அத்தியாயம் – 32
ஜோதா அக்பர் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து, பிறகு அவர்களுடைய வாழ்க்கை வசந்தமாக மாறியது. வாழ்கை நல்ல திசையை நோக்கித் திரும்பும் போது அக்பருடைய அம்மா இறந்துவிட்டார்கள். தன்னுடைய ஆணிவேர் சிதைந்ததைத் தாங்க முடியாத சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தார் அக்பர். அதிலிருந்து மீண்டு வாழ்கை சந்தோஷத்தைத் தேடி ஓடியதிலே ஏழு வருடம் முடிந்து விட்டது.
எழு வருடம் முடிந்த பிறகும்கூட ஒரு குழந்தையைக் கொடுத்து ஆசிர்வதிக்க அந்தக் கடவுளுக்கு மனம் வரவில்லை. எழு வருடமாக உற்றார் உறவினரிடத்தில் ராசியில்லாதவள் எனப் பெயரெடுத்தாள் ஜோதா. இவளைத் திருமணம் செய்த பிறகு மறக்கமுடியாத விபத்து, கடன் தொல்லை, அம்மாவின் இழப்பு அதைத் தொடர்ந்து குழந்தையின்மை என உனக்கு சுமைக்கு மேல் சுமைதான். நீ அதற்கு முடிவுகட்டும் விதமாக அந்த சுமையை இறக்கி வைத்து விட்டு வேறொரு புதிய வாழ்க்கையைத் தேடிக்கொள் என்று அங்கிருந்த அக்பரின் சொந்தக்காரர்கள் வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் இருவருமே ஆரம்பத்தில் அதைப் பெரிதுபடுத்தவில்லை. நாளுக்கு நாள் அந்த நச்சரிப்பு அதிகமாக, மனதில் அடைத்து வைத்த சோகம் அணை மீறி ஜோதா தற்கொலை முடிவிற்குத் தள்ளப்பட்டாள். அவள் மீது உயிரையே வைத்திருந்த அக்பர் அவளையும் அவள் மீது வைத்திருந்த காதலையும் மட்டுமே சொத்தாக நினைத்து தனக்கு அங்கிருந்த உடமைகளை விற்று வெளியூர் வந்தார்.
அங்கு அவர்களுக்குப் பிடித்தவாறு எளிமையான வாழ்க்கையை அமைத்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
எல்லாம் இருந்தும் குழந்தை இல்லை என்கிற ஏக்கம் ஜோதாவின் அடிவயிற்றில் பற்றி எரிந்து கொண்டிருந்தது. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அதைத் தன்னுடையதாக நினைத்து அதைப் பிரிந்த பிறகு மீளா சோகத்தில் மூழ்கிவிடுவாள். அதன் பிறகு அவளை அதிலுருந்து மீட்டெடுக்க அக்பர் படாத பாடு படவேண்டி இருக்கும்.
இந்தச் சூழல் இப்படியே இன்னும் ஒரு வருடம் கூடுதலாக நீள, ஜோதாவின் பிறந்தநாளன்று அக்பர் அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தார். குளியலறையில் இருந்து குளித்து முடித்து வெளியே வந்த ஜோதாவை, “இங்க வாடி உனக்காக நான் ஒரு அற்புதமான பிறந்த நாள் பரிசு கொண்டு வந்திருக்கேன்” என்று சொன்னதும் ஜோதா ஆர்வமாக படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
அங்கு அவர் கையில் ஒரு ஆண்குழந்தை கை கால்களை ஆட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தது. இவளைப் பார்த்ததும் குழந்தை சிரித்தது. குழந்தையின் தெய்வச் சிரிப்பைப் பார்த்து ஜோதா அழுக, அதைப் பார்த்து உற்சாகத்தில் ஊற்றெடுத்தது அக்பரின் கண்கள். அதிர்சியில் உறைந்து நகர முடியாமல் கிடந்த ஜோதாவின் அருகே அந்தக் குழந்தையை ஆடியபடியே தூக்கிக் கொண்டு அவள் கையில் வைத்தார்.
அக்பர் ஜோதாவிற்காகக் கொடுத்த பிறந்த நாள் பரிசுக்கு ஜோதா ஆதி என்று பெயர் வைத்தாள். இதைச் சொன்னதும், காரை சட்டென நிறுத்திய ஆதியின் கண்கள் களங்கி அவனுடைய உலகம் திடீரென மறைந்தது போல் இருந்தது.
தன் முதல் மகன் ஆதிக்கு ஏழு வயது இருக்கும் போது தான் ஜோதா முன்தன் முறையாக கற்பமாக இருந்தாள். பின் சிபி என்னும் தவப் புதழ்வனை ஆதிக்குத் தம்பியாகப் பரிசளித்தாள்… என்று கதையை முடித்தாள்.
நடு ரோட்டில் உடைந்து அழுத ஆதி யாமினியைக் கட்டியணைத்துக் கண்ணீரால் அவளை நினைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய ஒட்டு மொத்த உயரமும் குறைந்து அவர்கள் இருவருக்கும் செருப்பாக இருந்து தன் வாழ்க்கை மோட்சம் பெற்று முடிய வேண்டும் என்று யாமினியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஆதி நீ சொன்னது கதை இல்ல நிஜம். நீ வாசிச்சது கதை நோட்டு இல்ல. அது உன் அம்மாவோட டைரி. உங்க அம்மாவோட உண்மையான பேர் கூட ஜோதி இல்ல பார்கவி. அந்த நோட்டோட கடைசி பக்கத்துலதான் இதையே எழுதியிருந்தாங்க“
“அப்போ அப்பா பேர் பார்த்திபன் இல்லையா?. அவரு ஒரு முஸ்லிம்னா அவரோட உண்மையான பேர் என்ன? “
“அவர் பேர் அக்பர்ன்றத தவிர வேற எதையும் குறிப்பிடல. ஊர விட்டு வெளிய வந்த பிறகு பேர மாத்திகிட்டாங்க“
“அப்போ அப்பா பேர் அக்பரா? “
“அது சரியா தெரியல ஆதி. அவரோட உண்மையான பேர் அம்மாவத் தவிர வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்ல”
யாமினி சொல்வது எல்லாம் கனவில்தான் நடக்கிறதோ என்று நினைத்தவன் தன்னைக் கிள்ளிப் பார்த்து உறுதிசெய்து, காரை நேராக வீட்டிற்கு விட்டான். உண்மை தெரிந்த பிறகு அம்மா அப்பாவை அவனால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை.
யாமினி “இந்த உண்மை உனக்குத் தெரியக்கூடது என்றுதான் அவர்கள் ஒவ்வொருநாளும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீ அவர்களுடைய வேண்டுதலைப் பொய்யாக்காமல் இருக்க வேண்டும்” என்று சொன்னதை மனதில் வைத்துத் தனக்குள் இருந்த உணர்வை காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்காக வாழ ஆரம்பித்தான்.
மறுநாள் அப்பாவின் பிறந்தநாள் விழாவில் அவருக்குப் பிறந்தநாள் பரிசாக அவர்களுடைய ஊரில் பாக்ஸிங் ஸ்கூல் நடத்துவதற்கான லைசன்ஸைப் பரிசாகக் கொடுத்தான். அதைப் பார்த்துப் பூரித்துச் சிரித்த அப்பா அவனை ஆறத்தழுவிக் கொண்டார். அப்பாவும் மகனும் பழையபடி கட்டியணைத்து நெருங்குவதைப் பார்த்து சந்தோஷத்தில் ஆழ்ந்த ஜோதி அவர்களுக்கு நடுவில் வந்து நின்றாள்.
அந்த ஓரத்தில் சிபியும் இந்த ஓரத்தில் யாமினியும் நிற்க அந்த இனிப்பான நிகழ்வு ஒரு மின்னல் வெட்டு ஒளியினால் புகைப்படமாக்கி அந்த வீட்டுச் சுவற்றை அலங்கரித்தது.
எப்போதெல்லாம் ஆதி அவனுடைய அம்மா அப்பாவை நினைவில் வைக்கத் தவறுகிறானோ அப்போதெல்லாம் யாமினி இதைக் கூறி அவனுக்கு நியாபகப்படுத்துவாள்.
“ஜோதா அக்பரோட உன்னதமான காதலுடைய உச்சகட்ட பெருமை சிபி பிறந்தது அல்ல. யாமினி, ஆதின்ற ரெண்டு ஆதரவில்லாத உயிர்களுக்குக் கிடைத்திருக்கின்ற அற்புதமான வாழ்க்கைதான்” இதைச் சொன்னவுடனே மீண்டும் தெளிவான் ஆதி. கூடவே அவனுடை முகமும் மாறிவிடும். அவனை சமாதானம் செய்ய “சிபிய அமேசான்ல இருந்து வாங்கல, நாங்க எல்லாரும் சேர்ந்து உன்னதான் அமேசான்ல இருந்து ஆர்டர் பண்ணி வாங்கிருக்கோம்“ என்று சொல்லி முத்தமிட்டு ஆற்றுவாள்.
அவனும் மனதின் பாரம் குறைந்து சிரித்து, அன்று அப்பாவின் கையில் இருந்து அம்மாவைப் பார்த்ததைப் போலவே மீண்டும் குழந்தையாவான்.
காதலின் அற்புதமே பிடிமானம்தானே. அந்தப் பிடிமானம் நினைக்கவியலா சக்தியைக் கொண்டு புதுப்புது அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கும். ஜோதா அக்பரின் காதல் யாமினி மற்றும் ஆதியின் வாழ்க்கைக்கும் காதலுக்கும் பிடிமானமாக மாறி, பிரபஞ்சத்தை மீறிய சக்தி ஏதோ ஒன்றினால் அவர்களுடைய வாழ்க்கையை திண்ணத் திண்ணத் திகட்டாத காதலால் எழுதிக்கொண்டே இருந்தது. இருக்கிறது. இனிமேலும் இருக்கும்.
♡ சுபம் ♡
Sorna Sandhanakumar
அத்தியாயம் – 31
அத்தியாயம் – 31
எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் அவன் அடைய வேண்டிய இலக்கு மட்டுமே மனதில் வைத்து ஆதி தயாராகிக் கொண்டிருந்தான். தீவிரமான பயிற்சிக்குப் பிறகு வாய்ப்பிற்காக காத்திருந்த ஆதிக்கு ஒரு நல்ல செய்தி தேடி வந்தது.
மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருப்பதை தன் நண்பர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்ட ஆதியின் அப்பா அவனுடைய பெயரை முதல் ஆளாகப் பதிந்தார். அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து போட்டி நாள் வரை இடையில் இரண்டு மாதங்கள் கால அவகாசம் இருந்தது. அந்த இரண்டு மாத காலமும் அந்தப் போட்டிக்காக தவம் இருப்பது போல அவனுடைய மனதையும் உடலையும் தீயாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தான்.
இரண்டு மாதத்திற்கு பிறகு ஆதியின் அப்பா ஆசைப்பட்டது போல மாநில பாக்ஸிங் சாம்பியன்சிப் டைட்டிலை வெற்றி பெற்று ஆனந்தக் கண்ணீரை அவருக்குப் பரிசாக்கினான். அதன் பிறகு அடுத்த ஒரு வருடத்திலே இந்திய பாக்ஸிங் சாம்பியன்சிப் டைட்டிலைப் பெற்று அவனுடைய அப்பாவிற்கும் மற்ற பயிற்சியாளர்களுக்கும் பெருமையைத் தேடித் தந்தான்.
இதைவிட இன்னும் பெரிய பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று முனைப்போடு இருந்த போது கூடவே கல்யாணக் கலையும் வந்தது. ஆதிக்கும் யாமினிக்கும் வயது இருபத்தைந்தைக் கடந்ததால், அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ஆதியின் அப்பா. இந்த யோசனையை அவர் ஜோதியிடம் கலந்து பேசி முடிவு செய்தார்.
இதைக் கேட்டதும் மலர்ந்த ஜோதியின் முகம் கூடவே கண்ணில் இருந்து கண்ணீரையும் சிந்தியது. “நம்ம புள்ளைங்க கல்யாணம் பண்ற அளவுக்கு வளந்துட்டாங்களா? “ என்று முகத்தைச் சுழித்தபடியே கேட்டாள் ஜோதி.
“நம்ப புள்ளைங்க எல்லாம் நல்லாவே வளந்துட்டாங்க. நீதான் இன்னும் குழந்தையாவே இருக்க“
“ம்ம்ம். இப்பவே கல்யாணம் பண்ணி வைக்கனுமா? “
“கல்யாணம் ஆதிக்கு. உனக்கு இல்ல. ஏதோ உனக்குப் பண்ணி வைக்குற மாதிரி இவ்வளோ சடைப்பா கேக்குற? “
“ஏன் எனக்குக் கூட கல்யாணம் பண்ணி வைங்க“
“இந்த காலத்துப் பசங்க ரொம்ப ரொம்ப ஷார்ப். விவரம் இல்லாம நான் உன்கிட்ட மாட்டுன மாதிரி பைத்தியக்காரனா இருப்பாங்களா? “
தன் கணவன் விளையாட்டுத்தனமாகப் பேச அவளும் சிறுபிள்ளையைப் போல முனங்கிக் கொண்டாள்.
நம்முடைய வாழ்க்கை எப்படி காதல் குறையாமல் சிறப்பாக இருக்கிறதோ அதே மாதிரி ஆதி யாமினியின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டி இருவரும் திருமணம் வேலைக்குள் காலடி வைத்தார்கள்.
பல வருடமாக காதலித்த இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்கிற உற்சாகத்தில் எதுவும் புரியவில்லை.
அவர்கள் இருவரும் எதிர்பாராத நேரத்தில் திடீர் முடிவாக திருமண பேச்சு தொடங்கியதால், அவர்களுடைய இருக்கமான வேலையில் இருந்து விடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், யாமினியின் வேலையைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
ஆதியும் அவனுடைய பயிற்சி நேரங்களைக் குறைத்துக் கொண்டு வீட்டில் அதிக நேரத்தை செலவிட ஆரம்பித்தான்.
திருமண ஏற்பாடு தடபுடலாகத் தொடங்கியது. ஜோதி தனக்கு எப்படியெல்லாம் திருமணம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டாளோ, அந்த குறிப்புகளோடு தன் பிள்ளைகளின் ஆசைகளையும் சேர்த்துக் கொண்டு நவீன முறையில் அனைவரும் பார்த்து ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினாள்.
அந்தத் திட்டத்தில் பல விதமான புதுமைகளைப் புகுத்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் நண்பர்களும் களமிறங்கினார்கள்.
எங்கோ தொடங்கி எப்படியோ முடிய வேண்டிய என்னுடைய வாழ்க்கை ஒரு நாள் ஆதியின் அப்பாவைப் பார்த்த பிறகு தலைகீழாக மாறியது. அந்த நாள் தொட்டே நான் இந்த வீட்டில் ஒரு அங்கமாக மாறிவிட்டேன். அது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இப்போது என் வாழ்க்கையில் குறை என்கிற வார்த்தை காய்ந்து காற்றில் பறந்து காணாமல் போய்விட்டது. முன்பிருந்தே இந்த வீட்டில் வாழ்ந்ததால், இவர்களுடைய அன்பில் திகைத்ததால், திருமணம் என்பது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. திருமணத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. அம்மா அப்பாவின் ஆசைக்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு இவ்வளவு விமர்சியாக நடக்கிறது. ஆதிக்கும் கூட எங்களுடைய திருமணம் அப்படி நடக்க வேண்டும் இப்படி நடக்க வேண்டு என்று எந்த ஆசையும் இல்லை. அம்மா அப்பா என்ன முடிவு செய்தாலும் சரி என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்துவிட்டான் என்று திருமண விழாவிற்கு மூன்று நாளைக்கு முன்னாடி நடந்த சடங்கில் யாமினி அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
எல்லா விதத்திலும் சிறந்த ஏற்பாடுகள் நிறைந்த ஒரு உயர் தர திருமண மண்டபத்தில் ஜோடி சேர்ந்த காதலர்கள் மங்கள குங்குமத்தால் தங்களது தீராக் காதலை அழியா சுவடுகளில் பொறித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்பை மிஞ்சிய திருமணமாக ஆதி மற்றும் யாமினியின் திருமணம் அற்புதமாய் அரங்கேறி முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு அவர்களை வெளியூர் பயணத்திற்கு ஒரு வாரம் அனுப்பி வைக்க முடிவு செய்து, எந்த ஊருக்கு போக ஆசை என்று கேட்டதும் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் யோசனையும் இல்லாமல் ஆதி கொடைக்கானல் என்றான்.
“ஏன்டா கல்யாணத்தப்போ அது பண்ணலாமா? இது பண்ணலாமானு கேக்கும்போது நல்ல புள்ளையாட்டம் உங்க இஷ்டம்னு தலைய குனிஞ்சிட்டே சொன்ன, இப்போ எங்கடா போச்சு அந்த வெட்கம்? “ என்று ஜோதி கேட்டாள்.
“ம்மா இத்தன வருஷ காதல் வாழ்க்கையில ஒரு டீக்கடைக்காச்சும் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா போயிருக்கமா? “
“அதெல்லாம் சும்மா சொல்லக் கூடாது என் புள்ளைங்க ரெண்டும் தங்கம்“
“ம்ம் ஆமா. அந்த ஊர்ல ஹார்ட் சாக்லேட் சூப்பரா இருக்குமாம் அத டேஸ்ட் பண்ணதான் அங்க போகனும்னு சொன்னேன். நீங்க தப்பா நெனச்சா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது“ என்று ஆதி நக்கலடிக்க, யாமினி அவன் தலையில் அடித்தாள். ஆதியின் விருப்பப்படியே ஹனி மூன் ட்ரிப்பிற்கு கொடைக்கானல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஜோதா அக்பர் கதை படிக்கும்போதே கொடைக்கானலின் மீது ஒரு வித ஈர்ப்பு ஆதிக்கு வந்துவிட்டது. அவன் கனவில் மட்டுமே கண்ட அந்த காதல் காட்சியில் நினைவில் யாமினியுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். பனி மூட்டம் இருவரின் எதிர்பார்பையும் சூடேற்றித் தீமூட்ட காதல் தீயில் வெந்து பின் தணிந்தார்கள்.
உண்மையிலேயே அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் மற்ற அனைத்தையும் மறந்து காதலை மட்டுமே கொண்டாடி முழுமாயான காதலர்களாக மட்டுமே வாழ்ந்தார்கள்.
யாமினி ஆதி என்கின்ற அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு துளி கூட அதில் கலக்கவில்லை. ஒரு வாரம் அங்கேயே தஞ்சம் கொண்டிருந்த இருவரும் இறுதி நாளில் இனிமேல் இருவரும் எப்போதும் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று சத்தியம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
அங்கிருந்து கிளம்ப ஒரு சொட்டளவு கூட விருப்பமில்லாத இருவரும் மறுநாள் ஆதியின் அப்பாவுடைய பிறந்தநாள் விழா இருந்ததால் அவசரமாகக் கிளம்பினார்கள்.
கார் பயணத்தின் போது மௌனத்தைக் களைவதற்காக பேச ஆரம்பித்த இருவரின் காதலும் சத்தியத்தை மீறி சண்டை என்கிற இனிப்பான கசப்பிற்குள் நுழைந்தது.
“இப்போ இங்க இருந்த ஒன் வீக் லைஃப் மாதிரியே நம்ம எப்பவுமே சந்தோஷமா, நிம்மதியா, இப்போ விட இன்னும் அதிகமா லவ் பண்ணிட்டே இருக்கனும்“
“ம்ம்ம் ஆமா எந்த யோசனையும் இல்லாம ஜாலியா லவ் பண்ணிட்டு, பாக்குறவங்க என்ன நினைப்பாங்கன்ற சிந்தனையே இல்லமா முழுக்க முழுக்க காதல்… காதல்… காதல்னு… வாழ்ந்தே செத்துப் போய்றனும்“
“வாய்லயே ஒரு அடி குடுக்கனும் உனக்கு. நல்ல நேரத்துல பைத்தியம் மாதிரி பேசுற நீ. எதாவது நல்ல விஷயம் பேசுறதா இருந்தா பேசு இல்லைனா கம்முனு வா“
“சரி நல்ல விஷயம் ஒன்னு சொல்லவா? “
“சரி சொல்லு“
“நம்ம ரெண்டு பேரும் நெக்ஸ்ட் மந்த் மலேசியா போறோம்“
“என்ன கப்பில்ஸ் டூரா?… ஜாலி ஜாலி“
“லூசு டூர் இல்ல. அங்கையே போய் தங்கி வாழப் போறோம். அங்க எனக்கு ஒரு நல்ல பாக்ஸிங் ஸ்கூல்ல ட்ரைனாரா வேல கெடச்சிருக்கு. நல்ல சம்பளம். நம்ம வாழ்க்கையே அடுத்த கட்டத்துக்கு தாவிரும்“
“ஆனா அப்பாவுக்கு நீ நம்ம ஊர்லயே பாக்ஸிங் ஸ்கூல் நடத்தனும்னுதான ஆசை“
“ஆமா. அதெல்லாம் வேஸ்ட். நம்ம அங்க போயற்லாம். அப்பா கிட்ட கூட இதப்பத்தி பேசுனே“
“என்ன சொன்னாரு? “
“ரெண்டு நாள் யோசிச்சிட்டு அப்புறம் சரினு சொல்லிட்டாரு”
ஆதியின் முடிவைக் கேட்டு கடும் கோபத்திற்கு ஆளான யாமினி அவனுடைய சுயநலத்தையும், பெற்றோரின் மீது அக்கறை இல்லாமல் பேசும் விதத்தையும் பார்த்து அவனுக்கு சூடு போட நினைத்தாள். இவனுக்கு இந்த வாழ்க்கையைப் பிச்சையாகப் போட்ட அப்பாவின் ஆசையை நிறைவேற்றாமல் தன் சுய விருப்பத்தைப் பிடித்துத் தொங்குகிறானே என்று அவனுக்குப் பாடம் புகுட்டத் தன் சத்தியத்தில் இருந்து மீறி “ஒரு கத சொல்லவா ஆதி? “ என்று ஆரம்பித்தாள்.
“என்ன கத? “ என்று அவன் கேட்டபோது, “நீ பாதிலயே கைவிட்டியே ஜோதா அக்பர் கதை அத நான் இப்போ கன்டின்யூ பண்ணவா?” என்று ஏளனாமாகச் சிரித்தாள். அவள் சொன்னதைக் கேட்டுத் தலை சுற்றிப் போன ஆதி வாயடைத்துப் போனான். அவனுடைய கைகள் நடுங்கின, “அந்த கதை உனக்கெப்படி? “ என்று திக்கித் திணறிக் கேட்டான். “அத எடுத்து பத்திரமா ஒழிச்சு வச்சது நான்தான். உனக்குத் தெரியக்கூடாதுனுதான் ஒழியவச்சேன். ஆனா இப்போ அந்தக் கதையோட மீதி உனக்குத் தெரிய வேண்டிய நேரம் வந்துருச்சு“ என்று யாமினி சொன்னாள்.
அவள் பேசுவது புரியாமல் புருவத்தைச் சுழித்துக் கொண்டு அந்தக் கதைக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என்கிற குழப்பத்தில் தவித்தான் ஆதி. “வீடு கிட்ட நெருங்கிட்டோம் அதுனால வல வலனு இழுக்காம ரொம்ப ஷார்ட்டா சொல்றேன்“ என்று யாமினி தொடங்கினாள்.
அத்தியாயம் – 29, 3௦
அத்தியாயம் – 29
ஆதியின் அப்பா எதிர்பார்த்த நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் புகுந்திருந்ததால் வசதியாகப் போனது அவருக்கு. கீழ் வீட்டில் நடப்பதை மாடிப் படிக்கட்டில் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த ஆதியின் அப்பா எதுவும் தெரியாதது போல…
“என்னமா கீழ சத்தம்? “ என்று வசனம் பேசிக்கொண்டே கீழே வந்தார்.
“ஒன்னு இல்லப்பா… நோட்ட காணோம் அதான்“
“நோட்டுதான? அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய சத்தம்?. வேற புதுசு வாக்கிக்கோ“ என்றார் அப்பா. அவருடைய சாமர்த்தியத்தைப் பார்த்து யாமினி சிரித்தாள். அவர் சொன்ன பதிலைக் கேட்டதும் கோணலாக மாறிய ஆதியின் முகத்தைப் பார்த்து சிபி சிரித்தான்.
இவர்கள் இருவரும் சிரிப்பதைப் பார்த்தவுடனே மனதின் கவலை நீங்க ஆதியும் சிரித்தான்.
“இல்லப்பா அது ரொம்ப முக்கியமான நோட்டு“
“முக்கியம்னு தெரியுதுல அப்போ நீதான் பத்திரமா வச்சிருந்திருக்கனும்“
“அலமாரிலதா வச்சிருந்தேன் இப்போ காணோம்“
“அப்படி என்ன முக்கியமான நோட்டு? ப்ராக்டிக்கல் ரெக்கார்ட் நோட்டா?”
“இல்லப்பா“
“அதவிட முக்கியமான நோட்டு உனக்கு அப்படி என்ன இருக்கப் போகுது? “ என்று கேட்ட அப்பாவின் கேள்விக்கு ஆதி பதில் சொல்லத் தெரியாமல் திணறினான். அந்த வேளையில் “எல்லாரும் சாப்பிட வாங்க“ என்று அம்மாவின் குரல் தலையிட்டு அவனைக் காப்பாற்றியது.
ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு என்றாலே ஆதி வீட்டில் விசேஷம்தான். மதிய உணவு உண்ண ஆரம்பித்தால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்காவது அந்த இடத்தைவிட்டு எழாமல் எதாவது கதை பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள்.
விழுங்கிய உணவு பேசியும் சிரித்துமே செமித்துப் போக மீண்டும் உண்ணு வயிற்றை நிரப்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அன்று அதற்கு முன்பாகவே பேசியதால், அப்போது பேச எதுவுமே கிடைக்கவில்லை.
அனைவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்து, அன்று வழக்கத்திற்கு மாறாக உரையாடலை ஆதியின் அப்பா தொடங்கினார். அவர் பேசினால் அதற்கு பின்னால் கண்டிப்பாக எதாவது இருக்கும் என்கிற நடுக்கத்திலே அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆரம்பத்தில் சிரிப்பூட்டம் வகையில் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தவரின் தலைப்பு மெல்ல மெல்ல ஆதியின் பக்கம் திரும்பியது.
“என்ன பெரிய ராஜா எனக்குத் தெரியாம எதாவது பண்றீங்களா? “
“இல்லப்பா அப்படியெல்லாம் இல்ல“ சிரித்துக் கொண்டிருந்தவன் முகம் சுருங்கியது.
“ம்ம்ம் சுரேஷ் காமிச்சான் நீங்க யூடியூப்ல கத சொல்றத. பாத்தேன் நல்லாதான் இருக்கு“
“அது சும்மா விளையாட்டா பண்ணதுப்பா“
“ம்ம்ம் நல்ல விஷயம்தான். இப்போ அதுக்கு நான் தப்பு ஒன்னும் சொல்லலையே. பண்றது எல்லாம் ஓகே. ஆனா நம்ம எதுக்காக ஆசப்பட்டு கஷ்டப்பட்டோம்? என்னவாக மாறனும்னு லட்சியத்த வச்சிட்டு இருந்தோம்? ன்னு யோசன பண்ணி பாத்துட்டு, அதுக்கப்புறமும் எதுவும் தோனலைனா நீங்க தாராளமா இதையே தொடரலாம்“
“ப்பா இதெல்லாம் சும்மாதான். நெறையா நேரம் வீணாகுதேனு பண்ணேன். வேற ஒன்னும் இல்ல“
“ம்ம்ம் நெறையா நேரம் கெடச்சா உடம்ப தயார்படுத்தலாம், உடற்பயிற்சி செய்யலாம், யோகா செய்யலாம் இன்னும் எவ்வளவோ இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு எப்படி ஆர்வம் பாத மாறுச்சுனு தெரியல“
“இல்லப்பா அதெல்லாம் பண்ணிட்டுதான் இருக்கேன்“
“ம்ம்ம் அதெல்லாம் நீ பண்ணிட்டுதான் இருக்கனு உன் அடிவயித்துல புதுசா முளச்சிருக்க ரெண்டு கிலோ தொப்பையே சொல்லுது“ அதுவரை அமைதியாய் இருந்த மூவரும் வெடித்துச் சிரித்தார்கள்.
ஆதி எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து சத்தமாக சிரித்ததால் அதிர்ச்சியில் அவன் கையில் வைத்திருந்த ஒரு டம்ளர் தண்ணீரைக் கீழே சிந்தினான்.
“என்புள்ள பந்தையத்துல ஜெயிக்குற துடிப்பான குதிரைனு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா இப்போதான் புரியுது அவனுக்கு கூட்டத்தோட கூட்டமா ஆட்டு மந்தையில வாழதான் புடிச்சிருக்குனு” என்று சொல்லிவிட்டு எழுந்து கைகழுவி விட்டு பைக்கை முறுக்கி வெளியே கிளம்பிவிட்டார்.
தலையைக் குணிந்தபடியே சாப்பிட்டு முடித்த ஆதி அமைதியா மாடியில் அமர்ந்திருந்தான். அப்பா பேசியதற்கு கண்டிப்பாக ஆதியின் மனம் வருத்தப்படும் என்று அவனை சமாதானம் செய்ய அம்மா மாடிக்கு விரைந்தாள்.
“ஆதி இங்க என்ன செல்லம் பண்ற? “ என்று கேட்டுக்கொண்டே அவன் அருகே வந்த ஜோதியைக் கை நீட்டித் தடுத்து, “அப்படியே போயிருமா இல்லனா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்“ என்று பல்லைக் கடித்துப் பேசினான்.
இந்த மாதிரி இவன் கோபத்தை எத்தனை ஆயிரம் முறை ஜோதி கடந்திருப்பாள்?. அதே போல இப்பொழுதும் அவனை சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையோடு அவன் அருகே அமர்ந்தாள்.
சமாதானத்தின் முதல்படியாக அவன் தலையில் கையை வைத்து நீவினாள், சிடு சிடுவென முகத்தை வைத்துக் கொண்டு அவளுடைய கையைத் தட்டிவிட்டான் ஆதி.
“பேசுனது உங்க அப்பா. அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்? “
“ம்ம் அந்த ஆள் பொண்டாட்டிதான நீ?”
