Stories that touch hearts

Home  /  அவன் பெயர் அக்பர் (பா.ஹேமமாலினி)  /  Chapter 18

CHAPTER 18

அத்தியாயம் – 21, 22

By Sorna Sandhanakumar · November 1, 2026

0

அத்தியாயம் – 21

“
ஒரு டைம் மெசேஜ் பண்ணி ரிப்லை வரலனா வெயிட் பண்ணணும். இப்படி ஆயிரம் மெசேஜ் பண்ணி வச்சிருந்தா ஒரு மனுசன் என்னதான் பண்றது?“

“
நீ ஒன்னும் பண்ண வேணாம். வீட்ல எல்லார்கிட்டையும் பேசுற எங்கிட்ட பேச மட்டும் உனக்கு புடிக்கல. நான் உனக்காகதான இருக்கேன். நீ ஏன் இப்படி பண்ற?. நான் அப்படியே எங்கையாவது தொலஞ்சு போயிருக்கனும். இப்போ பாரு உனக்கும் புடிக்காம, உன் வீட்டுக்கும் பாரமா இருக்கேன்“

“
யாமினி சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருந்தீனா பல்ல ஒடச்சிருவேன். இப்படியெல்லாம் பேச உனக்கு யாரு கத்துக் கொடுத்தது“

“
பாரு இப்போ கூட யார் மேலையோ இருக்க கோபத்த என்கிட்ட காட்ற. உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல. உன் வீட்ல எல்லாரும் அமைதியா குணமா பேசுறாங்க நீதான் இப்படி கத்ததுற”

“
நீ பெரிய ஒழுங்கு மாதிரி என் கேரக்டர கொற சொல்லாத. சாவடிச்சிருவேன் உன்ன“

“
இப்படியெல்லாம் என்னையக் கண்டுக்காம இருக்குறதுக்கு ஒரே அடியா என்னைய நீ கொன்னே போட்டர்லாம். போக வழி தெரியாம உன்ன நம்பி இருக்கேன்றதாலதான நீ இப்படி பேசுற? “

“
யாமினி அறிவு எதுவும் இல்லாம போச்சா உனக்கு?. நீ எங்க என்ன நம்பி இருக்க?. நம்ம ரெண்டு பேருமே நம்ம வீட்ட நம்பியும் அப்பா அம்மாவ நம்பியுமாதான் இருக்கோம். அங்க நீ எப்படியோ அதே மாதிரிதான் நானும். இந்த உலகத்துல எந்த அம்மா அப்பா பையன் லவ் பண்ணி பிரச்சனையான பொண்ணு வாழ்க்க பாழாப் போயிறக் கூடாதுனு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்க?. அப்பா நம்ம ரெண்டு பேருக்கும் பண்ணிருக்குறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?. யாமினி நம்ம இந்த வயசுலயே லவ் பண்ணது நம்மளுக்கு மட்டுமாதான் சரி. அவங்களுக்கு அது தப்பான விஷயம்தான். அதையும் மீறி அவங்க நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னுதான பாக்குறாங்க. வீட்ல இருக்க வரைக்கும் சரி. நம்மலால அப்பா வெளிய எத்தன பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு தெரியுமா? “

“
எல்லாம் புரியுது. அதுக்கும் நீ பேசாததுக்கும் என்ன சம்பந்தம்?“

“
அவங்க நமக்காக யோசிக்கும்போது நம்மதான் அந்த மரியாதைய காப்பாத்திக்கனும். நான் ஒன்னும் உன்கிட்ட பேசாம இல்ல. அவங்க முன்னாடி உன்கிட்ட பேசாம இருக்கேன். அவ்வளவுதான். அவங்க நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் கொஞ்சமாவது மரியாதையா நடந்துக்க வேணாமா? “

ஆதி என்ன சொல்ல வருகிறான் என்பதே யாமினிக்கு மூன்று மணி நேர சண்டைக்குப் பிறகுதான் புரிந்தது. அதன் பிறகு எப்படியோ பேசி சமாதானம் ஆகி இருவரும் மனம் ஒத்து தூங்கப் போனார்கள். நடந்த வாக்கு வாதத்திலே ஆதியிடம் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டதை சொல்லாமல் விட்டுவிட்டு பிறகு புரண்டு கொண்டு இருந்தாள்.

