தாயின் கோவத்தை கண்டு பதறிய சசி, “அம்மா என்னம்மா நீங்க?” என்று ஏதோ பேச வர,
தன் கரங்களை அவள் முன் காட்டி அவள் பேச்சை தடுத்து, “இவனுக்கு கல்யாணம் முடிந்துருச்சு. இவன நம்பி இப்ப ஒரு பொண்ணு இருக்கா. இன்னைக்கு எவ்ளோ முக்கியமான விஷேஷம் நடக்கப்போகுதுன்னு இவனுக்கு தெரியும் தானே. அது தெரிந்தும் இவன் வெளிய போயிருக்கான்னா, இவன் எல்லாம் என்ன மனுஷன்?”
“அம்மா”
“பேசாதடா. இனி நீ ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசக்கூடாது. உன் பொண்டாட்டியை பாருடா. வந்தவங்க எல்லாம் உன்னை எங்கன்னு கேட்கும்போது அவளுக்கு எப்படி இருந்திருக்கும். ஏதோ உங்க கல்யாணம் தான் அவசர அவசரமா முடிஞ்சுதுன்னு இந்த விசேஷத்தை நான் எப்படி எல்லாம் பார்த்து பார்த்து பண்ணும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா? ஆனா, நீ என்னடானா எவனோ உன் ஃப்ரண்ட் ஊருல இருந்து வந்து இருக்கான்னு அவன்கூட போய் கூத்து அடிச்சிட்டு வர” என்று திட்டினார் ஜெயா.
“சித்தி அவன் ஏதோ தெரியாம பண்ணிட்டான். ஏன் இப்ப இவ்ளோ கோவப்படுறீங்க?”
“நீ சும்மா இரு மாறா. உனக்கு தெரியாது என் மக கல்யாணம் இன்னைக்கு நல்லபடியா நடந்து இருக்குன்னா, அதுக்கு காரணம் சித்ரா தான். அவ எடுத்த ஒரு முடிவால தான் இன்னைக்கு சசிக்கு நல்ல மாப்பிள்ள கிடைச்சாரு. அப்படிப்பட்ட பொண்ணு சந்தோசமா இருக்கனும்னு நான் ஆசைப்பட்டு, இந்த விசேஷத்தை இவ்ளோ சீக்கிரமா ஏற்பாடு பண்ணேன்.”
“சரி இப்ப என்ன அதுக்கு? அதான் விஷேஷம் நல்லபடியா முடிஞ்சுது இல்ல. இப்ப ஏன் நீ நடுவீட்டுல நின்னுகிட்டு கத்துற?” கீதா ஜெயாவை சத்தம்போட்டார்.
“என்ன கத்துறேனா? ஏன் அண்ணி நீங்க வேற. அம்மாடி சித்ரா என் பையன் பண்ண புத்தி கெட்ட வேலைக்காக, நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்மா” என்று மருமகளிடம் மன்னிப்பு கேட்டார்.
‘ஐயோ அம்மா இப்ப என்ன நடந்துச்சுன்னு நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டு, என்னை மேலும் மேலும் பாவத்தை சுமக்க வைக்கிறிங்க.”
“நீ பாவம் சுமக்கலைமா. நான்தான் இவனை சுமந்து பாவியாகிட்டேன். வேணு பாட்டி என்னை நீங்களும் மன்னிச்சிடுங்க” என்றார்.
“ஏன் ஜெயா பெரிய வார்த்தை எல்லாம் பேசுற. எனக்கு எந்த வருத்தமும் இல்ல. கொடி தம்பி ஏதோ தெரியாம இந்த மாதிரி நடந்துகிட்டாரு. ஆனா, அவருக்கு எப்பவுமே சித்ரா மேல நிறைய அக்கறை, அன்பு எல்லாம் இருக்கு.”
“ஆமா ஆமா இருக்கு. நீங்கதான் மெச்சிக்கணும். டேய் கட்டின பொண்டாட்டிக்கு இன்னைக்கு தாலி சங்கிலியை உன் கையாள போட்டு விடணும்னு தெரிந்தும், நீ உன் நண்பனை பார்க்க போயிட்டு அரட்டை அடிச்சிட்டு வந்து இருக்கபாரு. உன்னை போல ஒரு உத்தமபுருஷன் சித்ராக்கு கிடைக்க அவ பாவம் தான் பண்ணிருக்கனும்” என்றார் கோபத்தில்.
