Stories that touch hearts

Home  /  அவன் பெயர் அக்பர் (பா.ஹேமமாலினி)  /  Chapter 21

CHAPTER 21

அத்தியாயம் – 27, 28

By Sorna Sandhanakumar · November 1, 2026

0

அத்தியாயம் – 27

அக்பருக்கு அங்கு நடந்ததும் அவர் கண்களால் பார்த்த விஷயங்களும் ஏதோ கனவில் நடப்பதுபோல் இருந்ததால் வாயடைத்து விழி பிதுங்கி குழம்பிப் போனார். அதனால்தான் அங்கிருந்தவர் அக்பரிடம் எதுவும் சொல்லாமல் அவருடைய அம்மாவை அழைத்து நடந்த விஷயத்தை விளக்கிச் சொன்னார்.

“
சரியாக ஒருவருடத்திற்கு முன்பு உங்கள் பிள்ளைக்கு யாராவது வேண்டாதவர்கள் சாப்பாட்டுப் பொருள் எதாவது கொடுப்பதை நீங்கள் கவனித்தீர்களா? “ என்று அந்த மாந்திரீகம் நீக்குபவர் அக்பரின் அம்மாவிடம் கேட்டார்.

“
சாமி அந்த மாதிரி எதுவும் நடந்ததா எனக்கு நியாபகம் இல்ல. பொதுவா என் புள்ள யார்கிட்டையும் எதையும் வாங்கி சாப்பிட மாட்டான். ஹெல்த் விஷயத்துல ரொம்ப கவனமா இருப்பான்“

“
அப்படி இருந்தா நல்ல விஷயம்தான். நீங்க வேணா நடந்தத மறந்திருப்பீங்க. ஆனா நடந்தது எல்லாம் கிளீனா தெரியுதே. நான் சொல்றத கேளுங்க உங்க புள்ளைக்கு நடந்தது இதுதான் “ என்று தொடங்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

சென்ற வருடம் உங்களுடைய சம்மந்தகாரர் வீட்டைச் சேர்ந்த யாரோ ஒருவர் உங்களுடைய பையனிடம் ஏதோ ஒரு உண்ணும் பொருளைக் கொடுத்திருக்கிறார். அப்படிக் கொடுத்தது ஒரு பெண். அந்தப் பெண் அந்தப் பொருளை சாதாரணமாகக் கொடுக்கவில்லை அதனுடன் மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறார்.

அந்த மருந்து மாந்திரீகம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். உண்ணும் பொருளில் அந்த மருந்து கலந்திருக்கிறது என்று எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் அந்த மருந்திற்கு நிறமோ, சுவையோ, மணமோ கிடையாது. அதனுடைய வீரியத்தைக் காட்ட அதிக அளவு மருந்து தேவையில்லை. கடுகளவு கலந்தாலே போதுமானது. அதனுடைய சக்தி உண்ணுபவரின் ஆணி வேரையே அசைத்துப் பிடுங்கி எறிந்துவிடும். அந்த பாதிப்புதான் உங்களுடைய பிள்ளையைப் போட்டு பழிவாங்குகிறது.

குடும்பத்திற்கு ஒரே ஆதாரமாய் அவர் இருப்பதால் அவருடைய கஷ்ட பலன் மற்றவர்களையும் பாதிக்கிறது. இந்த தகவல் போதுமா? இல்லை மருந்து கலந்தவரின் ஊர், பெயர் குடும்ப விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டுமா? என்று அவர் சிரித்தபடியே கேட்டார். “இல்ல அதெல்லாம் வேணாம் எங்களுக்கு யாருனு தெரியுது. நான் இத ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கவா? “ என்று கேட்டு அக்பர் கக்கிய உருண்டைகளை அவருடைய செல்ஃபோனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படத் தயாரானார்.

“
இனி இதுக்கப்புறம் சாமி“ என்று அக்பருடைய அம்மா வார்த்தையை இழுக்க, “இதுக்கு அப்புறம் எதுக்கும் பயப்படத் தேவையில்ல. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரியாகி நல்ல வாழ்க்கைய அந்த ஆண்டவன் அமச்சுக் கொடுப்பான். மருந்த உறிஞ்சி எடுத்ததால தொண்டை, வயிறு எல்லாம் புன்னாகிரும். அதுனால இன்னும் ஒரு வாரத்துக்கு சூடான பொருளும் காரமான பொருளும் சாப்பிட வேணாம்“ என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.

