“அம்மா…! என் ஹோம்வொர்க் நோட் எங்கே…?” படுக்கையறையில் இருந்து நான்காவது படிக்கும் தன் மகன் வருண் எழுப்பிய கேள்விக்கு,
“அங்கே ஹால் சோபாவில இருக்கும் பாரு…!” சமையல் வேலையை கவனித்தபடியே பதில் கூறினாள் ராதிகா.
காலை வேளை..பரபரப்பிற்கா பஞ்சம்…?ஒவ்வொரு குடும்பத் தலைவிகளும் பத்து கை கொண்ட துர்க்கைகளாக மாறி சக்கரமாய் சுழலும் நேரம் அது…! “கிருஷ்ண குடில்” பெயர்ப்பலகை தங்கியிருந்த அந்த வீட்டிலும் குடும்பத்தலைவியான ராதிகா பம்பரமாய் தான் சுழன்று கொண்டிருந்தாள்.
“அம்மா…தலை பின்னி விடு…!”,ஒன்றாம் வகுப்பு படிக்கும் அந்த வீட்டின் கடை குட்டியான வர்ஷி சீப்பும் கையுமாக வந்து அவள் முன் நின்றது.
அடுப்பின் ஒரு பக்கம் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரையும்..மறுபக்கம் வெந்து கொண்டிருந்த பொறியலையும் ஒரு கிளறு கிளறி விட்டவள்..அவசர அவசரமாகத் தன் மகளுக்கு தலை வாரி விட ஆரம்பித்தாள்.
“வர்ஷி குட்டி…!கம்ப்யூட்டர்க்கு ஸ்பெல்லிங் சொல்லு…?”,தலை வாரும் நேரத்தில் நேற்று படித்த பாடத்தையும் மேம்போக்காக நினைவுபடுத்தி அந்தக் குட்டிக்கு சொல்லிக் கொடுத்தவள்..
“ராதிகா ம்மா…கீரை வந்திருக்கு..வேணுமா…?”,வாசலில் ஒலித்த கீரை விற்கும் பெண்மணிக்கு,”நாளைக்கு வாங்கிக்கிறேன்…!”,என்று பதில் கூறி அனுப்பியவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.
இரண்டு குழந்தைகளுக்குமான டிபன் பாக்ஸ்..ஸ்னேக்ஸ்..வாட்டர் பாட்டில்..என அனைத்தையும் அவள் தயார் செய்து முடிக்க..”ராதிகா…!எனக்கு லன்ச் பேக் பண்ணிட்டியா…?”,அலுவலகத்திற்கு கிளம்பியபடி வந்து நின்றான் அவளது கணவன் கவின்.
“ஒரு டென் மினிட்ஸ்…குழந்தைகளை ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டு வந்துடறேன் கவின்…வெயிட் பண்ணுங்க…!”,உரைத்தபடியே இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியேறியவளை,
“இப்போ நான் கிளம்பினால்தான் டிராபிக்ல மாட்டாம..ஆபிஸ்க்கு ரீச்சாக முடியும்…!வீட்டுல சும்மாதானே இருக்கிற..காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்து சமையல் வேலையை ஆரம்பிக்கலாம்ல…?”,சுள்ளென்று எரிந்து விழுந்தவனின் குரல் தடுத்தது.
காலை 4.30 மணிக்கு எழுந்து..எழுந்ததில் இருந்து ஓயாமல் வேலை செய்து கொண்டிருப்பவளின் மனதில் நேற்றைய இரவு நடந்த நிகழ்வு ஊர்வலம் போனது.
வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு ‘ஹப்பாடா…‘ என்று அவள் மெத்தையில் விழும் போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.உடல் ஓய்வுக்கு கெஞ்ச..தூக்கத்தில் இமைகளை மூடியவளின் இடையை இரு வலிய கரங்கள் அணைத்துத் தன்னை நோக்கித் திருப்பின.
