கீதா அவனைப் பார்த்து சிரித்து, “அதுக்குள்ள ஆப்பு வந்துடுதா மாப்பிள்ளை?”
“ம்…” என்று பாவமாக தலையசைக்க,
ரேஷ்மா நேராக கொடிவீரனைப் பார்த்து, “ஹேய் டார்லிங்… ஹவ் ஆர் யூ?” என்க,
“ஃபைன், ரேஷ்மா. உள்ள வாங்க.”
மகிழினியும் இயல்பாக, “வாங்க. எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“ஃபைன். நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கோம்.”
வேணு உடனே, “இதுவரைக்கும் எல்லாரும் நல்லாதான் இருக்கோம்.” என்று சொல்ல, பாட்டி அவனை அடக்கினார்.
“வேணு… கொஞ்சம் சும்மா இரு.”
“நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்.” என்று மகிழினி எழுந்தாள்.
“இல்ல, இல்ல… வேணாம். நான் வந்த விஷயத்தைச் சொல்லிட்டு போயிடுறேன்.”
கீதா ரேஷ்மாவின் கையில் இருந்த பூங்கொத்தைப் பார்த்து, “என்னமா… கையில பூ எல்லாம் கொண்டு வந்திருக்க? யாருக்கு இது?”
“வேற யாருக்கு? கண்டிப்பா மாமாவுக்குத்தான் இருக்கும்.” வேணு இடையிட,
வேணுவின் கிண்டலைக் கேட்டு ரேஷ்மா சிரித்து, “நோ… நோ. இது சிஎம்க்கு.” எனவும் மகிழினி குழப்பமாகப் பார்த்தாள்.
“ஐ மீன்… சித்ரமகிழினிக்கு.” என்றாள்.
“எனக்கு எதுக்கு?”
“ஆக்சுவலி… நான் உங்ககிட்ட பேசத்தான் வந்தேன். இஃப் யூ டோன்ட் மைண்ட்… நான் கொஞ்சம் தனியா பேசலாமா?”
வேணு உடனே, “ஹாங்… நீங்க வந்த வழியே வெளியே போய் தனியா பேசிட்டு வாங்க.”
ரேஷ்மா அவனை முறைத்து, “ப்ச்… அது இல்ல சோட்டா. நான் உன் அத்தைகிட்ட தனியா பேசணும்.”
“என்கிட்டயா?”
“ம்.”
கொடிவீரனின் முகம் உடனே மாறியது. “என் மிஸஸ்கிட்ட நீங்க என்ன ரேஷ்மா தனியா பேச இருக்கு?” என்றான் உடனே.
“அது எங்களுக்குள்ள இருக்குற சீக்ரெட். நீங்க அதுல தலையிடாதீங்க.”
அவள் மகிழினியைப் பார்த்து, “மகிழ்… நீங்க சொல்லுங்க. என்கூட உங்களால பேச முடியுமா, இல்லையா?”
“பாப்பா… என் பேத்திகிட்ட பேச உனக்கு என்னமா இருக்கு?”
பாட்டியின் கேள்விக்கு ரேஷ்மா, “அதை நான் உங்க பேத்திகிட்ட சொல்லிக்கிறேன்.” என்றாள்.
கீதா உடனே, “இல்ல, இல்லம்மா. நீ எப்போ வந்தாலும் ஏதாவது ஏழரை எடுத்துட்டு வர. சோ… நீ எங்க பொண்ணுகிட்ட எல்லாம் ஏதும் பேச வேண்டாம்.”
“அம்மா… இருங்க. ரேஷ்மா, நீங்க வாங்க. நம்ம மாடிக்குப் போய்ப் பேசலாம்.” மகிழினி அவரை அமைதிப்படுத்தி ரேஷ்மாவிடம் சொன்னாள்.
“ஏங்க… நீங்க ஏன் இவங்களைத் தனியா அழைச்சிட்டுப் போய்ப் பேசுறீங்க?” கொடிவீரனின் குரலில் சந்தேகம்.
“நம்ம வீடு தேடி வந்து, அவங்க என்கிட்ட பேசணும்னு சொல்லுறாங்க. என்னன்னுதான் கேட்டுட்டு வரேனே.”