“ஆஆ இது நல்ல இருக்கே. அவரு புள்ளதான் நீயும். இதோ நீ ஒய்யாரமா உக்காந்திருக்கியே இது அவரு வீடுதான். இப்போ ஸ்டைலா போட்டிருக்கியே ஒரு டிசர்ட் இதுகூட அவரு காசுல வாங்குனதுதான்”
“ம்ம் இந்த எரிச்சலுக்குத்தான் நான் வீட்டுக்கே வர்றதில்ல“
“என்னடா அப்பனும் புள்ளையும் கொஞ்ச நாளா ராசியா இருக்காங்களேனு ஆச்சர்யப்பட்டேன். இதோ இப்போ முட்டி கிட்டு மூஞ்ச தூக்கிட்டியா நீ“
“அவருதான் என்னைய எதாவது சொல்லி சீண்டி விட்டுட்டே இருக்காரு”
“பொறுமையா யோசிச்சு பாரு. அவரு உன்னைய சீண்டியா விடுறாரு? “
“அவரு என் நல்லதுக்குதான் சொல்றாரு இருந்தாலும்…”
“என்ன ? இருந்தாலும்னு இழுக்குற… இந்த வயசுல பெத்தவங்க என்ன சொன்னாலும் தப்பாதான் தெரியும். அவங்களுக்கு புடிச்சது நமக்கு புடிக்காது. இது புரியாததாலதான் நெறையா குழந்தைங்க திசை மாறி யோய் வாழ்க்கையவே தொலச்சர்றாங்க“
“புரியுதுமா. ஆனா என்ன பண்றது? அப்போதைக்கு இருந்த மனநிலைக்கு இது இருந்ததாலதான் நான் இன்னைக்கு ஓரளவுக்காச்சும் நல்லா இருக்கேன். இது மட்டும் இல்லைனா நான் என்ன ஆகிருப்பேனு எனக்கே தெரியல”
“சரிதான். அதான் இப்போ நல்லா இருக்கீல அந்த நோட்ட வேற காணோம்னு சொல்ற இத இப்படியே விட்டுட்டு உன் எய்ம் எதோ அத மட்டும் மனசுல வச்சுக்கோ“
“எப்படிமா இவ்வளோ ஈசியா விட்றுனு சொல்ற?. உங்களுக்கு வேணா இது வெறும் சாதாரண யூடியூப் சேனலாத் தெரியலாம். ஆனா எனக்கு அப்படி இல்ல“
“அதுக்கு இதுலயே வாழ்க்கைய ஓட்டலாம்னு முடிவு பண்ணிட்டியா? “
“அப்படி இல்லமா. காலேஜ் முடிக்கிற வரைக்கும்தான்“
“அதெல்லாம் வேணாம்டா இது மனசுக்கு ரொம்ப நெருக்கமாகிட்டா அப்புறம் உன்னால விடவே முடியாது. இது உன் வாழ்க்கை இல்ல புரிஞ்சுக்கோ“
“ம்ம்“
“இடையில வந்தது இடையிலயே போகுதுனு நெனச்சுக்கோ. அப்பா சொன்ன மாதிரி இப்போ இருந்தே உடம்ப தயாரா வச்சுக்கோ அப்போதான் பின்னாடி உனக்கு ஈசியா இருக்கும்“
“ம்ம்ம்“
“ம்ம்ம் ம்ம்ம் மொனங்காம கொஞ்ச நேரம் இப்படியே உக்காந்து யோசிச்சு பாரு, அம்மா என்ன சொல்ல வர்றேனு புரிய வரும்“ என்று சொல்லிவிட்டு ஜோதி பயங்கர குஷியாக கீழே இறங்கினாள்.
தாங்கள் நினைத்ததை ஒரு வழியாக வெற்றிகரமாய் நிளைவேற்றிய சந்தோஷத்தில் ஜோதியும் அவளது கணவனும் அன்று இரவு நிம்மதியாக உறங்கினார்கள்.
இதுவா? அதுவா? என்கிற கேள்வி வந்துவிட்டாலே தூக்கம் தொலைந்துவிடும். ஆதியும் அந்தக் குழப்பமான மனநிலையில்தான் இருந்தான். எப்போதும் இரவு உறங்குவதற்கு முன்பு யாமினியிடம் பத்து நிமிடமாவது அரட்டைப் பெட்டிக்குள் வார்த்தைகளைத் தட்டிவிட்டுத்தான் உறங்குவான். அன்று அவர்களுடைய உரையாடல் பத்து நிமித்தைத் தாண்டி ஒரு மணி நேரத்திற்கு மேலும் தொடர்ந்தது.
அத்தியாயம் – 30
“ஆதி ஏன்டா அப்பா யூடியூப் சேனல் வேணாம்னு சொன்னாரு? எனக்கு ஒன்னுமே புரியல? “
“நான் வீட்ல இருக்கும்போது டெய்லி மார்னிங் அன்டு ஈவ்னிங் ஜிம்முக்குப் போவேன் தெரியும்ல? “
“ஆமா சொல்லிருக்க“
“எதுக்கு போவேன்னு தெரியுமா? “
“அதெல்லாம் சொன்னாதான தெரியும். உங்களோட ஜிம்முனால நீ போறனு நெனச்சேன்“
“அதுவும் ஒரு காரணம்தான். ஆனா அதுமட்டுமே காரணம் இல்ல. நான் மூனு வருஷமா அப்பா கிட்ட பாக்ஸிங் கத்துகிட்டு இருந்தேன். நான் இந்தியாவுலயே பெரிய ஃபேமஸான பாக்ஸிங் சாம்பியன் ஆகனும்னுதா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆசை. என்னோட ஆசையும் அதுதான்”
“டேய் சூப்பர்டா. உனக்குள்ள இவ்ளோ டேலன்ட் இருக்கா? சொல்லவே இல்ல என்கிட்ட“
“எங்க சொல்றது? அதுக்குள்ளதான் இந்த பாழாப்போன லவ் வந்து உன் வாழ்க்கையையும் என் வாழ்க்கையையும் புரட்டி போட்ருச்சே“
“ம்ம்ம் நல்ல விஷயம்தான? “
“எது நல்ல விஷயம் யூடியூப் சேனல க்ளோஸ் பண்றதா? “
“ஆமா. என்னைய மறக்க முடியாமதான அத ஆரம்பிச்ச?. இப்போ நானே சொல்றேன் அத க்ளோஸ் பண்ணிட்டு ஒழுங்கா உருப்படுற வழியப்பாரு“
“என்ன யாமினி நீயும் அம்மா அப்பா மாதிரியே பேசுற?”
“வேற எப்படி பேசச் சொல்ற? அதுவா இதுவானு யோசிச்சீன உன் மூளைதான் குழம்பி போகும். உனக்கும் நல்ல பயங்கரமான டேலன்ட் இருக்கு உன்ன கை பிடிச்சு தூக்கி விட உங்கப்பா இருக்காரு அப்புறம் என்ன உனக்கு? “
“நான் அடுத்த வீடியோ போடுவேனு நம்பி பல ஆயிரம் பேர் காத்துட்டு இருப்பாங்க அவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது? “
“ஆஆஆ இனிமே வீடியோ வராதுனு போய் சொல்லு”
“யாமினி… ”
“பின்ன என்னடா ஏதோ மக்கள காப்பாத்துற ஹீரோ மாதிரி பேசிட்டு இருக்க. உன் வீடியோ இல்லனா அத விட இன்ட்ரெஸ்ங்கா வேற வீடியோ வந்ததும் இத மறந்துறப் போறாங்க. நீ அத நெனச்சு ஃபீல் பண்ணாம உன் எய்ம நோக்கி போனா உண்மையாவே ஹீரோவாகிறலாம்”
“அப்படியா?. நிஜமாவா சொல்ற? “
“ஆமாங்க பெரிய ராஜா. பெரிய சந்தோஷத்த அடையனும்னா இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷத்த இழந்துதா ஆகனும்“
“என்னோட டெயலாக் எனக்கேவா? “
“ஆமா உனக்கேதான். முடிவு எடுத்த பிறகும் அதவே யோசிக்காம கம்முனு படுத்து தூங்கு“
“வர வர நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம அம்மா அப்பாக்குதான் ரொம்ப சப்போர்ட் பண்ற. நான் அத கவனிச்சிட்டுதான் இருக்கேன்”
“ஆமா அவங்கதான எனக்கு சோறு போடுறாங்க நீயா போடுற?. நீ சம்பாதிச்சு எனக்கு சோறு போடு அப்புறம் உனக்கு சப்போர்ட் பண்றேன்“
“ஏன்டி கேவளம் சோத்துக்காக என் காதல விட்டுக்கொடுக்குற?”
“சும்மா கிடைக்குமா பாஸ். ஓவரா வாய் பேசாம போய் தூங்குங்க பெரிய ராஜா“
“ம்ம்ம் சரி குட் நைட்“
ஏற்றுக் கொள்ள மனம் இல்லாவிட்டாலும் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமும் ஒன்றின் மீது உறுதியாக இருந்ததால், ஆதியும் தன் முடிவை மாற்றிக் கொண்டான். நாள் முழுவதும் இருந்த குழப்பம் அந்த நாள் முடியும்போது மறைந்ததால் கவலை களைந்து உறங்கினான் ஆதி.
ஒரு வழியாக தன் கையை மீறி அண்ணன் கைக்குப் போன யூடியூப் சேனல் இப்போது அதை விட அதிக சப்ஸ்கிரைபர்களோடு தன்னிடமே திரும்ப வரப் போகிறது என்கிற உற்சாகத்தில் சிபியும் உறங்கிப் போனான்.
இப்படி அந்த வீட்டைச் சேர்ந்த அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு வீட்டு உறங்க, யாமினிக்கு அன்று இரவு உறக்கம் இல்லை. அவள் நடு இரவில் கண் விழித்து கிடந்ததற்கு காரணம் அவளிடம் இருந்த அந்த நோட்டுதான். அந்தக் கதையில் வரும் அக்பரும் ஒரு பாக்ஸர்தான். இப்போது ஆதியைப் பாக்ஸராக்கும் கனவோடு அப்பா இருப்பதை வைத்து அவனுக்கு மொத்த கதையும் தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்று புரியாமல் யாமினி தவித்தாள்.
யாமினியைப் பொருத்தவரை ஆதிக்கு இந்த விஷயம் தெரிந்திடவே கூடாது. வாழ்க்கை முழுக்க தனக்குத் தெரிந்த இந்த உண்மையை ஒரு நாளும் ஆதிக்கு தெரியப்படுத்தக் கூடாது என்கிற சத்தியத்தை தூக்கி சுமக்கத் தயாரானாள்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஜோதியும் அவளது கணவனும் அறைக்குள் பேசியதை வெளியே நின்னு கேட்டதில் கால் வாசி உண்மை மட்டுமே தெரிந்தது. பின் ஜோதியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்த யாமினிக்கு முழு உண்மையும் தெரிந்தது.
பாதி கிழிந்த நோட்டைக் கொண்டு போய் எங்காவது எரித்துவிடு என்று ஆதியின் அப்பா, அம்மாவிடம் சொன்னார். ஆனால் ஜோதிக்கு அதை எரிக்க மனம் வரவில்லை. அவர்களுடைய காதலுக்கு அடையாளமாய் காதல் சின்னமாய் இருந்த அந்தக் காகிதக் கோட்டையை எரிக்க அவளுக்கு விருப்பமே இல்லை. அதை எப்படி வீட்டில் இருந்து அகற்றுவது என்று இரண்டு மூன்று நாட்கள் யோசித்துக் கொண்டே இருந்தாள்.
ஒரு நாள் அந்த வீட்டில் இருந்த குப்பைத் தொட்டையில் ஒரு மஞ்சள் நிறப் பையை எடுத்துக் கொண்டு வந்து போட்டு அதைத் தெரு முனையில் இருக்கும் குப்பை சேமிக்கும் பெட்டியில் கொட்டப் புறப்பட்டாள் ஜோதி.
ஜோதியின் முகத்தில் இருந்த கலக்கமும் கையில் இருந்த பையும் யாமினியின் சந்தேகத்தின் மீது கல்லெறிந்தது.
சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக யாமினி ஜோதியின் பின்னே சென்று கவனித்தாள். ஜோதி குப்பையைக் கொட்டும்போது தூரமாக மறைந்திருந்து பார்த்த யாமினி, ஜோதி வீட்டிற்குத் திரும்பிய பிறகு அந்தக் குப்பைத் தொட்டியை நெருங்கினாள்.
குப்பைத் தொட்டியில் ஜோதி கொட்டிச் சென்ற குப்பையோடு அந்த மஞ்சள் நிற பையும் கிடந்தது. அந்த இடத்திலேயே அதை எடுத்து எடுத்துப் பார்த்த யாமினி தனக்கிருந்த சந்தேகத்திற்கு பதில் கிடைத்து விட்டதாகத் துள்ளிக் குதித்தாள்.
அந்த பையை அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து அவளுடைய அறையில் ஒழித்து வைத்தாள்.
அந்த நாள் இரவு அதைத் திறந்து அதில் இருந்த முக்கியமான பொருளை வெளியே எடுத்தாள். அந்தப் பொருள் வேறொன்றும் இல்லை, இன்று ஆதியுடன் அவளும் தேடிய அதே பாதி நோட்டுதான். அதைத்தான் எரிக்க மனமில்லாமல் தூக்கி குப்பையோடு கொட்டியிருக்கிறாள் ஜோதி.
இவ்வளவு படபடப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது இந்த நோட்டில்? என்ற கேள்விக் குறியோடு அன்று இரவு அந்த நோட்டைப் புரட்டினாள் யாமினி. முதல் பக்கத்தை வாசிக்கும்போதே இது ஆதி சொல்லும் கதையின் தொடர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட யாமினி, அடுத்தடுத்து தொடர்ந்து வாசித்தாள்.
அவளுடைய வாசிப்பின் இறுதியில்தான் தெரிந்தது அது கதை இல்லை நிஜம் என்று. அந்த நோட்டில் அடுத்தடுத்து பக்கங்களை வாசித்த யாமினி சிரித்தாள், அழுதாள், யோசித்தாள், வியந்தாள் இதையெல்லாம் தாண்டி காதலுக்கு மிக மிக நெருக்கமானாள்.
அப்படிப்பட்ட உருக்கமான வரிகளைக் கொண்ட நோட்டை தன்னிடம் மறைத்து வைத்திருப்பது இந்த வீட்டில் யாருக்குமே தெரிந்துவிடக் கூடாது என்று சாமியை வேண்டிக் கொண்டு படுத்தாள்.
மறுநாள் விடுதிக்குத் திரும்பிய ஆதி யூடியூப் சேனல் பற்றிய ஆசையை அவன் கொண்டு வந்த அழுக்குத் துணிகளோடே விட்டு விட்டுச் சென்றான். அதன் பிறகு அவனுடைய முழு கவனமும் பாக்ஸிங் பயிற்சிக்காக உடலைத் தயார்படுத்துவதிலே இருந்தது.
அவ்வப்போது யூடியூப் சேனலின் நியாபகம் வந்தாள் உடைந்து உட்கார்ந்து விடுவான். ஒவ்வொரு முறை உடைந்து உட்காரும்போதும் நம்மைத் தேற்றி கைகொடுத்து எழுப்பிவிட அதைவிட பெரிய சக்தி எதாவது இருக்கும். இந்த முறை ஆதிக்கு பாக்ஸிங் சாம்பியன்ஸிப் என்கிற அசுரத்தனமான பிரமாண்ட சக்தி இருந்தது. அது அவனைத் துவண்டுபோக விடாமல் ஒவ்வொரு நாளையும் கடக்க வைத்தது.
உடல் உறுதியில் அவன் அதிக கவனம் செலுத்தி உடற்பயிற்சியில் ஈடுபட்டு தேறிக் கொண்டிருந்த நாட்களிலில் கூடவே கல்லூரி வாழ்க்கையும் கரைந்து ஓடியது.
சினிமாக்களில் காட்டப்படும் சிலாக்கி மிலக்கிகளைக் கொண்ட உல்லாச காலமாக ஆதியின் கல்லூரிக் காலம் இருக்கவில்லை. முதலில் யாமினி, யூடியூப், உடற்பயிற்சி இது மூன்றையும் சந்தித்து மோதியதிலே அவனுடைய கல்லூரி வாழ்க்கை உருண்டு ஓடி முற்று பெற்றது.
இவன் கல்லூரி வாழ்க்கை முடித்து விட்டு வீடு திரும்பும்போது, வெளியூர் வேலைக்காக யாமினி வீட்டிலிருந்து வெளியேறினாள். பிரபல தனியார் அழகு நிறுவனம் ஒன்றில் பியூட்டிஷன் வேலை கிடைத்ததும் சந்தோஷமாக வீட்டை விட்டுச் சென்றாள்.
நம் வாழ்க்கையைக் காப்பாற்றிய இவர்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தோடு சம்பாதிக்க புறப்பட்டாள். ஆரம்பத்தில் வெளியூர் வேலைக்கு வேண்டாம் என்று ஜோதி தடுக்க, நான் தனியாகப் போகவில்லை நாங்கள் ஐந்து பேர் குழுவாகத்தான் போகிறோம். இது நல்ல வாய்ப்பு. இதை பயன்படுத்தாவிட்டால் இவ்வளவு கஷ்டத்திலும் நீங்கள் என்னைப் படிக்க வைத்ததற்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசி, கண்ணீர் விட்டு அழுது, அடம்பிடித்து பின் சம்மதம் வாங்கினாள்.
ஆதியும் யாமினியும் காதலித்தார்களே தவிர, காதலர்களாக ஒருநாளும் இருந்ததில்லை. ஆதியின் அம்மா அப்பாவின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பாக வரவேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்ற போராடிக் கொண்டிருந்தார்கள்.
வெளியூர் வேலைக்குச் சென்ற யாமினி, முன்பு ஆதி எப்படி ஞாயிற்றுக்கிழமை கிழமை விடுமுறைக்கு வீட்டுக்கு வருவனோ அதே போல யாமினியும் மாதம் ஒரு முறை சனி, ஞாயிறு விடுமுறைக்கு வீட்டிற்கு வருவாள். ஆதியின் அப்பாவிற்கு அடுத்தபடியாக அந்த வீட்டில் யாமினி சம்பாதிக்கத் தொடங்கினாள்.
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஜிம்மிற்குத் திரும்பிய ஆதி முழு மூச்சாக பாக்ஸிங் பயிற்சியில் இறங்கினான்.
ஆதியின் அப்பா அவருடைய முழு நேரத்தையும் ஆதியைத் தயார்படுத்துவதற்காக செலவிட்டார். அவர் மட்டும் பயிற்சி கொடுத்தால் போதாது என்று தனக்குத் தெரிந்த, பாக்ஸிங் துறையில் மிகப் பெரிய உயரத்தை எட்டிய நண்பர்களை எல்லாம் விட்டு ஆதிக்கு பயிற்சி கொடுத்தார்.
அத்தியாயம் – 27, 28
அத்தியாயம் – 27
அக்பருக்கு அங்கு நடந்ததும் அவர் கண்களால் பார்த்த விஷயங்களும் ஏதோ கனவில் நடப்பதுபோல் இருந்ததால் வாயடைத்து விழி பிதுங்கி குழம்பிப் போனார். அதனால்தான் அங்கிருந்தவர் அக்பரிடம் எதுவும் சொல்லாமல் அவருடைய அம்மாவை அழைத்து நடந்த விஷயத்தை விளக்கிச் சொன்னார்.
“சரியாக ஒருவருடத்திற்கு முன்பு உங்கள் பிள்ளைக்கு யாராவது வேண்டாதவர்கள் சாப்பாட்டுப் பொருள் எதாவது கொடுப்பதை நீங்கள் கவனித்தீர்களா? “ என்று அந்த மாந்திரீகம் நீக்குபவர் அக்பரின் அம்மாவிடம் கேட்டார்.
“சாமி அந்த மாதிரி எதுவும் நடந்ததா எனக்கு நியாபகம் இல்ல. பொதுவா என் புள்ள யார்கிட்டையும் எதையும் வாங்கி சாப்பிட மாட்டான். ஹெல்த் விஷயத்துல ரொம்ப கவனமா இருப்பான்“
“அப்படி இருந்தா நல்ல விஷயம்தான். நீங்க வேணா நடந்தத மறந்திருப்பீங்க. ஆனா நடந்தது எல்லாம் கிளீனா தெரியுதே. நான் சொல்றத கேளுங்க உங்க புள்ளைக்கு நடந்தது இதுதான் “ என்று தொடங்கிச் சொல்ல ஆரம்பித்தார்.
சென்ற வருடம் உங்களுடைய சம்மந்தகாரர் வீட்டைச் சேர்ந்த யாரோ ஒருவர் உங்களுடைய பையனிடம் ஏதோ ஒரு உண்ணும் பொருளைக் கொடுத்திருக்கிறார். அப்படிக் கொடுத்தது ஒரு பெண். அந்தப் பெண் அந்தப் பொருளை சாதாரணமாகக் கொடுக்கவில்லை அதனுடன் மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறார்.
அந்த மருந்து மாந்திரீகம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். உண்ணும் பொருளில் அந்த மருந்து கலந்திருக்கிறது என்று எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் அந்த மருந்திற்கு நிறமோ, சுவையோ, மணமோ கிடையாது. அதனுடைய வீரியத்தைக் காட்ட அதிக அளவு மருந்து தேவையில்லை. கடுகளவு கலந்தாலே போதுமானது. அதனுடைய சக்தி உண்ணுபவரின் ஆணி வேரையே அசைத்துப் பிடுங்கி எறிந்துவிடும். அந்த பாதிப்புதான் உங்களுடைய பிள்ளையைப் போட்டு பழிவாங்குகிறது.
குடும்பத்திற்கு ஒரே ஆதாரமாய் அவர் இருப்பதால் அவருடைய கஷ்ட பலன் மற்றவர்களையும் பாதிக்கிறது. இந்த தகவல் போதுமா? இல்லை மருந்து கலந்தவரின் ஊர், பெயர் குடும்ப விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டுமா? என்று அவர் சிரித்தபடியே கேட்டார். “இல்ல அதெல்லாம் வேணாம் எங்களுக்கு யாருனு தெரியுது. நான் இத ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கவா? “ என்று கேட்டு அக்பர் கக்கிய உருண்டைகளை அவருடைய செல்ஃபோனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படத் தயாரானார்.
“இனி இதுக்கப்புறம் சாமி“ என்று அக்பருடைய அம்மா வார்த்தையை இழுக்க, “இதுக்கு அப்புறம் எதுக்கும் பயப்படத் தேவையில்ல. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரியாகி நல்ல வாழ்க்கைய அந்த ஆண்டவன் அமச்சுக் கொடுப்பான். மருந்த உறிஞ்சி எடுத்ததால தொண்டை, வயிறு எல்லாம் புன்னாகிரும். அதுனால இன்னும் ஒரு வாரத்துக்கு சூடான பொருளும் காரமான பொருளும் சாப்பிட வேணாம்“ என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.
இந்த மாந்திரீகம், மந்திரம், மருந்து இது போன்ற மாயைகளை நம்பாத அக்பர் தனக்கே இது நடந்த பிறகு ஒரு வேளை இருக்குமோ என்று அதை நம்பும் வளையத்திற்குள் லேசாக நுழைந்தார். ஆனாலும் அவரின் படித்த மூளை அதெப்படி? என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தது. தனக்கிருந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள இதைப் பற்றி தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஆலோசித்தார் அக்பர்.
மருத்துவராக பணிபுரிந்த அந்த நண்பர் அக்பரின் செல்ஃபோனில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து விட்டு அதிர்ச்சி கலந்த குழப்பத்தோடு சிறிது நேரம் யோசித்தார். அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். எந்த வலியில் யோசித்துப் பார்த்தாலும் இது போன்ற செய்தியை அவர் இதற்கு முன்னாள் கேள்விப்படவே இல்லை என்பது மட்டுமே பதிலாக கிடைத்தது.
அது எப்படி மருந்து உருண்டையில் முடி முளைக்கும்? அதுவும் ஒரு கடுகளவு கலந்த மருந்து எப்படி இவ்வளவு பெரிய பெரிய அளவில் எட்டு உருண்டைகளாக மாறியது?. இதற்கும் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் இருக்கும்? என்றெல்லாம் அக்பர் அவருடைய அம்மாவிடம் கேள்வி கேட்டது போலவே, அந்த மருத்துவ நண்பர் அக்பரிடம் கேட்டார்.
இருவரும் பல மணி நேரம் உரையாடி அதற்கு தீர்வு கிடைக்காமல் தோற்றே போனார்கள். இதைக் காட்டி பல மருத்துவ வல்லுநர்களிடம் விவாதித்த போதும்கூட அவர்களாலும் பதில் சொல்ல முடியவில்லை.
இதை ஒரே அடியாக பொய்யென்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இதில் சம்மந்தப்பட்ட அக்பரே அங்கு நடந்ததை தன் கண்ணால் பார்த்தார். அதே போல் இதை உண்மை என்றும் சொல்லிவிட முடியாது. படித்த பலரிடம் கேட்ட போதும் கூட இது குறித்த எந்த ஒரு அறிவியல் விளக்கமும் இல்லை. இதன் மீது எந்த கருத்தையும் உறுதியாக வைக்க முடியாமல் குழப்பம் ஒரு பக்கம் நிலவ, அவரை விட்ட கெட்ட நேரம் ஜோதாவைப் பிடித்துக் கொண்டது.
உணவில் மருந்து கலந்து கொடுத்தது யார் என்று அந்த சாமியார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அக்பருக்கும் அவருடைய அம்மாவிற்கும் மனதில் தோன்றியது ஒரே முகம்தான். அது ஜோதாவினுடைய அம்மாவின் முகம்தான்.
அவர் சொன்ன குறிப்புகளுமே அவளுடைய அம்மாவைத்தான் அடையாளப்படுத்தியது.
இந்த உண்மை தெரிந்த பிறகு, இதை ஜோதாவிடம் சொல்ல வேண்டாம் அவளுக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவாள். எந்நிலையிலும் இந்த உண்மை ஜோதாவிற்கு தெரியக்கூடாது என்று தன் அம்மாவிடம் இருந்து சத்தியம் பெற்றுக் கொண்டார் அக்பர்.
தான் ஆசையாசையாய் பெற்று வளர்த்த பிள்ளையை வாட்டி எடுத்தது ஜோதாவின் சதிகாரக் குடும்பம்தான் என்று தெரிந்த பிறகு அக்பருடைய அம்மாவிற்கு ஜோதாவின் மேல் இருந்த பாசம் குறைந்து, நாளடைவில் அது பகையாக உருமாறியது.
இந்த ஒரு காரணத்தினாலே ஜோதாவிற்கும் அவளுடைய மாமியாருக்கும் இடையில் பல மோதல்கள், சண்டைகள், சச்சரவுகள், பிடிவாதங்கள், வாக்குவாதங்கள், கோபங்கள், தகாத பேச்சுக்கள், கருத்து வேறுபாடு என அத்தைனை பகை உணர்ச்சியும் புகை மூட்டித் தீப்பிடித்தது. அதிலிருந்து அக்பருக்கு சின்னதாக தலைவலி வந்தால் கூட ஜோதாவின் மாமியார் அவளையும் அவள் குடும்பத்தையும் கரித்துக் கொட்ட ஆரம்பித்தாள்.
வீட்டில் தொடர்ந்து சண்டையும் சச்சரவுமாக இருக்க அனைவருக்கும் நிம்மதி இல்லாமல் போனது. மாமியாரின் வார்த்தைகளால் பாதிக்கப்பட்ட ஜோதா தன் கணவனிடம் இதைப்பற்றி பேசினாள்.
“வாழ்க்கையே எனக்கு வெறுப்பா இருக்குங்க. வர வர அத்த எதுக்கெடுத்தாலும் என்னைய எதாவது காரணம் சொல்லி திட்டிகிட்டே இருக்காங்க. சொல்ற காரணம் உருப்படியான காரணமா இருந்தா கூட பரவாயில்லங்க. முன்ன இருந்ததுக்கு அத்த ரொம்ப மாறிட்டாங்க. நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க“
“என்னனு எடுத்து சொல்றது?. அவங்களுக்கும் வயசாகிட்டே போகுதுல்ல அப்படித்தான் புரியாமல் பேசுவாங்க. அவங்கள நம்மதான் கொஞ்சம் அனுசரிச்சு போகனும்“
“எத்தன நாளைக்குங்க?. நானும் மனுஷிதான?. எனக்கு கஷ்டமா இருக்கு“
“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ ஜோதா. எல்லாம் சரியாகிரும்“
“ம்ம்ம்ம். இப்பக்கூட பாருங்க நீங்க என்னையதான் சமாதானப் படுத்த முயற்சி பண்றீங்க. உங்க அம்மா கிட்ட இத பத்தி பேசுறேனு சொல்ல மாட்டேன்”
“என்ன சொன்ன? உங்க அம்மாவா? ம்ம்ம்ம்… ஆமா எங்க அம்மாதான். இத்தன நாள் அத்தையா இருந்தவங்க இன்னைக்கு உங்க அம்மா ஆகிட்டாங்களா?. எதுவும் தெரியாத மாதிரி முழிக்காத. ஜோதா எனக்கு டென்ஷன் ஆகுது“ என்று அக்பர் ஜோதாவிடம் கோபமாகப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அவர்களுக்கு இடையில் இது இரண்டாவது சண்டை. பொதுவாக அக்பருக்கு நீ, நான்னு பிரிச்சு பேசினாலோ… எங்கிட்ட பேசாத வைக்காதனு எடுத்தெறிந்து பேசினாலோ சுத்தமாகப் பிடிக்காது. இருவரும் காதலித்த சமயத்தில் இதே காரணத்திற்காக சண்டை போட்டுத்தான் பல மாதங்கள் பேசாமலே இருந்தார்கள். இப்போதும் அதே காரணத்திற்காக இவர்களுக்கு இடையில் சண்டை வந்ததை நினைத்து ஜோதா பயந்தாள். ஆனால் ஒரே வீட்டில் இருந்ததால் எவ்வளவுதான் விட பிடியாக இருந்தாலும் ஒரு நாளைக்கு மேல் பேசாமல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
சண்டையும் சமாதானமுமாய் நாட்கள் ஓட ஒருநாள் ஒன்று சொன்னது போல் இருவரும் முரண்டு பிடித்தார்கள். ஜோதாவிற்கு அன்பாய் எடுத்துச் சொல்லும் மனநிலையில் அந்த நாள் அக்பர் இல்லை. அதனால் கோபத்தோடு வீட்டில் சண்டை வருவதற்கு காரணம் எது என்றும், ஜோதாவிற்கு தெரியாமல் மாந்திரீகம் எடுக்கும் இடத்திற்கு அவரும் அம்மாவும் சென்றதையும் அங்கு நடந்ததையும், அதில் வெளிவந்த உண்மையும், அதனால் வீட்டில் ஏற்பட்ட விளைவுகளும், அது இப்போது எடுத்துள்ள விஸ்வரூபத்தையும் கோபத்தோடு சேர்த்துக் கொட்டித் தீர்த்தார்.
