அத்தியாயம் – 15
ஆதி வழக்கத்தைப் போலவே கனத்த இதயத்தோடு வீட்டை விட்டுப் பரிந்து மீண்டும் விடுதிக்கு செல்ல அப்பாவின் பின்னால் பைக்கில் அமர்ந்து பேருந்து நிலையம் சென்றான். அப்பாவும் ஜிம்மிற்கு சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.
அப்பாவும் ஆதியும் வீட்டை விட்டு வெளியேறியதும் வீடு மீண்டும் அமைதியை உடுத்திக் கொண்டது. அதைக் களைய ஜோதி ஒரு திட்டம் தீட்டினாள்.
யாமினிக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்பதை தன் கனவரிடம் கூறி முன்னெச்சரிக்கையாக பணம் வாங்கி வைத்திருந்தாள் ஜோதி.
அதை எடுத்துக் கொண்டு மூன்று பேரும் கடை வீதிக்குச் சென்றார்கள்.
இருளை மூடி மறைக்கும் விதமாக வண்ண வண்ண விளக்குகளோடு அமைந்திருந்த கடைகளின் வாயில்கள் வரவேற்க, வேண்டாம் என்று சொல்லாமல் ஒவ்வொரு கடையாக சென்று பொருட்களை வாங்கினார்கள்.
என்னதான் ஜோதி முழு தாராளத்தையும் கொடுத்தாலும் யாமினியின் கூச்சம் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தை மீறியது.
அதைப் புரிந்து கொண்டு ஜோதியும் அவளை தன்னுடன் இயல்பாக அவளை இருக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும் அவளைக் காண்ணாடி முன்னே நிறுத்தி நிறமும், வடிவும் அவளுக்கு எடுக்கிறதா என்பதை ஆராய்ந்து அழகு பார்த்து வாங்கிக் கொடுத்தாள்.
காதுக்கு ஜிமிக்கி கம்மல், கைக்கு கண்ணாடி வளையல், வட்டமுக யாமினிக்கு எடுப்பான குங்கும நிற கோபுரப் பொட்டு, காலுக்கு கொலுசுன்னு ஒன்னு விடாம அத்தனையும் ஜோதி வாங்கிக் கொடுக்க, இதுவரை தன் கண்கள் காணாத தன் தாயின் முகம் யாமிக்குத் தோன்றியது.
சாலையோர வியாபரிகளிடம் பேரம் பேசி வாங்கும் மல்லிகைப் பூவிற்கு மவுசு அதிகம். ஷாப்பிங் முடித்த கையோடு அதையும் வாங்கி யாமினியின் தலையில் வைத்து விட்டாள் ஜோதி.
பெண்களோடு கடைக்குச் செல்லும் எந்த வயது ஆணாக இருந்தாலும் சற்று கடுப்பு இருக்கும். சிபிக்கும் அப்படித்தான் இருந்தது. பத்து இருபது கவரைப் பிரித்து அளந்து பார்த்து விட்டு பின் திரும்ப முதலில் எடுத்ததையே பில் போட எடுத்து வந்ததும், வாங்காத துணியைப் பற்றி பல மணி நேரம் விசாரித்ததும் அவனுக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. அது ஷாப்பிங் செல்லும் பெண்களின் சாதாரண குணம் என்று அவனுக்குப் புரியவில்லை. புரியாமலேயே அந்த அனுபவம் அவனுக்குக் கிடைத்து விட்டது.
