சில நிமிடங்கள் கடந்த நிலையில், ஐடி கம்பெனியில் இருந்து உணவு எடுத்துக்கொண்டு போக வண்டி வந்ததும், உணவை வண்டியில் ஏத்தி அனுப்பிய பின்னர், சிரித்துக்கொண்டே கணவன் பக்கம் வந்த மகிழினி, “சாருக்கு கை வசம் நிறைய தொழில் தெரியும் போல?” என்றாள்.
“கைத்தொழில் ஒன்று தான் மனிதனை என்னைக்குமே கைவிடாதுங்க.”
“ம்… அப்போ சீக்கிரமா நீங்க ஒரு ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணிடுவிங்களா?”
“நான் ஏன் புதுசா ஸ்டார்ட் பண்ணணும். என் பொண்டாட்டி நடத்துற கேண்டீன்ல எனக்கு ஒரு வேலை கேட்டா தர மாட்டாங்களா என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
“உங்களுக்கு வேணும்னா இந்த கேண்டினை நீங்களே எடுத்துக்கோங்க.”
“அதெல்லாம் வேணாம். எனக்கு நீங்க மட்டும் போதுங்க” என்றான் கொடிவீரன்.
“என்னை வச்சி நீங்க என்ன போறீங்க?”
“ம்… அதை ஒரு வருஷம் கடந்து நீங்களே தெரிஞ்சிப்பிங்க.”
“புரியல.”
“நமக்குப் பிறக்கப்போற பிள்ளைங்களுக்கு அம்மா என்ற அந்தஸ்தை தருவேன்னு சொல்ல வந்தேங்க.”
“என்கிட்ட நீங்க அடி தான் வாங்க போறீங்க.” என்று எச்சரித்தாள் அவள்.
“ம்… கண்டிப்பா ஒரு வருஷத்துக்கு அப்புறம் வாங்கிக்கிறேன். இப்போ வாங்க கிளம்பலாம்.”
“ம்… நீங்க உங்க பையை எடுத்துக்கிட்டு வெளிய வெயிட் பண்ணுங்க. நான் கேண்டீன் பூட்டிட்டு வரேன்.” என்றவள் கேண்டினை பூட்டிக்கொண்டு வெளியே வர,
பைக்கில் அமர்ந்து இருந்தவன் கைபேசியை எடுத்து, “நான் வேணா ஆட்டோ புக் பண்ணவா? இல்ல கேண்டீன் ஆட்டோ இருக்கா?” என்று கேட்க,
“எதுக்கு ஆட்டோ?” என்று இவள் முகம் சுருங்க
“வீட்டுக்கு போக தாங்க. எப்படியும் நீங்க என் கூட வண்டியில வர மாட்டீங்க. அதான் ஆட்டோ கூப்பிடவான்னு கேட்டேன்.”
“நான் வர மாட்டேன்னு நீங்க எப்படி முடிவு பண்ணுவீங்க. வண்டியை எடுங்க போகலாம்” என்றவளின் செயலில் சற்று குழம்பி தான் போனான். மேற்கொண்டு அவளை சீண்டிப் பார்க்காமல் முதல் முறையாக தன் மனைவியுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றான்.
“நான் டின்னர் ரெடி பண்ணுறேன். நீங்க ரெப்ரஷ் ஆகிட்டு வாங்க” என்று கீழ் வீட்டுக்கு செல்ல, கொடிவீரன் எப்போதும்போல மாடியில் உள்ள தன் அறைக்கு சென்று, சில நிமிடங்களில் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கீழே இறங்க, மகிழினி வீட்டுக்குள் நுழைந்த சமயம், சட்டென்று கரண்ட் நின்று வீடே இருள் சூழ்ந்தது.
அவன் போனில் இருந்த லைட்டை ஒளிர செய்தவன், எதிரில் தரையில் பேச்சு மூச்சு இல்லாமல் மகிழினி கீழே விழுந்து இருப்பதைக் கண்டு பயந்து அவள் அருகில் சென்று, “ஏங்க என்னாச்சு உங்களுக்கு? இங்க பாருங்க” என்று அவள் கன்னத்தை தட்ட, மயங்கிய நிலையிலேயே இருந்த மகிழினியின் முகத்தில் தண்ணீர் தெளித்தான் கொடி.