‘ஹைய்யோ..தூக்கம் வேற வருதே…‘,மனம் ஒரு நொடி தயங்கி சலித்தாலும்..தன் கணவனின் முகத்தில் தெரிந்த வேட்கையும் தாபமும் அவள் வாயைக் கட்டிப் போட்டது.ஆவலுடன் தன்னை அணைத்து முன்னேறியவனின் செயல்களுக்குத் தடை போடாமல் அமைதியாய் ஒத்துழைத்தாள்.
கணவனது தேவைகளைத் தீர்த்து அவள் கண்ணயர ஆரம்பித்த போது..வர்ஷி குட்டி எழுந்து கொண்டு அழுதது.
“ம்மா…!பால் வேணும்…!”,தூக்கத்தில் சிணுங்கிய குழந்தைக்கு பால் ஆற்றிக் கொடுத்து குடிக்க வைத்து தூங்க வைத்தாள்.தீயாய் எரிந்த கண்களுடன் அவள் படுக்கையில் விழுந்த போது மணி ஒன்று.
சரியாக 4.30 மணிக்கு அலாரம் அடிக்க..‘விழிக்கவே மாட்டேன்..‘ என்று அடம் பிடித்த இமைகளை வெகு சிரமப்பட்டு பிரித்து எடுத்தவளை அதன் பிறகு வேலைகள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டன.
எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழு மணிக்கு எழுந்த கணவனுக்குப் பிடித்த மாதிரி டிகாஷன் தூக்கலாக காபி கலந்து கொடுத்தாள்.அவன் அதைக் குடிக்கிறேன் பேர்வழி என்று அரைமணி நேரமாக அதையும் மொபைலையும் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.இதற்கிடையில் பள்ளிக்கு கிளம்பும் குழந்தைகளின் அலும்பல் வேறு…!
ஒருவழியாக காபியை குடித்து முடித்தவன் எழுந்து சோம்பல் முறித்தபடி குளியலறைக்குள் புகுந்தான்.அங்காவது அந்த மொபைலை வைத்து விட்டு சென்றானா…அதுவும் இல்லை…!மொபைலும் கையுமாக குளியலறைக்குள் நுழைந்தவன் காலைக் கடன்களை முடித்து..குளித்து விட்டுக் கிளம்பி வரும் போது மணி எட்டு.
அவன் அவளைப் பார்த்து திட்டுகிறான்…‘நேரமே எழுந்து சமையலை ஆரம்பிக்க வேண்டியதுதானே…?’ என்று.
அந்த நினைவு மனதில் எழ..ஒரு பெருமூச்சுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.எதிர் வீட்டின் முன் தன் குழந்தையுடன் நின்றிருந்த சுவாதியிடம் வந்தவள்,
“சுவாதி…!இன்னைக்கு ஒருநாள் மட்டும் என் பசங்களையும் ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டறயா…?”, தயக்கத்துடன் வினவினாள்.
“நான் பார்த்துக்கிறேன் ராதி…நீ போ…!”,அந்தப் பெண் சுவாதி புன்னகையுடன் கூற நிம்மதியுடன் வீட்டிற்குள் நுழைந்தவள்..
கணவனுக்குப் பிடித்த விதத்தில் அவனுக்குத் தனியாக சமைத்திருந்த உணவை லன்ச் பாக்சில் பேக் செய்து..ஷூ மாட்டிக் கொண்டிருந்த கணவனிடம் சென்று நீட்டினாள்.
அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே அதை வாங்கிக் கொண்டவன்,”அந்த அக்கவுண்ட் ஓபன் பண்ணற விஷயமா இன்னைக்கு பேங்குக்கு போயிட்டு வந்திடு…!மறந்திடாதே…!,”என்றபடியே நிமிர்ந்தவன் அவளது வாடிய முகத்தைக் கண்டு,”ஏன் டி ஒரு மாதிரி இருக்க…?”,என்று வினவினான்.
“ஒண்ணுமில்ல…!”,மறுப்பாய் தலையசைத்தவளின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியவன்,”ஓகே..பாய்..நான் கிளம்பறேன்…!”,தன் லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு அவன் வெளியேறி விட்டான்.
வாசல் வரை சென்று கணவனை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே நுழைந்தவளுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.யானை வந்து புட்பால் விளையாடி விட்டுச் சென்ற நந்தவனம் போல் வீடு காட்சியளிக்க..ஒரு பெருமூச்சுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள்.