“ம்மா நானும் உங்கூட கடைக்கு வாரா வாரம் வரேன். என்னைக்குமே இவ்வளோ நேரம் செலவழிச்சதே இல்லமா. போவ, தேவையானத எடுப்ப, திரும்ப வந்துருவ அவ்வளோதான். ஆனா இன்னைக்கு என்னடானா நாலு மணி நேரம் ஆச்சு”
“பொம்பள புள்ளைக்கு பொருள் வாங்குறதும் ஆம்பள புள்ளைக்கு பொருள் வாங்குறதும் ஒன்னாடா? “
“இல்ல ஒன்னு இல்ல ஒன்னு இல்ல. தெரிஞ்சுகிட்டேன். புரிஞ்சுகிட்டேன். ஒரு பக்கம் கடுப்பா இருந்தாலும், நீ ஆசையாசையா கேட்டுக் கேட்டு வாங்குறத பாக்கும்போது பொம்பள புள்ளையாவே பொறந்து இருக்கலாம்னு தோனுச்சு“
“சிபி வர வர பெரிய மனுசன் மாதிரி பேசுறான். எம்புள்ள எல்லாத்தையும் புரிஞ்சுக்குது. என் செல்லம்“ என்று சொல்லி தன் கடைக்குட்டியின் கன்னத்தைக் கிள்ளி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
ஷாப்பிங் சென்று வந்த களைப்பில் சிபி சோபாவில் சாய்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான். யாமினியும் ஜோதியும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
“நீ போய் உக்காருமா. நான் பாத்துக்குறேன்”
“இல்ல பரவாயில்லை“
யாமினியின் முகம் எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தது. தன்னையே அறியாமல் பாத்திரங்களைத் தன் கையாள் தொட்டுக் கீழே விழுந்து உருளச் செய்தாள்.
அதைத் திகைத்துப் போய் திரும்பிப் பார்த்த ஜோதிக்கு யாமினியின் கண்கள் கலங்கி இருப்பது புரிய வந்தது. சமையல் மீது இருந்த கவனம் அவள் பக்கம் திரும்ப அவள் கையைப் பற்றிக் கொண்டு “என்ன யோசன? “ என்று கேட்டாள்.
அதுவரை அணையில் இருந்து கசிந்து கொண்டிருந்த கண்ணீர் திடீரென அணையை உடைத்துக் கொண்டு வெளியேறியது. ஜோதியைக் கட்டியணைத்துக் கொண்டு சொல்லத் தெரியாத வார்த்தைகளால் விம்மிக் கொண்டிருந்தாள் யாமினி. அவள் மனதில் இருப்பதை எந்த வார்த்தைகளைக் கொண்டும் வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள். என்ன சொல்வது என்று புரியாமல் “இனிமே நான் உங்கள அம்மானு கூப்பிடட்டுமா? “ என்று தன் அழு குரலில் கேட்டாள்.
அப்படிக் கேட்டதும் ஏற்கனவே பூவிதழ் தன்மை கொண்ட ஜோதியின் மனம் நெகிழ்ந்துபோனதை கண்களிடம் சொல்ல, கண்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டது.
“ஏய் லூசு நான் உனக்கு அம்மாதான்டி“ என்றாள் ஜோதி.
“சரிம்மா” என்று சொல்லியிருந்தால் கூட கண்ணைத் துடைத்துச் சிரித்திருப்பாளோ என்னவோ… உரிமையாயோடு “டி”, “லூசு” என்ற வார்த்தைகள் பதிலாகக் கிடைத்ததும் இதுவரை அவளுக்கு அறிமுகமாகத தாயுணர்வு ஒன்றுகூடி உறையச் செய்தது யாமினியை.
“சிபியும் ஆதியும் உங்க கிட்ட பழகுற விதம் மாதிரி இதுவரைக்கும் நான் எங்கையுமே பாத்தது இல்ல. இங்க இருந்த ஒரே நாள்ல பல முறை பொறாமை பட்டேன். அம்மான்னா உங்கள மாதிரிதா இருக்கனும்”
“அதுசரி. நீ இனிமே அழவே கூடாது. அழுதா அம்மாக்கு புடிக்காது. நீயும் நானும் சேர்ந்துதா சிபியையும் ஆதியையும் அழ வைக்கனும் இந்த வீட்ல“
அழுத முகம் சிரிக்கும் போதும், நினைத்ததை விட ஒரு உறுதியான, அன்பான இணைப்பு கிடைக்கும் போதும் தோன்றும் உற்சாகம் கண்ணீர் தேங்கி நின்ற அவர்கள் இருவருடைய நான்கு கண்களிலும் தெரிந்தது.
