அத்தியாயம் – 23
ஜோதா அக்பரை வெறுக்கவில்லை. அவருடைய நினைவுகளைத்தான் வெறுக்கிறாள். அவர் இல்லாத நாட்களில் அவரை விட அந்த நினைவுகளே அவளை வாட்டி எடுத்தது. பிரிவின் கடைசி படிக்கட்டில் நின்று கதறிய நாட்களில் முதுகில் ஆணியாக இறங்கிய அந்த நினைவுகளை அவள் புறக்கணித்தாள்.
ஒருவேளை இந்தக் குறுஞ்செய்திக்கு அவர் சொந்தக் காரராக இருந்தால்? கனவில் இருந்து விழித்ததும் கண் முன்னே பார்த்த அவரின் முகம் உண்மையாக இருந்தால்? ஊஞ்சலில் இருந்த பரிசுப் பெட்டி எனக்கானதாக இருந்தால்? ரோஜவைக் கொடுத்த குழந்தை அவரது தூதாக இருந்தால்? இதற்கெல்லாம் முதலாக என்னை இடித்துவிட்டுச் சென்றவர் அவராக இருந்தால்? என்று தன் அச்சத்தை அடுக்கடுக்காய் அடுக்கினாள்.
வீட்டில் எல்லாம் இயல்பாகவே இருந்தாலும் அவளுக்கு மட்டும் எல்லாம் வித்தியாசமாகத் தெரிந்தது. வலியும் இல்லாமல் சுகமும் இல்லாம் இரண்டுக்கும் இடையே ஏதோ ஒன்றில் சிக்கிக் கொண்டாள்.
அன்று இரவு உறங்கும் முன்பு விருப்பமே இல்லாமல் தயக்கத்தோடு தன் செல்ஃபோனை எடுத்தாள். மீண்டும் அதே எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. “இன்னைக்கு வந்த அதே பார்க்ல நாளைக்கு நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். என்ன பாக்க எப்போ வருவ? எப்போ வருவனு சண்ட போட்டு இத்தன நாள் பேசாம இருந்துட்டு, உன்னையப் பாக்கலாம்னு வந்த பிறகு முகத்த மறச்சிட்டு திரும்பி பாக்காம போனா நியாயமா? “ என்கிற மெசேஜ் அவள் மனதைக் களைத்தது. அது அவளது காதலன் தான் என்பதில் இதற்கு மேலுமா சந்தேகம் வந்துவிடப் போகிறது?.
அவர் மீது இருந்த காதல் ஒரு துளி கூட குறையவில்லை அவளுக்கு. அதேசமயம் காதலின் அளவைக் காட்டிலும் கூடுதலாக பயமும் இருக்கிறது. அந்த பயத்திற்கு அவரது பிரிவு தந்த வலிதான் காரணம். எவ்வளவு யோசித்து மனதைத் தேற்றி நாளை சந்திக்கச் செல்லலாம் என்று முடிவு செய்தாலும், மீண்டும் நெருங்கி வாழ்க்கை தடம் மாறி இனிமையான பாதையில் போய்க் கொண்டிருக்கும்போது என்னுடைய பிடிவாதத்தாலும் அவருடைய கோபத்தாலும் மீண்டும் அந்த பிரிவு என்கிற அரக்கனைச் சந்திக்க நேரிட்டால் என்ன செய்வது? என்கிற அச்சமும் அவளை வழிமறித்தது.
அவள் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் முரணாகத் தோன்றினாலும் அதற்கெல்லாம் இறுதி பதிலாக அவர் மீது அவள் வைத்திருக்கும் பைத்தியக்காரத்தனமான காதல்தான் வந்து நிற்கிறது. இந்த சிந்தனை இரவு இரண்டு மணி வரைக்கும் விடாமல் துரத்த, படுக்கையை விட்டு எழுந்து நாளை அவரைப் பார்க்க எந்த உடையை அணிந்து கொள்ளலாம் என்று அலமாரியைக் கிளரிக் கொண்டிருந்தாள்.
குப்பை மேடாக அவள் துணி இருக்கும் பெட்டியில் காக்கி நிற கவரால் மூடப்பட்ட ஒரு சிவப்பு நிற ஆடையைப் பார்த்தாள். அது ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட உயர்தர மேலங்கி (கவுன்). அவளுக்கெனவே சிறப்பாக வடிவமைத்தது போல அளவும் வடிவமும் ஏற்புடையதாக இருந்தது.
