Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 64

CHAPTER 64

விவாதம் – 64

By S.K Velan · October 4, 2026

0

மறுநாள் காலை கேவி வழக்கம் போல மகிழினியுடன் கேண்டீன் செல்வதற்காக கீழே இறங்கி வந்தான். ஆனால் வாசலில் கீதா மட்டும் நின்றிருந்தார்.

“குட் மார்னிங் அத்தை.”

“காலை வணக்கம் மாப்ள.”

“எங்க சிஎம் காணோம்? நடந்தே போயிட்டாங்களா?”

“உங்களுக்கு எப்படிமாப்ள தெரியும்?”

“எல்லாம் ஒரு கணிப்புதான்.”

கீதா பெருமூச்சு விட்டார்.

“உங்க பொண்டாட்டிக்கு என்னதான் பிரச்சனை?”

“அவங்க மனசுதான் அவங்களுக்கு பிரச்சனை.”

“புரியலையே… ஒருவேளை அவளால வீரவேலை மறக்க முடியலையா?”

“அவங்க அவரை மறக்கணும்னு நான் நினைக்கவே இல்லையே.”

“என்னப்பா சொல்ற?”

“ப்ச்… அவங்க அவர்கூட நல்லதொரு வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டு இருக்காங்க. அது விதியின் வசத்தால நடக்காம போயிருச்சு. அந்த விபத்துக்குப் அப்புறம் அவங்க அவரையே நினைச்சுக்கிட்டு வாழ்ந்துடலாம்னு நினைச்சாங்க. ஆனா, அந்த நினைப்புக்கு தடையா நான் அவங்க வாழ்க்கையில வந்துட்டேன். முதல்ல அவங்களுக்கு என்னை பிடிக்கல. ஆனா, இப்ப அப்படி இல்ல.”

“ம்… அந்த மாற்றம் எனக்கும் தெரியுதுதான் மாப்ள. ஆனா, அவதான் அவளோட மனசுல என்ன இருக்குன்னு வாயைத் திறந்து சொல்ல மாட்றாளே. சும்மா தேய்ந்து போன ரெக்கார்ட் போல டிவோர்ஸ் வேணும், டிவோர்ஸ் வேணும்னு கேட்டுட்டு இருக்காளே.”

“அவங்க என்கிட்ட முன்னாடி எல்லாம் டிவோர்ஸ் கேட்டது என்னமோ மனசால என்னை பிடிக்காமதான். ஆனா, இப்ப அவங்க கேக்குறது அதுக்காக இல்ல.”

“பின்ன எதுக்கு?”

“ம்… அவங்க கூட நான் வாழ்ந்தா எனக்கு எதாவது ஆகிடுமாம்.”

கீதா அதிர்ந்து போனார்.

“இது என்னடா வம்பா இருக்கு?”

“ம்… அவங்க அப்படித்தான் சொல்றாங்க. அவங்களுக்கு என்னை பிடிக்கும். ஆனா, என்னமோ ஒரு நெருடல். அவங்க மனசு என் காதலை ஏத்துக்க முடியாம தடுக்குது.”

“அது என்னன்னு எனக்கு தெரியும் மாப்ள.”

“என்ன அத்தை சொல்லுறீங்க? அவங்க அப்படி என்னத்தான் நினைச்சு என்கிட்ட இருந்து தள்ளிப் போறாங்க?”

“அவ பயப்பட்றது இந்த சமுதாயத்துக்குத்தான் மாப்ள.”

“புரியல.”

“கல்யாணம் முடிந்த ஒரு வருஷத்துக்குள்ள மறுமணம் பண்ணிக்கிட்டு, பிள்ளை குட்டின்னு வாழ்ந்தா இவள யாராவது ஏதாவது சொல்லப் போறாங்கன்னு நினைக்கிறா போல.”

“பேசுற ஹேர்க்கு எல்லாம் நம்ம பதில் சொல்லணும்னு அவசியம் இல்லையே அத்தை.”

“அது நமக்குத் தெரியுது. ஆனா, சித்ரா ஊருக்குப் பயப்பட்றா. ஏன்… அந்த வீரவேல் இறந்ததுக்கு காரணம் கூட இவதான்னு இவளே இவளை குறை சொல்லிக்கிட்டு, இவ ராசியை நினைச்சுக்கூட பயப்படுறா.”

