ஊட்டி
அங்கும் இங்குமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வானுயர்ந்த கட்டிடம். கட்டிடம் அல்ல பணத்தினை வாரியிரைத்து செதுக்கியிருக்கும் அரண்மனை என்று சொல்லலாம். அங்கிருக்கும் பணியாட்கள் அரக்க பறக்க வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கு பணிபுரியும் ஒருவன் இங்கு நடக்கும் ஒன்றையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு ஓரிடத்தில் அமைதியே உருவாக அமர்ந்திருந்தான்.
யாரிவன்?
ஹா ஹா ஹா.. இவன் தாங்க நம்ம கதாநாயகன் வேந்தன்.
இங்கிருந்து பார்த்தால் அவளின் அறை தெரியும்.
யாரந்த அவள்?
நம் நாயகி. பெயர் காயத்ரி.
அவளும் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த பார்வையில் என்ன கண்டானோ, ஒரு விரக்திப் புன்னகையோடு, தன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.
அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. எப்படி இருக்கும்? அவள் விரும்புவது வேந்தனை. ஆனால், இன்னும் சில நாட்களில் தன் அத்தை மகனான மாறன் என்பவனோடு திருமணம் நிச்சயிக்க போகிறார்கள் அவளின் பெற்றோர்கள்.
சக்ரவர்த்தி மற்றும் மங்கையர்க்கரசியின் புதல்வி தான் காயத்ரி. இவளுக்கு ஒரு தம்பி இருக்கின்றான்.
அவன் அசோக், கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கின்றான். அவனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. ஏனென்றால் அவனுக்குத் தான் தெரியுமே. தன் அக்காவின் காதல்.
அவனுக்குமே வேந்தனை மிகவும் பிடிக்கும். அவனின் மேனரிசம், ஆளுமைத்திறன், அவனின் கம்பீரம், சிறு கண்ணசைவு கூட பிடிக்கும்.
காயத்ரியும், வேந்தனும் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் அசோக் பார்த்து விட்டான். அதன் பிறகு அவர்களது ஒவ்வொரு செயலையும் கவனித்த போது அவன் கண்டு கொண்டான்.
அவனும் தன் அக்காவின் காதலுக்கு ஆதரவுதான்.
வேந்தனும், காயத்ரியும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
பார்த்த முதல் பார்வையிலேயே ஒருவரை ஒருவர் பிடித்துபோய்விட்டது.
சீனியர்கள் ராகிங் செய்ய அப்பொழுதுதான் அங்கே வந்து கொண்டிருந்தாள் காயத்ரி. அவளை திடீரென ராகிங் செய்து கொண்டிருந்த குரூப்பில் இருந்து ஒரு இளைஞன் அழைக்க. இவள் சற்று பயந்து கொண்டே அங்கு சென்றாள்.
அங்கே வேந்தனும் நின்று கொண்டிருந்தான். வேந்தனுக்கு அவளின் மிரளும் விழிகளை பார்த்து ஒரு வித இனம்புறியா உணர்வு.
அந்த இளைஞர்கள் வேந்தனை கைகாட்டி, “அவன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டு போ” என சொல்ல, அவளுக்கு ஒரே படபடப்பு.
வேந்தனும் அவளின் படபடப்பை ரசித்தவன், “டேய், மச்சி விடுங்கடா பாவம் அந்த பொண்ண. நீ போம்மா”, என்று அனுப்பி வைக்க. அவளுக்கு ஒரு நிம்மதி உணர்வு.
அப்பொழுது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த உடனேயே மிகவும் பிடித்து விட்டது.
“டேய்” என்று நண்பர்கள் குதூகலிக்க,
“சும்மா இருங்கடா. ஏன்டா?“ என்றான்.
அதன் பிறகு ஒருவரை ஒருவர் மற்றவர் அறியாது பார்ப்பது, பேசுவது என்று தொடங்கி தற்போது அவளை திருமணம் செய்து கூட்டிச் செல்லவே வந்து விட்டான்.
வேந்தனின் குடும்பம் மதுரையில் தான் இருக்கின்றார்கள். அவனின் அம்மா வான்மதி, தாத்தா வெங்கடாச்சலம், பாட்டி ருக்மணி. இவர்களும் வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் இல்லை.