“தேங்க்ஸ், மகிழ்.”
“இட்ஸ் ஓகே. வாங்க… மாடிக்குப் போகலாம்.”
மகிழினியும் ரேஷ்மாவும் மாடிக்குச் சென்றனர். அவர்கள் இருவரும் எதைப் பற்றிப் பேசப் போகிறார்கள் என்று புரியாமல் கீழே இருந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
மாடிக்குச் சென்றதும், ரேஷ்மா தன் கையில் இருந்த பூங்கொத்தை மகிழினியிடம் நீட்டி, “ஃபர்ஸ்ட்… நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன்.” என்றாள்.
“ஃபார் வாட்?”
“லாஸ்ட் டைம் நான் கொஞ்சம் ஓவரா பிஹேவ் பண்ணிட்டேன். ஐ ஆம் ரியலி சாரி ஃபார் தட்.”
“இட்ஸ் ஓகே.”
“ப்ளீஸ்… இந்தப் பூவை வாங்கிக்கோங்க.”
மகிழினி பூங்கொத்தை வாங்கிக்கொண்டாலும், அவளுடைய பார்வை ரேஷ்மாவை விட்டு விலகவில்லை. “ம்… பட், நீங்க இந்தப் பூவை என்கிட்ட கொடுக்கறது மட்டும் காரணமா இருக்கிற மாதிரி எனக்குத் தெரியல. சொல்லுங்க… என்ன பேசணும்?”
ரேஷ்மா சற்றே புன்னகைத்தாள். “ஓ… நீங்க சூப்பர். நான் சொல்ல வந்ததை நீங்க சரியா கண்டுபிடிச்சிட்டீங்க.”
“நோ நோ. நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு எந்த ஐடியாவும் இல்ல. சோ… நீங்களே சொல்லுங்க.”
“மகிழ்…” ரேஷ்மாவின் குரல் மெதுவானது.
“என் அண்ணனுக்கு நெக்ஸ்ட் வீக் கல்யாணம். பொண்ணு உங்க ஃப்ரண்ட் மீனாதான்.”
“ம்… எனக்குத் தெரியும்.”
“அண்ணன் கல்யாணம் முடிஞ்ச கையோடு, எனக்கும் அப்பா மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொல்லி என்னை ரொம்ப பிரஷர் பண்ணுறாரு.”
“ம்… அதுக்கு நான் என்ன பண்ணும்? உங்களுக்கு நான் ஏதாவது அலையன்ஸ் பார்த்துச் சொல்லணுமா?”
“ம்… சொல்லணும் தான். ஆனா, அதுக்கு முன்னாடி உங்க மனசுல இருக்குறதை நீங்க என்கிட்ட இப்போ தெளிவா சொல்லணும்.”
“புரியல.”
ரேஷ்மா சில நொடிகள் அமைதியாக இருந்தாள். “கொடிவீரன்… லைஃப்ல நீங்க வரதுக்கு முன்னாடியே நான் அவரை லவ் பண்ணிட்டேன்.”
“ம்… தெரியும்.”
“பட்… அவரு என்னென்னமோ ரீசன் சொல்லி என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாரு.”
“ஓஹோ…”
“தென்… அவருக்கும் உங்களுக்கும் எப்படிப்பட்ட சூழ்நிலையில மேரேஜ் ஆச்சுன்னு அன்னைக்கு நீங்க என் ப்ரோ ஜீவாகிட்ட சொல்லி, உங்களுக்கும் வீராக்கும் டிவோர்ஸ் கேட்டீங்க இல்ல?”
மகிழினி அமைதியாக இருந்தாள்.
“அந்த நொடியில இருந்து… மறுபடியும் எனக்கு வீரன்கூட வாழ ஒரு வாய்ப்பு கிடைச்ச மாதிரி ஃபீல் ஆகுது.”
“ஓஹோ…”
“நீங்க அன்னைக்கு சொன்னது போலவே, கண்டிப்பா எந்த சூழ்நிலை வந்தாலும் வீராவை டிவோர்ஸ் பண்றதுல உறுதியா இருந்தீங்கன்னா… நான் அவருக்காக வெயிட் பண்ணுவேன்.” அவள் சிறிது தயங்கி சொன்னாள்.