“அம்மா போதும் நிறுத்துங்க. என்ன சும்மா விட்டா பேசிட்டே போறீங்க. ஏதோ தெரியாம ஒரு விஷயம் நடந்துடுச்சி. அதுக்கு தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிச்சது மட்டும் இல்லாம, அவனை சபையில நிக்க வச்சி இப்படி தான் கேள்வி கேட்டுகிட்டு இருப்பிங்களா.”என்றதில் மகளை முறைக்க, “டேய் தம்பி நீ போய் சாப்பிடு. சித்ரா அவனுக்கு சாப்பாடு எடுத்து வை. மாறா நீயும் மகியை அழைச்சிட்டு போய் சாப்பிடு” என்று அனுப்ப,
“ஆமா உன் தம்பியை எதாவது சொன்னா நீ உடனே வந்துடுவ. டேய் விரும்புன பொண்ணை கட்டிக்கிட்டா மட்டும் போதாது. அவ மனசை அறிந்து நடந்துக்க தெரியணும்.”
“அதெல்லாம் அவரு பார்த்துப்பாரு. நீ போய் பிபி மாத்திரை போட்டுக்கிட்டு தூங்கு போ” என்று கீதா சொன்னதும் ஜெயா மகன் மீது உள்ள கோவத்தில் தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார்.
“என்ன கொழுந்தனரே இதெல்லாம்? அம்மாக்கு கோவம் வர மாதிரி ஏன் நடந்துகிட்டீங்க?”
“இல்ல அண்ணி. ஏதோ தெரியாம இப்படி நடந்துருச்சு.”
“சரி சரி முடிந்த கதையை பேசிகிட்டு இருக்காம, வாங்க போய் சாப்பிடலாம்.” என்றான் மாறன்.
“டேய் நீ போய் பிரஷ் ஆகிட்டு வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். மகி நீ என்கூட வா.”
“அப்போ நான் என் மாமியார் கூட போகவா அக்கா.” என்றான் மாறன்.
“ஆமா நீ காணோம்னு தான் உன்னை நான் தேடிட்டு இருக்கேன்.” கீதா முகம் சுளிக்க,
“நீங்க என் மாமனாரையே தேட மாட்டீங்க. என்னையா தேட போறீங்க?”
‘ஏய் என்ன திமிரா?”
“அது இருக்கட்டும். ஆமா உங்க மூணு பொண்ணையும் அழைச்சிட்டு வரலையா?”
“இப்ப நீ ஏன் அவளுங்கள கேக்குற?”
“ம்… அவங்களுக்கும் கபடி கத்து தரலாம்னு தான்.”
“மகி கிட்ட சொல்லவா?” என்று மிரட்ட,
“ஐயோ வேணா அத்தை. அவளுக்கு தெரிந்தால் கதகளி ஆடுவா.”
“என்ன மாமா அங்க சத்தம்?”
மனைவியின் குரலில், “சும்மா பேசுகிட்டு இருக்கோம்மா. நீ உன் வேலையை பாரு” என்றவன் அங்கிருந்து நைசாக ஓடிவிட்டான்.
அனைவரும் ஒன்றாக பந்தியில் அமர்ந்து கொடிவீரனின் வருகைக்காக காத்து இருக்க, அவனோ குளியல் அறையில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே வெளியே வந்தவன், கட்டிலின் அருகில் நின்றிருந்த மனைவியைக் கண்டு சிரித்து, “என்ன சிஎம் சாப்பிட்டீங்களா?” என்று கேட்க,
அவனை ஏகத்துக்கும் முறைத்தவள், “ஏன் இப்படி பண்ணீங்க?” என்க,
“நான் என்னங்க பண்ணேன்?” இவன் ஏதும் புரியாதவனாக கேட்டதும் மீண்டும் மகிழினி இவனை முறைக்க, “சரி சரி முறைக்காதீங்க. வெளிய எல்லோரும் சாப்பிடாம வெயிட் பண்ணுறாங்க. வாங்க போய் சாப்பிடுட்டு வந்து தெம்பா பேசலாம்.” என்றவன் அவள் கேள்வியை தவிர்த்த வண்ணம் அந்த அறையில் இருந்து வெளியே சென்றவனை மகிழினியும் பின் தொடர்ந்தாள்.