ஜோதா மீண்டும் அவளது அம்மாவிடம் தோற்று நின்றாள். நினைத்தது நடந்த பிறகு கவனம் குறைந்த நேரத்தில் அம்மாவின் சத்தம் இல்லாமல் காரியம் சாதிக்கும் கலையைப் பற்றி மறந்தே போனாள் ஜோதா. அவளை எதிர்த்து சண்டையிட்டு குத்திக் கிழித்து உயிர் பிரிந்திருந்தாலும் அதைத் தாங்கியிருப்பாளோ என்னவோ… பெற்ற தாயே சிரித்துக் கொண்டு அணைத்து பின் முதுகில் குத்தியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
திருமணத்திற்கு பிறகு அவர்களை வீட்டில் வந்து சந்தித்த ஜோதாவையும் அவள் கணவனையும் வந்து சந்தித்த பிறகு அவர்கள் அந்த வீட்டுப் பக்கம் ஒரு முறை கூட வரவில்லை.
அக்பருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு மருத்துவமணையில் இருந்த போதும்கூட செல்ஃபோனில்தான் நலம் விசாரித்தார்கள். ஜோதாவின் பெற்றோர்கள் அவளையும் அவள் குடும்பத்தையும் விட்டுத் தள்ளியே இருந்ததால் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை அக்பருடன் கூட பகிர்ந்திருக்கிறாள். ஆனால் அது அக்பருக்கு பெரிய விஷயமாகத் தோன்றவே இல்லை. இவள் கோபமாகப் பேசினால் கூட, “விடு அவர்களுக்கு அங்கு சூழல் எப்படி இருக்கிறதோ?. யாருக்குத் தெரியும்? உபத்திரவம் செய்யாமல் இருக்கும் வரை நல்லதுதான். அதனால் நீ இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே“ என்று அவளை சமாதானம் செய்வார்.
அத்தியாயம் – 28
அப்படிப்பட்ட ஒருவருக்கு இப்படி ஒரு தீங்கு செய்ய அவர்களுக்கு எப்படித்தான் மனது சம்மதித்ததோ தெரியவில்லை… என்று தனக்குள்ளே புழுங்கிக் கொண்டிருந்த ஜோதா தன் அம்மாவிற்கு அழைத்து அவள் மனதில் இருந்த அத்தனை ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டு இனிமேல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடன் பேசவும் வேண்டாம் என் முகத்தில் முழிக்கவும் வேண்டாம். நீங்கள் என் கண்ணில் படாத வரை உங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். அவளைச் சமாளிக்க அவளுடைய அம்மா ஏதேதோ பேசிப் பார்த்தாள். ஆனால் இவ்வளவு நடந்ததிற்குப் பிறகும் அவள் அம்மாவின் பேச்சை நம்புவதற்கு ஜோதா ஒன்றும் முட்டாள் இல்லையே.
அக்பர் ஜோதாவிடம் சண்டையில் இருந்தாலும் கூட, தான் உண்ண அதே பிரசாதத்தை அவளும்தானே உண்ணிருப்பாள். அவளுக்கும் வயிற்றினுள் மருந்து முளைத்திருக்குமே என்று அவளையும் அவர் சென்ற அதே இடத்திற்கு கூட்டிச் சென்றார். இதில் அதிசயம் என்னவென்றால், அவளுக்கு அக்பருக்கு இருந்தது போல் இல்லை. அந்த மாந்திரீகம் எடுப்பவர் ஜோதாவைப் பார்த்தவுடனே உனக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னது மட்டும் இல்லாமல், அக்பரை நம்பவைக்க அதைச் செய்து காட்டியும் நிரூபித்தார்.
இந்த நிகழ்விற்குப் பிறகு அக்பரின் குடும்பம் ஆரம்பத்தில் எப்படி எதற்கும் குறையில்லாமல் இருந்ததோ அதே போல் மாறியது. ஆனால் அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. கடலில் எழும் அலைபோல அடுத்தடுத்து பிரச்சனைகள் எழுந்தது.
அந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அந்த பிரச்சனையை நாயகனும் நாயகியும் சேர்ந்து எப்படி எதிர்கொண்டார்கள்? அதன் பிறகு இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்து வரும் வீடியோவில் பார்க்கலாம் என்று ஆதி தனது முப்பதாவது வீடியோவில் பேசி முடித்தான்.
யூடியூப் வாசிகளுக்கு இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் மனதில் காதலின் கால்தடமாகப் பதிய அடுத்த வீடியோ எப்போது வரும்? என்று ஆதியை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு வீடியோ முடிவிலும் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் மக்களை அந்தக் கதையில் இருந்து விலகவிடவில்லை.
மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையில் இருந்த ஆதி முப்பதாவது வீடியேவிற்குப் பிறகு இரண்டு நாட்கள் வீடியோவே போடவில்லை. காரணம் அதற்கடுத்து கதையின் நகர்வு எப்படி இருந்தது என்று அவனுக்கே தெரியாது. அம்மாவின் அலமாரியில் இருந்து எடுத்து வந்த அந்த அற்புதமான நோட்டில் அவனுடைய அம்மா ஜோதியின் அச்சடித்த கையெழுத்தில் எழுதியிருந்த, அனைவரின் வரவேற்பையும் அன்பையும் பெற்ற அந்தக் கதையின் கடைசி பக்கத்தைத்தான் முப்பதாவது வீடியோவாகப் பதிவேற்றினான்.
அந்த நோட்டின் கிழிந்த மீதிப் பகுதி வீட்டில் தனக்கு மட்டும் அடையாளம் தெரியும்படி எடுத்து வைத்திருப்பதாக நினைத்து இரண்டு நாள் கழித்து ஞாயிறு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வந்த ஆதியின் முகமெல்லாம் பல் ஜொலிக்கும்படி சிரிப்பு, காரணம் வீடு இடையில் கொஞ்ச நாள் கலையிழந்து காணப்பட்டது. ஆனால் இப்போது அந்த குறை குறைந்து வீடும் வீட்டில் இருப்பவர்களும் கலையானவர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும் மாறியிருந்தார்கள்.
அப்பா முன்பை விட அதிகமாக வீட்டிற்கு நேரம் ஒதுக்குகிறார். சிபி கொஞ்சம் வளர்ந்து சேட்டைகளைக் குறைத்துக் கொண்டு அம்மாவிற்கு குறைந்தபட்ச ஓய்வைக் கொடுத்துவிட்டான். யாமினியும் அவள் விருப்பப்படி பியூட்டிஷன் வகுப்பிற்கு போய்க்கொண்டிருந்தாள். எல்லோருக்கும் எல்லாவும் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆதியின் மனதும் சந்தோஷத்தில் நிறைந்தது.
வீட்டிற்குப் போன கொஞ்ச நேரத்தில் கிழிந்த பாதி நோட்டைத் தேடி அம்மாவின் அலமாரியைக் கிளரிக் கொண்டிருந்தான். ரொம்ப நேரமாகத் தேடியும் அங்கு அவன் தேடியது கிடைக்காததால் எரிச்சலில் அங்கிருந்த பொருட்களை எல்லாம் டம்மு டும்மென்று கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவன் சத்தத்தைக் கேட்டு அந்த அறைக்குள் நுழைந்த யாமினி “என்னடா உனக்கு பிரச்சன?. வீட்ல இருக்குறதா இல்ல வெளிய போறதா எல்லாரும்?” என்று கேட்டார்.
“நீ உன் வேலையப் பாக்குறியா யாமினி. நானே கடுப்புல இருக்கேன்“
“உனக்கு மட்டும் எங்கிருந்துதான் வருமோ இந்த கடுப்பு. சரி என்ன தேடுறனு சொல்லு நானும் தேடுறேன்“ என்று கேட்டாள். அந்த அறையில் இருந்து வெளியே சென்றவன் தன் பையில் இருந்து பாதி கிழந்த நோட்டை எடுத்து வந்து “இங்க பாரு யாமினி. இதோட மீதி நோட்டத்தான் நான் தேடுறேன். அது கிடச்சாதான் அடுத்த வீடியோ போட முடியும். இதே மாதிரி இருக்க நோட்ட தேடு“ என்றான்.
“ஓஓஓ அதுனாலதான் நீ ரெண்டு நாளா வீடியோ போடலையா? “
“ஆமா. எல்லாம் பக்காவா கொண்டு வந்துட்டு கடைசியில சொதப்பிருவனோனு பயமா இருக்கு. இப்போதைக்கு மைன்டுல இதுதான் ஓடிட்டு இருக்கு. வேற எந்த சிந்தனையும் இல்ல. டென்ஷனா இருக்கு“
“சரி விடு டென்ஷன் ஆகாத நானும் தேடுறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தேடுனா சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்குல”
“ம்ம் சரி. நான் தடம் பாத்துதான் வச்சேன். ஆனா இப்போ பாத்தா கணோம்“
“இங்கதான் இருக்கும். நீ ஒழுங்கா பாக்காம விட்டிருப்ப ஆதி. கொஞ்சம் இப்படி வா நான் பாக்குறேன்“ என்று சொல்லி ஆதியையை ஓரமாக நிற்க வைத்துவிட்டு யாமினி தேடிக் கொண்டிருந்தாள். இல்லை இல்லை தேடுவது போல நடித்துக் கொண்டிருந்தாள். ஆதி விட்டுச் சென்ற அந்த நோட்டின் மீதி பகுதி அங்கு சுத்தி இங்கு சுத்தி கடைசியில் யாமினியின் கையை வந்து சேர்ந்தது. ஆதியும் யாமினியும் தேடிக்கொண்டிருந்த அந்த பொருள் யாமினியின் பொறுப்பில் பத்திரமாக அவள் பொருள்களுக்கு நடுவே ஒழிந்திருந்தது.
அங்கு இல்லாத பொருளை அறை நாள் முழுக்க தேடித் தேடி களைத்துப் போனார்கள். அது அங்கு இல்லை எனத் தெரிந்தும் யாமினி தேடியதற்கு பல காரணங்கள் அவள் மனதிற்குள் புதைந்திருந்தது.
அந்த நோட்டைக் காணவில்லை என்கிற கோபமும் படபடப்பும் தலைக்கு மேல் ஏறிய ஆதி அதைத் தன் அம்மாவிடம் கொட்டினான். “அம்மா… இங்க வா ஒரு நிமிஷம்“ என்று தொண்டை கிழிய ஓயாமல் கத்திக் கொண்டிருந்தான். மதிய சமயலைக் கவனித்துக் கொண்டிருந்தவள் கரண்டியோடு வெளியே வந்து நின்றாள்.
“ஏன்டா கத்திக் கத்தி வீட்ட ரெண்டாக்கிட்டு இருக்க?”
“உன்னோட நோட்டு ஒன்னக் காணோம் நீ எடுத்தியா? “
“உன்னோட நோட்டு காணோம்னா ஏன்டா என்கிட்ட கேக்குற? நான் என்ன எந்நேரமும் உன் நோட்ட வச்சு எழுதிகிட்டா இருக்கேன். காணோம்னா போய் தேடுடா எனக்கு நிறையா வேல இருக்கு“
“படபடனு ஆடாம கொஞ்சம் பொறுமையா நான் பேசுறத கேட்டுட்டு அப்புறம் பதில் பேசுறியா?. நான் என்னோட நோட்ட கேக்கல. உன்னோட நோட்ட காணோம் பாத்தியானுதான் கேட்டேன்“
“நான் எந்த நோட்டு வச்சிருந்தேன்? ”
“அதான் அந்த அலமாரி முழுக்க நோட்டும் பேப்பருமா கிடக்கே அதுல ஒரு நோட்டக் காணோம்“
“அதான் அலமாரி முழுக்க இருக்குனு நீயே சொல்றியே வேற எதாவது நல்ல நோட்டா பாத்து எடுத்துக்கோடா“
“ம்மா புத்திசாலித்தனமா பேசாதமா நான் டென்ஷன் ஆகிருவேன். ஆல் ரெடி நான் பயங்கர கோபத்துல இருக்கேன்“
“சும்மா எதாவது கேட்டு நீ என்ன டென்ஷன் பண்ணாத நான் பத்திரகாளியா மாறிடுவேன்.அந்த அலமாரி பக்கம் போயே பல வருஷம் ஆகிருச்சு. நீதான் ஏதோ யூடியூப் வீடியோவுக்கு கத வேணும்னு பழச போட்டுக் கிளறிட்டு இருந்த. இப்போ என்கிட்ட கேட்டா என்னடா அர்த்தம்?“
“அப்போ நீ எடுக்கலையா? உனக்குத் தெரியாதா? நீ பாக்கலையா?”
“சத்தியம் எதுவும் பண்ணனுமாடா?”
“இல்ல இல்ல வேணாம். நீ போய் உன் வேலையப் பாரு. நோட்ட தேடித் தேடி பசியே எடுத்துருச்சு”
“ம்ம்ம் அவ்வளோதான் பத்து நிமிஷத்துல சாப்பாடு ரெடி ஆகிரும்”
இந்த சூழலில் குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எப்படி சந்தித்தாலும், செல்லமாய் கோபப்பட்டும், லேசாக அதட்டியும் சமாளிக்க வேண்டும் என்று ஜோதியிடம் இருந்து யாமினி கற்றுக்கொண்டாள். காரணம் அந்த பாதி கிழிந்த நோட்டு ஜோதியின் கையில் இருந்துதான் யாமினியின் கைக்கே மாறியது. இந்த விஷயம் தனக்கும் தன் கணவனுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று நினைத்த ஜோதிக்குத் தெரியாது அந்த நோட்டு இப்போது யாமினிடம்தான் இருக்கிறது என்று.
எந்த உண்மையும் தெரியாத வரைக்கும்தான் சந்தோஷம். பிறரிடம் பகிர முடியாத உண்மையை சுமப்பது எல்லாம் மிகப் பெரிய வலி. அந்த உண்மை ஜோதியின் முதுகில் இருந்து தாவி யாமினியின் முதுகில் வேதாளம் போல் தொற்றிக் கொண்டது. பிடியில் சிக்கிய யாமினி வேர்த்து விறுவிறுத்தாள். பிடியில் இருந்து விலகிய ஜோதி சந்தோஷமாக அந்த வீட்டில் சுற்றித் திரிந்தாள்.
உண்மை இதுதான் யாமினிக்குத் தெரிந்த பிறகு ஆதியின் அம்மாவும் அப்பாவும் அவளுக்கு வாழும் கடவுளானார்கள். முன்பு இருந்ததை விட அதிகமாக, வார்த்தைகளால் அடக்கி விட முடியாத உயரத்தில் சென்று அமர்ந்து கொண்டார்கள் அவர்கள் இருவரும்.
நாளுக்கு நாள் ஆதியின் அப்பா அம்மா மீது யாமினிக்கு அன்பும் மரியாதையும் கூடிக்கொண்டே இருந்தது. இந்தக் குடும்பம் இன்று இருப்பது போல என்றும் சிறு கீரல் கூட விழாமல் இருக்க வேண்டும் என்றும் யாமினி கடவுளை வணங்காத நாளே இல்லை.
எப்படியும் மீதிக் கதையைத் தேடி ஆதி வீட்டிற்குள் உலாவான் என்பது அவளுக்குத் தெரியும். அப்பா அம்மாவிற்கும் தெரியும். யாமினி எக்காரணம் கொண்டும் உண்மை தன் மூலமாக ஆதிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
இந்த விஷயத்தைப் பற்றி ஆதி வீட்டில் குரலைத் திறந்தாள் அதை அப்படியே அடைத்து அவனை திசை திருப்ப, அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஆதியின் அப்பா.
அத்தியாயம் – 25, 26
அத்தியாயம் – 25
நம்மிடம் எப்படி அலட்டிக்கொள்ளாமல் ஆற அமரப் பேசினாளோ அதே போல் அப்பாவிடமும் பேசி காரியத்தைச் சாதிக்கப் பார்க்கிறாள் என்பதை ஜோதா புரிந்து கொண்டாள்.
தன்னால் அக்பருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்கிற எண்ணத்தில் இருந்தாளே தவிர, அவர் இல்லாத வாழ்க்கையை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. என்னதான் குடும்பத்தின் மீது பாசம் இருந்தாலும் அதற்காக அவரை அவள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
வீட்டிற்குள் இதைப்பற்றி பேசி கரைச்சல் ஏற்பட்டுவிட்டால், விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்று இதைக் கண்டு கொள்ளாமல் விட்டதைப் போல வீட்டில் சத்தமில்லாமல் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. இதைப்பற்றி தெரியாத ஜோதா, குடும்ப பாசத்திற்கும் காதலுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.
இங்கு நடப்பதை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு தன் காதலனுடன் பேசாமல் இருந்தால், அம்மாவின் திட்டம்தான் நிறைவேறும். ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாமல் பொட்டிலில் கட்டிய பொதி மாடு போல ஒரு மட்டமான வாழ்க்கையை வாழும்படி ஆகிவிடும். அவருக்குத் தாங்கிக் கொள்ள முடியாத வலியைக் கொடுத்துவிட்டு நாமும் வலியில் வாழ்ந்தாள் உருகி உருகி காதலித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று தெளிவாக ஒரு திட்டம் தீட்டினாள்.
அம்மாவிற்கு விஷயம் தெரிந்ததில் இருந்து வீட்டில் என்னென்ன நடந்ததோ அதை எல்லாம் அக்பருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்து விட்டு மீண்டும் அவருடைய எண்ணை அழித்தாள்.
அவளைக் கூட்டிச் செல்ல அவர் எப்படியானாலும் வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை அவள் மீது அவளுடை அம்மா வைத்திருந்த நம்பிக்கையை விட திடமாக இருந்தது.
அம்மாவிடம் இருந்து நாம் எல்லோரும் எத்தனையோ விஷயங்களைக் கற்றிருப்போம். ஜோதாவும் அப்படித்தான். அவள் அம்மாவிடம் இருந்து எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை எப்படிப் பதறாமல் சுமூகமாக கையாலுவது என்கிற வித்தையைச் சமீபத்தில் கற்றுக்கொண்டாள். கற்றுக் கொண்டதை காலம் நேரம் பார்க்காமல் உடனே செயல்படுத்தவும் செய்தாள்.
கட்டில் மீது கிடந்த புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு அப்பாவி போல் மாப்பிள்ளை வீட்டார் முன் சென்று நின்றாள். அவள் வீட்டாரிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பாக இருந்தே அவளைப் பெண் கேட்டு நச்சரித்த அவர்களுக்கு கொண்டாட்டமாய் இருந்தது.
அவளைப் பிடித்திருப்பதாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவளைத் தவிர அங்கு இருந்தவர்களின் பற்கள் எல்லாம் வெளிச்சமாக இருந்த வீட்டை இன்னும் பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் முன்னாள் இல்லாத விருப்பத்தைப் போராடி வரவைத்து சிரிப்பது போல் நடிப்பது சுடு கனலில் நிற்பது போல அவளை வாட்டி எடுத்தது.
நேரத்தைத் தாழ்த்திக் கொண்டே சொல்லாமல் சட்டு புட்டென கையோடு கையாக இப்போதே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று மாப்பிள்ளை வீட்டு பெரிய தலை ஒன்று குரலை உசத்திச் சொல்ல, அவள் வீட்டில் இருந்த பெரியவர்களும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதுதான் சரி என்று பேச்சை முடித்தார்கள்.
பெண் பார்க்க வந்த வீட்டில் நிச்சயதார்த்தமும் நடந்தது. இவ்வளவு நடந்த போதும்கூட ஜோதாவிற்கு ஒரு துளி பயம்கூட இல்லை. அதற்கு பதிலாக கோபமும் வெறுப்பும்தான் அதிகமாக இருந்தது. காரணம் எது நடந்தாலும் கூத்து இந்த ஒரு நாளைக்கு மட்டும்தான் என்று ஜோதாவிற்கு தெளிவாகத் தெரியும்.
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு மாப்பிள்ளை வீட்டார் பந்தியில் அமர்ந்தார்கள். அவர்களுக்காகவே தயாரான உணவை அம்மா பறிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது “பொண்ணையும் மாப்பிள்ளை பக்கத்துலயே உக்காந்து சாப்பிடச் சொல்ல வேண்டியதுதானே” என்று ஒரு குரல் மட்டும் கேட்டது, ஆள் சரியாகத் தெரியவில்லை.
கூட்டத்தில் யாராவது எதாவது சொல்லிவிட்டால் போதும் மீதி இருக்கும் அனைவரும் அதையே பிடித்துத் தொங்குவார்கள். அவள் அண்ணி அவளை போய் உட்காரச் சொல்லி கண் ஜாடை காட்ட வேறு வழி இல்லாமல் அவளும் போய் உட்கார்ந்தாள். அப்படி உட்காரும் போது இருந்த மனநிலைக்கு இதுவரைக்கும் முறையான பெயரே வைக்கவில்லை. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், அங்கு இலை விரித்துப் போடப்பட்ட பந்தியை இலையைக் கிழித்தெரிந்து, குழம்பு குண்டாவில் பாதி மூழ்கியிருந்த கரண்டியை எடுத்து அங்கிருந்த அனைவரையும் ஓட ஓட அடித்து விரட்ட வேண்டுமென்று பேராசையாக இருந்தது அவளுக்கு. சூழல் ஏற்றதாக இல்லாததால் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தாள்.
எப்படியோ அந்த நாள் கோணல் மாணலாக இருந்து முடிந்துவிட்டது. மறுநாள் இவளுடைய செல்ஃபோனிற்கு ஒரு புதிய எண்ணில் இருந்து “ஹாய்“ மெசேஜ் வந்திருந்தது. தன்னைப் பெண் பார்க்க வந்த கோமாளியாகத்தான் இருக்கும் என்று அதைக் கண்டு கொள்ளாமல் கிடப்பில் தள்ளிவிட்டு போர்வையை மூடி கனவிற்குள் மூழ்கினாள்.
நேற்று நடந்த அதே காட்சியில் அக்பர் இருந்திருந்தால் அவளுடைய அந்த நாள் எப்படி இருந்திருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள்.
பெண் பார்க்க வருகிறார்கள் தயாராகு என்று அம்மா சொல்லுவதற்கு முன்பாகவே அவள் பாதி தயாராகி இருந்திருப்பாள். தன் ஆசை காதலன் அவளைப் பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற ஆசையில் அன்றைக்கு அணிய வேண்டிய அத்தனையையும் தரமானதாகத் தேர்ந்தெடுத்திருப்பாள். கண்மையைக் கொண்டு இன்னுமொரு அடுக்கு கண் வரைந்திருப்பாள். ஒற்றை வளையளோடு நிறுத்தாமல் அவளையும் அவனையும் போல முட்டி மோதி விளையாடிச் சிரிக்க கூடவே ஐந்து வளையல்களை இரு கைகளிலும் அணிந்திருப்பாள். கண்ணாடி முன் நின்று அவளுக்கு அவளே முத்தம் கொடுத்துப் பூசிய உதட்டுச் சாயத்தினால் அவனுடைய வெள்ளைச் சட்டையில் அந்த அழகான நாளைப் பதிவு செய்திருப்பாள்.
கூடியிருந்த பெரியவர்கள் எல்லாம் சாங்கியம் சம்பர்தாயம் பேசிக் கொண்டிருக்கும் போது இவர்கள் இவரும் பார்வையாலே பக்கத்தில் அமர்ந்து கொஞ்சித் தீர்த்திருப்பார்கள். சிறு சந்தர்ப்பம் கிடைத்திருந்தாள் கூட கையைப் பிடித்து, கன்னம் கிள்ளி அந்த நாளை இன்னும் இனிப்பாக மாற்றியிருப்பார்கள். நிச்சயதார்த்த மோதிரத்தை அவள் கையில் அவன் போடும் போது கையில் வரைந்திருந்த மருதாணி கோலம் எப்படி இருக்கிறதா? என்று கண்ணாலே கேட்டிருப்பாள். பதிலுக்கு அவனும் மோதிரத்தை ஆள் காட்டி விரலால் இரண்டு முறை தட்டி அருமையாக இருக்கிறது என்று சொல்லியிருப்பான். அந்த நிகழ்வில் கலந்திருந்த ஒவ்வொரு நொடிகளும் அவளது டைரியில் புதுப்புது கதைகளாகப் படிந்திருந்திருக்கும்.
அவனுக்காக பிறப்பெடுத்துவிட்டு இப்படியெல்லாம் சோதனையை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது போல என்று சடைத்தபடியே பெருமூச்சு விட்டாள். அவள் கண்ட கனவில் அவன் முகம் மங்களாகத்தான் தெரிந்தது. அதனால் அவள் செல்ஃபோனில் மறைத்து வைத்திருந்த அவனுடைய புகைப்படத்தைப் பார்க்க செல்ஃபோனைக் கையில் எடுத்து உள்ளே நுழைந்தாள். அப்போது அவள் கவனத்தைத் திசை திருப்பும்படி முன்பு பார்த்த அதே எண்ணில் இருந்து பதினைந்து குறுஞ்செய்தி வந்திருப்பதாகக் காட்டியது. என்ன இது என்று அதன் உள்ளே நுழைந்தாள் ஜோதா.
குறுஞ்செய்திகள் முழுவதையும் பொறுமையாக வாசித்த பிறகுதான் தெரிய வந்தது அந்த எண்ணிற்கு சொந்தக்காரர் அக்பர்தான் என்று. வீட்டில் என்ன நடந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நீ எதை நினைத்தும் குழம்ப வேண்டாம். நான் இப்போது அங்குதான் வந்து கொண்டிருக்கிறேன். நாளை காலை உன் வீட்டிற்கு வந்து எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடுகிறேன் என்று அவர் சொல்லியிருந்தார்.
வீட்டிற்கு வந்து நீங்கள் பேசியதும் பிள்ளைகளின் ஆசைப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறார்கள் இவர்கள் வித்தியாசமானவர்கள் இல்லை. இவர்களும் மற்ற எல்லா பெற்றோர்களைப் போலவே காதலையும் காதல் திருமணத்தையும் தரம் குறைவான செயலாகவே பார்க்கிறார்கள். அதுவும் நம் இருவருக்கும் காதல் என்பதைத் தவிர வேறு எதிலுமே ஒற்றுமை கிடையாது. இப்படி பல சிக்கல்களுக்கு நடுவில் நீங்கள் வந்து பேசி சமாதானம் செய்த பிறகு நாம் ஒன்று சேர்வது என்பது நடக்காத காரியம். நாளை காலை வானம் நன்றாக விடுவதற்கு முன்பாகவே என் வீட்டிற்கு முன் தயாராக இருங்கள். நான் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எப்படியாவது அங்கிருந்து என்னைக் கேரளாவிற்கே அழைத்துச் சென்று விடுங்கள் என்று செல்ஃபோன் திரையில் கண்ணீர் வழிய அழுதபடியே எழுத்துக்களைத் தட்டி செய்தியாக்கிக் கொண்டிருந்தாள்.
ஜோதாவின் யோசனைக்கு சம்மதித்த அக்பர் அதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்தினார். மறுநாள் சொன்னபடியே வீட்டை விட்டுக் கிளம்பிய ஜோதாவைக் காரில் ஏற்றித் தன் சொந்த ஊருக்கு அழைத்து வந்த அக்பர் அடுத்த நாளே அவளைத் திருமணமும் செய்து கொண்டார்.
ஜோதாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு கலங்கிப் போய் இருந்த ஜோதாவின் அப்பாவிற்கு அழைத்து நடந்ததை எடுத்துச் சொன்னார் அக்பர். இருவருக்கும் வாய் சண்டை பல மணி நேரம் தொடர்ந்தது. ஆரம்பத்தில் வாய்க்கு வந்ததைப் பேசிக் காயப்படுத்திய ஜோதாவின் அப்பா கடைசியில், நன்றாக இருங்கள் என்று சொல்லி முடித்தார்.
அவருடைய அழைப்பைத் துண்டித்த பிறகு அக்பர் ஜோதாவிடம், நாம் கூடிய சீக்கிரமே உன் வீட்டிற்கு போய் அப்பா அம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆயிரம்தான் இருந்தாலும் அவர்களுடைய பார்வையில் நாம் செய்தது மிகப் பெரிய தவறு. அவர்கள் மனதும் குளிர்ந்தால்தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார்.
காதலித்தவனையே கரம் பிடித்த திருப்தியில் இருந்த ஜோதாவிற்கு அக்பரைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர் என்ன முடிவு செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று எதுவும் பேசாமல் தலையாட்டினாள்.
அவர்களுடைய திருமணம் திருச்சூரில் அக்பரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் வைத்து மிக எளிமையாக இஸ்லாமிய முறைப்படி நடந்தது. அங்கு கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் எல்லாம் ஜோதாவிற்கு புதிதாக இருந்தது. அக்பரின் வீட்டுச் சொந்தங்கள் ஜோதாவை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். எல்லாமே ஜோதாவின் விருப்பப்படியும் சந்தோஷத்தை கருத்தில் கொண்டுதான் அந்த திருமணம் நடந்தது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் ஜோதாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அக்பரின் மீது இருக்கும் ஆதித காதல் அவருக்காக அதை மட்டும் விட்டுக் கொடுக்கச் சொன்னது. ஜோதா அக்பரை திருமணம் செய்வதற்கு முன்பு இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்கிற முறை அங்கிருந்த பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது.
அத்தியாயம் – 26
இந்த முடிவில் அக்பருக்கும் பெரிதாக உடன்பாடு இல்லை. எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக அவளை செயல்பட வைப்பதுதான் அவருக்குத் தெரிந்த காதலாக இருந்தது. அதே நேரத்தில் எல்லாரையும் எதிர்த்து நிற்க முடியாது. யாராவது நம்மையும் நம் முடிவையும் ஏற்றுக் கொள்ள தயாராகும்போது நாமும் அவர்களையும் அவர்களது முடிவையும் ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் நினைத்தார்.