மீண்டும் அழைத்துப் பேசி இதுவும் சண்டையில் முடிந்தால், அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் சரியான சூழல் இருக்கும் போது அவனிடம் சொல்லிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

மறுநாள் காலையில் ஜோதியும் யாமினியும் தெரிந்தவர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றார்கள். ஜோதிக்குத் தெரிந்த சிலரும் அங்கு வந்திருந்தார்கள். ஜோதியிடம் நலம் விசாரிக்க வந்த அனைவருமே “உனக்கு ரெண்டு பசங்கதான? அப்போ இந்தப் பொண்ணு யாரு?” என்றுதான் கேட்டார்கள். அவளும் “இது என் அண்ணனோட மக ஊர்ல இருந்து வந்திருக்கா. வீட்ல இருந்தா பொழுது போகாதுனு கூட்டிட்டு வந்தேன் என்று சமாளித்தாள்.

அப்படியா சரி இந்த பொண்ணு என்ன பண்ணுது படிக்குதா? என்று கேட்கும் சிலரிடம் பேச்சை மாற்றி, சிரித்து சமாளித்து, அவர்களை திசை திருப்பி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அது யாமினியை விட ஜோதிக்குதான் மனதை பாதித்தது.

விசேஷம் முடிந்து வீடு திரும்பும் போது மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஜோதி, யாமினிடம் “யாமினி உன்ன நான் வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கனும்“ என்றாள்.

“
அவங்க கேள்வியா கேட்டு நச்சறிச்சதுக்கு இப்படி சொல்றீங்களா? “

“
ம்ம்ம் ஆமா உனக்கு மனசு கஷ்டமாகிரும்ல. அதான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு“

“
எனக்கு எந்த கஷ்டமு இல்ல. நீங்க ஒன்னும் நெனைக்காதீங்க“

“
ம்ம்ம்”

யாமினி வீட்டிற்கு வந்த பிறகு ஜோதிக்கு புதிதாக ஒரு தோழி கிடைத்தது போல இருந்தது. பெண் பிள்ளையைப் பெற்றிருந்தால் கூட இவ்வளவு இணைப்போடு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எந்நேரமும் ஜோதியுடனே இருக்கும் யாமினி சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரங்களை கழுவி வைப்பது, பூ கட்டுவது வரை எல்லா வேலையிலும் பங்கு போட்டுக் கொண்டு சிரித்துக் கதை போசிக் கொண்டு தோழி போல இருப்பாள்.

இருவரும் சேர்ந்து பேசாத தலைப்பே இல்லை. வீட்டில் எப்போதும் தனிமையை மட்டுமே உணர்ந்த ஜோதிக்கு யாமினியின் வருகை வரப் பிரசாதம்தான். ஆனால், யாமினி வாழ்க்கை மீது அவளுக்கு மிகுந்த அக்கறை இருந்தது. அதனால் தன் கணவனிடம், யாமினியைப் படிக்க வைக்கலாமா? என்று கேட்டாள்.

உங்களுக்கு பணம் சமாளிப்பது கடினமாக இருந்தால், நானும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறேன் என்றாள்.

ஜோதி சொல்லி அதை அவள் கணவன் மறுத்ததே இல்லை. பணம் பற்றிய சிந்தனை எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ யாமினிடம் அவள் என்ன படிக்க ஆசைப் படுகிறாள் என்று கேள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

ஜோதி யாமினிடம் இதைப் பற்றி கேட்டபோது, அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவள் மனதில் இருந்ததெல்லாம் எந்நாளும் இவர்களுக்கு பாரத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பது மட்டும்தான். ஜோதியின் முகத்திற்கு நேரே மறுக்க முடியாததால், நான் யோசித்து நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லி அந்த பேச்சை முடித்தாள்.

