கும்பகோணத்தை கார் நெருங்கியதுமே, பரபரப்பாகக் காணப்பட்ட மங்களத்தைக் கண்டு, மருமகளும் பேத்தியும் நமட்டுச் சிரிப்பு சிரித்தது தெரிந்தாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.
ஆற்றுப்படுகையின் காற்றில் விரவிய காவேரியின் குளுமையையும் மண்ணின் மணத்தையும் ஆழ்ந்து சுவாசித்த மங்களம், பிறந்த நாளன்று புது உடுப்பில், இனிப்புடன் பள்ளி செல்லும் குழந்தையின் மனநிலையில் இருந்தார்.
வழியெங்கும் தனக்குப் பரிச்சயமான முகங்களைத் தேடியதில் வெட்கம் வர, சிரித்துக்கொண்டார்.
பொன்னியின் செல்வனில் கல்கி குறிப்பிடும் திருநல்லம் என்ற கோனேரிராஜபுரம் செல்லும் பாதையில் திரும்பியது கார்.
எத்தனை வருடங்களாயிற்று சொந்த மண்ணை மிதித்து?
எழுபதுகளின் துவக்கத்தில் மத்திய அரசு அதிகாரியுடன் (அந்தக் காலத்து ஐஏஎஸ்!) திருமணமாகி டெல்லி சென்ற மங்களத்துக்கு ஒரே மகன்தான். பிலானியில் கணினி பொறியியல் முடித்து மேற்படிப்புக்கென அமெரிக்கா சென்றான்.
‘தனியா, ஹோம் சிக்கா (Home sick) இருக்குமா, பொண்ணைப் பாரு” என்றவன், பெற்றோர் பார்த்த, சி ஏ படித்த பெண்ணை சமர்த்தாகத் திருமணம் செய்து கொண்டான். அவளும் வேலை பார்க்கிறாள். கடந்த இருபத்தெட்டு வருடங்களாக அமெரிக்க வாசம்தான். அவனுக்கு ஒரு மகள் மட்டுமே.
மங்களத்தின் கணவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மறுவருடமே இதயநோயால் காலமாகிவிட, தாயையும் தன்னுடன் அழைத்துக்கொண்டான்.
அமெரிக்க வாழ்வின் அனுதின அவசர அவசியங்களில், உடன் பிறந்தவர்களின் திருமணம், பெற்றோரின் மறைவு, குழந்தைகளின் மொட்டையடி, காது குத்தைத் தவிர, அவர்களுக்கு இந்தியா வருவதற்கான அவசியமோ, உந்துதலோ இருப்பதில்லை.
மங்களத்தின் இருபத்தியோரு வருட அமெரிக்க வாழ்க்கையில் மூன்றே முறைதான் இந்தியா வந்திருக்கிறார். கடைசியாக வந்தது ஒன்பது வருடங்களுக்கு முன்.
நெருங்கிய பந்துக்களில் பலரும் வந்து நின்ற வானூர்தியில் வரிசையாக ஏறியபோதும், மங்களம் அலைபேசியில் அனுதாபித்ததோடு சரி.
மங்களத்தின் சொந்த அக்கா கமலா இரண்டு வருடங்களுக்கு முன் மஞ்சள்காமாலை முற்றிக் காலமானபோதும் அதே கதைதான்.
“ஃபோன்ல விசாரிச்சா போறாதாம்மா”
“பெரியம்மாவே போய்ட்டா, பெரியப்பாவும் இல்ல. காரியம் பண்ற கிருஷ்ணனே டொரன்டோல இருந்துதான் போறான். நீ போய் யாரை துக்கம் கேக்கப்போற?”
“நீயே சொல்லு, இந்த வயசுல தனியா இந்தியா போய்
நெய்வேலி, திருச்சி, கும்பகோணத்துல எல்லாம் இனிமே உன்னால இருக்க முடியும்னு எனக்குத் தோணலை”
“அங்க போய் நீ கண்ட கண்ட தண்ணியைக் குடிச்சு, தலைக்கு ஸ்நானம் பண்ணி உடம்புக்கு வந்துட்டா, உடனே திரும்பியும் வர முடியாது. அங்க உனக்கென்ன மினரல் வாட்டரா வாங்கித் தருவா? இதுல மெடிகல் இன்ஷுரன்ஸ் வேற”
“எனக்கும் வேலை இருக்கு. அவளாலயும் லீவ் போட முடியாதும்மா, ஃபினான்ஷியல் இயர் க்ளோஸிங் டயம். புரிஞ்சுக்கோ”
தன் வயதை ஒத்த மூத்த அக்கா மகனின் மகளுடைய திருமணத்திற்குச் செல்ல மங்களம் வெகுவாக ஆசைப்பட்டார்.
“கமலா பெரியம்மாவோட பேத்திக்குக் கல்யாணம். போனா நன்னாத்தான் இருக்கும். ஃபிப்ரவரி கடைசீல கல்யாணம். ஒண்ணரை நாள் கூத்துக்கு நாம போய்ட்டு வரணும்னா எத்தனை செலவு, அலைச்சல், சொல்லு. அதோட, அந்தப் பொண்ணே இதோ, இங்க இருக்கற மேடிஸனுக்குதானே வரப்போறா”
விதவிதமான சமாதானங்களின் சாரம்சம் ‘நீ போக வேண்டாம்’ என்பதே. அவசியமானால், பிள்ளையோ, நாட்டுப்பெண்ணோ அல்லது இருவருமோ தனித்துப் போய் வந்துவிடுகிறார்களே தவிர, மங்களத்துக்கு விசா கிடைப்பதில்லை. ஆம், விசாவேதான், அவர்தான் இப்போது அமெரிக்கப் பிரஜையாகி விட்டாரே!
பெற்றோர்களிடம் பறக்கப் பழகி, கணவனுடன் இணைந்து பறந்தவருக்கு, மகனின் பாதுகாப்புச் சிறகுகளில், தான் ஒரு பறவை என்பதே மறந்துதான் போனது.
ஆனால் இந்தமுறை மங்களத்தின் ஒரே அண்ணா, சங்கரனுக்குக் கொள்ளுப் பேரன் பிறந்திருக்க, தொண்ணூற்றி இரண்டு வயதில் கனகாபிஷேகம் செய்கின்றனர். மன்னியும் இருக்க, செய்வதற்கென்ன?
மங்களத்துக்கும் சங்கரனுக்கும் இடையில் கமலா, காமாக்ஷி, வனஜா என மூன்று சகோதரிகள்.
ஊரில் நிலபுலன்களும் கும்பகோணம் அரசுபள்ளியில் ஆசிரியருமாக இருந்த மங்களத்தின் தந்தை, மூத்த பெண் கமலாவுக்கு அதிவிமரிசையாகத் திருமணம் செய்த கையோடு அகால மரணமடைந்தார்.
அப்போதுதான் எல்ஐசியில் வேலைக்குச் சேர்ந்திருந்த சங்கரனின் தலையில், மூன்று தங்கைகளைக் கரையேற்ற வேண்டிய பொறுப்பு விழுந்தது.
தன்னைவிடப் பதினேழு வயது சிறியவளான தங்கை மங்களத்தின் மீது சற்று அதிகப்படி வாஞ்சை சங்கரனுக்கு. எனவே, மனைவியின் எதிர்ப்பையும் மற்ற தங்கைகளின் ஆதங்கத்தையும் மீறி, அதிக நகை போட்டுத் திருமணம் செய்து கொடுத்தார்.
நினைவுகளே வாழ்க்கையானதில், சிறுவயதுக் காட்சிகள் அனைத்தும் அழியாச் சித்திரமாக மனதில் ஓட , மங்களம் “கிறிஸ்மஸ் லீவுலதானே விசேஷம் வரது. நாங்க யாரும் இனிமே இருந்த நாள் இருக்கப் போறதில்ல. எனக்கு எங்கண்ணாவைப் பார்த்தே ஆகணும்” என ஏக்கமும் ஆவலுமாக, சிறுபிள்ளையாய் பிடிவாதம் பிடித்ததில் இதோ…
இன்னோவா உமாமகேஸ்வரர் கோவிலைத் தாண்டிச் செல்ல, மங்களத்தின் மனக்கண்ணில் கோவிலின் உள்ளே நர்த்தனமாடும் பஞ்சலோகத்தால் ஆன சுயம்பு நடராஜர் வந்து சென்றார்.
‘நினைத்தபோதெல்லாம் தரிசித்தவரை இன்று நினைவில் மட்டுமே காண முடிகிறது’ என்ற எண்ணம் எழ, தன்னையறியாது பெருமூச்சு எழுந்தது.
எழுபத்தி ஆறு வயதிலும் பிறந்த வீடு என்றதுமே துள்ளத்தான் செய்தது மனம். அக்கா தங்கைகளுக்கே உரித்தான செல்லச் சண்டைகள்தான் எத்தனை?
தீபாவளிப் பட்டாசுக்கு அடித்துக் கொள்வதும், வெந்நீர் அடுப்பில் வறுத்த நிலக்கடலையைப் பாகம் பிரிப்பதும், ஒரு கண்ணி பூவைக் கூட கூடக்குறைய விடாமல் அளந்து பார்ப்பதும், பார்க்கும் ஒன்றிரண்டு சினிமாவிற்கு ஒரு வாரம் முன்பிருந்தே அனுமதிக்குக் கெஞ்சுவதும், அடுத்த சினிமாவைப் பார்க்கும் வரை, அதையே பேசித் தீர்த்ததும், விவித்பாரதியின் மாலை நேரத் தேனருவியில்
பி பி ஸ்ரீநிவாஸையும், கண்டசாலாவையும் விடாது கேட்டதும், சிலோன் ரேடியோவின் ஒலிச்சித்திரங்களும், எல்லாவற்றையும் விட, மாதவிலக்கின்போது, சகோதரிகளில் இருவரோ, மூவரோ சேர்ந்து ஒதுங்கிவிட்டால், பின்கட்டையே அரட்டையில் இரண்டாக்கியதும்….
சங்கரனுக்குக் கல்யாணமாகி மன்னி வந்தபிறகு அவளுடன் சேர்ந்து வழக்கடிப்பதும், பிறகு நாத்தனார்கள் கூடி அவளைப் பற்றியே வம்பு பேசியதும் தனி சுவாரஸ்யங்கள்.
சகோதரிகளின் பேச்சுக்கு வயது வித்தியாசம் கிடையாது. போரும் சமாதானமும் நித்ய கர்மாக்கள்!
இணை கோடுகளைப் போன்று சீராக, சரளமாகப் பயணிக்கும் சகோதரிகளுடைய உறவு, சீர், நகை, அவரவர் கணவர்களின் படிப்பு, தோற்றம், உத்தியோகம், வருமானம், புகுந்த வீட்டு மனிதர்களின் தன்மை என பலவும் வேறுபடும்போது திருமணம் வரையிலும் இல்லாத ஆறு வித்தியாசங்கள் அறுபதாகி விடுகிறது.
இவ்வளவு ஏன், இன்று குழந்தைகளின் படிப்பும் மதிப்பெண்களும் கூட கௌரவப் பிரச்சனைதான்.
ஒரே கூரையின் கீழ், அந்தந்த வீட்டின் நியதிகளுக்கும் வசதிகளுக்கும் உட்பட்ட நிலையில் எதையும் பேசிப் பகிர்ந்து சந்தோஷித்தது போக, அவரவர் கௌரவம் கருதி, புகுந்த வீட்டின் பெருமையும் சிறுமையும் அளவோடே வெளிப்படுகிறது.
இப்போது எல்லோருக்கும் வயதாகி, சிலரது பேரன், பேத்திகளுக்குக் கூடத் திருமணமாகி விட்ட நிலையில் போலிக் கௌரவத்துக்கு அவசியமில்லையே?
விஸ்கன்ஸினின் பனிபொழியும் நேரத் தனிமையின் ஏக்கத்தில், வயதாகி, பொறுப்புகள் நிறைவேறிய நிலையில், சகோதர, சகோதரிகள் சேர்ந்து கடைசி காலத்தைக் கழித்தால் என்ன, என்று கூட நினைத்திருக்கிறார்.
“பாட்டி, கெட் டவுன்” என்று கை பிடித்து இறக்கிவிட்டாள் பேத்தி.
“வா மங்கா, அப்பா உன்னை அத்தனை எதிர்பார்த்துண்டு இருக்கா” என்று வரவேற்றான், சங்கரனின் மகன் ரகுராமன்.
“எப்படிடா இருக்க ரகு?” என்ற மருமானின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
அண்ணாவைப் போலவே ரகுவுக்கும் அவள் மங்காதான். அவளது பதினோராவது வயதில் கைகொள்ளா முடியோடு பிறந்த ரகுராமனின் தலை இப்போது முழுவதும் பிரகாசித்தது.
உடன்பிறந்தவர்களில் வனஜாவைத் தவிர ஜீவிக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்திருந்தனர்.
“காமாட்சி, வனஜா, எல்லாரும் சௌக்யமா, நிதானமா பேசலாம், இருங்கோ வரேன்”
உரிய விளிப்பும் விசாரிப்புமாய் உள்ளே நடந்தனர்.
அண்ணா சங்கரன் “வந்துட்டியா மங்கா?” என்று உணர்ச்சி வசப்பட்டார். சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு என எதுவும் இல்லைதான், ஆனாலும் வயோதிகம் என்ற ஒன்று இருக்கிறதே?
முன்பெல்லாம் பெரியவர்கள் “காடு வா வாங்கறது, வீடு போ போங்கறது” என்று அடிக்கடிச் சொல்லித் தன்னையும் சார்ந்தவர்களையும் மனதளவில் தயார் படுத்துவார்கள்.
இப்போது நீட்டிக்கப்பட்ட வாழ்நாளில், மற்றவரை இம்சிக்காது இருக்கவும் வலியில்லாது நடமாடவும் மருந்துகளின் துணை அவசியமாகிறது.
மருந்தால் ஆயுளோ, ஆயுளுக்காக மருந்தோ, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதோ, மேம்பட்ட வசதிகளோ, காரணம் எதுவானாலும் ‘தீர்க்காயுசா இரு’ என்ற ஆசிர்வாதம் பெரும்பாலும் பலித்துவிட்டதாகவே மங்களத்துக்குத் தோன்றியது
“மன்னி எங்க?”
“போய்ப் பாரு, அழைச்சுண்டு போடா ரகு” என்ற அண்ணா, மீண்டும் கண்களை மூடி சாய்ந்து கொண்டார்.
மன்னி சாரதாவைப் பார்த்த மங்களம் அதிர்ந்துதான் போனாள். எத்தனை ஒடுக்கம்?
பளீர், பளீரென மின்னல் வெட்டும் சிரிப்பும், சந்தன நிறமும், களையான முகமும், வெட்டறுப்பான பேச்சும், அற்புதமான சமைக்கும் திறனும்…
வாயும் கையுமாக இருந்த சாரதா மன்னியா இது?
எலும்பையும் நரம்பையும் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட்டால் மூடியது போல் ஒடுங்கி இருந்தது தேகம். கண்ணோரம் நீர் கசிய, மெதுவே பேசினாள்.
“வெச்சு ஆட்றதுடீ மங்கா”
“So many oldies” என்றாள் பேத்தி.
கனகாபிஷேகம் விமரிசையாக நடந்தது. மூத்த தம்பதியை வாழ்த்த வயதின்றி, ஊரே வணங்கியது.
விஸ்கன்ஸினை அடைந்த பின், மகன் “அம்மா, இப்ப சந்தோஷமா?”
உடன் பிறந்தவர்களுடன் ஒரு வாரத்தைக் கழித்ததில் வயதும் வசதியும் ஏற, ஏற வித்தியாசங்களும் விலகல்களும் கூடவே ஏறும் என்று புரிந்ததில், மங்களம் மெலிதாகச் சிரித்தார்.
ஆம், தூரத்துப் பச்சைதான் கண்ணுக்குக் குளிர்ச்சி!
Sorna Sandhanakumar
உன் புன்னகை போதுமடி (செழிலி)
“சுபாமா” என்று அழைத்தபடியே வீட்டிற்குள் வந்தார் அந்த அறுபதைக் கடந்த மனிதர் வெங்கடேசன். அழைப்பிலேயே தன் தந்தை தான் என்று அறிந்தவள் முகமலர சமயலறையில் இருந்து வெளியே வந்தவள்,
“அப்பா வாங்க வாங்க” என்று உற்சாகமாய் வரவேற்றாள் சுபஸ்ரீ. அவளின் சத்தத்தில் அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த அவளின் கணவன் ரிஷி அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தான். தன் மாமனாரைப் பார்த்தவன் முகம் மலர வந்து அவரிடம் இருந்த லக்கேஜை வாங்கியவன்,
“வாங்க மாமா. எப்படி இருக்கீங்க? சொல்லிருந்தா நான் பஸ் ஸ்டாண்ட் வந்து கூப்பிட வந்துருப்பேன்ல. பாவம் எவ்ளோ தூரம் நடந்து வருவீங்க. உட்காருங்க” என்றவன்,
“ஹே தண்ணி கொண்டு வா டி” என்றபடி அவரோடு அமர்ந்தான்.
“இருக்கட்டும் மாப்பிள்ளை. திடிர்னு அவளை பார்க்கணும் போல இருந்துச்சுன்னு வந்தேன். நீங்க வேலைக்குக் கிளம்பிட்டு இருப்பீங்க தான. அதான் எதுக்கு தொல்லை பண்ணனும்னு நானே வந்துட்டேன்.”
“இதுல என்ன மாமா இருக்கு. அஞ்சு நிமிஷம் ஆகிருமா? அத்தை வரலையா மாமா” என்றிட தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த சுபாவும்,
“ஆமா பா அம்மா வரலையா?” என்றிட அவரோ,
“அவ வரலை. எனக்கு இங்க ஒரு வேலை ரொம்ப நாளா முடிக்காம இருந்துச்சு. உன்னையும் பார்க்கணும் போல இருந்துச்சா. அதான் சரி பார்த்துட்டு அந்த வேலைய முடிச்சுட்டு போலாமேன்னு வந்தேன்” என்றிட அப்பொழுது தான் அவரின் நான்கு வயது பேத்தி உறக்கத்தில் இருந்து முழித்து, “தாத்தா” என்றபடி உற்சாகமாய் ஓடிவந்தாள்.
“வாங்க வாங்க.. எங்கம்மா பெத்தாரு” என்றபடி அவளை தூக்கிக் கொஞ்சினார்.
“சரிங்க மாமா. அப்போ நான் வேலைக்குக் கிளம்புறேன். உங்களுக்கு ஏதோ வேலைன்னு சொன்னீங்கள்ல சாயந்தரம் வந்ததும் வண்டியில கூட்டிட்டு போறேன்.” என்றவன் அலுவலகத்திற்குக் கிளம்ப மருமகனின் அக்கறையில் அகமகிழ்ந்தார் அந்த பெரியவர். தன் மகளின் தேர்வு என்றுமே சரியாகத் தான் இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
“சரிங்க பா. உங்களுக்கு பிடிச்ச பொங்கல் சட்னி வைக்குறேன். குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க” என்றவள் சமயலறைக்கு சென்றாள். குளித்து முடித்து வந்தவருக்கு,
“வாங்க பா சாப்பிடலாம். பொங்கல் சூடா இருக்கு” என்றபடி பரிமாறினாள்.
“நீ சாப்பிட்டியாடா?”
“இன்னும் இல்லப்பா. உங்க பேத்திய சாப்பிட வச்சுட்டு நான் சாப்பிடனும்” என்றிட அவளின் கரம் பற்றி அமர வைத்தவர்,
“நீயும் சாப்பிடு என்கூட. நான் சாப்பிட்டு முடிச்சு சுலோக்கு ஊட்டிவிடுறேன்.” என்றிட தந்தையின் அன்பில் எப்பொழுதும் போல் உருகியவள் அவருடன் அமர்ந்து சாப்பிடலானாள்.
“உன் அம்மா மாதிரியே நீயும் நல்ல சமைக்குற மா” என்றவர் மகளின் சமையலை ருசித்து சாப்பிட்டார். அப்பொழுது தன் பேத்தியும் பக்கத்து வீட்டு சிறுமியும் பொம்மை வைத்து விளையாடுவதை வேடிக்கைக் பார்க்கலானார்.
“என்ன நீ இப்படி மேக்கப் போட்டுருக்க நல்லாவே இல்ல. நான் பாரு எனக்கு பிடிச்ச மாதிரி எவ்ளோ அழகா பண்ணிருக்கேன். என்னை மாதிரியே நீயும் பண்ணு” என தன் கையில் இருக்கும் பொம்மையைப் பார்த்தபடடி கூறிக் கொண்டிருந்தாள் அந்தப் பக்கத்து வீட்டு சிறுமி. அதனைக் கேட்டதும் சுலோக்ஷனாவோ,
“உன் பொம்மைக்கு உனக்கு பிடிச்ச மாதிரி மேக்கப் போட்டுக்க. இது என் பொம்மை. நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் போடுவேன். அப்போ தான் அதுக்கும் பிடிக்கும். உன் பொம்மைக்கு பண்ணுண மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன் போ” என்றவள் தன் பொம்மைக்கு ஒரு பொட்டு வைத்துவிட்டு அதனைக் கண்ணாடியில் காண்பித்து,
“உனக்கு இந்தப் பொட்டு பிடிச்சுருக்கா” என்று கேட்டவள் அது பதில் கூறியது போல தானே நினைத்தவள், பின்பு அவளே, “பிடிக்கலையா… அப்போ வேணாம்… உனக்கு பிடிச்ச மாதிரியே வேற பொட்டு வச்சுக்கலாம் சரியா” என்று அழித்துவிட்டு வேறு பொட்டினை அந்த பொம்மைக்கு வைத்துவிட்டாள். அவளின் செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் வெங்கடேசன். பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சில நினைவுகள் எழ அவரின் சிந்தனை ஐந்து வருடங்கள் பின்னோக்கி பயணப்பட்டது.
சுபஸ்ரீக்கு திருமண வரன் தேடிக் கொண்டிருந்த சமயம் அது. கையில் சில வரன்களின் ஜாதகத்துடன் அவளின் பெரியப்பா வந்திருந்தார் அன்று.
“இங்கப் பாரு வெங்கட்டு இது நல்ல இடமா தான் தெரியுது. பையன் நல்ல வேலைல இருக்கான். குடும்பமும் நல்ல வசதி. என்ன கொஞ்சம் பெரிய குடும்பம். அவ்ளோ தான். எனக்கென்னமோ இது தான் சரியா வரும்னு தோணுது.” என்று கூறிக் கொண்டிருக்க வெங்கடேசனோ ஓரமாக நின்று கொண்டிருந்த தன் மகளை ஏறிட்டார். அவளோ தலையை இடவலமாக ஆட்டி தனக்குப் பிடிக்கவில்லை என்று கூற கண்களை மூடித் திறந்தவர்,
“அண்ணே நீ சொல்றது எல்லாம் சரி தான். ஆனா எனக்கு என்னமோ இந்த வரன் மேல மனசு ஒப்பல. வேற பார்ப்போமே” என்றிட அவரின் சகோதரனுக்கோ பொறுமை காற்றில் பறந்தது.
“நானும் பார்த்துட்டே இருக்கேன். இப்படி வர எல்லா வரனையும் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தா என்னடே அர்த்தம். பொண்ண கட்டிக் கொடுக்குற ஐடியா இருக்குதா இல்லையா உனக்கு. கூடவே வச்சுருக்க போறியா. பொண்ணு பாசம் இருக்கலாம் தான் வெங்கட்டு. அதுக்காக இப்படியா” என்று கடிந்து பேசினார்.