“என்ன, காயத்ரி அளவுக்கு மிகப்பெரிய வசதி படைத்தவர்கள் இல்லை. ஆனால் இவர்கள் ஊரில் இவர்கள் தான் நல்ல வசதி படைத்தவர்கள்.
இவனது சிறு வயதில் நடந்த ஒரு கார் விபத்தில் இவனது குடும்பம் சிக்கி அந்த விபத்தில் தந்தை ராஜன் மற்றும் அவனின் அக்கா வானதி இருவரும் மரணம் அடைந்து விட்டனர்.
அதிலிருந்து அவனின் அம்மாவும் கொஞ்சம் சுய நினைவில்லாமல் இருக்கின்றார். 20 வருடங்கள் கடந்த போதும் இன்னும் அவருக்கு உடல்நிலை தேறவில்லை.
ராஜனும் வான்மதியும் காதல் மணம் புரிந்துகொண்டார்கள். அப்பொழுது ராஜன் வீட்டில் சம்மதம் தெரிவித்தார்கள் ஆனால் மதியின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மதியின் பெரியப்பா மகன் தன் தங்கையுடன் வீட்டிற்க்கு தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் தன் தந்தை மற்றும் சித்தப்பாவின் வார்த்தையை மீறி அவனாலும் ஏதும் செய்ய இயலவில்லை.
அதன் பிறகு மதி மற்றும் ராஜின் வாழ்க்கை நன்றாக சென்றது இரண்டு குழந்தைகள் என நன்றாகவே வாழ்ந்தனர்.
மாமியார் மாமனாரின் அன்பு, எல்லாமே மிகுந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை தான். ஆனால், விதி விட்டுவைக்கவில்லையே. தன் மகன் மற்றும் பேத்தியின் இறப்பு அதிர்ச்சி என்றால். மருமகள் நிலையை நினைத்து பேரதிர்ச்சி அவர்களுக்கு.
வாரிசு என சொல்ல பேரனாவது இருக்கிறானே என்று மனதை தேற்றிக் கொண்ட முதியவர்கள். அவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.
அவனும் நன்றாக படித்து சிறு வயதிலேயே தாத்தாவின் அரிசி மில்கள், கரும்பு ஆலைகள், மற்றும் தோட்டம் துறவு, விவசாயத்திலும் ஆர்வமாக இருந்தான்.
அப்பொழுது படிப்பு முக்கியம் என அவனை படிப்பின் பக்கம் திசை திருப்பினார் தாத்தா வெங்கடாசலம்.
அவன் படிப்பிலும் படுகெட்டி. படித்து மேற்படிப்பை சென்னையில் படிக்க வந்த போது தான் காயத்ரியை சந்தித்தது. அவர்களுக்குள் காதல் மலர்ந்தது எல்லாமே.
தற்போது அவளுக்கு திருமணம் நிச்சயிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க. மற்றவர்களுக்கு மாப்பிள்ளை யாரென தெரியாது.
ஆனால் காயத்ரி குடும்பத்திற்கும் அவளைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை குடும்பத்திற்கும் தெரியும்.
காயத்ரிக்காகத்தான் வேந்தன் இங்கே ஒரு இரண்டு மாதமாக கார் டிரைவராக வேலை செய்து கொண்டிருக்கிறான். எப்படியாவது தங்கள் காதலை அவள் பெற்றோரிடம் தெரிவிக்க போராடிக் கொண்டிருக்க. அங்கு அவளுக்கோ திருமண நிச்சயம் வரை சென்று விட்டது.
அவளும் தன் தாயிடம் எப்படியாவது தங்களின் காதலை சொல்லலாம் என்று தான் இருக்கின்றாள். ஆனால் முடியவில்லை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது.
பெரிய பிரச்சினையாகி விடுமோ என்று பயம் வேறு.
‘தன் காதலை எப்படி வீட்டில் சொல்வது?’ என தவித்துக்கொண்டிருக்க. அவனோ தனக்கு அப்படி எந்த பிரச்சனையும் இல்லாதவன் போல சுற்றிக் கொண்டிருந்தான்.
இவளுக்கோ ஆத்திரம். அவன் தனியாக மாட்டட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள்.
நிச்சயத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன.