யாமினி ஆதியிடம் இதைப் பற்றி கேட்டபோது, அவனுக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பின் இருவரும் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள்.

“
ஆதி உங்க வீட்ல எனக்காக இதுவரைக்கும் பண்ணிட்டு இருக்க உதவிக்கே நான் என்ன திருப்பித் தரப் போறேன்னு தெரியல. வீடு இப்போ என்ன நிலமையில இருக்குனு நானும் கூடவே இருந்து பாத்துட்டுதான இருக்கேன். உனக்கும் சிபிக்கும் ஃபீஸ் கட்டவே கஷ்டமா இருக்கு. அப்பா முழுக்க முழுக்க ஜிம்லயேதான் இருக்காரு. அவருக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்ல. எல்லாம் தெரிஞ்சும் அவங்கள கஷ்டப்படுத்த நான் விரும்பல. அதுனால நான் படிக்கல. நான் படிக்கலனு சொன்னா, சொல் பேச்சு கேக்க மாட்டேன்றேனு தப்பா நெனச்சிருவாங்களோனு வேற எனக்கு பயமா இருக்கு. அதுனால நீயே ஈவ்னிங் பேசும்போது அம்மா கிட்ட சொல்றியா? “

“
சரி நான் சொல்லிக்குறேன். நீ சொல்றதும் சரிதான். ஆனா நீயும் என்ன மாதிரிதான? உனக்கும் காலேஜ் போகனும் படிக்கனும்னு ஆசை இருக்கும்ல? “

“
எனக்கு இப்போதைக்கு எந்த ஆசையுமே இல்ல. நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சு என்னைய படிக்க வைக்க மாட்டியா அப்போ?”

“
நீ என்னதான் மழுப்பி பேசுனாலும் எனக்கு மனசு கேக்கல. எங்க வீட்டுக்கு வந்ததால உன் லைஃப் பாதிக்கப்படுதோனு எனக்கு கவலையா இருக்கு“

“
லைஃப்னா என்னனே எனக்கு இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் புரிஞ்சது. நான் இங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன். அம்மா கிட்ட பேசி புரிய வை அது போதும்“

“
சரி நான் பேசுறேன்”

குடும்ப கஷ்டத்த மனசுல வச்சு யாமினி எடுத்த இந்த முடிவு ஆதிக்கு சரியா பட்டாலும் ஜோதிக்கு அது சரியாபடல.

“
அவளும் படிக்கட்டும் எனக்கு மூனு பேருமே ஒன்னுதான். அப்பா கிட்ட நான் பேசிட்டேன்” என்று ஜோதி சொன்னாலும் யாமினி தன் முடிவில் உறுதியாக இருந்தாள். தினமும் ஒரு பத்து முறையாவது இதைப் பற்றி ஜோதி யாமினியிடம் பேசியதால், யாமினி தன் பிடியில் இருந்து சற்று கீழே இறங்கினாள்.

காலேஜ் போவதற்கு பதிலாக நான் மேக்கப் கிளாஸ் போறேன் என்று ஜோதியிடம் கூறினாள்.
நீ எங்கே வேண்டுமாலும் போ. உனக்குப் பிடித்தது எதுவாக இருந்தாலும் செய். ஆனால் வீட்டில் மட்டும் அடைபட்டு இருக்காதே என்று ஜோதி அறிவுரை சொல்ல, யாமினியும் அதை ஏற்றுக்கொண்டாள்.

பியூட்டீசியன் கோர்ஸ் மூன்று மாதம்தான். செலவும் குறைவாகவே இருக்கும். வகுப்பு நேரமும் குறைவாகத்தான் இருக்கும், வீட்டில் ஜோதிக்கு உதவியாக இருக்கவும் விரைவாக படித்து முடித்து வேலைக்கு செல்லவும் நல்ல யோசனையாக இருக்கும் என்பதால் யாமினி இந்த முடிவை எடுத்தாள்.

வீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள ஒரு பார்லரில் சேர்ந்து தினமும் வகுப்பிற்குச் சென்றாள்.

அது ஜோதி மற்றும் யாமினியின் மனதிற்கு திருப்தி அளித்தது.
ஆதியும் யூடியூபில் மிகவும் பிரபலமான ஆளாக உருமாற ஆரம்பித்தான். அவன் கதைக்கும் கதை சொல்லும் பானிக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே சேர்ந்தது.
அவன் அடுத்ததாக பதிவேற்றிய வீடியோக்கள் அடுத்த நாள் கதையில் என்ன திருப்பம் ஏற்படப் போகிறதோ என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்தது.

வீடு திரும்பிய ஜோதாவின் வாழ்க்கையும் பாக்ஸிங் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த அக்பரின் வாழ்க்கையும் அதன் பிறகு எப்படி இருந்தது?. இருவரும் எப்படி சந்தித்து பின் கரம் பிடித்தார்கள் என்பதை விளக்கிச் சொன்ன வீடிக்கோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்து சப்ஸ்கிரைபரின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது.

கல்லூரி படிப்பை முடித்த ஜோதா, அக்பரைத் தொடர்பு கொள்ள பல முயற்சிகள் எடுத்தும் இறுதியில் தோற்றுதான் போனாள். அவளுக்கென அழகான குடும்பம் இருந்தும் தனிமையையே உணர்ந்தாள்.

அத்தியாயம் – 22

முடிந்தவரைத் தன்னை ஏதோ ஒரு வேலைக்குள் முழ்கடித்துக் கொள்வாள். அவளுக்குப் பிடித்த தூக்கமும் கூட எதிராளியானது. என்னதான் ஈடுபாடோடு ஒரு செயலில் இறங்கினாலும் இடையிலேயே அவன் நியாபகம் வந்து வழி மறித்து வதைத்து எடுக்கும்.

அவனைச் சேரும் போராட்டத்தில் சோர்வுற்ற ஜோதா பழியை விதியின் மேல் தள்ளிவிட்டு மனநிம்மதியைத் தேடி, தனக்கு ஒப்பாத தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டாள்.

பாடல் கேட்பது, பார்க்கும் காட்சிகளை வரைபடமாக்குவது, எதையாவத கிறுக்கி வைப்பது என்று அவளுக்கென ஒரு கனவு உலகத்தை அவளுக்குப் பிடித்தவாறு ஏற்பாடு செய்தாள். அதில் கட்டளையிட்டவும் காயப்படுத்தவும் யாரும் இருக்க மாட்டார்கள் (அன்பு காட்டவும் அரவணைக்கவும்தான்).

சராசரி உலகில் இருந்து விடுபட்ட ஜோதாவிற்கு எழுத்தின் மீதும் புத்தகத்தின் மீது காதல் வந்தது. அது அனைத்து வகையிலும் அவளை அவளாக இருக்க விட்டதாக அவள் உணர்ந்தாள்.

அவளுடைய பல மணி நேரங்கள் புத்தகங்கள் வாசிப்பதிலும், சுவையான தேநீர் கடைகளின் தேடுதலிலும், இளையராஜா பாடல்களின் மெட்டுக்களை கேட்டு ரசிப்பதிலும், நா. முத்துக்குமாரின் கவிதைகளுக்கு பலியாவதிலுமே கழிந்து கொண்டிருந்தது.

உச்சியில் இருந்து உடல் நீரை உறிஞ்சிக் கொண்டிருந்த சூரியன், தாகம் தணிந்ததும் மேற்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இதுதான் சரியான நேரம் என்று புத்தகங்களும் பேனாக்களும் அடங்கிய பையைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு பூங்காவை நோக்கிப் புறப்பட்டார் ஜோதா.