“என்னண்ணே நீ இப்படி பேசுற. என் பொண்ணு கல்யாணத்தைச் சீக்கிரம் பார்க்கனும்னு தான் எனக்கும் ஆசை”
“நீ செய்யுறதை எல்லாம் பார்த்தா எனக்கு அப்படி தோணலடே.. அவகிட்ட சம்மதம் கேட்டுக் கேட்டு நீ பண்ணிட்டு இருக்கியோ” என்று கேட்டவர் சுபாவை ஒரு பார்வை பார்க்க அவளோ, ‘போச்சு கண்டுபிடிசுட்டாரே இந்த பெரியப்பா’ என்று நினைத்தபடி பார்த்தாள்.
“இங்க பாரு வெங்கட்டு. அவகிட்ட கேட்டுக் கேட்டு தான் எல்லாம் செய்யனும்னா ஒன்னும் பண்ண முடியாது. என் பொண்ணுக்கும் தானே கல்யாணம் செஞ்சி வச்சேன். இது தான் மாப்பிள்ளை வந்து கழுத்து நீட்டுன்னு சொன்னேன். இதோ இப்போ புள்ள பெத்துட்டு சந்தோஷமா இருக்கலையா.. சின்ன வயசுல இருந்து எல்லாத்தையும் அவளைக் கேட்டா செஞ்ச நீ. இதெல்லாம் நாம பார்த்து செய்யுறது தான்.” என்று மேலும் அறிவுரை என்ற பெயரில் ஆணாதிக்கத்தைத் திணிக்க தந்தை தன்னால் பேச்சு வாங்குவதைப் பொறுக்காமல்,
“அப்பா நீங்க எந்த வரன் பார்த்து சொன்னாலும் எனக்கு சம்மதம் தான் பா. உங்களுக்குப் பிடிச்சுருந்தா எனக்கு ஒகே தான்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட,
”ஹான் பார்த்தியா புள்ளையே சொல்லிருச்சு. அப்புறம் என்ன?” என்று கேட்டார். அதுவரை அமைதியாக இருந்த வெங்கடேசனோ,
“அண்ணே! என்ன டா தம்பி எதிர்த்துப் பேசுறானேன்னு நினைக்காத. உன் பொண்ணுக்கு உன் இஷ்டப்படி செஞ்ச அவளும் சந்தோஷமா இருக்கா. எனக்கும் சந்தோஷம் தான். அதே மாதிரி என் பொண்ணுக்கு என் இஷ்டப்படி தான் செய்வேன். என் பொண்ணோட இஷ்டம் தான் என் இஷ்டமும். அவளைக் கேட்காம நாம மட்டும் பார்த்து வச்சு கட்டிவச்சு நாளைக்கு ஏதும் பிரச்சனைன்னு வந்தா அவ மனசுல ஒரு சின்ன வருத்தம் வரும் தானே. நம்ம அன்னைக்கே வேணாம்னு சொன்னோம். இந்த அப்பா தான் கேட்கலன்னு. அப்படி மட்டும் தோணுச்சுனா நாம ஒரு அப்பாவா நம்ம கடமையைச் சரியா செய்யாம விட்டோமோன்னு ஆயிடாதா. எனக்கு அது தேவை இல்ல. எந்த வரனா இருந்தாலும் என் பொண்ணு பார்த்து சம்மதம் சொன்னா தான் நான் அடுத்தகட்ட வேலைக்கே போவேன். அது அம்பானி வீட்டு சம்மந்தமா இருந்தா கூட சரி” என்று தீர்க்கமாக கூறிவிட,
“சொல்றது சொல்லிட்டேன்டே. அப்புறம் உன் இஷ்டம் வெங்கட்டு. நான் வேற வரன் வந்தா சொல்றேன். சுபா கிட்ட கேட்டுட்டு நீ என்னன்னு சொல்லு. நான் வரேன்” என்றவர் வெளியில் வந்ததும் முதல் வேலையாக அலைபேசியில் தன் மகளை தொடர்புக் கொண்டு,
“அம்மாடி.. நீ சந்தோஷமா தானே டா இருக்க. அப்பா உன்னைக் கேட்காம கல்யாணம் பண்ணி வசுட்டேனேன்னு உன் மனசுல ஏதும் வருத்தம் இருக்கா” என்று வினவ மறுமுனையில் என்ன கூறினாளோ,
“அப்படியா மா.. சரிமா சரிமா.. நீ சந்தோஷமா இருந்தா சரி தான்” என்று அழைப்பைத் துண்டித்தவர், “ஹப்பாடா” என்று பெருமூசிவிட்டபடி அவர் வீட்டிற்கு நடக்கலானார்.
ஜன்னல் வழியே இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சுபாவுக்கோ சிரிப்பு தான். அப்போது அறைக்குள் வந்த வெங்கடேசனோ,
“உன் பெரியப்பா பேசிட்டு போனத நெனச்சு வருத்தம் ஏதும் பட்டியா டா?” என்று தலையைக் கோதியபடி வினவ,
“அதெல்லாம் இல்லப்பா. நீங்க இருக்கும் போது எனக்கென்ன கவலை”
“அதுசரி. அதுக்காக இனிமே அடுத்து வர வரன எனக்காகவெல்லாம் பிடிச்சுருக்குன்னு சொல்லக் கூடாது என்ன? உனக்கு நிஜமாவே மனசுக்கு பிடிச்சுருந்தா மட்டும் என்கிட்ட சொல்லு சரியா. உன்னோட சந்தோஷம் தான் அப்பாவோட சந்தோஷமும்” என்று கேட்க,
“சரிப்பா” என்றாள் புன்னகைத்தபடி.
“இப்போ அத்தான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டாக. அவரு சரியா தான் பேசுனாக. இப்படியே அவ சரி சொல்லுற வரைக்கும் உக்காந்துருந்தா இன்னும் எத்தன வருஷம் ஆகுமோ. நான் இதை பேசி பேசி ஓஞ்சி போயிட்டேன். பேச வந்த அந்த மனுஷனையும் வாயைமூட வச்சுட்டீக. என்னமோ போங்க. சாப்பிட வாங்க ரெண்டு பேரும்” என்று சமயலறையில் இருந்து புலம்பலும் அழைப்பும் வர,
“ஹே போடி! உனக்கு உங்க அப்பா உன்கிட்ட சம்மதம் எதுவும் கேட்கலையேன்னு பொறாமை.” என்றிட,
“சரியா சொன்னீங்கப்பா” என்றபடி வாயைப் பொத்தி சிரித்தாள் சுபஸ்ரீ.
“ஆமா ஆமா. என் அப்பா என்கிட்டே கேட்காம செஞ்சாலும் நல்ல புருஷனை தான் கொடுத்துருக்காங்க” என்று கூற அதில் வெங்கடேசனுக்கு ஏக பெருமை.
அதன் பின் சில நாட்களிலேயே ஒரு நல்ல வரன் வர சுபாவுக்கும் பார்த்தவுடனே மனதுக்கு பிடித்திருந்தது. குடும்பமும் நடுத்தர வர்க்கமாய் நல்ல குடும்பமாக தெரிந்தது விசாரித்தவரை. பையனும் எந்த ஒரு கெட்டப்பழக்கம் எதுவும் இல்லாமல் இருக்க சுபா சம்மதம் கூறிய அடுத்த நாளில் இருந்தே அனைத்து வேலைகளும் விறுவிறுவென நடக்க இதோ திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கடந்து பெண்ணைப் பார்க்க சுபாவின் வீட்டிற்கு வந்திருந்தார் வெங்கடேசன். சிறுமியின் வார்த்தையில் இந்த நினைவுகள் எல்லாம் வந்திருக்க அதனை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவரைக் கண்டவளுக்கு அவருடைய எண்ணம் நன்றாகவே புரிந்தது.
“அப்பா.. உங்க பேத்தி அப்படியே உங்கள மாதிரி” என்று சிரித்தபடி கூற வழக்கம் போல தன் மனதினைப் படித்துவிட்டாள் தன் மகள் என்று அறிந்து அவள் சிரிப்பில் அகமகிழ்ந்தவர்,
“உன் பொண்ணாச்சே மா. அதான்” என்று கூறி சாப்பிட்டு எழுந்து தன் பேத்தியைக் கொஞ்சலானார்.
அடி கோயில் எதற்கு?
தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி...
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
முற்றும்...
காலம் மாறும் (மேகவாணி)
“என் அம்மா வாழ்க்கையை அழிச்சது போதாதா? அடுத்து என் வாழ்க்கையையும் அழிக்கணுமா?”
குரலை உயர்த்திப் பேசக் கூடத் தயங்குபவள், இன்று ஒட்டு மொத்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தாள். கல்லூரி இறுதி வருட மாணவி அவள்.
எப்போதும் கம்பீரம் சுமக்கும் அறுபது வயது நரைத்த தேகம், தான் கேட்ட கேள்வியில் தளர்வது புரிந்தாலும், கொந்தளித்த உணர்வுகள் அடங்க மறுத்தது அவளுக்கு.
“சொல்லுங்க தாத்தா. இப்ப எதுக்கு இவளோ அவசரமா எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து அனுப்ப நினைக்கிறீங்க. என் அம்மாவைத் தான் ஒன்னும் புரியாத 16 வயசுல கட்டிக்குடுத்து, இப்போ அல்லோலப்பட்டுட்டு இருக்காங்க. கூடச் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். நானாவது படிச்சு என் அம்மாவையும் தம்பியையும் பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். நீங்க என்னன்னா இன்னும் காலேஜ் கூட முடிக்காம என்னைக் கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்ல அடிமையாக்கப் பாக்குறீங்களே…” என்றவளுக்கு தானாகக் கேவலும் வந்தது.
சுருங்கிய கண்ணிமைகள் கலங்கியது கிருஷ்ணனுக்கு.
“ஏய் அவ்ளோ பெரிய மனுஷனை நிக்க வச்சு கேள்வி கேட்குற… ஒழுங்கா உள்ள போ” பாட்டி கல்பனா அவளைக் கண்டிக்க, அதற்கு மேலும் அங்கு நின்றால் வெடித்து அழுது விடுவாளெனப் புரிந்து அறைக்குள் புகுந்து கொண்டாள்.
வாழ்க்கையின் சில கடினமான பக்கங்களை வெகு சிரமத்துடன் கடக்க வேண்டிய கட்டாயத்திற்கு விதி தானாகத் தள்ளி விட்டுவிடும்.
அந்த ரணம் மிகுந்த பக்கங்களுக்கு எதிர்காலமென்ன என்றும் புரியாது, நிகழ்காலம் அவர்கள் வசத்திலும் இருக்காது. மற்றவர்களது அசைவிற்கு ஏற்ப ஆடும் காற்றாடியாய், அவளும் தலையாட்டியே தீர வேண்டுமென்ற நிலைக்கு அவளை நிறுத்தி இருப்பது யார்?
குடியில் வெந்து, சந்தேகம் என்னும் பேய் பிடித்து ஆட்டும் தந்தையா?
வாய் இருந்தும் ஊமையாகி, கணவனைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வர இயலாமல், பணமும் ஈட்ட வழியின்றி காலம் சொல்லும் பாதையில் செல்லும் தாயா?
அல்லது, 16 வயதில் செல்லமாக வளர்த்த மகளுக்குக் கண் குளிர திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட தாத்தாவா?
மாமன்மார்கள் என்ற பெயரில் மூன்று பேர் இருந்தும் கூட, தனக்கு ஆதரவாக, தனது தாய்க்கு ஆதரவாக, “நீ விட்டுட்டு வா… நாங்க பாத்துக்குறோம்” என்ற வார்த்தையை உதிர்க்க பயந்து, சமூகத்தை எண்ணி அமைதி காக்கும் குடும்பத்தினரா?
படிப்பாவது தனக்கு கைக்கொடுக்குமெனப் பார்த்தால், அதற்கும் அல்லவா வேட்டு வைக்கிறார்கள். அதிலும், இத்தனை இடர்பாடுகளுக்கு இடையிலும் தன்னை சிறு வயது முதல் சீராட்டி வளர்த்த தாத்தாவே இதனைச் செய்யும்போது மனது வலிப்பது நியதி தானே.
அவள் எப்போதும் கிருஷ்ணின் வீட்டிலேயே இருப்பாள் தான். ஆனால், இப்போதெல்லாம் அவளது வீட்டு நிலவரம் சுத்தமாக சரி இல்லை. தாயிடம் சண்டையிடும் தந்தையை எதிர்த்துப் பேசினாள். விளைவு! ‘நீ வீட்டிற்கே வந்து விடாதே. உன் தாத்தா வீட்டில் இருந்தே கல்லூரிக்குச் சென்று கொள்‘ என்று தந்தையே இங்கு கொண்டு வந்து விட்டு விட்டார்.
தாத்தா வீட்டில் உரிமையாக இருப்பதென்பது வேறு! வழி இல்லாமல் இருப்பது அத்தனை பேரின் முன்பும் அவளைக் குறுக வைத்தது.
அப்படியும் கல்பனாவின் அரவணைப்பில் அவள் மற்றவை மறந்து கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்க, இடையில் கிருஷ்ணனும் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்.
அவரை எதிர்க்கும் அளவும் அவளுக்குத் தைரியம் என்றும் இருந்ததில்லை. அதனால் அமைதியே காத்தாள்.
பெண் பார்க்கும் நிகழ்வுகளும் அவ்வப்பொழுது அரங்கேறிக் கொண்டிருந்தது. அவர்களது முறைப்படி, மாப்பிள்ளையை அழைத்து வரமாட்டார்கள். பெண் வீட்டார் தான் சென்று பார்க்க வேண்டும்.
முதலில் பள்ளி ஆசிரியையின் மகனுக்குப் பெண் கேட்டு வந்தனர், அந்த ஆசிரியையும் அவரது இளைய மகளும்.
வந்தவர்கள், பள்ளிக்கு ஆசிரியர் பணியில் சேர்ப்பதற்காகக் கேட்கும் கேள்விகள் முதற்கொண்டு அவளிடம் கேட்டு விட்டனர். அவளுக்கோ சினம் தலைக்கு ஏறியது.
“ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்க? சரியா சாப்பிட மாட்டியா?”
“எந்திரிச்சு நில்லு. உன் ஹைட்டு என்ன?”
“லேசா கறுத்த மாதிரி இருக்க என் பையன் கொஞ்சம் நல்ல நிறம்.”
“எவ்ளோ மார்க் வாங்குவ?”
“சொல்லிக்கிற அளவுக்கு வாங்குவேன்” அவள் மென்மையாக உரைக்க,
“எங்க வீட்ல என் ரெண்டு பசங்களும் நல்லா படிப்பாங்க.” அந்தத் தாயாரிடம் ஒரு வித பெருமை.
‘அப்போ எதுக்கு கல்யாணம். காலம் முழுக்க படிக்க வச்சுக்கிட்டே இருக்க வேண்டியது தான‘ மனத்தினுள்ளேயே கடுப்படித்தவளிடம், துருவித் துருவிக் கேள்வி கேட்டு விட்டே கிளம்பினர்.
அவர்கள் கிளம்பியபிறகே நிம்மதியாக இருந்தது. இவர்களுடன் வாழ்க்கை முழுக்க எப்படி வாழப் போகிறோமோ என்ற பயம் வேறு முளைக்க, இவள் வீட்டினரும் ஆசிரியை வீட்டிற்கு மாப்பிள்ளை பார்க்கச் சென்றனர்.
ஆனால், மாப்பிள்ளைப் பையனின் முக அமைப்பே வேறு மாதிரியாக இருந்தது. ஏதோ ஒரு விபத்தின் விளைவில் தாடை விலகித் தொங்கி கொண்டிருந்தது. பேசும்போது சற்று கூர்மையாய் கேட்டாலே அவர் பேசுவது புரியும். மற்றபடி வசதி படைத்தவர்கள். மாதம் கை நிறைய சம்பளம் வாங்குபவன்.
பெண்ணின் தாய் மஞ்சுளாவுக்குத் தான் மெல்லவும் இயலவில்லை விழுங்கவும் இயலவில்லை. மஞ்சுளாவின் உடன் பிறந்தவர்களோ அதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
“பையன் எப்படி இருந்தா என்ன? நல்ல வசதியா இருக்காங்க. நாளைப் பின்ன உனக்கு மாதிரிப் பிரச்சனை வராது. கெட்ட பழக்கமும் இல்லைன்னு தான் சொல்றாங்க. அந்த அம்மாவும் சீர்ன்னு எதுவும் வேணாம்னு சொல்லிடுச்சு. இதைவிட உனக்கு நல்ல சம்பந்தம் கிடைக்குமா?”
இந்த வாதங்களை அவரால் ஏற்றுக்கொள்ள இயலாமல் மகளிடமும் கூறி விட, அவள் ஒன்றும் கூறவில்லை.
“முகத்துல என்ன இருக்குமா. நல்ல கேரக்டரா இருந்தா போதும்” என்று விட்டாலும், அந்த டீச்சர் அம்மா தன்னை உருவக்கேலி செய்யாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றாமல் இருக்கவில்லை. மாப்பிள்ளையின் தாயார் இரு நாட்களில் கிருஷ்ணனுக்கே அழைத்தார்.
“இங்க பாருங்க சார். எங்களுக்குப் பொண்ணை பிடிச்சு இருக்கு. நான் நகையெல்லாம் இவ்ளோ தான் போடணும்னு சொல்லமாட்டேன். என் பொண்ணுக்கு நாப்பது சவரன் போட்டோம். நீங்க போட முடிஞ்சதை போடுங்க.
ப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் சீர் எல்லாம் வேணாம். ஆனா என் பொண்ண புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது ஏசி வாங்கி கொடுத்தோம்.
பணம் எல்லாம் வச்சுக்குடுக்க வேணாம். என் பொண்ணுக்கு அம்பதாயிரம் வச்சுக் கொடுத்தோம்…” என்று இலைமறை காயாகப் பேசிட, கிருஷ்ணனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை தான். இவையெல்லாம் தன்னால் செய்ய இயலாது எனக் கிருஷ்ணன் கூறியதில் அந்தச் சம்பந்தம் கைவிட்டுப் போனது.
இரு நாட்களுக்கு முன்பு, மற்றொரு மாப்பிள்ளை வீடும் பார்த்து வந்தாகிற்று. வசதி படைத்தவர்கள் தானாம்… மகளை பார்க்கக் கிருஷ்ணனின் வீட்டிற்கு வந்த மஞ்சுளாக் கூறினார்.
அதற்கு அவளிடம் பதில் ஏதும் இல்லை. திடீரென மஞ்சுளா கண்ணீர் சிந்தியதில், “என்னமா ஆச்சு?” எனக் கேட்க,
“உன் பெரிய மாமா சேகர்கிட்ட மாப்பிள்ளையைப் பத்தி விசாரிச்சேன். பணக்காரங்க தான். ஆனா கெட்ட பழக்கம் எதுவும் இருக்குமான்னு. ஏன்னா, நானே அவனுங்க தண்ணியை போட்டுட்டு சுத்துறதை பார்த்து இருக்கேன். அதுக்கு உன் மாமா என்ன சொல்லுச்சு தெரியுமா?” என்றார் மூக்கை உறிஞ்சி.
அவள் வெறுமையுடன் பார்க்க, “அவனுங்க எப்படி இருந்தா என்ன? காசு வச்சுருக்கானுங்க. நம்மப் பிள்ளைக்கு லைஃப் செட்டில் ஆகிடும். எந்தப் பிரச்சனையும் வராது. நீ கண்டதை யோசிக்காம, போய் கல்யாணத்துக்காவது உன் புருஷன் காசு செலவு பண்ணுவாரான்னு பாருன்னு சொல்லுச்சு. எனக்கு மனசே கேட்கலடி.” என்னும் போதே தேம்பினார்.
சுருக்கென முள் தைத்தது அவளுக்கு.
“காசு இருந்தா லைஃப் செட்டிலா, எந்தப் பிரச்சனையும் வராதா? அப்போ உனக்கும் அப்பாவுக்கும் காசு இருந்தா, உங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை எல்லாம் சரி ஆகிடுமா? அவரு குடிக்கிறதை நிறுத்திடுவாரா? காசுக்கும் சந்தோஷத்துக்கும் என்னம்மா சம்பந்தம்” என்றவள், பின் விரக்தியுடன்,
“ஓஹோ… நாளைக்கு கல்யாணம் ஆகி, உன்னை மாதிரிக் காசு இல்ல, பணம் இல்லைன்னு இங்க வந்து நிற்கக் கூடாதுன்னு பரந்த மனசோட மாப்பிள்ளைப் பார்க்குறாங்க போல. விடு! நாளைக்கு எல்லாருக்கும் ஒரு காலம் வரும்” என்றதோடு முடித்துக் கொண்டாள்.
ஆகினும் அவளது சொற்களில் அத்தனை வேதனை மண்டிக்கிடந்தது. சாபமிட மட்டும் மனதில்லை.
அவள் செய்த நல்வினைகளின் பலனோ என்னவோ அந்தச் சம்பந்தமும் கைவிட்டுப் போக, சற்றே ஆசுவாசமடைந்தாலும் கீறல் ஆறவில்லை.
அதன் எதிர்வினையை இன்று கிருஷ்ணனிடம் காட்டி விட்டாள்.
பேத்தியின் கேள்வியில் நிலைகுலைந்து போனார் கிருஷ்ணன். 35 வயதில் ஏற்பட்ட இரண்டாவது ஹார்ட் அட்டாக்கிற்கு பிறகு, அவர் எழுந்து நடக்கக் கூடக் கூடாதென்ற மருத்துவரின் அறிவுரையையும் மீறி, உழைத்து முன்னேறினார்.
தனது ஒற்றைப் பெண் பிள்ளையின் எதிர்காலம் கருதி, சிறு வயதிலேயே மணம் முடித்து வைக்க, அந்த மணத்தில் இரு மனங்கள் ஒன்றாமல் போனதில் அவரது பிழையொன்றும் இல்லையே!
நள்ளிரவு நேரம். உறக்கம் வரவே இல்லையென்றாலும் உருண்டு பிரண்டு படுத்தவளுக்கு, தாத்தாவிடம் பேசிய முறை தவறென்று உள்ளம் உறுத்தியது.
அதன் பிறகு, அவர் அவளிடம் பேசவே இல்லாதது அவளை மேலும் குற்ற உணர்ச்சியில் தள்ளியது.
தண்ணீர் அருந்தவென அடுக்களைக்கு செல்ல இருந்தவள், கிருஷ்ணனின் அறையில் விளக்கு எரிவது கண்டு நின்று விட்டாள். அவர்கள் அறையைத் தாண்டித் தான் செல்ல இயலும்.
கூடவே, கல்பனாவின் குரலும் மெல்லமாகக் கேட்டது.
“உங்க பேத்தி தான் படிக்கணும்னு நினைக்கிறாளே. படிச்சு முடிச்சுட்டுக் கூடக் கல்யாணம் பேசலாம்ல” எனத் தயங்கி ஆரம்பித்தார்.
தொண்டையை செருமிய கிருஷ்ணன், “எல்லாம் தெரிஞ்சும் ஏன் புரியாம பேசுற கல்பனா. எனக்கும் என் பேத்தி படிச்சு சொந்தக்கால்ல நிக்கணும்னு ஆசை தான். ஆனா நிலைமை அப்படியா இருக்கு?
இப்பவே மாப்பிள்ளைப் பார்த்தா, அவ அப்பா குடிகாரனா இருக்காரு, சம்பாதிக்கல, என்ன சீர் செனத்தி செய்வாங்கன்னு கேள்வியா கேட்குறாங்க.