இந்த மாந்திரீகம், மந்திரம், மருந்து இது போன்ற மாயைகளை நம்பாத அக்பர் தனக்கே இது நடந்த பிறகு ஒரு வேளை இருக்குமோ என்று அதை நம்பும் வளையத்திற்குள் லேசாக நுழைந்தார். ஆனாலும் அவரின் படித்த மூளை அதெப்படி? என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தது. தனக்கிருந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள இதைப் பற்றி தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஆலோசித்தார் அக்பர்.

மருத்துவராக பணிபுரிந்த அந்த நண்பர் அக்பரின் செல்ஃபோனில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து விட்டு அதிர்ச்சி கலந்த குழப்பத்தோடு சிறிது நேரம் யோசித்தார். அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். எந்த வலியில் யோசித்துப் பார்த்தாலும் இது போன்ற செய்தியை அவர் இதற்கு முன்னாள் கேள்விப்படவே இல்லை என்பது மட்டுமே பதிலாக கிடைத்தது.

அது எப்படி மருந்து உருண்டையில் முடி முளைக்கும்? அதுவும் ஒரு கடுகளவு கலந்த மருந்து எப்படி இவ்வளவு பெரிய பெரிய அளவில் எட்டு உருண்டைகளாக மாறியது?. இதற்கும் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் இருக்கும்? என்றெல்லாம் அக்பர் அவருடைய அம்மாவிடம் கேள்வி கேட்டது போலவே, அந்த மருத்துவ நண்பர் அக்பரிடம் கேட்டார்.

இருவரும் பல மணி நேரம் உரையாடி அதற்கு தீர்வு கிடைக்காமல் தோற்றே போனார்கள். இதைக் காட்டி பல மருத்துவ வல்லுநர்களிடம் விவாதித்த போதும்கூட அவர்களாலும் பதில் சொல்ல முடியவில்லை.

இதை ஒரே அடியாக பொய்யென்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இதில் சம்மந்தப்பட்ட அக்பரே அங்கு நடந்ததை தன் கண்ணால் பார்த்தார். அதே போல் இதை உண்மை என்றும் சொல்லிவிட முடியாது. படித்த பலரிடம் கேட்ட போதும் கூட இது குறித்த எந்த ஒரு அறிவியல் விளக்கமும் இல்லை. இதன் மீது எந்த கருத்தையும் உறுதியாக வைக்க முடியாமல் குழப்பம் ஒரு பக்கம் நிலவ, அவரை விட்ட கெட்ட நேரம் ஜோதாவைப் பிடித்துக் கொண்டது.

உணவில் மருந்து கலந்து கொடுத்தது யார் என்று அந்த சாமியார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அக்பருக்கும் அவருடைய அம்மாவிற்கும் மனதில் தோன்றியது ஒரே முகம்தான். அது ஜோதாவினுடைய அம்மாவின் முகம்தான்.

அவர் சொன்ன குறிப்புகளுமே அவளுடைய அம்மாவைத்தான் அடையாளப்படுத்தியது.
இந்த உண்மை தெரிந்த பிறகு, இதை ஜோதாவிடம் சொல்ல வேண்டாம் அவளுக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவாள். எந்நிலையிலும் இந்த உண்மை ஜோதாவிற்கு தெரியக்கூடாது என்று தன் அம்மாவிடம் இருந்து சத்தியம் பெற்றுக் கொண்டார் அக்பர்.

தான் ஆசையாசையாய் பெற்று வளர்த்த பிள்ளையை வாட்டி எடுத்தது ஜோதாவின் சதிகாரக் குடும்பம்தான் என்று தெரிந்த பிறகு அக்பருடைய அம்மாவிற்கு ஜோதாவின் மேல் இருந்த பாசம் குறைந்து, நாளடைவில் அது பகையாக உருமாறியது.