தாயின் வாசனை மட்டும் கிடைத்தால் போதும் என்று ஏங்கிக் கொண்டிருந்த யாமினிக்கு தாயின் மொத்த பாசமும் கிடைத்தது. அதைவிடப் பெரிதாக உயிருக்கும் மேலானதாக அந்தக் குடும்பத்தை நினைக்கும் பெண்ணாக யாமினி மாறினாள். அவர்களின் அன்பே அவளை அப்படி மாற்றியது என்பதே உண்மை.
ஆதி விடுதிக்குத் திரும்பியதும் உறங்கிவிட்டான். அதனால் அன்று வீடியோ போட முடியவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, தான் ஒரு யூடியூப் சேனல் நடத்துவதை யாமினியிடம் சொல்லாதது நியாபகத்திற்கு வந்தது.
உடனே கைப் பேசியில் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்து விட்டு வகுப்பறைக்குள் நுழைந்தான்.
வகுப்பு முடிந்து விடுதி வந்ததும் முதல் வேலையாக அவன் அனுப்பிய செய்திக்கு அவள் என்ன பதில் அனுப்பி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக கைபேசியை எடுத்தான். யாமினியின் குறுஞ்செய்தியைப் பார்த்தவன் சிரித்தான், அழுதான், உற்சாகத்தில் குதித்தான், இன்னும் ஏதேதோ செய்துகொண்டிருந்தான்.
அவனை இந்த அளவிற்கு ஆட்டம் போட வைத்த யாமினியின் குறுஞ்செய்தி என்னவென்றால்?… “டேய் சூப்பர்டா“. “ஆதி லூசு பயலே நாநூறு சப்ஸ்கிரைபர்னு சொன்ன, உன் சேனல்ல மொத்தம் மூவாயிரம் சப்ஸ்கிரைபர்டா“.
“கதையெல்லாம் அழகா சொல்றடா கருப்பா “. “டெய்லி வீடியோ போடு “ என்று சொல்லியிருந்தாள்.
இதுவரை இரண்டு வீடியோ மட்டுமே போட்டிருக்கும் சேனலில் எப்படி ஒரே நாளில் இத்தனை சப்ஸ்கிரைபர்ஸ் வந்தார்கள் என்கிற கேள்வி ஆதியை குத்திக் கொண்டிருந்தது. முதல் வீடியோவிற்கு இல்லாத வரவேற்பு இரண்டாவதாகப் போட்ட வீடியோவிற்கு அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்ததை அறிந்து வியந்தான்.
முதல் வீடியோவைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் போடப்பட்ட ஜோதா அக்பரின் கதை பல பேர் மனதில் ஒட்டிக் கொண்டது, அடுத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் வீடியோ கருத்துப் பெட்டி சொன்னது.
வீடியோ பார்த்ததில் பாதி நபர்கள் தங்கள் விருப்பங்களைக் கருத்தாகத் தெரிவித்திருந்தார்கள். அவர்களின் கருத்துக்களைப் படித்து பூரித்து, இனம் புரியாத சந்தோஷத்தில் இருந்ததால் நேரம் போனதே தெரியாமல் வீடியோவைப் பற்றி போடப்பட்டிருந்த ஒவ்வொரு கருத்தையும் வாசித்தான். அவன் போட்ட இரண்டு வீடியோக்களையும் மீண்டும் பல முறை பார்த்து பரவசமானான். அப்படியே கழிந்தது அந்த நாள் இரவு.
மறுநாள் அம்மாவிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது நேற்று நடந்ததை அவளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.
அவனுக்கிருந்த உற்சாகம் ஜோதிக்கு இல்லை என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் பேசப் பேச “ம்ம்“ என்று அலுத்துக் கொண்டே கேட்டாள்.
“ம்மா… நான் எவ்வளோ பெரிய விஷயத்த சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடானா எந்த ரியாக்சனும் இல்லாம “ம்ம்ம்“ “ம்ம்”ன்னு சொல்லிட்டு இருக்க. உனக்கு சந்தோஷமாவே இல்லையா? “
“இல்லடா. இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? “.
“என்னமா இப்படி சொல்ற? உன் மகன எல்லாரும் பாராட்டுறது உனக்குப் பிடிக்கலையா? “
“ஆமா புடிக்கல”
“ஏன் புடிக்கல உனக்கு?” என்று மழுங்கிய குரலில் கேட்டான்.