அதைப் பார்த்ததும் அவள் கண்கள் மின்னியது. அந்த ஆடையைப் பற்றி காலையில் அம்மாவிடம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உறங்கினாள்.
மறுநாள் காலையில் அதைப் பற்றி விசாரிக்கும் போது, அந்த ஆடை உன் தோழி மலர்தான் விரைதூதரில் (கூரியர்) அனுப்பியிருந்தாள். நேற்றுதான் நம் வீட்டில் வந்து கொடுத்தார்கள். அந்நேரம் பார்த்து நீ வெளியே சென்றதால், உன் அலமாரியில் வைத்தேன். நீ வந்ததும் சொல்லலாம் என்று இருந்தபோது உன் முகமே வாட்டமாக இருந்தது, நான் பேசுவதைக் கேட்கும் நிலையில் நீ இல்லை. அதனால் சொல்லாமல் விட்டுவிட்டேன் என்று அம்மா சொன்னாள்.
அம்மா சொன்னதைப் போலவே அந்தக் காக்கி நிற கவரின் பின்புறம் அனுப்புநர் என்பதன் கீழ் மலர் என்று அவளது தோழி பெயர் இருந்ததைக் கவனித்தாள். அதை அனுப்பியது மலர் இல்லை என்றும், அதை யார் அனுப்பினார்கள் என்றும் ஜோதாவிற்கு நன்றாகவே தெரியும். அந்த ஆடையைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணாடியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் “இவ்வளோ ஆசைய வச்சிட்டு இத்தன நாள் பேசாம இருந்தீங்கள்ல. இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு இருக்கு”
அவள் எதிரில் இருந்த கண்ணாயிடில் இருந்து வெளியே நடந்து வந்தவன் இரண்டு கன்னத்தையும் அழுத்திப் பிடித்து குறுகிப் போன அவள் உதட்டைப் பார்த்து “என்ன இருக்கு? “ என்றான். “ஒன்னு இல்ல நீங்க ஏன் இப்போ வந்தீங்க? போங்க“ என்று கண்ணை இறுக்கமாக மூடியபடியே அவள் சொல்வதைப் பார்த்துச் சிரித்தான்.
குழந்தைத்தனமான அவள் அடத்தைக் கொஞ்சம் பொறுத்துப் போயிருந்திருக்கலாம் என்று நினைத்தான். இதழ் அருகே இருந்த பார்வையை சற்று உயர்த்தி படர்ந்த நெற்றியின் மீது பக்குவமாய் பச்சை குத்திவிட்டு ஈர எச்சிலை அப்படியே விட்டுக் காற்றில் மறைந்தான்.
“அவன் எங்கே? “ என்று கண்ணாடியிடம் அவள் கேட்டதிற்கு கண்ணாடியும் வெட்கத்தில் சிதறி சில்லு சில்லானது.
மதியத்தில் இருந்தே மயக்கத்தில்தான் இருந்தாள் ஜோதா. அவனைப் பார்க்க தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். இரண்டு வருட காதலில் இன்றுதான் அவனை முதன் முதலில் பார்க்கப் போகிறேன் என்கிற துள்ளலில் இருந்தாள். எப்படிப் பார்த்தாலும் சண்டையின் இறுதியில் நான்தான் ஜெயித்திருக்கிறேன் என்கிற அழகான ஆணவத்தோடு அலங்காரச் செயலில் ஈடுபட்டாள்.
அணிந்ததைக் கழற்றி, அத்தனையையும் களைத்துப் போட்டு, பின் முதலில் தேர்ந்தெடுத்ததையே எடுத்துப் போட்டுக் கொண்டு மீண்டும் அழகானாள். முடிந்த தலையை மீண்டும் மீண்டும் களைத்து வெவ்வேறு விதமாகச் செய்து பார்த்து சோர்வுற்று கடைசியில் மொத்தமாக அவிழ்த்துவிட்டு அழகானாள்.