இந்த ஒரு காரணத்தினாலே ஜோதாவிற்கும் அவளுடைய மாமியாருக்கும் இடையில் பல மோதல்கள், சண்டைகள், சச்சரவுகள், பிடிவாதங்கள், வாக்குவாதங்கள், கோபங்கள், தகாத பேச்சுக்கள், கருத்து வேறுபாடு என அத்தைனை பகை உணர்ச்சியும் புகை மூட்டித் தீப்பிடித்தது. அதிலிருந்து அக்பருக்கு சின்னதாக தலைவலி வந்தால் கூட ஜோதாவின் மாமியார் அவளையும் அவள் குடும்பத்தையும் கரித்துக் கொட்ட ஆரம்பித்தாள்.

வீட்டில் தொடர்ந்து சண்டையும் சச்சரவுமாக இருக்க அனைவருக்கும் நிம்மதி இல்லாமல் போனது. மாமியாரின் வார்த்தைகளால் பாதிக்கப்பட்ட ஜோதா தன் கணவனிடம் இதைப்பற்றி பேசினாள்.

“
வாழ்க்கையே எனக்கு வெறுப்பா இருக்குங்க. வர வர அத்த எதுக்கெடுத்தாலும் என்னைய எதாவது காரணம் சொல்லி திட்டிகிட்டே இருக்காங்க. சொல்ற காரணம் உருப்படியான காரணமா இருந்தா கூட பரவாயில்லங்க. முன்ன இருந்ததுக்கு அத்த ரொம்ப மாறிட்டாங்க. நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க“

“
என்னனு எடுத்து சொல்றது?. அவங்களுக்கும் வயசாகிட்டே போகுதுல்ல அப்படித்தான் புரியாமல் பேசுவாங்க. அவங்கள நம்மதான் கொஞ்சம் அனுசரிச்சு போகனும்“

“
எத்தன நாளைக்குங்க?. நானும் மனுஷிதான?. எனக்கு கஷ்டமா இருக்கு“

“
கொஞ்ச நாள் பொறுத்துக்கோ ஜோதா. எல்லாம் சரியாகிரும்“

“
ம்ம்ம்ம். இப்பக்கூட பாருங்க நீங்க என்னையதான் சமாதானப் படுத்த முயற்சி பண்றீங்க. உங்க அம்மா கிட்ட இத பத்தி பேசுறேனு சொல்ல மாட்டேன்”

“
என்ன சொன்ன? உங்க அம்மாவா? ம்ம்ம்ம்… ஆமா எங்க அம்மாதான். இத்தன நாள் அத்தையா இருந்தவங்க இன்னைக்கு உங்க அம்மா ஆகிட்டாங்களா?. எதுவும் தெரியாத மாதிரி முழிக்காத. ஜோதா எனக்கு டென்ஷன் ஆகுது“ என்று அக்பர் ஜோதாவிடம் கோபமாகப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அவர்களுக்கு இடையில் இது இரண்டாவது சண்டை. பொதுவாக அக்பருக்கு நீ, நான்னு பிரிச்சு பேசினாலோ… எங்கிட்ட பேசாத வைக்காதனு எடுத்தெறிந்து பேசினாலோ சுத்தமாகப் பிடிக்காது. இருவரும் காதலித்த சமயத்தில் இதே காரணத்திற்காக சண்டை போட்டுத்தான் பல மாதங்கள் பேசாமலே இருந்தார்கள். இப்போதும் அதே காரணத்திற்காக இவர்களுக்கு இடையில் சண்டை வந்ததை நினைத்து ஜோதா பயந்தாள். ஆனால் ஒரே வீட்டில் இருந்ததால் எவ்வளவுதான் விட பிடியாக இருந்தாலும் ஒரு நாளைக்கு மேல் பேசாமல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சண்டையும் சமாதானமுமாய் நாட்கள் ஓட ஒருநாள் ஒன்று சொன்னது போல் இருவரும் முரண்டு பிடித்தார்கள். ஜோதாவிற்கு அன்பாய் எடுத்துச் சொல்லும் மனநிலையில் அந்த நாள் அக்பர் இல்லை. அதனால் கோபத்தோடு வீட்டில் சண்டை வருவதற்கு காரணம் எது என்றும், ஜோதாவிற்கு தெரியாமல் மாந்திரீகம் எடுக்கும் இடத்திற்கு அவரும் அம்மாவும் சென்றதையும் அங்கு நடந்ததையும், அதில் வெளிவந்த உண்மையும், அதனால் வீட்டில் ஏற்பட்ட விளைவுகளும், அது இப்போது எடுத்துள்ள விஸ்வரூபத்தையும் கோபத்தோடு சேர்த்துக் கொட்டித் தீர்த்தார்.