“சிவா நீங்க போய் உங்க மாமியாரை சாப்பிட கூப்பிடுங்க. அப்போ தான் அவங்க வருவாங்க” என்று இவள் சொன்னதும் சசியின் கணவன் தன் மாமியாரை அழைத்துக்கொண்டு சாப்பிடும் இடத்துக்கு வர, சில சங்கடங்களுக்கு மத்தியிலும் நிம்மதியாக விருந்து உணவை உண்டு முடித்தனர்.
மாலை நேரம் மாறனும் மகியும் அனைவரிடத்தில் இருந்தும் விடைபெறுகையில், “தம்பி நான் கமிஷனர்கிட்ட மறுபடியும் பேசிட்டேன் நீ எதுக்கும் கவலைப்படாத. அந்த வனிதானால இப்போதைக்கு உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ ஊருக்கு போனதும் எனக்கு மெசேஜ் பண்ணு. நான் போய்ட்டு வரேன். மாமியாரே வரட்டுமா” என்று கிளம்பினான்.
“மச்சான் நானும் கிளம்புறேன்டா. நாளைக்கு வேலை இருக்கு” என்றான் சுரேஷ்.
“ஏய் இரு இரு. நாங்களும் இப்ப கிளம்பிடுவோம். எனக்கும் உன் தங்கச்சிக்கும் கூட நாளைக்கு வேலை இருக்கு. இரு எல்லோருமே என் காருலயே போயிடலாம்.”
“என்ன? அதுக்குள்ள கிளம்புறியா” சசி தம்பியிடம் கேட்க,
“ஆமா அக்கா. நாளைக்கு வேலை இருக்கு. வொர்க் ரொம்ப ஜாஸ்தி. நாங்க இப்ப போனா தான் நைட்டுக்குள்ள ஊர் போய் சேர இயலும்.”
“ஏன் மச்சான் வேலையில் லீவு சொல்ல முடியாதா?” சசியின் கணவன் சிவா கேட்க,
“இல்ல மாமா. ஏற்கனவே ரொம்ப லீவு எடுத்துட்டேன். வேணு நீ போய் உன் அத்தைகிட்ட ரெடியாக சொல்லு. பாட்டி நீங்களும் ரெடி ஆகுங்க. அத்தை நீங்களும் தானே எங்ககூட வரீங்க” என்று கேட்டான்.
“நீங்க இப்ப காருல கிளம்புங்க மாப்புள்ள. நான் இன்னும் ரெண்டு நாள் கடந்து இங்க ஒரு கல்யாணத்தை முடிச்சிட்டு வரேன்.” என்றார் கீதா.
“சரிடா. அம்மா உங்களுக்கு வடகம் போட்டு வச்சாங்க. இரு நான் போய் எல்லாத்தையும் ரெடி பண்ணுறேன்.”
“சரிக்கா. அம்மா எங்க?”
“அவங்க ரூம்ல சித்ரா கூட பேசிகிட்டு இருக்காங்க.”
“சரிக்கா. நான் அவங்ககிட்ட சொல்லிட்டு கிளம்புறேன். மச்சான் இந்தாடா வண்டி சாவி. காருல பையை எல்லாம் வைக்க சொல்லு” என்று சுரேஷிடம் சாவியை தந்தவன், தன் அம்மா அறைக்குள் நுழைய, அங்கே ஜெயாவும் மகிழினியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன்
இயல்பாக அவர்கள் அருகில் சென்று அமர, ஜெயா தன் மகன் மீதுள்ள கோவத்தில் அங்கிருந்து நகர அவரின் முதுகை கட்டிக்கொண்டான்.