மகிழினியின் புருவங்கள் உயர்ந்தன.
“ஐ நோ… உங்ககிட்ட நான் இப்படி எல்லாம் பேசக்கூடாதுதான். பட்… என் ஃபீல் உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.”
“இப்ப நான் என்ன பண்ணணும்?”
“நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரணும்.”
“என்னன்னு?” என்று சாதாரணமாகவே கேட்டாள்.
“நீங்க வீராவை கண்டிப்பா ஆறு மந்த்ஸ்ல… இல்லன்னா ஒரு இயர்ல… டிவோர்ஸ் பண்ணிடுவீங்கன்னு.”
மகிழினியின் முகம் இறுக, “நான் ஏன் உங்களுக்கு சத்தியம் பண்ணித் தரணும்?” என்று கேட்டாள்.
“நீங்க அப்படி சத்தியம் பண்ணித் தந்தா, நான் அவருக்காக ஒன் இயர் கண்டிப்பா வெயிட் பண்ணுவேன்.”
“லிசன் ரேஷ்மா… உங்க காதல், கத்திரிக்கா கதை எல்லாம் எனக்கு வேணாம்.” அவளுடைய குரல் இப்போது தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது. “அண்ட்… ஆப்டர் ஒன் இயர் எனக்கும் கொடிவீரனுக்கும் எப்படிப்பட்ட ரிலேஷன் இருக்கப்போகுதுன்னு உங்ககிட்ட ப்ராமிஸ் பண்ண வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல.”
ரேஷ்மாவின் முகம் சற்றே வாடியது.
“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நான் டிவோர்ஸ் கொடுத்தாக்கூட… அவர் அதை அக்செப்ட் பண்ண மாட்டாரு.”
ரேஷ்மா ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“அண்ட்… அதை விட இன்னொரு முக்கியமான விஷயம்… கேவி என்னை லவ் பண்ணுறாரு.”
“ஐ நோ, மகிழ். பட்… நீங்க அவரை லவ் பண்ணலை தானே?”
மகிழினி அவளை நேராகப் பார்த்தாள்.
“சொல்லுங்க மகிழ்… உங்களுக்கு வீராவைப் பிடிக்கல தானே?”
“எனக்கு அவரைப் பிடிக்குமா, பிடிக்காதான்னு உங்ககிட்ட சொல்ற அளவுக்கு நீங்க எனக்கு க்ளோஸ் இல்ல, ரேஷ்மா.”
ரேஷ்மா பெருமூச்சுவிட்டாள்.
“லிசன் மகிழ்… வாழ்க்கை ரொம்ப அழகானது. நாம வாழற காலமும் ரொம்பக் குறுகிய காலம்தான்.”
“ஆமா. யாரு இல்லைன்னு சொன்னது?”
“அப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்களும் வாழாம, என்னையும் வாழ விடாம ஏன் இப்படி எங்களுக்கு நடுவுல நந்தி மாதிரி இருக்கீங்க?”
மகிழினியின் முகம் உடனே மாறியது. அதை மறைத்து, “ஹலோ… மைண்ட் யுவர் வேர்ட்ஸ். என்னை விட்டா ரொம்ப பேசுறீங்க. உங்க வாழ்க்கைக்கும் எங்க வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனக்கும் கேவிக்கும் மேரேஜ் முடிஞ்சிடுச்சு. இந்த மேரேஜ் லைஃப்ல நாங்க நெக்ஸ்ட் எப்படி மூவ் பண்ணப் போறோம்னு முடிவு பண்றது எங்களோட விஷயம். சோ… மூணாவது ஆளா நீங்க வந்து எங்க பெட்ரூமை எட்டிப் பார்க்குறது எனக்குப் பிடிக்காது.” என்றவளுடைய குரல் இப்போது எச்சரிக்கை கொடுத்தது.
“இல்ல மகிழ்… உங்களுக்கு நான் சொல்ல வர்றது புரியலையா?”
“எனக்கு புரிய வேண்டிய அவசியம் இல்ல, ரேஷ்மா. மேற்கொண்டு ஏதாவது பேசணும்னா, நீங்க உங்க டார்லிங்க்கிட்ட போய்ப் பேசுங்க.”