“வாழ்க்கை முழுக்க இப்படி எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டு இருந்தா நம்ம வாழ்க்கையை நம்ம வாழ இயலாதே அத்தை.”

“அது உங்க பொண்டாட்டிக்குப் புரியணுமே.”

“ம்… இனி அவங்களுக்கு புரிய வைக்கிறதுதான் என்னோட முதல் வேலை.”

“என்னமாப்ள பண்ணப் போறீங்க?”

“அவங்கள அவங்க போக்குலயே விடப் போறேன் அத்தை. சும்மா அவங்களப் போய் என்கூட வாழச் சொல்லி கட்டாயப்படுத்தாம, அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதை பண்ணட்டும்னு விடப் போறேன்.”

“அவதான் உங்ககிட்ட டிவோர்ஸ் கேக்குறாளே.”

“ம்… அதான் அவங்களுக்கு வேணும்னா இனி அதையும் தந்துட வேண்டியதுதான்.”

“ஐயோ!! என்ன சொல்லுறீங்க?”

“ம்… உண்மையைத்தான் சொல்லுறேன். அவங்க இனிமே என்ன கேக்குறாங்களோ அதைதான் நானும் பண்ணப்போறேன். அதுக்கு முதல் அடி தான் நான் இன்னும் கொஞ்ச நாள்ல மும்பைக்குப் போறது.”

“அப்போ உண்மைக்கே நீங்க மும்பை போகப் போறீங்களா?”

“ம்… ஆமா அத்தை. நல்ல ஆபர் இது. நான் வேலைக்கு ஜாய்ன் பண்ணி கொஞ்ச நாளிலேயே எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம். சோ, நான் மும்பை போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.”

“அப்போ சித்ரா?”

“அவங்க என் கூட வந்தா அவங்களையும் அழைச்சிட்டு போவேன். இல்லைனா அவங்க என்ன கேக்குறாங்களோ அதை மாதிரி பண்ணிட வேண்டியதுதான்.”

“சரி… என்னமோ பண்ணுங்க.”

“ம்… எல்லாம் நன்மைக்குன்னு நினைப்போம். நீங்க வாங்க. நம்ம கேண்டீன் போகலாம்.”

என்றவன் தன் அத்தையை அழைத்துக்கொண்டு கேண்டீனுக்குச் சென்றான்.

அங்கே மகிழினி கேவியை கண்டுகொள்ளாமல் தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளருகில் சென்றவன்,

“குட் மார்னிங் சிஎம்,” என்றான்.

மகிழினி தன் கையில் இருந்த ப்ளாஸ்க்கை கீதாவிடம் கொடுத்துவிட்டு,

“அம்மா, டீ போட்டு வச்சி இருக்கேன். நீங்களும் உங்க மாப்பிள்ளையும் எடுத்துக்கோங்க,” என்றாள்.

கீதா இரண்டு கப்பில் டீயை ஊற்றி ஒன்றை கொடிவீரனிடம் கொடுத்தார். டீயை வாங்கிப் பருகியவன் உடனே முகத்தைச் சுளித்தான்.

“அத்தை, டீயில என்ன இவ்ளோ சக்கரை இருக்கு? இந்தாங்க… இந்த டீயை அவங்களேயே குடிக்கச் சொல்லுங்க.”

என்றவன் தன் சட்டையை மாற்றியபடி அங்கிருந்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

இவர்கள் இருவருக்குள் நடக்கும் இந்தப் பைத்தியக்காரத்தனமான சண்டையைப் பார்த்து கீதா குழம்பியவாறே தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது செல்ஃபோன் ரிங் ஆனது. அழைப்பை ஏற்றவர்,

“ஹலோ… இப்ப எதுக்கு எனக்கு கால் பண்ணீங்க? நான்தான் உங்ககூட பேசமாட்டேன்னு சொன்னேன் இல்ல? அறிவு இல்ல உங்களுக்கு?” என்று கோபமாகப் பேசினார்.

“யாரு அத்தை? போன்ல மாமாவா?” என்று கேவி கேட்டான்.