ஜோதா மீண்டும் அவளது அம்மாவிடம் தோற்று நின்றாள். நினைத்தது நடந்த பிறகு கவனம் குறைந்த நேரத்தில் அம்மாவின் சத்தம் இல்லாமல் காரியம் சாதிக்கும் கலையைப் பற்றி மறந்தே போனாள் ஜோதா. அவளை எதிர்த்து சண்டையிட்டு குத்திக் கிழித்து உயிர் பிரிந்திருந்தாலும் அதைத் தாங்கியிருப்பாளோ என்னவோ… பெற்ற தாயே சிரித்துக் கொண்டு அணைத்து பின் முதுகில் குத்தியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திருமணத்திற்கு பிறகு அவர்களை வீட்டில் வந்து சந்தித்த ஜோதாவையும் அவள் கணவனையும் வந்து சந்தித்த பிறகு அவர்கள் அந்த வீட்டுப் பக்கம் ஒரு முறை கூட வரவில்லை.

அக்பருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு மருத்துவமணையில் இருந்த போதும்கூட செல்ஃபோனில்தான் நலம் விசாரித்தார்கள். ஜோதாவின் பெற்றோர்கள் அவளையும் அவள் குடும்பத்தையும் விட்டுத் தள்ளியே இருந்ததால் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை அக்பருடன் கூட பகிர்ந்திருக்கிறாள். ஆனால் அது அக்பருக்கு பெரிய விஷயமாகத் தோன்றவே இல்லை. இவள் கோபமாகப் பேசினால் கூட, “விடு அவர்களுக்கு அங்கு  சூழல் எப்படி இருக்கிறதோ?. யாருக்குத் தெரியும்? உபத்திரவம் செய்யாமல் இருக்கும் வரை நல்லதுதான். அதனால் நீ இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே“ என்று அவளை சமாதானம் செய்வார்.

அத்தியாயம் – 28

அப்படிப்பட்ட ஒருவருக்கு இப்படி ஒரு தீங்கு செய்ய அவர்களுக்கு எப்படித்தான் மனது சம்மதித்ததோ தெரியவில்லை… என்று தனக்குள்ளே புழுங்கிக் கொண்டிருந்த ஜோதா தன் அம்மாவிற்கு அழைத்து அவள் மனதில் இருந்த அத்தனை ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டு இனிமேல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடன் பேசவும் வேண்டாம் என் முகத்தில் முழிக்கவும் வேண்டாம். நீங்கள் என் கண்ணில் படாத வரை உங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். அவளைச் சமாளிக்க அவளுடைய அம்மா ஏதேதோ பேசிப் பார்த்தாள். ஆனால் இவ்வளவு நடந்ததிற்குப் பிறகும் அவள் அம்மாவின் பேச்சை நம்புவதற்கு ஜோதா ஒன்றும் முட்டாள் இல்லையே.

அக்பர் ஜோதாவிடம் சண்டையில் இருந்தாலும் கூட, தான் உண்ண அதே பிரசாதத்தை அவளும்தானே உண்ணிருப்பாள். அவளுக்கும் வயிற்றினுள் மருந்து முளைத்திருக்குமே என்று அவளையும் அவர் சென்ற அதே இடத்திற்கு கூட்டிச் சென்றார். இதில் அதிசயம் என்னவென்றால், அவளுக்கு அக்பருக்கு இருந்தது போல் இல்லை. அந்த மாந்திரீகம் எடுப்பவர் ஜோதாவைப் பார்த்தவுடனே உனக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னது மட்டும் இல்லாமல், அக்பரை நம்பவைக்க அதைச் செய்து காட்டியும் நிரூபித்தார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு அக்பரின் குடும்பம் ஆரம்பத்தில் எப்படி எதற்கும் குறையில்லாமல் இருந்ததோ அதே போல் மாறியது. ஆனால் அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. கடலில் எழும் அலைபோல அடுத்தடுத்து பிரச்சனைகள் எழுந்தது.