எல்லாம் நல்லவிதமாக சென்றுகொண்டிருக்கும் சமயத்தில் இதை ஜோதாவிடம் சொன்னால் அதை அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள் என்கிற பயம் அக்பருக்கு அதிகமாகவே இருந்தது. அதனால் இந்த விஷயத்தை தன் அம்மாவை விட்டு ஜோதாவிடம் கேட்கச் சொன்னார். அம்மா அவளிடம் கேட்டபோது சற்று நேரம் அமைதியான ஜோதா பிறகு சரி என்று சொன்னாள்.
அம்மாவும் அவளும் பேசுவதை மறைந்திருந்து கேட்ட அக்பர் முன்வந்து ஜோதாவைப் பார்த்து “என்னடி கஷ்டமா இருக்கா?. இங்க இப்படி ஒரு ரூல் இருக்கும் போது அத நம்மளால மீற முடியாது. பெரியவங்க எது சொன்னாலும் நம்ம நல்லதுக்காகவாதான் இருக்கும். உனக்கு புரியும்னு நெனைக்குறேன். இப்போதைக்கு கல்யாணத்துக்கு மட்டும் அவங்க சொல்ற மாதிரி கேட்டு நடந்துக்கோ. அப்புறம் நீ வீட்ல இருக்கும் போது எப்படி வேணாலும் இருக்கலாம்” என்று அமைதியான குரலில் சொல்லியும் பாதி சொல்லாமலும் பாதியாய் தினறினார்.
அக்பருடைய நிலை புரிந்த ஜோதா, “இந்த சின்ன விஷயத்துக்காக நீங்க ஏங்க என்கிட்ட போய் கெஞ்சுறீங்க. உங்களுக்காக என்ன செய்ய சொன்னாலும் நான் செய்வேன். எல்லாத்துக்கும் தயாராதான் வந்திருக்கேன். இப்போ திடீர்னு வந்து சொன்னதும்தான் ஒரு மாதிரி இருக்கு. மத்தபடி எனக்கு ஒன்னும் இல்ல” என்று சொன்னாள்.
சிறப்பாய் வாழ்ந்து சலித்த பெரியோர்களின் வாழ்த்துக்களோடும் ஆசிர்வாதங்களோடும் ஜோதாவிற்கும் அக்பருக்கும் திருமணம் நடந்தது. அதிக எண்ணிக்கையில் மக்களை அழைக்க முடியாத சூழலால், வந்திருந்த குறைந்த நபர்களுக்கு மட்டும் அவர்களுடைய வீட்டிலே தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது.
திருமண வயதை எட்டிய உடனே எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசை ஜோதாவிற்கு மட்டும் இருக்காதா என்ன?. அவளுக்கும் அவளுடைய திருமணம் பற்றிய வண்ண வண்ண கனவுகள் இருந்தது. ஆனால் அந்த கனவுகளை சிதைத்து முற்றிலும் அவள் எதிர்பார்க்காதபடி அவளுடைய திருமணம் நடந்து முடிந்தது.
ஜோதாவின் அப்பா அம்மாவிடம் சமாதானம் பேச கிளம்புவது பற்றி அக்பர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஜோதாவின் அப்பா அக்பருக்கு அழைத்து வீட்டு விலாசத்தைக் கேட்டுக்கொண்டு நாளை அங்கு வந்து மகளையும் மருமகனையும் சந்திக்க விரும்புகிறோம் என்று சொன்னார்.
நடப்பது கனவா? நினைவா? என்று புரியாமல் அக்பர் தலைகால் புரியாத சந்தோஷத்தில் விஷயத்தை ஜோதாவிடம் சென்று கொட்டித் தீர்த்தார். தன் உணர்வை வார்த்தைகளாக கோர்க்கத் தெரியாத ஜோதா சிரித்த முகத்தில் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு மகிழ்வை வெளிப்படுத்தினாள்.
சொன்னது போலவே ஜோதாவின் அம்மா அப்பா திருச்சூரில் இருக்கும் ஜோதாவின் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டையும் அங்கிருந்த மக்களையும் பார்த்ததில் திருப்தியடைந்த ஜோதாவின் பெற்றோர், “என் மகள் இங்கு சந்தோஷமாக வாழ்வாள் என்கிற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. ஊர் பேருக்கு பயந்து நாங்க எடுத்த முடிவுதான் என் புள்ளைய தப்பான முடிவு எடுக்க வச்சிருச்சு. மத்தபடி அவளோட சந்தோஷத்தக் கெடுக்கனும்றது எங்களோட நோக்கம் இல்ல. இப்போதைக்கு நீங்க ஊர் சைடு வர வேணாம் எதுவா இருந்தாலும் நாங்களே வந்து பாத்துட்டு போறோம். நீங்க அங்க வந்தா தேவையில்லாத பிரச்சனதான் வரும். நாங்களே இப்போ யாருக்கும் தெரியாமதான் இங்க வந்திருக்கோம்“ என்று கண்ணைக் கசக்கியபடி பேசினார்கள்.
அவர்கள் பேசுவதை தலைகுனிந்து கேட்டு ஜோதாவும் அக்பரும் , “நீங்க எப்போ வேணாலும் இங்க வரலாம்” என்று சொன்னார்கள். வீட்டிற்கு வந்து ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்காமல் வந்த வேகத்தில் பேச வேண்டியதைப் பேசிவிட்டுத் திரும்பினார்கள். வீட்டை விட்டு வெளியே கடப்பதற்கு முன்பு ஜோதாவின் அம்மா ஒரு பொட்டலத்தைக் கையில் கொடுத்து, “இது உனக்காகவும் மாப்பிள்ளைக்காகவும் நம்ம மாரியம்மன் கோயில்ல பூஜ பண்ணி கொண்டு வந்த பிரசாதம்“ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்கள்.
தாய் தகப்பனின் மனமும் ஒத்துப்போய் ஆசைப்பட்ட வாழ்க்கை அமைந்த உற்சாகத்தில் ஜோதா திகைத்தாள். எந்த விதத்திலும் ஒத்துப் போகாத ஒரு குடும்பத்தில் பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோரின் மனநிலையைப் புரிந்திருந்த அக்பரும் அவருடைய அம்மாவும் ஜோதாவை அவள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சந்தோஷமாக வைத்திருந்தார்கள்.
பழகாத ஊர், தெரியாத பாஷை, புரியாத பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றையும் கொஞ்ச நாட்களிலே பழகிக் கொண்டாள் ஜோதா. அவளுக்கு அங்கிருந்த வாழ்க்கை சூழல் ரொம்ப பிடித்துப் போய்விட்டது.
எந்தக் குறையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த ஜோதாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. கனவில்கூட நினைத்துப் பார்க்காதபடி ஒரே மாதத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது.
அக்பருக்கு பைக் விபத்து ஏற்பட்டு குதிங்கால் எழும்பு உடைந்து ப்ளேட் வைக்கும் அளவிற்கு அதிக வலியையும் செலவையும் உண்டாக்கியது. அக்பரின் உடல்நிலை தேறி வரும்வரை வருமானத்திற்கும் வழியில்லாமல் போனது. சிகிச்சை செலவிற்காகவும் மற்ற செலவிற்காகவும் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கினார்கள். அதன் பிறகு அக்பர் ஒரு வருடமாக வேலைக்கே போகவில்லை.
வாங்கிய கடனுக்கு வட்டி கூடிக் கொண்டே போக கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் அக்பர் பழையபடி வேலைக்குப் போனார்.
அக்பருடைய காலில் ப்ளேட் இருந்ததால் உறுத்தலும் வலியும் அதிகமாக இருந்தது.
முன்பைப்போல் அவரால் பாக்ஸிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் அங்கு வருபவர்களுக்கு ட்ரைனிங் மட்டும் செய்தார்.
விபத்தில் இருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையில் நுழைந்த சில மாதங்களிலே அக்பருக்கு பயங்கரமான வயிறு வலி ஏற்பட்டது. குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனையாகவே இருப்பதால் அக்பரின் அம்மாவிற்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதைத் தீர்ப்பதற்காக அக்பருக்கு விருப்பமே இல்லாவிட்டாலும், அவரை அழைத்துக் கொண்டு சிக்கல்கள் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அந்த இடத்தில் நம்மீது ஏதாவது காத்து கருப்பு உரசி இருந்தாலோ, ஏவல் இருந்தாலோ அல்லது எவ்வளவு பெரிய சிக்கலான மாந்திரீகம் இருந்தாலோ அதை முற்றிலுமாக அகற்றி விடுவார்கள். இதில் எல்லாம் அக்பருக்கு கொஞ்சம்கூட நம்பிக்கயே இல்லை. அவருக்கு இம்மாதிரியான ஆட்களை பிடிக்கவும் பிடிக்காது. அம்மாவின் வர்ப்புறுத்தல் காரணமாகத்தான் அங்கு சென்றார்.
அவர் முகத்தைப் பார்த்ததும் நடந்த அத்தனை விபத்துக்களையும் பிரச்சனைகளையும் புட்டுப்புட்டு வைத்தார் அங்கிருந்த தாடி சாமியார். இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் மக்கள்தான் இங்கு வருவார்கள் என்கிற யூகத்தில்தான் பேசுகிறார் என்று அக்பர் அதற்கு ஆச்சர்யப்படவில்லை. ஆனால் அக்பரின் அம்மாவிற்கு வியப்பாக இருந்தது.
“என் புள்ளைய தூசு துரும்பு படாம வளத்துனே சாமி. எவ்வளவுக்கு எவ்வளவு என் புள்ளைய பொத்திப் பொத்தி வளத்தனோ அந்த அளவுக்கு இப்போ என் புள்ள படாத கஷ்டம் படுறான் சாமி. நீங்கதா அவனுக்கு இருக்க கஷ்டத்த எல்லாம் போக்கி ஒரு நல்ல வலி காட்டனும்“ என்று கைகூப்பிக் கண்ணீர் விட்டு அழுத அம்மாவைப் பார்த்து முறைத்துக் கையைத் தட்டிவிட்டார் அக்பர்.
அக்பர் தன்னை அலட்சியப்படுத்துவது தெரிந்தும் சாந்தமாக இருந்த அந்த தாடிச்சாமியார் அவரை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த மரப் பலகையில் சட்டையைக் கழற்றி விட்டுப் படுக்கச் சொன்னார். அவர் சொல்வதைக் காதில் கூட வாங்காத அக்பர் “எதுக்கு இதுல படுக்கனும்?. எதாவது கயிறு இருந்தா கொடுங்க நாங்க கிளம்புறோம். வேலை நிறையா இருக்கு” என்று சொன்னார்.
அக்பர் எவ்வளவு தட்டிக் கழித்துப் பேசினாலும் அந்த சாமியாரின் கை அந்தப் பலகையை நோக்கியே இருந்தது. சரி இவ்வளவு உறுதியாக இருந்து அப்படி என்ன அதிசயத்தை நிகழ்த்துகிறார் என்று பார்கலாம் என நினைத்தபடியே சட்டையைக் கழற்றிவிட்டு, அவர் சொன்ன அந்தப் பலகையில் படுத்தார்.
அந்த அறையை விட்டு வெளியேறிய தாடிச் சாமியார் இரண்டு நிமிடங்கள் கழித்து கையில் ஒரு நீளமான குழலோடு உள்ளே வந்தார். புகை போட்டுப் பொட்டு வைத்து அந்த குழலுக்கு பூஜை செய்தவர் பின் அங்கிருந்த அக்பரின் அருகே வந்து நின்றார்.
“இவ்வளவு நேரம் நீங்கள் என்னை அலட்சியமாக நினைத்ததற்கு வெட்கப்படப் போகும் நேரம் நெருங்கிவிட்டது. உங்களுடைய வயிற்றில் மருந்துகள் இருக்கிறது. அதனுடைய சக்திதான் உங்களுடைய வாழ்க்கையைப் பந்தாடுகிறது. ஒரு ஐந்து நிமிடம் மட்டும் எந்த கேள்வியும் கேட்காமல் சொல்வதை மட்டும் செய்தால், எல்லோருக்கும் நல்லது“ என்று சொல்லி அவருடைய வாயில் குழலின் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு அக்பருடைய வாயில் இன்னொரு பகுதியை வைத்தார். அக்பரின் அடி வயிற்றை அழுத்திய படியே, நான்கு முறை உறிஞ்சினார். அக்பருக்கு வயிற்றில் இருந்து ஆரம்பித்து தொண்டை வரை வலி எடுக்க ஆரம்பித்து பொறை ஏறி கக்கவும் செய்தார்.
இதே போல் நான்கைந்து முறை செய்யும் போதும் கொஞ்சம் கூட அளவு குறையாமல் அதே அளவு உருண்டைகளைக் கக்கினார். இருமலும் கண்ணீரும் அவரை விடாபிடியாகப் பிடித்திருந்தது.
கால் மணி நேரமாக கண் பார்வை தெரியாமல் பலத்த இருமலில் லொக்கு லொக்கென்று தொண்டை வறண்டு வாடினார். இருமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த பிறகு தொண்டையை நீவி சிறிதளவு தண்ணீர் குடித்து நிதானமாகினார். அதன் பிறகுதான் அவருக்கு பார்வை ஒரளவிற்குத் தெரிந்தது.
பழைய நிலைக்கு திரும்பிய அக்பரை அழைத்து “நீங்கள் உயிர் போகிற அளவுக்கு வலியை அனுபவித்துக் கக்கியதை வந்து பாருங்கள் “ என்று அவர் காட்டினார்.
வெள்ளை நிற உருண்டையின் மேல் பகுதியில் முடி முளைத்தது போல சடை சடையாய் இருந்தது. மொத்தம் எட்டு உருண்டைகள் இருந்தது. அதைப் பார்த்ததும் தலை சுற்றி நின்ற அக்பரைப் பார்த்து “இத பாத்து நீங்க ஒன்னும் பயப்படத் தேவையில்ல. உங்களப் பிடிச்ச எல்லா கிரகமும் ஒழிஞ்சதுனு நெனச்சு சந்தோஷமா போங்க“ என்றார் அவர்.
அத்தியாயம் – 23, 24
அத்தியாயம் – 23
ஜோதா அக்பரை வெறுக்கவில்லை. அவருடைய நினைவுகளைத்தான் வெறுக்கிறாள். அவர் இல்லாத நாட்களில் அவரை விட அந்த நினைவுகளே அவளை வாட்டி எடுத்தது. பிரிவின் கடைசி படிக்கட்டில் நின்று கதறிய நாட்களில் முதுகில் ஆணியாக இறங்கிய அந்த நினைவுகளை அவள் புறக்கணித்தாள்.
ஒருவேளை இந்தக் குறுஞ்செய்திக்கு அவர் சொந்தக் காரராக இருந்தால்? கனவில் இருந்து விழித்ததும் கண் முன்னே பார்த்த அவரின் முகம் உண்மையாக இருந்தால்? ஊஞ்சலில் இருந்த பரிசுப் பெட்டி எனக்கானதாக இருந்தால்? ரோஜவைக் கொடுத்த குழந்தை அவரது தூதாக இருந்தால்? இதற்கெல்லாம் முதலாக என்னை இடித்துவிட்டுச் சென்றவர் அவராக இருந்தால்? என்று தன் அச்சத்தை அடுக்கடுக்காய் அடுக்கினாள்.
வீட்டில் எல்லாம் இயல்பாகவே இருந்தாலும் அவளுக்கு மட்டும் எல்லாம் வித்தியாசமாகத் தெரிந்தது. வலியும் இல்லாமல் சுகமும் இல்லாம் இரண்டுக்கும் இடையே ஏதோ ஒன்றில் சிக்கிக் கொண்டாள்.
அன்று இரவு உறங்கும் முன்பு விருப்பமே இல்லாமல் தயக்கத்தோடு தன் செல்ஃபோனை எடுத்தாள். மீண்டும் அதே எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. “இன்னைக்கு வந்த அதே பார்க்ல நாளைக்கு நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். என்ன பாக்க எப்போ வருவ? எப்போ வருவனு சண்ட போட்டு இத்தன நாள் பேசாம இருந்துட்டு, உன்னையப் பாக்கலாம்னு வந்த பிறகு முகத்த மறச்சிட்டு திரும்பி பாக்காம போனா நியாயமா? “ என்கிற மெசேஜ் அவள் மனதைக் களைத்தது. அது அவளது காதலன் தான் என்பதில் இதற்கு மேலுமா சந்தேகம் வந்துவிடப் போகிறது?.
அவர் மீது இருந்த காதல் ஒரு துளி கூட குறையவில்லை அவளுக்கு. அதேசமயம் காதலின் அளவைக் காட்டிலும் கூடுதலாக பயமும் இருக்கிறது. அந்த பயத்திற்கு அவரது பிரிவு தந்த வலிதான் காரணம். எவ்வளவு யோசித்து மனதைத் தேற்றி நாளை சந்திக்கச் செல்லலாம் என்று முடிவு செய்தாலும், மீண்டும் நெருங்கி வாழ்க்கை தடம் மாறி இனிமையான பாதையில் போய்க் கொண்டிருக்கும்போது என்னுடைய பிடிவாதத்தாலும் அவருடைய கோபத்தாலும் மீண்டும் அந்த பிரிவு என்கிற அரக்கனைச் சந்திக்க நேரிட்டால் என்ன செய்வது? என்கிற அச்சமும் அவளை வழிமறித்தது.
அவள் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் முரணாகத் தோன்றினாலும் அதற்கெல்லாம் இறுதி பதிலாக அவர் மீது அவள் வைத்திருக்கும் பைத்தியக்காரத்தனமான காதல்தான் வந்து நிற்கிறது. இந்த சிந்தனை இரவு இரண்டு மணி வரைக்கும் விடாமல் துரத்த, படுக்கையை விட்டு எழுந்து நாளை அவரைப் பார்க்க எந்த உடையை அணிந்து கொள்ளலாம் என்று அலமாரியைக் கிளரிக் கொண்டிருந்தாள்.
குப்பை மேடாக அவள் துணி இருக்கும் பெட்டியில் காக்கி நிற கவரால் மூடப்பட்ட ஒரு சிவப்பு நிற ஆடையைப் பார்த்தாள். அது ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட உயர்தர மேலங்கி (கவுன்). அவளுக்கெனவே சிறப்பாக வடிவமைத்தது போல அளவும் வடிவமும் ஏற்புடையதாக இருந்தது.
அதைப் பார்த்ததும் அவள் கண்கள் மின்னியது. அந்த ஆடையைப் பற்றி காலையில் அம்மாவிடம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உறங்கினாள்.
மறுநாள் காலையில் அதைப் பற்றி விசாரிக்கும் போது, அந்த ஆடை உன் தோழி மலர்தான் விரைதூதரில் (கூரியர்) அனுப்பியிருந்தாள். நேற்றுதான் நம் வீட்டில் வந்து கொடுத்தார்கள். அந்நேரம் பார்த்து நீ வெளியே சென்றதால், உன் அலமாரியில் வைத்தேன். நீ வந்ததும் சொல்லலாம் என்று இருந்தபோது உன் முகமே வாட்டமாக இருந்தது, நான் பேசுவதைக் கேட்கும் நிலையில் நீ இல்லை. அதனால் சொல்லாமல் விட்டுவிட்டேன் என்று அம்மா சொன்னாள்.
அம்மா சொன்னதைப் போலவே அந்தக் காக்கி நிற கவரின் பின்புறம் அனுப்புநர் என்பதன் கீழ் மலர் என்று அவளது தோழி பெயர் இருந்ததைக் கவனித்தாள். அதை அனுப்பியது மலர் இல்லை என்றும், அதை யார் அனுப்பினார்கள் என்றும் ஜோதாவிற்கு நன்றாகவே தெரியும். அந்த ஆடையைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணாடியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் “இவ்வளோ ஆசைய வச்சிட்டு இத்தன நாள் பேசாம இருந்தீங்கள்ல. இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு இருக்கு”
அவள் எதிரில் இருந்த கண்ணாயிடில் இருந்து வெளியே நடந்து வந்தவன் இரண்டு கன்னத்தையும் அழுத்திப் பிடித்து குறுகிப் போன அவள் உதட்டைப் பார்த்து “என்ன இருக்கு? “ என்றான். “ஒன்னு இல்ல நீங்க ஏன் இப்போ வந்தீங்க? போங்க“ என்று கண்ணை இறுக்கமாக மூடியபடியே அவள் சொல்வதைப் பார்த்துச் சிரித்தான்.
குழந்தைத்தனமான அவள் அடத்தைக் கொஞ்சம் பொறுத்துப் போயிருந்திருக்கலாம் என்று நினைத்தான். இதழ் அருகே இருந்த பார்வையை சற்று உயர்த்தி படர்ந்த நெற்றியின் மீது பக்குவமாய் பச்சை குத்திவிட்டு ஈர எச்சிலை அப்படியே விட்டுக் காற்றில் மறைந்தான்.
“அவன் எங்கே? “ என்று கண்ணாடியிடம் அவள் கேட்டதிற்கு கண்ணாடியும் வெட்கத்தில் சிதறி சில்லு சில்லானது.
மதியத்தில் இருந்தே மயக்கத்தில்தான் இருந்தாள் ஜோதா. அவனைப் பார்க்க தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். இரண்டு வருட காதலில் இன்றுதான் அவனை முதன் முதலில் பார்க்கப் போகிறேன் என்கிற துள்ளலில் இருந்தாள். எப்படிப் பார்த்தாலும் சண்டையின் இறுதியில் நான்தான் ஜெயித்திருக்கிறேன் என்கிற அழகான ஆணவத்தோடு அலங்காரச் செயலில் ஈடுபட்டாள்.
அணிந்ததைக் கழற்றி, அத்தனையையும் களைத்துப் போட்டு, பின் முதலில் தேர்ந்தெடுத்ததையே எடுத்துப் போட்டுக் கொண்டு மீண்டும் அழகானாள். முடிந்த தலையை மீண்டும் மீண்டும் களைத்து வெவ்வேறு விதமாகச் செய்து பார்த்து சோர்வுற்று கடைசியில் மொத்தமாக அவிழ்த்துவிட்டு அழகானாள்.
அலங்காரம் எல்லாம் முடிந்த பிறகு அம்மாவிடம் சென்றாள். எப்படி இருந்தாலும் அந்த இயல்பிலேயே நம்மை ரசிக்கும் ஒரே ஜீவன் அம்மாதான். எந்த விமர்சனமும் இல்லாமல் நமக்கு இருக்கும் தாழ்வான சந்தேகங்களை பிரமிக்க வைக்கும் வார்த்தைகளைக் கொண்டு நிரப்பிவிடுவாள். அவளது வார்த்தைகள் தெளிவைக் கொடுக்கும். அவள் முகத்தில் இருக்கும் சிரிப்பு நம்மை பொதுவெளியில் கூச்சமின்றி நிமிர்ந்து நடக்க வைக்கும். அம்மாவிடம் இருந்து அவளுக்கும் அது குறைவின்றி கிடைத்தது.
கைக்கடிகார முள் அவள் பொறுமையைச் சோதிக்க நினைத்து மெல்ல நகர, அதன் விளையாட்டுப் பிடிக்காமல் தத்தி நடக்கும் கால்களால் ஓங்கி ஓங்கி நடந்து தன் கொலுசு ஒலியால் அதை அதட்டிக் கொண்டிருந்தாள்.
சூரியனும் புரிந்து கொண்டு மொட்டை மாடியை விட்டு மலைக்குப் பின் செல்லத் தயாராக இருந்தது. இவளும் அவனைக் காண வீடு தாண்டினாள். யாருக்கும் சந்தேகம் எதுவும் வந்துவிடக் கூடாது என்று வழக்கமாக எடுத்துச் செல்லும் புத்தகப் பையையும் கொண்டு சென்றாள்.
பூங்கா நுழைவாயிலைக் கடந்ததும் மரத்துக் கிளையில் பூத்த உதிர்ந்த பூக்கூடை கொட்டிக் கவிழ்ந்து அவளையும் கவிழ்த்தியது ஆசைச்சிரிப்பில். அவள் பாதம் பட்டு மோட்சம் பெற பூக்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அவள் காலடி சேர்ந்து பாதையானது. அன்று பூங்கவில் நிறைந்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கைகளில் எல்லாம் சிவப்பு நிற இதய பலூன் முளைத்து இருந்தது.
அங்கிருந்த அனைவருமே காதலுக்கு மீக நெருக்கமான தூதுவர்களாகத் தெரிந்தார்கள்.
மெல்லிய வயலின் சத்தம் வழி சொல்ல காதலை நோக்கி நடத்தினாள் ஜோதா. நான்கு இசைக் கலைஞர்கள் கருப்பு நிறக் கோட் சூட் அணிந்து கொண்டு வயலினால் அனைவரின் இதயங்களையும் கொள்ளையடித்து கொண்டிருந்தார்கள்.
அழகான குட்டி தேவதைகள் கையில் பூங்கொத்துக்களோடு கூட்டமாக அவளை நோக்கி படையெடுத்து வந்து, அவளைச் சூழ்ந்து நின்றார்கள். அழகழகாய் தேர்ந்தெடுத்து அடுக்கி அமைக்கப்பட்ட ரோஜா பூச்செண்டுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
சந்தோஷத்தில் திகைத்து நின்ற ஜோதாவின் கண்களுக்கு ரசிக்க பல இருந்தாலும் அவளது கண்கள் தேடியது அவன் முகத்தைத்தான். நேரம் தாழ்த்தாமல் வா என்று தனக்குள்ளே முனங்கியது அவனுக்கு கேட்டிருக்குமோ? என்னவோ? அவன் அருகில்தான் இருக்கிறான் என்கிற உணர்வை அவன் அணியும் சட்டையின் மீது பரவியிருக்கும் நறுமணம் காட்டிக் கொடுக்க அவள் உலகம் இருளானது.
பின்புறம் இருந்து தன் கண்ணை இறுக்கமாக மூடியவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்கிற எதிர்பார்ப்போடு அவனது வாசனையும் அவளை மெல்லக் கரையச் செய்தது.
கண்ணில் இருந்து கையை எடுத்தவன் அவள் திரும்பிப் பார்க்கும்போது மாயமாகி இருந்தான். “எங்க இருக்கீங்க?” என்று சுழித்த புருவமும் சுருங்கிய நெற்றியுமாய் முகத்தை வைத்து கேட்டதும் எங்கிருந்தோ வந்து அவளை அணைத்துக் கொண்டான். அணைத்தவுடன் இருவரின் இதயமும் இடி மின்னலானது.
வானத்தில் வண்ண வண்ண பலூன்களும் பல்வேறு நிறப் புகையும் பறந்து பரவி விரிந்து அந்த நிகழ்வை தனியுலகமாக மாற்றியது.
அவள் தோளிற்கும் கழுத்திற்கும் இடையில் தஞ்சமடைந்த அவன் முகம் சூடான காற்றோடு ஒரு அழுத்தமான கேள்வியையும் கேட்டது. “உன்ன விட்டுட்டு அப்படியே இருந்துருவேன்னு பயந்துட்டியா?” என்று கேட்டான். அவன் சுருள் முடிப் புதருக்குள் அவளது கைவிரல்கள் ஊடுருவ, நெருக்கம் இன்னும் நெருக்கமானது. “ஆமா பயந்துட்டேன். இனிமே கோவப்படாதீங்க சரியா?. இதுக்கப்புறம் நானும் அடம்பிடிக்க மாட்டேன்” என்றாள்.
கைகளை விலக்கி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவன் நெற்றியில் இருந்த வெட்டுக் காயத்தைத் தடவியபடியே “என்ன இது?” என்றாள். சிரித்தபடியே தன் கால் அருகே வைத்திருந்த ஒரு பெரிய தங்க நிற கோப்பையை எடுத்து அவள் கையில் கொடுத்து “பாக்ஸிங் சாம்பியன்ஷிப்” என்றான். அவள் கண்கள் கலங்கியது, அதைப் பார்த்த அவனுக்கும்தான்.
இருவரின் ஆனந்தக் கண்ணீரினாலும் வெட்டுக் காயம் பட்டுப் போனது.
“நேத்து டீ ஷாப்ல நீங்க இருந்தீங்களா?“
“நேத்து நான் உன் கண்ணுல படும்படியே எல்லா இடத்துலயும் இருந்தேன் ஆனா நீ பாக்கல”
“பாத்தேன். பிரம்மன்னு நெனச்சுட்டேன்”
“பைத்தியம்டி நீ”
“ஆமா கொஞ்ச நாளா”
“ம்ம்ம்ம்ம் நேத்து நீ போன அதே டீ ஷாப்க்கு போலாமா?” என்று அக்பர் கேட்டதும் அவளும் “ம்ம்ம்ம்ம்” என்றாள். அங்கிருந்து நகர்ந்து அப்படியே அடுத்த சாலையில் அமைந்த கடைக்குச் சென்றார்கள்.
அத்தியாயம் – 24
“ஏன் எப்ப பாத்தாலும் டீயே குடிக்குற?. ஒரு சேன்ஞ்காக இன்னைக்கு ஹார்ட் சாக்லேட் குடிக்கலாமா?. நேத்து நான் குடிச்சேன் நல்லா இருந்தது“ என்றார் அக்பர். நேற்று டிக்கடை கனவு நினைவுக்கு வந்ததும் சிரித்தாள் ஜோதா. என்ன சிரிப்பு என்று அவன் கேட்க சொல்லாமல் மறுத்துவிட்டு அவனது இடது கையைக் கொக்கி போட்டுக் கொண்டு அவன் மீது சாய்ந்தாள்.
அவர்களுக்காவே ஸ்பெஷலாகத் தயாரான ஹார்ட் சாக்லேட் சுடச் சுட அவர்களது மேசையை வந்து சேர்ந்தது. ருசி பார் என்று ஒரு கோப்பையைக் கையிலெடுத்து அவள் உதட்டில் வைத்தான் அவன். நேற்று அவன் கொடுத்த முத்த வாசனை அந்த கோப்பையில் இருந்து வந்து அவளை மயக்கிக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஊறிய நாணமெல்லாம் மீண்டும் அவனை அவளுக்குள் தள்ளியது.
சுவையைப் பற்றி விசாரித்ததும் அந்தக் கோப்பையை அவளிடமே கொடுத்துவிட்டு, அவனுக்காக காத்திருந்த கோப்பையை எடுத்தான்.
ஒரு சொட்டு குடித்துவிட்டு நேற்றைப் போல இன்று இல்லையே என்று சடைத்தான். “ஏன் நல்லாதான இருக்கு? “ என்று அவள் சொல்ல, “நல்லா இருக்கா? எங்கே உன் கையில இருக்குற கப்ப குடு” என்று வாங்கினான்.