அலங்காரம் எல்லாம் முடிந்த பிறகு அம்மாவிடம் சென்றாள். எப்படி இருந்தாலும் அந்த இயல்பிலேயே நம்மை ரசிக்கும் ஒரே ஜீவன் அம்மாதான். எந்த விமர்சனமும் இல்லாமல் நமக்கு இருக்கும் தாழ்வான சந்தேகங்களை பிரமிக்க வைக்கும் வார்த்தைகளைக் கொண்டு நிரப்பிவிடுவாள். அவளது வார்த்தைகள் தெளிவைக் கொடுக்கும். அவள் முகத்தில் இருக்கும் சிரிப்பு நம்மை பொதுவெளியில் கூச்சமின்றி நிமிர்ந்து நடக்க வைக்கும். அம்மாவிடம் இருந்து அவளுக்கும் அது குறைவின்றி கிடைத்தது.
கைக்கடிகார முள் அவள் பொறுமையைச் சோதிக்க நினைத்து மெல்ல நகர, அதன் விளையாட்டுப் பிடிக்காமல் தத்தி நடக்கும் கால்களால் ஓங்கி ஓங்கி நடந்து தன் கொலுசு ஒலியால் அதை அதட்டிக் கொண்டிருந்தாள்.
சூரியனும் புரிந்து கொண்டு மொட்டை மாடியை விட்டு மலைக்குப் பின் செல்லத் தயாராக இருந்தது. இவளும் அவனைக் காண வீடு தாண்டினாள். யாருக்கும் சந்தேகம் எதுவும் வந்துவிடக் கூடாது என்று வழக்கமாக எடுத்துச் செல்லும் புத்தகப் பையையும் கொண்டு சென்றாள்.
பூங்கா நுழைவாயிலைக் கடந்ததும் மரத்துக் கிளையில் பூத்த உதிர்ந்த பூக்கூடை கொட்டிக் கவிழ்ந்து அவளையும் கவிழ்த்தியது ஆசைச்சிரிப்பில். அவள் பாதம் பட்டு மோட்சம் பெற பூக்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அவள் காலடி சேர்ந்து பாதையானது. அன்று பூங்கவில் நிறைந்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கைகளில் எல்லாம் சிவப்பு நிற இதய பலூன் முளைத்து இருந்தது.
அங்கிருந்த அனைவருமே காதலுக்கு மீக நெருக்கமான தூதுவர்களாகத் தெரிந்தார்கள்.
மெல்லிய வயலின் சத்தம் வழி சொல்ல காதலை நோக்கி நடத்தினாள் ஜோதா. நான்கு இசைக் கலைஞர்கள் கருப்பு நிறக் கோட் சூட் அணிந்து கொண்டு வயலினால் அனைவரின் இதயங்களையும் கொள்ளையடித்து கொண்டிருந்தார்கள்.
அழகான குட்டி தேவதைகள் கையில் பூங்கொத்துக்களோடு கூட்டமாக அவளை நோக்கி படையெடுத்து வந்து, அவளைச் சூழ்ந்து நின்றார்கள். அழகழகாய் தேர்ந்தெடுத்து அடுக்கி அமைக்கப்பட்ட ரோஜா பூச்செண்டுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
சந்தோஷத்தில் திகைத்து நின்ற ஜோதாவின் கண்களுக்கு ரசிக்க பல இருந்தாலும் அவளது கண்கள் தேடியது அவன் முகத்தைத்தான். நேரம் தாழ்த்தாமல் வா என்று தனக்குள்ளே முனங்கியது அவனுக்கு கேட்டிருக்குமோ? என்னவோ? அவன் அருகில்தான் இருக்கிறான் என்கிற உணர்வை அவன் அணியும் சட்டையின் மீது பரவியிருக்கும் நறுமணம் காட்டிக் கொடுக்க அவள் உலகம் இருளானது.
பின்புறம் இருந்து தன் கண்ணை இறுக்கமாக மூடியவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்கிற எதிர்பார்ப்போடு அவனது வாசனையும் அவளை மெல்லக் கரையச் செய்தது.
கண்ணில் இருந்து கையை எடுத்தவன் அவள் திரும்பிப் பார்க்கும்போது மாயமாகி இருந்தான். “எங்க இருக்கீங்க?” என்று சுழித்த புருவமும் சுருங்கிய நெற்றியுமாய் முகத்தை வைத்து கேட்டதும் எங்கிருந்தோ வந்து அவளை அணைத்துக் கொண்டான். அணைத்தவுடன் இருவரின் இதயமும் இடி மின்னலானது.