அந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அந்த பிரச்சனையை நாயகனும் நாயகியும் சேர்ந்து எப்படி எதிர்கொண்டார்கள்? அதன் பிறகு இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்து வரும் வீடியோவில் பார்க்கலாம் என்று ஆதி தனது முப்பதாவது வீடியோவில் பேசி முடித்தான்.
யூடியூப் வாசிகளுக்கு இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் மனதில் காதலின் கால்தடமாகப் பதிய அடுத்த வீடியோ எப்போது வரும்? என்று ஆதியை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு வீடியோ முடிவிலும் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் மக்களை அந்தக் கதையில் இருந்து விலகவிடவில்லை.

மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையில் இருந்த ஆதி முப்பதாவது வீடியேவிற்குப் பிறகு இரண்டு நாட்கள் வீடியோவே போடவில்லை. காரணம் அதற்கடுத்து கதையின் நகர்வு எப்படி இருந்தது என்று அவனுக்கே தெரியாது. அம்மாவின் அலமாரியில் இருந்து எடுத்து வந்த அந்த அற்புதமான நோட்டில் அவனுடைய அம்மா ஜோதியின் அச்சடித்த கையெழுத்தில் எழுதியிருந்த, அனைவரின் வரவேற்பையும் அன்பையும் பெற்ற அந்தக் கதையின் கடைசி பக்கத்தைத்தான் முப்பதாவது வீடியோவாகப் பதிவேற்றினான்.

அந்த நோட்டின் கிழிந்த மீதிப் பகுதி வீட்டில் தனக்கு மட்டும் அடையாளம் தெரியும்படி எடுத்து வைத்திருப்பதாக நினைத்து இரண்டு நாள் கழித்து ஞாயிறு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வந்த ஆதியின் முகமெல்லாம் பல் ஜொலிக்கும்படி சிரிப்பு, காரணம் வீடு இடையில் கொஞ்ச நாள் கலையிழந்து காணப்பட்டது. ஆனால் இப்போது அந்த குறை குறைந்து வீடும் வீட்டில் இருப்பவர்களும் கலையானவர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும் மாறியிருந்தார்கள்.

அப்பா முன்பை விட அதிகமாக வீட்டிற்கு நேரம் ஒதுக்குகிறார். சிபி கொஞ்சம் வளர்ந்து சேட்டைகளைக் குறைத்துக் கொண்டு அம்மாவிற்கு குறைந்தபட்ச ஓய்வைக் கொடுத்துவிட்டான். யாமினியும் அவள் விருப்பப்படி பியூட்டிஷன் வகுப்பிற்கு போய்க்கொண்டிருந்தாள். எல்லோருக்கும் எல்லாவும் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆதியின் மனதும் சந்தோஷத்தில் நிறைந்தது.

வீட்டிற்குப் போன கொஞ்ச நேரத்தில் கிழிந்த பாதி நோட்டைத் தேடி அம்மாவின் அலமாரியைக் கிளரிக் கொண்டிருந்தான். ரொம்ப நேரமாகத் தேடியும் அங்கு அவன் தேடியது கிடைக்காததால் எரிச்சலில் அங்கிருந்த பொருட்களை எல்லாம் டம்மு டும்மென்று கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவன் சத்தத்தைக் கேட்டு அந்த அறைக்குள் நுழைந்த யாமினி “என்னடா உனக்கு பிரச்சன?. வீட்ல இருக்குறதா இல்ல வெளிய போறதா எல்லாரும்?” என்று கேட்டார்.

