Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 33

CHAPTER 33

இறுதிப் பாகம் – பனித்துளியின் இனிய நிறைவு! 33

By seema · November 12, 2026

0

அன்று ராயனோ, தங்களது அறுவடை செய்த சோளம் மற்றும் கம்பிற்கான மொத்தப் பணத்தையும் முதலாளியிடம் வாங்கிக் கொண்டு வருவதற்காக நாகர்கோவில் வரை சென்றிருந்தான்.

அங்கே வியாபாரியிடம் கணக்கு வழக்குகளைப் பார்த்து, பணத்தைப் பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர வழக்கத்தை விட மிகவும் நேரமாகிவிட்டது. களைப்போடு வீட்டிற்குள் வந்தவன், கையில் இருந்த பணப்பையை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, கை கால் கழுவிட்டு வந்து உட்கார, மகனுக்கு சாப்பாட்டை பரிமாறினார்.

நாகர்கோவில் போன கதையை பேசிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தவன், நீ போய் படு மயிலு என்றபடி மாடியிலிருக்கும் அறையை நோக்கிச் சென்றான்.

அறைக்குள் நுழைந்த ராயனோ களைப்போடு கட்டிலில் சரிந்தான். எழிலோ கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்தபடி அவனுக்காகவே காத்திருந்தவள், “ரொம்ப களைப்பா இருக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்டபடி அவனருகே வந்தாள்.

“ஆமாடி…அந்த ஆளு கணக்குப் பார்க்க லேட் பண்ணவும் உடம்பெல்லாம் ஒரே அசதியா இருக்கு,” என்று கண்களை மூடியபடியே சொன்னான்.

எழில் தன் இதழ்களில் கள்ளச் சிரிப்பைத் தேக்கிக்கொண்டு, அவனது கையைப் பிடித்து மெல்லத் தன் வயிற்றின் மீது வைத்தாள்.திடீரென மனைவியின் இந்தச் செய்கையால் ராயன் புருவங்களை உயர்த்தி, கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவன்,”என்னடி அரசி… என்ன ஆச்சு?” என்று புரியாமல் கேட்டான்.

எழில் ஒன்றும் பேசாமல், அவனது கையைத் தன் வயிற்றின் மீது இன்னும் அழுத்தமாக வைத்துக்கொண்டு, தன் இரு விரல்களை உயர்த்திக் காட்டி, பின் தன் வயிற்றைச் சுட்டிக்காட்டி ஒய்யாரமாகப் புன்னகைத்தாள்.

ராயனுக்கோ ஒன்றும் புரியாமல் போக, “என்னடி சைகை காட்டுற… பசிக்குதா?” என்று மரமண்டையாகக் கேட்க, அவளோ கணவனது மார்பில் செல்லமாக ஒரு குட்டு வைத்தவள்”அட மாங்கா மண்டையா! உங்க அசுர வம்சத்து வாரிசு இங்க உருவாகியிருக்குன்னு சொல்றேன்!” என்று வெட்கத்தோடு அவனது காதோரம் கிசுகிசுத்தாள்.

அந்த வார்த்தையைக் கேட்ட அடுத்த கணமே, ராயனின் களைப்பெல்லாம் பறந்தோடியது! அவனது கண்கள் அதிர்ச்சியிலும் அளவற்ற ஆனந்தத்திலும் விரிய, “அரசி… நிஜமாவாடி சொல்ற?” என்று தழுதழுத்தக் குரலில் கேட்டவன், சடாரென எழுந்திருந்து அவளை அப்படியே அள்ளியெடுத்துத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

தன் கைகளில் மிதக்கும் மனைவியையும், அவளது வயிற்றில் வளரும் தன் குருதியையும் மாறி மாறிப் பார்த்தவனின் நெஞ்சில் காதலும் பேரன்பும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. இத்தனை நாளாகக் காடெல்லாம் அலைந்து திரிந்த அந்த அசுரனின் கரடுமுரடான குணம், அவளது ஒற்றைப் புன்னகையில் பஞ்சாகப் பறந்துபோனது.

மனைவியின் முகத்தைத் தன் இரு கைகளிலும் ஏந்தியவன், அவளது நெற்றியிலும் கன்னங்களிலும் பேரன்போடு தன் எச்சில் முத்தங்களைப் பொழிந்தபடி, “வறண்ட பாறைக்குள் ஒர் பனித்துளி விழுந்த போல இந்த முரட்டுப் பயலுக்கு ஏத்த பஞ்சவர்ணக் கிளி நீ தான் டி அரசி!” என்றவனின் கரகரத்த கம்பீரக் குரலில், காதலும் நெகிழ்ச்சியும் ததும்பியது.