வானத்தில் வண்ண வண்ண பலூன்களும் பல்வேறு நிறப் புகையும் பறந்து பரவி விரிந்து அந்த நிகழ்வை தனியுலகமாக மாற்றியது.
அவள் தோளிற்கும் கழுத்திற்கும் இடையில் தஞ்சமடைந்த அவன் முகம் சூடான காற்றோடு ஒரு அழுத்தமான கேள்வியையும் கேட்டது. “உன்ன விட்டுட்டு அப்படியே இருந்துருவேன்னு பயந்துட்டியா?” என்று கேட்டான். அவன் சுருள் முடிப் புதருக்குள் அவளது கைவிரல்கள் ஊடுருவ, நெருக்கம் இன்னும் நெருக்கமானது. “ஆமா பயந்துட்டேன். இனிமே கோவப்படாதீங்க சரியா?. இதுக்கப்புறம் நானும் அடம்பிடிக்க மாட்டேன்” என்றாள்.
கைகளை விலக்கி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவன் நெற்றியில் இருந்த வெட்டுக் காயத்தைத் தடவியபடியே “என்ன இது?” என்றாள். சிரித்தபடியே தன் கால் அருகே வைத்திருந்த ஒரு பெரிய தங்க நிற கோப்பையை எடுத்து அவள் கையில் கொடுத்து “பாக்ஸிங் சாம்பியன்ஷிப்” என்றான். அவள் கண்கள் கலங்கியது, அதைப் பார்த்த அவனுக்கும்தான்.
இருவரின் ஆனந்தக் கண்ணீரினாலும் வெட்டுக் காயம் பட்டுப் போனது.
“நேத்து டீ ஷாப்ல நீங்க இருந்தீங்களா?“
“நேத்து நான் உன் கண்ணுல படும்படியே எல்லா இடத்துலயும் இருந்தேன் ஆனா நீ பாக்கல”
“பாத்தேன். பிரம்மன்னு நெனச்சுட்டேன்”
“பைத்தியம்டி நீ”
“ஆமா கொஞ்ச நாளா”
“ம்ம்ம்ம்ம் நேத்து நீ போன அதே டீ ஷாப்க்கு போலாமா?” என்று அக்பர் கேட்டதும் அவளும் “ம்ம்ம்ம்ம்” என்றாள். அங்கிருந்து நகர்ந்து அப்படியே அடுத்த சாலையில் அமைந்த கடைக்குச் சென்றார்கள்.
அத்தியாயம் – 24
“ஏன் எப்ப பாத்தாலும் டீயே குடிக்குற?. ஒரு சேன்ஞ்காக இன்னைக்கு ஹார்ட் சாக்லேட் குடிக்கலாமா?. நேத்து நான் குடிச்சேன் நல்லா இருந்தது“ என்றார் அக்பர். நேற்று டிக்கடை கனவு நினைவுக்கு வந்ததும் சிரித்தாள் ஜோதா. என்ன சிரிப்பு என்று அவன் கேட்க சொல்லாமல் மறுத்துவிட்டு அவனது இடது கையைக் கொக்கி போட்டுக் கொண்டு அவன் மீது சாய்ந்தாள்.
அவர்களுக்காவே ஸ்பெஷலாகத் தயாரான ஹார்ட் சாக்லேட் சுடச் சுட அவர்களது மேசையை வந்து சேர்ந்தது. ருசி பார் என்று ஒரு கோப்பையைக் கையிலெடுத்து அவள் உதட்டில் வைத்தான் அவன். நேற்று அவன் கொடுத்த முத்த வாசனை அந்த கோப்பையில் இருந்து வந்து அவளை மயக்கிக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஊறிய நாணமெல்லாம் மீண்டும் அவனை அவளுக்குள் தள்ளியது.
சுவையைப் பற்றி விசாரித்ததும் அந்தக் கோப்பையை அவளிடமே கொடுத்துவிட்டு, அவனுக்காக காத்திருந்த கோப்பையை எடுத்தான்.