“அம்மா இன்னும் கூட ரெண்டு அடி அடிச்சிக்கோங்க. பட் பிளீஸ் இப்படி அவாய்ட் பண்ற மாதிரி போகாதீங்க.” என்றான் கெஞ்சலாக.
“நான் ஏன்பா உன்னை அடிக்க போறேன். நீ எனக்கு யாரு. நான் உன்னை அடிக்க?”
“ப்ச்… அம்மா.”
“இங்க பாரு. நான் உன் மேல ரொம்ப கோவத்துல இருக்கேன். இப்ப நீ என்கிட்ட எதாவது பேசினா கண்டிப்பா நான் உன்னை கஷ்டப்படுத்துற மாதிரி பேசிடுவேன். அதனால நீ தயவு செய்து இங்க இருந்து கிளம்பு.” கொஞ்சம் கோபமாகவே சொன்னார்.
“ஹ்ம் சரி இப்ப என்ன நான் போகணும் அவ்ளோதானே. ஓகே நான் கிளம்புறேன். ஏங்க நான் காருல இருக்கேன். நீங்க எல்லாரிடத்திலும் சொல்லிட்டு வாங்க. இங்க பாருங்க அம்மா நீங்களா மறுபடியும் என்னை இங்க கூப்புடுற வரைக்கும், நானா இங்க வர மாட்டேன். உங்களுக்கு என்ன பற்றி நல்லா தெரியும் தானே” என்றதும் ஜெயா முறைக்க,
“இதோ இப்ப போறேன். இதுக்கு அப்புறம் நீங்க போன் பண்ணி என்னை கூப்பிட்டா தான் இந்த வீட்டு வாசப்படியை நான் மிதிப்பேன். பை” என்றவன் கோபத்துடன் அந்த அறையில் இருந்து வெளியே சென்றதும் மகிழினி முகம் மாறியது.
“அம்மா ஏன் உங்க பிள்ளைகிட்ட இவ்ளோ கோவமா நடந்துக்குறீங்க? பாவம் அவரு முகமே அவருக்கு சரியில்ல. அவரும் உங்கிட்ட கோச்சிட்டு போறாரு பாருங்க.”
“இருக்கட்டும் சித்ரா. எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. கல்யாணத்துக்கு முன்னாடி ஆணோ, பெண்ணோ எப்படி வேணாலும் இருந்திருக்கலாம். ஆனா, எப்போ கால்கட்டு போட்டச்சோ அப்போ குடும்பத்துல நடக்குற, இந்த மாதிரி நல்லது கெட்டதுக்கு புருஷன், பொண்டாட்டியா ஒண்ணா நின்னுதான் எல்லா காரியத்தையும் பண்ணணும். என் மக கழுத்துல சிவா மாப்பிள தாலி சங்கிலியை போடும்போது, உனக்கும் உன் புருஷன் கையால அவன் பண்ண தாலி செயினை போட்டுக்கணும்னு ஆசை இருந்திருக்கும் தானே” என்றார் கோபம் குறையாது.
“அம்மா அதெல்லாம் உங்க மகனுக்கு தெரியாதுன்னு நினைக்கிறிங்களா?”
“அதான்மா என் கோவமே. இதெல்லாம் தெரிந்தும் ஏன் அவன் இப்படி விளையாட்டுத்தனமா இருக்கான். அதான் எனக்கு அவன் மேல ரொம்ப ஆத்திரமா இருக்கு. தகப்பன் இல்லாத பிள்ளையை, ஒரு பொம்பள எப்படி வளர்த்து இருக்காள் பாருன்னு யாரும் ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதுன்னு, பயந்து பயந்து இதுங்க ரெண்டையும் வளர்த்தேன். சசிக்கு வரன் தள்ளிப்போகும் போதெல்லாம், நான் கோவில் குளம்னு சுத்தி வந்தேன். ஆனா, என் வேண்டுதலின் பலனாக சிவா மாப்பிள்ளையும், நீயும் இந்த குடும்பத்துக்கு வந்து இருக்கீங்க. கொடிக்கு நீனா உசுரு. ஆனா, பாரு உன் மனசையே கஷ்டடப்படுத்துற மாதிரி நடந்து இருக்கான்.” என்று தன் ஆதங்கத்தை கொட்டினார்.
