அந்த வீட்டில் அவன் குரல் ஓங்கி ஒலித்தே அன்று தான் காண்கிறாள் பிருந்தா.
அதுவும் விசாலாட்சியை எதிர்த்து பேசுபவனைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் பயமும் இருக்க தான் செய்தது.எங்கே இதைக் கொண்டே விசாலாட்சி தன்னை சென்னை அனுப்ப மறுத்து விடுவாரோ என்று.
அதுவும் சில நொடிகள் தான். தீரன் தன்னை அழைத்து செல்வதில் அத்தனை திடமாய் இருக்கிறான் தானே என நினைவு வந்தபின் கொஞ்சம் இலகுவாய் மூச்சினை விட்டுக் கொண்டாள்.
“வர்றிங்களா இல்லையா ம்மா?” என மீண்டும் தீரன் விசாலாட்சியிடம் கேட்க,
“நீ இவ்வளவு பேசுற. உனக்கு என் கஷ்டம் புரியல. எந்த அம்மாவும் தன் பசங்க கஷ்டப்பட நினைக்க மாட்டாங்க. அதுவும் நான் இருக்குறதே உனக்காகவும் நிலாக்காகவும் தான். நீங்க ரெண்டு பேரும் புள்ள, பொண்டாட்டின்னு வாழ நான் தடையா இருப்பேன்னு நினைக்கிறியா நீ?” என்ற விசாலாட்சி,
“எனக்கு இன்னும் நீ பட்ட கஷ்டமெல்லாம் மறந்து போகல. எப்படியாவது என் பையன் வாழ்க்கைய சந்தோசமா மாத்திடுன்னு அந்த கடவுளை வேண்டி தான் நீ வேண்டாம்னு சொன்னதை எல்லாம் கேட்காமல் உனக்கு இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணினேன் நான்” என்றார்.
“ம்மா! நான் உங்களை அதுல எல்லாம் தப்பு சொல்லலையே! எனக்கு தெரியும். நான் சொல்றது இப்ப இந்த வீட்டுல நடக்குற பிரச்சனையை. அதுவும் இனி இந்த பிரச்சனை எதுக்கும் நான் தலையிட விரும்பல என் மனைவியை நான் கூட்டிட்டு போறேன்னு தான் சொல்றேன். உங்களையும் கூப்பிடுறேன் எங்களை வாழ வைக்க. புரியலையா உங்களுக்கு?” என்றான் தீரனும் கொஞ்சம் வேகமாய்.
“அதை நீ சாதாரணமா பண்ணினா தெரியாதே தீரா. நீ என் மேல இருக்குற கோவத்துல இல்ல இப்ப அவளை கூட்டிட்டு போக வந்திருக்க? அப்போ நான் தப்புன்னு சொல்ற மாதிரி தானே இருக்கு? என்னால இவளுக்கு எந்த பிரச்சனையும் வந்துட கூடாதுன்னு தானே நீ கூட்டிட்டு போறேன்னு நிக்குற?” என்ற அன்னை சொல்லில் தலையில் கைவைத்துவிட்டான் மனோதீரன்.
“நீயும் எங்க அந்த வாழ்க்கை மாதிரி ஆகிடுமோன்னு பயந்து தானே இவளை இங்க விட்டுட்டு போன? இப்போ மட்டும் எதுவும் மாறிடுச்சா என்ன? என்னால தான்னு நீ சொன்னா… சரிப்பா இனி உன் பொண்டாட்டியை நான் எதுவும் கேள்வி கேட்கல. குத்தம் சொல்லல. அவ சமைக்குறதை நான் சாப்பிட்டு இந்த வீட்டுல ஒரு ஓரமா நான் இருந்துக்குறேன். அவ இங்கேயே இருக்கட்டும். இனி இது அவ வீடு. அவ வீட்டுல நான் இருந்துக்குறேன்!” என்று விசாலாட்சி சொல்ல,
“ம்மா!” என எழுந்துவிட்டான் தீரன்.”நீங்க பிரச்சனையை பெருசாக்குறீங்க!” என சொல்ல,
“ம்மா!” என நிலாவும் வீட்டினுள் நுழைந்திருந்தாள் அன்னையை முறைத்தபடி.