பொதுவாகவே அவள் ஊர் ஒரு சுற்றுலா தளம் என்பதால் வெளியூர் வாசிகளின் வரத்து சற்று அதிகமாகவே இருக்கும். சூரியன் மறையலாமா? வேண்டாமா? என்கிற சந்தேகத்தில் மலைகளின் இடையே சென்று, சற்று மறைந்தும் சற்று தெரிந்தும் சந்தன வெயிலால் பூங்காவை ஒளிர வைத்திருந்தது.

பனிக் கூட்டமும் மலைகளின் பின்னிருந்து படையெடுத்து பூங்காவை நோக்கி வந்து கொண்டிருந்தது. மஞ்சள் வெயிலும் மாலைப் பனியும் சந்தித்த பொன்னான பொழுது அது.

வண்ணப் பூக்களின் இதழ்களும், காய்ந்த இலைகளும், பறவையின் உதிர்ந்த சிறகுகளும் அங்கிருந்த நாற்காலியின் மீது விரிந்து கிடந்தது. அதைத் தன் கைகளால் தட்டிக் கீழே தள்ளிவிட்டு அமர்ந்து கொண்டாள் ஜோதா.

பையிலிருந்து புத்தகத்தை வெளியே எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். வார்த்தைகளை மேய மேய சுவாரஸ்யப் புல் முளைத்துக் கொண்டே இருந்தது. அந்தக் காகிதத்தில் இருந்த கருப்பு நிற மை அவள் கண்களைக் கட்டி வைத்திருந்தது. அதன் பிடியில் இருந்து அவளது பார்வை விலகவே இல்லை.

ஜோதாவின் கவனைத்தை உடைக்கும் விதமாக “க்ளிக் க்ளிக்” என்று ஒரு சத்தம் கேட்டது. அதனுடனே ஒரு அதிர்தலையும் உணர்ந்தாள். அந்த சத்தம் தன் செல்ஃபோன் நோட்டிஃபிகேஷன் சத்தம்தான் என்று திறந்தாள்.

ஒரு புதிய எண்ணில் இருந்து “ஹாய் நான் உன்னத் தேடி வந்துட்டேன்“ என்று வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வந்திருப்பதைக் கவனித்தாள்.

பதியாத புதிய எண்ணிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்கமாட்டாள் ஜோதா. அதனால், குறுஞ்செய்தியை அந்த எண்ணுக்கான அரட்டைப் பெட்டிக்குள் நுழையாமைல் வெளியிருந்தே படித்துவிட்டு அதைக் கண்டுகொள்ளாமல் வாசிக்கத் திரும்பினாள்.

மீண்டும் அதே எண்ணிலிருந்து “நான் யாருனு செல்ஃபோன்ல தேடாத நீ இருக்க அதே பார்க்லதான் நானும் இருக்கேன். உன்னையும் நீ போட்டிருக்க மஞ்சள் நிற சுடிதாரையும் ரசிச்சுகிட்டு“ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. இந்த முறை அவளது முழு கவனமும் அந்த குறுஞ்செய்திக்கு சொந்தக்காரர் பக்கம் வளைந்தது.

யார் அது? என்று புருவம் சுழித்த ஆர்வத்தோடு நாற்காலியில் இருந்து எழுந்து நின்று, எட்டு திசையிலும் தலையைத் திருப்பித் தேடினாள். அவளுக்கு யாரும் எதுவும் வசமாகவில்லை.

பூங்காவில் மக்கள் அங்கிருந்த சொக்கும் அழகை ரசிக்க கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். ஆங்காங்கே நின்றும், நடந்தும், அமர்ந்தும், படுத்தும் இயற்கை எழிலை ரசித்தபடியே இளைபாரிக் கொண்டிருந்தார்கள். எங்கு தேடியும் அவளுக்குத் தெரிந்த முகம் என்று ஒன்றுகூட இல்லை.

நேரம் வீணாவதாக நினைத்து அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நடந்தபடியே படித்துக் கொண்டிருந்தாள்.

