சில மணி நேரங்கள் கடந்தன.
படுக்கையில் புரண்டு படுத்த கொடிவீரன், தன் எதிரே இருந்த இருக்கையில் தன் மனைவி அமர்ந்தபடி உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் வாரிச் சுருட்டி எழுந்து அமர்ந்தான்.
கண்களைக் கசக்கிப் பார்த்தான்.
மேசையின் மேல் இரவு உணவு அவர்களுக்காகக் காத்திருந்தது.
இருவருமே உறக்கத்தில் பாதி இரவைக் கடந்திருந்தனர்.
தன் படுக்கையிலிருந்து எழுந்த கொடிவீரன், மகிழினியை அலுங்காமல் தூக்கி தன் கட்டிலில் படுக்க வைத்தான்.
அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு, அவள் அருகிலேயே தானும் படுத்துக்கொண்டான்.
சில நொடிகள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகிழினியை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், அவளுடைய வதனத்தை ரசித்தபடியே மீண்டும் உறங்கிப் போனான்.
காலை ஐந்து மணி அளவில், எப்போதும் போலவே மகிழினி முதலில் கண் விழித்தாள்.
அருகில் கேவி தன் கரங்களை அவன் மார்பின் மீது கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான்.
சுற்றிலும் பார்த்தவள், தன்னை கொடிவீரன்தான் கட்டிலில் படுக்க வைத்திருப்பான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
மெதுவாக எழுந்து கீழே செல்ல முயன்றபோது, அவளுடைய முந்தானை கொடிவீரனின் முதுகுக்குக் கீழே சிக்கியிருந்தது.
அதை எடுக்க முயன்ற போராட்டத்தில் கொடிவீரன் தன் விழிகளை மலர்த்தினான்.
அவன் எதிரில் மகிழினியின் முகம் பிரதிபலித்தது.
“Good morning, சிஎம்.”
என்றவன் படுக்கையில் இருந்து எழுந்தான்.
தன் முந்தானையை அவன் வசமிருந்து விடுவித்துக்கொண்ட மகிழினி, மின்னல் வேகத்தில் கீழே இறங்கி ஓடினாள்.
அவளுடைய செயலைக் கண்டு சிரிப்பதா, கோபிப்பதா என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்ட கேவி, தன் காலை கடமைகளை முடித்துக்கொண்டு கேண்டீன் செல்வதற்காக வண்டிச் சாவியுடன் கீழே இறங்கினான்.
அங்கே அவனுக்காக வாசலில் மகிழினி காத்துக்கொண்டிருந்தாள்.
“நீங்க இன்னைக்கு கிளினிக்ல duty-க்கு போகணும் தானே?”
என்று கேட்டான்.
“ம்…”
என்று பதில் அளித்தவளின் பார்வை அவனைப் பார்க்க மறுத்தது.
“எத்தனை மணிக்கு duty?”
“மதியம் 2 PM to 8 PM.”
என்றவள் வாசலை நோக்கிச் சென்றாள்.
தன் பைக்கை எடுத்துக்கொண்டு அவள் அருகில் வந்தான் கேவி.
“நான் கேண்டீன் வேலையை முடிச்சிட்டு 10 மணிக்கு office-க்கு போய் ஒரு சில files எல்லாம் hand over பண்ணிட்டு, இரண்டு மணிக்குள்ள வந்துடுவேன். நீங்க ரெடியா இருங்க.”
மகிழினி “ம்” என்று தலையசைத்தாள்.
பைக்கில் அவன் பின் அமர்ந்துகொண்டவளின் இதழ்கள் அவனிடம் பேசத் தயங்கின.
இவர்கள் இருவரும் ஒன்றாக கேண்டீனுக்குச் சென்றனர்.
அங்கு பணிபுரியும் நபர்களுடன் சேர்ந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
சரியாக ஏழு மணி அளவில், காலை உணவை மகிழினி கேவி முன் நீட்டினாள்.
அவள் கையில் இருந்த உணவை வாங்கிக்கொண்டவன்,
“நீங்க சாப்பிடலையா?”
