங்க நடக்குறதெல்லாம் உனக்கு தெரியுதா தெரியலையா? என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று லோகேஷ் கேட்க,

“ஏன் த்தான் என்னவும் பிரச்சனையா?” என்றவனுக்கு என்னவென்று புரியவே இல்லை.

“இன்னைக்கு உன் வீட்டுக்கு போயிருந்தேன்!” என்று சொல்லவுமே பிருந்தாவால் என்னவும் பிரச்சனையோ என பதறிவிட்டான் தீரன்.

அவள் தான் கடந்த சில நாட்களாய் அவனிடம் பேசவே இல்லை. கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரி விடுமுறை நாளில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என இவனுமே விட்டுவிட்டிருந்தான்.

“எனக்கு என்ன சொல்றது யாரை சொல்றதுன்னு தெரியல தீரா. உன்கிட்ட பிருந்தா எதுவும் சொல்லலையா?” லோகேஷ்.

“என்ன பிரச்சனை? அம்மாக்கும் பிருந்தாக்குமா?” என முகமே வெளிரிப் போனது அவனுக்கு.

“இப்படி நீயே வீட்டைக் கவனிக்காம இருந்தா எப்படி தீரா?” என லோகேஷ் கேட்கவும் இன்னும் பதட்டம் சேர்ந்தது அவனிடம்.

“என்னனு சொல்லுங்க த்தான். இல்ல நிலாகிட்ட குடுங்க நான் கேட்டுக்குறேன்!” என அவன் சொல்ல,

“அவளையும் இப்ப தான் திட்டிவிட்டேன். ஆளாளுக்கு மறைச்சு வச்சா குடும்பம் என்னாகுறதுன்னு பொறுப்பு யாருக்கு தான் வரும்?” என்றதில் தலை சுற்றிப் போனது தீரனுக்கு.

“நான் உன்கிட்ட கூட அவ்வளவு சொன்னேன் அந்த பொண்ணை நல்லா பார்த்துக்கோன்னு. நீ கேட்கவா செஞ்ச?” என்றெல்லாம் கேட்ட லோகேஷ்,

“அங்க உன் அம்மா உன் பொண்டாட்டி பிருந்தாவை ஒதுக்கி வச்சிருக்காங்க. கேட்க நல்லாருக்குல்ல உனக்கு?” என்று கேட்கவும் அதிர்ச்சியில் பேச்சே இல்லை அவனிடம். கூடவே புரியவும் இல்லை என்ற நிலை.

“என்னவோ போ டா. எல்லாப் பொண்ணுங்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கனு உன்னை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வச்சேன். இப்போ நீ எல்லாப் பையன்களும் ஒரே மாதிரி தான்னு பிருந்தாக்கு ப்ரூவ் பண்ணிட்டு இருக்க!” என்று சொல்ல,

“அண்ணன்கிட்டவா பேசுறீங்க?” என நிலா கேட்பதும் இங்கே தீரனுக்கு கேட்டது.

“அண்ணா!” என நிலா அழைக்கவும்,

“என்ன நிலா என்ன நடந்துச்சு?” என்றான் தீரன்.

அவ்வளவு தான். அதற்கு முன்புவரையும் தான் அவர்கள் பிரச்சனையில் தலையிட்டு பெரிதாய் வளர்த்துவிடக் கூடாது என நினைத்து அமைதியாய் இருந்த நிலா திருமண வீட்டில் நடந்ததில் இருந்து அன்னையின் பேச்சு வரை என அனைத்தையும் அவனிடம் கூற, நம்பவே முடியவில்லை அவனால்.

“அதுமட்டுமில்ல ண்ணா. இன்னைக்கு நான் நம்ம வீட்டுக்கு இவங்களோட போனேன். அப்போ அண்ணியை மறுபடியும் ரொம்ப பேசிட்டாங்க அம்மா. அவங்களால தான் உங்களுக்கு உடம்பு சரி இல்லனும் அதனால தான் நீங்க இந்த வாரம் வீட்டுக்கு வரலனும் பேசினாங்க. அண்ணி ராசி கல்யாணமான நேரம் அது இதுன்னு ஓவர் பேச்சு ண்ணா. அண்ணி ரூமை விட்டு வெளில வரவே இல்ல!” என்று சொல்ல, அனைத்தும் புரியவே சில நிமிடம் எடுத்தது தீரனுக்கு.

“கல்யாண வீட்டுல தான் இதெல்லாம் ஆரம்பிச்சது. இப்போ வரை அண்ணி நிம்மதியாவே இல்லை நினைக்குறேன். எனக்கு முன்னாடி அடிக்கடி கால் பண்ணுவாங்க. இப்ப பண்றதே இல்லை. ன்னா பண்ணினாலும் என்னனா என்னனு பேசுறாங்க. நீ கொஞ்சம் என்னனு கவனியேன்!” என்றாள் நிலா.

“நிலா இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டியா நீ? உங்களை எல்லாம் நம்பி தானே அங்க விட்டுட்டு வந்தேன் அவளை?” என சட்டென்று பேசிவிட்ட அண்ணன் சொல்லில் நிலாவும் கலங்கிவிட்டாள்.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்? யாரோ எதுவோ சொன்னா அதுக்காக அவளை ஒதுக்கி வைப்பிங்களா? அதுவும் கல்யாணமாகி ஒரு மாசம் கூட முழுசா ஆகாம!” என்றவனுக்கு அவள் தன்னிடம் பேச வந்ததும் பேசிய வார்த்தைகளும் என தலையில் கைவைத்துவிட்டான்.

இப்பொழுது நிலாவை தான் சொல்லிய வார்த்தைகளில் சட்டென்று ‘நீ மட்டும் என்ன பண்ணிட்டு இருந்த இவ்வளவு நாளும்? ஒதுக்கி வைக்கலையா என்ன?’ என்றது மனம்.

“இல்லண்ணா அன்னைக்கு அம்மாவை அந்த நிமிஷமே நான் நல்லா திட்டி விட்டுட்டு தான் வீட்டுக்கே வந்தேன். இன்னைக்கு போகும் போது தான் நீங்க இந்த வாரம் ஊருக்கு வரலைனு எனக்கு தெரியும். எங்ககிட்ட சொன்ன மாதிரி அண்ணிகிட்டயும் அம்மா எதுவும் சொல்லி கோவப்பட்டங்களா என்னனு தெரியல. அண்ணி வெளில வரவே இல்லை. கால் பண்ணியும் எடுக்கல. கோவமா இருக்காங்களானும் தெரியல. அதான் என் வீட்டுக்காரருக்கு உங்க மேலயும் அம்மா மேலயும் கோவம்” என விரிவாய் எடுத்து கூறினாள் நிலா.

“நான் வர்றேன்! வந்து பேசுறேன்னு அத்தான்கிட்ட சொல்லு!” என சொல்லி வைத்துவிட்ட தீரனுக்கு அதற்கு மேல் அங்கே வேலையே ஓடவில்லை.

வேக வேகமாய் கிளம்பி வந்துவிட்டான் ஊருக்கு. அப்படியும் நினைத்த உடன் வந்து நிற்கும் தூரமில்லையே! மாலை நான்கு மணியாகி இருந்தது அவன் வந்து சேர.தீரன் வரும் நேரம் தோட்டத்தில் தனியே அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் பிருந்தா.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!