ஹால் என்றும் பாராமல் அங்கங்கு சுருட்டிக் கிடந்த அழுக்குத் துணிகளும்..ஈர டவலும்…சிதறியிருந்த குழந்தைகளின் புத்தகங்களும் அவளை அதற்கு மேல் உட்கார விடவில்லை.காலையில் அவசர அவசரமாக வாய்க்குள் ஊற்றிக் கொண்ட காபி மட்டும்தான்…வயிறு எனக்கு ஏதாவது கொடேன் என்று சத்தமிட…சமையலறைக்குள் நுழைந்தவள் ஒரு தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
கணவன் வங்கிக்கு போகச் சொன்னது நினைவுக்கு வர..வேகமாக சாப்பிட்டு எழுந்தவள்..வீட்டை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.ஹாலை ஓரளவிற்கு ஒழுங்குபடுத்தி விட்டு சமையலறைக்குள் நுழைந்தால்..அங்கு அதற்கு மேல் இருந்தது.
“உஃப்” உதட்டைக் குவித்து ஒரு பெருமூச்சை விட்டவள் கட கடவென்று சமையலறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.ஒரு வழியாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சோபாவில் வந்து சாய்ந்தவளை அயர்வு வந்து ஆட்கொண்டது.ஏனோ காலையிலிருந்தே தலை விண் விண்ணென்று தெறிக்க..இப்பொழுது உடல் சூடாகி காய்ச்சல் வரும் போல் இருந்தது.நேற்று இரவு சரியாகாத் தூங்காததும் சேர்ந்து கொள்ள அவளையும் அறியாமல் சோபாவிலேயே படுத்து உறங்கி விட்டாள்.
அப்பொழுதாவது நிம்மதியாக உறக்கம் வந்ததா…?கணவன் வங்கிக்கு செல்ல சொன்னதே மூளையில் மீண்டும் மீண்டும் ஓட..எழ முயன்றவளால் முடியவில்லை.மனதை மீறிய உடல் அசதி அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டுச் சென்றது.
“ட்ரிங்…ட்ரிங்…!!!”
மொபைல் அலறும் ஒலி.வெகு சிரமப்பட்டு கண் விழித்தவளின் உடல் தீயாய் கொதித்தது.கை கால்கள் ஒருபுறம் வலியெடுக்க..ஒருவாறாக மொபைலை எடுத்து ஆன் செய்தவள் காதில் வைத்தாள்.
“ஹ..ஹலோ…”,வெகு பலவீனமாகத்தான் வந்தது வார்த்தைகள்.
“ராதிகா…!தூங்கிட்டு இருக்கிறாயா…?சரி..பேங்குக்கு போய்ட்டு வந்துட்டியா…பேங்க்ல என்ன சொன்னாங்க…?”,மறு முனையில் கணவன் வினவ..அவளுக்கு முழுத் தூக்கமும் ஓடி விட்டது.
“இல்லைங்க…!”,மென்று விழுங்க..அவ்வளவுதான் அவன் சரமாரியாக திட்ட ஆரம்பித்து விட்டான்.
“அது எவ்வளவு முக்கியமான வேலை தெரியுமா…?இல்லைன்னு இவ்வளவு அசால்ட்டா சொல்ற…வீட்டுல சும்மாதானே இருக்கிற…பேங்குக்கு போய்ட்டு வந்துட்டு படுத்துத் தூங்க வேண்டியதுதானே…!”,
“ஸாரிங்க…இதோ இப்போ கிளம்பி போயிட்டு வந்திடறேன்…”,
“மணி மூணாகுது…!அது ஒன்னும் உன் அப்பா வைச்சு நடத்தற பேங்க் இல்லை…நீ எந்நேரம் போனாலும் சர்வீஸ் பண்றதுக்கு…!”,வார்த்தைகளை கடித்துத் துப்பியவன் போனை பட்டென்று வைத்து விட்டான்.