“உன்னால தான் டி எல்லாம். எனக்கு என்ன பேர் தெரியுமா இப்போ?” என மகளிடம் திரும்பிவிட்டார்.
“ஆனா நாம எல்லாம் வெறும் மனுஷங்க தான்னு நீங்க நிரூபிக்கிறீங்க இல்ல?” என்ற நிலா,
“அவன் இப்பவாச்சும் நிம்மதியா இருக்கட்டும்னு நினைக்க முடியலை உங்களுக்கு. அவனோட கடந்த காலத்துல இருந்த பொண்ணை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியல. அவளால டார்ச்சர். இதோ இப்போ அப்பாவியா ஒரு பொண்ணு வந்ததும் உங்க பகுமானத்தை அந்த பொண்ணுகிட்ட காட்டுறிங்க. உங்களால டார்ச்சர். ரொம்ப நல்லாருக்கு!” என்ற நிலாவிற்கு இமேஜ் நடந்தது முழுதாய் எல்லாம் தெரியாது.
வீட்டினுள் நுழையும் நேரம் விசாலாட்சி பேசியதைக் கேட்டபடி நுழைந்தவள் அன்னையை சத்தமிட்டாள்.
“அவன் நிம்மதியா இருக்கணுமா வேண்டாமா. இது தான் இப்ப கேள்வி!” என்ற நிலா,
“நீங்க சொன்னாலும் சொல்லைனாலும் இது அண்ணி வீடு தான். நீங்களும் நானும் அவங்க சொல்றதை தான் கேட்கணும். ஏன் பையன் வீடுன்னு சொல்ல என்ன உங்களுக்கு?” என அடுத்தடுத்து அவள் பேச,
“நிலா விடு!” என்றுவிட்டான் தீரன்.
பிருந்தாவிற்கு தன்னைக் கொண்டு தானே இத்தனை பிரச்சனை என சங்கடமாயும் இருந்தது அதே நேரம் கவலையாகவும் இருந்தது.
“நீ என்ன இந்நேரம்? அத்தான் வந்திருக்காங்களா?” என தீரன் நிலாவிடம் கேட்க,
“எப்போ கிளம்புறோம் கேட்டுட்டு போக தான் வந்தேன். அவங்க வெளில போயிருக்காங்க. இப்ப என்ன தான் வேணுமாம் அம்மாக்கு?” என்றாள் அவளும்.
“சென்னைக்கு கூப்பிட்டேன். அதுக்கு தான் இவ்ளோ பேச்சு!” என தீரன் சொல்ல,
“அப்பா தான் அம்மா வேண்டாம்னு சொன்னாங்க இல்ல? அப்புறம் ஏன் கூப்பிடனும்?” என்றவள் சொல்லில் விசாலாட்சி இன்னும் முறுக்கிக் கொள்ளப் பார்க்க,
“மனசார ஆசீர்வதிக்க தெரிஞ்சவங்களை தான் எப்பவும் கூட வச்சுக்கணும். அம்மாக்கு புத்தி கெட்டுப் போச்சு. பேரன் பேத்தினு உன் பிள்ளையை தூக்கி கொஞ்ச வரும்ல.. அப்ப பாத்துக்குறேன்!” என்று நிலா சொல்ல,
“நிலா! மார்னிங் கிளம்பனும். போய் அதுக்கு தயாராகு. பேசிக்கலாம். இப்ப கிளம்பு!” என்று தீரன் தான் அனுப்பி வைக்கும் நிலையானது.
கைகளைப் பிசைந்து கொண்டு பிருந்தாவும் நிற்க, அவளைக் கண்டவன் “போ!” என மிக மெதுவாய் சொல்லவும் விசாலாட்சியைப் பார்த்துவிட்டே சென்றாள் அவள்.