நம்ம புள்ளைங்க, ‘உங்க மகளுக்கே எவ்ளோ தான் செய்வீங்க. அவளுக்கு செஞ்சது போதாதுன்னு இப்போ பேத்தி கல்யாணத்தையும் தலைல போட்டுட்டு இருக்கீங்க. நீங்க இப்படி இருக்கறதுனால தான், உங்க மருமகன் இன்னும் திருந்தாம இருக்காரு‘ன்னு சண்டைக்கு வர்றாங்க.
பசங்களைக் கல்யாணம் பண்ண சம்பந்திகளும் ‘நீங்க இந்த வயசுல ஏன் இவ்ளோ பெரிய பொறுப்பை எடுத்துக்குறீங்கன்னு அறிவுரை சொல்றாங்க” பேச இயலாமல் தொண்டையை அடைத்தது பெரியவருக்கு.
“நான் இருக்கும் போதே இவ்ளோ பேச்சா இருக்கே. நாளைக்கு நான் இல்லாம போய்ட்டா நம்ம பேத்தியோட நிலைமை என்னன்னு யோசிச்சுப் பாரு.” வார்த்தைகள் பிசிறடிக்க மனையாளைப் பார்க்க, கல்பனாவும் வேதனையுடன் கணவரின் முகம் பார்த்தார்.
“அவள் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் அவள் கல்யாணத்தை அவளே பார்த்துப்பான்னே வச்சுப்போமே. உன் மருமகன் அதுக்கு எல்லாம் ஒத்துழைக்குற ஆளா? இல்ல, அப்ப அவளுக்கு நல்ல வரன் வந்தாலும் அவரால அதை எடுத்து நடத்த முடியுமா? நம்ம பிள்ளைங்க தான் பணம் குடுத்து முன்னாடி நின்னு நடத்துவாங்களா? சரி… முதல்ல நான் போனதுக்கு அப்பறம் அவளை இன்னும் கொஞ்சம் போட்டுப் படுத்தாம இருக்கணுமே. இங்க படுறதே போதும்னு தான் நான் மாப்பிள்ளையே பார்த்தேன். எனக்கு மனசுக்கு நிறைவா எதுவும் அமையல. வந்த ரெண்டு சம்பந்தமும் அதுவா போகலைன்னாலும், நானே வேணாம்னு சொல்லிருப்பேன் கல்பனா.
வேணும்னே பிள்ளைங்க வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவோமா? நல்லா இருப்பாங்கன்னு நினைச்சு தான கல்யாணம் பண்ணி வைக்கிறோம். என் பேத்திக்காவது நல்ல வாழ்க்கை நான் இருக்கும் போதே அமைஞ்சுடனும் கல்பனா. அதை நான் கண் குளிரப் பார்க்கணும். ஆனா, நான் மாப்பிள்ளைப் பார்த்தா, என் பொண்ணு வாழ்க்கையை அழிச்ச மாதிரி அவள் வாழ்க்கையையும் அழிச்சுடுவேன்னு சொல்லிட்டாளே…” என்னும் போதே அழுகையில் அவர் உடல் குலுங்கியது.
“என்னங்க இது. அவள் சின்னப் பொண்ணு. அவள் பேசுனதைப் போய் பெருசா எடுத்துக்கிட்டு” என்று கல்பனா கணவரைச் சமன்செய்ய முற்பட,
“என் பேத்தி வாழ்க்கையையாவது நான் நல்லபடியா அமைச்சுக் குடுக்கணும் கல்பனா. அதுவரை நான் உயிரோட இருக்கணும்னு தான் தினம் கடவுள்கிட்ட கேட்குற ஒரே ஆசை. அவள் நல்லா இருப்பா. நல்லா இருக்கணும்…” துன்பப்பட்ட நெஞ்சத்தின் அடியாழத்திலிருந்து வந்த வார்த்தைகள், அவளது செவி மடலை நிறைக்க, வந்த தடம் தெரியாமல் மீண்டும் தன்னறைக்குள் புகுந்தாள்.
“காலம் எல்லாத்தையும் எல்லாரையும் மாத்தும் தாத்தா… எனக்கும் மாற்றம் வரும். வரணும்!” மௌனமானக் கண்ணீர் அவள் கண்களிலிருந்து நிற்காமல் வழி
ந்து கொண்டிருந்தது. அவள் மௌனிகா.
முற்றும்
மேகா!
முற்றிலும் வேறான இந்தச் சிறுகதையை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.. ஆனால் உங்களுக்கு என்னுடைய அனுபவத்தை நான் கூறி ஆக வேண்டும்.. அது மட்டும் இல்லை.. இன்னொரு காரணமும் உள்ளது.. அதை நான் இப்போது வெளிப்படையாக கூற முடியாது.. கூற முடியாவிட்டால் என்ன அதை எழுதலாமே என்று உங்களில் யாரேனும் ஒருவர் என்னை நோக்கி கேள்வி எழுப்பலாம்.. ஆனால் நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு தோன்றுவதற்கும் முன்பே படிக்கப்பட்டு விடும்.. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் என்ன எழுத வேண்டும் என்பதற்கான எண்ணமே என் எண்ணம் அல்ல.. அது…
அதை விடுங்கள்.. நான் சொல்ல வந்தது ஒரு பெண்ணைப் பற்றி.. அவள் பெயர் மயூரா.. மயூரா என்னிடம் முதன்முதலாக பேசியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.. அவள் குரலை நான் கேட்டது இல்லை.. ஆனால் அவள் எழுத்தை நான் வாசித்திருக்கிறேன்.. அவள் எழுத்தை அவள் முகமாக நான் கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்திருக்கிறேன்.. ஆனால் அது முழுமையான வெற்றியாக இன்னும் மாறவில்லை.. நானாக அவளிடம் பேச முடியாது.. பேசக்கூடாது.. அது ஏனென்றால் மயூரா…
மயூராவுக்கு என்னை பிடித்திருந்தது.. எனக்கும் தான்.. அவள் என்னிடம் வியந்ததை நான் அவளிடமும் வியந்திருக்கிறேன்.. அவள் என்னை விட கெட்டிக்காரி என்று நான் கூறினாலும் அவள் அதை என்றும் ஒப்புக்கொண்டது இல்லை.. எனக்கு அவள் எழுதிய கதைகளை அனுப்புவாள்.. கவிதைகளை அனுப்புவாள்.. நான் கருத்து கூறவேண்டும் என்று மட்டுமல்ல.. நான் தான் அவளுக்கு முதல் ரசிகன்.. அவளிடம் எனக்கு பிடித்ததே..
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எனக்கென்று சில கட்டுப்பாடுகளை நானே வைத்திருக்கிறேன்.. அதில் முக்கியமான ஒன்று மயூராவிடம் எல்லை மீறி விடவே கூடாது என்பதே அது.. அவள் சில நேரங்களில் என்னிடம் எல்லை மீறினாலும் நான் அவளிடம் இதுவரை என்னுடைய விருப்பத்தை வெளிக்காட்டும்படி எதையுமே கூறியதும் இல்லை நடந்து கொண்டதும் இல்லை.. ஆனாலும் அவள் இல்லாத தனிமையை எப்படி கடப்பது என்பது இன்று வரை எனக்கு குழப்பமே..
குழப்பம் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று உள்ளதா என்ன.. மயூராவின் தனிமையும் என்னுடைய தனிமையும் ஒன்றாக இணைந்த அந்த புள்ளியில் தொடங்கியது குழப்பம் இருவருக்கும்.. யார் முதல் அடியை எடுத்து வைப்பது.. நான் தனித்து வாழ்வதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை ஆனால் மயூராவுக்கு அப்படியில்லை.. எங்களின் உரையாடல்களின் நீட்சி முடிவில்லா பிரபஞ்சம் போல விரிந்து கொண்டே சென்றது.. அறிமுகமான நாள் முதலாய் இருவரும் பேசியதும் பகிர்ந்து கொண்டதும் எழுத்தில் மட்டுமல்ல எங்கேயுமே பதிவு செய்ய முடியாது.. நான் ரகசியம் காப்பதில் கில்லாடி… ஆனால் மயூராவுக்கோ அது கொஞ்சமும் வாய்வராத கலை..
கலைந்த எழுத்துக்களை சரியாக வரிசைப்படுத்தி அர்த்தமுள்ள வாக்கியமாக அமைப்பது போல கலைந்த அவள் எண்ணங்களை என்னுள் செலுத்தி என்னையும் அவளைப் போலவே மாற்றினாள் மயூரா… நான் சொன்னது போலவே என்னால் எதையும் என் எண்ணமாகவே இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில் சிக்கல் உள்ளது… அவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் மயூராவிற்கு நான் அவளை விரும்புவது தெரிந்து விட்டால் எங்கே என்னை என் காதலை மறுத்து விடுவாளோ என்கிற பயமும் என்னை நிம்மதி இல்லாமல் அலைபாய விட்டது…
விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடி வந்து என்னை அழைத்தாள் மயூரா.. என்ன என்று கேட்டபிறகு தான் தெரிந்தது.. அவளுக்கு பிடிக்காத ஒரு பெண்மணி அவளை ஒரு திருமணத்தில் சந்தித்து வழக்கமான கேள்விகளை கேட்டு அவளை சங்கடப்படுத்தி இருக்கிறாள் என்று… அவளை எனக்கும் தெரியும்.. ஆனால் மயூராவிற்கு தெரியாமல் நான் ஏதாவது செய்தால் அதுவும் கண்டிப்பாக அவளுக்கு தெரிந்து விடும்.. எனவே நான் அந்த பெண்ணை எதாவது செய்ய வேண்டும் என்றால் அது மயூரா எனக்கு முழுதாக கிடைத்தால்..
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது இது மாதிரி ஒரு வசனம் சொல் உனக்கு திறமையிருந்தால் என்று என்னிடம் அன்று சவால் விட்டாள் மயூரா.. அவள் கதைகளை கவிதைகளை படித்த எனக்கு இது என்ன பெரிய சவாலா.. சொல்கிறேன் என்று இதை சொன்னேன்.. சொல்றதை சொல்லாம இருக்க முடியாது.. சொல்லாம இருக்கிறதை சொல்ல முடியாது என்று.. அவளால் அன்று முழுக்க தூங்க முடியவில்லை.. எப்படி எப்படி நீ இதை சொன்ன.. என்று என் உயிரை எடுத்து விட்டாள்… சொல்லவா முடியும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று..
என்றைக்கும் இல்லாத அதிசயமாக அன்று ஒரு குரல்வழி குறுஞ்செய்தி எனக்கு அனுப்பி இருந்தாள் மயூரா.. அவள் குரலை அன்று தான் முதன்முறையாக கேட்டேன்.. அவள் குரலை இசையாக மொழியாக எண்ணாக எழுத்தாக பாட்டாக எல்லா வகையிலும் எனக்குள் ஆழமாக புதைத்துக் கொண்டேன்… மீண்டும் அவளை இன்னொரு குரல்வழி குறுஞ்செய்தி அனுப்ப சொல்லும் அளவுக்கு எனக்கு குரல்வளையில் தைரியம் வரவில்லை… வந்தாலும் நான் என்ன நினைக்கிறேன் என்று என்னால்.. அது வந்து..
வந்தாலும் வரவில்லை என்றாலும் பேருந்து தடமும் ரயில் தடமும் அதன் காத்திருத்தலை என்றும் நிறுத்தியதில்லை.. மயூராவை இரண்டு நாட்களாக காணவில்லை.. எங்கே சென்றாள் என்ன ஆனாள் என்று எந்த தகவலும் இல்லை.. எனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடி விட்டேன்… எங்கேயும் கிடைக்கவில்லை… மயூரா சொன்னது ஒருவேளை இதைத்தானோ..
இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன் என்று நீங்கள் இந்த கதையின் முடிவையும் முன்பே யூகித்திருக்க கூடும் ஆனாலும் இந்தக் கதையின் முடிவு என்ன என்பதை நீங்களோ நானோ அல்லது இதை எழுதும் எனக்குள் இருக்கும் எண்ணமோ அது எதுவோ அதை எழுதும் என்னாலேயே கணிக்க முடியவில்லை.. எனக்கு உங்களிடம் நிறைய பகிர வேண்டும்… என் தவிப்பு உங்களுக்கு புரிகிறதா.. என் மயூராவை…
மயூராவின் உடலை அவள் இறந்து இரண்டு நாள் கழித்து, மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்களத்தூர் ஏரியில் போலீஸ் கைப்பற்றியது.. மயூராவின் மரணம் இப்போது வரை குழப்பமாகவே உள்ளது… அவள் மரணம் கொலையா தற்கொலையா என்பதை புலன் விசாரணை பிரிவில் பாடமாக படிக்கும் மாணவர்களுக்கு ஒரு சவாலான தீர்க்க முடியாத பாடமாகவே வைக்கலாம்.. மயூரா எல்லோருடனும் நட்புடனும் அன்புடனும் பழகக் கூடியவள்.. யாரையும் மனம் புண்படும்படி பேசியது இல்லை.. அப்படிப்பட்டவள் திடீரென்று இறந்து போனது பெரிய கேள்விக்குறி..
குறி தப்பினால் இரை தப்பிக்கும்.. இரை தப்பித்தால் தப்பித்த இரையை வேட்டை செய்யும் மிருகம் துரத்தும்.. இதுவே இயற்கை.. இதுவே நியதி.. இந்த விதிமுறைகள் எனக்கு இல்லை.. என் குறி தப்பினாலும் இரையை துரத்தும் பழக்கம் எனக்கு இருந்தது இல்லை… விதிகளை எப்போதும் மீறாதவன் நான்.. இந்த விதிமுறைகள் உங்களுக்கு முதலில் குழப்பமாக இருக்கும்.. என்னை சீண்டுவீர்கள்.. என்னை விதி மீற தூண்டுவீர்கள்.. ஆனால் இது எல்லாமே உங்களுக்கு விளையாட்டு.. எனக்கோ குழப்பம்.. நிம்மதியில்லை.. ஆனாலும் உங்களை நான் என்றும் என் எதிரி என்று நினைக்க என் எண்ணம் என்னை அனுமதிக்கவில்லை.. எண்ணம்.. எண்ணம் என்றால் என்ன.. அதுவும் ஒரு அலைவரிசை தானே..
வரிசை வரிசையாக வண்டிகள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது… மயூரா இன்னும் பெருங்களத்தூரை தாண்டவில்லை… மணி என்னவென்று மொபைலை எடுத்துக் கூட பார்க்க அவள் மனம் எண்ணவில்லை.. வழியில் தெரிந்த ஏதோ ஒரு கடையின் கடிகாரத்தில் நேரம் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.. அவள் மொபைலில் தொடர்ச்சியாக மெசேஜ் டோன் ஒலித்துக் கொண்டிருந்தது.. கார் ஸ்டியரிங்கை பிடித்திருந்த அவள் கைகள் நடுங்கி கொண்டிருந்தது.. யாரோ அவளை கண்காணிப்பது போன்ற பிரமை அவளுக்கு..
அவளை கொன்றவர்களை நான் கண்டுபிடித்து விட்டேன்.. ஆமாம்.. உண்மை தான்.. தப்பிக்கவே முடியாது.. என் மயூராவிடம் இறுதிவரை என் காதலை சொல்லக்கூட முடியாதபடி செய்து விட்டீர்களே பாவிகளே.. என்ன குற்றம் செய்தாள் என் மயூரா.. என் உடைந்து போன ஒவ்வொரு நாட்காட்டியின் முள்ளையும் எடுத்து அவர்கள் தொண்டையை கிழித்து விடும் அளவுக்கு கோபம் வருகிறது.. ஆனால்..
ஆனால் மயூராவை உங்களுக்கு தெரியாது.. உங்களை எனக்கு தெரியும்.. உங்களை நான் சந்தித்ததும் இல்லை.. உங்களைப் பற்றி நான் சிந்தித்ததும் இல்லை.. நான் இப்போது ஒரு தனிமைச் சிறையில் இருக்கிறேன்.. என் மயூரா இல்லாத தனிமை.. வலியை உணரக் கூட முடியாத வலியை என்றாவது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா.. என் வலியும் அப்படிப்பட்ட வலியே.. வலியை வார்த்தைகளாக மட்டுமே என்னால் இப்போது உங்களிடம் சொல்ல முடியும்.. மயூரா.. நீ எப்படி இறந்தாய்.. இறப்பு என்றால் என்ன.. உன் உடல் மறைவதா இல்லை.. உன் உணர்வுகள் மறைவதா.. நம் உணர்வுகள் வேறு வேறா.. எண்ணங்கள் வேறு வேறா.. இதில் உன் எண்ணங்கள் மட்டும் மறைவதா.. எண்ணங்கள் மறையுமா..
மறையும் சூரியன் மேற்கில் என்பது உலக வழக்கம்… எனக்கென்று ஒரு இலக்கண இலக்கிய சொற்றொடர் கோர்வையாக பேசுவது என்பதெல்லாம் இல்லை என்பது என் பழக்கம்.. என் எண்ணங்கள் மிகவும் வேகமானவை.. புல்லட் ரயிலில் உள்ளே இருக்கும் ஈயை உங்களால் பார்க்க முடியும் ஆனால் வெளியே தெரியும் மரத்தையோ மனிதனையோ உங்களால் பார்க்க முடியாது என் எண்ணமானது எப்படிப்பட்டது என்பதை என்னாலேயே கணிக்க முடியாது.. உங்களால் மட்டும் முடியுமா என்ன..
என்ன இருந்தாலும் அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது… அந்த பொண்ணு யாரையோ காதலிச்சு ஓடிப்போக தயாரா இருந்திருக்கு.. அவளை அனுபவிச்சுட்டு அப்படியே ஏரிக்கரைல தண்ணியில அமுக்கிக் கொன்னுட்டான்.. அந்த பொண்ணுக்கு ஏதோ மன நோயாம்.. தனியாவே பேசுமாம்.. அழுவுமாம்.. அவளுக்கு பணப் பிரச்சனை… படிக்கிறதுக்கு லோன் எடுத்து கட்ட முடியல.. ஊரை விட்டு ஓடிப்போக ப்ளான் பண்ணிருக்கு.. அதுக்குள்ளே அந்த பேங்க்காரனுங்களே ஆளை வெச்சு.. என்ன என்னவோ கதைகள் என் மயூராவின் மரணத்தைப் பற்றி.. படிக்கவே அருவெறுப்பாக.. ச்சே.. என்ன ஜென்மங்கள்.. இவர்களா மனிதர்கள்.. எவ்வளவு கீழான எண்ணங்கள்..
எண்ணங்களுக்கு வலிமை இருப்பது உண்மை.. யாரையாவது நீங்கள் மனதில் நினைத்து உண்மையாக அவர்களை பற்றி சிந்தித்தால் அவர்களிடம் இருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்போ குறுஞ்செய்தியோ அல்லது அவர்களே நேரிலோ கூட வருவார்கள் என்று நான் படித்திருக்கிறேன்.. மயூராவுக்கும் எனக்கும் அப்படி நிறைய முறை நடந்து இருக்கிறது.. நான் நினைப்பேன் அவள் வருவாள்.. பிரபஞ்சமே ஒரு எண்ணக்குவியல் என்பது உண்மை தானே.. அடுத்த பத்தியை என்ன வார்த்தை கொண்டு ஆரம்பிக்கலாம் என்று நான் நினைப்பதை விட இந்த பத்தியை எந்த வார்த்தை கொண்டு நான் முடிக்கப் போகிறேன் என்பதில் தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா..
இல்லை.. இல்லவே இல்லை.. மயூராவை என் நினைவுகளில் இருந்து அழிப்பது சாத்தியமா இல்லவே இல்லை… அணுவை அழிக்க முடியுமா.. பிளக்க முடியும்.. ஆனால் அழிக்க முடியாது.. என்னை அணு அணுவாய் பிளந்தாலும் அவள் நினைவை என்னை விட்டு அழிக்க முடியாது… எவனாலும் முடியாது..
முடியாது என்று தெரிந்தே இந்த கதையை எழுதத் தொடங்கினேன் ஆனால் என்னாலும் எழுத முடியும் என்று எனக்கு கற்றுக் கொடுத்ததே என் மயூரா தான்.. என் மயூரா என் எண்ணத்தில் விதையாய் விழுந்து என் எழுத்தில் கதையாய் விரிந்தவள்.. அவளை நீங்கள் பார்த்திருக்க முடியாது.. பேசியிருக்க முடியாது.. அவள் எழுத்தின் உருவத்தில் அவளின் உருவத்தை எனக்குள் வரைந்திருக்கிறேன்… அவள் சொற்களை மாலையாய் கோர்த்து கவிதையாய் கொட்டியதை வாரி என்னுள் சேமித்து வைத்திருக்கிறேன்.. அவளை கொன்றது யார் என்று எனக்கு தெரியும்.. என்னை தடுத்து நிறுத்த…..
சார்.. சார்.. திடீர்னு பவர் ஷட் டவுன் ஆய்டுச்சு.. ஜெனரேட்டரும் வேலை செய்யல… என்னன்னே தெரியல.. கொஞ்சம் சீக்கிரம் ஆளுங்களை அனுப்புங்க சார்..
போனில் பேசி விட்டு வைத்தான் கிஷோர்.. பெருங்களத்தூரில் அந்த ஐடி நிறுவனத்தின் எட்டாவது மாடியில் இருந்து கொண்டு ஜன்னலை திறந்து விட்டான்.. காற்று சிலு சிலுவென்று முகத்தில் அடித்தது.. கீழே ஏரிக்கு அருகில் தூரத்தில் ஒரு கார் வெளிச்சம்..
அவனுடைய லேட்டஸ்ட் சேம்சங் கேமராவை ஜூம் செய்து பார்த்தான் கிஷோர்.. ஒரு பெண்ணை இரண்டு இளைஞர்கள் காரிலிருந்து கீழே தள்ளினர்… கிஷோர் அதை வீடியோ எடுக்க ஆரம்பித்தான்.. அவர்கள் அவளை கொன்று ஏரியில் வீசி விட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்..
கிஷோருக்கு வியர்த்து ஊற்றியது.. அடுத்த நொடி விளக்குகள் எரிந்தது.. பவர் திரும்பியிருந்தது…
எடுத்த வீடியோவை என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தான்.. யாரைக் கேட்பது என்று குழம்பினான். மூன்றாம் நாள் இரவு சிறிது நேரம் யோசித்துவிட்டு அவன் லேப்டாப் முன்பு சென்று அமர்ந்தான்.
கடந்த இரண்டு வருடமாக அவனுக்கு கை கொடுப்பது இந்த புதிய A.I.தொழில்நுட்பம் தான்.. சின்ன சின்ன மெயில் அனுப்புவதிலிருந்து அவனுக்கு assist பண்ணும் புதிய chatbot தான் அது..
ஹாய் கெவின், எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்..
ஹாய் கிஷோர், என்ன பண்ணனும் சொல்லுங்க..
கிஷோர் வீடியோவை அப்லோட் செய்தான்..
இது மாதிரி சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் எனக்கு அனுப்புவது தவறு.. உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.. எச்சரிக்கை..
இல்லை இது சித்தரிக்கப்பட்டது இல்லை.. இந்த வீடியோவை நான்தான் எடுத்தேன்.. ஒரு பொண்ணை என் கண்ணு முன்னாடியே..
பாவம் யார் இந்த பெண்..
யாரோ பெயர் மயூராவோ மந்திராவோ என்னவோ..
சரி விடுங்கள்.. இப்போது நான் என்ன உதவி செய்ய வேண்டும்..