இவளுக்குத்தான் மனதே கேட்கவில்லை.‘இப்படித் தூங்கி விட்டோமே…‘ மனம் வேதனைப்பட..காய்ச்சல் கொண்ட உடல் மீண்டும் ஓய்வுக்குக் கெஞ்சியது.இனி தூங்க முடியாது..குழந்தைகள் வந்து விடுவார்கள்..எண்ணியவள் எழுந்து பெயருக்கு எதையோ சாப்பிட்டு விட்டு ஒரு காய்ச்சல் மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டாள்.
வர்ஷி குட்டிக்குப் பிடித்தது போல் பான் கேக் செய்தவள்..வருண் அன்று காலையில் கேட்டு விட்டுப் போன பிரென்ச் ஃப்ரைஸை தயாரித்தாள்.மாலை சிற்றுண்டியை முடிக்கவும்..குழந்தைகள் பள்ளிப் பேருந்து வரவும் சரியாக இருந்தது.
உள்ளே நுழையும் போதே,”அம்மா…பிரென்ச் ஃப்ரைஸ் செய்தீங்களா…?”,என்ற கேள்வியுடன்தான் வந்தான் வருண்.
அவள் மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.அவளுக்குத் தெரியும்…அவன் நினைவு முழுக்க இதில்தான் இருக்கும் என்று…!எனவேதான்,காய்ச்சலையும் பொருட்படுத்தாது எழுந்து சமைத்தாள்.
“நீ சொல்லி அம்மா செய்யாமல் இருப்பேனா…?அப்புறம்..வர்ஷி குட்டிக்கு பனானா பான் கேக்..!”,குழந்தையாக மாறி குழந்தைகளைக் கொஞ்சியவளை அதன் பிறகு அடுத்தடுத்த வேலைகள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டன.
பாடம் சொல்லிக் கொடுப்பதிலும்..இரவு உணவு தயாரிப்பதிலும் நேரம் விரைய..கவினும் அலுவலகத்தில் இருந்து வந்து விட்டான்.வரும் போதே ‘உர்‘ரென்றுதான் வந்தான்.வங்கி வேலை முடியாததால் வந்த கோபம் அது.
ஒரு சின்னக் குளியலைப் போட்டு விட்டு வந்தவன்..வர்ஷி குட்டியை எடுத்து வைத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.இந்த தந்தைமார்களுக்கு பெண் பிள்ளைகளின் மேல் அப்படி என்னதான் பரிவோ..தெரிவதில்லை…!சிறிது நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டவன் பிறகு மொபைலை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
பல குடும்பங்களின் அழகிய நேரங்களை சத்தமில்லாமல் அமைதியாய் களவாடிக் கொண்டிருப்பது இந்த அலைபேசிதான்.
குழந்தைகளை உறங்க வைத்து விட்டு படுக்க வந்தவள் ஒரு காய்ச்சல் மாத்திரையை எடுத்து சாப்பிட…அவன் அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான்.
“எதுக்கு டேப்லெட் போடற…?”,
“காய்ச்சல்…!”,
“ஓ…”,என்றவன் ஒன்றும் பேசாமல் படுத்து உறங்கி விட்டான்.‘அதனாலதான் பேங்குக்கு போகல…‘ கூற வந்தவளின் வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள்ளேயே கரைந்து போனது.
**********************
நாட்கள் எந்தவொரு மாற்றமும் இன்றி விரையும் போதுதான்..அந்த மிகப் பெரிய மாற்றம் வந்து சேர்ந்தது.
உலகெங்கும் பரவிய உயிர்க்கொல்லி நோயினால்..நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.பள்ளி..கல்லூரி..அலுவலகம்..கோவில் என்று அனைத்தும் பாரபட்சமின்றி மூடப்பட்டது.மக்கள் மிக மிக அவசரத் தேவைகளுக்கு அன்றி மற்ற எதற்காகவும் வெளியே வர முடியாத நிலை.
இன்னும் சொல்லப் போனால் பல குடும்பங்கள் தங்களது தேடலைக் கண்டறிந்த நேரம் அது என்றுதான் சொல்ல வேண்டும்.