மனைவியின் கூந்தலை மெல்லக் கோதியபடி, “அன்னைக்கு என் முதல் திருமணம் அப்படி பாதியில நின்று போன உடனே… சொந்த பந்தங்கள், ஊர்காரனுங்கன்னு வந்து, ‘பையனுக்கு உடனே வேற இடத்துல மறுமணம் முடிச்சு வச்சிருங்க’ன்னு ஆளாளுக்குப் புத்திமதி சொன்னானுங்கடி… ஆனா இந்த ராயனின் மனசு மட்டும் ‘இல்லடா… உன் அரசி கண்டிப்பா உன்னைத் தேடி வருவா’ன்னு அடிச்சுச் சொல்லிட்டே இருந்துச்சுடி”

பின்னர் அவளது கன்னத்தை மெல்லக் கிள்ளி, மீசையோரக் கள்ளச் சிரிப்போடு, “அதேபோலவே வந்து… இந்த முரட்டு பீசை உன் சேலை முந்தானையில முடிஞ்சு வச்சுத் தூக்கிட்டீயேடி!” என்று சத்தமாகச் சிரித்தான்.

கணவனது அந்தப் பேச்சிலும், அதில் நிறைந்திருந்த மாறாத காதலிலும் எழிலின் விழிகள் மீண்டும் பனித்தன.”போங்க உங்களுக்கு எப்பவும் ஒரே குறும்புதான்!” என்று செல்லமாகச் சிணுங்கியபடி அவனது மார்பில் மீண்டும் தன் முகத்தைப் புதைத்துக்கொள்ள,ராயன் அவளது முகத்தைத் தன் கரங்களில் ஏந்தி, அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தபடி கனிவான குரலில் பேசத் தொடங்கினான்.

“முதல் திருமணம் தோத்துப்போனாலோ இல்லை பாதியில நின்னு போனாலோ… அதோட வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு அர்த்தமில்லடி. சொந்தக்காரனுங்க, ஊர்க்காரனுங்க சொல்ற மாதிரி வாழ்க்கைங்கிறது ஒரு தடவை தடம் புரண்டா அத்தோட முடிஞ்சு போற விஷயம் இல்ல…”

“நம்ம சமூகத்துல, குறிப்பா நம்ம ஊர் பக்கம் ஒரு கல்யாணம் தப்பாயிட்டா, ‘அவ்வளவுதான் இனி வாழ்க்கை போச்சு’ன்னு பொண்ணையும் சரி, ஆம்பளையையும் சரி வாழ விடாம மனசளவுல கொன்னுடுறாங்க. சொந்தக்காரனுங்க, ஊர்க்காரனுங்கன்னு ஆளாளுக்கு ஏதேதோ பேசி, காயப்பட்ட மனசுல மேலும் மேலும் ஈட்டியை இறக்குவாங்க…”

“முதல் வாழ்க்கையில பிழைகள் இருக்கலாம், கசப்புகள் இருக்கலாம்… ஆனா அதையே நினைச்சுக்கிட்டு வாழ்க்கையை வாழாம விட்டுடக் கூடாது.நம்ம மனசுக்கு பிடிச்ச, நம்மள புரிஞ்சுகிட்ட ஒருத்தரோட மறுபடியும் வாழ்க்கையைத் தொடங்குறதுல எந்தத் தவறும் இல்ல. காயப்பட்ட மனசுக்கு அன்பான ஒரு ஆளு துணையா வரும்போது, அந்த பழைய காயம் எல்லாமே தானா மறைஞ்சு போகும். அப்படி மறுபடியும் கிடைக்கிற வாழ்க்கை, முதல்ல இருந்ததை விடவும் ரொம்ப அழகாவும், அர்த்தமுள்ளதாவும் மாறும்…”

பழைய கசப்புகளை எல்லாம் மறந்து, ‘நமக்கும் ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு’ன்னு தைரியமா அடுத்த அடியை எடுத்து வைக்கணும். மறுபடியும் கிடைக்கிற அந்த வாழ்க்கையிலதான் அன்போட மதிப்பும், துணையோட அருமையும் முதல்ல இருந்ததை விட பல மடங்கு அதிகமா புரியும்.

“காயப்பட்ட ரெண்டு மனசுகள் ஒன்னு சேரும்போது, அந்த வாழ்க்கை ரொம்பவே அழகாகவும் அர்த்தமுள்ளதாவும் மாறிடும்…”

அன்னைக்கு மனசுல விருப்பமே இல்லாம, ஏதோ கடமைக்குன்னு தாலி கட்டிட்டு வந்து நின்னப்ப… அந்தப் பொண்ணு செம்பா சொன்ன வார்த்தை என் நெஞ்சுல இடியா இறங்குச்சுடி. ‘இனி இதுதான் நம்ம வாழ்க்கை’ன்னு என்னையே நான் தேத்திக்கிட்டு வந்தப்ப, அவ இன்னொருத்தனை விரும்புறேன்னு சொன்ன நொடியில என் மானமும், கௌரவமும் சுக்குநூறா உடைஞ்சு போச்சு.