“ம்… உன் அண்ணன் தான் போன்ல.”

“அதானே… நீங்க என் மாமனாரை இன்னும் மரியாதையாதானே பேசுவீங்க,” என்று மகிழினி குறும்பாகக் கூற, கீதா அவளைப் பார்த்து,

“சித்ரா!!” என்று அதட்டினார்.

“சொல்லுங்கம்மா.”

“என் மகளோட புருஷன் உன்கிட்ட பேசணுமாம்.”

“யாரு? மாறன் அண்ணனா?”

“ம்.”

மகிழினி போனை வாங்கிக்கொண்டாள்.

“ஹலோ!”

“எப்படிமா இருக்க?”

“நல்லா இருக்கேன். நீங்க நலமா? அக்கா எப்படி இருக்காங்க?”

“அவளுக்கு என்ன… சும்மா கும்முனு தான் இருக்கா.”

“ம்…”

“சரிமா… இந்த வாரம் நம்ம வீட்டுல உனக்கும் என் தம்பிக்கும் சின்ன விருந்து ஏற்பாடு பண்ணிருக்கேன். சோ, நீ என் தம்பி கூட வந்துடு.”

“அது…”

“என்னம்மா? வர மாட்டியா?”

“உங்க தம்பி அழைச்சிட்டு வந்தா வரேன்.”

“ம்… நல்லது மா. சரி, போனை அவன்கிட்ட கொடு.”

“ஹாங்… இதோ தரேன்.”

மகிழினி போனை கேவியிடம் கொடுத்தாள்.

“இந்தாங்க… உங்க அண்ணன் பேசுறாரு.”

“ஹலோ… சொல்லுண்ணா.”

“டேய்… சண்டே பாப்பாவை அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடுடா.”

“சண்டே வா?”

“ம். ஏன்? வேற எதாவது வேலை இருக்கா?”

“அண்ணா… இன்னும் 8 நாள்ல நான் மும்பை போறேன்.”

மகிழினி உடனே அவனை முறைத்தாள்.

“சரி… அப்போ போய்ட்டு வந்து விருந்துக்கு வா.”

“ஹா… நான் போனா வர்ற ஆறு மாசம் ஆகும்.”

“ஏன்? மும்பை முக்குட்டு சந்துல முறுக்கு விக்கப் போறியா?”

“ப்ச்… வேலை விஷயமா போறேன் ண்ணா.”

“நீ மட்டும் தனியாவா?”

“வீட்டுல வரச் சொன்னேன். அவங்க இன்னும் எந்த முடிவும் சொல்லல.”

“சரி. நீ ஊருக்குப் போக இன்னும் 8 நாள் இருக்கு இல்ல? அதுக்குள்ள இங்க சண்டே வந்துட்டு போ. ஹாங்… வரும்போது என் ஆளை தூக்கிட்டு வந்துடு.”

“யாரு? வேணுவையா?”

“அந்த முருங்க குச்சி வாயனை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணுறது? நான் நம்ம மாமியாரை சொன்னேன்.”

“ம்… சரிண்ணா. நான் எதுக்கும் ஃப்ரைடே போன் பண்ணுறேன்.”

என்றவன் கைபேசி இணைப்பைத் துண்டித்தான்.

அதீத கோபத்துடன் தன்னை முறைத்துக்கொண்டு நின்ற மகிழினியைப் பார்த்த கேவி இயல்பாகச் சிரித்தான்.

“ஏன் என்னை இப்படி சைட் அடிச்சிக்கிட்டு நிக்குறீங்க?”

“சோ… நீங்க மும்பை போக முடிவு பண்ணிட்டீங்கல்ல?”

“நான் இல்லிங்க… நம்ம—”

“என்னால உங்ககூட வர முடியாது. இங்க கேண்டீன் வேலை எல்லாம் விட்டுட்டு நான் எப்படி உங்க கூட வருவேன்னு நீங்க நினைக்கிறீங்க?”

“கேண்டீன் வேலையைப் பார்த்துக்க உங்க பாட்டியும் என் அத்தையும் இருக்காங்க. என் அத்தை எல்லாம் ஏழு ஊருக்கு சமைச்சுப் போடுவாங்க. சோ, ஒரு ஆறு மாசம் நம்ம மும்பை போயிட்டு வர்றதால இங்க ஒண்ணுமே மாறாது.”