அவள் உதடு வைத்த அதே கோப்பையின் இதமான பதத்தில் அவனும் உதடு வைத்து உரிய ஒரு இனிப்பான நாடகம் அறங்கேரியது. “ம்ம்ம் இப்போ நல்லா இருக்கு“ என்று அவன் கூற அவனுடையதை அவள் எடுத்துக் கொண்டாள். கோப்பையில் ஹார்ட் சாக்லேட்டின் அளவு குறையக் குறைய, வான வெளிச்சம் மறைய மறைய, விடை பெறும் நேரம் வந்துவிட்டதோ? என்கிற சோகமான கேள்வி இருவரையும் மௌனமாக பற்றிக் கொண்டது.
இந்தப் பிரிவு தற்காலிகமானதாக இருந்தாலும், மனம் கேட்கவில்லை. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு சந்தோஷத்தைத் திகட்டத் திகட்டக் கொடுத்துவிட்டு அதே அளவு கண்ணீரையும் கொடுத்துவிடுவான் பாவி என்று தன் காதலனின் கையை பிடித்துக் கொண்டாள் ஜோதா. கண்ணீர் தேங்கி நிற்கும் அவளது கண்களை அப்படியே எப்படி விட்டுவிட்டு வர முடியும் அவனால்?. அதனால் “இன்னும் ரெண்டு நாள் இங்கையேதான் தங்கி இருக்கப் போறேன். நீ நாளைக்கு காலையிலயே கிளம்பி வா. நம்ம எங்கையாவது வெளிய போலாம்” என்றான்.
“நிஜமாதான் சொல்றீங்களா? “
“ஆமா”
“என்ன பாத்துட்டு உடனே கிளம்பிருவீங்கனு நெனச்சேன். நீங்கதான் உங்க ஜிம்ம விட்டுட்டு இருக்க மாட்டீங்களே “
“நானும் அப்படித்தான் நெனச்சேன். இப்போ மனசு மாறிடுச்சு”
“அப்போ சரி நேரம் ஆச்சு. நான் கெளம்புறேன். நாளைக்கு பாக்கலாம்“
“சரி போ” என்று சொல்லித் தன் கையில் வைத்திருந்த பையைக் கொடுத்தான்.
அதில் அழகான பச்சை நிற சேலை இருந்தது. அதைப் பார்த்ததும், “ஏன் இவ்வளோ செலவு பண்றீங்க?. இது இப்போ அவசியமா? “ என்றாள்.
உன் காலேஜ் ஃபேரவல் பாராட்டிக்கு நீ ஒரு சேரி கட்டி ஒரு ஃபோட்டோ அனுப்ச்சியே, அது இன்னும் என் கண்ணுக்குள்ளையே இருக்கு. உயரம் கம்மியா இருப்பா, கவுன் போட்டா பொம்ம மாதிரி க்யூட்டா இருப்பானு வாங்கிட்டு பில் பே பண்ண நின்னுருந்தேன். அப்போதான் ஒரு பொம்மைக்கு இந்த சேரிய கட்டியிருந்ததப் பாத்தேன். உன் நியாபகம் வந்தது. அத வாங்காம வெளிய வர மனசு வரல அதான் என்று அக்பர் சொன்னார்.
பதில் சொல்லத் தெரியாமல் திணறிய ஜோதா, “சரி“ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். என்றும் இல்லாத விதமாக துள்ளிக் குதித்துக் கொண்டே வீடு நுழைந்த ஜோதாவை அம்மா வினோதமாகப் பார்த்தாள். அம்மாவிற்கு நாம் யார் என்கிற அறிமுகம் தேவையா என்ன?.
“என்னடி குதிச்சுகிட்டு ஜாலியா வர்ற? “
“ஒன்னு இல்லமா. இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்குனு பாக்குற எல்லாரும் சொன்னாங்க“
“ம்ம்ம் சரி சரி. கையில என்ன?“ என்று அவள் கொண்டு சென்ற புத்தகப் பை கூடவே கூடுதலாக இருக்கும் இன்னொரு பையைப் பார்த்துக் கேட்டாள் ஜோதாவின் அம்மா.
“இது டிரஸ்மா“ என்று சொல்லி ஜோதா அந்தப் பையை பின்னே மறைக்க,
“இது என்ன டிரஸ்?. எங்க…கொடு பாக்குறேன்” என்று அம்மா அதை அவள் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கினாள். பையைத் திறந்து சேலையை வெளியே எடுத்து வைத்துக் கொண்டு அவளையும் சேலையையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“பார்க்குக்குதான் போனேன். பார்வதி துணி கடை வெளிய என் ஃபிரண்ட பாத்தேன். டிரஸ் எடுக்கப் போறேன்டி ச்சூஸ் பண்ண ஹெல்ப் பண்ணுனு சொல்லி உள்ள கூட்டிட்டு போய்ட்டா.
எல்லாமே புதுப்புது டிசைனா இருந்துச்சு. நீ வேற நேத்து எனக்கு செலவுக்கு வச்சுக்க சொல்லி கையில பணம் கொடுத்தியா, அதான் வந்துட்டமேனு ஒன்னு எடுத்தேன்” என்று எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்தாள். வார்த்தையில் தெளிவு இல்லை. பேசி முடிக்கும் வரை முழுக்க முழுக்க தடுமாற்றம்தான். அதைக் கவனித்தும் “சரி போ“ என்று அம்மா எதுவும் கேள்வி கேட்காமல் விட்டாள்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் அறைக்குள் நுழைந்த ஜோதா அம்மாவின் முக மாறுதலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள்தான் காதல் மயக்கத்தில் இருந்தாளே!.
படுக்கையில் அங்கும் இங்குமாய் சுழன்று கொண்டு டைரி எழுதிக் கொண்டிருந்தாள் ஜோதா. மனதில் பதிந்த அந்த பொன்னான நொடிகளை வார்த்தைகளால் வடித்துக்கொண்டிருந்தாள். அப்போது அவள் முதுகுகிற்குப் பின்னால் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. பின்னால் யார் நின்றுகொண்டு இருக்கிறது என்று தலையைத் திருப்பினாள். கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய அம்மாவின் முகம் பார்த்து இவள் நடுநடுங்கினாள்.
“யார் அந்த பையன்? நீ எங்க போய்ட்டு வந்த? இப்போ என்கிட்ட விஷயத்த முழுசா சொல்லலைனா உன் அப்பாகிட்ட அரையும் குறையுமா எதாவது சொல்லி வச்சுருவேன். அப்புறம் அவர் என்ன செய்வார்னு உனக்கு நல்லாவே தெரியும்“ என்று ஜோதாவின் அம்மா மிரட்ட இவள் பதில் சொல்ல முடியாமல் தினறினாள். முதலில் ஏதேதோ சொல்லி மூடி மறைக்க முயற்சி செய்தாள்.
அவள் பேசியதை துளியும் ஏற்றுக் கொள்ளாமல் இறுக்கமாக இருந்த அம்மாவின் முகம் தொடர்ந்து மிரட்டாமல் மிரட்ட பொய் சொல்லி சோர்ந்து போய் கடைசியில் உண்மையைச் சொல்லிவிட்டாள்.
இதுதான் உண்மை எனத் தெரிந்த பிறகு அம்மா அடிக்காவிட்டாலும் கடுமையாக கண்டிக்கவாச்சும் செய்வாள் என்பதுதான் ஜோதாவின் நினைப்பாக இருந்தது. ஆனால் அவள் எண்ணத்தை தவிடுபிடி ஆக்கும் அளவிற்குத்தான் அம்மாவின் நடவடிக்கை இருந்தது.
அதுவரை இரண்டு கைகளையும் இடுப்பில் பொருத்தி முறைத்தப்படியே கேட்டுக்கொண்டிருந்த அம்மா, அவள் உண்மையைச் சொன்ன பிறகு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற அச்சத்தில் அழுத ஜோதாவின் தலையைத் தன் கைகளால் கோதி ஆறுதல் படுத்தி தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.
“உன்னைப் பெத்தவளே நான்தான். நீ கண்ண சிமிட்டுனா கூட எனக்கு அதுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கத் தெரியும். இந்த வயசுல இந்த மாதிரி ஆசை வர்றது எல்லாம் சகஜம். நடக்குற வரைக்கும் அப்படியா? இப்படியா? அதுவா? இதுவா? ன்னு கலர் கலரா கனவு காணுவோம். ஆனா நடந்து முடிஞ்ச பிறகு இவ்வளவுதானா? ச்சீ ச்சீனு ஆகிரும். தெரிஞ்சவனே ஈசியா ஏமத்திட்டு போயிருவான். நீ யாரோ ஊர் பேர் கூட ஒழுங்கா தெரியாதவன கைகாட்டி பிடிச்சிருக்குனு சொல்ற. நீ என்கிட்ட சொன்னத அப்படியே நான் உன் அப்பாகிட்ட சொன்னேனு வை என்னையும் கொன்னுட்டு உன்னையும் கொன்னுட்டு புள்ளையும் இல்ல பொண்டாட்டியும் இல்லனு போய்ருவாரு. இதுகப்புறம் உன்னோட முடிவு” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் அம்மா.
கதவு வரை சென்றவள் கடந்து செல்லாமல் ஜோதாவைத் திரும்பி பார்த்து நின்று “காசு நீ கேட்டிருந்த. நான் நாளைக்கு தரேனு சொல்லியிருந்தேன். அந்த இடத்துலதான் நீ மாட்டுன“ என்று சற்று சிரித்தபடி சொல்லிவிட்டு கதவை மூடிச் சென்றாள்.
அவள் அறை இருட்டானது போல வாழ்க்கையும் இருட்டாகி விடும் என்று ஜோதா தவித்தாள். அடித்திருந்தால் கூட அந்த கனம் மட்டுமே வலி. இப்போது எந்த பதற்றமும் இல்லாமல் அம்மா பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? என்கிற குழம்பம் ஜோதாவைப் பாடாய் படுத்தியது.
அம்மாவிற்கு உண்மை தெரிந்த பிறகும்கூட வீட்டில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான பானியிலே வீடும் வீட்டில் இருந்தவர்களும் செயல்பட்டார்கள். நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில்தான் அம்மா இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அப்பாவிடம் சொல்லவில்லை. நாமும் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பாசமும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் அம்மா நம்மீது வைத்திருக்கும்போது அவளைக் காயப்படுத்தும்படி நடந்து கொண்டது தவறுதான் என்று குற்ற உணர்ச்சியில் நொந்து போனாள் ஜோதா. நடந்த அத்தனையையும் அக்பருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு அவருடைய எண்ணை செல்ஃபோனில் இருந்தும் அவரை அவள் மனதில் இருந்தும் அழித்தாள்.
அவளுடைய குற்ற உணர்ச்சியை உடைக்குமாறு அம்மாவின் உள் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது அவளுக்குத் தெரியாது. இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து, ஜோதா தனியாக இருக்கும் போது கையில் புடவையோடு பரபரப்பாக அவள் அறைக்குள் நுழைந்தாள் அம்மா. அந்தப் புடவையை அவள் கையில் கொடுத்து இந்தா சீக்கிரம் தயாராகு, இன்னைக்கு பத்து மணிக்கு மேல மாப்பிள்ளை வீடு இங்க வர்றாங்க என்று சொல்லிவிட்டு வந்த வேகத்தில் திரும்பினாள்.
வீட்டில் இருந்த அனைவரும் அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். “என் பேத்தி தங்கம். நில்லுன்னா நிப்பா உக்காருன்னா உக்காருவா. அவ அப்பன் பேச்சுக்கு மறு பேச்சு பேசுனது இல்ல. பொறந்ததுல இருந்தே அப்படித்தான்“ என்று பாட்டி பக்கத்து வீட்டு பவானி அத்தையிடம் பெருமை பீத்திக் கொண்டிருந்தாள்.
இந்தக் கல்யாண ஏற்பாடு அப்பாதான் செய்திருக்கிறார். துணி எடுப்பதில் தொடங்கி படிப்பது வரை எல்லாவற்றையும் என் விருப்பப்படி விட்ட அப்பா, இவ்வளவு பெரிய காரியத்திற்கு என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அப்படியென்றால் அம்மா அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பாள் என்றுதான் நினைக்கிறேன்.
அத்தியாயம் – 21, 22
அத்தியாயம் – 21
“ஒரு டைம் மெசேஜ் பண்ணி ரிப்லை வரலனா வெயிட் பண்ணணும். இப்படி ஆயிரம் மெசேஜ் பண்ணி வச்சிருந்தா ஒரு மனுசன் என்னதான் பண்றது?“
“நீ ஒன்னும் பண்ண வேணாம். வீட்ல எல்லார்கிட்டையும் பேசுற எங்கிட்ட பேச மட்டும் உனக்கு புடிக்கல. நான் உனக்காகதான இருக்கேன். நீ ஏன் இப்படி பண்ற?. நான் அப்படியே எங்கையாவது தொலஞ்சு போயிருக்கனும். இப்போ பாரு உனக்கும் புடிக்காம, உன் வீட்டுக்கும் பாரமா இருக்கேன்“
“யாமினி சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருந்தீனா பல்ல ஒடச்சிருவேன். இப்படியெல்லாம் பேச உனக்கு யாரு கத்துக் கொடுத்தது“
“பாரு இப்போ கூட யார் மேலையோ இருக்க கோபத்த என்கிட்ட காட்ற. உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல. உன் வீட்ல எல்லாரும் அமைதியா குணமா பேசுறாங்க நீதான் இப்படி கத்ததுற”
“நீ பெரிய ஒழுங்கு மாதிரி என் கேரக்டர கொற சொல்லாத. சாவடிச்சிருவேன் உன்ன“
“இப்படியெல்லாம் என்னையக் கண்டுக்காம இருக்குறதுக்கு ஒரே அடியா என்னைய நீ கொன்னே போட்டர்லாம். போக வழி தெரியாம உன்ன நம்பி இருக்கேன்றதாலதான நீ இப்படி பேசுற? “
“யாமினி அறிவு எதுவும் இல்லாம போச்சா உனக்கு?. நீ எங்க என்ன நம்பி இருக்க?. நம்ம ரெண்டு பேருமே நம்ம வீட்ட நம்பியும் அப்பா அம்மாவ நம்பியுமாதான் இருக்கோம். அங்க நீ எப்படியோ அதே மாதிரிதான் நானும். இந்த உலகத்துல எந்த அம்மா அப்பா பையன் லவ் பண்ணி பிரச்சனையான பொண்ணு வாழ்க்க பாழாப் போயிறக் கூடாதுனு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்க?. அப்பா நம்ம ரெண்டு பேருக்கும் பண்ணிருக்குறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?. யாமினி நம்ம இந்த வயசுலயே லவ் பண்ணது நம்மளுக்கு மட்டுமாதான் சரி. அவங்களுக்கு அது தப்பான விஷயம்தான். அதையும் மீறி அவங்க நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னுதான பாக்குறாங்க. வீட்ல இருக்க வரைக்கும் சரி. நம்மலால அப்பா வெளிய எத்தன பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு தெரியுமா? “
“எல்லாம் புரியுது. அதுக்கும் நீ பேசாததுக்கும் என்ன சம்பந்தம்?“
“அவங்க நமக்காக யோசிக்கும்போது நம்மதான் அந்த மரியாதைய காப்பாத்திக்கனும். நான் ஒன்னும் உன்கிட்ட பேசாம இல்ல. அவங்க முன்னாடி உன்கிட்ட பேசாம இருக்கேன். அவ்வளவுதான். அவங்க நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் கொஞ்சமாவது மரியாதையா நடந்துக்க வேணாமா? “
ஆதி என்ன சொல்ல வருகிறான் என்பதே யாமினிக்கு மூன்று மணி நேர சண்டைக்குப் பிறகுதான் புரிந்தது. அதன் பிறகு எப்படியோ பேசி சமாதானம் ஆகி இருவரும் மனம் ஒத்து தூங்கப் போனார்கள். நடந்த வாக்கு வாதத்திலே ஆதியிடம் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டதை சொல்லாமல் விட்டுவிட்டு பிறகு புரண்டு கொண்டு இருந்தாள்.
மீண்டும் அழைத்துப் பேசி இதுவும் சண்டையில் முடிந்தால், அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் சரியான சூழல் இருக்கும் போது அவனிடம் சொல்லிக்கலாம் என்று முடிவு செய்தாள்.
மறுநாள் காலையில் ஜோதியும் யாமினியும் தெரிந்தவர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றார்கள். ஜோதிக்குத் தெரிந்த சிலரும் அங்கு வந்திருந்தார்கள். ஜோதியிடம் நலம் விசாரிக்க வந்த அனைவருமே “உனக்கு ரெண்டு பசங்கதான? அப்போ இந்தப் பொண்ணு யாரு?” என்றுதான் கேட்டார்கள். அவளும் “இது என் அண்ணனோட மக ஊர்ல இருந்து வந்திருக்கா. வீட்ல இருந்தா பொழுது போகாதுனு கூட்டிட்டு வந்தேன் என்று சமாளித்தாள்.
அப்படியா சரி இந்த பொண்ணு என்ன பண்ணுது படிக்குதா? என்று கேட்கும் சிலரிடம் பேச்சை மாற்றி, சிரித்து சமாளித்து, அவர்களை திசை திருப்பி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அது யாமினியை விட ஜோதிக்குதான் மனதை பாதித்தது.
விசேஷம் முடிந்து வீடு திரும்பும் போது மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஜோதி, யாமினிடம் “யாமினி உன்ன நான் வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கனும்“ என்றாள்.
“அவங்க கேள்வியா கேட்டு நச்சறிச்சதுக்கு இப்படி சொல்றீங்களா? “
“ம்ம்ம் ஆமா உனக்கு மனசு கஷ்டமாகிரும்ல. அதான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு“
“எனக்கு எந்த கஷ்டமு இல்ல. நீங்க ஒன்னும் நெனைக்காதீங்க“
“ம்ம்ம்”
யாமினி வீட்டிற்கு வந்த பிறகு ஜோதிக்கு புதிதாக ஒரு தோழி கிடைத்தது போல இருந்தது. பெண் பிள்ளையைப் பெற்றிருந்தால் கூட இவ்வளவு இணைப்போடு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எந்நேரமும் ஜோதியுடனே இருக்கும் யாமினி சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரங்களை கழுவி வைப்பது, பூ கட்டுவது வரை எல்லா வேலையிலும் பங்கு போட்டுக் கொண்டு சிரித்துக் கதை போசிக் கொண்டு தோழி போல இருப்பாள்.
இருவரும் சேர்ந்து பேசாத தலைப்பே இல்லை. வீட்டில் எப்போதும் தனிமையை மட்டுமே உணர்ந்த ஜோதிக்கு யாமினியின் வருகை வரப் பிரசாதம்தான். ஆனால், யாமினி வாழ்க்கை மீது அவளுக்கு மிகுந்த அக்கறை இருந்தது. அதனால் தன் கணவனிடம், யாமினியைப் படிக்க வைக்கலாமா? என்று கேட்டாள்.
உங்களுக்கு பணம் சமாளிப்பது கடினமாக இருந்தால், நானும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறேன் என்றாள்.
ஜோதி சொல்லி அதை அவள் கணவன் மறுத்ததே இல்லை. பணம் பற்றிய சிந்தனை எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ யாமினிடம் அவள் என்ன படிக்க ஆசைப் படுகிறாள் என்று கேள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
ஜோதி யாமினிடம் இதைப் பற்றி கேட்டபோது, அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவள் மனதில் இருந்ததெல்லாம் எந்நாளும் இவர்களுக்கு பாரத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பது மட்டும்தான். ஜோதியின் முகத்திற்கு நேரே மறுக்க முடியாததால், நான் யோசித்து நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லி அந்த பேச்சை முடித்தாள்.
யாமினி ஆதியிடம் இதைப் பற்றி கேட்டபோது, அவனுக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பின் இருவரும் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள்.
“ஆதி உங்க வீட்ல எனக்காக இதுவரைக்கும் பண்ணிட்டு இருக்க உதவிக்கே நான் என்ன திருப்பித் தரப் போறேன்னு தெரியல. வீடு இப்போ என்ன நிலமையில இருக்குனு நானும் கூடவே இருந்து பாத்துட்டுதான இருக்கேன். உனக்கும் சிபிக்கும் ஃபீஸ் கட்டவே கஷ்டமா இருக்கு. அப்பா முழுக்க முழுக்க ஜிம்லயேதான் இருக்காரு. அவருக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்ல. எல்லாம் தெரிஞ்சும் அவங்கள கஷ்டப்படுத்த நான் விரும்பல. அதுனால நான் படிக்கல. நான் படிக்கலனு சொன்னா, சொல் பேச்சு கேக்க மாட்டேன்றேனு தப்பா நெனச்சிருவாங்களோனு வேற எனக்கு பயமா இருக்கு. அதுனால நீயே ஈவ்னிங் பேசும்போது அம்மா கிட்ட சொல்றியா? “
“சரி நான் சொல்லிக்குறேன். நீ சொல்றதும் சரிதான். ஆனா நீயும் என்ன மாதிரிதான? உனக்கும் காலேஜ் போகனும் படிக்கனும்னு ஆசை இருக்கும்ல? “
“எனக்கு இப்போதைக்கு எந்த ஆசையுமே இல்ல. நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சு என்னைய படிக்க வைக்க மாட்டியா அப்போ?”
“நீ என்னதான் மழுப்பி பேசுனாலும் எனக்கு மனசு கேக்கல. எங்க வீட்டுக்கு வந்ததால உன் லைஃப் பாதிக்கப்படுதோனு எனக்கு கவலையா இருக்கு“
“லைஃப்னா என்னனே எனக்கு இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் புரிஞ்சது. நான் இங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன். அம்மா கிட்ட பேசி புரிய வை அது போதும்“
“சரி நான் பேசுறேன்”
குடும்ப கஷ்டத்த மனசுல வச்சு யாமினி எடுத்த இந்த முடிவு ஆதிக்கு சரியா பட்டாலும் ஜோதிக்கு அது சரியாபடல.
“அவளும் படிக்கட்டும் எனக்கு மூனு பேருமே ஒன்னுதான். அப்பா கிட்ட நான் பேசிட்டேன்” என்று ஜோதி சொன்னாலும் யாமினி தன் முடிவில் உறுதியாக இருந்தாள். தினமும் ஒரு பத்து முறையாவது இதைப் பற்றி ஜோதி யாமினியிடம் பேசியதால், யாமினி தன் பிடியில் இருந்து சற்று கீழே இறங்கினாள்.
காலேஜ் போவதற்கு பதிலாக நான் மேக்கப் கிளாஸ் போறேன் என்று ஜோதியிடம் கூறினாள்.
நீ எங்கே வேண்டுமாலும் போ. உனக்குப் பிடித்தது எதுவாக இருந்தாலும் செய். ஆனால் வீட்டில் மட்டும் அடைபட்டு இருக்காதே என்று ஜோதி அறிவுரை சொல்ல, யாமினியும் அதை ஏற்றுக்கொண்டாள்.
பியூட்டீசியன் கோர்ஸ் மூன்று மாதம்தான். செலவும் குறைவாகவே இருக்கும். வகுப்பு நேரமும் குறைவாகத்தான் இருக்கும், வீட்டில் ஜோதிக்கு உதவியாக இருக்கவும் விரைவாக படித்து முடித்து வேலைக்கு செல்லவும் நல்ல யோசனையாக இருக்கும் என்பதால் யாமினி இந்த முடிவை எடுத்தாள்.
வீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள ஒரு பார்லரில் சேர்ந்து தினமும் வகுப்பிற்குச் சென்றாள்.
அது ஜோதி மற்றும் யாமினியின் மனதிற்கு திருப்தி அளித்தது.
ஆதியும் யூடியூபில் மிகவும் பிரபலமான ஆளாக உருமாற ஆரம்பித்தான். அவன் கதைக்கும் கதை சொல்லும் பானிக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே சேர்ந்தது.
அவன் அடுத்ததாக பதிவேற்றிய வீடியோக்கள் அடுத்த நாள் கதையில் என்ன திருப்பம் ஏற்படப் போகிறதோ என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்தது.
வீடு திரும்பிய ஜோதாவின் வாழ்க்கையும் பாக்ஸிங் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த அக்பரின் வாழ்க்கையும் அதன் பிறகு எப்படி இருந்தது?. இருவரும் எப்படி சந்தித்து பின் கரம் பிடித்தார்கள் என்பதை விளக்கிச் சொன்ன வீடிக்கோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்து சப்ஸ்கிரைபரின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது.
கல்லூரி படிப்பை முடித்த ஜோதா, அக்பரைத் தொடர்பு கொள்ள பல முயற்சிகள் எடுத்தும் இறுதியில் தோற்றுதான் போனாள். அவளுக்கென அழகான குடும்பம் இருந்தும் தனிமையையே உணர்ந்தாள்.
அத்தியாயம் – 22
முடிந்தவரைத் தன்னை ஏதோ ஒரு வேலைக்குள் முழ்கடித்துக் கொள்வாள். அவளுக்குப் பிடித்த தூக்கமும் கூட எதிராளியானது. என்னதான் ஈடுபாடோடு ஒரு செயலில் இறங்கினாலும் இடையிலேயே அவன் நியாபகம் வந்து வழி மறித்து வதைத்து எடுக்கும்.
அவனைச் சேரும் போராட்டத்தில் சோர்வுற்ற ஜோதா பழியை விதியின் மேல் தள்ளிவிட்டு மனநிம்மதியைத் தேடி, தனக்கு ஒப்பாத தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டாள்.
பாடல் கேட்பது, பார்க்கும் காட்சிகளை வரைபடமாக்குவது, எதையாவத கிறுக்கி வைப்பது என்று அவளுக்கென ஒரு கனவு உலகத்தை அவளுக்குப் பிடித்தவாறு ஏற்பாடு செய்தாள். அதில் கட்டளையிட்டவும் காயப்படுத்தவும் யாரும் இருக்க மாட்டார்கள் (அன்பு காட்டவும் அரவணைக்கவும்தான்).
சராசரி உலகில் இருந்து விடுபட்ட ஜோதாவிற்கு எழுத்தின் மீதும் புத்தகத்தின் மீது காதல் வந்தது. அது அனைத்து வகையிலும் அவளை அவளாக இருக்க விட்டதாக அவள் உணர்ந்தாள்.
அவளுடைய பல மணி நேரங்கள் புத்தகங்கள் வாசிப்பதிலும், சுவையான தேநீர் கடைகளின் தேடுதலிலும், இளையராஜா பாடல்களின் மெட்டுக்களை கேட்டு ரசிப்பதிலும், நா. முத்துக்குமாரின் கவிதைகளுக்கு பலியாவதிலுமே கழிந்து கொண்டிருந்தது.
உச்சியில் இருந்து உடல் நீரை உறிஞ்சிக் கொண்டிருந்த சூரியன், தாகம் தணிந்ததும் மேற்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இதுதான் சரியான நேரம் என்று புத்தகங்களும் பேனாக்களும் அடங்கிய பையைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு பூங்காவை நோக்கிப் புறப்பட்டார் ஜோதா.
பொதுவாகவே அவள் ஊர் ஒரு சுற்றுலா தளம் என்பதால் வெளியூர் வாசிகளின் வரத்து சற்று அதிகமாகவே இருக்கும். சூரியன் மறையலாமா? வேண்டாமா? என்கிற சந்தேகத்தில் மலைகளின் இடையே சென்று, சற்று மறைந்தும் சற்று தெரிந்தும் சந்தன வெயிலால் பூங்காவை ஒளிர வைத்திருந்தது.
பனிக் கூட்டமும் மலைகளின் பின்னிருந்து படையெடுத்து பூங்காவை நோக்கி வந்து கொண்டிருந்தது. மஞ்சள் வெயிலும் மாலைப் பனியும் சந்தித்த பொன்னான பொழுது அது.
வண்ணப் பூக்களின் இதழ்களும், காய்ந்த இலைகளும், பறவையின் உதிர்ந்த சிறகுகளும் அங்கிருந்த நாற்காலியின் மீது விரிந்து கிடந்தது. அதைத் தன் கைகளால் தட்டிக் கீழே தள்ளிவிட்டு அமர்ந்து கொண்டாள் ஜோதா.
பையிலிருந்து புத்தகத்தை வெளியே எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். வார்த்தைகளை மேய மேய சுவாரஸ்யப் புல் முளைத்துக் கொண்டே இருந்தது. அந்தக் காகிதத்தில் இருந்த கருப்பு நிற மை அவள் கண்களைக் கட்டி வைத்திருந்தது. அதன் பிடியில் இருந்து அவளது பார்வை விலகவே இல்லை.
ஜோதாவின் கவனைத்தை உடைக்கும் விதமாக “க்ளிக் க்ளிக்” என்று ஒரு சத்தம் கேட்டது. அதனுடனே ஒரு அதிர்தலையும் உணர்ந்தாள். அந்த சத்தம் தன் செல்ஃபோன் நோட்டிஃபிகேஷன் சத்தம்தான் என்று திறந்தாள்.
ஒரு புதிய எண்ணில் இருந்து “ஹாய் நான் உன்னத் தேடி வந்துட்டேன்“ என்று வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வந்திருப்பதைக் கவனித்தாள்.
பதியாத புதிய எண்ணிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்கமாட்டாள் ஜோதா. அதனால், குறுஞ்செய்தியை அந்த எண்ணுக்கான அரட்டைப் பெட்டிக்குள் நுழையாமைல் வெளியிருந்தே படித்துவிட்டு அதைக் கண்டுகொள்ளாமல் வாசிக்கத் திரும்பினாள்.
மீண்டும் அதே எண்ணிலிருந்து “நான் யாருனு செல்ஃபோன்ல தேடாத நீ இருக்க அதே பார்க்லதான் நானும் இருக்கேன். உன்னையும் நீ போட்டிருக்க மஞ்சள் நிற சுடிதாரையும் ரசிச்சுகிட்டு“ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. இந்த முறை அவளது முழு கவனமும் அந்த குறுஞ்செய்திக்கு சொந்தக்காரர் பக்கம் வளைந்தது.
யார் அது? என்று புருவம் சுழித்த ஆர்வத்தோடு நாற்காலியில் இருந்து எழுந்து நின்று, எட்டு திசையிலும் தலையைத் திருப்பித் தேடினாள். அவளுக்கு யாரும் எதுவும் வசமாகவில்லை.
