Stories that touch hearts

Home  /  14. ஹீரா நிலவன் (சக்தியின் சிவன்)  /  Chapter 1

CHAPTER 1

சக்தியின் சிவன் – 1

By Heera Nilavan · November 11, 2026

0

ஹீரா நிலவனின்

சக்தியின் சிவன்

அத்தியாயம் – 1

நாமக்கல்லில் இருக்கும் அந்த காவல் நிலையத்தில், தன் இரு குழந்தைகளையும் நகரவிடாது அருகில் நிறுத்தி, தலைகுனிந்து நின்றிருந்தான் அவன்.

தலைகுனிந்து நிற்க வேண்டியவளோ, தலைநிமிர்ந்து தெனாவட்டாய் நின்றிருந்தாள். அருகில் அவளை விட ஐந்து வயது இளைய ஆடவன் ஒருவன் நின்றிருந்தான்.

தகப்பனின் கையை உதறிய பிள்ளைகளோ, தாயிடம் சென்று, “அம்மா ரெண்டு நாளா எங்க போயிட்டீங்க? வாங்கம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம். அப்பா நீங்க சித்தி ஊருக்கு போனதா சொன்னாங்க. ரெண்டு நாள்ல வந்துடுவீங்க சொல்லி சொன்னாங்க. ஆனா நீங்க இங்க நிக்கிறீங்க. எங்களோட வாங்கம்மா” என்றதும் அவள் பிள்ளைகளை விலக்கப் பார்க்க, திரும்பவும் கைபிடித்த பிள்ளைகள், “ஏம்மா எங்க கூட வரமாட்டேன் சொல்லுறீங்க? வாங்கம்மா போலாம்” என்று அழைத்தனர்‌.

பிள்ளைகளை தன்னிடம் இருந்து வேகமாக விலக்கி, “நான் இனி வரமாட்டேன். இனி என்னை அம்மான்னு கூப்பிடாதீங்க. நீங்களோ, உங்க அப்பாவோ எனக்கு வேண்டாம். நான் வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்க போறேன்”‌ என்று குழந்தைகளிடம் சொல்ல,

சட்டென்று பிள்ளைகளை தன் பக்கம் இழுத்தவன், “என்ன பேசிட்டு இருக்க யோகா? குழந்தைங்களிடம் போயி இப்படி பேசிட்டு இருக்க. ரெண்டு நாளா அந்த பிள்ளைங்க உன்னை தேடி, எவ்ளோ வாடி போயிடுச்சுன்னு தெரியுமா. நீ என்னன்னா அம்மா இல்லைன்னு சொல்லிட்டு இருக்க. கொஞ்ச நேரம் அமைதியா நில்லு என்று எச்சரித்து, தாயிடம் செல்ல துணிந்த பிள்ளைகளை இழுத்து தன்னோடு வைத்துக் கொண்டான்.

விவரம் தெரிகிற பிள்ளைகள் அதுவும் இந்த காலத்து பிள்ளைகளுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். தாயின் வார்த்தையில், பிள்ளைகளின் பார்வை தற்பொழுது தாயின் மீது வித்தியாசமாக படிய, ஏற்கனவே இருந்த  ஒதுக்கம் அவர்களுக்குள் நிரந்தரம் ஆனது.

வெளியே சென்றிருந்த உதவி ஆய்வாளர் உள்ளே வர, “வணக்கம் சார்” என்றான் இதுவரை தலைகுனிந்து நின்றிருந்தவன். தலை தான் குனிந்திருந்ததே தவிர சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டு தான் இருந்திருப்பான் போல.

“இரண்டு நாள் முன்ன கேஸ் கொடுத்தது நீங்க தானே?” உதவி ஆய்வாளர் கேட்க,

“ஆமா சார். நான்தான் என் மனைவியைக் காணோம் என்று கம்ப்ளைண்ட் குடுத்திருந்தேன்.”

“என்னயா ஏட்டு, ரெண்டு பேரும் எங்க இருந்தாங்க?” என்று கான்ஸ்டபிளிடம் கேட்டார்.

“ஈரோடுல ஒரு லாட்ஜில் இருந்தாங்க சார். இரண்டு நாளும் செம ஆட்டம்போல. கூப்பிட்டா வரல. எஃப்ஐஆர் போட்டுடுவேன். அப்புறம் ஜெயில்ல தனித்தனியா தான் நீங்க ஆடனும் என்று சொல்லவும் தான் வந்திருக்காங்க” என்றார் அவர்.