இப்போ நான் என்ன பண்ணனும்.. போலீஸ்கிட்டே போக பயமா இருக்கு.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. மனசுல நிம்மதி இல்லை.. ஒரு மாதிரி வாந்தி வர மாதிரி இருக்கு..
வாந்தி வருவது போல் இருந்தால் சிறிது எலுமிச்சம்பழம் கலந்த சாறை எடுத்து..
ஸ்டாப்.. என் சூழ்நிலையை புரிஞ்சுக்கோ..
உங்களுக்கு நான் ஒரு யோசனை கூறவா..
சொல்லு..
கண்களை மூடி கீழே நான் உங்களுக்காக பிரத்யேகமாக கம்போஸ் செய்து கொடுத்துள்ள ஆடியோவை ப்ளே செய்து கேட்கவும்.. அந்த இசை அலைவரிசை உங்களை அமைதிப்படுத்தும்.. மனதை ஒருநிலைப்படுத்தி 3 நிமிடங்கள் அதை கேட்கவும்..
கிஷோர் கண்களை மூடி கேட்டான்..
மூன்று நிமிடங்கள் கழித்து,
கிஷோரின் மொபைல் சிணுங்கியது.. கண்களை திறந்து மொபைலை எடுத்தான்.
ஹலோ..
சார்.. food delivery வந்திருக்கேன் சார். உங்க அப்பார்ட்மெண்ட் கீழே தான் இருக்கேன்..
சாரி ராங் நம்பர்..
சார்.. நீங்க கிஷோர் தானே..
இல்லை கெவின்..
சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.
முற்றும்.
வாழ்வியல் (நித்யா ராஜா)
மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகிலுள்ள சிறிய கிராமம் அவர்களது. தண்டபாணி, சுசீலா என்ற வயதான தம்பதியருக்கு நீண்ட நாள் ஆசையாய் இருப்பது தங்கள் பண்ணை இடத்தில் சொந்த வீடு கட்டி, அதில் குடியேறி தங்கள் கடைசி கால வாழ்வை அதில் கழிக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்கென காத்திருந்தது போல் அவர்கள் இருந்த மண்சுவர் வீடும், இரண்டு வருடங்களுக்கு முன் அடித்த பலத்த காற்று மழையில் இடிந்து விழுந்துவிட்டது. அதில் தங்கள் இடத்தில் ஒரு சீட்டு வீடாவது போட்டு செல்வோம் என்ற ஆசை இன்னும் அதிகரிக்க, அதற்கான பணத்தைச் சேகரிக்க இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது அவர்களுக்கு. இப்பொழுது வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
பிள்ளை இல்லாத இருவருக்கும் அரசு கொடுக்கும் முதியோர் பணம் உதவியாக அமைந்தது. காட்டில் களை எடுக்கும் வேலை இருந்தால் அதையும் செய்வார்கள். அப்படி சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் வைத்து, வீடு கட்ட ஆசை கொண்டு, குறைந்த விலையில் வீடு கட்ட விசாரிக்க அவர்களின் நிதியளவை விட அதிகம் சொன்னார்கள். யாராவது குறைந்த விலையில் கட்டித்தர மாட்டார்களா என்று ஏங்கியிருந்த வேளையில், உறவினர் ஒருவர் தான் மேஸ்திரி என்றும் தானே அவர்களுக்குக் குறைந்த விலையில் கட்டித் தருவதாகவும் சொல்லி, வீடு கட்டும் வேலையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார். சொந்தக்காரன் என்பதால் சரியாக செய்வான் என்ற நம்பிக்கை தண்டபாணிக்கு.
மூன்று மாதங்களில் வீடு கட்டும் வேலை முடிந்துவிட, கையோடு பாலும் காய்த்துவிட்டார்கள். அதற்கே கையிருப்பு அனைத்தும் கரைந்து போயிருந்தது. மாதம் ஒருமுறை வரும் அந்த சொற்பமான ஓய்வூதியப் பணம் மட்டுமே இப்பொழுது அவர்களது ஆதாரம், அகாரம் எல்லாம். அதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது சந்தோசத்தில் வில்லங்கமாக வந்தது மின்சார இணைப்புப் பிரச்சனை.
சொந்த இடத்தில் சொந்தமாக வீடு கட்டியவர்களுக்கு மின்சாரம் இழுக்க அனுமதி மறுக்கப்பட, ஏனென்று விசாரிக்கையில் இடத்திற்கு பத்திரம், பட்டா இல்லை என்றனர்.
‘தாத்தா, அப்பா காலத்திலிருந்தே அது தங்கள் பரம்பரை இடம்’ என்று அவர்களிடம், மின்சார இணைப்பு வேண்டுமென்று கேட்டார்.
“அந்த இடம் உங்களுடையது என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரம் வேண்டும்” என்று அவரிடம் கேட்டனர் அவர்கள்.
‘அவர்கள் கேட்பதும் சரிதான். என்ன செய்வது’ என்ற யோசனையில் இருந்தவரிடம், வந்த துரை, ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம்’ பற்றி சொல்லி, “கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரளித்தால் நிலம் உங்களுக்குச் சொந்தமானது என்ற உறுதி கிடைக்கும். அதை வைத்து மின்சாரம் இழுக்கலாம்” என்றதும், மறுநாளே துரையையும் அழைத்துக் கொண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் புகாரளித்து வீடு வந்தார்.
வீடு கட்டி முடித்தும் இருண்டு கிடந்த வீட்டைக்கண்டு மனம் அழுது ஓலமிட்டது கணவன், மனைவிக்கு.
“எதாவது செய்து வீட்டுக்கு வெளிச்சம் கொண்டு வாங்க” என்ற மனைவியிடம்… “வார்டு மெம்பர் பெருமாள் நம்ம சொந்தக்கார பையன்தான் சுசீலா. வீட்டுக்கு வயரிங் வேலையும் பாக்கறான். நம்ம மேஸ்திரி துரைக்கும் அவனுக்கும் ஆகாததால வீட்டுக்கு வேற ஒருத்தனை வைத்து வயரிங் பண்ணிட்டான். பெருமாள் வயரிங் பண்ணிருந்தா அவன் வார்டு மெம்பர் என்பதால அவனே இழுத்துத் தந்திருப்பான். இப்ப என்ன சொல்வானோ? நான் அவனைப் பாத்துட்டு வரேன்” என்று சென்றார்.
“பட்டா, சிட்டானு எதுவும் இல்லனு சொல்லுறீங்க. அப்ப கஷ்டம் தான் மாமா” என்றார் பெருமாள்.
“ஏன் பெருமாளு அந்த இடம் எங்களோட பரம்பரை இடம்னு உனக்கு தெரியுமே. கிராமத்துல எல்லாரும் பத்திரம் பதிஞ்சிதான் கரண்ட் இழுத்தாங்களா? நீயே இப்படி சொன்னா எப்படிய்யா?”
“சரிதான் மாமா. ஆனாலும், ஒன்னும் செய்ய முடியாதே. வேணும்னா ஒன்னு செய்யலாம். என்னோட வீட்டு தீர்வை ரசீது வைத்து, என்னோட பெயரில் உங்க இடத்துக்கு தீர்வை ரசீது செய்தால், உடனே கரண்ட் இழுக்கலாம்” என்றார்.
“அது எப்படிய்யா சரியாயிருக்கும். அப்ப என் வீடு உனக்குச் சொந்தம்னு ஆகாதா?”
“என்ன மாமா இப்படி பேசிட்டீங்க? என்னை நம்பமாட்டீங்களா மாமா? நான் இங்க நிறைய பேருக்கு என் பெயரில் எடுத்துத் தந்திருக்கேன். அவங்க இடம் என்ன என் பெயரிலா இருக்கு? இப்பவரை அவங்க ஏன்னு கேள்வி கேட்டதில்லை. நீங்க என்னனா இப்படி பயப்படுறீங்க? ஊர்ல உள்ள ஒருத்தரோட தீர்வை ரசீது இருந்தாதான் கரண்ட் உடனே தருவாங்க. இல்லனா ரொம்ப கஷ்டம். சொல்லுங்க செய்திடலாம்” என்றார் பெருமாள்.
“ம்ம்ம்.. அது இல்லாம, வயசான எங்களுக்காக செய்ய முடியுமா பாருய்யா.”
“கேட்டுப் பாக்கறேன் மாமா” என்று முடித்துவிட்டார் பெருமாள்.
“கிடைச்சிருமாங்க?” எதிர்பார்ப்புடன் கேட்ட மனைவியிடம் பெருமாள் சொன்னதைச் சொல்ல, “அவன் பேர்ல தீர்வை போடனுமா? நல்ல கதையால்ல இருக்கு. என்ன பேசிருக்கான் அவன். தீர்வை போடுறதே நம்ம இடம்னு உறுதி செய்ய. அவன் பெயரில் போட்டா இடம் அவனோடதுனு உறுதியாகாதா? அவன் நல்லவனாவே இருக்கட்டுமே. அடுத்து வரும் அவன் பிள்ளைங்க நம்ம இடத்துக்கு உரிமை கொண்டாடாதுனு என்ன உறுதி? அவனை வைத்து வேலை பார்க்கலனு பழிவாங்குறானா? அவன் நினைச்சா நமக்கு இரண்டே நாளுல வழி செய்யலாம். உறவுக எல்லாம் கட்டியிருக்க கோவணத்தையும் உருவதான் காத்திருக்கு” என அங்கலாய்த்தார் சுசீலா.
“நான் இன்னொரு முறை போயி விஏஓவ பாத்துட்டு வரேன் சுசீலா. நம்ம இடம்னு தகவல் தெரிஞ்சா போதும். அப்படியே இலவசப் பட்டாவுக்கும் எழுதிக்குடுத்துட்டு வரேன்.”
“இலவசப்பட்டா மூனு வருஷத்துக்கு ஒருமுறை வந்து எழுதுவாங்களாம். ஆறுமாசம் முன்ன எழுதி குடுத்துட்டு போனாங்களாம். அடுத்து ரெண்டரை வருஷம் கழிச்சிதான் வருவாங்களாம். இப்படினு தெரிஞ்சிருந்தா அப்பவே எழுதிருக்கலாம். மக்காவே இருந்துட்டோம். இப்ப எவன் எவனோ நம்ம இடத்தை அபகரிக்க பாக்கறான்” என்று புலம்பினார் சுசீலா.
“புலம்பாம இரு. எதாவது செய்யலாம்” என்று நம்பிக்கையுடன் பேருந்து நிலையம் நோக்கிச் செல்ல, “மாமா” என்ற பெருமாளின் குரலில் நின்றார்.
“மாமா கரண்ட் ஆபீஸ்ல உங்களை வர சொல்லுறாங்க. போயி பாருங்க.”
“சரிய்யா” என்று மின்சார வாரிய அலுவலகம் சென்று நிற்கவும், அவரை அடையாளம் கண்ட மூவர், அவரை தனியே அழைத்துச் சென்று திட்ட ஆரம்பித்தனர்.
“எதுக்காக பேசுறீங்கனு சொல்லிட்டு பேசும்மா. கூப்பிட்டு வச்சி திட்டினா என்ன செய்ய?” என்றார் அவர்கள் பேசுவது புரியாது.
“ஓ.. உங்களுக்கு ஏன் திட்டுறோம்னு தெரியாது. இங்க பாருங்கய்யா வயசான காலத்துல உண்டோமா, உறங்கினோமானு இருக்கனும். அதை விட்டுட்டு எங்க மேல புகார் குடுத்து வச்சிருக்கீங்க? என்ன நினைச்சிட்டிருக்கீங்க? எல்லா டாக்குமென்டும் சரியா இருந்தா நாங்க ஏன் கரண்ட் தரமாட்டோம்னு சொல்லுறோம். எதுவுமே இல்லாம வந்து கரண்ட் தாங்கன்னா?” கோபத்தில் கொந்தளித்தாள் ஊழியை ஒருவர்.
“என்னம்மா சொல்லுற? நான் எங்கயும் புகாரளிக்கலையே. கரண்டுக்காக அலையுறவன் எதுக்காக உங்க மேல புகாரளிக்கிறேன்? யாரோ தப்பா சொல்லிருக்காங்கம்மா” என்றார் பணிவாய்.
“அப்ப தாலுகா ஆஃபீஸ்ல செஞ்சது என்ன?”
“அது இடம் என்னோடதுனு தகவல் தெரிஞ்சிக்கிற சட்டத்துல போட்டது. அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்?”
“அங்க இருந்து எங்களை காய்ச்சி எடுக்குறாங்க” என்றவருக்கு கிராம நிர்வாக அலுவலர் பேசியது மனதில் ஒலித்தது. “அங்கேயே பேசி முடிக்க வேண்டியதுதான? கரண்ட் தரமாட்றாங்க. எனக்கு எங்க இடம் இதுதான் என்பதற்கு சான்று வேணும். சீக்கிரமே பார்த்து குடுங்கனு நிற்கிறார். கரண்ட்தான எத்தனை பேருக்கு எதுவுமில்லாம செய்து குடுத்திருக்கீங்க. வயசானவருக்கு குடுக்குறதுல என்ன பிரச்சனை? பணத்தை மட்டுமே பார்க்காதீங்கய்யா. வயசான மனுசன அலைய வச்சிட்டு. இன்னொரு முறை அவர் இங்க வரக்கூடாது” என்று அந்த மூவரையும் திட்டியிருந்தார்.
“இனிமேல் கரண்ட் வேணும் அது இதுனு வந்தீங்க அவ்வளவுதான். முறைப்படி வாங்க தரோம்” என்றார் ஒருவர்.
“எங்க வீட்டு பக்கத்துல ஒருத்தருக்கு எதுவும் கேட்காம பணம் மட்டும் வாங்கிட்டு குடுத்திருக்கீங்க? என்னிடம் கேட்டிருந்தா கடன்பட்டாவது தந்திருப்பேனே” என்றார் ஆதங்கத்துடன்.
“இந்த வாய்க்கு தான் தரல. இனி நீங்க என்ன செஞ்சாலும் முறையா தான் நடக்கும். இன்னும் ஒருவாரத்துல விஓ வேற ஊருக்கு மாற்றலாகி போறார். அப்புறம் எங்களிடம்தான் வந்து நிக்கனும். கரண்ட் குடுத்துட்டா பாருங்க” என்று அவரை நோகடித்து அனுப்பினர்.
என்ன செய்வதென்று புரியாது தெரிந்தவர் ஒருவரிடம் புலம்பிக் கொண்டிருக்க, ‘ஊர்த்தலைவரிடம் கேட்க சொல்லி’ அவர் சொல்ல, நேரே ஊர்த்தலைவரிடம் வந்தார்.
அங்கே பெருமாளும் அமர்ந்திருக்க, தவறாக தோன்றினாலும் அதை பெரிதுபடுத்தாது யோசனையாய் சென்றவர், தன் பிரச்சனையைச் சொல்லி உதவி கேட்டார். அதற்கு முன் மின்சார ஊழியரிடமிருந்து வந்த போன்காலை அறியவில்லை தண்டபாணி.
“ஐயா! நீங்க பட்டா வாங்காம கரண்ட் கஷ்டம். அவங்க மேல புகார் குடுத்ததால இன்னும் கெடுபிடியாகுறாங்க.”
“நான் அவங்களை குறிச்சி எதுவும் சொல்லலை. வேணும்னே பன்னுராங்கையா. ஊர்த்தலைவர் உன்னால முடியுமேய்யா. நீ கொஞ்சம் சொல்லக் கூடாதா?
“ம்ம்.. பெருமாள் என்ன செய்யலாம்?”
“செய்ய எதுவுமில்ல அண்ணா. அவர் வீட்டு பக்கமா போயிட்டுதான் வரேன். வீட்டு மேல கரண்ட் லைன் போவுது. வாய்ப்பேயில்ல” என்றான்.
“என்னய்யா சொல்லுற? கட்டி முடிச்ச பின்னதான் அதை கவனிச்சி துரையிடம் கேட்டேன். அதுக்கு அவன், கவனிக்காம கட்டிட்டேன். இனி ஒன்னும் செய்ய முடியாது. கரண்ட் எடுக்க அதெல்லாம் பிரச்சனையில்ல சொன்னான். அதெப்படி கேட்டதுக்கு, அங்க இருக்கிற மேகநாதன் வீட்டையும், பால்கார பாண்டி மகன் வீட்டையும் காட்டினானே. அங்கெல்லாம் வயர் மேலதான் போகுது. வீட்டுல கரண்ட் இருக்கு. நீ இப்படி சொல்லுற?”
‘அந்த துரை கையில் கிடைச்சான்’ என மனதினுள் திட்டி, “பிரச்சனை இல்லயா? அதுதான் பிரச்சனையே. மழை நேரத்துல அந்த வயர் அறுந்து வீட்டுல விழுந்தா குடும்பம் மொத்தமும் காலி. அப்புறம், எங்களை வந்து ஏன் குடுத்தீங்க? எதுக்கு குடுத்தீங்கனு கேள்வியா கேப்பாங்க.”
“கரண்ட் இழுக்கலனாலும் அதுதானய்யா நடக்கும். அப்ப அந்த போஸ்டை நகத்தி வச்சிடலாமே?”
“அதுக்கு குறைஞ்சது ஐம்பதாயிரம் ஆகும். நீங்க தருவீங்களா? அந்தளவு வசதியிருந்தா பாருங்க. நான் செய்றேன்” என்றார் ஊர்த்தலைவர்.
“என் நிலையை தெரிஞ்சிட்டும் இப்படி பேசுறீங்களேய்யா. இதுக்கு வேற வழியில்லயா?” என்றவர் குரலில் தோற்றுக் கொண்டிருக்கும் தவிப்பு.
“ஏன் இல்ல? அதான் பெருமாள் அவர் பேருல தீர்வை போட சொன்னாராமே. அதைச் செய்திடுங்க. பட்டா வந்ததும் உங்க பேர்ல முடிச்சிடலாம்.”
“நீங்களும் இப்படி பேசினா எப்படிய்யா? எதாவது வழி சொல்லுவீங்கனு தான வந்தேன். பணம் எதுவும்…”
“அனைத்தை பத்திலாம் பேசாதீங்க. இதான் முடிவு. சரி என்றால் சொல்லுங்க” என்று முடித்துவிட, பேச முடியாது வாயடைத்து சென்றார் தண்டபாணி.
“என்ன பெருமாள் இப்ப சந்தோசமா? கரண்ட் ஆபீஸ்ல இருந்து அவருக்கு சாதகமா எதுவும் பேசக்கூடாதுன்னு சொல்லுறாங்க. அங்கேயும் நீதான் எதோ செய்திருக்க தெரியுது” என்க,
“ஆமாண்ணே. அந்த துரை சொல்லை கேட்டு, வீட்டுக்கு கரண்ட் எடுக்க என்னிடம் வரலண்ணே. வேற ஒருத்தன விட்டு வேலையை முடிச்சிட்டார். ஏற்கனவே அந்த துரைக்கும் எனக்கும் ஆகாது. வார்டு மெம்பருக்கு என்னை எதிர்த்து நிக்கிறேனு அவன் செய்யாத அட்டகாசம் இல்ல. அது இவருக்கும் தெரியும். இருந்தும் கண்டுக்கலை.”
“அதுக்காக இவரை பழிவாங்குறியா? உன் சொந்தக்காரர் தான பெருமாள்? பார்த்தா பாவமா இருக்காரு.”
“என்ன பெரிய பாவம்? கேட்க நாதியில்லாதவர். சொந்தக்காரங்க எல்லாம் பெருசா இவர கண்டுக்கல. சரி நம்மளிட்ட தான் வரனும். கொஞ்சம் அமௌன்ட் தேத்தலாம் பார்த்தா, அவன் என்னவோ எல்லாத்தையும் கிழிச்சிடுவானு என்னிடம் வரல. வந்திருந்தா அவருக்கு இந்நேரம் முடிச்சி குடுத்திருப்பேன். அதான் கிடைச்ச நேரத்தை எனக்கு சாதகமா திருப்பிட்டேன்” என்ற குரலில் நிறைய வன்மம்.
“ஏதோ எனக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தா சரி” என்றார் ஊர்த்தலைவர்.
“சுசீலா ஒரு சொம்பு தண்ணி குடு” என்றதும் கணவனிடம் வந்த சுசீலா, “எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா? எப்ப கரண்ட் வருதாம்?” ஆசையில் கேட்டார்.
“எனக்கு வரும்னு தோணலைமா. பெருமாள் அவன் பெயர்ல எடுக்குறதுல இருக்கான். வரும்போது துரையை பாத்தேன். அவன் அங்க வேலை செய்யுற வேற ஒருத்தரிடம் பேசிருக்கானாம். பத்தாயிரம் தந்தா வேலை முடிஞ்சிடும் சொல்லுறான். அவ்வளவு பணத்துக்கு எங்க போறது தெரியலை.”
“நம்ம பர்வதத்துட்ட வட்டி இல்லாம கேட்டு பாக்கலாம். மாசம் ஆயிரம் குடுத்தா பத்து மாசத்துல முடிஞ்சிடும். நான் கேக்கவா?”
“வேற வழியில்ல கேளு” என்றார்.
மறுநாள் பர்வதத்திடம் என்ன பேசினாரோ பத்தாயிரம் வாங்கி வந்து கையில் கொடுத்து, “ரெண்டு நாளுல கரண்ட் இழுக்கனும்” என்றார் மனைவிக்கான கட்டளையுடன்.
நேரே பணத்துடன் துரையை பார்க்கச் செல்ல, துரைக்கோ பணம் என்றதும் மனதில் மகிழ்ச்சி. ஏற்கனவே தான் சொன்ன அலுவலர் ஒருத்தரிடம் அழைத்துச் சென்று அவரிடம் பணத்தைக் கொடுத்து விசாரிக்க, “இன்னைக்கு அஞ்சி மணிக்கு வரோம்” என்று அனுப்பனர்.
அவர்களும் வந்து பார்த்து, “வயர் மேல போகுறதை ஏன் சொல்லலை?” என திட்டிச் செல்ல, பணமும் அம்போவென்று சென்றது. அடுத்த ஒரு மாதம் பணத்தை மட்டுமாவது திரும்ப தர கேட்டு அந்த அலுவலர் பின்னால் அழைய மட்டுமே நேரம் சென்றது. கடைசிவரை கரண்டுக்கும் வழியில்லை. பணத்திற்கும் வழியில்லை.
துரையிடம் கேட்டால், “நான் கரண்ட் மேல போறது சொல்லிதான் கேட்டேன். பேசுனப்ப சரி சரின்னு சொன்னாரு சித்தப்பா. இப்ப இந்தா அந்தானு இழுக்கிறார். நம்ம பணத்தை ஏமாத்திட்டாங்க போல” என்றார் வருந்துவது போல். அந்த பத்தாயிரத்தில் ஐந்தாயிரம் இவர் கைக்கு அன்றே வந்துவிட்டது.
கூட இருந்தே குழி பறிப்பவர்கள் தான் இங்கு அதிகம். யாரையும் நம்பாதே!
வாடகை வீட்டை விட்டு, சொந்த வீட்டிற்கு வந்துவிட்டனர் தண்டபாணி, சுசீலா தம்பதியர்.
‘அந்தக்காலத்தில் இப்படி விளக்கா இருந்தது? விறகடுப்பும், மண்ணெண்ணை விளக்குமாக நாம் வாழவில்லையா?’ என்ற எண்ணத்தில் வந்துவிட்டனர்.
இதோ இன்றும் மின்சாரத்திற்காகவும், இலவசப்பட்டா கொடுக்க எப்பொழுது வருவார்கள் என்றும், இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வரும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வயதான தம்பதியர்…?