பூங்காவில் மக்கள் அங்கிருந்த சொக்கும் அழகை ரசிக்க கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். ஆங்காங்கே நின்றும், நடந்தும், அமர்ந்தும், படுத்தும் இயற்கை எழிலை ரசித்தபடியே இளைபாரிக் கொண்டிருந்தார்கள். எங்கு தேடியும் அவளுக்குத் தெரிந்த முகம் என்று ஒன்றுகூட இல்லை.
நேரம் வீணாவதாக நினைத்து அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நடந்தபடியே படித்துக் கொண்டிருந்தாள்.
அவளைக் கவனிக்காமல் எதிரில் வந்த யாரோ ஒருவர் அவளது இடது தோளில் இடித்துச் செல்ல, கையிலிருந்து புத்தகம் கீழே விழுந்தது. “ச்சே” என்று திரும்பி பார்க்கையில் முகத்தைத் திருப்பாமலே கைகூப்பி “சாரி” சொல்லி ஓடியவரை மனதிற்குள்ளே திட்டிவிட்டுப் புத்தகத்தை எடுக்க கீழே குனிந்தாள். அப்போது, அவளுக்கு முன்பாகவே ஒரு அழகான பெண் குழந்தை அந்தப் புத்தகத்தை எடுத்தது. குழந்தையின் குழி விழும் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டுப் புத்தகத்தை வாங்கினாள். அவள் கொடுத்த முத்தத்திற்கு பதிலாக அந்தக் குழந்தை இரண்டு இலைகளோடு அடர் சிவப்பு நிறத்தில் இருந்த ஒற்றை ரோஜாவைக் கொடுத்தது. அதை வாங்கிக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து படிக்கத் தொடங்கினாள்.
அவள் வாசித்த கதை கூர்மையான வார்த்தைகளால் வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த கரடுமுரடான உண்மைகள் எல்லாம் அவளை யோசிக்க வைத்தது. தன் இரு கைகளால் புத்தகத்தை ஏந்தி இருந்தவள், கதையில் எதிர்பாராத திருப்பங்கள் வந்ததும் ஒரு கையை ஊன்றினாள்.
ஊன்றிய கை சமநிலை இன்றித் தடுமாறி இன்னும் கீழே சென்று நிலைப்பட, படபடப்பில் தலை திருப்பினாள் ஜோதா. அவளைத் தடுமாறச் செய்தது பின் அவளை ஆச்சர்யமடையவும் செய்தது. அது ரோஸ் நிற ரிப்பனால் கட்டப்பட்ட செவ்வக வடிவிலான பரிசுப் பெட்டி. அந்த பெட்டியில் நான்கைந்து இதைய பலூன்களும் கட்டப்பட்டு இருந்தது. கூடவே “ஃபார் யூ டார்லிங்“ என்று எழுதப்பட்ட ஒட்டுப்படம் (ஸ்டிக்கர்) இருந்தது.
அவளை டார்லிங் என்று அழைக்கும் உரிமையை ஒரே ஒருவருக்குத்தான் கொடுத்து வைத்திருந்தாள். அவருடன் வாழ்வைத் தொடரத்தான் அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இது எனக்கானதாக இருக்காது. சுற்றிப் பார்க்க வந்தவர் யாரோ மறந்து விட்டுச் சென்றிருக்கலாம் என்று அதைக் கடந்து சென்றாள்.
டார்லிங் என்கிற சொல் அங்கு இல்லாமல் இருந்திருந்தால், அவள் அங்கேயே இருந்திருப்பாள். அந்த ஒற்றை வார்த்தை அவளை அந்த அழகிய சூழலில் இருந்து துறத்தியடிக்க, கால்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. நடக்கும் போதும் அவளை யாரே அழைப்பது போல காதருகே கேட்டாலும், அதைற்கு வசப்படாமல் கடந்தாள்.
மூடு பனியை விலக்கி மூச்சிரைக்க நடந்து வந்ததால், அருகில் இருந்த தேனீர் கடைக்குள் பனியோடு பனியாக உள்ளே நுழைந்தாள். “பனியின் ஈரம் தாகம் தீர்க்காது“ என்பதால் தனக்கென்று ஒரு கோப்பைத் தேநீரைத் தரச் சொல்லிக் கடைக்காரரிடம் கேட்டாள். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
கோப்பையில் பரவியிருந்த சூடு, பனியால் நெளிந்த உள்ளங்கைத் தோலை சமப்படுத்தி இதம் கொடுத்துக் கொண்டிருக்க, தேநீரின் மேல்பகுதியில் இருந்து எழும்பிய ஆவி அவள் நெற்றியை முத்தமிட்டு நடுக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. தேநீரில் கலந்திருந்த சர்க்கரைக் கட்டிகள் இதயச் சுவற்றில் மேளம் தட்ட, அவள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆசுவாசம் கிடைத்தது. தேநீரில் மிதந்தாள் கசடைப் போல.
தேநீர் தந்த சுறுசுறுப்பில், படித்த கதை படமாக ஓடிக்கொண்டிருக்கும் அவள் மூளையின் மூலையில் சென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பூங்காவில் வில் வீசிக் கொண்டிருந்த சூரியக் கதிர்களைப் பிரித்துக் கொண்டு ஒரு கருப்பு நிழல் அவளை நோக்கி வருவதை அவள் தன் மை பூசிய கண்களால் பார்க்கிறாள். முடி அமைப்பும் நடை போடும் விதமும் ஒரு இளம் ஆணின் சாயலைச் சொல்ல, அவன் இன்னும் வேகமாக வந்தான்.
கிட்ட நெருங்க நெருங்க அவனது மங்களான சாயல் தெளிந்து உண்மையான தோற்றம் தெரிந்தது. அது அந்த கதையின் நாயகன்தான். தோள் படர்ந்த உயர்ந்த தோற்றத்தைக் கொண்ட அவன் கல்லு முள்ளான தோட்டத்தில் ஒற்றை பூ பூத்திருப்பதை அவள் பார்க்கிறாள். அந்த சிரிப்பு (பூ) வாசத்திற்குப் பதிலாக நேசத்தைப் பரப்பியது.
அந்த முகம் அவளது காதலனை அச்சடித்திருந்தது. அவன் அருகே வர வர தனக்குள் நெளிந்தாள் நாணத்தில். அவள் அருகே வந்தவன் மூக்கை உரசும் தூரத்திற்கு ஒரு மயிர் இடைவெளி விட்டு நெருக்கமாக நின்றான். அவள் கையில் இருந்த கோப்பையை வாங்கி, அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கோப்பையின் திறந்த பகுதி இருந்த அதே இடத்தில் தன் வாயை வைத்து மூடினான்.
தேநீர் குடித்தவள் அப்போது சாக்லேட்டின் சுவையைத் திகட்டத் திகட்ட அனுபவித்தாள். பின் தன் மேலுதட்டிலும் கீழுதட்டிலும் பட்டுப் பரவிய சாக்லேட் நாவை அடையாமல் நாசிக்கு மட்டும் வாசத்தைக் கொடுத்துவிட்டுப் பிரிந்தது.
சொக்கிக் கிடந்தவளின் காதருகே “டார்லிங்“ என்கிற வார்த்தை கேட்டதும் கண் திறந்தாள்.
கண்ணெதிரே அவன் அதே சாக்லேட் வாசனையோடும் நெற்றியில் வெட்டுக் காயத்தோடும் நின்றிருந்தான். கனவா நினைவா? என்று புரியாதவள் குடித்த ஒரு கோப்பைத் தேநீருக்கு பணம் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறினாள்.
வீடு வந்து சேர்ந்தும் அந்த கதையும் அவள் மனதில் ஏற்பட்ட அழகான குழப்பமும் அவள் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டைப் போல ஒட்டிக் கொண்டது.
வழக்கத்தை விட அவன் நியாபகத்தை அதிகமாகக் கொடுத்த நாளாக அந்த நாள் இருந்தது. கேட்டது, பார்த்தது, உணர்ந்தது எல்லாமே காதலாக இருந்தது.
அக்பர் மீது இருந்த ஏக்கமும் கோபமும் கடைசியில் கவலையாக மாறியது. தெரியாத எண்ணில் இருந்து “டார்லிங்“ என்கிற உரிமை வெளிப்படுகிறது என்றாலே அது அவராகத்தான் இருக்க முடியும். தேநீர் கதைக் கனவில் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவன் கண் விழித்ததும் அதே சாக்லேட் மணம் பரவ வெட்டுக் காயத்தோடு எதிர் நின்றது ஏன்?. அந்த மாயைக்குள் மீண்டும் நான் நுழைந்தால், என் மனம் புன்படும் என்று புறக்கணித்தாள் ஜோதா.
அத்தியாயம் – 19, 2௦
அத்தியாயம் – 19
அவன் அப்பாவின் பழைய இருக்கை வார் (லெதர் பெல்ட்) போன்று இருந்த சப்பாத்தியை விருப்பமில்லாமல் அசைபோட்டுக் கொண்டிருந்த அதே வேலையில் அவன் கால் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோன் அதிர்ந்து கொண்டிருந்தது.
அதிரல் விடாமல் தொடர… செல்ஃபோனைக் கையில் எடுத்துப் பார்த்தான்.
யாமினியின் குறுஞ்செய்திகள் அடுக்கடுக்காய் குவிந்த வண்ணம் இருந்தது. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பதில் கொடுக்க நேரமில்லாததால், ஐந்து நிமிடங்கள் அழைத்துப் பேசிக் குரலைக் கேட்டால் அனைத்தும் மறந்து விடும் என்று யாமிக்கு அழைத்தான். கோபத்தில் அழைப்பைத் துண்டித்து விட்டாள். அவள் மீண்டும் அழைப்பாள் என்று ஒரு மணி நேரம் காத்திருந்தான். அவன் நினைத்தபடி அழைப்பு வராததால் வீடியோ எடுக்கத் தயாரானான்.
அன்றைய நாளுக்கான வீடியோ இதோ இப்படித்தான் தொடங்கி, பயணித்து, முடிந்தது.
உரியவரைத் தவிர மற்றவர்களிடமே அவர்களது காதலைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்த இருவரின் காதலும் இருவரிடத்திலும் வெளிப்பட்டது இப்படித்தான். ஒரு நாள் ஜோதாவிற்கு கடுமையான வயிறு வலி. மாதத்தில் மூன்று நாள் வருமே அதே வலிதான். படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள் ஜோதா. அவளை எதிலும் கவனம் செலத்த விடாமல் ஒரு பாடு படுத்திக் கொண்டிருந்தது வயிறு வலி.
சுழித்த முகத்தோடு சுருண்டு படுத்த ஜோதாவிடம் மலர் வந்து “இந்தாடி உன் ஃபோன் உனக்கு இன்ஸ்டாகிராம்ல ஏதோ மெசேஜ் வந்திருக்கு. என்னனு பாரு” என்று சொல்லி செல்ஃபோனைக் கையில் கொடுத்தாள். வாங்கிப் பார்த்த ஜோதாவிற்கு வயிற்றைக் கொத்திக் கொண்டிருந்த கொடூரப் பறவைகள் வெளியேறி, அதற்கு மாறாக பட்டாம்பூச்சிகள் பறந்தன.
“ஹாய். என்ன பண்ற? சாப்பிட்டியா?” என்று அவள் மீது காதல் கொண்டுள்ள அக்பர் அவளை நலம் விசாரிக்க, சுழித்த முகம் சிரித்தது.
“சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா? “
“சாப்பிட்டேன். நீ எங்க இருக்க ஹாஸ்டல் போய்ட்டியா? “
“ஆமாங்க வந்துட்டேன்“
“சரி“
சுருக்கமான உரையாடலாக இருந்தாலும் சுகம் தரும் உரையாடலாக அமைந்தது. இருவரின் தாய் பொழியும் வெவ்வேறாக இருந்ததால், இவர்களது கருத்துக்களை கடத்த ஆங்கிலமே உதவியாக இருந்தது.
அக்பர் அதிகமாகப் பேசாத ஒரு ஆள். ஜோதா நெருக்கமான மனிதர்களிடம் அளவுக்கு அதிகமாகப் பேசும் ஒரு ஆள். இருவருமே அவர்களுடைய வரையறையில் இருந்து விடுபட்டார்கள். அக்பருக்கு ஜோதாவிடம் பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் தயங்காமல் பேசினார். மற்றவர்களிடம் வாய் கிழியப் பேசும் ஜோதாவிற்கு அக்பரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தாலே கைகால் நடுங்கிவிடும். இதைத்தான் காதல் என்று சொல்வார்களோ என்னவோ?.
இவர்களுடைய உரையாடல் முன்னேறி அடுத்த கட்டமாக குரல் பதிவு செய்து, அதன் மூலமாக இருவருக்கும் இடையில் இருக்கும் காதலைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தங்கத் தமிழை அக்பர் தத்தித் தத்தி பேசும் அழகை ஜோதாவும், மழலை பேசும் மலையாளத்தின் அர்த்தமற்ற சில வரிகளாக ஜோதா பேசும் அழகை அக்பரும் முகமலர்ச்சியோடு சிரித்து ரசித்த காலம், அவர்களது காதல் மெல்ல வளர்ந்த காலம்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு மேலாக இருவரும் சொல்லிக் கொள்ளாமலே காதலில் இருந்தார்கள். “எத்தனை நாள் இது இப்படியே தொடரும்?” என்று நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, ஒருவர் அடுத்து ஒருவர் தங்களது காதலை உறுதிப்படுத்தினார்கள்.
முதலில் தன் காதலைச் சொன்னது அக்பர்தான். குளியலறையில் இருந்து வெளியே வந்த ஜோதா தன் செல்ஃபோனில் இசையை இசைத்துவிட்டுத் தலையைத் துவட்டுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் செய்ய வந்தாள். ஆனால், அந்த வழக்கத்தை உடைக்கும் விதமாக அக்பரிடம் இருந்து அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. “ஐ லவ் யூ ஜோதா“ என்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே மெசேஜ் செய்துவிட்டு இணையத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். அதை அவள் இப்போதுதான் பார்க்கிறாள், படபடக்கிறாள், அவள் கண்களில் இருந்து கண்ணீர்தான் வருகிறது… ஆனால் அதன் பெயர் அழுகை இல்லை.
அந்த ஒற்றைக் குறுஞ்செய்தி அவள் உலகத்தையே நகர விடாமல் கட்டிப் போட்டது. அவள் தலை முடியில் இருந்து வழிந்து தரையில் விழும் தண்ணீரின் டப்டப் சத்தமும் அவளது இதயம் துடிக்கும் லப்டப் சத்தமும் மட்டும்தான் அவளுக்குத் துள்ளியமாகக் கேட்டது. பதிலுக்கு என்ன குறுஞ்செய்தி அனுப்புவது என்று தெரியாமல், அவளுக்குத் பிடித்த நீல நிற இதயத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினாள்.
அதற்கு பிறகு அந்த நாளில் நடந்த எந்த நிகழ்விலுமே அவள் உயிரோடு இருந்ததாக அவளுக்குத் தெரியவில்லை. பேய் அறைந்ததைப் போல உணர்வற்று கிடந்தாள். யாரிடமும் பேசவில்லை, எந்த வேலையும் செய்யவில்லை. அந்த நாள் முடிய சரியாக ஒரு மணி நேரம் பாக்கி இருந்தது. மணி இரவு பதினொன்று. அவருக்கு இதயத்தைக் கொடுத்ததாளோ என்னவோ ஏதுமற்றதாக உணர்ந்து அவளை அவளே கிடப்பில் தள்ளினாள்.
அவருக்குக் கொடுத்த பதிலுக்கு பதிலாக அவர் என்ன செய்து வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால், தூக்கமே வராது என்று தைரியத்தை வரவழைத்து இன்ஸ்டாவிற்குள் நுழைந்தாள். அவளுக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார்.
அவள் அனுப்பிய நீல இதயத்திற்குக் கீழ் “வார்த்தையால் சொன்னால், இன்னும் அழகாக இருக்கும்“ என்று தன் விருப்பத்தை ஆசையோடு தெரிவித்திருந்தார். அவர் ஆசைக்கு விருந்தாக ஜோதா குரல் பதிவில் “எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யூ“ என்று தன் குரலால் சொல்லி அனுப்பி வைத்தாள். அப்படியே குரல் பதிவு உரையாடல் வளர்ந்து இரவை விழுங்கியது.
“மெசேஜ்ல சொல்லியிருந்தாலே போதும். நீ என்னடானா வாய்ஸ் நோட்ல சொல்லிட்ட இப்பவே உன்னையப் பாக்கனும் போல இருக்கு எனக்கு“
“உடனே பாக்கனும்னு சொல்லாதீங்க“
“என்னது உடனேவா?. உன்னப் பாத்து ஒரு வருஷம், இரண்டு மாசம், ஏழு நாள் ஆச்சு“
“என்னங்க இப்படி கணக்கு வச்சிருக்கீங்க!“
“அப்புறம் இதெல்லாம் மறக்குற காரியமா? “
“மம்ம்… சரி சாப்பிட்டீங்களா? “
“இல்லையே“
“ஏன் என்னாச்சு? “
“பண்றதெல்லாம் பண்ணிட்டு ஏன்னு வேற கேக்குறியா நீ?. நான் சாப்பிடாததுக்கு நீதான் காரணம். ரிப்லை பண்ணிட்டு, அதப் பாத்தவன் என்ன நிலமையில இருக்கான்ற அக்கறை இல்லாம உன் இஷ்டத்துக்கு இப்போ வர்ற. நீ எப்ப வருவ? எப்ப வருவனு பாத்துப் பாத்தே நான் சாப்பிடவே மறந்துட்டேன்“
“நீங்க தைரியமா சொல்லிட்டீங்க. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரு மாதிரி கூச்சமா, வெக்கமா அது என்னனே சரியாத் தெரியல. ஏன் நான் உங்கள லவ் பண்றேனு சொன்னாதான் தெரியுமா?. சாப்பிடாம இருந்துட்டு பேச்ச பாரு பேச்ச”
“தெரிஞ்சாலும், நீ சொல்ற மாதிரி வருமா? “
“ம்ம்ம் ரொம்பதான் லவ் பண்றீங்க“
“ம்ம்ம் ஆமா ஆமா. சரி தூங்கலாமா? சாப்பிட வேற இல்ல, தூங்காமையும் இருந்தா காலைல ஜிம்ல ஆக்டிவா இருக்க முடியாது. டயடாகிரும்“
“சரி தூங்கலாம்“
அக்பர் தன் மனதில் இத்தனை நாளாக சுமந்த சுகமான பாரதத்தை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்க, ஜோதாவோ ஜோரான வலியில் தூக்கம் தொலைத்தாள். இருவருக்கும் இடையில் இருந்த புரிதல் அவர்களின் காதலை மேலும் வலுவடையச் செய்தது. பல மாதங்கள் பார்க்காமலே காதலித்தார்கள்.
அதிக நேரம் பேசுவதில்லை. ஒரு நாளைக்கு அதிகபட்சமாகவே அரை மணி நேரம்தான் பேசுவார்கள். அக்பருக்கு நேரம் கிடைக்காவிட்டால், அதுவும் இல்லை.
இப்படியே போய்க்கொண்டு இருக்க ஜோதாவின் கல்லூரி காலம் முடியும் நேரமும் நெருங்கிக் கொண்டே இருந்தது.
அந்த நேரத்தில் மிகவும் தீவிரமான, அவசியம் தேவையான வாக்கு வாதம் ஒன்று தொற்றிக் கொண்டது.
“அவ்வளவுதான் இன்னும் ஒரு மாசம் மட்டும்தான் காலேஜ், அடுத்து பத்து நாள் எக்ஸாம், அப்புறம் லீவு. நீங்க எப்போதான் என்னைய பாக்க வர்றீங்க?. வருவீங்க வருவீங்கனு பாக்குறேன் வரவே மாட்றீங்க. எனக்கு ஆசையா இருக்குங்க. வாங்க ப்ளீஸ்ங்க“ என்று கொஞ்சலோடு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“எனக்கு மட்டும் ஆசை இல்லையா? எனக்கும்தா உன்ன பாக்கனும்னு ஆசையா இருக்கு”
“சொன்னா மட்டும் போதாது செய்யனும்”
“செய்யிறேன். நான் ஒன்னு உங்கிட்ட சொல்லலாம்னு வந்தேன். அதுக்குள்ள நீ இப்படி பேச ஆரம்பிச்சிட்ட. இப்போ நேரம் சரியில்ல. நான் நாளைக்கு சொல்றேன்”
“நாளைக்கெல்லாம் வேண்டாம். இப்பவே சொல்லுங்க”
“நாளைக்கு சொல்றேன்டி செல்லம்”
“போங்க… இப்பவேதான் சொல்லனும்”
“எனக்கு கேரளாலயே வேல கெடச்சிருக்கு. நாளைக்கு ஊருக்குக் கெளம்புறேன்”
“நாளைக்கேவா?”
“ம்ம்ம் ஆமா. ஏன் திடீர்னு?“
“தீடீர்னு இல்ல. நான்தான் மூனு மாசத்துக்கு முன்னாடியே சொன்னனே அப்ளைப் பண்ணிருக்கேனு. ரொம்ப நாளா எந்தத் தகவலும் வராததால செலக்ட் ஆகலனு நெனச்சேன். சொல்லப்போனா நான் அதை மறக்கவே மறந்துட்டேன்”
“மறந்தது மறந்ததாவே இருக்கட்டும் நீங்க அங்க போக வேணாம். இங்கையே இருங்க. அப்போதான் அடுத்து நான் வீட்டுக்கு வரும்போது உங்களப் பாக்க முடியும்”
“இங்க விட மூனு மடங்கு அங்க சம்பளம் அதிகம். அதோட ஊர்லயே வேல. அதுனால இங்க ஆகுற செலவை விட அங்க கம்மியாதான் ஆகும்”
“உங்களுக்கு என்னவிட காசுதான் முக்கியம். போங்க என்னமோ பண்ணுங்க” என்று பெருமூச்சு விட்டுக் கத்தி பின் அமைதியானாள். ஹலோ ஹலோ என்று தன் ஆசைக் காதலன் விடாமல் அழைத்தபோதும் கூட எந்த பதிலுமே பேசாமல் இருந்தாள். “குழந்த மாதிரி பண்ணாத. ஏதாவது பதில் பேசு. எனக்கு டென்சன் ஆகுது” என்று அக்பர் பல்லைக் கடித்த பிறகு, “நான் பேசிட்டுதான இருக்கேன்” என்று சுட்டித் தனமான குரலில் சொன்னாள். அவரும் தன் கோபம் மறந்து சிரித்தார்.
அத்தியாயம் – 20
“இங்க பாரு பெரிய சந்தோஷத்த அனுபவிக்க, இப்படி சின்னச் சின்ன சந்தோஷத்த இழக்குறது தப்பே இல்ல. எனக்கு உன்னைய விட காசு முக்கியமில்ல. காதலிக்க காசு தேவையில்லனு வசனம் பேச நான் ஒன்னும் எல்லாரையும் மாதிரி முட்டாள் இல்ல. நல்லா கஷ்டப்பட்டு உழச்சாதான் உன்ன நல்லவிதமா பாத்துக்க முடியும்ற தெளிவு எனக்கிருக்கு, அதான் சொல்றேன். எல்லாம் நம்ம நல்லதுக்குதான். நீதான் புரிஞ்சு நடந்துக்கனும்“
“ம்ம்ம்“
ஜோதா பிடிவாதக்காரிதான். ஆனால் அவளது காதலன் அவனது அழுத்தமான குரலில் ஆழமான காதலில் ஏதாவது சொன்னால், சமத்துப் புள்ளையாகக் கேட்டுக் கொள்வாள். அக்பருக்கு அவளிடம் பிடித்த குணமே இதுதான். என்னதான் பேச்சு வார்த்தையின் போது புரியாமல் சில வார்த்தைகளை அவள் விட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவார். இதுதான் அக்பருடைய காதல் கொள்கை. அவளது உண்மையான குணங்களோடு அவளை அப்படியே ஏற்றுக் கொண்டு ரசிப்பதே அவரது காதல் மொழி.
அக்பருக்கு வாழ்வின் எதார்த்தம் புரிந்ததால், தன் ஆசைகளைப் புறக்கணித்து விட்டு வருவதை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டார். ஜோதாவிற்கு அவ்வளவு உறுதியான மனப் பக்குவம் இல்லை. அவளுக்கு அவரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும், பக்கத்திலே இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் வாழ்க்கையில் பெரிதாகத் தெரியவில்லை. இதனாலே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையும் வரத் தொடங்கியது.
ஒரு நாள் “எனக்குத் தெரியாது நீங்க இப்பவே கிளம்பி வாங்க. இல்லைனா நான் உங்க கிட்ட பேச மாட்டேன்” என்று ஜோதா சொல்ல, அக்பருக்கு கோவம் தலைக்கு ஏறியது. பொதுவாகவே அக்பர் மிகவும் அடக்கமான குணமுடையவர். எந்த உணர்வையும் பெரிதாகக் காட்டிக் கொள்ள மாட்டார். எப்போதும் பொறுத்துப் போகும் குணமுடைய அவர் அன்று கண்முன் தெரியாத கோபத்தினால், அவளை முதன் முறையாகக் கடிந்து பேசினார்.
“பேச மாட்டேன்னு சொல்ற அளவுக்கு உனக்கு மனசு வெறுத்துப் போச்சா?. சரி நீ பேசாத. நான் இங்க எவ்வளவோ முக்கியமான ஒன்னுக்காக கஷ்டப்பட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் நீ இப்படி பேசி நடந்துக்குறது எல்லாம் எனக்கு மனசு கஷ்டமாகுது. நீ உன் விருப்பம் போல இரு. பேச வேணாம்னு தோனுச்சுனா பேசாத போ“ என்று தன் நொந்து போன குரலினால் சொல்லிவிட்டு செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்தார்.
இத்தனை நாள் இல்லாத விதமாக இன்று எல்லை மீறி பேசிவிட்டாளே என்கிற வருத்தம் அவரின் கவனத்தைச் சிதறடித்தது. இந்த சண்டை நடக்கும் அதே வேளையில்தான், அவர் பாக்ஸிங் போட்டிக்காக தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருந்தார். அவருக்கு ஃபிட்னஸ் மீதும் பாக்ஸிங் மீதும் இருந்த அதீத ஆர்வம் தன் கனவைத் துரத்திச் செல்லத் துண்டு கோலாக அமைந்தது.
ஜோதாவிடம் சண்டையிட்ட பிறகு அவருடைய மனது அவர் பேச்சைக் கேட்காமல் அவளையே தேடினாலும், எப்படி அவள் என்னிடம் பேச மாட்டேன் என்று சொல்லலாம் என்கிற கோபம் அவரை அவளிடம் பேச விடவில்லை.
ஜோதாவிடம் இருந்து தினமும் இரவு பத்து மணிக்கு அவருக்கு அழைப்பு வரும். அப்படி வரும்போது, அவர அருகில் யாராவது இருந்தால் “அவர் பிராக்டிஸ்ல இருக்காரு, அப்புறம் பேச சொல்றேன்“ என்று சொல்லச் சொல்லி அவளை நிராகரித்துக் கொண்டே இருந்தார். தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு பல நூறு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாலும், அதைப் பார்ப்பாரே தவிர பதில் பேச மாட்டார்.
இந்த சண்டையினால் இருவருக்கும் இடையில் இருந்த தூரம் உண்மையானது. சோகத்தின் பிடியிலேயே ஜோதா கல்லூரி படிப்பை முடித்து வீட்டிற்கும் சென்றாள்.
அடுத்து என்ன ஆச்சுனு நாளைக்குப் பாக்கலாம் என்று ஆதி வீடியோவை முடித்துப் பதிவேற்றினான்.
அவன் பதிவேற்றிய அடுத்த நொடியே அந்த வீடியோவை பார்க்கத் தொடங்கினார் ஆதியின் அப்பா. ஜோதியிடம் இதன் மீது எனக்கு பயம் இல்லை என்று சொல்லி நடித்தாலும், அவருக்குள் இருந்த நடுக்கம் அவருக்கு மட்டும்தான் தெரியும். கதை முடிவை நோக்கி நகர நகர பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்கிற எண்ணம் ஆதியின் அப்பாவிற்கு தீவிரமானது. இந்த வாரம் அவன் வீட்டிற்கு வருவதற்கு இடையிலேயே இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறதே அதற்குள் மொத்தக் கதையையும் அவனால் வீடியோ போட முடியாது என்றாலும், முழுவதையும் படித்துவிட்டால் என்ன செய்வது என்கிற கேள்வி? அவரை நொடிக்கு நொடி தத்தளிக்க வைத்தது.
அவனை அந்தக் கதையை முழுவதுமாகப் படிக்க விடாமல் தடுக்க என்ன செய்வது என்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்திருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அறையின் கதவை வேகமாகத் தள்ளித் திறந்து ஜோதி உள்ளே வர பதறி அடித்து எழுந்தார்.
“ஏன்டி பாத்து வரமாட்டியா? விழுந்து கிழுந்து தொலச்சிட்டீனா என்ன பண்றது? . சரி கையில என்ன? “ என்று ஜோதியைப் பார்த்துக் கேட்டார். எப்போதும் வீராப்பாக இருக்கிற தன் கணவர் தடுமாறியதைப் பார்த்து நக்கலாக சிரித்த ஜோதி, “இங்க பாத்திங்களா? “ என்று தன் கையில் வைத்திருந்த பாதி கிழிந்த நோட்டைக் காட்டினாள்.
“என்ன இது?“
“மீதிக் கதை“
“மீதியா? என்ன சொல்ற? தெளிவா சொல்லு“
“ஆமாங்க ஆதி கிட்ட இருக்குறது பாதிக் கததான். மீதிக் கத இங்க இருக்கு“
“அப்படியா? உண்மையாவா? “
“ஆமாங்க. ஆதி சின்ன வயாசா இருக்கும்போது அவனுக்கும் சிபிக்கும் சண்ட. அந்த சண்டையில ஆளுக்கு ஒரு பக்கமா பிடிச்சு இழுத்து பிச்சுட்டானுங்க. அதுக்கு அப்புறம் இருந்துதான் நான் அப்படியே எழுதாம விட்டுட்டேன். ஒழுங்கா பாக்காம அத எடுத்துட்டு போய் கத சொல்லிட்டு இருக்கான்”
“அப்பாடா இப்போதான் எனக்கு உயிரே வருது. இனி இதுக்கு மேல நம்ம ஒன்னும் செய்யத் தேவையில்ல. கதை தெரியாம அவனே வீடியோ போடுறத நிறுத்திடுவான்” என்று ஜோதியின் கணவர் சொல்ல “ஆமாங்க” என்று ஜோதி உற்சாகத்தில் துள்ளிக் குதித்து சிரித்ததை யாமினி அறைக்கு வெளியே நின்று கேட்டுவிட்டாள். ஆதி சொல்லும் கதைக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் ஆதிக்கு இந்தக் கதை முழுவதும் தெரிந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்? என்று சந்தேகித்தாள்.