“யூடியூப் சேனல் ஆரம்பித்தது பெரிய விஷயம் கிடையாது, கமென்ட்ல பாராட்டு வாங்குறது பெரிய விஷயம் கிடையாது, எவ்வளோ பிசியா இருந்தாலும் டெய்லி வீடியோ போடனும் அதுதான் பெருசு. ஏதோ பத்து பேர் வந்து கமென்ல ஹாய் ஓய்னு பாராட்டுனா நீ பெரிய ஆளாடா?. ஓரே நாள்ல மூவாயிரம் சப்ஸ்கிரைபர் வந்தாங்கலாம் அந்த சந்தோஷத்துல ஐயா வீடியோ போடாம விட்டுட்டாறாம். இன்னைக்கு ஒரு வீடியோ புடிச்சதால பத்து பேர் பாராட்டுறாங்க, நாளைக்கு புடிக்கலைனா பாராட்டுன பத்து பேரும் உன்னைய திட்டுவாங்க. திட்டு வாங்குனா அந்த கவலைல வீடியோ போடாம இருப்பியா?. இப்படியே வீடியோ போடாம இருந்தீனா உன் சப்ஸ்கிரைபர்ஸ்லாம் கூடிய சீக்கிரம் மாயமா மறஞ்சு காணாம போயிருவாங்க “
ஜோதி பேசுவதை ஆச்சர்யத்தோடு புருவத்தை சுருக்கிக் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி. அம்மா பேசியது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் உண்மை அதுதான் எதார்த்தமும் கூட என்பது அவனுக்கும் தெரியும்.
அத்தியாயம் – 16
“ம்மா நீ சொல்றது எல்லாம் சரிதான். வாழ்கையில முதல் முறையா உன்னையத் தவிர வேற யாரோ முகம் தெரியாத மனுஷங்க வாழ்த்தும்போதும், பாராட்டும்போதும் எப்படி இருக்கு தெரியுமா?. இதெல்லாம் எனக்கு கனவுமா”
“கனவுல இருந்து விழிச்சுக்கோ… கனவுல மெதந்துகிட்டே இருந்தா நீ போறதுக்கு முன்னாடியே உன் சீட்டுல வேற யாராவது இடம் புடிச்சு கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டு உன்னையவே என்னனு கேப்பாங்க“
“சரிமா சரிமா… என்ன சமையல் இன்னைக்கு? “
“தெரியலடா கிச்சன் போய் பாத்தாதான் தெரியும்“
“என்னமா உன்ன நம்பி மூனு ஜீவன்கள் இருக்குன்ற பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்க“
“சும்மாவே இருக்க போர் அடிக்குது நானே டின்னர் சமைக்குறேனு சொல்லிட்டு யாமினி கிச்சன்ல ஏதோ பண்ணிட்டு இருக்காடா“
“அப்படியா சரி சரி“
“ஏன் உங்கிட்ட சொல்லலையா? “
“நான் எங்கமா அவ கிட்ட பேசுனே?”
“ஃபோன குடுக்கவா? பேசுறியா?”
“இல்லமா வேணா. சிக்கல்ல இருந்தாதான் அடிக்கடி நெனப்பு வரும். அதான் நீ இருக்கீல ஒன்னும் பிரச்சன இல்ல “
“டேய் பெரிய ராஜா நீ அவ்வளோ பெரிய ஆளாடா? “
“நான் உன் புள்ளமா!“
அம்மாவுடன் பேசிய பிறகு ஏதோ பெரிய சக்தி கிடைத்ததைப் போன்று இருக்கும். வீட்டில் இருக்கும்போது கூட இப்படித் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவளைப் பிரிந்து இருக்கும்போது அவள் குரலில் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையுமே ஆறுதல் சொல்லி கைபிடித்து வழிகாட்டும். அதை உணர்ந்தவருக்கு மட்டும்தான் அந்த உணர்வு புரியும்.
அம்மா தான் சொல்ல வந்ததை பல பென்டுகளில் நுழைத்துத் திருப்பி வளைந்து நெலிந்து சொன்னாலும், அவள் சொல்ல வந்த கருத்து “விமர்சனங்களைக் கடந்து தினமும் தவறாமல் வீடியோ போடுவதுதான் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் கொடுக்கும்” என்பதுதான்.