“என் லவ்வ அவரு புரிஞ்சிக்கல, மகிழ்.”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்றாள் அலட்சியமாக.
“ஓகே மகிழ். உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டீங்க. இட்ஸ் ஓகே.” என்றவளுடைய குரலில் மீண்டும் ஒரு பிடிவாதம் வர, “நான் வீராவோட அம்மாவை மீட் பண்ணிப் பேசிக்கிறேன்.” எனவும் மகிழினியின் கண்களில் கோபம் மின்னியது.
“ஆக்சுவலி… நான் என்னோட காதலை வீராக்கிட்ட சொன்னதுக்குப் பதிலா, அவங்க அம்மாகிட்ட சொல்லியிருந்தா… இந்நேரம் நீங்க இருக்குற இந்த இடத்துல நான் இருந்திருப்பேன்.”
மகிழினி அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள்.
“இட்ஸ் ஓகே. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. என் அண்ணன் மேரேஜ் முடிஞ்சதும், நானே வீரா அம்மாவை மீட் பண்ணி இதைப் பற்றிப் பேசுறேன்.”
“ரேஷ்மா… நீங்க தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணாதீங்க. கேவி அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது.”
“இதுவரைக்கும் தெரியலன்னா என்ன? இனி தெரிஞ்சிக்கட்டும்.” மகிழினி அவளை முறைக்க, “தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன்னு நீங்க பிடிக்கிற பிடிவாதத்துக்கு என் வாழ்க்கையை நான் வீணாக்க முடியாது.”
“ஏய்… எனக்கும் கேவிக்கும் நடுவுல உன் வாழ்க்கையை நீ ஏன் கொண்டு வந்து லிங்க் பண்ற?”
“நீங்கதான் அவர்கிட்ட டிவோர்ஸ் கேட்டுட்டீங்க இல்ல? நீங்க உங்க வேலையைப் பாருங்க, மகிழ். நான் எப்படி, எங்க, என்ன பண்ணணுமோ அதை பண்ணி… என்னோட வீராவை எனக்குச் சொந்தமாக்குறேன்.” ரேஷ்மாவின் குரலில் இப்போது சவால்.
“நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க. ஆனா, முந்திரிக்கொட்டை போல கேவி அம்மாகிட்ட இந்த விவாகரத்து விஷயத்தைப் பற்றி எல்லாம் சொல்லி வச்சீங்கன்னா… நான் உங்களைச் சும்மா விட மாட்டேன். சொல்லிட்டேன்.”
“ஏன் மகிழ்? ஆறு மந்த்ஸ்க்கு அப்புறம் வீரா உங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டா… அது அவங்க அம்மாவுக்குத் தெரியாமலா போகப்போகுது?”
“அது தெரியும்போது தெரியட்டும். நீங்க உங்க வேலையைப் பார்த்துட்டு முதல்ல கிளம்புங்க.”
ரேஷ்மா அவளை ஆழமாகப் பார்த்தாள். “இனி என் வேலையே இதுதான், மகிழ்.” அவள் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகச் சொன்னாள்.
“ஒண்ணு… நீங்களும் வீராவும் ஒண்ணா சேர்ந்து வாழ ஆரம்பிங்க. இல்லைனா… ப்ளீஸ், நீங்க ஒதுங்கிக்கோங்க. நானும் அவருமாவது எங்க வாழ்க்கையை நல்ல முறையில ஆரம்பிச்சிக்கிறோம்.”
மகிழினி கேலியாகச் சிரித்தாள். “ஆமா… ஆமா… நீங்க சொன்னதும் ஆரம்பிக்கத்தான் கேவி காத்துக்கிட்டிருக்காரு பாருங்க. அவரு எல்லாம் கட்டின பொண்டாட்டி என்கிட்டயே டிஸ்டன்ஸ் கீப் பண்ணுறவரு. சோ… உங்க டார்லிங் டக்காளி வேலை எல்லாம் அவர்கிட்ட வச்சிக்காதீங்க.”