“அம்மா…!இன்னைக்கு ஈவ்னிங் வெஜ் கட்லெட் ப்ரிப்பேர் பண்ணி வைங்க…!”,வீட்டில் இருப்பதால் மதியம் போடும் குட்டித் தூக்கத்திற்கு முன் வருண் இட்ட கட்டளை இது.வர்ஷி குட்டியைத் தூங்க வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தவளை கவின் அழைத்தான்.
“ராது…!நானும் நீயும் சேர்ந்து ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு…!இன்னைக்கு ஒரு மூவி பார்க்கலாம்..வா…!”,சோபாவில் வசதியாக அமர்ந்தபடியே தொலைக்காட்சியை உயிர்பித்தவன் மனைவியை அழைத்தான்.
சமைத்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தவள்,”அது சரி..உங்க பையன் தூங்கறதுக்கு முன்னாடியே வெஜ் கட்லெட் வேணும்ன்னு ஆர்டர் பண்ணிட்டு போயிருக்கிறான்…தெரியுமில்ல…?”, என்றாள் சமையலறையில் இருந்தபடியே.
நாள் முழுவதும் ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கும் மனைவியை அவனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்.முதலில் அலுவலகம் சென்று கொண்டிருந்ததால் மனைவியின் வீட்டு வேலைகளை அவன் கவனித்ததில்லை.இப்பொழுது நாள் பொழுதும் வீட்டில் இருப்பதால்..எந்நேரமும் சமையலறையில் அடைந்து கிடக்கும் மனைவியை அவனும் கவனித்துதான் இருந்தான்.
மதியம் ஓய்வாக அனைவரும் சற்றுக் கண்ணயரும் வேளையில் கூட அவள் படுப்பதில்லை.குழந்தைகள் கேட்கும் சிற்றுண்டியைத் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பாள்.அதையும் மீறி சமையலறையில் இருந்து வெளியே வந்தால்..ஹாலில் இருக்கும் பொருட்களை சுத்தம் செய்யும் பணி அவளுக்கு வந்து விடும்.எந்நேரமும் ஏதாவதொரு வேலைகள் அவளுக்காக காத்துக் கொண்டுதான் இருந்தன.
எங்கோ படித்த கவிதைதான் அவனுக்கு சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது.
“காதலிக்க நேரமில்லை – ஏனென்றால்
வேலைகள் ஓய்வதில்லை…
இப்படிக்கு இல்லத்தரசி…!!!”
அந்த எண்ணம் மனதில் எழ,”அதை நாளைக்கு செய்து கொடுத்துக்கலாம்…இப்போ நீ வாடி..!குழந்தைகள் தூங்கும் போதுதான் நாம டைம் ஸ்பெண்ட் பண்ண முடியும்…!”,என்று மீண்டும் அழைத்தான்.
வெகு நாட்களுக்குப் பிறகு..நேரம் செலவழிக்கலாம் என்று ஆர்வமுடன் அழைக்கும் கணவனின் கோரிக்கையை நிராகரிக்க மனம் வராமல் அவளும் வந்து அமர்ந்தாள்.
அழகான ஒரு காதல் திரைப்படம்.இருவரும் ஒருவரது அருகாமையை மற்றவர் ரசித்தபடி படம் பார்த்து முடித்தனர்.திரைப்படம் முடியவும் குழந்தைகள் எழுந்து வரவும் சரியாக இருந்தது.
“மம்மி…வெஜ் கட்லெட்…!”,ராகமிழுத்தபடியே வந்தான் வருண்.
“வருண் கண்ணா…!அம்மா நாளைக்கு உனக்கு கட்லெட் செஞ்சு தருவேனாம்…!”,
அவ்வளவுதான்…வெஜ் கட்லெட் கிடைக்கும் என்ற ஆசையில் வந்தவனுக்கு ஏமாற்றம் மிஞ்ச..அவனுக்குக் கோபம் வந்தது.
“நான்தான் தூங்கறதுக்கு முன்னாடியே வெஜ் கட்லெட் வேணும்ன்னு சொல்லிட்டுத்தானே போனேன் மம்மி…!நீங்க வீட்டுல சும்மாதானே இருக்கீங்க…செஞ்சு வைக்க முடியாதா…?”,என்று கத்தினான்.