என்று கேட்டான்.
“இல்ல. Late ஆகும்.”
அவள் சொன்னதும், சற்றும் யோசிக்காமல் தன் கையில் இருந்த தோசையை அவள் இதழ்களின் நடுவில் வைத்தான்.
மகிழினியின் கண்கள் சிவந்தன.
“இத சாப்பிட்டுட்டு தெம்பா முறையுங்க.”
என்றவன், தன் கையில் இருந்த உணவை அவளும் சாப்பிடும்படி செய்தான்.
அவனுடைய செயலில் திடுக்கிட்ட மகிழினி, வேறு வழியின்றி உணவை விழுங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் முறைப்பதைப் பொருட்படுத்தாமல் அவனும் உண்டான்; அவளையும் உண்ண வைத்தான்.
அவள் அங்கிருந்து நகராமல் இருக்கும்படி, அவளுடைய வலது கையை தன் இடது கையால் பிடித்துக்கொண்டான்.
ஒருவழியாக இருவரும் காலை உணவை முடித்தனர்.
மீண்டும் கேண்டீன் வேலையைத் தொடர்ந்தனர்.
அதே கேண்டீனில் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையில் தங்களுடைய உடைகளை மாற்றிக்கொண்டனர்.
காலை 9.30 மணி அளவில் கேவி தன் அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானான்.
அவனுக்குத் தேநீர் கொண்டு வந்த மகிழினி, அவன் முன் கப்பை நீட்டினாள்.
அதை வாங்கிக்கொண்ட கொடிவீரன்,
“மதியம் 1.30க்குள்ள நான் வந்துடுவேன். நீங்க சாப்பிட்டு ரெடியா இருங்க. நானே உங்களைக் கிளினிக்குக்கு அழைச்சிட்டுப் போறேன்.”
என்றான்.
மகிழினி புருவத்தை உயர்த்தி அவனை முறைத்தாள்.
“அதெல்லாம் வேணா. இங்கிருந்து கிளினிக் மூணு தெரு தள்ளிதான் இருக்கு. நான் நடந்தே போய்க்கிறேன்.”
என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
அடுத்த நொடியே அவளுடைய இடையைச் சட்டென்று தன் வசம் அணைத்துக்கொண்டான் கொடிவீரன்.
அவனுடைய திடீர் செயலில் விக்கித்துப் போனாள் அவனுடைய சிஎம்.
“நான் ஏதாவது சொன்னா எப்பவுமே இப்படி குதற்கமா பேசிக்கிட்டு இருக்கக்கூடாது. புரியுதா?”
அவள் அமைதியாக இருந்தாள்.
“இனி சமத்து பொண்ணா நான் சொல்றத மட்டும்தான் கேட்கணும். ஏன்னா, உங்களுக்கு நல்லது இல்லாதத எதையும் நான் சொல்லப் போறது இல்ல. So… listen and do what I say.”
என்றவனின் கரங்கள் அவளுடைய சிற்றிடையைத் தன்னோடு இணைத்திருந்தன.
அவன் வசமிருந்து விலக முயன்றவளின் தேகத்தில் மின்னல் வெட்டியது போன்ற உணர்வு தோன்றியது.
சில நொடிகளில், அவளுடைய செவ்விதழ்களை அவனுடைய அதரங்கள் நெருங்குவதை உணர்ந்த மகிழினி, தன்னையும் அறியாமல் கண்களை இறுக்கமாக மூடி முகத்தைச் சற்றே உயர்த்தினாள்.
அவன் தரவிருக்கும் முத்தத்தை எதிர்பார்த்த அந்த நொடியில்—
கொடிவீரனின் இதழோரத்தில் குறும்புப் புன்னகை மலர்ந்தது.
சில நொடிகள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.
குழப்பத்துடன் மகிழினி மெதுவாக விழிகளைத் திறந்தாள்.
கொடிவீரனோ அவளுடைய நெற்றிப் பொட்டைச் சரிசெய்தபடி, அவளுடைய இதழ்களை தன் கண்களால் ரசித்துக்கொண்டிருந்தான்.