அவளைக் கவனிக்காமல் எதிரில் வந்த யாரோ ஒருவர் அவளது இடது தோளில் இடித்துச் செல்ல, கையிலிருந்து புத்தகம் கீழே விழுந்தது. “ச்சே” என்று திரும்பி பார்க்கையில் முகத்தைத் திருப்பாமலே கைகூப்பி “சாரி” சொல்லி ஓடியவரை மனதிற்குள்ளே திட்டிவிட்டுப் புத்தகத்தை எடுக்க கீழே குனிந்தாள். அப்போது, அவளுக்கு முன்பாகவே ஒரு அழகான பெண் குழந்தை அந்தப் புத்தகத்தை எடுத்தது. குழந்தையின் குழி விழும் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டுப் புத்தகத்தை வாங்கினாள். அவள் கொடுத்த முத்தத்திற்கு பதிலாக அந்தக் குழந்தை இரண்டு இலைகளோடு அடர் சிவப்பு நிறத்தில் இருந்த ஒற்றை ரோஜாவைக் கொடுத்தது. அதை வாங்கிக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து படிக்கத் தொடங்கினாள்.

அவள் வாசித்த கதை கூர்மையான வார்த்தைகளால் வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த கரடுமுரடான உண்மைகள் எல்லாம் அவளை யோசிக்க வைத்தது. தன் இரு கைகளால் புத்தகத்தை ஏந்தி இருந்தவள், கதையில் எதிர்பாராத திருப்பங்கள் வந்ததும் ஒரு கையை ஊன்றினாள்.

ஊன்றிய கை சமநிலை இன்றித் தடுமாறி இன்னும் கீழே சென்று நிலைப்பட, படபடப்பில் தலை திருப்பினாள் ஜோதா. அவளைத் தடுமாறச் செய்தது பின் அவளை ஆச்சர்யமடையவும் செய்தது. அது ரோஸ் நிற ரிப்பனால் கட்டப்பட்ட செவ்வக வடிவிலான பரிசுப் பெட்டி. அந்த பெட்டியில் நான்கைந்து இதைய பலூன்களும் கட்டப்பட்டு இருந்தது. கூடவே “ஃபார் யூ டார்லிங்“ என்று எழுதப்பட்ட ஒட்டுப்படம் (ஸ்டிக்கர்) இருந்தது.

அவளை டார்லிங் என்று அழைக்கும் உரிமையை ஒரே ஒருவருக்குத்தான் கொடுத்து வைத்திருந்தாள். அவருடன் வாழ்வைத் தொடரத்தான் அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இது எனக்கானதாக இருக்காது. சுற்றிப் பார்க்க வந்தவர் யாரோ மறந்து விட்டுச் சென்றிருக்கலாம் என்று அதைக் கடந்து சென்றாள்.

டார்லிங் என்கிற சொல் அங்கு இல்லாமல் இருந்திருந்தால், அவள் அங்கேயே இருந்திருப்பாள். அந்த ஒற்றை வார்த்தை அவளை அந்த அழகிய சூழலில் இருந்து துறத்தியடிக்க, கால்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. நடக்கும் போதும் அவளை யாரே அழைப்பது போல காதருகே கேட்டாலும், அதைற்கு வசப்படாமல் கடந்தாள்.

மூடு பனியை விலக்கி மூச்சிரைக்க நடந்து வந்ததால், அருகில் இருந்த தேனீர் கடைக்குள் பனியோடு பனியாக உள்ளே நுழைந்தாள். “பனியின் ஈரம் தாகம் தீர்க்காது“ என்பதால் தனக்கென்று ஒரு கோப்பைத் தேநீரைத் தரச் சொல்லிக் கடைக்காரரிடம் கேட்டாள். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

கோப்பையில் பரவியிருந்த சூடு, பனியால் நெளிந்த உள்ளங்கைத் தோலை சமப்படுத்தி இதம் கொடுத்துக் கொண்டிருக்க, தேநீரின் மேல்பகுதியில் இருந்து எழும்பிய ஆவி அவள் நெற்றியை முத்தமிட்டு நடுக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. தேநீரில் கலந்திருந்த சர்க்கரைக் கட்டிகள் இதயச் சுவற்றில் மேளம் தட்ட, அவள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆசுவாசம் கிடைத்தது. தேநீரில் மிதந்தாள் கசடைப் போல.