ஒரு சொட்டு குடித்துவிட்டு நேற்றைப் போல இன்று இல்லையே என்று சடைத்தான். “ஏன் நல்லாதான இருக்கு? “ என்று அவள் சொல்ல, “நல்லா இருக்கா? எங்கே உன் கையில இருக்குற கப்ப குடு” என்று வாங்கினான்.
அவள் உதடு வைத்த அதே கோப்பையின் இதமான பதத்தில் அவனும் உதடு வைத்து உரிய ஒரு இனிப்பான நாடகம் அறங்கேரியது. “ம்ம்ம் இப்போ நல்லா இருக்கு“ என்று அவன் கூற அவனுடையதை அவள் எடுத்துக் கொண்டாள். கோப்பையில் ஹார்ட் சாக்லேட்டின் அளவு குறையக் குறைய, வான வெளிச்சம் மறைய மறைய, விடை பெறும் நேரம் வந்துவிட்டதோ? என்கிற சோகமான கேள்வி இருவரையும் மௌனமாக பற்றிக் கொண்டது.
இந்தப் பிரிவு தற்காலிகமானதாக இருந்தாலும், மனம் கேட்கவில்லை. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு சந்தோஷத்தைத் திகட்டத் திகட்டக் கொடுத்துவிட்டு அதே அளவு கண்ணீரையும் கொடுத்துவிடுவான் பாவி என்று தன் காதலனின் கையை பிடித்துக் கொண்டாள் ஜோதா. கண்ணீர் தேங்கி நிற்கும் அவளது கண்களை அப்படியே எப்படி விட்டுவிட்டு வர முடியும் அவனால்?. அதனால் “இன்னும் ரெண்டு நாள் இங்கையேதான் தங்கி இருக்கப் போறேன். நீ நாளைக்கு காலையிலயே கிளம்பி வா. நம்ம எங்கையாவது வெளிய போலாம்” என்றான்.
“நிஜமாதான் சொல்றீங்களா? “
“ஆமா”
“என்ன பாத்துட்டு உடனே கிளம்பிருவீங்கனு நெனச்சேன். நீங்கதான் உங்க ஜிம்ம விட்டுட்டு இருக்க மாட்டீங்களே “
“நானும் அப்படித்தான் நெனச்சேன். இப்போ மனசு மாறிடுச்சு”
“அப்போ சரி நேரம் ஆச்சு. நான் கெளம்புறேன். நாளைக்கு பாக்கலாம்“
“சரி போ” என்று சொல்லித் தன் கையில் வைத்திருந்த பையைக் கொடுத்தான்.
அதில் அழகான பச்சை நிற சேலை இருந்தது. அதைப் பார்த்ததும், “ஏன் இவ்வளோ செலவு பண்றீங்க?. இது இப்போ அவசியமா? “ என்றாள்.
உன் காலேஜ் ஃபேரவல் பாராட்டிக்கு நீ ஒரு சேரி கட்டி ஒரு ஃபோட்டோ அனுப்ச்சியே, அது இன்னும் என் கண்ணுக்குள்ளையே இருக்கு. உயரம் கம்மியா இருப்பா, கவுன் போட்டா பொம்ம மாதிரி க்யூட்டா இருப்பானு வாங்கிட்டு பில் பே பண்ண நின்னுருந்தேன். அப்போதான் ஒரு பொம்மைக்கு இந்த சேரிய கட்டியிருந்ததப் பாத்தேன். உன் நியாபகம் வந்தது. அத வாங்காம வெளிய வர மனசு வரல அதான் என்று அக்பர் சொன்னார்.
பதில் சொல்லத் தெரியாமல் திணறிய ஜோதா, “சரி“ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். என்றும் இல்லாத விதமாக துள்ளிக் குதித்துக் கொண்டே வீடு நுழைந்த ஜோதாவை அம்மா வினோதமாகப் பார்த்தாள். அம்மாவிற்கு நாம் யார் என்கிற அறிமுகம் தேவையா என்ன?.
“என்னடி குதிச்சுகிட்டு ஜாலியா வர்ற? “
“ஒன்னு இல்லமா. இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்குனு பாக்குற எல்லாரும் சொன்னாங்க“
“ம்ம்ம் சரி சரி. கையில என்ன?“ என்று அவள் கொண்டு சென்ற புத்தகப் பை கூடவே கூடுதலாக இருக்கும் இன்னொரு பையைப் பார்த்துக் கேட்டாள் ஜோதாவின் அம்மா.