வணக்கம், தூர நிலவு சாதாரண ஒரு பெண்ணின் மன உணர்வுகளையும், புரிதல் ஆகப்பெரும் வரம் என்பதும் அதுவே இல்லறத்தின் அடித்தளம் என்பதையும் பதிவு செய்யும் முயற்சி. வாசித்து விட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள் வாசக நட்புகளே.
யாழினி அன்று எழும் போதே அத்தனை உற்சாகமாக இருந்தாள். வேக வேகமாய் மகனுக்கு இருவேளை உணவையும் சமைத்து, அவனைக் கிளம்ப வைத்துப் பள்ளிக்கு அனுப்பி விட்டாள். மாமியாருக்கு காலை உணவை எடுத்து வைத்து விட்டு, அவள் புடவை மாற்றவும்,
“வெளிய போறியா யாழினி?” புவனா கேட்க,
“ஆமா அத்த… அவருக்குப் பிடிச்ச தின்பண்டம் செய்யக் கொஞ்சம் பொருள் இல்ல. அதெல்லாம் வாங்கிட்டு, கூடவே காயும் வாங்க போறேன். உங்களுக்கு எதுவும் வேணுமா அத்த?” யாழினி கேட்க,
“எனக்கு எதும் வேண்டாம். நித்யா, ஷர்மிளா எல்லாரும் வருவாங்க, தலைக்கு வைக்க மல்லிகை பூ வாங்கிக்கோ.” புவனா சொல்ல, சரியெனத் தலையாட்டி இருந்தாள்.
கணவனுக்காகத் தேடித்தேடி நிறைய யோசித்து, அவனுக்குப் பிடிக்கும் என வாங்கி, அவள் வீடு வந்து சேரவே மதியம் மூன்றை தொட்டு இருந்தது. மாமியார் உண்டாரா எனக் கேட்டவள், கணவனுக்குப் பிடித்த அதிரசம் செய்ய வேண்டி வெல்லபாகை காய்ச்சி, மாவில் கலந்து வைத்தாள். அடுத்து முறுக்கு, சீடை, தட்டையெனச் செய்து வைத்தவள்.
அதற்குள் மகன் வரவும், அவனுக்குப் பால் கலந்து கொடுத்தவள், மகனுக்கும் மாமியாருக்கும் தின்பண்டம் எடுத்துக் கொடுத்தாள். அதன்பின் மரவள்ளி கிழங்கில் வத்தல் செய்து மிளகாய் தூளை கொஞ்சமாய் சேர்த்து கலந்து வைத்தாள். அவளைச் சுத்தம் செய்து வந்தவள் காபி போட்டு விட்டு வந்து அமர, அலைபேசி அடித்தது, இவள் ஆவலாக அதை எடுக்க,
“கிளம்பிட்டேன். நாளைக்கு காலையில வந்துடுவேன்.” சொன்னவன் சட்டென வைத்து இருந்தான்.
“சசியா யாழினி?” புவனா கேட்க,
“ஆமா அத்த. கிளம்பிட்டாறாம். நாளைக்கு காலையில இங்க இருப்பேன். சொன்னாங்க.” யாழினி புன்னகை முகமாகக் கூற, புவனா அழைத்து அவரின் மகளிடமும், மகனிடமும் சொல்லி இருந்தார்.
யாழினி இரவு உணவு என்ன செய்ய என்னும் யோசனையில் அடுப்பறைக்குள் செல்ல, புவனா வந்து அவள் முன் நின்றார்.
“நித்யாவும் சரண் மாப்பிள்ளையும் வராங்க யாழினி, இடியாப்பம் குருமா வைக்கிறியா? நான் உனக்கு உதவி பண்றேன்.” சொன்னவர் வேலையைத் தொடங்க, யாழினியும் உடன் உதவி இருந்தாள்.
புவனா ராகவேந்திரன் இருவரின் இளைய மகன் சசிதரன். அவனுக்கு முன்னே அண்ணன் சுரேந்தரன், அடுத்து தங்கை நித்யா. ராகவேந்திரன் உழைத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்த சொத்துப் படிப்பு. சசிதரன் இயந்திர பொறியியல் படித்துச் சிறு சிறு நிறுவனங்களில் வேலை பார்த்து, இப்போது ஜெர்மனியில் தலை சிறந்த கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் உயற்பதிவியில் இருக்கிறான். சுரேந்தரன் அரசு வங்கியில் மேனேஜராக இருக்கிறான். அவனின் மனைவியான சந்திரா அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புக்குக் கணிதம் கற்பிக்கும் ஆசிரியை. நித்யாவும் சரணும் ஐடி துறையில் வேலை பார்க்கிறார்கள்.
அரை மணி நேரத்தில், நித்யா, சரண் இருவரும் வந்தவர்கள் மாமியாரின் அறையில் உடை மாற்றி விட்டு வந்து ஹாலில் அமர்ந்து மருமகன் உடன் டிவியில் மூழ்கி இருந்தனர். இரவு உணவு தயாராகவும் யாழினி அனைவருக்கும் வைத்துக்கொடுத்து விட்டு அவளும் உண்டு இருந்தாள். இரவு மகனுடன் படுக்கையில் விழுந்தவளுக்கு கணவனின் நினைவு. தூக்கமே இல்லாது நேரமே எழுந்தவள் குளித்து, காபி தயாரித்து, வாசல் கூட்டி கோலமிட்டு நிமிரச் சசிதரன் வந்திருந்தான். இவள் மொத்த பிரியத்தையும் சேர்த்து அவனைப் பார்த்துச் சிரிக்க, அவனோ நேராய் வீட்டின் உள்ளே சென்று இருந்தான்.
தாயின் அருகில் அமர்ந்து அவன் நலம் விசாரிக்க, நித்யா, சரண், என அனைவரும் அவனின் நலத்தை விசாரித்து இருந்தனர்.
“ஶ்ரீ எங்க?” சசி கேட்க,
“தூங்குறான் சசி. இன்னிக்கி லீவ் தானே? நீ போய்க் குளிச்சுட்டு வா, காலைச் சாப்பாடு சாப்பிட்டு ஓய்வு எடுக்கலாம்.” புவனா சொல்லவும் சரியென அறைக்குள் சென்று இருந்தான்.
கணவன் அறைக்குள் செல்லவும் பின்னே சென்றவள் கண்டது மகனை முத்தமிடும் தன்னவனை தான். யாழினி முகத்தில் புன்னகை பிறக்க, அதே நேரம் ஶ்ரீ எழுந்து இருந்தான். தகப்பனை கண்ட ஆனந்தத்தில் கழுத்தோடு அவனைக் கட்டிக்கொண்டு கட்டிலில் குதித்து இருந்தான்.
மகனை அள்ளி முத்தம் வைத்தவன் குளியல் அறைக்கு மகனைத் தூக்கிக்கொண்டு சென்று இருந்தான். அவனே கதை பேசி மகனைக் குளிக்க வைக்கத் தொடங்க, யாழினி வேக வேகமாய் காலைச் சமையலை தொடங்கி இருந்தாள். புவனா மகனுக்குப் பிடித்த சட்னிகளை எல்லாம் அரைக்க, நித்யாவும் இப்போதும் உதவ, சமையல் வேலை முடிந்திருந்தது. யாழினி உளுந்த வடை போட்டு எடுக்க, சசிதரன் யாழினியெனக் கத்தி அழைத்து இருந்தான். இவள் அறைக்குள் நுழைந்து அவன் முகம் பார்க்க,
“இந்தத் துண்டு கட்டிட்டே வீட்டுக்குள் அலையவா? ஒரு துணி கூட எடுத்து வைக்காம அப்படி என்ன வேலை உனக்கு?” சசி கேட்க, அவனின் கப்போர்ட் சாவி எடுத்துத் திறந்து அவனின் உடைகளை அவசர அவசரமாக எடுத்து வைத்தாள்.
“வருஷத்துக்கு ஒருமுறை தான் வரேன். அதுக்கே நல்ல கவனிப்பு.” புலம்பியவன் உடை மாற்றி வெளியே செல்ல, யாழினி கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
கணவனுக்கு முதலில் தட்டு வைத்து அவள் உணவைப் பரிமாற, அதற்கும் முறைத்தான்.
“சரணுக்கு யார் வைப்பா? அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை.” சசி சிறுகுரலில் அவளை அதட்ட, நித்யா, சரண், புவனா, ஶ்ரீயென அனைவரையும் அமர வைத்துப் பரிமாறி இருந்தாள்.
அவனின் தட்டைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறி அவன் போதும் என்றதும், மதிய உணவுக்கான வேலையைத் தொடங்கி இருந்தாள். சசிதரன் நேராய் படுக்கையில் விழுந்து இருந்தான். யாழினி இரண்டு வகை பொரியல், கூட்டு, சாம்பார், மோர் குழம்பு, வத்த குழம்பு என இவள் சமைத்து வைக்க, மதியம் உண்டு விட்டுத் தங்கை, தாயிடம் பேசிக்கொண்டு பொழுதைக் கழித்து இருந்தான்.
ஜெர்மன் வாழ்க்கை பற்றி, அவனின் வேலைகளைப் பற்றி, அங்கே அவனுக்கு இருக்கும் அவனின் நண்பர்கள்பற்றியென அவன் கூறும் கதைகளைக் கேட்க யாழினிக்கும் ஆசை தான். ஆனால் அவளிடம் எதையும் எதையுமே வெளிப்படையாகப் பேசாதவன். அதனால் இப்படி அவன் தாயோடும், தங்கையோடும் சில நாள் இரவில் தன் மகனோடும் அவன் பேசும்போது இவளும் ஒட்டுக்கேட்டுக் கொள்வாள்.
மாலை அவனுக்குப் பிடித்த மசாலா டீ வைத்து, அதிரசம் சூடாய் சுட்டு, உடன் காரமான தின்பண்டத்தைத் தட்டில் நிறைத்து அவன் முன் வைக்க, சத்தம் இல்லாது அதை எல்லாம் எடுத்து உண்டிருந்தவன் தாயோடும் மகனோடும் வெளியே சென்று இருந்தான். நித்யாவும் சரண் உடன் கிளம்பி இருக்க, இரவு உணவு அவர்களுக்கு வேண்டாம் என்று கூறி விட்டான்.
யாழினி சமையல் அறையைச் சுத்தம் செய்து, அவளையும் சுத்தம் செய்து விட்டு வந்து ஹாலில் காத்து இருந்தாள். இரவு ஒன்பது முப்பது மணிக்கு இல்லம் வந்தவர்கள் கை நிறைய பொருட்களுடன் வந்திருந்தனர். அவள் கையில் புவனா சில பைகளைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டாள்.
“சாப்பிடீங்களா அத்த?” யாழினி கேட்க,
“சாப்பிட்டோம் யாழினி. இதுல உனக்குப் புது புடவை இருக்கு. அதோட ஒரு ஆரமும் இருக்கு ஏழு பவுன் யாழினி. பத்திரம்.” புவனா சொல்ல, சரியெனக் கூறி சென்றவள் அதைக் கணவனின் கப்போர்டு உள்ளே வைத்துப் பூட்டி இருந்தாள்.
மகனுக்கு உடைமாற்றி விட்டு, பால் கொடுத்து அவனை உறங்க வைத்தவள், கணவனின் படுக்கையைச் சரி செய்து விட்டு, அவளின் படுக்கையைத் தரையில் விரித்து இருந்தாள். சசிதரன் வந்து கட்டிலில் அமர்ந்தவன்,
“நகை எங்க?”
“உங்க கப்போர்டு உள்ள வெச்சு பூட்டிட்டேன்.”
“ம்ம்… பால் வேணும் எனக்கு…” சசி சொல்லவும், யாழினி பாலில் பனகற்கண்டு கலந்து கொண்டு வந்து கொடுக்க, வாங்கி குடித்தவன் அலைபேசியில் மூழ்கி விட்டான்.
எதேனும் பேசுவான், எதேனும் கேட்பான் என்று யாழினி பத்து நிமிடம் அமர்ந்து அவன் முகத்தையே பார்க்க, சசி அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. யாழினி சோர்ந்து போய்ப் படுக்கையில் சரிந்தவள் உறங்கி இருந்தாள்.
அடுத்த நாள் காலையில், சுரேந்தரன், சந்திரா அவர்களின் இரு மகள்களும் இல்லம் வர, அன்று அவர்களுடன் கதைப்பேசி நாளைக் கழித்து இருந்தான். யாழினிக்கு எப்போதும் போலச் சமையல் அறையில் அவளுக்கென்று வேலைகள் இருந்தது.
“யாழினி…” சந்திரா சமையல் அறைக்குள் நுழைந்தவள் குரல் கொடுக்க,
“சொல்லுங்க அக்கா. எதாவது வேணுமா?”
“இந்த முறையாவது சசி உன்னோட பேசினாரா?” சந்திரா கேட்க,
“உங்களுக்குச் சிக்கன் உதிர்த்து, செய்யுற தொக்கு பிடிக்கும் தானே? மிளகு பூண்டு கூடச் சேர்த்து செய்யட்டுமா?” யாழினி பதில் கூறாது கேள்வி கேட்க, அவள் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லையெனப் புரிந்து கொண்டார் சந்திரா.
“நான் ரெண்டு நாள் அத்தையை கூப்பிட்டு போகாட்டுமா?” சந்திரா கேட்க,
“அத்தை வந்தா, அவர் சரின்னு சொன்னா, கூப்பிட்டு போங்க அக்கா. என்கிட்ட இதெல்லாம் கேட்காதீங்க.” யாழினி சொல்ல,
“சரி எதும் உதவி வேணுமா?”
“அதெல்லாம் வேண்டாம் அக்கா. இதோ சமையல் முடிஞ்சுது.” யாழினி சொல்ல, சந்திரா அனைத்தையும் எடுத்து வைக்க, அனைவரும் மதிய உணவை உண்டு இருந்தனர்.
“சசி நாங்க அத்தையை எங்க வீட்டுக்கு ஒருவாரம் கூப்பிட்டு போகட்டுமா? நீங்க என்ன சொல்றீங்க அத்த?” சந்திரா கேட்க, சசி அண்ணியை முறைத்து இருந்தான்.
“நீங்க எல்லாரும் ஒவ்வொரு வேலையா வெளிய போயிடுவீங்க. நான் தனியா அங்க என்ன செய்வேன் சந்திரா? ஸ்கூல் லீவ் விடவும் ஶ்ரீயை கூப்பிட்டு வரேன்.” புவனா சொல்ல, அதற்குள் மேல் சந்திராவிற்கு என்ன கூறுவது எனத் தெரியவில்லை. அவர்களும் மாலை கிளம்பி விட, மகன் உடன் படுக்கை அறையில் ஓய்வாகப் படுத்துக் கொண்டான் சசிதரன்.
அன்று நடுஇரவில் மனைவியை அவன் தழுவ, யாழினி தூக்கத்தில் அரை கண் விழித்து அவனைப் பார்க்க, முகத்தில் இறுக்கத்துடன் கடமையாய் கலவியில் இருந்தான். யாழினி தடுக்க,
“இதுக்கு தான எங்க அம்மாவை, அண்ணி கூப்பிட்டு போறேன் சொன்னாங்க? இப்ப என்ன? வேண்டாமா?”
சசி வந்த நிமிடத்திலிருந்து இப்போது தான் அவளின் கண் பார்த்துப் பேசி இருக்கிறான். அதுவும் இப்படியொரு வார்த்தைகளை.!
“நான் எதும் சொல்லவே இல்ல. எதுவா இருந்தாலும் உங்களையும் அத்தையையும் தான் கேட்கச் சொன்னேன். அக்காவா தான் இதையே கேட்டாங்க.”
“எனக்கு உன்னைப் பிடிக்கலடி புரியுதா உனக்கு? எங்க அப்பா உன்னை என் தலையில் கட்டாம இருந்திருந்தா, இந்நேரம் நிம்மதியா இருந்திருப்பேன்.” சொன்னவன் எழுந்து குளிக்கச் சென்று இருந்தான். யாழினி உடையைச் சரி செய்தவள் படுக்கையில் அமைதியாய் சரிந்து இருந்தாள்.
சசிதரன் காதலித்த பெண்ணின் வீட்டில் வசதி அதிகம் என்றாலும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறி இருந்தனர். சசிதரன் வீட்டோடு மாப்பிள்ளையாக வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையோடு, ராகவேந்திரன் மறுப்பு சொன்னதோடு விடாது, அவரின் நண்பருக்குச் சொந்தமான குடும்பத்திலிருந்து யாழினியை பெண் பார்த்துத் திருமணம் முடித்து வைத்து இருந்தார். தகப்பனின் பேச்சை மீற முடியாத சசிதரன், அப்பனின் முன் சரியெனக் கூறிவிட்டு யாழினியை சந்தித்து திருமணம் வேண்டாம் என்றும் அவன் வேறொரு பெண்ணை விருப்பும் செய்தியையும் கூறி இருந்தான்.
யாழினி வீட்டில் நான்கு பெண் பிள்ளைகள். தகப்பன் இல்லாத வீட்டில், தகப்பனாக அண்ணன் ஒருவனே இருக்கே, அவனுக்குச் சுமை வேண்டாமெனப் பள்ளி படிப்புடன் படிப்பை நிறுத்தி இருந்தாள் யாழினி. மூத்தவள் இவளுக்குப் பின்னே இன்னும் மூன்று பேர் இருக்க, எப்படி மறுப்பால் இந்தத் திருமணத்தை? இருந்தும் அண்ணனிடம் சசிதரன் கூறிய விவரங்களை அவள் கூற, அவனோ நேராய் ராகவேந்திரன் முன்னே வந்து நின்று இருந்தான். மகனின் செயலில் கோபம் கொண்டவர் அவனைப் பிடிவாதமாக யாழினியின் கையில் பிடித்துக் கொடுத்து இருந்தார்.
திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் ராகவேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக உயிர் இழந்திருக்க, அதன் பின் சசிதரன் யாழினியிடம் வெளிப்படையாக வெறுப்பை காட்ட தொடங்கி இருந்தான். யாழினி வீட்டிலிருந்து யாரும் அவளைக் காண வரக் கூடாது என்று கூறியவன், அவளையும் செல்லக் கூடாது எனத் தடைவிதித்து இருந்தான். அலைபேசியில் மட்டுமே பேச அனுமதி கிடைத்தது.
தாயின் வேண்டுதலுக்காக அவளோடு குடும்பம் நடந்தியவன் அவள் வயிற்றில் மகன் உதித்த செய்தி கிடைத்ததும் ஜெர்மன் பறந்திருந்தான். அவளுக்குப் புடவை, நகை, சாப்பாடு, வசதியென எதிலும் குறை இல்லை. தாராளமாகத் தாயின் கையில் பணத்தை கொடுத்து அவளிடம் சேர்த்து விடுவான். ஆனால் அவளிடம் எதையும் கேட்கவோ, பேசவோ, பகிரவோ மாட்டான். மகனின் முதல் பிறந்த நாளுக்கு வந்தவன் அவளை ஒதுக்கி வைக்க, யாழினி ஏக்கத்தோடு அவனைப் பின் தொடர்ந்திருந்தாள். இதோ இப்போது மகனுக்கு வயது எட்டு. ஒவ்வொரு வருடமும் இல்லம் வருகிறான். கேட்காது அன்பை அனைவரின் மீதும் காட்டுகிறான்.
அவன் இருந்த இருபது நாளும் மகனும், அவனும் வெளியே நிறைய இடத்திற்கு சென்று வந்திருந்தனர். பதினெட்டாம் நாளே அவன் பெட்டிக்கட்ட தொடங்க, யாழினி அவனுக்கு உதவி செய்யத் தொடங்கி இருந்தாள். அவனுக்குப் பிடித்த, அனுமதிக்கப்பட்ட சில உணவுகளை மட்டும் அவனுக்குச் செய்து கொடுத்தாள். அதை எல்லாம் எடுத்துக் கொண்டவன், அவளிடம் மருந்துக்குக் கூட ஒரு நன்றி கூறவில்லை.
அன்று அவன் கிளம்ப வேண்டிய நாள். அன்னையிடம் ஆயிரம் அறிவுரை, பத்திரம், பிரியாவிடை கொடுத்தவன், மகனுக்கு ஆயிரம் முத்தங்களைக் கொடுத்து இருந்தான். சமையல் அறையில் ஒதுங்கி நின்று அவனையே பார்த்து இருந்தவளுக்கு ஒரு தலையாட்டால் கூட இல்லாது கிளம்பி இருந்தான். அடுத்த வருடமோ, அதற்கு அடுத்த வருடமோ, அல்லது அவளின் ஆயுள் தீருவதற்குள் என்றேனும் ஒரு நாள், அவனின் நேசம் உணர காத்திருக்கிறாள். அதுவரை அவளின் இன்பம் என்பது தூர நிலவு.
அன்பு அனைத்தும் செய்யும்.
அன்புடன்,
கௌரி முத்துகிருஷ்ணன்.
டமால்…..என்று இடி போன்ற.சத்தம் கேட்டு….அங்கு சுற்றி இருந்தவர்கள்ஓடி..வந்தனர்…. அப்போது கண் விழித்த அலி… தூரமாக அழுது கொண்டு இருந்த தன் நண்பனை நோக்கி ஓடினான்… டேய்..மச்சான்..எனக்கு ஒன்னும்.. ஆகல …நீ…நல்லா…தானே..இருக்க… என்று கேட்க..அவனிடம்..பதில் இல்லை..அவனோ..அழுது கொண்டே..இருந்தான்… அவனருகில் சிலர் பேசுவது அவன் காதில் விழுந்தது… யாருனு…தெரியலையே… சின்ன பையனா இருக்கானே… சரி..அவன் விதி அவ்ளோ தான்… என்று தங்களுக்குள் பேசி கொண்டு..இருந்தனர்…. ஹாஸ்பிடலுக்கு தூக்குங்கபா… என்று ஒருவன் சொல்ல… இல்ல..பா…ஆளு.