மொபைலை பார்த்துக் கொண்டிருந்த கவினின் காதில்,’சும்மாதானே இருக்கறீங்க…‘ என்ற வருணின் வார்த்தை வந்து விழ,யாரோ பின்னந்தலையில் ஓங்கி அடித்தது போல் விலுக்கென்று நிமிர்ந்தான்.
அவனது மனதில்,மனைவி ஏதாவது வேலைகளை செய்யத் தவறியிருந்தால்..‘வீட்டுல சும்மாதானே இருக்கிற…?’,என்று தான் கத்துவது நினைவிற்கு வந்தது.கூடவே,கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மனைவியை அழுத்திக் கொண்டிருக்கும் வீட்டு வேலைகளை அவன் கவனித்ததும் நினைவிற்கு வந்தது.
எடுத்தெறிந்து பேசும் மகனின் தவறு எங்கு..யாரால் ஆரம்பித்தது என்பதற்கான விடை அவன் நெற்றிப்பொட்டில் அறைய..இவ்வளவு நாட்களாக அவன் செய்து கொண்டிருந்த தவறு அவனுக்கு உறைத்தது.
“வருண்…!அம்மாக்கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா…?அதுதான் நாளைக்கு செய்து தரேன்னு சொல்றாங்கள்ல…”,அவன் கண்டிக்க,
“போங்க டாடி…!நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா…?”,தந்தையிடம் சலித்துக் கொண்டான் வருண்.
“சரி வருண் கண்ணா…!ஜஸ்ட் ட்வென்ட்டி மினிட்ஸ்..அம்மா வெஜ் கட்லெட் ப்ரிப்பேர் பண்ணிடறேன்..ஓகே வா…?”,மகனின் முகத்தில் கவிழ்ந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் ராதிகா கூறினாள்.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம்…!நான் தூங்கப் போன நேரத்துல ரெடி பண்ணியிருக்கலாம்ல…எனக்குத் தெரியும்…நீங்களும் படுத்து தூங்கியிருப்பீங்க…”,
கவினுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.
“அப்படி தூங்கினால்தான் என்ன தப்பு வருண்…?அம்மா டெய்லியும் எவ்வளவு வேலை செய்துக்கிட்டு இருக்கறாங்கன்னு நீயும் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கிற…அப்படி ஓயாம வேலை செய்கிறவங்க கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்தால் என்ன தப்பு…?”,அவன் மகனைப் பார்த்து கேள்வி கேட்டானோ..இல்லை..தன்னைப் பார்த்தே கேட்டுக் கொண்டானோ..அவன் குரல் இறங்கித்தான் ஒலித்தது.
தந்தையின் கோபத்தில் வருண் சற்று அமைதியானான்.
“அம்மாக்கிட்ட சாரி கேளு வருண்…!”,
“சாரி ம்மா…!”,
ராதிகாவின் பார்வை அமைதியுடன் கணவனைப் பார்த்திருந்தது.அவனது விழிகள் அர்த்தத்துடன் அவளைப் பார்த்து விழிகளை மூடித் திறந்தது.
“ஸாரி டி…!”,அன்றிரவு குழந்தைகளை உறங்க வைத்து விட்டுத் தன்னருகே வந்து படுத்த மனைவியின் காதோரமாக கிசுகிசுத்தான் அந்தக் கணவன்.
திரும்பிப் பார்த்தவள் ஒன்றும் பேசவில்லை.