“இது டிரஸ்மா“ என்று சொல்லி ஜோதா அந்தப் பையை பின்னே மறைக்க,
“இது என்ன டிரஸ்?. எங்க…கொடு பாக்குறேன்” என்று அம்மா அதை அவள் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கினாள். பையைத் திறந்து சேலையை வெளியே எடுத்து வைத்துக் கொண்டு அவளையும் சேலையையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“பார்க்குக்குதான் போனேன். பார்வதி துணி கடை வெளிய என் ஃபிரண்ட பாத்தேன். டிரஸ் எடுக்கப் போறேன்டி ச்சூஸ் பண்ண ஹெல்ப் பண்ணுனு சொல்லி உள்ள கூட்டிட்டு போய்ட்டா.
எல்லாமே புதுப்புது டிசைனா இருந்துச்சு. நீ வேற நேத்து எனக்கு செலவுக்கு வச்சுக்க சொல்லி கையில பணம் கொடுத்தியா, அதான் வந்துட்டமேனு ஒன்னு எடுத்தேன்” என்று எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்தாள். வார்த்தையில் தெளிவு இல்லை. பேசி முடிக்கும் வரை முழுக்க முழுக்க தடுமாற்றம்தான். அதைக் கவனித்தும் “சரி போ“ என்று அம்மா எதுவும் கேள்வி கேட்காமல் விட்டாள்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் அறைக்குள் நுழைந்த ஜோதா அம்மாவின் முக மாறுதலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள்தான் காதல் மயக்கத்தில் இருந்தாளே!.
படுக்கையில் அங்கும் இங்குமாய் சுழன்று கொண்டு டைரி எழுதிக் கொண்டிருந்தாள் ஜோதா. மனதில் பதிந்த அந்த பொன்னான நொடிகளை வார்த்தைகளால் வடித்துக்கொண்டிருந்தாள். அப்போது அவள் முதுகுகிற்குப் பின்னால் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. பின்னால் யார் நின்றுகொண்டு இருக்கிறது என்று தலையைத் திருப்பினாள். கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய அம்மாவின் முகம் பார்த்து இவள் நடுநடுங்கினாள்.
“யார் அந்த பையன்? நீ எங்க போய்ட்டு வந்த? இப்போ என்கிட்ட விஷயத்த முழுசா சொல்லலைனா உன் அப்பாகிட்ட அரையும் குறையுமா எதாவது சொல்லி வச்சுருவேன். அப்புறம் அவர் என்ன செய்வார்னு உனக்கு நல்லாவே தெரியும்“ என்று ஜோதாவின் அம்மா மிரட்ட இவள் பதில் சொல்ல முடியாமல் தினறினாள். முதலில் ஏதேதோ சொல்லி மூடி மறைக்க முயற்சி செய்தாள்.
அவள் பேசியதை துளியும் ஏற்றுக் கொள்ளாமல் இறுக்கமாக இருந்த அம்மாவின் முகம் தொடர்ந்து மிரட்டாமல் மிரட்ட பொய் சொல்லி சோர்ந்து போய் கடைசியில் உண்மையைச் சொல்லிவிட்டாள்.
இதுதான் உண்மை எனத் தெரிந்த பிறகு அம்மா அடிக்காவிட்டாலும் கடுமையாக கண்டிக்கவாச்சும் செய்வாள் என்பதுதான் ஜோதாவின் நினைப்பாக இருந்தது. ஆனால் அவள் எண்ணத்தை தவிடுபிடி ஆக்கும் அளவிற்குத்தான் அம்மாவின் நடவடிக்கை இருந்தது.
அதுவரை இரண்டு கைகளையும் இடுப்பில் பொருத்தி முறைத்தப்படியே கேட்டுக்கொண்டிருந்த அம்மா, அவள் உண்மையைச் சொன்ன பிறகு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற அச்சத்தில் அழுத ஜோதாவின் தலையைத் தன் கைகளால் கோதி ஆறுதல் படுத்தி தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.