“ஹேய் மகிழ்… பேபி, ஆர் யூ ஜோக்கிங்?” என்று ரேஷ்மா நம்பிக்கையுடன் சிரித்தாள்.
“எந்த ஒரு ஆம்பளையா இருந்தாலும், அன்புக்கும் காதலுக்கும் மட்டும்தான் அடங்கிப் போவான். அப்படி அன்புக்கும் காதலுக்கும் அடங்குறவன்தான் உண்மையான ஆம்பளையும் கூட. இன்னைக்கு உங்க மேல வீராவுக்கு இருக்குற காதலாலதான் அவரு உங்களைச் சுற்றி வரலாம். ஆனா, இப்படியே நீங்க அவரை அவாய்ட் பண்ணிக்கிட்டே இருந்தா… கண்டிப்பா அவரை உயிரா லவ் பண்ற என்மேல அவரோட பார்வை திரும்பும்.” அவள் குரலில் அவ்வளவு தன்னம்பிக்கை.
மகிழினி பதில் சொல்லவில்லை.
ரேஷ்மா கடைசி அம்பையும் எய்தாள். “அதுவும் இல்லாம… என் அண்ணன் கல்யாணத்துக்கு நீங்க வரலன்னு எங்க மீனா அண்ணிக்கிட்ட சொல்லியிருக்கீங்க. பட்… வீரா வருவாருன்னு என் அண்ணன் சொல்லிருக்காரு. சோ… அந்த நேரத்தைப் பயன்படுத்தி கண்டிப்பா வீரா மனசுல இடம் பிடிக்குறேன். அதுக்கப்புறம் நீங்க ஒன் இயர் எல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்ல. அவரே உங்களுக்கு மியூச்சுவல் டிவோர்ஸ் கொடுத்துடுவாரு. பாருங்க.”
மகிழினி அவளை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள். பிறகு அந்தப் பூங்கொத்தை அவளுடைய கைகளில் திரும்பக் கொடுத்து, “ட்ரை யுவர் லெவல் பெஸ்ட். நீங்க பண்ணப் போற கேவலமான காரியத்துக்காக கொண்டு வந்த இந்த மலர்கொத்தை நான் உங்களுக்கே திரும்பத் தரேன். சோ… இதை எடுத்துக்கிட்டு நீங்க கிளம்புங்க.” பூங்கொத்தை ரேஷ்மாவின் கையில் திணித்துவிட்டு, மகிழினி வேகமாக மாடிப்படிகளில் இறங்கி கீழே சென்றாள்.
ரேஷ்மா அவள் செல்வதையே பார்த்தபடி, உதட்டில் ஒரு கேலிப் புன்னகையைப் பூத்துக்கொண்டாள்.
கீழே இருந்த கொடிவீரன், வேணு, கீதா, பாட்டி—நால்வரும் ஏதும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“அத்தை… இவங்க ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் என்ன பேசுனாங்க? சிஎம் வேற ரொம்ப கோவமா ரூமுக்குப் போயிருக்காங்க.”
கீதா தோளைக் குலுக்கினாள். “தெரியலையே மாப்பிள்ளை. வாங்க… போய் என்னன்னு கேப்போம்.”
“ப்ச்… வேணாம் அத்தை.” கொடிவீரன் சற்றே யோசித்தபடி சொன்னான்.
“நம்மகிட்ட சொல்லக்கூடிய விஷயமா இருந்திருந்தா, அவங்களே சொல்லியிருப்பாங்க.”
வேணு உடனே, “மாமா… வேணும்னா நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரவா?”
கொடிவீரன் சிரித்தான். “உன் அத்தைகிட்ட அடி வாங்க உனக்குத் தெம்பு இருக்கா?”
“வேணாம் மாமா. நமக்கு ஏன் பொம்பளங்க விஷயம்? வாங்க… நம்ம போய் புக் படிக்கலாம்.”
“ம்… நீ தேறிட்ட டா.” சிரித்தபடி வேணுவின் தோளில் கை போட்டவன்,
“சரி வா… நம்ம மாடிக்குப் போகலாம்.” என்று அழைத்துச் சென்றான்.