“இல்லம்மா. அவரு வேணும்னே அதெல்லாம் பண்ணிருக்க மாட்டாரு.” என்றாள் மகிழினி.
“ம்… ஆமா. வேணும்னே பண்ணிருக்கமாட்டான். கண்டிப்பா விளையாட்டுத்தனமா நேரம் போவது தெரியாம பேசிகிட்டு இருந்து இருப்பான். ஆனா, இப்போ ஒருமுறை இவன் பண்ணதை நான் விளையாட்டா எடுத்துக்கிட்டா, அதுக்கப்புறம் இவன் இதே மாதிரிதான் பண்ணுவான். அதனாலதான் அவன் மேல நான் கோபப்பட்டேன். சரி நீ இதெல்லாம் நினைச்சு கவலைப்படாம நேரத்தோடு ஊருக்கு கிளம்புங்க. நைட் என்ன நேரம் ஆனாலும் பாட்டி போன்ல இருந்தாவது, இல்ல உன் புருஷன் போனிலிருந்தாவது சசிக்கு நீங்க நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்கன்னு ஒரு மெசேஜ் அனுப்புங்க” என்று ஜெயா சொல்ல,
மகிழினி ஜெயாவை கட்டி அணைத்து அன்பு மழை பொழிந்து காருக்கு வர, சுரேஷ் முன் சீட்டில் அமர்ந்திருந்ததால் வேணுவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“நல்லபடியாக சென்று வாருங்கள்” என்று சொன்ன போதிலும் ஜெயாவின் கண்கள் மகனை பார்க்க மறுத்தார்.
சில தூரம் தன் காரை விரட்டிய கொடிவீரன் சட்டென்று தன் காரை நிறுத்தி, வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தவன் வாசலில் நின்றிருந்த தன் அம்மாவை கட்டி அணைத்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு, ஜெயா பேபி இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் ஆகாது. வயசாகுது வேற சோ இந்த மாதிரி கோபப்பட்டா பிபீ ஏறிடும். அதனால அடிக்கடி கோபப்படாமல், டிவில ஏதாவது நாடகம் இல்ல பாட்டு கேட்டுகிட்டு, கீதா அத்தை கூட சந்தோஷமா இருங்க. நானும் லீவ் கிடைச்சதும் என்னை ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் அடிச்ச இந்த கைக்கு தங்க வளைவி வாங்கிட்டு வரேன். பாய் டாட்டா” என்று சொன்னபடி காருக்குள் ஏறியவனின் செய்கையைக் கண்டு, ஜெயா மனதுக்குள் சிரித்துக் கொண்டாலும், முகத்தை கடுகடு என்று வைத்திருநத்தார்.
பாட்டி, சுரேஷ் மற்றும் மகிழினி ஆகிய அனைவருக்கும் “எப்படியோ அம்மாவும் மகனும் பேசிக் கொண்டார்கள்” என்ற மகிழ்ச்சி.
அடுத்த சில மணி நேரங்களில் வீட்டை சென்றடைவதற்க்கு முன்னால், சுரேஷ்கு நைட் டூட்டி இருப்பதால் போகும் வழியில் பஸ் ஸ்டாண்டில் இறங்கிக்கொள்ள, வழியெல்லாம் அரட்டை அடித்து கொண்டு வந்த வேணுவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்
“வேணு தூங்கிட்டான். நான் தூக்கிட்டு வரேன்.” என்றதும் மகிழினி வீட்டின் கதவை திறக்க, வேணுவை பாட்டி ரூமில் படுக்க வைத்தவன் தன் பையை எடுத்துக்கொண்டு,
“பாட்டி நீங்க சாப்பிட்டு படுங்க. எனக்கு நைட் சாப்பாடு வேணாம். ரொம்ப அசதியா இருக்கு. நான் போய் குளிச்சிட்டு தூங்குறேன்.” என்று சொல்ல,
“நைட்ல வயதுக்கு ஏதும் சாப்பிடாம தூங்க கூடாது தம்பி.”