ஸ்பாட் அவுட் …. ஆகிடும்… என்று மற்றொருவன்..சொல்ல… சம்பவ இடத்துக்கு போலீஸ் வந்தது…. என்ன நடந்துச்சு…என்று போலீஸ் விசாரிக்க… ..நாளு பைக் la.வந்தாங்க .. நான்..கூட அவங்களை…எதுக்கு டா..இவளோ வேகமா போறிங்கனு… திட்டினேன்…. அதுக்கு அவங்க … ஏ ..பெருசு…உனக்கு எல்லாம் இதுல இருக்குற” கிக்கு” தெரியாது இதுக்கு பேரு தான் racing….அப்டின்னு சொல்லிட்டு கொஞ்ச தூரம் கூட போகல sir… மின்னல் வேகத்தில் போன பைக் முன்னாடி திடீர்னு ஒரு மாடு குறுக்கே வந்து விழ…அந்த பைக் நிலை தடுமாறி..சரிஞ்சிட்டு..sir… நான் கூச்சல் போட்டதுல எல்லாரும் ஓடி வந்தாங்க… மிச்ச வண்டிலாம் போயிட்டு…கடைசியாக வந்த வண்டியை மட்டும்… அங்க நின்னவங்க சேர்ந்து வழி மறைச்சு புடிச்சுட்டோம் … அந்த ஒருவனை மட்டும் அதுல இருந்தான்..அவனை பிடிச்சு வைத்து இருக்கோம்…என்று சொல்லி ஒருவனை காமிக்க… அவனோ.. பயத்தில் நடுங்கிய படி அழுது கொண்டு நின்றான்.. அவன் மேனி முழுவதும் இரத்தமாக இருந்தது… டேய்…என்ன..டா…உனக்கு இப்படி ஆகிட்டு என்று அழுது கொண்டு இருக்க…. அலியோ…டேய்..மச்சான்… என்று அவனை அழைக்க .. பதில் இல்லை…அதனால் அவனருகில் சென்று அவனை தொட அவனுக்கு எந்த உணர்வும் இல்லை.. அப்போது அவன் முன்பு ..அங்கு இறந்து கிடந்த தன்னை கண்டு அதிர்ந்தான்…அலி…. அப்போது… தான் அவனுக்கு புரிந்தது..அந்த விபத்தில் உயிர் பிரிந்தது தனக்கு தான் என்று..அப்படியே..அதிர்ந்தான்..சில மணி துளி களில் அவனின் குடும்பம் வரவே… அவள் அம்மா தன் மார்பை தட்டி அழுது கொண்டு…நீங்க எவ்வளவோ சொன்னீங்களே .. நான் தானே கேக்கல…இப்ப .என் மகனை இப்படி இழந்து விட்டேனே…. காலைல..தானே.. புது பைக் எடுத்துட்டு வெளியே வந்தான்… இப்படி ஆகிட்டே என்று.. அழுது கொண்டே மயங்கினாள்..எம்மா…எம்மா….நாம் உன் கிட்ட தாமா இருக்கேன்… Racing பண்ணினது என் தப்பு தான்.. …இனி இப்படி racing பண்ண மாட்டேன்… போன.தடவ. காப்பாதுன மாதிரி ..இந்த ஒரு தடவை மட்டும் காப்பாத்தி விடு மா.. என்று கதற… அது யாரு காதிலும் விழ வில்லை.. .
சிறிது நேரத்துக்கு பிறகு… அவனை அங்கு இருந்து அவன் வீட்டுக்கு தூக்கி சென்றனர்… அவன் வீட்டில் ..அவன் பிணமாக இருக்க
அவன் தாயும் தந்தையும்…நடை பிணமாக இருந்தனர்...
அவன் தன் நிலைக்கு தானே காரணம் என்றவன்..தன் நினைவலையில் மூழ்கினான்..
சில நாட்களுக்கு முன்பு….
இந்த..பாருங்க..நீங்க..என்ன… செய்விங்களோ.. ஏது செய்விங்களோ….நான் நாளைக்கு பைக் கோட வரேன்..அப்டின்னு என் ஃப்ரெண்ட்ஸ் ட சொல்லிட்டென்…. அப்படி கொண்டு போகல என் மானம் போயிரும்… என்று அலி சொல்ல… அவனின் தந்தை ஏதோ சொல்ல ஆரம்பிக்க… நீங்க..எப்பவும் போல அந்த .பழைய பஞ்சாங்கத்தை தானே பேச போறீங்க…எப்ப..பாத்தாலும்.. ஒரே dialogue….. நீயா…எப்ப உன் பைக் க்கு நீயே சம்பாதிச்சு பெட்ரோல் போடுறியோ அப்ப தான் அந்த பெரிய பைக் வாங்கி தருவேனு தானே சொல்ல போறீங்க… அதை நான் இப்ப கேட்கிறதா இல்லை… அதை கேட்டு கேட்டு ..என் காது புளிச்சு போச்சு…. என்ன விட சில்லுவண்டுளாம் பைக் வச்சு தானே இருக்கு… என்று அலி சொல்ல…அதான் .. என் ஸ்கூட்டி இருக்குள்ள அதை நீ தானே..அப்ப அப்ப use panra… என்று முஹம்மத் சொல்ல….
ஏது..அந்த டப்பாவை சொல்றீங்களா…அதுக்கு பேரு பைக் இல்ல …காய்லாங்கடை குப்பை… ஆனா நான் கேட்டது… ஒன்றரை லட்ச ருவா .பைக் என்று சொல்ல… இந்த பாரு …அலி….உனக்கு வெறும் பதினாறு வயது தான் ஆகுது…அதுக்குள்ள..உனக்கு எதுக்கு அந்த பைக்…. நீ…கேட்ட உடனே…எல்லாம் வாங்கி தந்தது..தான்..நான்.. செஞ்ச தப்பு…. அதுனால தான்..உனக்கு..எந்த பொருளுடைய
மதிப்பும் தெரியல… என்று அவன் தந்தை .. முஹம்மது சொல்ல…. இது கூட உங்களால. … வாங்கி தர முடியலனா என்ன எதுக்கு பெத்திங்க… நீங்க எதுக்கு துபாயிக்கு போய் வேளை பாக்குறீங்க..
என்று கேட்க…பாத்தியா..உன் பையன் எப்படி பேசுறான்…. நான் ஒன்னும் .. துபாய்ல மரத்துல இருந்து ரூபாயை பறிச்சு உங்களுக்கு அனுப்பல …. பகல் இரவு பாக்காம… வெயில் மழையில் கிடந்து… ஒரு ரூபாய் இருந்தா…புள்ளை படிப்புக்கு ஆகுமெனு…பல சமயம் பட்டினி கிடந்து… சேர்த்து வச்சு ஊருக்கு அனுப்பிட்டு உங்களுக்கு கஷ்டம் தெரிய கூடாதுனு…உங்களை பாத்து பாத்து வளர்த்தா.. …. என்ன எதுக்கு பெத்திங்கனு கேக்குற… அப்படி தானே… நான்..என்ன..வாங்கி தர மாட்டேன்னா. சொன்னேன்… அதுக்கான வயசு வரட்டும் அப்டின்னு தானே சொல்றேன்… நீங்க இப்படிலாம் சென்டிமென்ட் டா. பேசி…என்னை சமாதானம் செய்யலாம்னு நினைக்காதீங்க…. என்று சொல்லி விட்டு… முடிவா..என்ன தான் சொல்றீங்க…. நான்…சொன்னது சொன்னது தான்…என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை…என்று முஹம்மத் சொல்ல…. ஓஹோ…அப்ப..நான் சொல்றதை நல்லா கேட்டுகோங்க… நீங்க..மட்டும் எனக்கு பைக் வாங்கி தரல… நான் செத்து போயுறுவேன்…. என்று அலி சொல்ல …போடா… .. உன் பூச்சாண்டி வேளையெல்லாம் உன் அம்மா.என் கிட்ட வச்சுக்க…என்று சொல்லி விட்டு பானு…நான் வெளியே போயிட்டு வரென்… என்று சொல்லி விட்டு சென்றார் .. நான்…சொல்றது… உங்களுக்கு பொய் மாதிரி ..இருக்கா… என்று எண்ணியவன்…. சிறிது நேரம் யோசித்தான்…. அம்மா.. காலையில் தன் அக்காவிடம் சொல்லி கொண்டு இருந்தது…நியாபகம். வந்தது… ஏ… ஆயிஷா…. வீட்ல.. எலி தொல்லை ரொம்ப இருக்கு…. அதுனால…அதை விரட்ட…எலி மருந்து கடைல இருந்து வாங்கிட்டு வந்து இருக்கேன்… அதை… செல்ஃப் மேல… ஏறி வை…அது பாக்க கேக் மாதிரி இருக்கு…உன் பசங்க கை..தான் சும்மாவே.இருக்காதே… அவங்க எடுத்துடுவாங்க என்று கூறியது நினைவுக்கு வரவே… அங்கு சென்று மேலே வைக்க பட்டு இருந்த எலி மருந்தை சாப்பிட்டான்… தற்செயலாக வந்த. .அவனது அன்னை ஃபாத்திமா… மருத்து கையில் இருப்பதை பார்த்து என்ன..டா? இது என்று கேட்க…உங்களுகுளாம்… நான்…சொல்றது சும்மா மாதிரி.. இருக்குள்ள… அதான்..நிரூபித்து காமிக்க இதை சாப்பிட்டேன்..என்று சொல்லி… அலி…மயங்கி விழவே… எதுக்கு டா..இப்படி பண்ணி தொலைச்ச… என்று தன் தலையில் அடித்து கொண்டாள்… பிறகு..அவள் அழுகுரல் கேட்டு ஓடி வந்த உறவுகள்..அவனை...
மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்… நீண்ட…முயற்சிக்கு பிறகு…. டாக்டர் அவன் உயிரை மீட்டார்….. ரொம்ப நன்றி டாக்டர்…என்று ஃபாத்திமா சொல்ல.. உங்க கடவுளுக்கு நன்றி சொல்லுங்க… அவன் மீண்டது… அவனோட அதிர்ஷ்டம்… என்று கூறி விட்டு செல்ல… அங்கு… அமர்ந்து இருந்த… முஹம்மதி்டம் வந்த அவரது மனைவி ஃபாத்திமா.. போதுமா.. அவன் கேட்ட மாதிரி …. அந்த பைக் வாங்கி கொடுத்தா என்ன… ஆயிஷாக்கு அப்புறம் 10வருசம் தவத்துக்கு அப்புறம் பிறந்தவன்…உங்களுக்கு அவன் உயிரை விட உங்க. .. வைராக்கியம் தான் முக்கியம் …. அப்படி தானே… என்று கேட்க… ஏண்டி…அவன் நல்லதுக்கு தானே அப்படி சொன்னேன்…. இந்த வயசுல அவ்ளோ பெரிய வண்டி ஓட்டுறது அவ்ளோ நல்லதுக்கு இல்ல… என்று சொல்ல… அவன் என்னா..எப்பவுமே வா.. ஓட்ட போறான்… ஸ்கூல் க்கு போயிறுவான்… வண்டி வீட்ல தானே நிக்க போகுது…. என்று அவரிடம் சொல்ல…. நான்..சொன்னா கேட்கவா போறீங்க… சரி… நான் வண்டிக்கு ஏற்பாடு செய்றேன்..
என்று சொல்லி அங்கு இருந்து புறப்பட… கண்விழித்து பார்த்தான்
.அலி…. அலி.. எதுக்குடா…இப்படி செஞ்ச… உனக்கு.ஏதாவது ஒன்னுனா…அம்மா. எப்படி தாங்குவேன்… அப்பா புது வண்டி எடுத்து தரேனு சொல்லிட்டாரு… இனி எப்பவும்..இப்படி செய்யாத…எல்லா..நேரமும்..ஒரே..
மாதிரி நமக்கு சாதகமாக இருக்காது… என்று சொல்லி அழ...
இனி இப்படி செய்ய மாட்டேன்..
என்று அலி சொல்ல… நீங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போலாம்…இந்த காலத்து பசங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சு…. ஒரு bike காக யாராவது இப்படி செய் வாங்களா.. என்று டாக்டர் சொல்லி விட்டு…அவனை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று சொல்ல…அவனை அழைத்து வந்தனர். ….
பிறகு… அவன் கேட்டது போன்று..அந்த ஒன்றரை லட்சம் ரூபாய் வண்டியை வாங்கி கொடுக்க..
எதோ சாதிச்சது போன்று… அவனுக்கு மகிழ்ச்சி… அதை எடுத்து கொண்டு… தன் நண்பர்களை பாக்க சென்றான் … அப்போதும் அவன் தந்தை…அவனை தடுத்தார்…அவன் அவரை அலட்சியம் செய்து விட்டு சென்றான்..
டேய்…மச்சான்…புது .. எப்படி இருக்கு என்று கேட்ட அலியிடம்… டேய்… மச்சான்…சொன்ன மாதிரியே… bike வாங்கிட்டியே….. நினைச்சதை முடிச்சிட்டுயே…பெரிய ஆளு தான்.. டா நீ…என்று அவன் நண்பர்கள் சொல்ல…அவனுக்கு ஒரே பெருமையாக இருந்தது… பிறகு தான் அந்த racing நடந்தது… அதன் விலை..தன் உயிர் ..என்பதை இப்போது தான் உணர்ந்தான்.. அப்போது அங்கு இருந்தவர்கள் … உடலை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடும் செய்ய… அதை பார்த்த..அவள் அன்னை..அங்கேயே.. அதிர்ச்சியில் விழுந்து இறந்து போக….டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு அவள் இறந்ததாக கூற… யோசித்து கொண்டு இருந்தவன்…அவளருகில் …எம்மா...
எம்மா… என்று சத்தம் பொட்டு கொண்டு ஓடி வர…. .
அட..எதுக்குடா..இப்படி சத்தம் போட்டு கொண்டே ஓடி வர… என்று ஃபாத்திமா கேட்க..அப்போது தான் அவன் உணர்ந்தான்…அனைத்தும் கனவு என்று…. அப்போது… தொலைகாட்சியில் பதினாறு வயது சிறுவன்… விபத்தில் பலி… பைக் வாங்கி தர வில்லை என்றாள்…தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால். பைக் வாங்கி கொடுத்த பெற்றோக்கு… பேரிடி யாக விழுந்தது… என்று செய்தியாளர் வாசிக்க… இந்த காலத்து மக்களுக்கு பெரியவங்க என்ன சொன்னாலும்..தப்பா தெரியுது..இப்ப பாரு.. இழப்பு யாருக்கு..அவனை பெத்தவங்களுக்கு தான்… என்று சொல்ல… அப்பா… என்ன மன்னிச்சுடுங்க… எனக்கு பைக் வேண்டாம் அப்பா… என்று சொல்ல, அவனை ஆச்சரியமாக பார்த்து கொண்டு நின்றாள் ஃபாத்திமா.
வழக்கம் போல் பள்ளி இடைவேளை நேரம், அனைவரும் கூட்டமாக அமர்ந்து தோழியுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்க,
பிரணிதாவோ “ஹே ஏஞ்சல்.. இப்போலாம் இன்ஸ்டால தான் நல்ல டைம் ஸ்பெண்ட் பண்றேன்.. நிறைய ப்ரெண்ட்ஸ் கூட கிடைச்சுருக்காங்க.. நீயும் இன்ஸ்டாவா.. உனக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் இன்ட்ரோடியுஸ் பண்றேன். நல்ல என்ஜாய்மெண்ட்டா இருக்கும்.. உனக்கும் டைம் பாஸ்ஸாகும்ல”
“இல்ல பிரணி.. எங்க வீட்டுல இன்ஸ்டாலாம் யூஸ் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க”
“அட பக்கி.. எங்க வீட்டுல மட்டும் யூஸ் பண்ண சொல்லி ஓபன் பண்ணியா கொடுத்தாங்க.. எல்லாம் அவங்களுக்கு தெரியாம யூஸ் பண்றது தான்”
“என்னடி சொல்ற.. வீட்டுக்கு தெரியாமயா… ஒருவேளை உன் மொபைல் வீட்டுல பாத்தா மாட்டிக்க மாட்டியா”
“நான் வீட்டுல இருக்கும் போது மொபைல் என்கைல தான் இருக்கும்.. அம்மாக்கு இருக்கிற வேலைக்கு என் மொபைல் செக் பண்ண வாய்ப்பில்ல.. இருந்தாலும் நான் ஸ்கூலுக்கு வருர நேரம் இன்ஸ்டா அன் இன்ஸ்டால் பண்ணிட்டு வந்துருவேன்.. சோ யாருக்கும் டவுட் வராது” என்று கூறி முடிக்க, இடைவேளை முடிந்து வகுப்பு தொடங்கும் மணி அடிக்க, ஆசிரியரும் வந்ததால், அனைவரும் பாடத்தை கவனிக்க தொடங்கினார்கள்.
இப்படியே நேரங்கள் கடக்க பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்து, தன் அறையின் குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தபடுத்தி பள்ளி சீருடையிலிருந்து வேறு ஆடைக்கு மாறியவளோ வீட்டு பாடத்தை எல்லாம் முடித்து, தனக்கு பிடித்தமான ஓவியத்தை தீட்டி முடித்தவளுக்கோ தன் பெற்றோரிடம் காட்டி பாராட்டு வாங்க வேண்டுமென்று வழக்கமாக வரும் ஆசையில் காலத்தை பின்நோக்கி அழைத்து சென்றாள்.
ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயத்தில் ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டு, முதல் ஓவியம் வரைந்தவளோ அதை எடுத்துக்கொண்டு வேகமாக கீழே வந்தது சோஃபாவில் அமர்ந்து மடிக்கணினியை தட்டிகொண்டிருந்த தந்தையிடம் சென்றவளோ “அப்பா.. நான் ஃபர்ஸ்ட் டைம் பண்ணின பெயின்டிங் எப்படி இருக்கு”
இருந்த வேலையில் சரியா கவனிக்காத தந்தையோ “நல்லா இருக்குமா” என்று கூற,
தன் தந்தை மேலும் ஊக்கபடுத்துவாரென்று நம்பி வந்த சிறுமிக்கோ ஏமாற்றம் இருப்பினும், அந்த ஓவியத்துடன் அன்னையை காண சமையல் அறைக்குள் சென்று “அம்மா.. அம்மா நான் பண்ணின பெயின்டிங் எப்படி இருக்கு”
“அம்மா வேலையா இருக்கேன்.. கையெல்லாம் அழுக்கா இருக்கு.. வேலைய முடிச்சிட்டு பாக்குறேன்” என்று கூறினார்.
இதில் சிறுமியின் தவறு எதுவுமில்லை பொதுவா தான் முதலில் எது செய்தாலும் பெற்றோரிடம் காட்டி சந்தோஷப்படுவதே குழந்தைகளின் இயல்பு, அதை போல் தான் ஏஞ்சலினாவும்.. ஆனால், ஒருமுறை அல்ல பலமுறை எதிர்பார்த்து ஏமாற்றம் தான், அதை நினைத்து அழுதவாறே நிகழ் உலகிற்கு வந்தவள்,
சிறிதும் நேரம் நாட்குறிப்பு புத்தகத்தில் இன்றைய நிகழ்வுகளை எழுதிவிட்டு உறங்கிவிட்டாள்.
இப்படியே நாட்கள் கடக்க ஒன்பதாம் வகுப்பு முழுவாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாட்கள் வந்தது, வழக்கம் போல் செய்யும் வேலைகளை எல்லாம் செய்து விட்டு யாருமில்லா தனி அறையிலே பொழுதை கழித்திருக்க, அப்படியே ஒருவாரம் கடந்துவிட, தீடிரென்று ஒருநாள் பகிரியில் நண்பர்களுடன் உரையாடை நினைத்து செய்தி ஒன்றை தட்டிவிட,
“ஏய்.. இன்ஸ்டா சாட்டிங் போகுதுடி அப்புறம் வரேன்” என்று அந்த பக்கமிருந்து பதில் வர, அதில் கடுப்புடன் திறன்பேசியை படுக்கையில் வீசிவிட்டு தனிமையின் சோகத்தில் ஜன்னல் வெளியே வானத்தை வெறித்திருந்தவளின் எண்ணத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை வீசிய திறன்பேசியை கையில் எடுத்தவளோ இன்ஸ்டாகிராமை பதிவிறக்கம் செய்ய தொடங்கினாள்.
பதிவு இறங்கரதுக்குள்ள ஏஞ்சலினா மற்றும் அவளின் குடும்பத்தை பற்றி பார்க்கலாம்.
(பெயர் – ஏஞ்சலினா ஜோஸப். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள், படிப்பில் கெட்டிக்காரி, அவளின் தந்தையின் பெயர் ஜோஸப் – சின்னத்திரை தயாரிப்பாளர், அவளின் தாயின் பெயர் – மேரி ஜோசப் – சின்னத்திரை நடிகை, அவளின் சகோதரியின் பெயர் – எஸ்ரா ஜோஸப், அவளை விட ஆறு வயது மூத்தவள், வெளி மாநிலத்தில் தங்கி வானூர்தி பொறியியல் படிப்பு படிக்கிறாள். எஸ்ராவிற்கு சிறு வயதில் இருந்தே கதை எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், இப்போது படித்து கொண்டே கிடைக்கும் நேரங்களில் கதை எழுதி புத்தகமாகவும் வெளியிட்டுளாள்.
மேரி, தன் மகள் ஏஞ்சலினாவை உண்டாகிருந்த நேரம், மூன்றாம் மாதம் முடியும் கர்ப்ப காலத்தில் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, குழந்தை பெற்றெடுப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல ஆரோக்கியமான பெண் குழந்தையான ஏஞ்சலினாவை பெற்றெடுத்தார்.
இப்படியே ரெண்டு வருடம் குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தியவாறே இருந்தவருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்க, குழந்தை பெற்றதில் தன் உடல் எடை கூடியததால், தன் எடையை குறைத்தவர் குழந்தையை தன் மாமியார் பொறுப்பில் விட்டு விட்டு மீண்டும் நடிகையாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
சமத்தாக ஒரு வருடம் பாட்டியின் பொறுப்பில் வளர்ந்த ஏஞ்சலினாவோ மறுவருடமே பள்ளி செல்ல தொடங்கினாள்.
பள்ளி செல்ல தொடங்கியதிலிருந்து பள்ளி நேரம் முடிந்தது வீட்டிற்கு வந்ததும் பாட்டியிடம் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு தன் அறைக்கு வருபவள் வீட்டு பாடத்தை முடித்துவிட்டு சிறிது நேரம் தொலைகாட்சி பார்ப்பதும், தனியாக விளையாடுவதுமாக நேரத்தை கழிக்க, சாப்பிடும் நேரம் மட்டும் கீழே சென்று சாப்பிட்டு விட்டு, அவளின் பெற்றோர்களுக்காக காத்திருந்து பொறுமை இழந்து, மறுபடியும் அறைக்குள் வந்து வானொலியில் பாட்டு கேட்டுக்கொண்டே உறங்கி போவாள்.
இப்படியே பள்ளி செல்வது வீட்டு பாடம் முடிப்பது தனியா விளையாடுவது சாப்பிடுவது, தன் பெற்றோர் வருகைக்காக காத்திருந்து ஏமாறுவது, தூங்குவது என்று பாட்டியின் துணையோடு காலத்தை கழித்து கொண்டிருந்தவளோ, வயதுக்கு வந்து ஒருவருடம் கழித்து பாட்டியையும் இழந்து யாருமில்லா தனியறையில் வாழ பழகி கொண்டாள்.
பாட்டி இறந்த பிறகு, இவள் கையில் பாதுகாப்பிற்காக திறன்பேசி வாங்கி கொடுக்க எண்ணிய அவள் பெற்றோர்கள்,
அதை கையில் கொடுப்பதற்கு முன் பகிறி யூடூயூப் தவிர வேறு எதுவும் பயன்படுத்த கூடாதென்று கட்டளையிட்டு, அவள் சம்மதம் தெரிவித்த பிறகு தான் திறன்பேசியை கையில் கொடுத்தார்கள்.
அதோடு காலையிலேயே மேரி ரெண்டு வேலை உணவையும் தாயார் செய்து வைத்துவிட்டு செல்வதால், பள்ளி சென்று வந்த பிறகு வீட்டுப்பாடத்தை எல்லாம் முடித்துவிட்டு இரவு உணவை மட்டும், அவளே தயார் செய்து சாப்பிட்டு கொள்வாள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு, மறுநாள் பள்ளி செல்ல சீருடை அயன் செய்வது, தனது அறையை சுத்தம் செய்வது, படுக்கை மற்றும் தலையனைக்கு ஒரைமாற்றிவிட்டு, இரவு சமைத்த உணவு பாத்திரத்தையும் கழுவி அடுக்கிவிட்டு, உறங்குவதற்கு முன் அன்றாடம் தன் பெற்றோரிடம் பகிர நினைக்கும் நிகழ்வுகளையும் தன்னுடைய மனகஷ்டத்தையும் நாட்குறிப்பு புத்தகத்தில் எழுதி வைப்பதே அவளின் வழக்கம், அப்புத்தகமே பெண்ணவளின் தோழன் என்று கூறலாம் விடுமுறை நாட்களில் இதனுடன் சேர்ந்து ஓவியம் தீட்டுவது என்று நேரத்தை களிப்பாள்.