முத்தமிடாமல் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி,
“என்ன?”
என்று கேள்வி கேட்பது போல அவளைப் பார்த்தான்.
அந்த நொடியே தன் ஏமாற்றத்தை உணர்ந்த மகிழினி, சட்டென்று அவனைத் தன் வசமிருந்து தள்ளினாள்.
ஆனால் அவளுடைய கரங்கள்தான் வலித்ததே தவிர, அவன் ஓரடி கூட பின்னோக்கிச் செல்லவில்லை.
அதே நிலையில் நின்றுகொண்டு, குறும்பு மாறாத பார்வையுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
மகிழினியின் முகமோ வெட்கத்தாலும் கோபத்தாலும் சிவந்திருந்தது.
“ஐ💙U…” என்று சொன்னதும் ஏகத்துக்கும் முறைத்த மகிழினி, மீண்டும் அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள். அவளை மேலும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான் கொடிவீரன்.
“இஃப் யூ திங்க் ஐ அம் ராங் ஃபார் லவிங் யூ… பட், ஐ டோன்ட் திங்க் ஐ ஆம் ராங்.”
அவனை 🤨 என்ற பார்வையோடு முறைத்தாள் மகிழினி.
“சரி… நான் வேலைக்குக் கிளம்புறேன் 𝕊𝕆…” என்றவன், தன் கன்னத்தை அவள் வசம் காட்டினான்.
அவனது கன்னத்தைப் பதம் பார்க்க அவளது கரங்கள் காத்திருக்க, தன்னவளின் கோபத்தை நன்கு அறிந்திருந்த கொடிவீரன், அவள் கரங்கள் தன்னை நெருங்குவதற்குள் தன் கன்னத்தை அவனே அவளது இதழ்களில் ஒற்றி எடுத்தான்.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் வேல்யூபுல் கிஸ், மை பொண்டாட்டி. நான் போய்ட்டு வரவா!!”
“இதுக்கெல்லாம் கண்டிப்பா நீங்க அனுபவிப்பிங்க.”
“ப்ச்… உங்கள அனுபவிக்கத்தானே, Owner அம்மா, நான் இந்தப் பிறவியே எடுத்தது.”
“எந்த தைரியத்துல நீங்க என்கிட்ட இப்படியெல்லாம் கொச்சையா பேசுறீங்க?”
“காதல் பண்ணும்போது என்னைக்குமே அதை புனிதமா நினைக்கணும். பட்… இப்போ நம்ம பண்றது நெக்ஸ்ட் லெவல்.”
“என்ன?”
“ஆமாங்க பொண்டாட்டி. நான் மட்டுமே உங்க மேல ஒருதலைக் காதலா இருக்கும்போது, என் காதல் கண்ணியமா தான் இருந்துச்சு. பட்… எப்போ நீங்களும் என்னைக் காதலிக்கிறீங்கன்னு எனக்குத் தெரிஞ்சதோ, அன்னையிலிருந்து என் காதல் அடுத்த லெவலுக்கு ஜம்ப் ஆகிப் போயிடுச்சு.”
“நான் உங்களை காதலிக்கிறேன்னு எப்போ சொன்னேன்? நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டு அலையாதீங்க.”
“ஓ… என்னை நீங்க காதலிக்காம தான், இவ்வளவு நேரம் உங்க இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு இருக்கிற என்னைத் தள்ளிவிடாம என்னோட அணைப்பிலேயே இருக்கிறீங்களாக்கும்?”
என்று அவன் கேட்ட தருணம்தான், தன் கொடியிடை அங்கங்கள் தன்னவனின் தேகக் கட்டுப்பாட்டில் இன்னும் இருப்பதை உணர்ந்தாள் மகிழினி.
அவனிடமிருந்து திமிறி எழ முயன்றவளை, அவனோ சுவற்றோடு அழுத்த, அவனின் ஸ்பரிசம் அவளை அசையவிடாமல் ஓரிடத்தில் கட்டிப்போட்டது.