“ஓ…ரு நாள் தானே பாட்டி. உண்மையாவே எனக்கு சுத்தமா பசி இல்ல. நல்லா தூங்கணும்னு தான் இருக்கு. சோ நான் போய் படுத்துக்குறேன்” என்று சொன்னவன் தன்னையே முறைத்தபடி நின்றிருந்த மகிழினியை பார்த்து, “குட் நைட்ங்க” என்று வார்த்தையை வளர்க்காமல் தன் அறைக்கு சென்று குளித்து முடித்து மறுநாள் வேலைக்கு தேவையான துணிகளை இஸ்திரி போட்டு கொண்டு இருந்தான்.
அறையின் கதவை தட்டிக்கொண்டு மகிழினி ஒரு கையில் பாலுடனும், இன்னோரு கையில் ப்ளாஸ்குடனும் உள்ளே வந்தாள்.
“என்னங்க நீங்க இன்னும் தூங்கலையா?”
“இந்தாங்க.”
“என்னது இது?”
“பார்த்தா தெரியல பால்.”
“அது தெரியுது. ஆனா, எனக்கு ஏன் தரிங்க?”
“ம்… அதை தயிர் ஆக்கி, வாயிலேயே கடைந்து வெண்ணை எடுத்து, நெய் உறுக்கி தருவிங்கன்னு தான் கொடுத்தேன்.” என்று உதடு சுளிக்க,
“என்னங்க நக்கலா” என்றான் இவன்.
“உங்களுக்கு தான் என்னை பார்த்தா நக்கலா இருக்கு.”
“உங்கள பார்த்தா என் கண்ணுக்கு தேவதை மாதிரி மட்டும்தான் இருக்கு.”
“ப்ச் போதும். இந்தாங்க வெறும் வயத்துல படுக்காதிங்க. இதுல சுக்கு, மிளகு, திப்பிலி எல்லாம் தட்டி போட்டு, பனங்கற்கண்டும் போட்டு பால் இருக்கு. இத குடிங்க.”
“என்னங்க இது. நான் இப்படி தான் பால் குடிப்பேன்னு உங்களுக்கு யாரு சொன்னது?” கொடிவீரன் கேட்க,
“ஜெயா அம்மா தான், என் மகன் இந்த மாதிரி நாட்டு மருந்து எல்லாம் போட்டு தான் சாப்பாடு எல்லாம் சாப்பிடுவான். ஏன் பால் கூட இதெல்லாம் போட்டு கொடுத்தா தான் குடிப்பான்னு சொன்னாங்க.” என்றாள் மகிழினி.
“ம்… சரி கொடுங்க. ஆமா நீங்க சாப்பிட்டீங்களா?”
“ம்… நானு, வேணு, பாட்டியும் குடிச்சிட்டு தான் உங்களுக்கு எடுத்துட்டு வந்தேன்.”
மகிழினி சொன்னதைக் கேட்ட கொடிவீரன் மெதுவாகத் தலையசைத்து, “தேங்க்ஸ்ங்க… சரி, நீங்க போய்ப் படுங்க. நான் குடிச்சிக்கிறேன்.” என்றானவன்.
“இப்போ ஏன் என்னைத் துரத்துறீங்க?”
“நாளைக்கு ரெண்டு பேருக்குமே வேலை இருக்குல்ல. சீக்கிரம் தூங்கணும் தானே?” அவன் இயல்பாகச் சொன்னாலும், அவளுடைய மனம் மட்டும் அத்தனை எளிதாக அமைதியாகவில்லை.
“நான்… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று ஆரம்பித்தாள்.
“ம்… பேசுங்க.”
“நீங்க வேணும்னே தானே பங்க்ஷனுக்கு லேட்டா வந்தீங்க?”
“இல்லையே.” என்றான் கண்ணை அவளிடமிருந்து திருப்பி.
“பொய் சொல்லாதீங்க. நீங்க வேணும்னேதான் அப்படி பண்ணீங்க.”
“அப்படி எல்லாம் ஏதும் இல்ல. நீங்க போய்ப் படுங்க.”
மகிழினி விடுவதாக இல்லை. “இப்போ உண்மையைச் சொல்லப் போறீங்களா, இல்லையா? ஏன் அப்படி பண்ணீங்க?”