அவனும் அதைத் தன் மூளைக்குள் படிய வைத்தான். அன்றைய நாளுக்கான வீடியோவில் கதையைத் தொடர, அந்த நோட்டில் அம்மா கையால் எழுதிய கதையை விட்டதில் இருந்து தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தான்.
தன் மகன் புகழ் மயக்கத்தில் மூழ்கி மடிந்து விடக் கூடாது என்கிற எண்ணத்தோடு கோக்கு மாக்காகப் பேசி எச்சரிக்கைப் படுத்தினாலும், தன் ரத்தத்தில் இருந்து பிறந்தவனை ஊரார் பாராட்டும் அழகைப் பார்த்து ரசிக்க எந்த அம்மாவுக்குத்தான் புடிக்காது?. பேரார்வம் பூக்க கைபேசியில் தன் மகன் சேனலுக்குள் நுழைந்தாள் ஜோதி.
முதல் வீடியோவை ஓடவிட்டு கேப்பொலியைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த சத்தம் மூளைக்கும் மனதிற்கும் இடையில் காதருகே சிக்கிக்கொண்டது. அதைப் பெரிதுபடுத்தாமல் தன் வலது கை கட்டை விரலால் மேல் தள்ளி ஒவ்வொரு கருத்தையும் வாசித்துப் பெருமையடைந்தாள்.
அடுத்த வீடியோவையும் அதே போல் ஓடவிட்டு கருத்துகளில் கண் வைத்து சொக்கி இருந்தாள் ஜோதி. அதில் ஒரு வார்த்தை மட்டும் செவியைக் கடந்து, மூளையில் முள்ளாய்க் குத்திப் புரிதலை ஏற்படுத்திவிட்டு பின் சட்டென்று மனதிற்குள் புகுந்து அவளை ஆட்டி வைத்தது.
“அக்பர்“ என்கிற அந்த சத்தம் அவளை ஏங்கோ இழுத்துச் சென்றது. அது அவள் தொண்டைக் குழியில் சிக்கிய கண்ணாடிச் சில்லாய் சதையை அறுத்து வதைத்துக் கொண்டிருந்தது. வேதனையில் தலை சுற்றிக் கீழே விழுந்தாள்.
சோஃபாவில் அமர்ந்திருந்தவள் திடீரென சரிந்து கீழே விழுவதைப் பார்த்த சிபி “அம்மா“ என்று அலறினான். சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்த யாமினி அவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி வசதியாக அமரச் செய்தாள். “என்னமா ஆச்சு? “ என்று சிபியும் யாமினியும் மாறி மாறி கேட்க, “ஒன்னும் இல்ல திடீர்னு என்னமோ ஆகிருச்சு. இப்போ பரவாயில்ல. நல்லாயிருக்கு. அப்பாகிட்டையும் ஆதி கிட்டையும் சொல்லாதீங்க கண்டத யோசிச்சு பயப்படுவாங்க. நீங்களும் ஒன்னும் குழப்பிக்க வேண்டாம் நான் நல்லாதான் இருக்கேன்“ என்று சொல்லி சமாதானம் செய்தாள் ஜோதி.
யாமினி சமையலை கவனிக்க சமயலறைக்குள் நுழைந்தாலும், சிபி அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அங்கேயே இருந்தான். அவளது பார்வையும் சிந்தனையும் வேறு எதன்மீதோ இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவன் அவளுக்கு தனிமையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மாறுபட்ட மனவோட்டத்தில் மாட்டிக்கொண்டு மீண்டு எழ முடியாமல் தவிக்கும் ஜோதியின் மனதை யாராலும் படிக்க முடியாது. அவள் கனவனைத் தவிர.
ஜிம்மில் இருந்து வீடு திரும்பும் தன் கனவனுக்காக ஜோதி பல மணி நேரம் காத்திருந்தாள்.
அதே நேரத்தில் ஆதி அடுத்த வீடியோவிற்குத் தயாராகி, பேசத் தொடங்கினான். வீடியோ வழக்கமான பானியின் அடிப்படையில் தொடங்கியது.