அங்கே வேலை செய்பவர்களுக்கு இவர்கள் வீட்டிற்க்கு பக்கத்திலேயே வீடு கட்டி கொடுத்திருந்தனர்.
மறுநாள் அதிகாலை நேரமாக எழுந்தவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒருவரும் தென்படவில்லை.
கடும் குளிரைக்கூட பொருட்படுத்தாமல், பூப்பறிக்கின்ற வேலையை காரணமாக்கி பூக்கூடையை எடுத்துக் கொண்டுத் தோட்டத்திற்கு சென்றாள்.
காயத்ரி அவனது அறைக்கே சென்று விட்டாள். அவன் அங்கே உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க. நேராக அவன் முன் சென்று இடுப்பில் கைவைத்து நின்றாள்.
அவனுக்குத்தான் தெரியுமே அவள் வருவாள் என்று.
“ஏய்.. என்னடி? நீ பாட்டுக்கு வந்து நிக்குற? யாராச்சும் பாத்தா என்ன பண்றது?“ என்றான்.
“ஏன்டா? உனக்கு கொஞ்சமாச்சும் என் மேல அக்கறை இருக்கா? இன்னும் 3 நாள்ல நிச்சயம் பண்ண வந்துடுவாங்கன்னு நானே பயந்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா இவ்ளோ சாதாரணமா இருக்க? அவ்வளவுதான் நீ என் மேல வச்சிருக்க லவ்வா?”
“ஹேய், செல்லக்குட்டி, எதுக்குடி இவ்ளோ டென்ஷன் ஆகுற, அதெல்லாம் மாமா பாத்துக்குறேன். நீ முதல்ல என்னை கவனி” என்றான்.
“போடா, உனக்கு எப்ப பார்த்தாலும் விளையாட்டுத்தான். நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பதில் சொல்லிட்டு இருக்க” என்றாள் காயத்ரி.
“என்ன அவசரம்? அதான் இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்குல்ல. அப்புறம் என்ன பயப்படாம இரு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“என்னவோ எனக்கேதும் சரியா படல வேந்தா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அவள் வேந்தனின் தோளில் தலை சாய்க்க, அவனோ அவள் தலையை ஆதரவாக தடவிக்கொடுத்தான்.
“நான் இருக்கேன்டி. தைரியமா இரு. சரியா? சரி வந்ததே வந்துட்டே, அப்படியே அய்யாவ கொஞ்சம் கவனிக்கிறது” என்றான்.
“ம்ம்ம், அவ்வளவு விவரம் துரை. போடா.. ஒழுங்கா என்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போற வழியப்பாரு. அதுக்கப்புறம் உங்களை எப்படி கவனிக்குறதுன்னு நான் காட்டறேன். இப்போ நான் கிளம்பறேன்” என்றவள் கிளம்ப எத்தனிக்க, அவள் கையை பிடித்து இழுத்தான் வேந்தன்.
அவன் இழுத்த இழுப்புக்கு அவன் மார்பின் மீது விழுந்தாள் மங்கையவள்.
“என்னடி? வந்த, பேசின, நீ பாட்டுக்கு கிளம்பர? இவ்வளவு பேசரவள சும்மா அனுப்பக்கூடாதுன்னு என் மனசு சொல்லுது. என்ன தரலாம் உனக்கு? ம்ம்ம் நீயே சொல்லு? என்ன பண்ணலாம்??“ என்றான்..
“வேந்தா, இது சரியில்லை. யாராவது பார்த்துட்டா வம்பு. விடு நான் போகனும்” என்றாள் சின்னக்குரலில். அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை. அவனுக்கு எங்கனம் கேட்கும்.
அவள் உதட்டசைவை பார்த்தவனுக்கு என்னென்னவோ தோன்றியதே. அவள் சத்தமாக பேசியிருந்தால் கூட வேந்தனுக்கு கேட்டிருக்காது.
“இந்த தண்டனையை அதிகமாக பேசற இதழுக்கா? இல்லை படபடன்னு அடிக்கிற இமைக்கா? சொல்லுடி?“ என்றான்.
“ஏய்,என்னடா? இப்படியெல்லாம் பேசற? வேந்தா நீ ரொம்ப மோசம், என்னை விடு. யாராவது பார்த்தா அவ்வளவு தான்” என்றவள் விட்டால் போதுமென்று ஓடியே விட்டாள்.