“நாம வெளியில ஆபிஸ்க்கு போய் வேலை செய்திட்டு வர்றோம்…நீ வீட்டுல சும்மாதானே இருக்கிறாய்ங்கிற நினைப்பு…!‘நீங்க வீட்டுல சும்மாதானே இருக்கிறீங்க மம்மி..‘ன்னு வருண் கேட்டதுதான் என் மண்டையில சுளீர்ன்னு அடிச்சு என் தவறை எனக்கு உணர்த்துச்சு…!எவ்வளவு வேலைகள்…நீ ஓய்ந்து போய் உட்கார்ந்து நான் பார்த்ததே இல்லையே டி…!சமையலை முடிச்சா ..கிளீனிங் பண்ற..‘அதையும் முடிச்சிட்டாள் இனி வந்து உட்காருவாள்‘ன்னு பார்த்தால்..குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க போயிடற…!அதுக்கு அப்புறம் மறுபடியும் நைட் டின்னர்…அகெய்ன் அதே வொர்க்…!ஓகே தூங்கலாம்..ஹப்பாடான்னு வந்து படுத்தால்..உன் புருஷனுடைய தொல்லை வேற….!”,கடைசி வார்த்தையை அவளைப் பார்த்து கண்ணடித்தபடியே கூறியவனின் கரங்கள் கணவனது தொல்லை எதுவென்று அவளுக்கு உணர்த்த…செம்பருத்தி பூவாய் சிவந்த முகத்துடன் வெட்கி சிவந்தாள் அவள்.
“நம்மள பிரதிபலிக்கற கண்ணாடிதான் நம்ம குழந்தைகள்ங்கிறதை இன்னைக்குத் தெளிவா உணர்ந்திட்டேன் டி…!இவ்வளவு வேலைகள் செய்கிறவளைப் பார்த்து நான் திட்டியிருக்கிறேன்..‘நீ வீட்டுல சும்மாதானே இருக்கிற…‘ன்னு…!இதுக்காகவே நீ என்னை எவ்வளவு திட்டினாலும் தகும்…!”,அவனது குரல் தன் தவறை உணர்ந்து கொண்ட வருத்தத்துடன் ஒலித்தது.
இதழோரம் உதித்த மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்திருந்தாள் அவள்.
“இவ்வளவு வருஷம்..கிட்டத்தட்ட 12 வருஷங்களுக்குப் பிறகு உன் நிலையில நின்னு நான் யோசிக்கிறேன்…!இத்தனை வருஷங்கள்ல என்மேல உனக்கு கோபமே வந்ததில்லையா…?”,அவன் வினவ..அவள் ‘இல்லை‘ என்பதாய் தலையாட்டினாள்.
“ஏன்…?”,ஏன் என்று அவன் எழுப்பிய கேள்விக்கு அவள் ஒற்றை வார்த்தையில் பதில் தந்தாள் ‘நீ…!‘ என்று.
“ஏன்னா ஐ லவ் யூ…நான் உங்களைக் காதலிக்கிறேன் மாமூ…!”,தலையை சரித்து வெட்கப் புன்னகையை சிந்தியபடி கூறியவளின் கண்களில் காதல் தெறித்தது.
‘மாமூ‘ இந்த வார்த்தையை எவ்வளவு வருடங்களுக்குப் பிறகு உதிர்க்கிறாள்.
திருமணமாகி பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு..முழுதாக இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பிறகு..கட்டிய மனைவியின் கண்களில் மின்னும் காதலை உணர்ந்து கொண்டான் அந்தக் கணவன்.
“ஐ லவ் யூ டி…!”,திருமணமான புதிதில் மோகத்தோடு கலந்த நாட்களில் அவன் அவளிடம் ‘ஐ லவ் யூ..‘ சொல்லியிருக்கிறான் தான்…!ஆனால்..இப்பொழுது சொன்னதைப் போல் மனம் நிறைந்த காதலுடன் சொல்லவில்லை…!இதயம் முழுவதும் ஒவ்வொரு அணுவிலும் காதலை இட்டு இட்டு நிரப்பி அந்த ‘ஐ லவ் யூ‘வை சொல்லியிருக்கவில்லை…!
தன் விழிகளில் வழிந்த காதலுக்கு சற்றும் குறையாத காதலைத் தன் கணவனின் கண்களில் கண்டவள் அவனது நெற்றியில் இதழ் பதித்தாள்..காதலோடு…!