தன்னவளை மார்போடு அணைத்திருந்தவனின் கரங்கள் எக்குத்தப்பாக அவள் அங்கத்தில் விளையாட ஆரம்பிக்க, ஆடவனின் ஆதிக்கத்தில் தேவதையின் தேகம் சிலிர்த்தது. அவனின் கேசத்தில் தன் மென்மையான விரல்களை விட்டு துழாவினாள்.
கோபம், கூச்சம், வெறுப்பு, விருப்பு, காதல், காமம் என்று அத்தனை உணர்வுகளையும் ஒருசேர உணர்ந்தவர்கள், தன்னிலை மறந்து இருவரின் காதலையும் உணர்ந்து கொண்டிருக்க, இன்னமும் கொடிவீரனின் அதரங்கள் தன்னவளின் இதழ்களை கொய்தபடிதான் இருந்தது.
மகிழினி, காதல் கொஞ்சும் தன்னவனின் பற்கள் பட்டு இதழில் வலியை உணர்ந்தவள், சட்டென்று அவனைத் தன் வசமிருந்து தள்ளினாள். இரண்டடி பின்னுக்கு சென்றவன் ஏக்கமாக மகிழினியைப் பார்க்க, அவளோ ஏகத்துக்கும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.
“வே… வேலை பாக்குற இடத்துல என்ன? காரியம் பண்ணுறீங்க?” என்றவள், தன் சேலையைச் சரிசெய்து, கலைந்த கூந்தலை ஒதுக்கிவிட்டாள்.
அவளைச் சற்றும் தாமதிக்காமல் மீண்டும் தன் இதயத்தில் இணைத்துக்கொண்டான் கொடிவீரன்.
“எந்த இடமா இருந்தாலும் என் பொண்டாட்டியை எப்போ எல்லாம் கொஞ்சணும்னு தோணுதோ, அப்போவெல்லாம் இப்படித்தான் பண்ணுவேன். புரியுதா!? இதுக்கெல்லாம் இனி நீங்க நோ சொல்லக்கூடாது. சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.”
“இங்க பாருங்க… நீங்க ரொம்ப ஓவரா போறீங்க.”
“ப்ச்… நான் என்ன பண்ணேன்? என் பொண்டாட்டியை இப்படி கட்டிப்பிடிக்கிறதோ!? இல்ல இப்படி Kஐss பண்றதோ!? தப்பே இல்லையே… இதெல்லாம் உங்களுக்கும் பிடிக்கிற பட்சத்துல.”
“எ… எனக்கு பிடிக்குதுன்னு நான் எப்போ சொன்னேன்?”
“மனைவியின் மனதை அறிந்தவனே நல்ல மணவாளன். சோ… உங்கள பற்றி எனக்கு நல்லா தெரியும். நீங்க என்னை எப்போவோ ஏத்துக்கிட்டீங்க. அதுக்கான பரிசுதான், நான் இன்னைக்கு உங்க இதழை சிவக்க வச்சிட்டு வேலைக்குப் போறேன்.”
“சீக்கிரமா இந்த இதழை மட்டும் இல்ல, என் இதயத்தின் அழகியான என்னோட பொண்டாட்டியையும் என் காதலால் மனம் நெகிழ வைக்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்ல. சரி மாமா… போய்ட்டு வரேன். பை!”
என்றவன், அவள் இடையிலிருந்து தன் கரங்களை விடுவித்து, அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளியபடி கேண்டீனிலிருந்து வெளியேறினான்.
அவளைத் தூரத்தில் இருந்து பார்த்தபடி இதழ் குவித்து, சைகையால் பறக்கும் முத்தத்தைத் தந்தவன், தன் பைக்கை எடுத்துக்கொண்டு ஆபீஸுக்குச் சென்றான்.
கொடிவீரனின் இந்த அதிரடி மாற்றத்தை நினைத்து உடல் நடுங்கிப் போனது மகிழினிக்கு.