அவனோ ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவன். தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான். அந்த பக்கம் என்ன சொன்னார்களோ, இவன் முகத்தில் ஒரு கீற்றுப்புன்னகை. அந்தப்புன்னகை அவள் நிச்சய நாளன்று வரையுமே நீடித்தது.
இருவரும் அந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.
ஒருவர் என்ன நடந்தாலும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையோடு, மற்றொருவர் பயத்தோடு.
தன்னம்பிக்கையோடு வேந்தன். பயத்தோடு காயத்ரி.
மறுநாள் காலைப்பொழுது அழகாக விடிந்தது.
வேந்தன் அன்று காலை எழுந்து கிளம்பி மாப்பிள்ளைத் தோரணையில் டிப்டாப்பாக இருந்தான்.
காயத்ரியோ கடனே என, ஏனோதானோவென்று கிளம்பினாள். ஆர்ப்பாட்டம் இல்லாத, அதிகம் கண்ணை உருத்தாத அலங்காரம். அதிலேயே அவள் தேவதை போல ஜொலித்தாள். முகத்தில் மட்டும் புன்னகை மருந்துக்கு கூட இல்லை.
மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர் என்று செய்தி அறிந்ததும் இவளுக்கோ கலவரம். பெற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா? என.
தன்னை காதலித்தவன் மேல் நம்பிக்கை இருந்தாலும்,வரப்போகும் விபரீதத்தை நினைத்து அச்சம் சூழ்ந்தது.
இருவரும் யார் மனதையும் புண்படுத்தாது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் விதி அவர்கள் தலையெழுத்தை மாற்றி விட்டது போல.
நாம் நினைப்பதெல்லாம் நடந்தால் கடவுள் எதற்கு? விதி எதற்கு?
சரி, வாங்க நம்ம கதைக்குள்ள போலாம்.
மாப்பிள்ளை வீட்டினர் மற்றும் பெண் வீட்டினர் அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.
எல்லாருமே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, காயத்ரியையும் அழைக்க அவளும் வெளியே வந்தாள். அவளை ஒரு சோபாவைக் காட்டி அங்கே அமர சொல்லவும், ஏதும் பேசாமல் தலையை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.
“என்ன அண்ணா,இன்னும் மாப்பிள்ளை வீட்டைக் காணோம்?“ எனக் கேட்க காயத்ரிக்கு தூக்கி வாரிப்போட்டது.
“என்ன இந்தம்மா லூசா. இவங்க தான மாப்பிள்ளை வீடு. அம்மா அப்படித்தானே சொன்னாங்க. மாறன் வீட்ல தான் உனக்கு பேசியிருக்கோம்னு” என மனதிற்குள் நினைத்துக்கொண்டு, தலையை நிமிர்த்தி பார்த்தாள்.
அங்கு மாறனும் அமர்ந்திருக்க அனைவர் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. இவளுக்கு உள்ளுக்குள் கலவரம்,
“எவன்டா மாப்பிள்ளை? ஐய்யோ எவன்னு தெரியலயே. நமக்கு மட்டும் தான் வித்தியாச வித்தியாசமா பிரச்சனை வருது. கடவுளே! என்ன எப்படியாவது என் வேந்தன் கூட சேர்த்து வெச்சிடு. உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன்” என அவசர வேண்டுதல் ஒன்றை வைத்தாள்.
கொஞ்ச நேரத்தில் வெளியில் கார் சத்தம் கேட்க, தாயும் தந்தையும் மற்றும் மாறன் குடும்பமும் சென்று வரவேற்றனர்.
‘யாரென‘ பார்க்க அங்கே ஒரு வயசான தாத்தா,பாட்டி மற்றும் ஒரு பெண்மணி வந்துகொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு முகமெல்லாம் ஒரே பூரிப்பு, அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தவள். அவர்களுக்குப் பின்னால் வந்தவனை கவனிக்கவில்லை.
“அத்தை, மாமா வாங்க. வாங்க. வாம்மா மதி” என்று வரவேற்றனர் மாறன், மற்றும் காயத்ரியின் பெற்றோர்கள்.
அவர்களுக்குப் பின்னோடு வந்தான் வேந்தன்.