என்னதான் பெற்றோர்கள் இவளுக்குகாக நேரத்தை செலவிடவில்லை என்றாலும் அவளின் பிறந்தநாளன்று மட்டும் அவளுக்காக கேக் வெட்டுவது, பிடித்ததை சமைத்து ஒன்றாக சாப்பிடுவது, வெளியே செல்வது என்று இருப்பார்கள்.
இவை, அனைத்தும் வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் மீதி நாட்களில் யாருமில்லா தனியறை தான் என்ற வருத்தம் இருந்தாலும், அவர்களின் மனதை கஷ்டபடுத்த வேண்டாம் என்று எண்ணி அவள் வருத்ததை வெளியே காட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடந்து கொள்வாள்.)
பதிவிறக்கமானதும் தனக்கென்று தனி கணக்கை உருவாக்கியவள், அதில் போடபட்டிருந்த அனைவரின் பதிவையும் பார்த்து ரசித்துவிட்டு தன் தோழிகளுடன் உரையாடியவளோ “அட.. இது கூட நல்ல ஜாலியா தான் இருக்கு” என்று நினைத்து, அன்றைய பொழுதை இன்ஸ்டா பார்ப்பதிலயே கழித்தாள்.
மறுநாள் தன் பெற்றோர் வேலைக்கு சென்றதும் எழுந்தவள், காலை வேலைகளை எல்லாம் முடித்து சாப்பிட்டுவிட்டு திறன்பேசியில் இன்ஸ்டாவில் இருந்த பதிவை பார்த்து கொண்டிருக்க,
“ஹலோ.. ஐ அம் விஜய்” என்று டோய்ங் சத்தத்துடன் செய்தி வந்தது,
அதை கண்டு, முதலில் பதில் அளிக்க தயங்கியவளோ “பேசுவோமா.. வேண்டாமா.. சும்மா பேசி தான் பாப்போமே… டைம் பாஸ்ஸாகும்ல” என்று நினைத்து பதிலுக்கு “ஹலோ விஜய்.. வாட் டூ யூ வான்ட்”
“லெட்ஸ் பீ ப்ரெண்ட்ஸ்?”
“ஷூயர்”
இதிலிருந்து, இவர்களின் உரையாடல் நீடித்து கொண்டியிருந்தது, அதிக நேரம் அவனுடன் உரையாடினாலும் பெண்ணவளோ ஜாக்கிரதையாக தான் பழகி கொண்டிருந்தாள்.
இப்படியே விடுமுறை கழித்து, பத்தாம் வகுப்பில் காலடி வைத்த சமயம், இவர்களின் நட்பு மாதங்கள் பல கடந்தும் நீடித்திருக்க,
தனிமையில் அன்புக்காக ஏங்கிய மனமோ, மெல்ல மெல்ல அவன் பேசியில் கவர்ந்து, அவனே தன் தனிமையின் நட்பு என்னும் மரு
ந்து என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால், தன்னை பற்றி ஒவ்வொன்றாக கூறி, முக அழைப்பில் கூட பேசும் அளவுக்கு சென்றார்கள்.
இப்படியே வழக்கம் போல் பள்ளி முடித்து வந்தவள், தன்னுடைய வேலையை எல்லாம் முடித்துவிட்டு திறன்பேசியில் அவனிடம் பேசிகொண்டிருக்க,
“ஏய் ஏஞ்சல் ரெண்டு நாளுல எனக்கு பர்த்டேடி.. சோ மீட் பண்ணலாமா?”
“ஸ்கூல் இருக்கும்டா.. லீவ்லாம் போட முடியாது”
“சரி அப்போ.. ஸ்கூல் முடிஞ்சி நேரா என் வீட்டுக்கே வந்திருடி.. இந்த தடவ உன்கூடையும் சேந்து பர்த்டே செளிப்ரட் பண்ண ஆசைபடுறேன் பிளீஸ்.. மாட்டேன் மட்டும் சொல்லாத”
“சரி வரேன்.. உடனே நடிப்ப போடாத பாக்க சகிக்கல” என்று கூறி, சிறிது நேரம் உரையாடலுக்கு பின் நிம்மதியாக உறங்கிபோனாள்.
இப்படியே இரண்டு நாட்கள் கடந்திருக்க,
ரெண்டு பேரும் ஒரே ஊர் என்பதால் அவன் கூறியது போல் பள்ளி முடித்து மாலை, அவன் வீட்டிற்கு சென்றாள்.
முந்தைய நாளே இத்தனை மணிக்குள் வந்துவிடுவேன் என்று கூறியிருந்ததால் வரும் வரை அவளுக்காக காத்திருந்தான்.
அவள் வந்ததும் உள்ளே அழைத்த வந்தவனிடம் பெண்ணவளோ “அம்மா இல்லையாடா”
“அம்மா வொர்க் போயிருக்காங்க.. இன்னும் கொஞ்சம் நேரத்துல கேக் வாங்கிட்டு வந்துருவேன்னு இன்பார்ம் பண்ணினாங்க..”
“ஓ ஓகே.. ஹேப்பி பர்த்டே” என்று கூறி பரிசை கொடுக்க,
அதை கையில் வாங்கியவனோ “தேங்க்ஸ்டி.. உக்காரு ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்று கூறி சமையல் அறையிலிருந்து, அவளுக்காக பழசாறு எடுத்து வந்து அவளிடம் கொடுக்க, அதை வாங்கி குடித்து முடித்தவளோ அப்படியே மயங்க, அவளை தூக்கி கொண்டு அறைக்குள் வந்தான்.
இவ்வளவு நாள் குள்ளநரி போல் பதுங்கி நல்லவன் போல் வேடமிட்டவன், அவளை மொத்தமாக களவாடி ஆசையை தீர்த்து கொண்டு, அவள் தன்னை யாரிடமும் காட்டி கொடுக்க மாட்டாள் என்ற தைரியத்தில் அந்த இடத்தைவிட்டு மாயமாக மறைந்துவிட,
அவன் சென்றதும் மயக்கம் கலைந்து தன் நிலை கண்டு பதறி எழுந்தவளோ ஓவென்று கத்தி அழுதுவிட்டாள்.
எவ்வளவு அழுதாலும் ஒரு பிரோஜனும் இல்லையே, இதனால் தான் இழந்ததும் திரும்ப கிடைக்க போவது இல்லை என்பதை உணர்ந்தவள், இதற்கு மேல் இங்கிருக்க வேண்டாமென்று எண்ணி தன்னை சரி செய்துவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியே வந்தவள், யாருக்கும் சந்தேகம் வராதபடி இயல்பாகவே நடந்து வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் சென்று குளியல் அறை புகுந்தவளோ தண்ணீரில் நனைந்தவாறே தன் நிலை நினைத்து கதறி அழுதாள்.
இப்படியே தன் அறையில் தனிமையில் அழுதவாறும் தன் பெற்றோரின் முன்பும் பள்ளியிலும் தன் சோகத்தை வெளியில் காட்டிகொள்ளாமல் இயல்பாகவே இருப்பது போல் நடித்தே ஒரு வார்த்தை ஓட்டி விட்டாள்.
இருப்பினும் பெண்ணவளால் தனக்கு நடந்த கொடுமையில் இருந்து வெளியே வர முடியமால் தினமும் அழுது சோர்ந்தவளுக்கோ, இந்நிலையில் யாரையாவது கட்டிபிடித்து அழ வேண்டுமென்று ஆறுதல் தேடியது, ஆனால், யாருமில்லா தனி அறையில் இருந்தவளுக்கு வாழ்கையே வெறுத்துவிட,
உயிரை விடுவதே மருந்து என்று முட்டாள் தனமான முடிவை எடுத்தவளோ தன் நாட்குறிப்பு புத்தகத்தில் தன்னை நண்பன் என்று ஏமாத்திய அரக்கன் பத்தியும் அவனுடன் பழகி ஏமாந்ததையும் எழுதிவிட்டு, இன்னும் பல வார்த்தைகள் எழுதி முடித்தவள் தன் பெற்றோருக்கு ஒரு கடிதத்தை அழுதவாறே எழுதி, தன் கை செயினில் சொருகி வைத்தவளோ கண்களை துடைத்துக்கொண்டு தன் நாட்குறிப்பு புத்தகத்துடன் தன் சகோதரியின் அறைக்குள் சென்று மேஜையிலிருந்த புத்தகத்தின் மேல் கண்ணில் படுபடி வைத்துவிட்டு தன் பெற்றோரின் அறைக்குள் சென்றாள்.
அங்கிருந்த தன் அன்னையின் புடவையை எடுத்து அறைக்குள் வந்த மறுகணம் தன் அன்னையின் புடவையை மின் விசிறியில் வீசி கட்டி, ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டவளோ, அதில் தலையை புகுத்தி உயிரை மாய்த்து கொண்டாள்.
மறுநாள் ஏஞ்சலினாவின் பிறந்தநாள் என்பதால் காலையில் அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க எண்ணி தங்கள் மகளின் அறையை மெல்ல திறந்தவர்வர்களோ, தொங்கி கொண்டிருக்கும் மகளின் நிலையை கண்டு அதிர்ந்துவிட்டார்கள், மகளை இறக்கி படுக்கையில் கிடத்தி, மகளின் கை, கால் பற்றி அழுது ஒப்பாரி வைத்தார்கள்.
அழுது கொண்டிருந்தவர்களின் கண்ணில், அவள் கை செயினில் சொருகிருந்த கடிதம் தென்பட அதை பிரித்து பார்க்க,
அன்புள்ள அப்பா அம்மாவிற்கு,
“முதல.. நான் இப்படி ஒரு முடிவு எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடுங்க.. வருஷத்துல ஒருநாள்.. அதுவும் என்னோட பிறந்த நாளுக்கு மட்டும் உங்ககூட சந்தோஷமா இருந்துட்டு.. மீதி நாட்கள் யாருமில்லா தனிமைல என்னால வாழ முடியல.. என்னோட நாலு வயசுலிருந்து இப்போ வர அதாவது பத்து வருஷமா நான் உங்ககிட்ட எதிர்பார்த்த எதுவுமே கிடைக்கல.. இவ்வளவு ஏன் என்னோட பீரியட்ஸ் பெயின்ல ஹக் பண்ணி ஆறுதல் சொல்ல கூட பக்கத்துல யாரும் இருக்க மாட்டாங்க.. அதுக்குன்னு இந்த முடிவுக்கு நீங்க தான் காரணம்ன்னு சொல்ல மாட்டேன்.. ஏன்னா உங்களோட வேலை அப்படி… எனக்காக கஷ்டப்படுறீங்க
அது எனக்கு புரியுது.. என்னோட உடம்பு உங்களவிட்டு பிரிஞ்சாலும் என்னோட ஆத்மா உங்கள சுத்தி தான் இருக்கும்.. சோ என்ன நினைச்சு ஃபீல் பண்ணாம சந்தோஷமா இருங்க.. லவ் யூ அண்ட் மிஸ் யூ அம்மா அப்பா” என்று தன் மகள் தங்களுக்கு எழுதிய கடித்ததை கண்டு தங்கள் தவறை உணர்ந்து அழுதார்கள்.
விடயம் கேள்விபட்டு, மறுநாளே அவளின் சகோதரி எஸ்ரா தங்கையை காண வந்துவிட, முடியவேண்டிய சடங்கு எல்லாம் முடிந்ததும் தன்னறைக்கு ஓய்வு எடுக்க வந்தவளின் கண்ணில் தங்கையின் பெயரிட்ட நாட்குறிப்பு புத்தகம் தென்பட்டது, திறந்து அவள் எழுதிருந்த குறிப்பு மொத்தத்தை பார்த்து கண்ணீர் வடித்தவளோ கடைசி பக்கம் படிக்க,
“அக்கா.. இந்த விஷயம் யாருக்கும் தெரியகூடாது.. இத உனக்கு நான் தெரியபடுத்த என்ன காரணம்ன்னா எனக்கு நடந்த கொடும யாருக்கும் இனி நடக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.. அதுனால ஒரு ரைட்டரா என் மூலமா ஒரு ஸ்டோரி எழுதி விழிபுணர்வு கொண்டு வரணும்.. இது தான் உன் தங்கச்சி கடைசி ஆசை” என்று முடிந்திருக்க, சகோதரியோ உடனே தங்கையின் ஆசையை நிறைவேற்ற மடிக்கணினியை தட்ட தொடங்கினாள்.
ஒரு மாதத்திற்குள் தங்கையின் கதையை எழுதி “யாருமில்லா தனி அறையில்..” இருந்து பெயர் பொறிக்கப்பட்டு புத்தகத்தை வெளியிட்டவளோ, புத்தகத்துடன் தங்கையின் சமாதிக்கு வந்து, அவளின் ஆசையை சமர்பித்து வணங்கி சென்றாள்.
பெண் குழந்தைகள் வழிமாறி உயிரை விடுவதற்கு ஒரு வகையில் பெற்றோரும் காரணமாகின்றனர்.. அதற்காக, அவர்கள் மட்டுமே காரணமென்று கூறிவிட முடியாது.. குழந்தைகளுக்காக உழைத்து கஷ்டபடுகின்றார்கள் ஆனாலும் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பதை விட மனம் தளரும் நேரம் பெற்றோர்களாக இல்லாமல் தோழனாகவும் இருந்து பாருங்கள் உங்களை விட்டு அவர்கள் வெளியே அன்பை தேட அவசியமும் வராது உயிரும் பிரியாது,
அதோடு பராசக்தி வடிவான பெண்களோ எதற்கும் உயிர் விடுவது முடிவல்ல என்பதை உணர்ந்து தடைகளை தகர்த்து சாதிக்க வல்லவர்க
ள் என்று அனைவரின் முன் நிரூபித்து காட்ட வேண்டுமென்று கூறி கதையை நிறைவு செய்கிறேன்.
நன்றி
*****
– ஆனந்த மீரா
அந்தக் கறுப்பு வெள்ளை புகைப்படத்தின் மீதுள்ள குங்குமம் கூடத் தன் புடைவையில் பட்டு அழிந்துவிட கூடாதெனக் கவனமாய் அணைத்து உறங்கும் செல்விக்கு “செல்லம்மா, எழுந்திடுடா” என்ற அம்மாவின் குரல் கேட்க, சுகமான கனவு கலைந்த உணர்வில் திடுக்கிட்டு விழித்தாள் இளம் பெண் ஒருத்தி.
எழுந்ததும் நேரத்தைப் பார்த்தவளது கண்கள் அவசரமாய் ஒரு அதிர்ச்சியை தத்தெடுத்ததுக் கொண்டது என்றால், மூளையோ முடிக்க வேண்டிய வேலைகளை அவசரமாய் வரிசைப்படுத்திக் கொண்டது.
“அச்சச்சோ சித்தி எழுந்துட்டாங்களோ தெரியலையே? அடியேய் லூசு செல்வி இப்படியாடி தூங்குவ” என்று தன்னை தானே திட்டிக் கொள்ளவும், எப்போதும் சித்தி எழுந்ததும் போடும் சுப்ரபாதம் ஒலிக்கவும் சரியாய் இருந்தது.
“அய்யய்யோ சித்தி எழுந்துட்டாங்களே, இன்னைக்கு செத்தடி நீ.. எப்பவும் கடைசி நேரத்துலயாவது காப்பாத்த அப்பா இருப்பாங்க. ஆனா இன்னைக்கு அவங்களும் இல்ல எப்படியாச்சும் எஸ்கேப் ஆகிடு செல்வி” என்று பேசிய வண்ணமே தன் ஆடையைச் சரி செய்து கொண்டவள் மெல்ல எட்டி பார்த்து யாரும் இல்லையென உறுதிப்படுத்தி வாசலை நோக்கி விரைந்தாள்.
அவசமாய் வெளியே வந்தவள் வாசலில் வைக்கப்பட்டிருந்த நீரில் முகத்தை அலம்பி, அந்த நீரினை அள்ளி வாசலில் தெளித்தாள். விரைவாக ஓரளவுக்கு நன்றாக, சிறிய கோலம் ஒன்றை போட்டு, சித்தி கண்ணில் படுகிறாரா என எட்டி பார்த்தபடி மீண்டும் தன் அறைக்கு விரைந்தவள் அவசரகதியில் “எல்லாரும் நல்லா இருக்கணும். அப்பா சீக்கிரம் வேல முடிஞ்சி பத்திரமா வீட்டுக்கு வந்துடனும்” என்று கடவுளுக்கு மனு அனுப்பவும் தவறவில்லை.
அதன் பின் வேறு எதையும் யோசிக்க விடாமல், கடிகாரத்தை விடவும் வேகமாய் நகர்ந்தது அவளது நேரம். கோலம் போட்டு, வீட்டில் அவர் அவர் விருப்பம் படி ஒவ்வொருவருக்கும் ஏற்பச் சமையலை முடித்து, துவைக்க வேண்டிய ஆடைகளை எடுத்து, துவைத்த ஆடைகளை மடித்து வைத்து என எல்லாம் முடிந்து, ஒருவழியாய் வெளியே வந்து வீட்டு முற்றத்தில் அமரச் சரியாய் ஆறு முப்பது தான் ஆகி இருந்தது. நேரம் ஏதோ ஆமை வேகத்தில் கழிவதாய் ஒரு பிரம்மை அவளுள்.
‘ச்சே! இவ்வளவு வேலை செஞ்சும் இந்த நேரம் மட்டும் ஓட மாட்டேங்கிது, எப்போ ஒன்பது மணியா போகுமோ?’ என்று எண்ணியபடி, தன் தம்பி தங்கையை எழுப்ப அவர்கள் அறையினுள் நுழைந்தவளுக்கு அவ்வளவு நேர சோர்வு மறந்து சிரிப்பு தான் தோன்றியது. எப்போதும் எலியும் பூனையுமாய் சண்டை போடுபவர்கள் இவ்வளவு நெருக்கமாய் உறங்குவது ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்டது போன்ற உணர்வு அவளுக்கு.
“டேய் சரத்து அடியேய் ஹேமா எழுந்துக்கோங்க ரெண்டு பேரும். ஸ்கூல் போகணுமேனு ஒரு அக்கர இருக்கா உங்களுக்கு” என்று காட்டு கத்து கத்தியும் அவளது பாச மலர்கள் எழுந்த பாடில்லை. அது எப்போதும் நடக்கும் ஒன்று தானேயென அவளும் அலட்டிக்கொள்ளாமல் தனது கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்தாள்.
“அடியேய் சொப்பன சுந்தரி நீ மட்டும் என் கையில கெடச்ச செத்தடி. எப்போ பாரு இதே வேல உனக்கு” என்ற தன் தம்பி சரத்தின் வாயில் கை வைத்தவள் “அடேய்! எரும மாடே ஏன்டா கத்துற, சித்தி காதுல விழுந்திச்சு நான் செத்தேன். மரியாதையா எழும்பித் தொல” என்றாள்.
அவனோ “இல்ல.. இல்ல, நீ ஃபேன போடு முதல்ல, ஏன் எப்ப பாரு அத ஆப் பண்ற நீ” என்றான் இடையில் தூக்கம் கலைந்த எரிச்சலுடன்.
“அதெல்லாம் முடியாது நீ எழும்பு. அதான் உன்ன எழுப்ப நான் கண்டு பிடிச்ச ஆயுதம்” எனப் பெருமை பட்டுக் கொண்டாள் செல்வி.
“ச்சே! இந்த உலகத்துல ஒரு வாலிபன் தூங்க கூடச் சுதந்திரம் இல்ல என்ன வாழ்க்கையோ? இதோ பாரு இவள என்ன நடந்தாலும் கும்பகர்ணி மாதிரி தூங்குறத்த” என்றவாறு தன் தங்கையை உதைக்க, அதில் எழுந்து ஒரு போருக்குத் தயாராகியவளை இவன் தாக்க, மறுபடி அவள் தாக்க எனப் போய்க்கொண்டிடுந்த, போரைச் சமாதான உடன்படிக்கைக்கு கொண்டு வரச் செல்விக்குப் போதும் போதும் என்றானது. அவள் இந்த வீட்டில் ஓரளவுக்கு சந்தோசமாக இருக்க காரணமானவர்கள் இவர்கள் தான்.
தன் பாசமலர்களின் சேட்டையில் லைத்திருந்தவளை சித்தியின் குரல் உலகுக்கு அழைத்து வந்தது.
“அடியேய்! இன்னும் என்ன தான் பண்ணுற, இன்னுமா வேல முடிக்கல என்ன பொண்ணோ” என்ற தன் சித்தியின் இனிய வார்த்தை அன்றைய நாளுக்கு மோசமான ஆரம்பமும் உண்டு என்பதை எப்போதும் போல் அவளுக்கு உணர்த்தியது.
“இதோ வந்துட்டேன் சித்தி, எல்லாம் முடிச்சிடேன். சரத், ஹேமா ரெண்டு பேரும் குளிக்கப் போயிருக்காங்க வந்தா ஸ்கூல் அனுப்பிடுவேன் அவ்வளவு தான்” என அவள் சொல்லுவதை என்றும் இல்லா பொறுமையுடன் செவிமடுத்து அவளைக் கடந்து சென்றார் அன்னலட்சுமி. இதுவே இந்த நாளின் பெரும் அதிசயத்தில் ஒன்று தான்.
அன்னலட்சுமி, தன் கணவரின் மூத்த தாரத்தின் மகளை தன் மகளாக நடத்தும் அளவிற்கு நல்லவர் இல்லை என்றாலும், தங்க இடம் கொடுத்திருப்பதையே பெரிதாய் எண்ணி, தான் பெரியமனது கொண்டவர் என அவரே ஊரில் உள்ளவர்களிடம் பெருமை பேசுவதுமுண்டு.
இத்தனைக்கும் அவர்கள் இருக்கும் வீடு செல்வியின் தாயாரின் பெயரில் தான் இன்றளவிலும் இருக்கிறது. இதிலிருந்தே அவர் பெரியமனது எத்தகையது என்பது ஊரறிந்த விடயம்.
அன்னலட்சுமி பேருக்குத் தான் லட்சுமி உண்மையில் சொர்ணாக்கா, மங்கம்மா என்ற பெயருக்கு நூறு வீதம் கச்சிதமாய் பொருந்துபவர். சரத் ரகசியமாய் பேசும்போது அவரை விளிக்கும் பெயரும் இதுதான். மாட்டிக் கொள்ளாதவரை அவனுக்கு நல்லது.
சரத் ஹேமா என்னதான் அன்னலட்சுமியின் குழந்தைகளாக இருந்தாலும் ஒட்டுதல் என்னவோ செல்வியிடம் தான். அதுவே அன்னலட்சுமிக்கு செல்வி மீது மேலும் கோபத்தை டன் கணக்கில் ஏற்றி விட்டிருந்தது.
அப்படியே அடுத்த ஒரு மணி நேரமும் செல்வியின் வாழ்வில் வளமை போல் நகர்ந்த நேரங்களே. தம்பி தங்கையின் சேட்டையில் ஒருவாறு சமாளித்து அனுப்பி வைத்தவளுக்கு இன்று ஏதோ சுதந்திர உணர்வு. காலையில் சித்தியின் வாயால் திட்டு வாங்காததோ என்னவோ.
அனைத்தும் ஒருவழியாய் முடிய நேரத்தைப் பார்க்க அதுவோ காலை எட்டு மணியெனக் காட்டியது. பார்த்தவள் மனதில், விரைவில் அடுத்த ஒரு மணி நேரம் நகராத என மனது முரண்டு பிடித்தது.