கொடிவீரன் சற்றே சலிப்புடன் பெருமூச்சு விட்டான்.
“ப்ச்… நான் எதுவுமே பண்ணல. நீங்க போய்ப் படுங்க.”
“நான் படுக்குறது இருக்கட்டும். நீங்க அந்த மாதிரி பண்ணதால உங்க அம்மா எவ்வளவு கவலைப்பட்டாங்க தெரியுமா? அதனாலதானே உங்களை அடிக்கக்கூடப் பண்ணாங்க?”
“அம்மா அடிக்குறது எல்லாம் ஒரு விஷயமே இல்லங்க. நீங்க போய்ப் படுங்க.” என்று அவளை அனுப்பப்பார்த்தான்.
“இல்ல… எனக்குத் தெரியும். நீங்க வேணும்னேதான் அப்படி பண்ணீங்க.”
“கொஞ்சம் நிறுத்துறீங்களா?” கொடிவீரனின் குரலில் இப்போது சலிப்பு மட்டுமல்ல… அடக்கி வைத்திருந்த உணர்வின் சாயலும் இருக்க, மகிழினி புரியாமல் அவனைப் பார்த்தாள். “நான் வேணும்னே இதெல்லாம் பண்ணல. நீங்க என்னை வேண்டாம்னு நினைக்கிறதாலதான் பண்ணேன்.”
அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? நீங்கதானே நேத்து நைட், உங்களுக்கு விருப்பம் இல்லாமதான் எல்லாமே நடக்குதுன்னு சொன்னீங்க?” என்ற கொடிவீரன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“அதான்… நான் அங்க சரியான நேரத்துல இருந்தா, என் கையால உங்களுக்கு மறுபடியும் தாலி செயின் போடச் சொல்லுவாங்க. மறுபடியும் நீங்க அதை நினைச்சுக் கஷ்டப்படுவீங்க. அந்தக் கஷ்டத்தை உங்களுக்குத் தரக்கூடாதுன்னுதான் நான் அப்படி வந்தேன்.” என்றதும் மகிழினியின் முகத்தில் இருந்த கோபம் மெல்லக் கரைந்தது.
“ஆனா… என்னால உங்க அம்மா உங்களைத் தானே திட்டித் தீர்த்தாங்க? நீங்க அவங்ககிட்ட இதுக்கெல்லாம் நான்தான் காரணம்னு சொல்லியிருக்கலாம் இல்ல?” என்று மென்மையாகக் கேட்க,
“என் அம்மா என்னைத் திட்டுனா, அதுல அவங்களுக்கு என்மேல கோபமும் வருத்தமும் மட்டும்தான் இருக்கும்.” அவன் குரல் இப்போது மென்மையாகியது.
“ஆனா, உங்களை அவங்க ஒரு வார்த்தை சொன்னாக்கூட… அது உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வெறுப்பைத்தான் உருவாக்கும்.” எனவும் மகிழினி அமைதியாக நின்றாள். “எப்பவுமே கோபமும் வருத்தமும் தானாக மறைஞ்சிடும். ஆனா, வெறுப்பு அப்படி இல்ல.” என்று அவன் அவளை நேராகப் பார்த்து, “அது கருவேலஞ்செடி மாதிரி… வெட்ட வெட்ட வளர்ந்துக்கிட்டே இருக்கும். அதனாலதான் என் அம்மா எதிர்ல, உங்களுக்கு என் கையால தாலி சங்கிலி போட்டுக்க விருப்பம் இல்லன்னு சொல்லல. இருந்தாலும்… கவலைப்படாதீங்க.”
அவன் சொன்ன அடுத்த வார்த்தைகள் அவளுடைய இதயத்தையே ஒரு நொடி நிறுத்தியது.
“நமக்குள்ள இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் முடிஞ்சதுக்குப் பிறகு, நானே என் கையால இன்னொரு சங்கிலி பண்ணி… உங்க கழுத்துல என் கையால போட்டுவிடுறேன்.”
மகிழினி அவனைப் பார்த்து இயலாமையில், “நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? இப்படி எல்லாம் பண்ணா, நான் உங்களை ஏத்துக்கிட்டு உங்ககூட வாழ ஆரம்பிப்பேன்னு நினைக்கிறீங்களா?”