“மார்னிங் வர்றதா இருந்தா நீங்களும் ரெடியாகி வாங்க ம்மா!” என அன்னையிடமும் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் தீரன்.
அவனுக்குமே இப்பொழுது கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலை தான்.
நிஜமாய் இன்னும் மனம் பழையதில் இருந்து மீண்டு வந்து விட்டதா என்றால் அந்த கேள்விக்குறி நீங்கவே இல்லை.
அதற்காக தன்னை திருமணம் செய்து வந்தவள் பாதுகாப்பும் பொறுப்பும் தன்னிடம் என உணர்ந்தவன் தான் துணிந்து முடிவை எடுத்திருந்தான்.
தங்களின் வாழ்க்கை எவ்வாறு அமையும் எப்படி அமைத்துக் கொள்ளப் போகிறோம் என எண்ணங்கள் இன்னும் அவனை சுழற்றத் தான் செய்தது.
விதியின் கையில் அனைத்தையும் கொடுத்து அந்த பாதையிலேயே வாழ்க்கையையும் கொண்டு செல்ல நினைத்து நடந்தான்.
அன்றைய இரவு முழுதாய் உறக்கம் இல்லை பிருந்தாவிற்கு. விடிந்தால் இங்கிருந்து கிளம்ப வேண்டும். அடுத்து மனோதீரன் தான் என தாங்கள் மட்டுமாய் ஒரு வாழ்க்கை.
அவளுக்குள்ளும் அதே நினைவுகள் தான் ஓடிக் கொண்டிருந்தது.
என்னவென்று இந்த வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லப் போகிறோம், என்ன நம்பிக்கையில் சென்னை செல்ல சம்மதித்தோம் என எதுவும் தெரியாமல் தான் சம்மதித்து கிளம்பியும் இருந்தாள் அவனுடன்.
விசாலாட்சி அவர்களுடன் செல்லவில்லை. அதற்காக கோபம் கொடுத்து பேசாமலும் இல்லை.
அனைவரும் கிளம்பும் நேரம் வாசல் வரை வந்து நின்று வழியனுப்பி வைக்க,
“வர்றேன் த்தை!” என சொல்லி அவர் காலில் சட்டென விழுந்து எழுந்தாள் பிருந்தா.
அதற்க்கும் ஒரு தலையசைப்பை கொடுத்து பார்த்தபடி நின்றுவிட்டார் அவர்.
“தனியா இருந்தா தானா எல்லாம் தெரியும். பேசாம கொஞ்ச நாள் இந்த பக்கம் வராம சென்னைலயே இருங்க ரெண்டு பேரும். அப்போ தான் தெரியும் அருமை பெருமை எல்லாம்!” என நிலா அன்னையை தாளித்தபடி தான் உடன் சென்றாள்.
சென்னையில் தீரன் வீட்டிற்கு சென்று சேர இரண்டு மணி நேரத்திற்கு மேலும் எடுத்தது.
நிலா தன் வீட்டிலிருந்து எடுத்து வந்த தட்டில் குங்குமம் வைத்து ஆரத்தி கரைத்து என தீரன் பிருந்தாவிற்கு ஆலம் சுற்றி தான் வீட்டிற்குள் செல்ல வைத்தாள்.
அதில் இன்னும் இன்னும் நிலாவின் மேல் மதிப்பும் அன்பும் மரியாதையும் என கூடி இருந்தது பிருந்தாவிற்கு.
விசாலமான வீடு. தீரன் கூறியதை போல வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அத்தனை தூசியும் அழுக்கும் என பார்க்கவே மலைப்பாய் இருக்க, மனைவியை திரும்பிப் பார்த்தான் தீரன். அவளும் அந்நேரம் கணவனைப் பார்க்க,
“நேத்தே வந்து கிளீன் பன்னிருப்பேன். இப்ப பாரு!” என அவளிடம் தீரன் சொல்ல,
“அதனால என்ன? நீங்க அண்ணாவை கூட்டிட்டு வெளில போய்ட்டு வந்தா நான் தனியாவே எல்லாத்தையும் பார்த்திடுவேன்!” என்றாள் உடனேயே பிருந்தாவும்.