அந்த நொடி முதல் வீட்டின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினாள் யாமினி. அவர்கள் பேசியதைக் கேட்டதும் அங்கிருந்து நடந்து சிபியின் பக்கம் சென்று அமர்ந்துகொண்டாள்.
ஆசையா யூட்யூப் சேனல் ஆரம்ம்பிச்சிருக்கான். அதுனால, வீடியோ போட வேணாம்னு சொல்லி நம்மளே அவனோட ஆசையக் கெடுக்க வேணாம்ங்க. இனி இதுக்கு அப்புறம் அவனுக்கு இந்தக் கதை முழுசா தெரியவராது. ஏன்னா? கல்யாணம் ஆன வரைக்கும்தான் அந்தப் பாதியில இருக்கு. அதுல இருந்து சிபி பொறந்தவரைக்கும் இந்தப் பாதியில இருக்கு. அதுனால ஒன்னும் பிரச்சனை இல்ல“
“பிரச்சினை இல்லனு ஈசியா நெனைக்காத முதல்ல அத யாருக்கும் தெரியாம மறச்சு வை. இல்ல… இல்ல…. எரிச்சிடலாமா?” என்று தன் கணவன் யோசனை சொன்னதும் முகத்தில் ஜீவன் இழந்து விட்டாள் ஜோதி.
“ஆசையாசையா எழுதுனதுங்க எரிக்க வேணாமே ப்ளீஸ். எங்கையாவது குப்பையில கூட கொண்டு போய் போட்டர்றேன்“
“என்ன வேணாலும் பண்ணு ஆனா இந்த நோட்டு இனி இந்த வீட்டுல இருக்கக் கூடாது. அவ்வளவுதான்.“
“சரிங்க”
பிரச்சினை முடிந்து விட்டது என்று பெருமூச்சு விட்டு இருவரும் இருக்கிப் பிடித்த வேதனையில் இருந்து விடுபட்டார்கள். அறையில் இருந்து வெளியேறிய ஜோதியின் முகத்தில் விவரிக்க முடியாத சந்தோஷம் பளபளத்தது. அந்த மினுமினுப்பு யாமினிக்கு இருந்த சந்தேகத்தை குழப்பமாக்கித் தவிக்கவிட்டது.
“யாமினி இன்னும் தூங்காம என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?“ என்று சோஃபாவில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து கேட்க்க, “அவ்வளவுதான்மா தூங்கப் போறோம்” என்று சிபி சொன்னான்.
“சிபி ஹோம் வொர்க் முடிக்க நேரம் ஆகிருச்சு அதான்“ என்று சொல்லி, சிபியை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் யாமினி.
எல்லாம் நன்றாகத்தான் போகிறது என்கிற நம்பிக்கையில் நிம்மதியாக உறங்கச் சென்ற ஜோதிக்குத் தெரியாது யாமினி அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்று.
பேசியதைக் கேட்டிருந்தாலும் அரை குறையாக அர்த்தம் தெரியாமல்தான் கேட்டிருந்தாள். அதை ஆதியிடம் என்னவென்று சொல்லவது என்கிற குழப்பத்தில் செல்ஃபோனை எடுத்தாள். அவனிடம் ஏற்கனவே கோபத்தோடு இருந்த யாமினி, முதலில் அதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்தாள். சண்டைக்குத் தாயாராக ஆன்லைனில் நுழைந்த யாமினிக்குப் பெரிய அதிர்ச்சி. அன்று என்றும் இல்லாத அதிசயமாய் வழக்கத்திற்கு மாறாக ஆதி சண்டையைத் தொடங்கி வைத்திருந்தான்.
அத்தியாயம் – 17, 18
அத்தியாயம் – 17
நதி மீது விழுந்த பச்சிலையைப் போல சுற்றித் திரிந்த அதே நாள் இன்னொரு ஆனந்தமான அதிர்ச்சியைக் கொடுத்தார் அவர். ஒரு ரீல்ஸ் கருத்துப்பெட்டியில் ஜோதாவின் ஐடியை ஒட்டி அருகில் கருப்பு நிற இதயத்தைப் போட்டிருந்தார். அந்த ரீல்ஸில் “உங்களுக்கு பிடித்த நண்பரை டேக் செய்து அன்பை வெளிப்படுத்தவும்“ என்று எழுதப்பட்டு அதற்கேற்ற பாடல் இசைத்தபடி இருந்தது. அதைக் கண்டதும் அவர் கருத்திற்காக இவள் ஒரு இதயத்தைக் கொடுத்தாள்.
அவளுக்காக அவர் குறிப்பிட்டிருந்த அதே கருப்பு நிற இதயம், அவர் ஐடியில் குறிப்பிட்டிருந்த “அல்ஹம்துலில்லாஹ்” என்கிற வார்த்தைக்கு அருகிலும் போட்டிருந்தார். அது அவளை தனித்துவமாக நினைக்க வைத்ததோடு அவருடைய அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
பார்த்துப் பேசிய மறுநாளே ஒருவருக்கு ஒருவர் இதயத்தை மாறி மாறிக் கொடுத்துக் கொண்டார்கள். இதயம் பகிர்தல் இணையதளமாக இருந்தால் என்ன? இயல்பான வாழ்கையாக இருந்தால் என்ன? பிடித்தவருக்குக் கொடுப்பதில் என்றும் பேரானந்தமே!.
இணையதள வாசிகளுக்கு இதயம் கொடுப்பது என்பது ஒரு சாதாரண விஷயம்தான். பார்ப்பது எதுவாக இருந்தாலும், அதைப் பதிவேற்றியிருப்பது யாராக இருந்தாலும், தனக்குப் பிடித்திருந்தால் இயத்தைக் கொடுத்து தன் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். ஆனால், ஜோதாவும் அக்பரும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் இல்லை.
அக்பருக்கு பெரும்பாலும் அதில் சுற்றித் திரிய நேரம் கிடைக்காது. கிடைத்த நேரத்திலும் ஜிம் சம்மந்தப்பட்ட பதிவுகளை மட்டுமே பார்ப்பார். அதுவும் அவருக்குத் தேவை இருந்தால் மட்டும்தான். ஜோதா எப்போதாவது இன்ஸ்டா பதிவுகளைச் சுழற்றுவது உண்டு. பார்த்து ரசிப்பாளே தவிர தன் சுய விருப்பத்தையோ கருத்தையோ தெரிவிக்க விரும்ப மாட்டாள்.
இருவருமே இணையதளத்தில் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ளாத நபர்கள்.
இருவருக்கும் இடையில் இருக்கும் ஒரே இணைப்பு இணையதளம் மட்டும்தான்.
ஒருவருக்கு ஒருவர் தங்களின் வெறுப்பு விருப்பங்களையும் வாழ்க்கை முறையையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். மூன்று நாட்களுக்கு மேலாக எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லாமலே ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டார்கள்.
ஜோதா அக்பருக்கு மட்டும் காட்டும்படி ஸ்டோரி வைப்பதும், அக்பர் ஜோதாவிற்கு மட்டும் காட்டும்படி ஸ்டோரி வைப்பதும் ஒருவருக்கொருவர் தெரியாது. இந்த ரகசியம் அவர்களுக்கு இடையில் உடைந்து மிளிர காலம் எடுத்துக் கொண்டது.
விடுமுறை முடிந்து மீண்டும் விடுதிக்குச் சென்றாள் ஜோதா. அவளுக்கு அவர் நினைவைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமலே கார் ஜன்னல் வழியே காணும் இடங்களில் எல்லாம் அவரோடு பேசி, சிரித்து, கைகோர்த்துச் சுற்றி திரிந்தாள். கொடைக்கானலில் சுற்றுப்பயணம் வந்த வெளியூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுங்கச் சாவடியை விட்டு ஒவ்வொரு வண்டியாய் வெளியேற அதிக நேரம் ஆனது.
போக்குவரத்து நெரிசலில் ஜோதாவின் காரும் சிக்கியது. சுங்கச் சாவடிக்கு முன்னிருக்கும் வெள்ளிநீர் வீழ்ச்சியில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கொடைக்கானல் என்றால் காதல் ஜோடிகளும் புதிதாய் திருமணமான ஜோடிகளும் புகை சூழ்ந்த சாலையில் கைகளைப் பிடித்துக்கொண்டு பழைய இளையராஜா பாடலில் வரும் காதல் நாயகனும் நாயகியுமாய் உலாவுவார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த அழகான காட்சி காதல் மீது ஒரு நம்பிக்கையை நம் மேல் சிந்திவிட்டுச் செல்லும்.
வெள்ளி நீர் வீழ்ச்சிக்கு அருகில் இருந்த ஒரு தள்ளு வண்டி டீக்கடையில் ஒரு இளம் ஜோடி நின்றிருப்பதை ஜோதா கவனிக்கிறாள். அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த பயணக் களைப்பு ஜோதாவின் பார்வையை அவர்கள் மீது நிலைநிறுத்தியது. மலைப் பகுதிகள் பெரும்பாலான நபர்களுக்கு ஒப்பாது. பாதை வளைந்து நெளிந்து இருப்பதால் குமட்டலை ஏற்படுத்திவிடும். அதே நிலையில்தான் அந்தப் பெண்ணும் தானாக நிற்க முடியாமல் தன் கனவனின் இடுப்பைத் தன் கையால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
இருவரும் ஏற்ற ஜோடியாக இருந்தார்கள். கனவன் தன் மனைவிக்கு அந்த தள்ளுவண்டிக் கடையில் டீ வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு அவளைக் குடிக்கச் சொல்லி அன்புத் தொல்லை செய்கிறான். அவள் அதைக் குடிக்கும் நிலையில் இல்லாததால் மறுக்கிறாள்.
உடனே தன் கையில் இருந்த கோப்பையை அவள் உதட்டில் வைத்து, தலையைத் தன் மார்போடு அனைத்துக் கொண்டான் கணவன். டீ அவள் அனுமதி இன்றி தொண்டையில் இறங்கி இதயம் வரை பயணிப்பதை, ஜோதா ஓரக்கண்ணாலே பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டாள்.
முகம் தெரியாத யாரோ ஒருவர் காதலிப்பதைப் பார்த்தாலும் தன் ஆசைக்குரிய ஆணைக் கண் முன்னே நிறுத்தி ஏக்கத்தை மூட்டுவதே இந்த கொலைகாரக் காதலுக்கு வேலை.
கனவுலகில் அக்பரும் அவளும் டீக்கு பதிலாக காஃபி குடித்துவிட்டு சுண்டல் வாங்க நகர்ந்தார்கள். காரும் நெரிசல் விலகி நகர்ந்தது. நீண்ட பயணம்தான் அவர் நினைவோடு கொஞ்சிக் கொண்டிருந்ததால், சீக்கிரம் முடிந்துவிட்டது அவளுக்கு.
மனதில் எதையும் வைத்துக் கொள்ளத் தெரியாத ஜோதா விடுதிக்குள் நுழைந்து, அவள் அறைத் தோழிகளைக் கண்ட அடுத்த நொடியே “அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?“ என்று மொத்தக் கதையையும் அவிழ்த்துவிட ஆரம்பித்தாள்.
“ஆம்பளைங்கன்னா அது, இது, அப்படி இப்படினு என்னென்னவோ சொன்னீங்க. நான் எந்த பிரச்சனையும் இல்லாம ரொம்ப பாதுக்காப்பா வீட்டுக்கு போனே. ஏன் தெரியுமா? நான் ஒரு ஆம்பள பக்கத்துல உக்காந்து போனே“ என்று சொல்லிக் காலரைத் தூக்கிவிட்டாள்.
தோழிகள் இவள் பேசியதைப் பார்த்து திருட்டு முழி முழித்ததோடு மட்டுமல்லாமல் திட்டவும் செய்தார்கள். யாரென்று தெரியாத ஆள் அருகே அமர்ந்து செல்வதே ஆபத்து. அவரிடம் பேசினேன் என்று வேறு பீத்திக் கொள்கிறாய். சொல்லி தானே அனுப்பினோம். சொல்லியதற்கு எதிர்மறையாகத்தான் செய்வேன் என்று அடம்பிடித்து ஆடினால், யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று ஆளுக்கொரு கருத்து பேசினார்கள்.
காதல் கண் மறைத்த கதாநாயகிக்கு அவர்கள் பேசியதெல்லாம் காதில் கூட விழவில்லை.
உலகில் உள்ள எல்லா ஆண்களும் ஒரே குணம் படைத்தவர்கள் என்று தீர்மானிக்கும் உரிமை நமக்கு இல்லை.
ஒவ்வொரு கருத்துமே ஏதோ ஒரு அனுபவத்தினால்தான் வெளிவருகிறது. அனுபவமும் குணத்தைப் போன்றே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உங்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு நடந்ததும் நான் அனுபவித்ததும் நீங்கள் பேசுவதற்கெல்லாம் அப்பாற்பட்ட உயர்ந்த ஒன்று என்று பொலிவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவள் முகத்தில் தெரியும் தெளிவு தோழிகளை ஆச்சர்யப்படுத்தியது. இவ்வளவு உறுதியாகப் பேசுகிறாள் என்றால், எதாவது சுவாரஸ்யமான நிகழ்வு நடந்திருக்கும் என்று தோழிகள் கதை கேட்கும் கட்டத்திற்குள் புகுந்தார்கள்.
பேசித் தீர்க்க ஆள் தோடிக் கொண்டிருந்த நாயகிக்கு நல்ல வேட்டை. அறையில் இருந்த நான்கு தோழிகளில் மலர் மட்டும் அவள் மனதைப் புரிந்துகொண்டு இடையில் கேள்வி கேட்டும், உண்மையா?, அப்படியா? என்று பேசி ஒத்துழைத்தாள். மற்ற மூவரும் கன்னத்தில் கைகொடுத்துத் தாங்கி தலைசாய்த்துப் பூத்த சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“ஹேய் உன் கிட்ட ரிசர்வ் டிக்கெட் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டாரே அவர் பக்கத்துலயா உக்காந்த?. அப்படி பண்ணிருந்தீனா, பாத்த எல்லாருமே வேற மாதிரிதான் நெனச்சிருப்பாங்க”
“பக்குறவங்க ஆயிரம் நினைக்கட்டும் பழகுறவங்களுக்குதான்டி உண்ம தெரியும்”
“என்ன வசனமெல்லாம் பயங்கரமா இருக்கு. அப்போ அவரேதான்”
“ஆமாடி அவருதான்”
இருவருமாகப் பேசிக் கொண்டிருக்க மற்ற தோழிகள் “யார பத்திடி பேசுறீங்க?” என்று சச்சரிக்க, “இதோ இவரப் பத்திதான்” என்று ஜோதா தன் செல்ஃபோனில் அக்பருடையா இன்ஸ்டா பக்கத்தை எடுத்துக் காட்டினாள்.
“ஹே யாருடி இந்தப் பயன் செம்மையா இருக்கான்” என்று அனைவரும் வாயைப் பிளக்க, “அவன் இவன்னு பேசாதீங்கடி, இனிமே இவரு உங்களுக்கெல்லாம் அண்ணா” என்று ஜோதா சொல்ல, “ஓஹோ” என்று இழுத்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.
“எண்ணம் போல வாழ்க்கை” சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?. மனுஷங்கள நம்பனும்டி என்று ஆரம்பித்து பேருந்து நிலையத்தில் அவளை முதன் முறை பார்த்ததிலிருந்து ஆரம்பித்து, இன்ஸ்டா ஐடி வாங்கியதைத் தொட்டு, கடைசியாக பாய் சொல்லி விடைபெற்றது வரை சொல்லி முடித்தாள். அவளது தோழிகள் கண் கொட்டாமல் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஜோதா மிகவும் ரசனையானவள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் பேச மாட்டாள். அவளது பேச்சில் எப்போதும் ஒரு கவித்துவம் இருக்கும்.
ஒரே விஷயத்தை பல முறை சொன்னாலும் வேறு வார்த்தைகளில் புதுவித புரிதலோடு பேசுவாள். கேட்பவருக்கு இதை இப்படிக் கூட எடுத்துக் கொள்ளலாமா? என்று வியப்பாக இருக்கும்.
அன்று இரவு முழுக்க அவரைப் பேசித் தீர்த்தாள். “போதும்டி மணி பத்து ஆச்சு. படுங்க எல்லாரும் நாளைக்கு காலேஜ் போகனும்” என்று மலர் சொல்ல அறையின் விளக்கு அணைந்து அரங்கம் அமைதியானது.
இருள் சூழ்ந்த அந்த அறையின் அடர் கருப்பில் ஒளிரும் மின்மினிப் பூச்சியாய் வெட்கத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தாள் ஜோதா. செல்ஃபோன் திரை வெளிச்சம் முகத்தில் பட, நாணமுற்று நகத்தை கடித்தபடியே விழித்துக் கிடந்ததற்குக் காரணம் அக்பர் அனுப்பிய குறிஞ்செய்திதான். அவள் எப்படி அவளது தோழிகளோடு அவரைப் பற்றி பாடிக் கொண்டிருந்தாளோ, அதே போலத்தான் அவரும். “இன்று மதியம் என் நண்பனைச் சந்தித்தேன். அவனிடம் உன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து ரசித்தபடியே “அப்படியா? சரி இரவு உணவு முடிந்ததா? ஜிம்மில் இருந்து வீடு திரும்பியாச்சா?” என்று கேட்டாள். அதற்கு அவர் பதிலளித்ததும் அடுத்து என்ன பேசுவது என்றும் தெரியாமல், தூங்கவும் முடியாமல் அப்படியே இருந்தார்கள் இருவரும்.
எப்படித் தூங்கினாளோ தெரியவில்லை மறுநாள் ரொம்ப நேரம் கழித்துதான் எழுந்தாள். வகுப்பிற்குச் சென்ற பிறகும் கூட தூங்கி வழிந்தாள். காதலில் விழுந்த பெண்கள் வகுப்பில் உறங்கி வழிவதைக் கேளி செய்த அவளே அதைச் செய்யும் போது அனைவரும் அவளை நோக்கி வார்த்தைப் போர் தொடுத்தார்கள்.
இப்படித்தான் அவள் காதலை அக்பரைத் தவிர மற்ற அனைவரிடமும் சொல்லி சிலாகித்தாள் ஜோதா.
அத்தியாயம் – 18
அடுத்து என்ன நடந்ததென்று நாளை வீடியோவில் பார்க்கலாம் என்று சொல்லிக் காணொளியை முடித்தான் ஆதி. அன்றைய நாளுக்கான வேலையை சிறப்பாக செய்து முடித்துவிட்டு, யாமினிக்கு குட் நைட் மெசேஜ் செய்துவிட்டு எந்த வித மனக்கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கச் சென்றான் ஆதி.
ஆதி இறக்கி வைத்ததை விட அதிக கனத்தை ஜோதி சுமக்கிறாள் என்று ஆதிக்குத் தெரியாது.
மயக்கத்தில் இருந்து எழுந்து தன் கணவனின் வருகைக்காக காத்திருந்த ஜோதி இழப்பினை நினைத்துத் துடிதுடித்தாள். அவள் தவிப்பை நீட்டிக்கும் வகையில் தன் கனவனும் “நான் வர கொஞ்சம் லேட் ஆகும்மா. நீ சாப்பிட்று வெயிட் பண்ணாத“ என்று அழைத்துச் சொல்லிவிட்டார்.
செய்வதறியாது இருந்த ஜோதி, யாமினியையும் சிபியையும் சாப்பிட வைத்து உறங்கச் சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள். அவர் சொன்னதை விட ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்தார்.
வீட்டிற்குள் நுழையும்போதே, அவர் முகத்தில் ஜீவன் இல்லை. பிரச்சனையில் சிக்கியது போன்ற படபடப்பில்தான் வீடு வந்து சேர்ந்தார்.
அவரிடம் சொல்ல இது சரியான சுழலா? இல்லையா? என்ற சந்தேகத்திலே அவருக்கு இரவு உணவு பறிமாறினாள்.
“நீ சாப்பிட்டியா? “
“சாப்பிட்டேங்க“
“பசங்க? “
“அவங்க சாப்பிட்டுத் தூங்கிட்டாங்க“
“ம்ம்ம் சரி. ஆதி? “
“ஃபோன் பண்ணான் பேசுனேன்“
“சரிமா“
இருவரும் தனிமையில் இருக்கும் போது ஆசையோடு கதை கதையாய்ப் பேசும் ஜோதியிடம் இருந்து கேள்விக்கு மட்டும் கிடைக்கும் பதிலை வைத்து ஏதோ நடந்திருக்கிறது என்று கணித்தார்.
அவளிடம் கேட்டால் உடனே சொல்லிவிட மாட்டாள். அதே நேரத்தில் எதையும் அவரிடமிருந்து அவளுக்கு மறைக்கத் தெரியாது என்று ஜோதியின் கணவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் எதையும் கேட்டுக் கொள்ளாமல் கிடப்பில் தள்ளினார்.
அவர் உணவு உண்ணு முடித்ததும் இருவரும் உறங்கச் சென்று விட்டார்கள். பெரும்பாலன இரவில் பெரிய இடைவெளியில் கட்டிலின் ஓரங்களில் படுத்திருக்கும் இருவரும் தங்களின் பழைய காதல் நினைவுகளால் நெருங்குவார்கள். அப்படியான இரவாக அன்று இல்லை. இருவருக்கும் இடையே அமைதி மட்டுமே நிரம்பி வழிந்தது.
விளக்கை அணைத்து அரை மணி நேரம் கழித்தும் ஜோதியின் கைவளையல் சத்தம் அவரின் காதுகளில் ஏதோ சோக செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த பாஷை அவருக்கு மட்டும்தான் புரியும்.
கண்ணீரால் தலையணையை நினைத்துக் கொண்டிருந்த ஜோதி வெளிச்சம் பட்டதும் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். தன் கணவன் கையில் தட்டுடன் நிற்பதைக் கண்டாள். அடக்கி வைத்த கண்ணீர் மீண்டும் விடுபட்டு கன்னம் வழியாக வழிந்தது.
“பசியோட படுத்தா உன் உடம்பு தாங்காது. எதுவும் பேசாம சாப்பிடு முதல்ல“ என்று சொல்லி தன் கையால் ஊட்டினார். வாயில் வைத்த உணவு முள்ளாய் தொண்டையை குத்தி உள்ளே செல்ல மறுத்தது, போதும் என்றாள். சாப்பாட்டு விஷயத்தில் அவள் என்ன பிடிவாதம் செய்தாலும் அவளது கணவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அதனால் வேறு வழியில்லாமல் சாப்பிட்டு முடித்தாள்.
“சொல் பேச்சே கேக்க மாட்டின்ற வர வர. உனக்குதான் உடம்புல ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்குல. உனக்கு ஒவ்வொரு முறையும் தடவிக் கொடுத்து சொல்லிகிட்டே இருக்கனுமா?. குழந்தையா நீ?. சாப்பிடாம இருக்குற அளவுக்கு அப்படி பெரிய விஷயம் நடந்துருச்சு?”
“ஒன்னும் இல்லங்க நீங்க வந்த உடனே விஷயத்த உங்க கிட்ட சொல்லிடனும்னு காத்திருந்தேன். ஆனா நீங்க வழக்கத்த விட லேட்டா வந்தது மட்டுமில்லாம பாக்க ரொம்ப டென்ஷனா வேற தெரிஞ்சீங்க. அதான் நான் எதுவும் காட்டிக்காம விட்டுட்டேன்“
“என்ன காட்டிகல?. நீ சத்தமில்லாம அழுகுற அழுக என் காத கிழிக்குது ஜோதி. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நம்ம ஜிம்முக்கு புது மிஷன்ஸ் கொஞ்சம் வாங்க வேண்டி இருக்குனு சொன்னேன்ல அதப் பத்திதான் சுரேஷ் கிட்ட பேசிட்டு இருந்தேன். அவன் சில கம்பெனி ஃபோன் நம்பர் கொடுத்தான். அதான், கால் பண்ணி பேசிட்டு வந்தேன். ரொம்ப நேரம் அதே சிந்தனைல இருந்துட்டு வந்ததாலதான் பாக்க உனக்கு அப்படித் தெரிஞ்சிருக்கு. நீ எதுவும் மனசுல எடுத்துக்காத”
“சரிங்க”
“ம்ம் சரி இப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்சனை? “
“இது பிரச்சன இல்லங்க பயம்“
“சரி ஏதோ ஒன்னு. விஷயத்த சொல்லு ஜோதி“
தலையணையின் மேல் இருந்த செல்ஃபோனை எடுத்து ஆதி நடத்தும் யூடியூப் சேனலைத் திறந்து தன் கணவனின் கையில் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள் ஜோதி. அவரும் பயம் கலந்த ஆர்வத்தோடு ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சில மணி நேரம் கழித்து ஜோதியைப் போலவே சுருண்டு மடிந்தார். கை நடுங்கி செல்ஃபோன் கீழே விழுந்தது. ஆதி இரண்டாம் நாள் பதிவேற்றிய காணொளி அவர்களது அறையில் சத்தமாக ஒளித்துக் கொண்டிருந்தது. அந்த சத்தத்தை விட அவர்களது மௌனமான அழுகுரலின் சத்தம் அழுத்தமாக இருந்தது.
தங்களது வலியைப் பேசித் தீர்க்க வார்த்தைகளின்றி தவித்த இருவரும் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு கண்ணீர் சிந்தினார்கள். “இந்தக் கதை முடியும் போது ஆதி நம்மல விட்டு போயிருவானாங்க? “ என்று உருக்கமாக கேட்டாள் ஜோதி.
“பைத்தியக்காரி மாதிரி பேசாத. அவன் நம்ம புள்ள. நம்மள விட்டு எங்கையும் போக மாட்டான்“
“எனக்கு பயமா இருக்குங்க“
“சரி அந்த டைரி எப்படி அவனுக்கு கெடச்சது? “
“ அதாங்க தெரியல. பழைய வீட்டுல இருந்து இங்க மாறி வரும்போது காணாமல் போனது. எங்க வச்சேன்றதவே மறந்துட்டேன்“
“நம்ம இங்க வந்தே பத்து வருஷம் ஆகிருச்சே. இத்தன வருஷம் கழிச்சு எப்படி அவனுக்குக் கிடச்சது? “
“ஆதி ஒரு நாள் வந்து ஹாஸ்டல்ல நிறைய நேரம் சும்மாவே இருக்கேன். அந்த நேரத்த வீணாக்காம யூடியூப் சேனல் ஒன்னு ஸ்டார்ட் பண்றேன் அதுக்கு எனக்கு நல்ல ஸ்ட்ராங்கான கன்டென்ட் வேணும். நீதான் நிறைய கதை எழுதி வச்சிருப்பியே அத நான் யூஸ் பண்ணிக்குறேன்னு கேட்டான். நானும் சரி எடுத்துக்கோ பழைய பீரோலதான் எல்லாமே இருக்குனு சொன்னேன். எத எடுத்தானா என்னனு எனக்குத் தெரியாது. இப்போ பாத்த நெஞ்ச உலுக்குற மாதிரி உக்காந்து கத சொல்லிட்டு இருக்கான்“
“உன்னோட நோட் புக் எல்லாம் அடுக்கி வைக்கும் போது அதையும் அதுக்குள்ளயே வச்சிட்டு மறந்திருப்ப ஜோதி”
“இருக்கலாம்”
“சரி எதுவரைக்கும் அதுல எழுதியிருக்க? “
“சிபி பொறந்த வரைக்கும்தா எழுதியிருக்கேன். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் எழுதல. அப்புறம் வீடு மாறுனோம் நோட்டு காணம போச்சு“
“சரி ஜோதி நீ எதுக்கும் பயப்படாத. அதெல்லாம் அவன் கண்டுபுடிக்க மாட்டான்“
“இல்லங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உண்ம தெரிஞ்சா என் புள்ள மனசு என்ன பாடுபடுமோனு பயமா இருக்குங்க“
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ எதுக்கும் பயப்படாத. நான் பாத்துக்குறேன்“
தன் கணவன் கொடுத்த நம்பிக்கையிலும் ஆறுதலிலும் அன்று இரவு தீராத பயம் சற்று குறைந்தது. இருவரும் கண் மூடினார்கள். ஆனால் உறங்கவில்லை.
இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த கதை இப்போது மூன்றாவது ஆளாக ஆதிக்கும் தெரிய வந்தது. இருவரின் மனநிலையையும் கடுமையாக பாதித்தது.
இந்தக் கதையின் பெரும் திருப்பு முனையே தான்தான் எனத் தெரியாமலே ஆதி இந்த உலகிற்கு கதை சொல்லிக்
கொண்டிருந்தான்.
அவன் நினைத்ததை விட வீடியோ மிகப் பிரபலமாக ஆரம்பித்தது. கருத்துப் பெட்டியில் விருப்பங்கள் அன்பு மழையாகப் பெய்து பெருகியது. ஒவ்வொரு நாளும் அவன் அடுத்த கதையை எப்படிக் கொண்டு செல்வான் என்கிற ஆர்வத்தில் பார்வையாளர்களும் அதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்கிறார் பதற்றத்தில் அவனின் பெற்றோரும் இருந்தனர்.
பார்வையாளர்கள் மத்தியில் ஆதியின் கதை சொல்லும் காணொளி மிகுந்த வரவேற்பைப் பெற, அவனுக்கு இருந்த ஆர்வம் பல மடங்காக உயர்ந்தது. வீடியோ போடுவதில் முன்பைவிட முனைப்புடன் இருந்தான். இதற்கிடையில் யாமினியை பெரிதாக கண்டுகொள்ளாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான்.
ஆதியின் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தைபோல ஒரு இன்பமான வாழ்க்கைக்குள் நுழைந்த யாமினிக்கு, அந்த அன்பான குடும்பத்தின் மீது மரியாதை அதிகரித்தது. அந்த குடும்ப வாழ்க்கையில் அவளுக்குக் கிடைத்த மனநிறைவு, ஆதியை இன்னும் அதிகமாகக் காதலிக்க வைத்தது. அவளது அதிகபட்ச ஆசையே அவனுடன் ஒரு சில மணித்துளி செல்ஃபோனில் பேசுவதுதான். அந்த சந்தோஷத்திற்காக ஏங்கினாள்.