அதில் திரும்பி மனைவியின் முகம் பார்த்தவன், அவள் செய்தது தவறே இல்லை என்பதுபோல் இருப்பதைக் கண்டு, பொசுங்கிய நெஞ்சை அழுத்திப்பிடித்து, “ஏன் யோகா?” என்று அடுத்து பேசும் முன்,

“சார் எங்களை எதுக்குக் கூட்டிட்டு வந்தீங்க?” அவனிடம் பேச விரும்பாது துணை ஆய்வாளரிடம் கேட்டாள் யோகா.

“ஓ… காரணம் மேடமுக்கு சொன்னால்தான் தெரியும் இல்ல. ஏன்பா கான்ஸ்டபிள்.. கூட்டிட்டு வரும்போதே இப்படி இப்படின்னு சொல்லி கூட்டிட்டு வரலாம்ல. தங்கத்துக்கு ஒன்னுமே தெரியலையாம்.” என்று நக்கலாகக் கேட்டார் உதவி ஆய்வாளர்.

“சார் தப்பே செய்தாலும் தப்பா பேசாதீங்க” என்றான்‌ அவள் கணவன்.

“அடிங்… அப்ப ஊர்மேய போனவளை அப்படியே விட்டுருக்கணும். தேடிப்பிடிச்சி குடுன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கக்கூடாது. இரண்டு பிள்ளைக்கு அம்மா மாதிரியா இருக்கா. சரியான ஐட்டம்…” என்று பல்லைக்கடித்தார்.

“சார்” என்று இருவரும் கத்த,

“கட்டுன புருஷன விட்டுட்டு இன்னொருத்தன் கூட போறவள, வேற என்ன சொல்லி கூப்பிடணும்? நீங்களே சொல்லித் தந்தா கத்துக்குறேன்” என்றார் கேலியாக.

“சார் மரியாதையா பேசுங்க” என்று அவன் சொல்ல,

“நீ பேச முடியாததை, உனக்காக தான்யா பேசுறேன். உன்னைய ஆம்பள இல்லைன்னு சொல்லவும் முடியாத அளவுக்கு, இரண்டு பிள்ளைகளையும் வச்சிருக்க. உன் பிள்ளைகள் தான? இல்ல அதையும் அவனுக்கு…” என்று கேள்விக்குறியாய் நிறுத்த,

அவர் கேட்கும் கேள்விகள், அவளுக்கு அசிங்கமாக இருந்ததோ இல்லையோ, அவனுக்கு அவமானமாக இருந்தது.

“சார் நியாயம் வாங்கி தருவீங்கன்னு தான் வந்து இருக்கேன். எனக்கு என் பொண்டாட்டி வேணும்.‌ என் பிள்ளைகளுக்கு அம்மா வேணும். அதுக்கு என்ன செய்ய முடியும் மட்டும் பாருங்க” என்றான் அவன்.

“இப்படியே உன்னைப்போல ஆளுங்க இளிச்சவாய்த்தனமா இருக்கிறதால தான், இவளை மாதிரி ஆளுங்க… இதோ நிக்கிறா பாரு… எவ்வளவு திமிரா, தெனாவெட்டா, பண்ணுனது தப்பே இல்லை என்ற முகபாவனையில் நிக்கிறா. நீ அதுக்கு எதிரா தலைய குனிஞ்சிட்டு நிக்கிற. தேவையா இப்படிப்பட்ட ஒரு உறவு? இவளை போய் கண்டுபிடிச்சு தர சொல்லி, கம்ப்ளைன்ட் கொடுத்திருக்க. இப்பவரைக்கும் அந்த குழந்தைகளுக்காக கூட அவ பாவம் பாக்கல. இப்படிப்பட்ட ஒருத்தி உனக்கு வேணுமா?” என்று கேட்டார் உதவி ஆய்வாளர்.

 “என்னிடம் எதோ பிடிக்கலை என்று தானே சார், அவனிடம் போயிருக்கா. ஆனா, நான் எனக்காக கூப்பிடல. என் பிள்ளைகளுக்கு அம்மா வேணும் சார். என் பிள்ளைங்க கௌரவமா வளரணும். அவங்கள யாரும் கைநீட்டி அசிங்கமா ஒரு வார்த்தை பேசிடக்கூடாது. அவள் வளர்ந்த இடமும் தப்பான இடம் கிடையாது. நானும் தப்பானவன் கிடையாது. நடுவுல எதோ சலனப்பட்டுட்டா. அதை நான் பெருசா எடுத்துக்கல சார். அவளை வைத்து வாழ நான் தயாரா இருக்கேன். அவளை என்னோட அனுப்பி வச்சா போதும் சார். என்றான் இறங்கிய குரலில்.