“அப்போ நாங்க எதுக்கு வந்தோமாம்?” என குங்குமம் கரைத்த நீரை வெளியில் கொட்டிவிட்டு நிலாவும் வர,
“சபாஷ்! சரியான போட்டி! இப்போ ஆளுக்கொரு வேலையா பாருங்க பார்ப்போம். மாப்பிள்ளை வா! நாம போய் ஒரு டீ குடிச்சுட்டு வருவோம்!” என தீரனை அழைத்தான் லோகேஷ்.
கூடவே குழந்தையையும் அழைத்து சென்றுவிட, பெண்கள் இருவரும் வேலையை கவனித்தனர்.
அவ்வளவு எளிதாய் எல்லாம் இல்லை வேலைகள். அங்கிருந்து வந்தபின் இத்தனை மாதங்களில் அந்த வீட்டுப் பக்கமே தீரன் செல்லவில்லை என்பதில் மோசமாய் தான் இருந்தது.
“முடிஞ்சா இந்த தீபாவளிக்கு பெய்ண்ட் பண்ண சொல்லிடலாம் அண்ணி. அப்போ தான் இன்னும் நீட்டா இருக்கும்!” என நிலா சொல்ல தலையை மட்டும் அசைத்தாள் பிருந்தா.
இரண்டு படுக்கையறை, ஹால், சமையலறை, என சின்னதாய் இருந்தாலும் அழகாய் இருந்தது பார்க்கவே.
இதில் பாதியில் இணைந்து கொண்ட தீரன், லோகேஷ் இருவரும் அங்கிருந்த சோஃபா முதல் சின்ன சின்ன பொருட்களை எல்லாம் வெளியில் தூக்கி வந்து வைத்து தூசி தட்டி உதவி செய்ய, மதியவேளையை தாண்டி எடுத்துக் கொண்டது வேலை.
மதிய உணவைக் கூட தீரன் வெளியில் சென்று வாங்கி வந்து கொடுத்துவிட்டான்.
“நான் தான் சமைக்குறேன் சொன்னேனே!” என பிருந்தா சொல்ல,
“இருக்கட்டும் சிஸ்டர். இனி தினமும் சமைக்க தான் போறீங்க. இவ்ளோ வேலை பார்த்த உங்களுக்கு என்ன பண்ணனும்னு மாப்பிள்ளைக்கு தெரியாதா” என்று லோகேஷ் கூற,
“அதானே!” என்றாள் நிலாவும் குழந்தைக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டபடி.
அன்றைய நாள் முழுதும் வீட்டை ஒழுங்குப்படுத்துவதிலேயே சென்றது.
அடுத்த நாள் கிளம்பிவிட நினைத்த நிலாவும் அவர்களை அங்கே குடிவைக்கவென்று முழுதாய் அனைத்து வேலைகளையும் முடித்து வைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தாள்.
ஒருவருக்கு ஒருவர் உதவி, பேசி, சிரித்து என அன்றைய தினம் இரவு பதினோரு மணி வரை வேலைகளோடு நேரமும் நன்றாய் சென்றது நால்வருக்கும்.
“இதை தான் நேத்து தனியா வந்து முடிக்க நினைச்சியா நீ?” என லோகேஷ் தீரனை கேட்க,
“இவ்ளோ வேலை இருக்கும்னு நானும் நினைக்கல த்தான். நல்லவேளை அவசரப்பட்டு தனியா மாட்டிக்கல!” என சிரித்தான் தீரனும்.
குழந்தை நிலா மடியில் தூங்கி இருக்கவும் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல, லோகேஷ் அவர்களோடு சென்றுவிட்டான்.
ஹாலில் தீரனும் பிருந்தா ஒருவரை ஒருவர் மற்றவர் அறியாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.