தேநீர் தந்த சுறுசுறுப்பில், படித்த கதை படமாக ஓடிக்கொண்டிருக்கும் அவள் மூளையின் மூலையில் சென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூங்காவில் வில் வீசிக் கொண்டிருந்த சூரியக் கதிர்களைப் பிரித்துக் கொண்டு ஒரு கருப்பு நிழல் அவளை நோக்கி வருவதை அவள் தன் மை பூசிய கண்களால் பார்க்கிறாள். முடி அமைப்பும் நடை போடும் விதமும் ஒரு இளம் ஆணின் சாயலைச் சொல்ல, அவன் இன்னும் வேகமாக வந்தான்.

கிட்ட நெருங்க நெருங்க அவனது மங்களான சாயல் தெளிந்து உண்மையான தோற்றம் தெரிந்தது. அது அந்த கதையின் நாயகன்தான். தோள் படர்ந்த உயர்ந்த தோற்றத்தைக் கொண்ட அவன் கல்லு முள்ளான தோட்டத்தில் ஒற்றை பூ பூத்திருப்பதை அவள் பார்க்கிறாள். அந்த சிரிப்பு (பூ) வாசத்திற்குப் பதிலாக நேசத்தைப் பரப்பியது.

அந்த முகம் அவளது காதலனை அச்சடித்திருந்தது. அவன் அருகே வர வர தனக்குள் நெளிந்தாள் நாணத்தில். அவள் அருகே வந்தவன் மூக்கை உரசும் தூரத்திற்கு ஒரு மயிர் இடைவெளி விட்டு நெருக்கமாக நின்றான். அவள் கையில் இருந்த கோப்பையை வாங்கி, அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கோப்பையின் திறந்த பகுதி இருந்த அதே இடத்தில் தன் வாயை வைத்து மூடினான்.

தேநீர் குடித்தவள் அப்போது சாக்லேட்டின் சுவையைத் திகட்டத் திகட்ட அனுபவித்தாள். பின் தன் மேலுதட்டிலும் கீழுதட்டிலும் பட்டுப் பரவிய சாக்லேட் நாவை அடையாமல் நாசிக்கு மட்டும் வாசத்தைக் கொடுத்துவிட்டுப் பிரிந்தது.
சொக்கிக் கிடந்தவளின் காதருகே “டார்லிங்“ என்கிற வார்த்தை கேட்டதும் கண் திறந்தாள்.

கண்ணெதிரே அவன் அதே சாக்லேட் வாசனையோடும் நெற்றியில் வெட்டுக் காயத்தோடும் நின்றிருந்தான். கனவா நினைவா? என்று புரியாதவள் குடித்த ஒரு கோப்பைத் தேநீருக்கு பணம் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறினாள்.

வீடு வந்து சேர்ந்தும் அந்த கதையும் அவள் மனதில் ஏற்பட்ட அழகான குழப்பமும் அவள் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டைப் போல ஒட்டிக் கொண்டது.

வழக்கத்தை விட அவன் நியாபகத்தை அதிகமாகக் கொடுத்த நாளாக அந்த நாள் இருந்தது. கேட்டது, பார்த்தது, உணர்ந்தது எல்லாமே காதலாக இருந்தது.

அக்பர் மீது இருந்த ஏக்கமும் கோபமும் கடைசியில் கவலையாக மாறியது. தெரியாத எண்ணில் இருந்து “டார்லிங்“ என்கிற உரிமை வெளிப்படுகிறது என்றாலே அது அவராகத்தான் இருக்க முடியும். தேநீர் கதைக் கனவில் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவன் கண் விழித்ததும் அதே சாக்லேட் மணம் பரவ வெட்டுக் காயத்தோடு எதிர் நின்றது ஏன்?. அந்த மாயைக்குள் மீண்டும் நான் நுழைந்தால், என் மனம் புன்படும் என்று புறக்கணித்தாள் ஜோதா.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!