பேருந்தில் பயணம் கொண்ட நாயகனும் நாயகியும் எப்படியோ ஒரு வழியா தயக்கத்தை மீறி தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். அதிலே ஒன்றரை மணி நேரம் முடிந்து விட்டது. பேருந்து போய்ச் சேரும் கொடைக்கானலும் இன்னும் அறை மணி நேரத்தில் வந்துவிடும். அதுவரைதான் இந்த நெருக்கமும் பழக்கமும். அதன் பிறகு இவளை இழந்து எப்படி நான்? என்று மனதிற்குள் அசைபோட்ட அக்பர்.
தொடக்கத்தில் இருந்த தயக்கத்தை உதிர்த்து தன் தடித்த குரலால் அவளைப் பார்த்து ஒன்று கேட்டார்.
“ஜோதா…“
“ ம்ம்ம்“
“இன்ஸ்டாகிராமில் இருக்கியா? “
“ம்ம்ம் ஆமா” என்று சொல்லி தன் கைபேசியை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டைக் காண்பித்தாள். அதைப் பார்த்துக் கொண்டவர் தனது கைபேசி இன்ஸ்டா கடலுக்குள் அவள் பெயர் வீசித் தேடினார். அவள் கைபேசியில் பார்த்த அதே முகப்பு படத்தைப் பார்த்ததும் அவளைத் தொடர்ந்தார். அவர் தொடர்ந்துள்ளது அவளிடம் காட்டினார். அவளும் “ஓகே“ என்று சொல்லி கைபேசியை இருவரும் பைக்குள் வைத்தார்கள். மீதம் இருந்த ஒரு மணி நேரம் மௌனத்திலே கழிந்தது.
அவ்வப்போது இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்து புன்னகித்துக் கொண்டார்கள்.
“கொடைக்கானல் பஸ்டான்டு வந்துருச்சு… இறங்கிக்கங்கப்பா“ என்றார் நடத்துனர்.
பேருந்தில் நிறைந்திருந்த சுற்றுலா கூட்டமும் சொந்த ஊர் கூட்டமும் விரைந்து களைந்தார்கள். இவர்கள் இருவர் மட்டும் இருக்கையை விட்டு எழ மனமில்லாமல் இருந்தார்கள்.
அக்பர் கைப்பேசிக்கு ஏதோ ஒரு அழைப்பு வர அவர் எழுந்து நின்று பேசி முடித்துவிட்டு தன் உடமைகளைக் கையில் பற்றிக் கொண்டு ஜோதாவை ஏக்கத்தோடு பார்த்தார். அந்த பார்வை அவரது கவலை நிலையை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது. அவளும் தன் பையை எடுத்துக் கொண்டாள். இருவரும் கீழே இறங்கினார்கள்.
அக்பரின் கால்கள் தத்தி தத்தி பின்நோக்கி மெல்ல நடக்க “ஓகே பாய்“ என்றார்.
ஜோதாவும் ஒரு சொட்டுப் போலி சிரிப்பை சிந்தியபடியே “ம்ம்ம் பாய் டேக் கேர்“ என்றாள். அவள் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே தலையைத் திருப்பி நடந்து கூட்டத்திற்குள் நுழைந்து பின் அவள் கண்ணை விட்டு மறைந்தார் அக்பர். அவள் அதே இடத்தில் நின்றுகொண்டு இருந்தாள்.
பிறகு எப்போது அந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றாலும் அவளுக்கு அவர் நினைப்பு வராமல் இருந்ததே இல்லை. அவருக்கும் அப்படித்தான் என்பதை அவள் உறுதியாக நம்பினாள்.
சுந்தர் அண்ணாவிற்கு திருமணம் நிச்சயம் ஆனது, ஜோதா தனியாக பேருந்தில் பயணம் செய்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது, அன்று இரவு ஆட்டுக்கறி குழம்பும் இட்லியும் சமைத்துச் சாப்பிட்டது, ஒரே ஹாலில் படுத்துக் கொண்டு வெட்டிக் கதை பேசியே தூக்கத்தைத் தொலைத்தது என்று ஜோதாவின் குடும்பம் குதூகலமாய் இருந்தது.