“தாம்பத்தியம் அப்படிங்கறது இந்தக் கட்டில் மேல கூடற கூடல் மட்டும் இல்லை…!ஒருத்தர் மனசை இன்னொருத்தர் புரிஞ்சுக்கிற உணர்வுக்குப் பெயரும் தாம்பத்தியம் தான்…!நீங்க என் மனசை புரிஞ்சுக்கல..அதனால நான் உங்க உணர்வுகளைப் புரிந்துக்க ஆரம்பித்தேன்…!ஒவ்வொரு நாளும் பயங்கர உடல் அசதியோடதான் நான் வந்து இந்த பெட்ல விழுவேன்..ஆனால்..அப்போ ஆசையோடு என்னை நெருங்கற உங்க கண்கள்ல தெரியற வேட்கை..என் உடல் அசதியை ஒரு பொருட்டா எடுத்துக்காம உங்க ஆசையை நிறைவேத்த சொல்லி என்னைத் தூண்டும்…இதுதான் என் தாம்பத்தியம்…!அதே மாதிரி..நீங்க சொல்ற வேலைகளை சில சமயங்கள்ல செய்ய முடியாம போகும்..அப்போ நீங்க வந்து என்னைத் திட்டும் போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும்…ஆனால்..உங்க கண்கள்ல தெரியற கோபம்…‘அச்சோ..நாம கொஞ்சம் மெனெக்கெட்டு நீங்க சொன்ன வேலையை முடித்திருக்கலாமோ..‘ன்னு என்னை வருத்தப்பட வைக்கும்..இதுதான் என்னுடைய தாம்பத்தியம்…! என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்..காமம்..புரிதல்..குழந்தை வளர்ப்பு இப்படி அனைத்தையுமே உள்ளடக்கியதுதான் தாம்பத்தியம்…!
உங்களைப் புரிஞ்சுக்காம நீங்க கோபப்படறீங்கன்னு நானும் கோபப்பட்டு கத்திக்கிட்டு இருந்தால்..இவ்வளவு வருஷமா உங்க கூட நான் நடத்தற தாம்பத்தியத்திற்கு அர்த்தமில்லாமல் போயிடும் மாமூ…!நீங்க எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்…பிகாஸ்..ஐ லவ் யூ…!”,அவனது விழிகளைப் பார்த்துக் கூறியவளின் குரலில் காதல்..காதல் மட்டும்தான் இருந்தது.
அவனுக்குத்தான் தான் எப்படி உணர்கிறோம் என்பதே புரியவில்லை.காதலிப்பதை விட காதலிக்கப்படுவது கோடி சுகங்களை அள்ளித் தெளிக்கும் அல்லவா…!இவ்வளவு வருடங்கள் தான் மனைவியின் மேல் வைத்திருந்தது காதல் அல்ல…இதோ..இப்பொழுது..இந்தக் கணம் உணர்ந்து கொள்கிறோம் அல்லவா…சில்லென்ற ஒரு மழை இதயம் முழுதும் நனைத்துச் செல்கிறது அல்லவா..இதுதான் காதல்…என்பதை உணர்ந்து கொண்டான்.
“ஐ லவ் யூ டி கண்ணம்மா…!”,அவன் இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள் அவை…!காதலுடன் அவளை அணைத்து மெதுவாக முன்னேறியவனுக்குத் தன்னை அள்ளி அள்ளி கொடுத்தாள் அந்தக் காதல் மங்கை…!பன்னிரெண்டு வருட தாம்பத்திய வாழ்வில் இப்படியொரு திருப்தியை எந்தவொரு கூடலும் அவர்களுக்கு வழங்கியிருக்கவில்லை…!அந்தளவிற்கு ஆத்ம நிறைவு இருவரின் மனதிலும்…!பின்னே…காதல் என்னும் தூரிகையினால் காமம் என்னும் மை தொட்டு இரு இதயங்கள் சங்கமித்த கூடல் அல்லவா அது…!
காதல்…இந்த ஒற்றை வார்த்தை அள்ளித் தரும் இன்பங்களும்..மாயங்களும் கணக்கிலடங்காதவை…!குடும்ப வாழ்க்கையின் ஆணி வேராக சுழல்வது தாம்பத்தியம் தான்…!அந்த தாம்பத்தியத்தை இதமாக ஆட்டி வைப்பது இந்தக் காதல்தான்…!காதல் எந்த வயதில் வந்தால் என்ன…காதல் காதல்தான்…!அதற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது…!