“இப்படி நீ இறங்கி போற அளவுக்கு, அவளுக்குத் தகுதி இல்லை. உடன் வாழுறவங்களுக்கும் தகுதி தராதரம் வேணும்யா.” என்றார் அவர்.

அவனுக்கும் இந்த உறவு பிடிக்கவில்லை தான். அதற்காக என்ன செய்வது? அதுவும் ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாய் இருக்கும் இரட்டைப் பிள்ளைகள் அவனை நம்பி இருக்கிறதே. அவர்களுக்காக சகித்துக்கொள்ள எண்ணித்தான் இந்த அமைதிப் பேச்சு வார்த்தை.

“சார் பேசி அனுப்புங்க. பிள்ளைங்க இந்த இடத்தில் ரொம்ப நேரமா இருக்கவேண்டாம். அவங்க மனசளவில் பாதிக்கப்படுவாங்க. ஏதோ இன்னும் என்ன நடக்குதுன்னு விவரம் புரியாம, அவங்க அம்மாவிடம் போக துடிச்சிட்டு நிக்கிறாங்க. நான் தான் இழுத்து பிடிச்சு வச்சுட்டு இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் பேசுங்க சார். விட்டுட்டு வர்றதுக்கு வீட்டுல ஆளுங்க யாரும் இல்ல. இல்லனா பிள்ளைகளை வீட்ல விட்டுட்டு வந்துருப்பேன்” என்றான் கெஞ்சலாக.

 “ஓகே. என்னால முடிஞ்ச அளவு பேசி பார்க்கிறேன். அதுக்குப் பிறகு உன்னுடைய முடிவு தான்” என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்து,  இருவரையும் எதிர் எதிர் பக்கங்கள் நிற்க வைத்து, குழந்தைகளை கொஞ்சம் தள்ளி அமரவைத்து, “இப்ப சொல்லுங்க? எப்ப எந்த நேரத்தில் ஆரம்பித்தது இந்த பிரச்சனை?” என்று அவனிடம் கேட்க,

“நாலு வருஷம் இருக்கும் சார். அப்பதான் எங்க வீட்டுக்கு பக்கத்துல இவன் குடி வந்தான். அப்போதான் புதுசா கல்யாணம் முடிச்சி வந்தான். இவளை அக்கான்னு சொல்லிதான்‌ பேசுவான். சந்தேகப்படத் தோணலை சார் எனக்கு. அக்கா தம்பி உறவு எவ்வளவு புனிதமானது என்று தெரியாதவன் இல்ல நான். அப்படிப்பட்ட உறவை நாம சந்தேகப்பட முடியாது இல்ல சார்.”

“சின்ன சின்ன வேலைகளா பார்த்துக் கொடுக்க ஆரம்பித்தான் சார். அதாவது கரண்ட்பில் கட்டுறது. ஸ்கூல்ல திடீருனு பிள்ளைங்க யாருக்காவது உடம்பு சரியில்லனா, ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வருவது.. ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சினா, பக்கத்துல இருக்கிறதால உதவி பண்ணுறது அப்படின்னு, ஒரு கூட பொறந்தவன் அங்க இருந்தா எப்படி செய்வானோ அதே மாதிரி செய்தான் சார். ஆனா சின்ன சின்ன வேலை அவ்வளவு பெரிய வேலையில வந்து நிக்கும் என்று, நான் நினைக்கவே இல்ல சார்.”

“ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் சார், இவங்களோட உறவு தெரிஞ்சுது. அப்பவே வார்ன் பண்ணுனேன். தப்பு செஞ்ச முதல் டைம் கொஞ்சம் பயம் இருக்கதானே சார் செய்யும். அதன் பிறகு, கொஞ்சம் விலகி இருந்தாங்க. இப்ப திரும்பவும் அந்த உறவு ஆரம்பிச்சிருக்கு. அவளை பேசி அனுப்புங்க சார். நாங்க வேற ஊருக்குப் போயிடுறோம்.” என்றான் அவன்.

“ஹ்ம்… அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சி உறவு வச்சிக் கூப்பிடுறது, உங்க இல்லீகல் வேலைக்கு ஈஸியா இருக்குல்ல. சரி நீ சொல்லு? உன் புருசனிடம் என்ன குறை என்று இவனிடம் போன?” என்று கேட்டார் உதவி ஆய்வாளர்.

அந்நேரம் அங்கு வேகமாக வந்து நின்ற பெண்ணைக் கண்டு, சில நொடி தடுமாறினாள் யோகா.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!