தன் மீது காதல் கொண்ட கணவனை வெறுக்கவும் தெரியாமல், விரும்பவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவளின் விரல்கள், தன்னவனை நினைத்துக்கொண்டு அவள் இதழை வருடின.
அந்தத் தருணம்—
“சித்ரா…” என்று அழைத்துக்கொண்டு கேண்டீனுக்குள் நுழைந்த கீதாவைக் கண்ட மகிழினிக்கு தர்மசங்கடமான உணர்வு தோன்றியது.
“என்ன? சித்து!! ஏன்? ஒரு மாதிரி இருக்க?”
என்று கீதா கேட்க, மகிழினி எதுவும் இல்லாதது போல தலையசைத்தாள்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ம்மா.”
“எங்க? மாப்ள வெளிய வண்டியை காணோம்.”
“அவரோட ஆபீஸ்ல ஏதோ ஃபைல் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு வர்றேன்னு போயிருக்காரு.”
“ஆமா… உனக்கு எத்தனை மணிக்கு இன்னைக்கு வேலை?”
“2 PM மணிக்கு மா.”
“உன்ன வேலைக்கு அழைச்சிட்டு போக உன் புருஷன் வருவாரு தானே?”
“ம்… அப்படித்தான் சொல்லிருக்காரு. ஆனா, நான்தான் வேணான்னு சொல்லிட்டேன்.”
கீதா மகிழினியை ஆழமாகப் பார்த்தார்.
“உனக்கு என்னதான் பிரச்சனை சித்ரா!! ஏன்? நீ உன் புருஷன் கிட்ட இருந்து இப்படி தள்ளியே இருக்குற?”
மகிழினி அமைதியாகத் தலைகுனிந்தாள்.
“உன் கடந்த கால வாழ்க்கைய நினைச்சு நீ உன்னையே ரொம்ப கஷ்டப்படுத்திக்கிற போல.”
அதற்கும் மகிழினியிடம் பதில் இல்லை.
“ஆனா, இப்ப உனக்கு மறுபடியும் ஒரு புது வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு. இந்த வாழ்க்கையில நீயும் உன் புருஷனும் சந்தோசமா இருக்கணும். நீங்க சந்தோசமா இருந்தா தான் நாங்க சந்தோசமா இருக்க முடியும்.”
மகிழினியின் முகத்தில் இன்னமும் அதே சோகம்.
“சரி… எல்லாமே உடனுக்கு உடனே நடக்கணும்னு நினைக்கிறதும் சாத்தியம் இல்ல. ஆனா, நல்ல வாழ்க்கைய வாழாமல் இப்படி காலத்தை கடத்திக்கிட்டு போறது ரொம்ப தப்பு மா.”
மகிழினி அமைதியாகவே இருந்தாள்.
“சரி… இது உங்க வாழ்க்கை. நான் மேற்கொண்டு இதைப் பத்தி பேசக்கூடாது. நான் போய் இருக்குற வேலையைப் பாக்குறேன்.”
என்றவர் அங்கிருந்து நகர்ந்து கேண்டீன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
நேரம் சரியாக 1.30 மணி அளவில் கேவி கேண்டீனுக்குள் வந்தான். அவனது முகம் வாடியிருப்பதைப் பார்த்த மகிழினி,
“சாப்பாடு கொண்டு வரவா?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்துக் கடமைக்கென்று சிரித்தவன்,
“நீங்க சாப்பிட்டீங்களா!?” என்று கேட்டான்.
அதே நேரத்தில் கீதா கையில் சாப்பாட்டுடன் அங்கே வந்தார்.
“மாப்ள… நானும் சித்ராவும் சாப்டாச்சு. நீங்க சாப்பிட்டு போய் உங்க பொண்டாட்டியை வேலையில விட்டுட்டு வாங்க.”
“இல்ல அத்தை… நான் ஆபீஸ் கேண்டீன்ல சாப்பிட்டுட்டேன். சிஎம், நீங்க ரெடியா? கிளம்பலாமா?”
“ம்… இருங்க. நான் என் பேகை எடுத்துட்டு வரேன்.”