வகுப்பில் இருந்து விடுதிக்கு வந்ததும் அன்னைக்கான வீடியோவிற்குத் தேவையான கதைப் பகுதியை வாசித்துவிட்டு, இரவு உணவு முடிந்ததும் அம்மாவிற்கு அழைத்தான் ஆதி.
அம்மாவின் குரலில் இருக்கும் நடுக்கமும் பேச்சில் இருக்கும் மாற்றமும் அவனை அச்சுறுத்தியது.
“உடம்புக்கு எதுவும் முடியலைனா சொல்லிருமா… சொன்னா நாங்க வருத்தப்படுவோம்னு நெனச்சு மறைக்காத அது பெரிய பிரச்சினையில முடிஞ்சிரும்”
“ஒன்னும் இல்லடா ஆதி. லேசா தல வலிக்குது அவ்வளவுதான்”
“தல வலிச்சா போய் படுக்க வேண்டியதுதான… ஏன் கிச்சன்ல நின்னுட்டு கஷ்டப்படுற?. ஒரு நாள் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா ஒன்னும் ஆகாது”
“யாமினி இருக்கும் போது ஏன்டா ஹோட்டல் சாப்பாடு சாப்பிடனும். அருமையா சமச்சிட்டு இருக்கா. எனக்கு எந்த வேலையும் இல்ல. துணைக்காக நின்னிருக்கேன் அவ்வளவுதான். என் பாரதத்தை எல்லாம் பங்கு போட்டு சுமந்துட்டு இருக்காடா”
“வீட்டுக்கு வந்து ரெண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இவ்வளவு பாராட்டா?. நானும்தான் கிச்சன்ல உனக்கு ஹெல்ப் பண்ணிருக்கேன். என்னையப் பாராட்டி பேசிருக்கியா?. பதிலுக்கு தோசக் கரண்டியாலதான் நாலு அடி அடிச்சிருக்க“
“நீயும் யாமினியும் ஒன்னாடா?”
“இல்லையா அப்போ?”
“இல்லவே இல்ல”
“ம்ம்ம் அப்போ வீட்ல நமக்கு மரியாத அவ்வளவுதானா?”
“உனக்கெல்லாம் இதுவே பெருசுடா. சரி யாமினி கிட்ட பேசுறியா?”
“இல்லமா வேணாம்”
“சரிப்பா பாத்து கவனமா இரு. நாளைக்கு கால் பண்ணு”
“ம்ம்ம் சரிமா”
அம்மாவிடம் பேசிய பிறகு இரவு உணவு உண்ணச் சென்றான்.
அத்தியாயம் – 15, 16
அத்தியாயம் – 15
ஆதி வழக்கத்தைப் போலவே கனத்த இதயத்தோடு வீட்டை விட்டுப் பரிந்து மீண்டும் விடுதிக்கு செல்ல அப்பாவின் பின்னால் பைக்கில் அமர்ந்து பேருந்து நிலையம் சென்றான். அப்பாவும் ஜிம்மிற்கு சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.
அப்பாவும் ஆதியும் வீட்டை விட்டு வெளியேறியதும் வீடு மீண்டும் அமைதியை உடுத்திக் கொண்டது. அதைக் களைய ஜோதி ஒரு திட்டம் தீட்டினாள்.
யாமினிக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்பதை தன் கனவரிடம் கூறி முன்னெச்சரிக்கையாக பணம் வாங்கி வைத்திருந்தாள் ஜோதி.
அதை எடுத்துக் கொண்டு மூன்று பேரும் கடை வீதிக்குச் சென்றார்கள்.
இருளை மூடி மறைக்கும் விதமாக வண்ண வண்ண விளக்குகளோடு அமைந்திருந்த கடைகளின் வாயில்கள் வரவேற்க, வேண்டாம் என்று சொல்லாமல் ஒவ்வொரு கடையாக சென்று பொருட்களை வாங்கினார்கள்.
என்னதான் ஜோதி முழு தாராளத்தையும் கொடுத்தாலும் யாமினியின் கூச்சம் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தை மீறியது.
அதைப் புரிந்து கொண்டு ஜோதியும் அவளை தன்னுடன் இயல்பாக அவளை இருக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும் அவளைக் காண்ணாடி முன்னே நிறுத்தி நிறமும், வடிவும் அவளுக்கு எடுக்கிறதா என்பதை ஆராய்ந்து அழகு பார்த்து வாங்கிக் கொடுத்தாள்.
காதுக்கு ஜிமிக்கி கம்மல், கைக்கு கண்ணாடி வளையல், வட்டமுக யாமினிக்கு எடுப்பான குங்கும நிற கோபுரப் பொட்டு, காலுக்கு கொலுசுன்னு ஒன்னு விடாம அத்தனையும் ஜோதி வாங்கிக் கொடுக்க, இதுவரை தன் கண்கள் காணாத தன் தாயின் முகம் யாமிக்குத் தோன்றியது.
சாலையோர வியாபரிகளிடம் பேரம் பேசி வாங்கும் மல்லிகைப் பூவிற்கு மவுசு அதிகம். ஷாப்பிங் முடித்த கையோடு அதையும் வாங்கி யாமினியின் தலையில் வைத்து விட்டாள் ஜோதி.
பெண்களோடு கடைக்குச் செல்லும் எந்த வயது ஆணாக இருந்தாலும் சற்று கடுப்பு இருக்கும். சிபிக்கும் அப்படித்தான் இருந்தது. பத்து இருபது கவரைப் பிரித்து அளந்து பார்த்து விட்டு பின் திரும்ப முதலில் எடுத்ததையே பில் போட எடுத்து வந்ததும், வாங்காத துணியைப் பற்றி பல மணி நேரம் விசாரித்ததும் அவனுக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. அது ஷாப்பிங் செல்லும் பெண்களின் சாதாரண குணம் என்று அவனுக்குப் புரியவில்லை. புரியாமலேயே அந்த அனுபவம் அவனுக்குக் கிடைத்து விட்டது.
“ம்மா நானும் உங்கூட கடைக்கு வாரா வாரம் வரேன். என்னைக்குமே இவ்வளோ நேரம் செலவழிச்சதே இல்லமா. போவ, தேவையானத எடுப்ப, திரும்ப வந்துருவ அவ்வளோதான். ஆனா இன்னைக்கு என்னடானா நாலு மணி நேரம் ஆச்சு”
“பொம்பள புள்ளைக்கு பொருள் வாங்குறதும் ஆம்பள புள்ளைக்கு பொருள் வாங்குறதும் ஒன்னாடா? “
“இல்ல ஒன்னு இல்ல ஒன்னு இல்ல. தெரிஞ்சுகிட்டேன். புரிஞ்சுகிட்டேன். ஒரு பக்கம் கடுப்பா இருந்தாலும், நீ ஆசையாசையா கேட்டுக் கேட்டு வாங்குறத பாக்கும்போது பொம்பள புள்ளையாவே பொறந்து இருக்கலாம்னு தோனுச்சு“
“சிபி வர வர பெரிய மனுசன் மாதிரி பேசுறான். எம்புள்ள எல்லாத்தையும் புரிஞ்சுக்குது. என் செல்லம்“ என்று சொல்லி தன் கடைக்குட்டியின் கன்னத்தைக் கிள்ளி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
ஷாப்பிங் சென்று வந்த களைப்பில் சிபி சோபாவில் சாய்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான். யாமினியும் ஜோதியும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
“நீ போய் உக்காருமா. நான் பாத்துக்குறேன்”
“இல்ல பரவாயில்லை“
யாமினியின் முகம் எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தது. தன்னையே அறியாமல் பாத்திரங்களைத் தன் கையாள் தொட்டுக் கீழே விழுந்து உருளச் செய்தாள்.
அதைத் திகைத்துப் போய் திரும்பிப் பார்த்த ஜோதிக்கு யாமினியின் கண்கள் கலங்கி இருப்பது புரிய வந்தது. சமையல் மீது இருந்த கவனம் அவள் பக்கம் திரும்ப அவள் கையைப் பற்றிக் கொண்டு “என்ன யோசன? “ என்று கேட்டாள்.
அதுவரை அணையில் இருந்து கசிந்து கொண்டிருந்த கண்ணீர் திடீரென அணையை உடைத்துக் கொண்டு வெளியேறியது. ஜோதியைக் கட்டியணைத்துக் கொண்டு சொல்லத் தெரியாத வார்த்தைகளால் விம்மிக் கொண்டிருந்தாள் யாமினி. அவள் மனதில் இருப்பதை எந்த வார்த்தைகளைக் கொண்டும் வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள். என்ன சொல்வது என்று புரியாமல் “இனிமே நான் உங்கள அம்மானு கூப்பிடட்டுமா? “ என்று தன் அழு குரலில் கேட்டாள்.
அப்படிக் கேட்டதும் ஏற்கனவே பூவிதழ் தன்மை கொண்ட ஜோதியின் மனம் நெகிழ்ந்துபோனதை கண்களிடம் சொல்ல, கண்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டது.
“ஏய் லூசு நான் உனக்கு அம்மாதான்டி“ என்றாள் ஜோதி.
“சரிம்மா” என்று சொல்லியிருந்தால் கூட கண்ணைத் துடைத்துச் சிரித்திருப்பாளோ என்னவோ… உரிமையாயோடு “டி”, “லூசு” என்ற வார்த்தைகள் பதிலாகக் கிடைத்ததும் இதுவரை அவளுக்கு அறிமுகமாகத தாயுணர்வு ஒன்றுகூடி உறையச் செய்தது யாமினியை.
“சிபியும் ஆதியும் உங்க கிட்ட பழகுற விதம் மாதிரி இதுவரைக்கும் நான் எங்கையுமே பாத்தது இல்ல. இங்க இருந்த ஒரே நாள்ல பல முறை பொறாமை பட்டேன். அம்மான்னா உங்கள மாதிரிதா இருக்கனும்”
“அதுசரி. நீ இனிமே அழவே கூடாது. அழுதா அம்மாக்கு புடிக்காது. நீயும் நானும் சேர்ந்துதா சிபியையும் ஆதியையும் அழ வைக்கனும் இந்த வீட்ல“
அழுத முகம் சிரிக்கும் போதும், நினைத்ததை விட ஒரு உறுதியான, அன்பான இணைப்பு கிடைக்கும் போதும் தோன்றும் உற்சாகம் கண்ணீர் தேங்கி நின்ற அவர்கள் இருவருடைய நான்கு கண்களிலும் தெரிந்தது.
தாயின் வாசனை மட்டும் கிடைத்தால் போதும் என்று ஏங்கிக் கொண்டிருந்த யாமினிக்கு தாயின் மொத்த பாசமும் கிடைத்தது. அதைவிடப் பெரிதாக உயிருக்கும் மேலானதாக அந்தக் குடும்பத்தை நினைக்கும் பெண்ணாக யாமினி மாறினாள். அவர்களின் அன்பே அவளை அப்படி மாற்றியது என்பதே உண்மை.
ஆதி விடுதிக்குத் திரும்பியதும் உறங்கிவிட்டான். அதனால் அன்று வீடியோ போட முடியவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, தான் ஒரு யூடியூப் சேனல் நடத்துவதை யாமினியிடம் சொல்லாதது நியாபகத்திற்கு வந்தது.
உடனே கைப் பேசியில் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்து விட்டு வகுப்பறைக்குள் நுழைந்தான்.
வகுப்பு முடிந்து விடுதி வந்ததும் முதல் வேலையாக அவன் அனுப்பிய செய்திக்கு அவள் என்ன பதில் அனுப்பி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக கைபேசியை எடுத்தான். யாமினியின் குறுஞ்செய்தியைப் பார்த்தவன் சிரித்தான், அழுதான், உற்சாகத்தில் குதித்தான், இன்னும் ஏதேதோ செய்துகொண்டிருந்தான்.
அவனை இந்த அளவிற்கு ஆட்டம் போட வைத்த யாமினியின் குறுஞ்செய்தி என்னவென்றால்?… “டேய் சூப்பர்டா“. “ஆதி லூசு பயலே நாநூறு சப்ஸ்கிரைபர்னு சொன்ன, உன் சேனல்ல மொத்தம் மூவாயிரம் சப்ஸ்கிரைபர்டா“.
“கதையெல்லாம் அழகா சொல்றடா கருப்பா “. “டெய்லி வீடியோ போடு “ என்று சொல்லியிருந்தாள்.
இதுவரை இரண்டு வீடியோ மட்டுமே போட்டிருக்கும் சேனலில் எப்படி ஒரே நாளில் இத்தனை சப்ஸ்கிரைபர்ஸ் வந்தார்கள் என்கிற கேள்வி ஆதியை குத்திக் கொண்டிருந்தது. முதல் வீடியோவிற்கு இல்லாத வரவேற்பு இரண்டாவதாகப் போட்ட வீடியோவிற்கு அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்ததை அறிந்து வியந்தான்.
முதல் வீடியோவைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் போடப்பட்ட ஜோதா அக்பரின் கதை பல பேர் மனதில் ஒட்டிக் கொண்டது, அடுத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் வீடியோ கருத்துப் பெட்டி சொன்னது.
வீடியோ பார்த்ததில் பாதி நபர்கள் தங்கள் விருப்பங்களைக் கருத்தாகத் தெரிவித்திருந்தார்கள். அவர்களின் கருத்துக்களைப் படித்து பூரித்து, இனம் புரியாத சந்தோஷத்தில் இருந்ததால் நேரம் போனதே தெரியாமல் வீடியோவைப் பற்றி போடப்பட்டிருந்த ஒவ்வொரு கருத்தையும் வாசித்தான். அவன் போட்ட இரண்டு வீடியோக்களையும் மீண்டும் பல முறை பார்த்து பரவசமானான். அப்படியே கழிந்தது அந்த நாள் இரவு.
மறுநாள் அம்மாவிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது நேற்று நடந்ததை அவளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.
அவனுக்கிருந்த உற்சாகம் ஜோதிக்கு இல்லை என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் பேசப் பேச “ம்ம்“ என்று அலுத்துக் கொண்டே கேட்டாள்.
“ம்மா… நான் எவ்வளோ பெரிய விஷயத்த சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடானா எந்த ரியாக்சனும் இல்லாம “ம்ம்ம்“ “ம்ம்”ன்னு சொல்லிட்டு இருக்க. உனக்கு சந்தோஷமாவே இல்லையா? “
“இல்லடா. இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? “.
“என்னமா இப்படி சொல்ற? உன் மகன எல்லாரும் பாராட்டுறது உனக்குப் பிடிக்கலையா? “
“ஆமா புடிக்கல”
“ஏன் புடிக்கல உனக்கு?” என்று மழுங்கிய குரலில் கேட்டான்.
“யூடியூப் சேனல் ஆரம்பித்தது பெரிய விஷயம் கிடையாது, கமென்ட்ல பாராட்டு வாங்குறது பெரிய விஷயம் கிடையாது, எவ்வளோ பிசியா இருந்தாலும் டெய்லி வீடியோ போடனும் அதுதான் பெருசு. ஏதோ பத்து பேர் வந்து கமென்ல ஹாய் ஓய்னு பாராட்டுனா நீ பெரிய ஆளாடா?. ஓரே நாள்ல மூவாயிரம் சப்ஸ்கிரைபர் வந்தாங்கலாம் அந்த சந்தோஷத்துல ஐயா வீடியோ போடாம விட்டுட்டாறாம். இன்னைக்கு ஒரு வீடியோ புடிச்சதால பத்து பேர் பாராட்டுறாங்க, நாளைக்கு புடிக்கலைனா பாராட்டுன பத்து பேரும் உன்னைய திட்டுவாங்க. திட்டு வாங்குனா அந்த கவலைல வீடியோ போடாம இருப்பியா?. இப்படியே வீடியோ போடாம இருந்தீனா உன் சப்ஸ்கிரைபர்ஸ்லாம் கூடிய சீக்கிரம் மாயமா மறஞ்சு காணாம போயிருவாங்க “
ஜோதி பேசுவதை ஆச்சர்யத்தோடு புருவத்தை சுருக்கிக் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி. அம்மா பேசியது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் உண்மை அதுதான் எதார்த்தமும் கூட என்பது அவனுக்கும் தெரியும்.
அத்தியாயம் – 16
“ம்மா நீ சொல்றது எல்லாம் சரிதான். வாழ்கையில முதல் முறையா உன்னையத் தவிர வேற யாரோ முகம் தெரியாத மனுஷங்க வாழ்த்தும்போதும், பாராட்டும்போதும் எப்படி இருக்கு தெரியுமா?. இதெல்லாம் எனக்கு கனவுமா”
“கனவுல இருந்து விழிச்சுக்கோ… கனவுல மெதந்துகிட்டே இருந்தா நீ போறதுக்கு முன்னாடியே உன் சீட்டுல வேற யாராவது இடம் புடிச்சு கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டு உன்னையவே என்னனு கேப்பாங்க“
“சரிமா சரிமா… என்ன சமையல் இன்னைக்கு? “
“தெரியலடா கிச்சன் போய் பாத்தாதான் தெரியும்“
“என்னமா உன்ன நம்பி மூனு ஜீவன்கள் இருக்குன்ற பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்க“
“சும்மாவே இருக்க போர் அடிக்குது நானே டின்னர் சமைக்குறேனு சொல்லிட்டு யாமினி கிச்சன்ல ஏதோ பண்ணிட்டு இருக்காடா“
“அப்படியா சரி சரி“
“ஏன் உங்கிட்ட சொல்லலையா? “
“நான் எங்கமா அவ கிட்ட பேசுனே?”
“ஃபோன குடுக்கவா? பேசுறியா?”
“இல்லமா வேணா. சிக்கல்ல இருந்தாதான் அடிக்கடி நெனப்பு வரும். அதான் நீ இருக்கீல ஒன்னும் பிரச்சன இல்ல “
“டேய் பெரிய ராஜா நீ அவ்வளோ பெரிய ஆளாடா? “
“நான் உன் புள்ளமா!“
அம்மாவுடன் பேசிய பிறகு ஏதோ பெரிய சக்தி கிடைத்ததைப் போன்று இருக்கும். வீட்டில் இருக்கும்போது கூட இப்படித் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவளைப் பிரிந்து இருக்கும்போது அவள் குரலில் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையுமே ஆறுதல் சொல்லி கைபிடித்து வழிகாட்டும். அதை உணர்ந்தவருக்கு மட்டும்தான் அந்த உணர்வு புரியும்.
அம்மா தான் சொல்ல வந்ததை பல பென்டுகளில் நுழைத்துத் திருப்பி வளைந்து நெலிந்து சொன்னாலும், அவள் சொல்ல வந்த கருத்து “விமர்சனங்களைக் கடந்து தினமும் தவறாமல் வீடியோ போடுவதுதான் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் கொடுக்கும்” என்பதுதான்.
அவனும் அதைத் தன் மூளைக்குள் படிய வைத்தான். அன்றைய நாளுக்கான வீடியோவில் கதையைத் தொடர, அந்த நோட்டில் அம்மா கையால் எழுதிய கதையை விட்டதில் இருந்து தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தான்.
தன் மகன் புகழ் மயக்கத்தில் மூழ்கி மடிந்து விடக் கூடாது என்கிற எண்ணத்தோடு கோக்கு மாக்காகப் பேசி எச்சரிக்கைப் படுத்தினாலும், தன் ரத்தத்தில் இருந்து பிறந்தவனை ஊரார் பாராட்டும் அழகைப் பார்த்து ரசிக்க எந்த அம்மாவுக்குத்தான் புடிக்காது?. பேரார்வம் பூக்க கைபேசியில் தன் மகன் சேனலுக்குள் நுழைந்தாள் ஜோதி.
முதல் வீடியோவை ஓடவிட்டு கேப்பொலியைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த சத்தம் மூளைக்கும் மனதிற்கும் இடையில் காதருகே சிக்கிக்கொண்டது. அதைப் பெரிதுபடுத்தாமல் தன் வலது கை கட்டை விரலால் மேல் தள்ளி ஒவ்வொரு கருத்தையும் வாசித்துப் பெருமையடைந்தாள்.
அடுத்த வீடியோவையும் அதே போல் ஓடவிட்டு கருத்துகளில் கண் வைத்து சொக்கி இருந்தாள் ஜோதி. அதில் ஒரு வார்த்தை மட்டும் செவியைக் கடந்து, மூளையில் முள்ளாய்க் குத்திப் புரிதலை ஏற்படுத்திவிட்டு பின் சட்டென்று மனதிற்குள் புகுந்து அவளை ஆட்டி வைத்தது.
“அக்பர்“ என்கிற அந்த சத்தம் அவளை ஏங்கோ இழுத்துச் சென்றது. அது அவள் தொண்டைக் குழியில் சிக்கிய கண்ணாடிச் சில்லாய் சதையை அறுத்து வதைத்துக் கொண்டிருந்தது. வேதனையில் தலை சுற்றிக் கீழே விழுந்தாள்.
சோஃபாவில் அமர்ந்திருந்தவள் திடீரென சரிந்து கீழே விழுவதைப் பார்த்த சிபி “அம்மா“ என்று அலறினான். சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்த யாமினி அவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி வசதியாக அமரச் செய்தாள். “என்னமா ஆச்சு? “ என்று சிபியும் யாமினியும் மாறி மாறி கேட்க, “ஒன்னும் இல்ல திடீர்னு என்னமோ ஆகிருச்சு. இப்போ பரவாயில்ல. நல்லாயிருக்கு. அப்பாகிட்டையும் ஆதி கிட்டையும் சொல்லாதீங்க கண்டத யோசிச்சு பயப்படுவாங்க. நீங்களும் ஒன்னும் குழப்பிக்க வேண்டாம் நான் நல்லாதான் இருக்கேன்“ என்று சொல்லி சமாதானம் செய்தாள் ஜோதி.
யாமினி சமையலை கவனிக்க சமயலறைக்குள் நுழைந்தாலும், சிபி அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அங்கேயே இருந்தான். அவளது பார்வையும் சிந்தனையும் வேறு எதன்மீதோ இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவன் அவளுக்கு தனிமையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மாறுபட்ட மனவோட்டத்தில் மாட்டிக்கொண்டு மீண்டு எழ முடியாமல் தவிக்கும் ஜோதியின் மனதை யாராலும் படிக்க முடியாது. அவள் கனவனைத் தவிர.
ஜிம்மில் இருந்து வீடு திரும்பும் தன் கனவனுக்காக ஜோதி பல மணி நேரம் காத்திருந்தாள்.
அதே நேரத்தில் ஆதி அடுத்த வீடியோவிற்குத் தயாராகி, பேசத் தொடங்கினான். வீடியோ வழக்கமான பானியின் அடிப்படையில் தொடங்கியது.
பேருந்தில் பயணம் கொண்ட நாயகனும் நாயகியும் எப்படியோ ஒரு வழியா தயக்கத்தை மீறி தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். அதிலே ஒன்றரை மணி நேரம் முடிந்து விட்டது. பேருந்து போய்ச் சேரும் கொடைக்கானலும் இன்னும் அறை மணி நேரத்தில் வந்துவிடும். அதுவரைதான் இந்த நெருக்கமும் பழக்கமும். அதன் பிறகு இவளை இழந்து எப்படி நான்? என்று மனதிற்குள் அசைபோட்ட அக்பர்.
தொடக்கத்தில் இருந்த தயக்கத்தை உதிர்த்து தன் தடித்த குரலால் அவளைப் பார்த்து ஒன்று கேட்டார்.
“ஜோதா…“
“ ம்ம்ம்“
“இன்ஸ்டாகிராமில் இருக்கியா? “
“ம்ம்ம் ஆமா” என்று சொல்லி தன் கைபேசியை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டைக் காண்பித்தாள். அதைப் பார்த்துக் கொண்டவர் தனது கைபேசி இன்ஸ்டா கடலுக்குள் அவள் பெயர் வீசித் தேடினார். அவள் கைபேசியில் பார்த்த அதே முகப்பு படத்தைப் பார்த்ததும் அவளைத் தொடர்ந்தார். அவர் தொடர்ந்துள்ளது அவளிடம் காட்டினார். அவளும் “ஓகே“ என்று சொல்லி கைபேசியை இருவரும் பைக்குள் வைத்தார்கள். மீதம் இருந்த ஒரு மணி நேரம் மௌனத்திலே கழிந்தது.
அவ்வப்போது இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்து புன்னகித்துக் கொண்டார்கள்.
“கொடைக்கானல் பஸ்டான்டு வந்துருச்சு… இறங்கிக்கங்கப்பா“ என்றார் நடத்துனர்.
பேருந்தில் நிறைந்திருந்த சுற்றுலா கூட்டமும் சொந்த ஊர் கூட்டமும் விரைந்து களைந்தார்கள். இவர்கள் இருவர் மட்டும் இருக்கையை விட்டு எழ மனமில்லாமல் இருந்தார்கள்.
அக்பர் கைப்பேசிக்கு ஏதோ ஒரு அழைப்பு வர அவர் எழுந்து நின்று பேசி முடித்துவிட்டு தன் உடமைகளைக் கையில் பற்றிக் கொண்டு ஜோதாவை ஏக்கத்தோடு பார்த்தார். அந்த பார்வை அவரது கவலை நிலையை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது. அவளும் தன் பையை எடுத்துக் கொண்டாள். இருவரும் கீழே இறங்கினார்கள்.
அக்பரின் கால்கள் தத்தி தத்தி பின்நோக்கி மெல்ல நடக்க “ஓகே பாய்“ என்றார்.
ஜோதாவும் ஒரு சொட்டுப் போலி சிரிப்பை சிந்தியபடியே “ம்ம்ம் பாய் டேக் கேர்“ என்றாள். அவள் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே தலையைத் திருப்பி நடந்து கூட்டத்திற்குள் நுழைந்து பின் அவள் கண்ணை விட்டு மறைந்தார் அக்பர். அவள் அதே இடத்தில் நின்றுகொண்டு இருந்தாள்.
பிறகு எப்போது அந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றாலும் அவளுக்கு அவர் நினைப்பு வராமல் இருந்ததே இல்லை. அவருக்கும் அப்படித்தான் என்பதை அவள் உறுதியாக நம்பினாள்.
சுந்தர் அண்ணாவிற்கு திருமணம் நிச்சயம் ஆனது, ஜோதா தனியாக பேருந்தில் பயணம் செய்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது, அன்று இரவு ஆட்டுக்கறி குழம்பும் இட்லியும் சமைத்துச் சாப்பிட்டது, ஒரே ஹாலில் படுத்துக் கொண்டு வெட்டிக் கதை பேசியே தூக்கத்தைத் தொலைத்தது என்று ஜோதாவின் குடும்பம் குதூகலமாய் இருந்தது.
சிரிப்பு வெளிப்படையாக இருந்தாலும் அக்பரைப் பற்றிய சிந்தனை அவள் மனதைக் குடைந்து கொண்டு இருந்தது.
அவன் முகத்தைப் பார்க்க அவனைத் தேடியது. வலது கைக்கு எட்டும் தூரத்தில் அவளது செல்ஃபோன் சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்தது. அந்த இணைப்பைக் துண்டித்து விட்டு இன்ஸ்டாகிராமில் குதித்தால், அதில் அவன் இருக்கிறான் என்று பச்சை விளக்கு பளிச்சென்று எரிந்தபடியே சொன்னது.
அவனிடம் பேச வேண்டும் என்று துடிக்கும் அவளுக்கு என்ன பேசுவது என்பதில் தெளிவு இல்லை. அதனால் பேசாமல் இருந்தாள். அவனை தன்னிடம் பேச வைக்க வேண்டும் என்றும் நினைத்தாள்.
கண்ணாடி முன் நின்று அவளை அவளே ரசித்தபடியே ஒரு புகைப்படம் எடுத்து ஸ்டோரியில் பதிவேற்றினாள். அதுவரை தன் முகத்தை இணையத்தில் பதிவிடுவது என்றால் ஆகாத காரியம் அவளுக்கு.
அன்று அவன் மீது இருந்த ஆசை தைரியத்தை வரவழைத்து அப்படிச் செய்ய வைத்தது.
அந்த புகைப்படத்தை அவன் பார்த்து விட்டானா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தே பல நூறு முறை பார்த்து சலித்துவிட்டாள். அவளுக்கே அந்த புகைப்படத்தின் மீது வெறுப்பு வந்துவிட்டது. பார்க்க ஆள் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்ததால், அவர் இந்த மாதிரி சிறு விஷயங்களைப் பொருட்படுத்த மாட்டார். அடுத்தவர் ஸ்டோரி பார்த்து நேரத்தைப் போக்க மாட்டார் என்று நினைத்து அந்த ஆசையில் இருந்து திரும்பி, செல்ஃபோனை சார்ச் செய்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுத்து உறங்கிவிட்டாள்.
இடையில் அவளது அம்மா பல முறை எழுப்பியும் தூக்கத்திலிருந்து விழிக்காமல் இருந்தாள். உடல் அசதி அவளை மறுநாள் காலையில்தான் எழும்ப விட்டது. புகைப்படத்தை அவர் மட்டுமே பார்க்கும்படி அமைத்திருந்தாள். கடைசியில் அவர் பார்க்க மாட்டார் என்கிற முடிவுக்கு வந்ததால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தூக்கத்தில் மங்கலான கண்ணோடு இன்ஸ்டாவில் நுழைந்தாள்.
நுழைந்ததும் சிவப்பு நிற இதயம் என்னைப் பார் என்று சொல்லி முன் வந்து நின்றது. ஆசையில் முகமும் பார்வையும் பளபளப்பானது. அந்த இதயத்தை அழுத்தினாள். அது அதை யார் கொடுத்தார் என்பதைக் காட்டியது. யார் பார்க்க வேண்டும் என்று நினைத்து இந்த ரசனையான நடகத்தை நடத்தினாளோ அவரே பார்த்து விரும்பியும் விட்டார்.
அப்போது சிரிப்போடு சேர்த்து அச்சமும் அவளை அணைத்துக் கொண்டது. இதுவரை அவளுக்குப் புரியாத வெக்கத்தின் விளக்கமெல்லாம் அன்று வரிசையாகப் புரிந்தது.
அவர் இன்ஸ்டாவில் கொடுத்த இதயம் அவளை அழகியாகவும், நம்பிக்கையுடையவளாகவும், அனைவருக்கும் பிடித்தவளாகவும், தைரியமானவளாகவும், ரசனைக்குரியலளாகவும் மொத்ததில் சிறந்தவளாக உணரச் செய்தது. ஏதோ ஒரு பிடிமானத்தைக் கொடுத்தது. அவர் மீது மீண்டும் மீண்டும் விழச்செய்தது.