“நீங்க என்ன சொன்னாலும் சரி. என்னால மும்பைக்கு வர முடியாது.”

“ஓகே… அப்போ நான் போய்ட்டு வரேன்.”

“நீங்களும் போகக்கூடாது.”

“பர்டன்?”

மகிழினி கோபமாகப் பார்த்தாள்.

“நீங்க வர மாட்டேன்னு சொல்றது மட்டும்தான் உங்களோட உரிமை. நான் போகக்கூடாதுன்னு நீங்க எந்த உரிமையில சொல்லுவீங்க?”

“அப்போ உங்ககிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொல்றீங்களா?”

“நானா என்னைக்குமே அப்படி சொன்னது இல்ல. நீங்கதான் நான் உங்க கழுத்துல தாலி கட்டினதுல இருந்து இந்த நொடி வர சொல்லிக்கிட்டு இருக்கீங்க.”

மகிழினி பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தாள்.

“லிசன் சிஎம்… நமக்கு மேரேஜ் முடிஞ்சிது. ஆப்டர் மேரேஜ் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் நிறைய லவ் பண்ணலாம். ஆனா, அதுக்கு நடுவுல வாழ்க்கைக்கு எது தேவையோ அதையும் நம்ம சேர்க்க ஆரம்பிக்கணும். இப்ப ரெண்டு காசு சேர்த்து வச்சா தான் நாளைக்கு நம்ம பிள்ளைங்கள நல்லா படிக்க வைக்க முடியும். அண்ட் முக்கியமா… கடன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.”

மகிழினி குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

“இப்ப எதுக்கு நீங்க இதெல்லாம் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”

“ப்ச்… உங்ககிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லுறது? நம்ம வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போகணும்னு உங்களுக்கு எண்ணமே இல்லையா!? காலத்துக்கும் இப்படியே ‘மௌன ராகம்’, ‘ராஜா ராணி’ படம் ஹீரோ ஹீரோயின் மாதிரி காதலுக்காக காத்துட்டு இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களா?”

மகிழினியின் முகம் மீண்டும் கோபத்தில் சிவந்தது.

“இங்க பாருங்க… உங்க மனசுல நான் இருக்கேன். அது எனக்கு நல்லாவே தெரியும். நீங்க உங்க பாஸ்ட் லைஃப் அண்ட் இந்த வீணா போன சொசைட்டின்னு எதை நினைச்சு கவலைப்பட்டாலும், அதெல்லாம் நம்ம வாழப் போற வாழ்க்கைக்கு சல்லிக்காசுக்கு கூட பிரயோஜனம் இல்ல. சோ… நல்லா யோசிங்க. இன்னும் 8 நாள் உங்களுக்கு டைம் இருக்கு. நான் மட்டும் மும்பை போகணுமா? இல்ல நம்ம போகணுமான்னு நீங்கதான் முடிவு பண்ணணும்.”

மகிழினி அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.

“சரி… எனக்கு ஆபீஸ்ல ஒர்க் இருக்கு. நான் கிளம்புறேன். ஹாங்… நீங்க உங்க வேலைக்கு.”

“எனக்கு நடந்து போகத் தெரியும்.”

“அதான் நானும் சொல்ல வந்தேன். இனி நான் உங்கள எப்பவுமே பிக்கப் பண்றேன்னு சொல்லி டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். நீங்க உங்களுக்கு என்ன தோணுதோ அதை பண்ணுங்க. நான் வரேன்.”

அப்போது கீதா,

“மாப்ள… சாப்பிட்டு போங்க,” என்றார்.

“கேண்டீன்ல பாத்துக்குறேன் அத்தை. நான் வரேன்.”

என்றவன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றான்.

அவனின் இந்தத் திடீர் மாற்றத்தில் மகிழினி குழம்பிப்போனாள். யாரிடமும் எதுவும் பேசாமல் தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மதிய நேரம் டியூட்டிக்குக் கிளம்பியவள், இரவு 8 மணி அளவில் தான் வேலை பார்க்கும் கிளினிக்கிலிருந்து வெளியே வந்தாள்.