“நான் வெளிய வெயிட் பண்ணுறேன்.”
என்றவன் வெளியே சென்று பைக்கருகில் நின்றுகொண்டான்.
கீதாவிடம் சொல்லிவிட்டு மகிழினியும் சில நிமிடங்களில் கேவி அருகில் வந்து,
“கிளம்பலாம்,” என்றாள்.
கேவி வண்டியை ஸ்டார்ட் செய்தான். அடுத்த சில நிமிடங்களில் மகிழினி வேலை பார்க்கப்போகும் கிளினிக் வாசலை சென்றடைந்தான். வழியில் அவன் ஏதும் பேசாமல் அமைதியாகவே வந்திருந்தான். அவனது செயலைக் கண்டு மகிழினியும் அமைதியை கடைபிடித்தவாறே கிளினிக் வாசலில் இறங்கினாள்.
அவளைப் பார்த்த கேவி,
“ஆல் த பெஸ்ட்ங்க… நானே நைட் 8 மணிக்கு வந்து உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன்,” என்றான்.
“என்னாச்சு உங்களுக்கு!?”
“புரியல.”
“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? வேலையில எதாவது பிரச்சனையா!?”
“ம்… கொஞ்சம் ஒர்க் டென்சன்.”
“என்னாச்சு?”
“ஓ… ஒர்க்ல இதெல்லாம் நார்மல் தான். கொஞ்ச நேரத்துல நான் சரியாகிடுவேன். நீங்க பார்த்து வேலைக்கு போங்க.”
என்றவன் வண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் கேண்டீனுக்குள் சென்றான்.
அன்றைய தின ஆர்டர்களை செய்து முடித்த நிலையில், மாலை 5 மணி அளவில் கேவி தன் அத்தை கீதாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான். பின்னர் இரவு 8 மணிக்கு கிளினிக்கிலிருந்து மகிழினியை பிக்கப் செய்துகொண்டு வீட்டுக்கு வந்தான்.
“என்னமா சித்ரா, வேலை எப்படி போச்சு?” என்று கீதா கேட்டார்.
“ஹாங்… ஒண்ணும் பிரச்சனை இல்லமா. ஆமா, வேணுவும் பாட்டியும் எங்க?”
“உன் பாட்டியும் வேணுவும் எதிர்த்த வீட்டுக்குப் போயிருக்காங்க.”
“ம்…”
“சரி, நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா. மாப்ள, உங்களுக்கு டீ கொண்டு வரவா?”
“வேணா அத்தை.”
கீதா அவனைப் பார்த்தார்.
“என்னாச்சு மாப்ள? என்ன பிரச்சனை?”
மகிழினி உடனே இடைமறித்தாள்.
“நானும் மதியத்துல இருந்து கேக்குறேன். என்னன்னு சொல்ல மாட்றாரு.”
“சொல்லுங்க மாப்ள… என்னாச்சு?”
“ஆபீஸ்ல தான் பிரச்சனை அத்தை.”
“அதான் என்ன பிரச்சனை?”
“எங்க கம்பெனி மும்பைல ஒரு பிராஞ்ச் ஓபன் பண்ணப் போறாங்க.”
“ம்.”
“அங்கேயே தங்கி ஒரு 6 மந்த்ஸ் என்னை ஒர்க் பார்க்கச் சொல்லுறாங்க.”
“என்ன மாப்ள சொல்றீங்க? மும்பைக்கா!?”
“ம்…”
மகிழினியின் புருவம் சுருங்கியது.
“நீங்க என்ன சொன்னிங்க?”
“நான் போக முடியாதுன்னு சொன்னா, எனக்கு பதில் வேற ஆளை அனுப்புவாங்க.”
“அப்புறம் என்ன? வேணான்னு சொல்லுங்க.”
“ஆனா, அதுக்கப்புறம் என்னால இங்க வேலைக்கு போக முடியாது.”