முகத்தில் குளிர்ந்த நீர் பட்டதும், மயக்கத்தில் இருந்து கண் விழித்தவள் தன் வலது கையை உதறியபடி வலியால் முகம் சுருங்க, அந்த இருளிலும் அவளின் வலியை அவள் விழிகளில் கண்டு கொண்டான் கொடிவீரன்.
“என்னங்க என்னாச்சு?” என்றவன் செல்போன் வெளிச்சத்தை கொண்டே அவளை கைத்தாங்கலாக தூக்கி சோபாவில் அமர வைத்தான்.
“அங்க அந்த சுவிட்ச் போட போனேன். அப்போ சட்டுன்னு ஷாக் அடிச்சிடுது” என்றாள் மீண்டும் கைகளை உதறிக்கொண்டே.
“ஐயோ அதான் மயங்கிட்டிங்களா? ஏங்க வேற எங்காவது அடிபட்டு இருக்கா? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று இவன் பதற
“ஹாங் இல்ல இல்ல. அடி எல்லாம் படல.”
கைபேசியை மனைவியிடம் தந்தவன், “இருங்கங்க நான் தண்ணி கொண்டு வரேன்” என்று மேசை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை அவள் கையில் தந்து, “நீங்க தண்ணி குடிங்க ஷார்ட் செர்க்கட் எதாவது ஆகியிருக்கும். நான் என்னனு பார்க்குறேன்.” என்றவன் மெயினை ஆஃப் செய்த பின்னர் சுவிட்ச் போர்டில் சில வயர்களை கனெக்ட் செய்து மீண்டும் மெயினை ஆன் செய்ததும் வீட்டில் மின்சாரம் மிளிர்ந்தது.
“ஷப்பா! நல்லவேளை உங்களுக்கு இந்த வேலை தெரிஞ்சிருக்கு. இல்லைனா நாளைக்கு வர நம்ம இருட்டுல தான் இருந்து இருக்கனும்.” தன் கையை உதறிக்கொண்டே சோபாவில் இருந்து எழ பார்க்க,
“இருங்க இருங்க. டின்னர் பண்ணவா போறீங்க?” என்று கேட்டதும்
“ம்… ஆமா” என்று இவள் தலை அசைக்க,
“நீங்க பாட்டு கேட்டுகிட்டு நிம்மதியா உக்காருங்க. நான் இன்னைக்கு டின்னர் ரெடி பண்ணுறேன்” என்றவன் கைபேசியில் பாடலை ஒலிக்க செய்து சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டான்
கிட்டத்தட்ட ஐந்து பாடல்கள் முடிந்த நிலையில் உணவுடன் வெளியே வந்தவன், “வாங்கங்க சாப்பிடலாம்” என்று அழைக்க அவளோ அசதியில் உறங்கிப் போயிருக்க, அவளைக் கண்டு தனக்குள் ரசித்தவன், “ஏங்க…” என்று பொறுமையாக அழைக்க,
“தூக்கம் வருது பாட்டி. நான் போய் தூங்குறேன்.” தூக்க கலகத்தில் சோபாவில் இருந்து எழுந்து தன் அறைக்குச் சென்றவளை வழி மறைத்தான் கொடிவீரன்.
தன் முன் நிற்கும் உருவம் யாரென்று கண்கள் கசக்கி பார்த்தவள், மீண்டும் கண்களை தேய்த்து கொண்டு பார்க்க, “என்னங்க நல்ல தூக்கமா? சரி வாங்க சாப்பிட்டிட்டு போய் நிம்மதியா படுங்க” என்று மேசையை காட்ட,
“சாரி. நல்லா தூங்கிட்டேன் போல. இருங்க வரேன்.” ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை அலம்பிக்கொண்டு வர,
“உக்காருங்க சாப்பிடலாம். எனக்கு உங்க அளவுக்கு எல்லாம் சமையல் பண்ண தெரியாதுங்க. ஏதோ எனக்கு தெரிந்ததை பண்ணி இருக்கேன். சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றவன் இருவருக்கும் உணவை வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
“இது கிச்சடி தானே.ரொம்ப நல்லா இருக்கு. பட் ஏதோ வித்தியாசமான சுவையில் தெரியுது.” என்றாள் மகிழினி.