காலை ஒன்பது மணி என்பது, அவளது அன்றாட வாழ்வில் ஆவலுடன் எதிர்பார்க்கும் நேரம். அவளுக்கே அவளுக்காகச் செலவிடும் நேரம்.
அதுவும் காலை ஒன்பது மணி முதல் பத்து மணிவரை அவள் செலவிடும் இந்த ஒரு மணி நேரமே அவள் வாழ்வில் பொக்கிஷமான தருணங்கள்.
அன்றைய நாளில் அந்த ஒரு மணி நேரத்தை அடையும் வரை, அதை நோக்கிய எதிர்பார்ப்புகளுடனும்.. அந்த ஒரு மணி நேரத்தைக் கடந்த பிறகு அது கொடுத்த சுகமான நினைவுகளுடனுமே இனிதாய் நிறைவு பெறும் செல்வியின் அன்றைய நாள்.
அந்த நேரம் தான் அவள் இயற்கையுடன் செலவிடும் நேரம். காலை உணவு உண்ணுவதற்காய் உணவை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக்குச் சற்று தொலைவில் இருக்கும் அவர்களது தோட்டத்துக்குச் செல்லும் நேரமது.
இருக்கும் ஆடையில் சிறந்த ஒன்றை அணிந்து தன்னை அழகுபடுத்தி நேரத்தைப் பார்த்தவளோ மனதில், ‘அச்சோ! எவ்வளவு காத்திருந்தாலும் இந்த ஒன்பது மணி மட்டும் எப்போவும் சீக்கிரம் வரவே மாட்டேங்கிது, இப்போவே போனா சித்தி ஏதும் சொல்லுவாங்களோ? ச்சே..சே! சொல்லமாட்டாங்க வழமையா போறது தானே, இருந்தாலும் பயமா இருக்கே. எதுக்கு வம்பு சொல்லிட்டே போவோம்‘ என்று எண்ணியவள், “சித்தி” என்று அழைத்தாள்.
அவரோ மெல்ல அவளை எட்டி நேரத்தை பார்த்தவர், ஏதும் சொல்லாமல் தன் வேலையில் மீண்டும் கவனமானார்.
அவள் மீண்டும் “சித்தி, நான் வேலை எல்லாம் முடிச்சிட்டேன் போகவா?” என்று வார்த்தைகளை இழுத்தாள்.
“அதான் ஒன்பது இன்னும் ஆகலயே அதுக்குள்ள என்ன அவசரம், நேத்து துவைச்சுப் போட்ட என் புடவை எல்லாம் ஏதோ வாட வருதுனு அங்க போட்டிருக்கேன் மறுபடியும் துவைச்சு காயப் போட்டுட்டு போ, துவைக்கிற நேரம் ஏனோ தானோன்னு துவைச்சா இப்படி தான்” என்றார் வேண்டுமென்றே..
மறுத்து பேசினால் இன்னைக்கு போக விடமாட்டார் என்பது புரிய, இருக்கும் பதினைந்து நிமிடங்களுக்குள் எப்படியோ மின்னல் வேகத்தில் அந்த வேலையை முடித்தவள் பாதி நனைந்த ஆடையுடன் அவர் முன்னே வந்து நின்றாள். எங்கே ஆடை மாற்ற சென்றால், அது அவளுடைய ஒரு மணிநேரத்தில் சில நொடிகளை எடுத்துக்கொள்ளுமோ என்ற கவலை அவளுக்கு..
அவள் வந்து நிற்பதை உணர்ந்தவர், “ஏன் அம்மணிக்கு அங்க போய் சாப்ட்டா தான் சாப்பாடு எறங்குமோ? சாப்பிடுறது ஓசி சாப்பாடு, இதுல இவங்களுக்கு ஊர் மேய்ஞ்சு சாப்பிடணும்னு ஆச வேற, மனசுல பெரிய கதாநாயகினு நினைப்பு..
நீங்க போங்கம்மா அப்பறம் சித்தி சாப்பிடக் கூட விடுறாங்க இல்லனு ஊர்ல கெட்ட பேர் வாங்கி கொடுப்பீங்க தேவையா எனக்கு, நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சாலும் அது போற இடத்துக்குத் தான் போகுமாம்” என்று பேசியபடியே எழுந்து உள்ளே சென்று விட்டார்.
அந்த வார்த்தைகளுக்குப் பின் அந்தச் உணவைக் கையில் வைத்திருப்பதே அவளுக்குப் பாரமாகி போனது. வைத்து விட்டுச் செல்லலாம் என்றாலும் அம்மாவின் ஆசை வார்த்தைகள் வந்து காதில் வீணை மீட்டியது.
“செல்லம்மா, என்ன தான் கோபமோ, சோகமோ வந்தாலும் சாப்பாட்டுல காட்டவே கூடாதுடா, அது நமக்குக் கடவுள் கொடுத்தது. அதை நிராகரிச்சா கடவுளையே நிகரிக்கிற போல ஆகிடும் கண்ணா” என்று அவள் அம்மா எப்போதும் சொல்லும் வசனங்களில் இதுவும் ஒன்று. அப்படி இருக்கையில் அவளால் அதனை மீற முடியுமா என்ன?
“சித்தி இன்னைக்கு நேத்தா திட்டுறாங்க. வழமை போலத் தானே விட்டுத்தள்ளு செல்வி” எனத் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டவள் தோட்டத்தை நோக்கி நடை போட்டாள்.
போகும் வழியில் “ஏலேய் செல்வி, எங்க தோட்டத்துக்குக் கிளம்பிட்டியா?” என்றார் இவளைக் கண்ட பாட்டி ஒருவர்.
“ஏய் கிழவி உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்றது போகும்போது எங்கனு கேக்காதன்னு. நீ எல்லாம் கேட்டா போற காரியம் விளங்குமா?”
அவரோ “அடியேய் கூறு கெட்டவளே, பாசமா எங்க போறனு கேட்டது ஒரு குத்தமா? அப்படியே இவ கவமெண்டுக்கு உத்தயோகம் பாக்க போறா, போடி இவளே” என்று கேலியுடன் வினவினார்.
இவளும் விடாமல் “ரொம்ப பேசுற கெழவி நீ, இரு இரு அது பண்ணி கொடு செல்வி, இத பண்ணி கொடு செல்வினு வந்து நிப்பல அப்போ பாத்துக்கிறேன்” என்றாள்.
“சரிதான் போடி” என்றவாறு முகத்தைத் திருப்பிக் கொண்ட அந்தப் பாட்டியும் சரி, கோபமாய் திரும்பி நடை போட்ட செல்வியும் சரி புன்னகைக்க தவறவில்லை.. இது எப்போதும் நடக்கும் வாடிக்கை தான் வீம்புக்காய் சண்டை போட்டுக் கொள்ளும் நண்பர்கள் அவர்கள்.
மெல்ல அந்தத் தோட்டத்தை அடைந்தவளது கண்களில் தெரிந்தது எல்லாம், காலையில் கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் தெரிந்த தன் அம்மா இப்போது பச்சை மஞ்சள் சிவப்பு என நிறப் படமாகக் காட்சியளித்த பிரம்மை தான்.
இது அவள் அம்மா பராமரித்த தோட்டம். இதுவே அவள் வீடு, அவளை ராணியாய் உணரவைக்குமிடம். அம்மாவின் ஒவ்வொரு ஸ்பரிசமும் நிறைந்து அவளுக்ககே அவளுக்கான அரவணைப்பு அது.
இங்கிருக்கும் அந்த ஒரு மணி நேரம் தான், அவளும் குழந்தையாய் தாயன்பை அனுபவிக்கும் நேரம். இங்கே அமர்ந்து உண்ணுவது ஏதோ தாயே அவளுக்கு ஊட்டி விடும் உணர்வு அவளுள்.
“அம்மா நேத்து என்ன நடந்துச்சினா” என ஆரம்பித்து அவள் அம்மாவிடம் உரையாடலைத் தொடங்கி விட்டாள் இனி அவள் வாய் மூடுவது கடினம் தான்
இந்த ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவர் வாழ்க்கை ஆரம்பித்தது போலவே இயந்திர கதியில் செல்லவேண்டியிருக்கும். இருந்தும் இந்த நேரம் இயற்கை அவளுக்காகப் பரிசளித்த நிமிடங்கள் அவை.
எது எப்படி இருந்தாலும் அவளுக்கு இயற்கையுடன் கலந்த அவளது தாயுடன் கடக்கும் இந்த ஒரு மணி நேரமே மீதியிருக்கும் இருபத்து மூன்று மணி நேரத்துக்குமான சாவி.
அந்த ஒருமணி நேரம் எப்போதும் போல் அதி வேகமாக கடந்து விட, பெருமூச்சுடன் எழுந்து கொண்டவள், வீட்டை நோக்கி நடைப்போட்டாள், வரும் போதிருந்த உட்சாகம் வடிந்திருந்தது.
இருந்தும் நாளை மீண்டும் இதே அறுபது நொடிகளும் அன்னை மடியாய் அவளை தாங்க, அவளுடன் அவளுக்காய் காத்திருக்கும்.
முற்றும்
வாழ்வில் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு பிடிப்பை கடவுள் வழங்கி இருப்பார் அதன் கயிற்றை பற்றிப் பிடித்தபடியே காலத்தை கடந்து நாமும் பயணிப்போம்.
நிச்சயமாக கவலைக்கு பின் சந்தோசம் இருக்கிறது. அது எதுவென கண்டறியும் பொறுப்பு நம்மிடமே.. வாழ்வின் இரகசியங்களை பொருந்திக்கொள்வோமாக!
நன்றி!
இப்படிக்கு
ஆஷா சாரா
அவன் “வேலன்!” இருபத்தி ஆறு வயது வாட்டசாட்டமான வாலிபன்.
கொஞ்சம் முன் கோவாக்காரன். மற்றபடி ஒரு குறையும் சொல்ல முடியாது. முதலாளிக்கு நல்ல வேலைக்காரன் அவன். ஆனால், அவனது கோவத்தால் அவனுக்கு கிடைக்க வேண்டிய
வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தட்டி கழிக்கப்படுகிறது. அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“என்னடா இது? தனக்கு மட்டும் கடவுள் இப்படியா எழுத வேண்டும்” என்று மனதோடு எண்ணியபடியே சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தான்.
சிந்தை முழுதும், ‘நான் என்னதான் எனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தாலும்;
எனக்கு மட்டும் பதவி உயர்வு இல்லையே? இதற்காகவா, நான் அரும்பாடு பட்டு வேலை செய்தேன்” என்று பாரமான மனதுடன் அந்த மரத்தடியில் இருந்த கல்மேடையில் அமர்ந்திருந்தான்.
சாலையோரம் இருந்த, அடர்ந்த அழகான மரம் அது. கிளைகளே தெரியாத தளிர் இலைகள் நிறைந்த அரசமரம். “என்னே அழகு!” என்று அந்த சாலை வழி வருவோர் போவோர்
ஒருநிமிடம் இந்த மரத்தின் அழகை ரசித்துவிட்டு, அது வீசும் தென்றலை அனுபவித்தே
செல்கின்றனர்.
ஆனால், அந்த மரத்தடியில் அமர்ந்திருந்த வேலனோ, அந்த அழகை ரசிக்கும்
மனநிலையில் இல்லை. அப்படியே மரத்தடியில் இருந்த கல்மேடையில் இருந்தவன்,
தனக்குள்ளே யோசித்தபடியே இருந்தான். எப்போதும் அவன் வேலைக்கு வந்து செல்லும் வழி என்பதாலும், பக்கத்தில் இருந்த மளிகை கடைக்கு பின்னால் இருக்கும் தெருவில் தான் அவன் வீடு என்பதால் சுற்றி வசிப்பவர்கள் வேலனுக்கு நல்ல பழக்கம். எப்போதுமே வேலை முடிந்து நேராகா வீடு செல்பவன், இன்று ஏதோ யோசனையில் மரத்தடியில் அமர்ந்திருக்க, அதை பார்த்த பெரியவர் ஒருவர், அவன் பக்கத்தில் மீதி இருந்த இடத்தில் அமர்ந்தார்.
அவரது அரவத்தில் நிமிர்ந்து பார்த்த வேலன், “வாங்க தாத்தா” என்றான்.
“என்ன வேலா… இன்றைக்கு என்னாச்சு? ஏன் இப்படி முகமே சோர்ந்து இருக்கு?”
அவர் அப்படி கேட்டதும் இதை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள வேண்டும்
போல் இருந்த வேலனும் சொல்ல ஆரம்பித்தான்.
தான் வேலை பார்க்கும் இடத்தில் தன்னை போல் ஆறு பேர்
வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து
தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சில சலுகைகளை தடுப்பதாகவும், இது முதல் முறை இல்லை என்றும், ஏற்கனவே, இதுபோல் மூன்று முறை செய்ததாகவும்; இந்த முறையும் தனக்கு கிடைக்க இருந்த சலுகைகளை தடுத்து விட்டாதாகவும் மனமுடைந்து சொன்னான்.
அவன் பேசும் வரையில் அமைதியாக இருந்த பெரியவர். அவனிடம் சில வினாக்களை கேட்டார். முதலில், “வேலா, நீ இங்கு வேலைக்கு சேர்ந்து எத்தனை வருடங்கள்
இருக்கும்?”
“அது.. தாத்தா ஒன்றரை வருடம் இருக்கும்.”
“சரி. உனக்கு இங்க வேலைக்கு சேரும்போதே இந்த
வேலை தெரியுமா?”
“இல்லை தாத்தா. இங்கு வந்து கற்றுகிட்டது தான்” .
“சரி அடுத்தது. நீ வேலைக்கு சேர்ந்ததும் வேலை பழகிவிட்டாயா?”
“இல்லை தாத்தா. உன்னால் இந்த வேலை செய்ய முடியாது நீ
ஊருக்கு கிளம்பு என்றார்கள். ஆனால், நான்.. என்னால் முடியும் என்று மூன்று மாதத்தில் நிரூபித்தேன். அதன்பின் தெரியாத வேலையை கற்றது மட்டும் இல்லாமல்,
அங்கே வேலை செய்பவர்கள் எல்லாரையும் விடவும்
சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டேன்.
அதுமட்டுமல்ல, எந்த வேலை எனக்கு தெரியாது நீ கிளம்பு
என்றார்களோ, அதே இடத்தில்.. வேலனுக்கு தெரியும் அவன்கிட்ட
கேட்டு செய்யுங்க என்று சொல்லும்படி செய்து விட்டேன்” என்றான்
பெருமையாக.
அவனது பெருமையில் சிரித்தவர், லேசாக அவன் தோளில் தட்டிக் கொடுத்த்தார். “சரிடா வேற?”
“அதான் தாத்தா. இதான் என் பிரச்சனையே. அங்கே என்னுடன் வேலை செய்பவர்கள்,
எப்போதுமே முதலாளி சொன்ன வேலையை மட்டும் செய்தவர்கள். ஆனால், இப்போதும் அவர்களுக்கு அதை தாண்டி செய்ய தெரியவில்லை. என்னிடம் கேட்டால் இப்படி செய்யுங்கள் என்றபடி
என் வேலையை செய்ய சென்றுவிடுவேன். ஆனால், அது அவர்களுக்கு கோவம். நேற்று வந்தவன்
தங்களை மதிக்கவில்லை. தாங்கள் தெரியாததை கேட்டால்
சொல்லி தரவில்லை. நேற்று வந்தவன் எங்களுக்கு மேல் அதிகாரியா முடியாது
என்று அதிக குற்றசாட்டு” என்றான் சோகமாக.
“சரி. இப்போ என்னதான் பண்ண போற?”
“அதான் தெரியல.”
“சரி வா. அப்படியே கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்” என்றபடியே
அவனை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
இருவரும் பேசியபடியே நடந்தனர். வேலன் கைப்பிடித்தப்படி வந்த தாத்தா, திடீரென அவர்களுக்கு எதிரே வந்த சைக்கிள் மீது வேலனை தள்ளி விட்டார்.
நொடியும் தாமதிக்காமல் மோதிவிடாமல் விலகினான் வேலன். வேலன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தாத்தா இப்படி எதிரே
வந்த சைக்கிள் மீது தன்னை தள்ளிவிடுவார் என்று.
வந்த கோவத்தில், “தாத்தா என்ன இது இப்படியா பண்ணுவீங்க? நல்லவேளை சைக்கிளில் வந்தவரும் சுதாரித்து பிரேக் பிடித்து நிறுத்திவிட்டார். இல்லையென்றால், ஒன்று அவர் விழுந்திருப்பார் இல்லை என்மீது வண்டியை
விட்டுருப்பார்.” அவன் உணர்ச்சி வேகத்தில் கத்திக்கொண்டே இருந்தான்.
அவன் கையை பிடித்தவர், “வேலா ஒரு நிமிடம்
பொறுமையா இரு. நான் சொல்லுறத கேளு” என்றார்.
“என்ன சொல்ல போறீங்க?” என்றான் அவரை முறைத்துக்கொண்டு.
அவன் முறைப்பில் சிரித்தவர் பேச தொடங்கினார். “வேலா, என்ன பிரச்சனை
வந்தாலும் நாம் அதை கடந்து செல்வதே சால சிறந்தது. உதாரணத்துக்கு, இப்போ நடந்ததேயே பாரு. நீயும் நானும் பேசியபடியே வந்தோம் . திடீரென எதிரில் வந்த வண்டி மீது நான் உன்னை தள்ளி விட்டேன். நீயும் சுதாரித்து விலகிவிட்டாய். அதுமட்டுமல்லாமல் அதை கடந்து, இங்க பாரு எவ்வளவு தூரம் வந்துவிட்டோம். பார்த்தாயா?” என்பது போல்
அவர்கள் கடந்து வந்த பாதையை காட்டினார்.
பாதையே பார்த்தவன் திரும்பி தாத்தாவின் முகத்தை பார்க்க,
“என்னடா புரியலயா?”
“ஆம்” என்பது போல் மேலும் கீழும் தலையாட்டினான் வேலன்.
தாத்தா முன்னோக்கி நடந்தபடியே பேச ஆரம்பித்தார். “வேலா முதலில் ஒரு விடயத்தை தெரிந்து கொள். என்ன நடந்தாலும் நாம் அதே இடத்தில் நிற்க முடியாது. கடந்து முன்னோக்கி சென்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதே போல், ஒரு தனி மனிதனாய் நீ உன்னயே திருத்திக்கொள்ள முடியுமே தவிர மற்றவர்களை மாற்ற முடியாது. உனக்கு பிடிக்கவில்லையா கடந்து செல். இப்படித்தான், நீ வேலை செய்யும் இடத்திலும் நடந்துக்கொள்ள வேண்டும். சில விடயத்தில் உன்னுடன் வேலை செய்பவர்களுடன் அவர்களுக்கு ஏற்றது போல் தான் செயல்பட வேண்டும். எப்போதுமே உடன் வேலை செய்பவர்களை பகைத்துக்கொள்ள கூடாது. அதுவே, நீ வேலை தெரியாதவர்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டு கற்றுக்கொடு. அவர்களே உன்னை, உனது முயற்சிகளை ஊக்குவிப்பார்கள். யாரிடமும் உன் உடல் பலத்தையோ; இல்ல உனக்கு என்ன தெரியும் என்ற உனது திமிரான எகத்தாள பார்வையோ காட்டக்கூடாது. அவர்களை காயப்படுத்தினால் நிச்சயம் அது, உன்னுடைய முன்னேற்றத்தை தடுக்கும். எல்லாருக்கும் உனக்கு தெரிந்த விடையம் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலர் இயல்பாக புத்திசாலியாக இருப்பர். மேலோட்டமாக சொன்னால் உடனே கற்று கொள்வர்.
ஆனால், எல்லாரும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லயே. நான் சொல்வது சரியா?” என்பது போல் வேலனை பார்த்தார்.
அவனும் ஆமோதிப்பாய் தலையசைத்தான். தாத்தாவுடன் பேசியதில் அவனுக்குமே நல்ல தெளிவு கிடைத்தது. அவனது மனதில் கூட, ‘இனி தனது கோவத்தை ஒருக்கட்டுக்குள்
கொண்டு வரவேண்டும். தனது எண்ண ஓட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்‘
என்று உறுதி எடுத்துக்கொண்டான்.
தாத்தாவை அனைத்துக்கொண்ட வேலன் தாத்தாவிடம் நன்றி சொல்லி விடைபெற்றான்.
——————-
இப்படியே நாட்கள் செல்ல…
இன்று வேலனுக்கு அவன் எதிர்ப்பார்த்த பதவி உயர்வு. அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எத்தனை நாட்கள் கவலை பட்டிருப்பான்.. தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்க வில்லை என்று. ஆனால், இன்று அவன் ஆசைப்பட்ட வேலை அவன் கையில்.
சந்தோசமாக வந்தான், அதே மரத்தடிக்கு தாத்தாவை தேடி.
தாத்தாவோ வேலன் வந்ததை கவனிக்கவில்லை. அவர் கையில் இருந்த நாளிதழில்
மூழ்கி இருந்தார் .
அன்று தாத்தா அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தது போல்
இன்று வேலன் செய்தான். அவன் அரவத்தில் நிமிர்ந்த தாத்தா இவனை பார்த்ததும் ஆனந்தமாக அதிர்ந்தார். இப்போது கொஞ்ச நாட்களாகவே வேலனை பார்க்க முடியவில்லை. இன்று அவனே தன்னை தேடி வந்ததால் இந்த சந்தோஷம்.
அவரது முகத்தில் இருந்த சிரிப்பில், ஒரு துள்ளலுடன் கையில் இருந்த இனிப்பய்
தாத்தா வாயில் வைத்தான் வேலன். அவரும் சந்தோசமாக வாங்கிக்கொண்டார் . அவனே பேச ஆரம்பித்தான்.
“தாத்தா எனக்கு பதவி உயர்வு கிடைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், எனக்கு என்கூட வேலை செய்பவர்கள் ஆதரவும் கிடைச்சிருக்கு. இது எல்லாமே உங்களால் எனக்கு கிடைச்சது. பெரிய பெரிய நன்றி தாத்தா!” என்று அவரை கட்டிக்கொண்டான்.
தாத்தா, “டேய்” “டேய் விடுடா படவா” என்றார் விளையாட்டாக.
ஒருவழியாக இருவரும் அமைதியாக பேச ஆரம்பித்தனர். “வேலா. நீ நான் சொன்னதைக் கேட்டு உன்னை திருத்திக்கிட்ட ரொம்ப சந்தோஷம். வாழ்க்கையில் நீ இன்னும் பயணிக்க வேண்டிய தூரம்
எவ்வளவோ இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம். எப்படி தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுகிறதோ அப்படித்தான் நம் வாழ்க்கையும். நீ எங்கேயும் தேங்கி நிற்க கூடாது. அது முடியவும் முடியாது. அதை நீ புரிஞ்சுக்கணும். இதில் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் . நமக்கு என்ன வேண்டுமோ அதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உனக்கு உன்னுடைய திறமைக்கு
ஏற்றவாறு அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கனும். ஆனால், ஒருவரிடமும் தனிப்பட்ட பகை வளர்க்க கூடாது. அது உன்னை வளர விடாது” என்றார் தீர்க்கமாக அவன் கண்களை பார்த்தபடியே.
“நிச்சயமா தாத்தா” என்றான் வேலன்.
“முன்னோக்கி செல். தடைகளை கடந்து முன்னோக்கி செல்” என்றபடி சிரித்துக் கொண்டே அவனது தோள்களை தட்டிக் கொடுத்தார்.
– பவித்ராமுருகன்