மாடிக்கு வந்த மகிழினி, தன் அறையில் தனியாக அமர்ந்திருந்தாள். ரேஷ்மா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளுடைய மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. தனக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டிருந்தாலும்… அந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அவளுடைய மனதில் மீண்டும் மீண்டும் தோன்றியது ஒரே ஒரு விஷயம்தான். ‘ஆறு மாதத்தில் தனக்கு விவாகரத்து வேண்டும்.’ அந்த எண்ணத்தை மட்டும் அவளால் இன்னும் விட்டுவிட முடியவில்லை.
ரேஷ்மாவும் மகிழினியும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை எள்ளளவும் கேவி அவர்களிடம் கேட்கவில்லை. அப்படியே ஐந்து நாட்கள் கடந்தன.
அன்றைய தினம், ஜீவாவின் திருமணத்திற்காகத் தன் காரில் பெங்களூரு செல்ல முடிவு செய்திருந்த கொடிவீரன், தன் பேக்கை காரில் வைத்துக்கொண்டிருந்தான். பின் சீட்டில் ஏற்கனவே மாப்பிள்ளை கணக்கில் வேணு அமர்ந்திருந்தான்.
அவனைப் பார்த்த கொடிவீரன் புருவத்தை உயர்த்தினான்.
“ஏய்… என்னடா? நீயும் என்கூட பெங்களூரு வரியா?” என்றதும் வேணு சிரித்தான்.
“நான் மட்டும் இல்ல மாமா… கொஞ்சம் அக்கட ச்சுடுங்க.” என்று கைநீட்ட,
“என்னடா சொல்ற?”
அந்த நொடியே…
“சுடிதார் அணிந்து வந்த சொர்கமே…” என்ற பாடலின் வரிகள் கொடிவீரனின் காதுகளில் மட்டும் ஒலிப்பதைப் போல இருந்தது.
அவனுடைய பார்வை தன்னிச்சையாக அந்தத் திசையை நோக்கித் திரும்பியது. மாறுபட்ட உடையில் அழகுக்கு அழகு சேர்த்தவளாக, அவனுடைய சிஎம் அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள்.
காரை நெருங்கியவள், எதுவுமே நடக்காததுபோல உரிமையுடன் முன் இருக்கையில் அமர்ந்து, சீட் பெல்ட்டை அணிந்துகொண்டாள்.
கொடிவீரன் இன்னும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது—
“வெயிட்… வெயிட்… வெயிட்! ஐ ஆம் ஆல்சோ ஜாயிண்ட் வித் யூ!” என்ற இன்னொரு பெண்ணின் குரல் அவர்களுக்குப் பின்னால் கேட்டது.
அந்தக் குரலைக் கேட்ட கொடிவீரன் உட்பட அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் அந்தத் திசை நோக்கித் திரும்பியது…
அங்கு வந்த கீதா அவர்களுடன் காரில் ஏற,
“இங்க என்ன நடக்குது? நீங்க எல்லாம் எங்க வரீங்க? சிஎம் என்ன இது!? நீங்க பாட்டுக்கிட்டு வந்து காருல உக்காந்து இருக்கீங்க. ஏன் நீங்க எல்லாம் சினிமாக்கு போக போறிங்களா என்ன?” என்று கொடிவீரன் கேட்க,
“மாமா… நாங்களும் உங்க கூட பெங்களூரு வரப்போறோம்!”
வேணுவின் அந்த அறிவிப்பைக் கேட்டதும், காரை ஸ்டார்ட் செய்யத் தயாராகிக் கொண்டிருந்த கொடிவீரன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
“என்ன…!? என்கூடவா…!?”
அவனுடைய பார்வை இயல்பாகவே மகிழினியைத் தேடிச் சென்றது.
அவளோ, உதட்டின் ஓரத்தில் குறும்புப் புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.
“என்னங்க! உண்மையாவா? நீங்க அப்போ பெங்களூருக்கு வர்றீங்களா?”
கொடிவீரனின் குரலில் ஆச்சரியத்தைவிட சந்தோஷமே அதிகமாக இருந்தது.
அதை கவனித்த கீதா உடனே அவனைப் பிடித்துக் கொண்டாள்.