“ம்… ஐடிஸ் போஹா கிச்சடி மாதிரி இருக்கும்.”
“ரொம்ப நல்லா இருக்கு” என்றவள் உண்மைக்கே அவன் சமையலை ருசித்து சாப்பிடும் அழகை இவனும் ரசித்து கொண்டே சாப்பிட்டு முடிக்க,
“இன்னும் கொஞ்சம் வச்சிக்கிறிங்களா?” என்றவன் மீண்டும் வைக்கப்போக,
“ஹ்ம் ஹ்ம் வேணா வேணாம். நானே சமைச்சு நானே சாப்பிடும் போது, இதுல ஒரு பங்குகூட சாப்பிட மாட்டேன். இன்னைக்கு நிறைய சாப்பிட்டுட்டேன். தேங்க்ஸ்” என்றாள்.
இருவரும் உண்டு முடித்ததும் சேர்ந்தே அந்த இடத்தை சுத்தம் செய்ய, பின் கையில் பிளாஸ்குடன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள், “கீதா அம்மா போன் பண்ணாங்களா? நல்லபடியா ஊருக்கு போயிட்டாங்கல்ல?” என்று கணவனிடம் கேட்க,
“ம்… அக்கா மெசேஜ் பண்ணாங்க. நல்லபடியா வந்துட்டாங்களாம்.”
“ம்… நம்ம எப்ப ஊருக்கு கிளம்பனும்? நமக்கும் பஸ் டிக்கெட் எல்லாம் ஆன் லைன்ல தான் புக் பண்ணனுமா?”
“நம்ம ஏங்க பஸ்ல போகணும்? நம்ம நம்மளோட காருல போகலாம்.”
“என்ன காருலயா?”
“ஆமா. ஏன் மறுபடியும் பயமா இருக்கா?” என்று கேட்கவும், ஆமென்று தலையசைத்தாள்.
“அதான் நான் இருக்கேனே. ஏன் சும்மா பயந்துகிட்டு இருக்கிங்க?”
“வேணாங்க. நம்ம பஸ்லையே போகலாமே”
“ப்ச் ஏங்க நம்மகிட்ட கார் இருக்கும்போது, நம்ம ஏங்க பஸ்ல போகணும்? நம்ம காருலேயே போகலாம்.” என்றான் கொடிவீரன்.
“இல்ல. காருல போனா எனக்கு பழைய நியாபகம் எல்லாம் வரும்.” என்று தயங்கி சொன்னாள்.
“ஏங்க மனுஷனை டெபன்ஸ் பண்றதே மெமரிஸ் தாங்க. சோ, அதை பேஸ் பண்ணனும். அதுவும் இல்லாம நீங்க என்ன நம்பி வர மாட்டிங்களா என்ன?” கிடுக்குப்பிடியாய் கேட்க,
“ம்… சரி போகலாம்.” என்றாள் இருமனதாக.
“ம்… அது நல்ல பொண்ணுக்கு அழகு.”
“சரி இந்தாங்க ப்ளாஸ்க். நீங்க போய் படுத்துக்கோங்க.”
“எங்க போய் படுக்க சொல்லுறீங்க?”
“இது என்ன கேள்வி. உங்க ரூம்ல தான்.”
“உங்கள இங்க தனியா விட்டுட்டு நான் எப்படிங்க மாடியில தனியா தூங்குறது?”
“அதுக்கு?” என்று முறைத்தாள்.
“நீங்க போய் உங்க ரூம்ல படுங்க. நான் இங்க சோபாவுல படுத்துக்குறேன்.”
“உங்களுக்கு தான் இங்க கால் நீட்ட இடம் இல்லையே.”
“இட்ஸ் ஓகே. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க போய்ப்படுங்க.”
“ம்… வேணும்னா என் ரூம்ல வந்து படுத்துக்கோங்க.” என்றாள் மகிழினி.
“அதெல்லாம் வேணாங்க. நான் அங்க வந்தா நீங்க அப்புறம் தரையில படுப்பீங்க. அதுக்கு நான் சோபாவுலேயே படுத்துக்குறேன்.”
“ம்…”
“அப்புறம் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன். கேட்கட்டுமா?”
“கேளுங்க” என்றாள் அவள்.
“ஜீவா மேரேஜ்கு என்ன கிப்ட் தரலாம்?”
“அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க?”
“ஓ அப்போ நீங்க மீனாக்கு தனியா கிப்ட் பண்ண போறிங்களா?”
“ம்… ஆமா நான் அவ மேரேஜ் முடிந்து இந்த ஊருக்கு வந்ததும், அவ வீட்டுல போய் பார்த்து கிப்ட் பண்ணிட்டு வந்துடுவேன்.”
“என்னங்க சொல்றிங்க? அப்போ நீங்க ஜீவா மேரேஜ்கு பெங்களூரு வர மாட்டீங்களா?” என்று கேட்டான்.
“இதுவரை நான் அவ்ளோ தூரம் எல்லாம் போனதே இல்ல. அதான் வந்ததும் பார்த்துக்குறேன் சொன்னேன்.”
“இதுவரை போகலைனா என்னங்க. இனிமே போகலாம் இல்ல.”
“ஹ்ம் வேணாம். எனக்கு அவ்ளோ தூரம் எல்லாம் வர ஒரு மாதிரி இருக்கும்.”
“ஏன் அப்படி?” தெரிந்துகொள்ள கேட்டான்.
“ப்ச் அது அப்படித்தான். நானே நீங்க சொன்ன மாதிரி ஜெயா அம்மா மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் அவங்க சொல்ற சடங்குக்கு எல்லாம் சம்மதம் சொன்னேன். இல்லைனா எனக்கு இதுல எல்லாம் பெரிய ஈடுபாடு எல்லாம் இல்ல.” என்றாள்.
“ என்னங்க மறுபடியும் பழைய மாதிரி ஆரம்பிக்கிறிங்களா?”
“ப்ச் உண்மையை தாங்க சொல்லுறேன். இந்த சடங்கு எல்லாம் பண்ணிக்க எனக்கு விருப்பமே இல்ல.”
”அப்போ ஏங்க அம்மாகிட்ட ஓகே சொன்னிங்க? அப்போவே உங்களுக்கு இதுல விருப்பம் இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே?”
“அவங்க நம்பிக்கையை எப்படி நான் வேணான்னு சொல்ல முடியும்?”
”தாலி ஏன் பெருக்கி போடுறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?”
“ஹ்ம் தெரியாது. உண்மையை சொல்லனும்னா ஒருமுறை என் கழுத்துல ஏறுன தாலி, எப்ப எனக்கே தெரியாம இறங்குச்சோ, அப்போதுல இருந்தே எனக்கு தாலின்னு பேரை கேட்டாலே ரொம்ப சங்கடமா இருக்கும். மறுபடியும் விதி உங்க கையாள தாலியை கட்ட வச்சி நம்மள இப்படி எதிர் எதிர்ல நிக்க வச்சிருக்குறத நினைச்சா, எனக்கு இன்னும் இந்த தாலி மேல எல்லாம் கோவம் தான் வருது.” என்று மனதில் உள்ளதை சொன்னாள்.
“ம்… ஆனா, எனக்கு ஒரு டவுட்?” என்றான் கொடிவீரன்.
“என்ன?”
“நீங்க நினைச்சா இப்போ கூட நான் கட்டின தாலியை கழட்டி போடலாமே, ஏன் கழட்டல?”
“அ…அது நான்…”
“ம்… திணறாம சொல்லுங்க. என்கிட்ட டிவோர்ஸ் கேக்குற நீங்க, நான் கட்டுன தாலியை கழுத்துல கட்டி இருக்கணும்னு அவசியமே இல்லையே?”
“ம்… அது…”
“அதாங்க. அந்த தாலியோட பவர் இப்போ எல்லாம் நாடகம், சினிமா, ரீல்ஸ்ன்னு ஆயிரம் பேர் அந்த தாலி கயிரை வச்சி புது புது கதை சொன்னாலும், மனசார ஒரு பொண்ணை பொண்டாட்டியா ஏத்துகிட்டு, ஒரு பையன் அந்த பொண்ணு கழுத்துல கட்டுற தாலிக்கு நிறைய மகத்துவம் இருக்கு. நீங்க வேணா என்னை உங்க புருஷனா நினைச்சு, நான் கட்டுன தாலியை உங்க கழுத்துல வாங்கிக்காம இருந்து இருக்கலாம். ஆனா, நான் உங்கள என்னோட பொண்டாட்டியா மனசார ஏத்துகிட்டு தான், அந்த மஞ்ச கயிறை உங்க கழுத்துல கட்டினேன். உங்களுக்கு வேணா என்னை உங்களோட புருஷனா ஏத்துக்க மறுக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனா, நான் உங்கள என் பொண்டாட்டியா ஏத்துக்க ஒரே காரணம் தாங்க இருக்கு.”