“உன்னைப் பெத்தவளே நான்தான். நீ கண்ண சிமிட்டுனா கூட எனக்கு அதுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கத் தெரியும். இந்த வயசுல இந்த மாதிரி ஆசை வர்றது எல்லாம் சகஜம். நடக்குற வரைக்கும் அப்படியா? இப்படியா? அதுவா? இதுவா? ன்னு கலர் கலரா கனவு காணுவோம். ஆனா நடந்து முடிஞ்ச பிறகு இவ்வளவுதானா? ச்சீ ச்சீனு ஆகிரும். தெரிஞ்சவனே ஈசியா ஏமத்திட்டு போயிருவான். நீ யாரோ ஊர் பேர் கூட ஒழுங்கா தெரியாதவன கைகாட்டி பிடிச்சிருக்குனு சொல்ற. நீ என்கிட்ட சொன்னத அப்படியே நான் உன் அப்பாகிட்ட சொன்னேனு வை என்னையும் கொன்னுட்டு உன்னையும் கொன்னுட்டு புள்ளையும் இல்ல பொண்டாட்டியும் இல்லனு போய்ருவாரு. இதுகப்புறம் உன்னோட முடிவு” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் அம்மா.
கதவு வரை சென்றவள் கடந்து செல்லாமல் ஜோதாவைத் திரும்பி பார்த்து நின்று “காசு நீ கேட்டிருந்த. நான் நாளைக்கு தரேனு சொல்லியிருந்தேன். அந்த இடத்துலதான் நீ மாட்டுன“ என்று சற்று சிரித்தபடி சொல்லிவிட்டு கதவை மூடிச் சென்றாள்.
அவள் அறை இருட்டானது போல வாழ்க்கையும் இருட்டாகி விடும் என்று ஜோதா தவித்தாள். அடித்திருந்தால் கூட அந்த கனம் மட்டுமே வலி. இப்போது எந்த பதற்றமும் இல்லாமல் அம்மா பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? என்கிற குழம்பம் ஜோதாவைப் பாடாய் படுத்தியது.
அம்மாவிற்கு உண்மை தெரிந்த பிறகும்கூட வீட்டில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான பானியிலே வீடும் வீட்டில் இருந்தவர்களும் செயல்பட்டார்கள். நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில்தான் அம்மா இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அப்பாவிடம் சொல்லவில்லை. நாமும் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பாசமும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் அம்மா நம்மீது வைத்திருக்கும்போது அவளைக் காயப்படுத்தும்படி நடந்து கொண்டது தவறுதான் என்று குற்ற உணர்ச்சியில் நொந்து போனாள் ஜோதா. நடந்த அத்தனையையும் அக்பருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு அவருடைய எண்ணை செல்ஃபோனில் இருந்தும் அவரை அவள் மனதில் இருந்தும் அழித்தாள்.
அவளுடைய குற்ற உணர்ச்சியை உடைக்குமாறு அம்மாவின் உள் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது அவளுக்குத் தெரியாது. இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து, ஜோதா தனியாக இருக்கும் போது கையில் புடவையோடு பரபரப்பாக அவள் அறைக்குள் நுழைந்தாள் அம்மா. அந்தப் புடவையை அவள் கையில் கொடுத்து இந்தா சீக்கிரம் தயாராகு, இன்னைக்கு பத்து மணிக்கு மேல மாப்பிள்ளை வீடு இங்க வர்றாங்க என்று சொல்லிவிட்டு வந்த வேகத்தில் திரும்பினாள்.
வீட்டில் இருந்த அனைவரும் அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். “என் பேத்தி தங்கம். நில்லுன்னா நிப்பா உக்காருன்னா உக்காருவா. அவ அப்பன் பேச்சுக்கு மறு பேச்சு பேசுனது இல்ல. பொறந்ததுல இருந்தே அப்படித்தான்“ என்று பாட்டி பக்கத்து வீட்டு பவானி அத்தையிடம் பெருமை பீத்திக் கொண்டிருந்தாள்.
இந்தக் கல்யாண ஏற்பாடு அப்பாதான் செய்திருக்கிறார். துணி எடுப்பதில் தொடங்கி படிப்பது வரை எல்லாவற்றையும் என் விருப்பப்படி விட்ட அப்பா, இவ்வளவு பெரிய காரியத்திற்கு என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அப்படியென்றால் அம்மா அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பாள் என்றுதான் நினைக்கிறேன்.