சிரிப்பு வெளிப்படையாக இருந்தாலும் அக்பரைப் பற்றிய சிந்தனை அவள் மனதைக் குடைந்து கொண்டு இருந்தது.
அவன் முகத்தைப் பார்க்க அவனைத் தேடியது. வலது கைக்கு எட்டும் தூரத்தில் அவளது செல்ஃபோன் சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்தது. அந்த இணைப்பைக் துண்டித்து விட்டு இன்ஸ்டாகிராமில் குதித்தால், அதில் அவன் இருக்கிறான் என்று பச்சை விளக்கு பளிச்சென்று எரிந்தபடியே சொன்னது.
அவனிடம் பேச வேண்டும் என்று துடிக்கும் அவளுக்கு என்ன பேசுவது என்பதில் தெளிவு இல்லை. அதனால் பேசாமல் இருந்தாள். அவனை தன்னிடம் பேச வைக்க வேண்டும் என்றும் நினைத்தாள்.
கண்ணாடி முன் நின்று அவளை அவளே ரசித்தபடியே ஒரு புகைப்படம் எடுத்து ஸ்டோரியில் பதிவேற்றினாள். அதுவரை தன் முகத்தை இணையத்தில் பதிவிடுவது என்றால் ஆகாத காரியம் அவளுக்கு.
அன்று அவன் மீது இருந்த ஆசை தைரியத்தை வரவழைத்து அப்படிச் செய்ய வைத்தது.
அந்த புகைப்படத்தை அவன் பார்த்து விட்டானா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தே பல நூறு முறை பார்த்து சலித்துவிட்டாள். அவளுக்கே அந்த புகைப்படத்தின் மீது வெறுப்பு வந்துவிட்டது. பார்க்க ஆள் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்ததால், அவர் இந்த மாதிரி சிறு விஷயங்களைப் பொருட்படுத்த மாட்டார். அடுத்தவர் ஸ்டோரி பார்த்து நேரத்தைப் போக்க மாட்டார் என்று நினைத்து அந்த ஆசையில் இருந்து திரும்பி, செல்ஃபோனை சார்ச் செய்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுத்து உறங்கிவிட்டாள்.
இடையில் அவளது அம்மா பல முறை எழுப்பியும் தூக்கத்திலிருந்து விழிக்காமல் இருந்தாள். உடல் அசதி அவளை மறுநாள் காலையில்தான் எழும்ப விட்டது. புகைப்படத்தை அவர் மட்டுமே பார்க்கும்படி அமைத்திருந்தாள். கடைசியில் அவர் பார்க்க மாட்டார் என்கிற முடிவுக்கு வந்ததால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தூக்கத்தில் மங்கலான கண்ணோடு இன்ஸ்டாவில் நுழைந்தாள்.
நுழைந்ததும் சிவப்பு நிற இதயம் என்னைப் பார் என்று சொல்லி முன் வந்து நின்றது. ஆசையில் முகமும் பார்வையும் பளபளப்பானது. அந்த இதயத்தை அழுத்தினாள். அது அதை யார் கொடுத்தார் என்பதைக் காட்டியது. யார் பார்க்க வேண்டும் என்று நினைத்து இந்த ரசனையான நடகத்தை நடத்தினாளோ அவரே பார்த்து விரும்பியும் விட்டார்.
அப்போது சிரிப்போடு சேர்த்து அச்சமும் அவளை அணைத்துக் கொண்டது. இதுவரை அவளுக்குப் புரியாத வெக்கத்தின் விளக்கமெல்லாம் அன்று வரிசையாகப் புரிந்தது.
அவர் இன்ஸ்டாவில் கொடுத்த இதயம் அவளை அழகியாகவும், நம்பிக்கையுடையவளாகவும், அனைவருக்கும் பிடித்தவளாகவும், தைரியமானவளாகவும், ரசனைக்குரியலளாகவும் மொத்ததில் சிறந்தவளாக உணரச் செய்தது. ஏதோ ஒரு பிடிமானத்தைக் கொடுத்தது. அவர் மீது மீண்டும் மீண்டும் விழச்செய்தது.