“
நீ உன் வேலையப் பாக்குறியா யாமினி. நானே கடுப்புல இருக்கேன்“

“
உனக்கு மட்டும் எங்கிருந்துதான் வருமோ இந்த கடுப்பு. சரி என்ன தேடுறனு சொல்லு நானும் தேடுறேன்“ என்று கேட்டாள். அந்த அறையில் இருந்து வெளியே சென்றவன் தன் பையில் இருந்து பாதி கிழந்த நோட்டை எடுத்து வந்து “இங்க பாரு யாமினி. இதோட மீதி நோட்டத்தான் நான் தேடுறேன். அது கிடச்சாதான் அடுத்த வீடியோ போட முடியும். இதே மாதிரி இருக்க நோட்ட தேடு“ என்றான்.

“
ஓஓஓ அதுனாலதான் நீ ரெண்டு நாளா வீடியோ போடலையா? “

“
ஆமா. எல்லாம் பக்காவா கொண்டு வந்துட்டு கடைசியில சொதப்பிருவனோனு பயமா இருக்கு. இப்போதைக்கு மைன்டுல இதுதான் ஓடிட்டு இருக்கு. வேற எந்த சிந்தனையும் இல்ல. டென்ஷனா இருக்கு“

“
சரி விடு டென்ஷன் ஆகாத நானும் தேடுறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தேடுனா சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்குல”

“
ம்ம் சரி. நான் தடம் பாத்துதான் வச்சேன். ஆனா இப்போ பாத்தா கணோம்“

“
இங்கதான் இருக்கும். நீ ஒழுங்கா பாக்காம விட்டிருப்ப ஆதி. கொஞ்சம் இப்படி வா நான் பாக்குறேன்“ என்று சொல்லி ஆதியையை ஓரமாக நிற்க வைத்துவிட்டு யாமினி தேடிக் கொண்டிருந்தாள். இல்லை இல்லை தேடுவது போல நடித்துக் கொண்டிருந்தாள். ஆதி விட்டுச் சென்ற அந்த நோட்டின் மீதி பகுதி அங்கு சுத்தி இங்கு சுத்தி கடைசியில் யாமினியின் கையை வந்து சேர்ந்தது. ஆதியும் யாமினியும் தேடிக்கொண்டிருந்த அந்த பொருள் யாமினியின் பொறுப்பில் பத்திரமாக அவள் பொருள்களுக்கு நடுவே ஒழிந்திருந்தது.

அங்கு இல்லாத பொருளை அறை நாள் முழுக்க தேடித் தேடி களைத்துப் போனார்கள். அது அங்கு இல்லை எனத் தெரிந்தும் யாமினி தேடியதற்கு பல காரணங்கள் அவள் மனதிற்குள் புதைந்திருந்தது.

அந்த நோட்டைக் காணவில்லை என்கிற கோபமும் படபடப்பும் தலைக்கு மேல் ஏறிய ஆதி அதைத் தன் அம்மாவிடம் கொட்டினான். “அம்மா… இங்க வா ஒரு நிமிஷம்“ என்று தொண்டை கிழிய ஓயாமல் கத்திக் கொண்டிருந்தான். மதிய சமயலைக் கவனித்துக் கொண்டிருந்தவள் கரண்டியோடு வெளியே வந்து நின்றாள்.

“
ஏன்டா கத்திக் கத்தி வீட்ட ரெண்டாக்கிட்டு இருக்க?”

“
உன்னோட நோட்டு ஒன்னக் காணோம் நீ எடுத்தியா? “

“
உன்னோட நோட்டு காணோம்னா ஏன்டா என்கிட்ட கேக்குற? நான் என்ன எந்நேரமும் உன் நோட்ட வச்சு எழுதிகிட்டா இருக்கேன். காணோம்னா போய் தேடுடா எனக்கு நிறையா வேல இருக்கு“

“
படபடனு ஆடாம கொஞ்சம் பொறுமையா நான் பேசுறத கேட்டுட்டு அப்புறம் பதில் பேசுறியா?. நான் என்னோட நோட்ட கேக்கல. உன்னோட நோட்ட காணோம் பாத்தியானுதான் கேட்டேன்“

“
நான் எந்த நோட்டு வச்சிருந்தேன்? ”