“ம்… என்ன காரணம்?”
“அந்த காரணம் உங்களுக்கா தானாக புரியுறவரைக்கும், நான் என்னதான் கூப்பாடு போட்டு கத்தி சொன்னாலும், அது உங்களுக்கு புரியாது. குட் நைட் போய்ப்படுங்க.” என்று வீட்டின் கதவை தாழிட்டவன், சோபாவில் படுத்து கண்கள் மூடினான்.
மகிழினி அவனையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தவள், “நான் எதார்த்தமா தான் என் மனசுல இருக்குறத சொன்னேன். நீங்க இவ்ளோ பேசுறத பார்த்தா நான் உங்கள ஏதோ கஷ்டப்படுத்திட்டேன் போல.” கவலையாக சொன்னவள் மேலும் தயங்கியபடி அவன் அருகில் சிலைபோல நின்றிருக்க,
ஒரு கண்ணை திறந்து பார்த்தவன், “ஆமா. நான் உங்கமேல கோவத்துல தான் இருக்கேன். என் கோவம் தீர நான் உங்களுக்கு ஒரு தண்டனை தரேன் பண்ணுறிங்களா?” எனவும், கணவன் முகத்தை கேள்வியாக இவள் பார்க்க, சோபாவில் இருந்து வாரி சுருட்டி எழுந்தவன், “சொல்லுங்க நான் கொடுக்குற தண்டனையை பண்ணுறீங்களா?” என்றான் திரும்பவும்.
சில நொடிகள் யோசித்தவள் அவன் அருகில் நெருங்கி காதருகில் சென்று, “நீங்க கோவமாவே இருங்க. நீங்க தண்டனை கொடுக்க நான் ஒன்னும் உங்க ஸ்டுடென்ட் இல்ல. நான் உங்களுக்கே சிஎம் ஆக்கும்” என்றவள் கண் இமைக்கும் நொடியில் தன் அறைக்குள் நுழைந்துகொள்ள, அதைப் பார்த்து கொடிவீரனும் சிரித்தபடியே படுக்க, கண்கள் தூக்கத்தை தழுவியது.
மறுநாள் காலை எப்போதும் போலவே மகிழினி கேண்டீன் செல்வதற்காக அவள் அறையில் இருந்து வெளியே வர, எதிரில் கையில் உள்ள வண்டி சாவியை சுற்றிக்கொண்டு மனைவியின் வருகைக்காக காத்து இருந்தான் கொடிவீரன்.
“என்னங்க அதுக்குள்ள எழுந்து ரெடி ஆகிட்டீங்க?”
“ம்… நீங்க ரெடியாகிட்டா வாங்க போகலாம்” என்றான் அவன்.
“எங்க?” என்றாள் புரியாது.
“உங்கள கேண்டீன்ல விட. அட ஏன் முறைக்கிறிங்க?”
“எனக்கு போகத் தெரியும். நீங்க மாடிக்கு போய் நிம்மதியா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வேலைக்கு போங்க. நான் உங்களுக்கு டிபன் அண்ட் லஞ்ச் ரெடி பண்ணி வச்சிட்டு போறேன்.”
“இட்ஸ் ஓகே சிஎம். நான் நேத்து நைட்டு நல்லா தூங்கிட்டேன். வாங்க நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா கேண்டீன்கு போயிட்டு, நான் அங்க இருந்து அப்படியே வொர்குக்கு போறேன்.
“ப்ச் வேணாம் சொன்னா கேளுங்க. நான் பார்த்துக்குறேன்.” என்க,
“ம்… ஓகே என்னை பார்த்துகிட்டே வாங்க” என்றதும் மகிழினி முறைக்க, “அட வாங்க சிஎம்” என்றான்.
“சரி இருங்க. காபி கொண்டு வரேன்.”