வாசலில் வேணுவும் கேவியும் பைக்கில் அவளுக்காகக் காத்திருந்தனர்.

ஆனால் மகிழினியோ அவர்களைக் கண்டும் காணாமல் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

“என்னமாமா இது? ஏன் அத்தை நம்ம கூட வரல?” என்று வேணு கேட்டான்.

“உன் அத்தை அப்படித்தான்.”

என்றவன் மகிழினியைப் பின்தொடர்ந்து தன் பைக்கை பொறுமையாக ஓட்டிச் சென்றான்.

மகிழினி வீட்டுக்குள் நுழைந்தவள், தன் பின்னே வந்த கேவியை முறைத்துப் பார்த்தபடி மாடிப்படியில் கால் வைத்தாள்.

“உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். இந்த பணியார வாயனை கீழே இருக்கச் சொல்லிட்டு நீங்க மாடிக்கு வாங்க.”

“என்ன? நான் பணியார வாயனா? இங்க பாரு அத்தை… நீ ரொம்ப பேசுற,” என்று வேணு சிணுங்கினான்.

“வேணு… நீ உள்ள போ. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்.”

என்றவன் மகிழினியுடன் மாடிக்குச் சென்றான்.

அறைக்குள் நுழைந்த மகிழினி அமைதியாக நின்றாள்.

“என்னங்க… என்னமோ பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? என்னன்னு சொல்லுங்க.”

“நான் உங்கிட்ட ஒரு உதவி கேப்பேன். நீங்க பண்ணுவீங்களா?”

“என்ன உதவியா?”

“ம்…”

“என்ன கேட்கப் போறீங்க?”

“நீங்க…”

சில நொடிகள் தயங்கியவள் இறுதியில்,

“நீங்க மும்பைக்கு போகாதீங்க,” என்றாள்.

கேவி அவளைப் பார்த்தான்.

“ஏன்?”

“நீங்க போறது எனக்கு பிடிக்கல.”

“உங்களுக்கு தான் என்னையவே பிடிக்கலயே. பின்ன நான் மும்பைக்கு போனா நீங்க ஏன் கவலைப்படணும்? விட்டது ஏழரைன்னு ஹாப்பியா இருக்க வேண்டியதுதானே?”

“ப்ச்… முடிவா சொல்லுறேன். நீங்க மும்பை போகக்கூடாது.”

கேவி சிறிதும் தயங்காமல்,

“சாரி சிஎம்… நான் இல்லையா… நம்ம கண்டிப்பா மும்பை போறோம்,” என்று திட்டவட்டமாகச் சொன்னான்.

மகிழினி மேற்கொண்டு ஏதும் பேசாமல் மாடியில் இருந்து கீழே இறங்கிச் சென்றாள்.

அன்றைய தினத்திலிருந்து வார இறுதி வரை இவர்களுக்குள் இந்தப் பனிப்போர் அரங்கேறிக்கொண்டே இருந்தது.

சண்டே மார்னிங், கேவி, கீதா, வேணு, சிஎம் என்று நால்வரும் மாறன்–மகி வீட்டிற்குச் சென்றனர். அங்கே அவர்களுக்குத் தடபுடலாக விருந்து நடந்துகொண்டிருந்தது.

ஒருவழியாக விருந்தை நல்ல விதமாக முடித்தவர்கள் அங்கிருந்து விடைபெறும் தருவாயில் மாறன் கேவியைப் பார்த்து,

“டேய் மணி… 5 PM தானே ஆகுது. ஏன் அதுக்குள்ள கிளம்புற? கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு. நைட் 12 மணிக்கு வண்டி எடுத்தா 3 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிடலாம்,” என்றான்.

“இல்ல அண்ணா… இன்னும் 4 நாள்ல நான் மும்பை போகணும். சோ, கொஞ்சம் பர்சேஸ் பண்ற வேலை இருக்கு.”

மகி உடனே மகிழினியைப் பார்த்தாள்.

“ஏன் சித்து… நீயும் தானே உன் புருஷன் கூட மும்பை போற?”

மகிழினி மெதுவாகத் தலையசைத்தாள்.