“
அதான் அந்த அலமாரி முழுக்க நோட்டும் பேப்பருமா கிடக்கே அதுல ஒரு நோட்டக் காணோம்“

“
அதான் அலமாரி முழுக்க இருக்குனு நீயே சொல்றியே வேற எதாவது நல்ல நோட்டா பாத்து எடுத்துக்கோடா“

“
ம்மா புத்திசாலித்தனமா பேசாதமா நான் டென்ஷன் ஆகிருவேன். ஆல் ரெடி நான் பயங்கர கோபத்துல இருக்கேன்“

“
சும்மா எதாவது கேட்டு நீ என்ன டென்ஷன் பண்ணாத நான் பத்திரகாளியா மாறிடுவேன்.அந்த அலமாரி பக்கம் போயே பல வருஷம் ஆகிருச்சு. நீதான் ஏதோ யூடியூப் வீடியோவுக்கு கத வேணும்னு பழச போட்டுக் கிளறிட்டு இருந்த. இப்போ என்கிட்ட கேட்டா என்னடா அர்த்தம்?“

“
அப்போ நீ எடுக்கலையா? உனக்குத் தெரியாதா? நீ பாக்கலையா?”

“
சத்தியம் எதுவும் பண்ணனுமாடா?”

“
இல்ல இல்ல வேணாம். நீ போய் உன் வேலையப் பாரு. நோட்ட தேடித் தேடி பசியே எடுத்துருச்சு”

“
ம்ம்ம் அவ்வளோதான் பத்து நிமிஷத்துல சாப்பாடு ரெடி ஆகிரும்”

இந்த சூழலில் குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எப்படி சந்தித்தாலும், செல்லமாய் கோபப்பட்டும், லேசாக அதட்டியும் சமாளிக்க வேண்டும் என்று ஜோதியிடம் இருந்து யாமினி கற்றுக்கொண்டாள். காரணம் அந்த பாதி கிழிந்த நோட்டு ஜோதியின் கையில் இருந்துதான் யாமினியின் கைக்கே மாறியது. இந்த விஷயம் தனக்கும் தன் கணவனுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று நினைத்த ஜோதிக்குத் தெரியாது அந்த நோட்டு இப்போது யாமினிடம்தான் இருக்கிறது என்று.

எந்த உண்மையும் தெரியாத வரைக்கும்தான் சந்தோஷம். பிறரிடம் பகிர முடியாத உண்மையை சுமப்பது எல்லாம் மிகப் பெரிய வலி. அந்த உண்மை ஜோதியின் முதுகில் இருந்து தாவி யாமினியின் முதுகில் வேதாளம் போல் தொற்றிக் கொண்டது. பிடியில் சிக்கிய யாமினி வேர்த்து விறுவிறுத்தாள். பிடியில் இருந்து விலகிய ஜோதி சந்தோஷமாக அந்த வீட்டில் சுற்றித் திரிந்தாள்.
உண்மை இதுதான் யாமினிக்குத் தெரிந்த பிறகு ஆதியின் அம்மாவும் அப்பாவும் அவளுக்கு வாழும் கடவுளானார்கள். முன்பு இருந்ததை விட அதிகமாக, வார்த்தைகளால் அடக்கி விட முடியாத உயரத்தில் சென்று அமர்ந்து கொண்டார்கள் அவர்கள் இருவரும்.

நாளுக்கு நாள் ஆதியின் அப்பா அம்மா மீது யாமினிக்கு அன்பும் மரியாதையும் கூடிக்கொண்டே இருந்தது. இந்தக் குடும்பம் இன்று இருப்பது போல என்றும் சிறு கீரல் கூட விழாமல் இருக்க வேண்டும் என்றும் யாமினி கடவுளை வணங்காத நாளே இல்லை.

எப்படியும் மீதிக் கதையைத் தேடி ஆதி வீட்டிற்குள் உலாவான் என்பது அவளுக்குத் தெரியும். அப்பா அம்மாவிற்கும் தெரியும். யாமினி எக்காரணம் கொண்டும் உண்மை தன் மூலமாக ஆதிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

இந்த விஷயத்தைப் பற்றி ஆதி வீட்டில் குரலைத் திறந்தாள் அதை அப்படியே அடைத்து அவனை திசை திருப்ப, அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஆதியின் அப்பா.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!