“அதெல்லாம் உங்க கேண்டீன்கு போய் பார்த்துக்கலாம் வாங்க.” என்றவன் சொல்லுக்கு சம்மதம் தெரிவித்து மகிழினியும் அவனுடன் செல்ல,
இவர்கள் இருவரும் ஒன்றாக வண்டியில் வந்து இறங்குவதை பார்த்த பெண்மணி ஒருவர், “அம்மாடி சித்ரா எப்படிடா இருக்க? உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுதுன்னு கேள்விப்பட்டேன். இவரு தான் உன் புருஷனா?” என்று கேட்டார்.
“ப்ச்…” என்று அவள் சலிக்க,
“ஆமா பாட்டிமா. நான்தான் அந்த புண்ணியவான்” என்று சொன்னான் கொடிவீரன்.
மகிழினி கணவனை முறைக்க, “ஏன்மா அந்த தம்பியை முறைக்கிற? நல்ல கலகலப்பான பையனா தானே இருக்காரு” என்றார்.
“பாட்டி ஏன் காலையிலேயே நீங்க வேற படுத்துறீங்க.”
“ஏன்மா இப்படி சொல்ற?”
“அவங்க அப்படிதான். நீங்க விடுங்க பாட்டி” என்றான் அவன்.
“சரி தம்பி. சித்ராவை நல்லா பார்த்துக்கோப்பா” என்றார்.
“ம்… பார்த்துக்குறேன் பாட்டி. அதை விட எனக்கு என்ன வேல” என்று கொடிவீரன் மகிழினியை பார்த்து சிரித்தபடி சொல்ல,
மகிழினி சிறு கடுப்புடன் கேண்டீன் ஷுட்டரை ஓபன் செய்து, “நீங்க இருங்க. நான் உங்களுக்கு காபி போட்டு தரேன்.” என்றாள்.
“சிஎம் எனக்கும் எதாவது வேலை தாங்களேன்.”
“ப்ச் ஏன் இப்படி? நீங்க போய் அங்க அமைதியா உக்காருங்க.”
“நீங்க என்ன என் டீச்சரம்மாவா. நீங்க சொன்னதும் நான் போய் உக்கார. சரி சரி வேல நேரத்துல இப்படி சிரிக்கிறது எல்லாம் எனக்கு பிடிக்காது. கடமையே கண் கண்ட தெய்வம் புரியதா. சட்டு புட்டுனு என்ன வேலை இருக்குன்னு சொல்லுங்க. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இதையாவது ஒழுங்கா பண்ணலாம்.”
“என்ன?” என்று அவனை முறைக்க,
“சாப்பாடை சொன்னேன்மா. சீக்கிரம் சீக்கிரம் ம்… ஸ்டார்ட் பண்ணுங்க.” என்று கொடிவீரன் அவசரப்படுத்த, மகிழினியும் சிரித்த முகத்துடன்தன் கேண்டீன் வேலைகளை ஆரம்பித்தாள்.
இருவரும் ஒன்றாக வேலைகளை செய்து கொண்டிருக்க கொடிவீரன் அலுவலகம் கிளம்பும் நேரத்தில், அவனுக்கு தேவையான உணவை தயார் செய்து மகிழினி அவன் கையில் கொடுத்து, “அப்படியே இந்த சாவியையும் பிடிங்க. வொர்க் முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு போயிடுங்க” என்றாள்.
“ஹ்ம் மாட்டேன். நான் நேத்து மாதிரியே உங்கள இங்க வந்து அழைச்சிட்டு போறேன். நீங்க பார்த்து வேலையை செய்யுங்க. அண்ட் மதியம் சாப்பிடுங்க ஓகேவா?”
“ம்…” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“பை எல்லாம் சொல்ல மாட்டிங்களா?”
“ம்… பை. பார்த்து போய்ட்டு வாங்க.”
“ஏங்க சினிமாவில் காண்பிக்கிற மாதிரி, முத்தம் எல்லாம் கொடுத்து அனுப்பமாட்டிங்களா?”
“என்ன?” என்று எகிற,
“சரி சரி கோவப்படாதிங்க. பை.” என்று வாடிய முகத்துடன் அலுவலகம் கிளம்பியவனை பார்த்து, தனக்குள் சிரித்து கொண்டாள் மகிழினி.