“விடுங்க மாப்ள. நீங்க ஏன் இப்ப வேலைக்கு எல்லாம் போய்கிட்டு… அதான் உங்க பொண்டாட்டி கேண்டீன் இருக்கு. இப்ப சித்ராவும் வேலைக்கு போறா. பின்ன என்ன? அதை வச்சு மெய்ன்டெய்ன் பண்ணலாம் இல்ல.”
“இல்ல அத்தை. 3 மடங்கு சம்பளம். ஒரு 6 மந்த்ஸ் அங்க இருந்தா கொஞ்சம் பணம் சேர்த்துக்கிட்டு நம்மளும் சொந்த வீடு எல்லாம் வாங்கலாம். அதான் ஒரு ஆறு மாசம் மும்பை போயிட்டு வரலாமான்னு யோசிக்கிறேன்.”
மகிழினி உடனே அவனைப் பார்த்தாள்.
“ஏன்? இந்த வீட்டுக்கு என்ன குறை? இப்ப சொந்த வீடு வாங்க நீங்க மும்பை போகணுமா!?”
“ப்ச்… இது நம்ம வீடு இல்ல. நான் சொல்லுறது நமக்குன்னு ஒரு வீடு.”
“ஓ… அப்போ இது உங்க வீடு இல்லையா?”
“கண்டிப்பா இல்ல.”
மகிழினியின் முகம் கோபத்தில் சிவந்தது.
“அண்ட்… இந்த வீடு உங்களோட வீடும் இல்ல. நான் சொல்லுறது நமக்குன்னு ஒரு வீடு.”
“ப்ச்… நமக்கா!? நமக்கு ஏன் சொந்த வீடு?”
“நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணத்தான்.”
“எந்த தைரியத்துல நீங்க என் வாழ்க்கையை உங்க வாழ்க்கை கூட சேர்த்து வச்சிப் பேசுறீங்க?”
கேவி அவளைப் புரியாமல் பார்த்தான்.
அதை உணர்ந்த கீதா,
“சரி, நீங்க ரெண்டு பேர் பேசுங்க. நான் வேணு, பாட்டி எங்கன்னு பாக்குறேன்,” என்றபடி அங்கிருந்து வெளியே சென்று மாடிப்படியில் அமர்ந்துகொண்டார்.
மகிழினி கோபத்தில் கேவியை முறைத்தாள்.
“இப்ப ஏன் இப்படி முறைக்கிறீங்க?”
“உங்களுக்கு மும்பைக்கு போகணும்னா நீங்க போங்க. அதுக்காக எதுக்கு சொந்த வீடு வாங்கத்தான் மும்பைக்கு போறேன்னு சொல்றீங்க? அதுவும் அந்த வீடு நமக்குன்னு வேற சொல்றீங்க.”
“நான் சொன்னதுல இப்ப என்ன தப்பு இருக்குன்னு நீங்க இப்படி தைய தக்கானு குதிக்கிறீங்க?”
“பின்ன நீங்க பண்ற செயலுக்கும், பேசுற வார்த்தைக்கும் இப்படி குதிக்காம, உங்க கூட குத்தாட்டமா ஆடுவாங்க?”
“ப்ச்… இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு? நமக்கு சொந்த வீடு வாங்கணும்னு நான் சொன்னது உங்களுக்கு பிடிக்கலையா?”
“ஆமா. பிடிக்கல.”
“ஏன் பிடிக்கல? நமக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. அடுத்து நம்ம நம்மளோட வாழ்க்கையை எப்படி மூவ் பண்ணணும்னு தானே யோசிக்கணும்.”
“ஹலோ!! நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க? நான் ஏன் உங்க கூட என் வாழ்க்கையை மூவ் பண்ணணும்?”
கேவி அமைதியாக அவளைப் பார்த்தான்.