“ம்…ஹூம். இல்ல.”

“என்ன? நீ போகலையா?”

மாறனும் ஆச்சரியத்துடன் கேவியைப் பார்த்தான்.

“ஏன் நீ போகல? ஏன்டா… கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள் கூட ஆகல. ஏன்டா அதுக்குள்ள பொண்டாட்டியை விட்டுட்டு தனியா போற?”

“அவங்களையும் தான்ண்ணா வரச் சொன்னேன். ஆனா, அவங்கதான் வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”

மகி மீண்டும் மகிழினியைப் பார்த்தாள்.

“ஏன் சித்து? நீ அவர் கூட போகல?”

மகிழினி அமைதியாக நின்றாள்.

மாறன் இருவரையும் பார்த்துவிட்டு,

“டேய்… உங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

மகி மகிழினியின் முகத்தைப் பார்த்தாள்.

“என்ன சித்ரா? என்னாச்சு? உன் முகமே சரியில்லையே.”

மாறன் கீதாவை நோக்கித் திரும்பினான்.

“ஏன் மாமியாரே… நீங்க இவங்க கூட தானே இருக்கீங்க? இவங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை?”

கீதா பெருமூச்சுடன்,

“ம்… என்னை என்னத்த சொல்லச் சொல்றீங்க? தானா அமைஞ்ச நல்ல வாழ்க்கையை இவங்க ரெண்டு பேரும் கெடுத்துக்கப் பாக்குறாங்க.”

மகி அதிர்ந்து,

“என்னமா சொல்ற?”

கீதா தயக்கமின்றி உண்மையைச் சொல்லிவிட்டார்.

“ம்… ஆமாம்மா. இதோ இந்த சித்ராக்கு இன்னும் ஒரு வருஷத்துல டிவோர்ஸ் வேணுமாம்.”

“என்ன?” மாறன் அதிர்ந்தான்.

“ம்… அப்படித்தான். கல்யாணம் முடிந்த கையோடு போய் ஒரு வக்கீலைப் பார்த்து விவாகரத்து கேட்டுட்டு வந்திருக்கா.”

மாறன் கேவியைப் பார்த்தான்.

“என்னடா தம்பி இதெல்லாம்?”

“ம்…”

மகிழினி சங்கடத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் ஆகாம டிவோர்ஸ் கிடைக்காது இல்ல? அதான் இப்ப ஒண்ணா இருக்காங்க.”

மகி உடனே,

“லூசா சித்ரா! உனக்கு டிவோர்ஸ் வேணும்னா இவ்ளோ பெரிய வக்கீல் என்கிட்ட கேட்க வேண்டியதுதானே.”

கேவி கோபமாக மகியைப் பார்த்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் மகி தொடர்ந்தாள்.

“இப்ப என்ன… உனக்கு உடனே டிவோர்ஸ் தானே வேணும்? ‘மேரேஜ் இஸ் நாட் கன்ஸ்யூம்ட் டியூ டூ இம்பாட்டன்ஸ்’ன்னு இந்த கேஸ் மட்டும் நீ என் கொழுந்தன் மேல போடு. எண்ணி மூணே நாள்ல உனக்கு டிவோர்ஸ் கிடைக்கும்.”

மகி அந்த வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்குள் அங்கே ஒரு குரல் இடியென ஒலித்தது.

“இல்ல… வேணாம்! அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க!”

அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே திடீரென்று வந்து நின்றிருந்தார் கொடிவீரனின் அம்மா ஜெயா.

அவர் நேராக மகிழினியைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்.

“இந்தக் கல்யாணம் நடக்க நான்தான் காரணம். தப்பெல்லாம் என்மேலதான். எக்காரணத்தைக் கொண்டும் இப்படி ஒரு கேவலமான வழக்கை என் பையன் மேல போட்டு அவனை அசிங்கப்படுத்தாத சித்ரா. உனக்கு விருப்பம் இல்லாம இந்தக் கல்யாணம் நடந்ததுன்னு எனக்குத் தெரியாது மா. இப்ப என்ன? உனக்கு விவாகரத்து வேணும்… அவ்வளவு தானே?”

ஜெயா மகியை நோக்கித் திரும்பினார்.