“ஊர் பஞ்சாயத்துல நின்னு தாலியை அவிழ்த்துக் கொடுத்தப்ப… இந்த ராவணன் உயிரோட செத்துப்போயிட்டான்டி!”என்றவனின் குரல் தழுதழுக்க, எழிலின் கைகளைப் பிடித்துத் தன் நெஞ்சின் மீது அழுத்தமாக வைத்துக்கொண்டவன் ஆனா… இந்த செத்துப் போன ராயனுக்கு மறுபடியும் உயிர் கொடுத்து, வாழக் கத்துக் கொடுத்தது என் அரசி நீ மட்டும்தான்டி!

“சொந்தக்காரனுங்க ‘இரண்டாவது கல்யாணம்’ பண்ணிக்கோன்னு சொன்னப்பெல்லாம் என் மனசுக்குள்ள உன்னோட நினைப்பு மட்டும்தான்டி ஓடிட்டு இருந்துச்சு…..”

“என் மனசு அடிச்சுச் சொன்ன மாதிரி, நீ என்னைத் தேடி வந்த பிறகுதான் இந்த முரட்டு பயலுடைய வாழ்க்கையே பூரணமாச்சு. என் காயத்துக்கெல்லாம் மருந்தா வந்த” என்றபடி மெல்லக் குனிந்து, அவளது  நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்தான்.

அந்த முத்தத்தில் பழைய காயங்களின் ஆறாத வலியும், அதை ஆற்றிய அவளது அன்பிற்கான நன்றியும் முழுமையாகக் கலந்திருந்தன.முத்தத்தை முடித்து மெல்ல விலகியவன், அவளது கண்களைப் பார்த்தபடி, ‘என் இதயத்துல மீண்ட முதல் ராகமும் நீதான்டி… எனக்கு அமைஞ்ச இரண்டாவது ராகமும் நீ மட்டும்தான்டி !’ இந்த ராயனுடைய முதலும் நீதான்… முடிவும் நீதான்டி!” என்று நெகிழ்ச்சியோடு சொன்னான்.

கணவனது அந்த ஆழமான, தெளிவான சிந்தனையும் பேரன்பும் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட எழிலுக்கு, தன்னவனை நினைத்து பெருமிதத்தில் நெஞ்சம் பூரித்தது. அவனது அகன்ற மார்பில் தன் முகம் புதைத்து, அந்தப் பேரன்பின் வெதுவெதுப்பில் தன்னை முழுமையாகத் தொலைத்தாள்.

இரவின் அமைதியில், ஜன்னல் வழியே வீசிய தென்றல் காற்று அந்த மாடி அறையை முழுமையாகத் தழுவிச் சென்றது. கரடுமுரடான மனமும் முரட்டுத்தனமான வாழ்க்கையுமாய் வாழ்ந்த கானகத்து அசுரன் ராயனை, தன் எல்லையற்ற அன்பால் ஆட்கொண்டு, அவனை முற்றிலும் ஒரு காதலனாக மாற்றிவிட்ட எழிலின் காதல் அங்கே வென்று நின்றது.

சமுதாயத்தின் கேள்விகளுக்கும், மனசாட்சியின் சாட்டையடிகளுக்கும் அப்பால்… தங்கள் குலதெய்வம் மலையம்மனின் ஆசியோடு இணைந்த அவர்களின் இந்தத் தூய்மையான பந்தம், இன்று முழுமை அடைந்திருந்தது.

ராயனின் கரடுமுரடான கைகள் எழிலின் வயிற்றை மென்மையாக வருடித் தடவ, அவனது மார்பில் சாய்ந்தபடி எழில் தன் விழிகளை மூடி அந்தத் தருணத்தைச் ரசித்துக் கொண்டிருந்தாள். தங்களின் ஆழமான காதலின் சாட்சியாய், அவர்களின் வாரிசு அவளுள் உயிர்பெற்று வளர்வதை இருவரின் இதயத் துடிப்புகளும் உணர்த்தின.

சூழ்நிலைகளும் விதியும் போட்ட முடிச்சுகளையெல்லாம் தாண்டி, பேரன்பும் உண்மையான காதலும் எப்போதுமே வெல்லும் என்பதற்குச் சான்றாக… அந்த அசுரனும் அவனது அரசியும் தங்கள் வாரிசை வரவேற்கும் பேரன்போடு, ஒரு புதிய அழகான வாழ்க்கையின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்தனர்.

– சுபம் –

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!