“இங்க பாருங்க கொடி… நான் பல முறை சொல்லிட்டேன். நானும் நீங்களும் சேர்ந்து வாழ்றது எல்லாம் சாத்தியமே இல்ல. இன்னும் கொஞ்ச மாசத்துல நமக்கு டிவோர்ஸ் ஆகத்தான் போகுது. அதுக்கு என்ன தேவையோ அதை பண்ணுங்க. அதை விட்டுட்டு சும்மா நமக்கு வீடு வாங்கணும், கார் வாங்கணும்னு, மும்பை போறேன், முருங்கைக்காய் தின்னப் போறேன்னு சொல்லிக்கிட்டு அலையாதீங்க. நீங்க ஊருக்கு போனா அப்புறம் எனக்கு…”
“புரியல.”
“எனக்கு யாரு டிவோர்ஸ் தருவாங்க?”
கேவியின் உதட்டில் ஒரு குறும்புப் புன்னகை தோன்றியது.
“ஓ… அப்போ உங்கள விட்டு நான் எங்கேயும் போக வேணாம்னு சொல்றீங்களா!?”
“நீங்க எங்க போனாலும், எனக்கு நான் கேட்டதை கொடுத்துட்டுத்தான் போகணும்னு சொல்லுறேன்.”
என்றவள் கோபமாகத் தன் அறைக்குள் நுழைந்தாள்.
அவளைப் பார்த்தபடி உதட்டோரத்தில் புன்னகை தவழ கேவி மேற்கொண்டு எதுவும் பேசாமல் மாடிக்குச் சென்றான். மீண்டும் சில நிமிடங்களில் கீழே இறங்கி வந்தபோது எதிரில் வேணு நின்றிருந்தான்.
“என்ன வேணு, ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது?”
“அது எங்கேயும் போகல. அங்கதான் இருக்கு. சரி சொல்லுங்க… நீங்க என்ன மும்பைக்கா போறீங்க?”
“யாரு சொன்னாங்க?”
“கீதா பாட்டிதான் சொன்னாங்க.”
அருகில் இருந்த பாட்டியும்,
“ஏன் தம்பி, மும்பைக்கெல்லாம் போயிக்கிட்டு? இங்கேயே எங்க கூடவே இருக்கலாமே,” என்றார்.
“ம்… அவருக்கு புது வீடு வேணுமாம் பாட்டி. அதனால நிறைய பணம் சம்பாரிச்சு வீடு வாங்கத்தான் மும்பை போகப் போறாராம்.”
கீதாவும் அங்கே வந்தபடி,
“ஏன் மாப்ள, இதுக்கெல்லாம் யாராவது வேற ஊருல போய் வேலை பார்ப்பாங்களா?” என்று கேட்டார்.
“6 மாசம் தான் அத்தை. கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள ஓடிடும்.”
வேணு உடனே,
“மாமா… நீங்க மும்பைக்கு போற மாதிரி இருந்தா, என் அத்தையையும் உங்க கூட அழைச்சிட்டு போயிடுவீங்களா?” என்று கேட்டான்.
கேவி அவனைப் பார்த்து சிரித்தான்.
“கண்டிப்பாடா… சுவர் இருக்குற இடத்துல தானே சித்திரம் வரைய முடியும்.”
அந்த நேரத்தில் அறையிலிருந்து வெளியே வந்த மகிழினி,
“என்ன உளறுறீங்க?” என்று கேட்டாள்.
“ப்ச்… நான் உளறலங்க. நம்ம ரெண்டு பேருமே 6 மாசம் போய் மும்பையில தங்கி என் வேலையைப் பாக்கலாம்னு நான் முடிவு பண்ணிருக்கேன்.”
“ஹலோ! நான் உங்களையே போகக்கூடாதுன்னு சொன்னா, நீங்க என்னை வேற கூப்பிடுறீங்க. நானெல்லாம் எங்கேயும் வர மாட்டேன்.”
“சரி, நீங்க வர வேணா. பட் இன்னும் பத்து நாளில் நான் கிளம்புறேன்.”
என்றவன் டின்னரைச் சாப்பிட ஆரம்பித்தான்.
இரவு உணவைச் சாப்பிடாமல் மகிழினி கோபமாகத் தன் அறைக்குள் சென்றாள். ஆனால் அவளது மனதில் கேவி மும்பை செல்லும் செய்தி ஏதோ ஒரு தாக்கத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தது.