“மகி… உன்னுடைய ஆபீஸ் ரூம்ல விவாகரத்து பத்திரத்தை அடிச்சு எடுத்துட்டு வந்து கொடு. என் எதிர்லயே என் பையன் சித்ராவுக்கு கையெழுத்துப் போட்டு கொடுப்பான். இனி அவங்க வாழ்க்கையை அவங்கவங்க பாக்கட்டும்.”

ஜெயாவின் அந்த வார்த்தைகள் மகிழினியின் நெஞ்சை நேராகத் தாக்கின. அவளது கண்களில் கண்ணீர் பெருகியது.

சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் கொடிவீரன் குழம்பியபடி நின்றான்.

சசி தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டபடி வேதனையுடன் கொடிவீரனைப் பார்த்தாள்.

“என்னடா தம்பி… இங்க என்ன நடக்குது? அப்போ இத்தனை நாள் வரை நீ சித்ரா கூட சந்தோஷமாவே இல்லையா?”

“ம்ஹூம்… உன் தம்பி சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சாலும், இதோ சித்ரா அதுக்கு ஓகே சொல்ல மாட்டா…”

என்று கீதா சலிப்புடன் சொல்ல, ஜெயாவின் கண்களும் கலங்கின.

“ஐயோ… நான்தான் தப்பு பண்ணிட்டேன். என் மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு, என் மகனை கல்யாணம் பண்ணிக்க விருப்பமே இல்லாத சித்ராவை என் சுயநலத்துக்காக என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, இவ சந்தோஷத்தையே நானே கெடுத்துட்டேன். அம்மாடி சித்ரா… என்னை மன்னிச்சுடும்மா…”

என்று தன் பங்குக்கு வருத்தப்பட்ட ஜெயாவைப் பார்த்துக் கொண்டிருந்த கொடிவீரனும் மகிழினியும் ஒருவரை ஒருவர் தர்மசங்கடமாகப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“அம்மா! அக்கா! நீங்க எப்படி இங்க?”

என்று கொடிவீரன் கேட்க, சசி அவனை முறைத்தாள்.

“ஏன்டா… உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா எங்கிட்ட சொல்ல மாட்டியா? நாங்க எல்லாம் உனக்கு இல்லையா?”

என்று கேட்டவள், அடுத்த நொடியே சித்ராவின் அருகில் சென்று அவள் கையைப் பிடித்து மகிழினியின் அருகில் அழைத்து வந்தாள்.

“மகி… நீ வக்கீல் தானே? நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. எங்களுக்கு கொடிவீரனை விட சித்ரா வாழ்க்கை மேலதான் அக்கறை அதிகம். அதனால இவ விருப்பப்படுற மாதிரி, இவளுக்கு என் தம்பிகிட்ட இருந்து விவாகரத்து வாங்கிக் கொடுத்துடு.”

சசியின் வார்த்தைகளைக் கேட்டதும் மகிழினியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“அக்கா! நீ என்ன லூசா!? அவங்க என்கிட்ட டிவோர்ஸ் கேட்டா நான் கொடுத்துடுவேனா? என்னால என் பொண்டாட்டியை விவாகரத்து பண்ணவே முடியாது!”

என்று கொடிவீரன் கோபமாகக் கத்தினான்.

அவனைத் தோளோடு அணைத்துக் கொண்ட மாறன்,

“தம்பி… பெண்கள் என்ன கேட்டாலும் நம்ம அதைத் தந்துடணும் டா. சோ… உன் பொண்டாட்டி என்ன கேக்குறாளோ அதை நீ கொடுத்துடு.”

என்றதும், கேவி தன் தோள்மீதிருந்த மாறனின் கையைத் தட்டிவிட்டான்.

“யோவ்! என் பொண்டாட்டி ஒண்ணும் உங்க பொண்டாட்டி மாதிரி மாலைக் குல்ஃபி கேட்கல. கேட்டதும் நான் கொடுக்குறதுக்கு. அவங்க என்கிட்ட டிவோர்ஸ் கேக்குறாங்க!”

என்று கோபமாகப் பதில் தந்தவன், மகிழினியை முறைத்துப் பார்த்தான்.

அவளோ கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!