“ஏன் மாப்புள்ள… அதான் உங்க பொண்டாட்டி கெத்தா உங்க காருல, உங்க பக்கத்துல வந்து உக்காந்து இருக்காளே! பின்ன என்ன கேனை மாதிரி கேள்வி கேக்குறீங்க?”
“அது இல்ல அத்தை… நேத்து நைட்டு நான் எனக்கு ட்ரெஸ் எடுத்து வைக்கும் போது கூட இவங்களும் என்கூட வர்றேன்னு சொல்லவே இல்ல.”
மகிழினி உடனே அவனை நோக்கித் திரும்பினாள்.
“இப்ப என்ன? நான் உங்க கூட வர்றது உங்களுக்கு பிடிக்கலையா?”
“ஏங்க… நான் எப்போ அப்படி சொன்னேன்?”
“பின்ன ஏன் இப்படி கேள்விக்கு மேல கேள்வி கேக்குறீங்க?”
“அப்போ… உண்மையாவே நீங்க பெங்களூருக்கு வர்றீங்களா!?”
“ஆமா!”
அந்த ஒற்றை வார்த்தை அவனுடைய முகத்தில் இன்னும் கொஞ்சம் வெளிச்சத்தை கூட்டியது.
“உங்க பாட்டிகிட்ட சொல்லிட்டீங்களா?”
“ம்… ஆச்சு. ஏன்… ஜெயா அம்மா, சசி அக்கான்னு எல்லோர்கிட்டையும் சொல்லியாச்சு.”
“அப்போ எல்லாம் முன்னாடியே பிளான் பண்ணிதான் ரெடி ஆகியிருக்கீங்களா?”
“ஆமா.”
அதைக் கேட்ட வேணு உடனே முகத்தைச் சுளித்துக்கொண்டு மகிழினியிடம் கிசுகிசுப்பது போல சொன்னான்.
“அத்தை… இந்த மாமாவுக்கு நம்ம கூட வர்றது பிடிக்கல போல அத்தை. அதான் நம்மள இப்படி எல்லாம் கேள்வி கேட்டு இங்கேயே கழட்டி விடப் பார்க்குறாரு.”
மகிழினியின் பார்வை உடனே கொடிவீரனை நோக்கி திரும்பியது.
அவனோ, வேணுவைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக,
“ஐயோ சிஎம்… இந்தக் குட்டிச் சாத்தான் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க. நீங்க என்கூட வந்தா நான் ரொம்ப ஹாப்பியாதான் ஃபீல் பண்ணுவேன்.”
“ஃபீல் பண்றீங்கன்னு தெரியுது… ஆனா ஹாப்பியாவான்னுதான் தெரியல.”
“ஏங்க… இப்படி எல்லாம் கேக்குறீங்க?”
“பின்ன என்னவாம்? நாங்க காருல உக்காந்து அரை மணி நேரமாச்சு. நீங்க இன்னும் காரை ஸ்டார்ட் பண்ண பாடே இல்லையே!”
“இல்லிங்க… அது வந்து…”
“சரி… நாங்க வேணா கீழே இறங்கிக்கிறோம். நீங்க தனியா போயிட்டு வாங்க.”
“ஏங்க… ஏங்க… இருங்க!”
அவளுடைய கோபத்தை உணர்ந்தவன் அவசரமாக காரை ஸ்டார்ட் செய்தான்.
“அப்பா… என்ன கோவம் வருது உங்களுக்கு! கதவை ஒழுங்கா லாக் பண்ணுங்க அத்தை. சீட் பெல்ட் போட்டுக்கோங்க.”
அடுத்த நொடியே கார் பெங்களூரை நோக்கிப் புறப்பட்டது.
கிட்டத்தட்ட ஏழு மணி நேரப் பயணம்.
வழியில் ஆங்காங்கே காரை நிறுத்தி சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டே அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பின்னிருக்கையில் வேணுவும் கீதாவும் பாட்டு பாடியும், அரட்டை அடித்தும் வந்த களைப்பில், ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் சாய்ந்தபடியே அயர்ந்து உறங்கிப் போயிருந்தனர்.
காரை கவனமாக ஓட்டிக்கொண்டிருந்த கொடிவீரனின் பார்வையோ, அடிக்கடி தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மகிழினியைத் தேடத் தவறவில்லை.