கொடிவீரன் சிரித்து, “ம்… இதெல்லாம் நான் பண்ணலைன்னாலும், நீங்க என் கூடத்தான் வாழுவீங்க.” என்றான்.
“சும்மா பைத்தியம் மாதிரி பேசாதீங்க. உங்க நல்ல குணத்துக்கு ஏத்த ஆள் நான் இல்ல.”
“நல்ல குணமா? அது எங்க என்கிட்ட இருக்கு?” என்றான் ஒரே போடாக.
அவளுடைய முகத்தில் எரிச்சல் தெரிந்தது. “நீங்க பண்ற காமெடியைக் கேட்க நான் இங்க வரல.”
“இப்போ என்ன சொல்ல வரீங்க?” கொடிவீரன் கேட்க,
மகிழினி சில நொடிகள் தயங்கினாள். பின்னர் மனதை இறுக்கிக் கொண்டு, “இன்னும் ஆறு மாசத்துல நீங்க எனக்கு மியூச்சுவல் டிவோர்ஸ் தந்துட்டு… வேற பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்றாள் அவள்.
கொடிவீரனின் முகத்தில் இருந்த புன்னகை அப்படியே மறைந்தது. “இல்லைனா?” என்று கேட்டான்.
“நீங்க முடியாதுன்னு சொன்னாலும்… நமக்கு கண்டிப்பா டிவோர்ஸ் நடக்கும்.” என்று சொல்லிவிட்டு, தன் கையில் இருந்த பிளாஸ்கை மேசையின் மீது வைத்தாள்.
அங்கிருந்து வெளியேற அவள் திரும்பிய அடுத்த நொடியே, கொடிவீரன் தன் இரு கரங்களையும் அவளுக்கு முன்பாக நீட்டி, அவள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாதபடி அவளுடைய பாதையை மறித்தான். அவனுடைய கண்களில் இதுவரை இருந்த குறும்பு இல்லை.
“இங்க பாருங்க…” என்று அவள் முடிக்கும் முன்,
“நான் எப்பவுமே ‘சோ ஸ்வீட்… சோ க்யூட்… பட்டுக்குட்டி… தங்கம்’ன்னு கொஞ்சிட்டே மட்டும் இருக்க மாட்டேன். எனக்குக் கோபம் வந்துச்சுன்னு வையுங்க…” ஒரு நொடி இடைவெளி விட்டு, “வேணும்னே என்னைக் கடுப்பேத்திப் பார்க்கணும்னு நினைக்காதீங்க. அது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது இல்ல.”
மகிழினி அவனை ஒரு விதமான கேலிப் பார்வையுடன் பார்க்க, அதைப் பார்த்த கொடிவீரனின் பார்வை அவளுடைய உதடுகளில் சென்று நின்றது.
“அன்ட்… என் முன்னாடி நின்னு சும்மா இந்த உதட்டை இப்படி சுழிச்சு, நெழிச்சிக்கிட்டு எல்லாம் காட்டிக்கிட்டு இருக்காதீங்க.” அவனுடைய குரலில் எச்சரிக்கை இருந்தாலும், அதற்குள் மறைந்திருந்த குறும்பை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
“அப்புறம்…”
அவன் சற்றே முன்னால் வந்து, “இழுத்துப் பிடிச்சு முத்தத்தையும்… மொத்தத்தையும்… எல்லாத்தையும் கொடுத்துடப் போறேன்.” என்ற வார்த்தைகள் காதில் விழுந்ததும் மகிழினியின் முகம் சட்டென்று சிவக்க, மறுவார்த்தை பேசாமல் வேகமாக அங்கிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.
அவள் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்த கொடிவீரன், மேற்கொண்டு எதையும் யோசிக்காமல் கட்டிலில் சென்று படுத்தான். ஆனால், மனம் மட்டும் அமைதியாகவில்லை. சில சஞ்சலங்களோடும், சொல்லப்படாத உணர்வுகளோடும்… இறுதியில் அவனுடைய கண்கள் உறக்கத்திற்குள் மூடிக்கொண்டன.