“வாங்க மாப்பிள்ளை” என்று அவன் கையைப் பிடித்து அழைத்து வந்தார் சக்ரவர்த்தி.
மங்கையும் அவரை “வாங்க தம்பி” என்று அழைத்தார்.
இருவர் முகத்திலும் பேரானந்தம். அவர்கள் மட்டும்தான் அப்படி என்றால் மாறனின் பெற்றோரும் அவர்களை மிகுந்த சந்தோஷத்தோடு வரவேற்றார்கள்.
காயத்ரிக்கு தன்னை சுற்றி நடப்பது ஒன்றும் புரியவில்லை. தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. ‘இங்கே என்னடா நடக்குது?” என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உள்ளே வந்த வேந்தன் திகைத்து நின்றிருந்த காயத்ரியை பார்த்து யாரும் அறியா வண்ணம் கண்ணடித்தான்.
அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்க, இவன் பிறரியாமல் கண்ணடிக்கவும் அவளுக்கோ முகம் வெட்கத்தில் குப்பென சிவந்தது. நாசூக்காக அவனைப் பார்ப்பதை தவிர்த்து விட்டு வந்தவர்கள் பக்கம் பார்வையை திருப்பினாள்.
மங்கை, தாத்தா பாட்டியிடம் ஆசிர்வாதம் சொல்ல, இவளும் சாவிக்குடுத்த பொம்மையைப் போல அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.
“அண்ணா, எப்படி இருக்கீங்க? அப்பா, அம்மா, பெரியப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க? என மதி கேட்க,
குரலை செருமிக்கொண்ட சக்ரவர்த்தி, “அவர்கள் எல்லாருமே இப்போ இல்லைம்மா. நாலு வருஷம் ஆச்சு. உடல்நிலை காரணமாக தவறிட்டாங்க” என வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல, மதியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால் காலம் கடந்த பின்பு யாரால் என்ன செய்ய இயலும்.
அப்படியே அவர்களுக்குள் நல விசாரணைகள் நடந்து கொண்டிருக்க. இங்கு காயத்ரிக்கு தான் சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. ஆனால், மிகுந்த சந்தோஷம் அவளுக்கு. தன்னவன் தனக்கு வாக்கு கொடுத்தது போல, குடும்பத்தினரோடு தன்னைப் பெண் பார்க்க வந்துவிட்டதை நினைத்து பூரித்துப்போனாள்.
அவளுக்குத் தெரியும் “வேந்தனுக்கு தாய் மட்டுமே. தன் சிறுவயதில் நடந்த விபத்தில் தந்தை மற்றும் தமக்கையை பறிகொடுத்தது வரை. தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதது, தன் தாத்தா பாட்டியோடு வசித்து வருகிறான்” என்பது வரை சொல்லியிருக்கிறான்.
ஆனால், அவளுக்கு இப்போது இருக்கும் பிரச்சனை, ‘தன் குடும்பத்தாரை எப்படி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான் மற்றும் மாறன் குடும்பத்தினர் எவ்வாறு ஒத்துக் கொண்டனர்? அதும் அவர்களும் சந்தோஷ பிரியமாக அவர்களை வரவேற்கிறார்களே‘ என்று தான்.
வான்மதி, காயத்ரியை தன்னருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டார்.
அவளுக்கு மிகுந்த சந்தோஷம்தான். அதைவிட குழப்பம் தான் மிகுதியாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த நேரத்தை மிக மகிழ்ச்சிகரமாக வரவேற்றாள்.
இன்றும் நல்ல நாள்தான். அதனால் இன்று மோதிரத்தை மாற்றிக் கொண்டு, அதேபோல இன்னும் இரு நாட்கள் கழித்து வரும் முகூர்த்தத்திலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து விட்டனர் பெரியோர்கள்.
மூன்று குடும்பத்தாருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
வீட்டிற்குள் வந்தபோது காயத்ரியை பார்த்தவன் தான் இப்போது வரை அவன் இவளை பார்க்கவில்லை, இவளும் அவனைப் பார்க்கவில்லை.
காயத்ரிக்கோ இன்னுமொரு சந்தேகம். ஏன் இவ்வளவு விரைவாக திருமணத்தை வைக்கின்றார்கள் என்று. யாரிடம் கேட்பது என்று தான் தெரியவில்லை.
அதன் பிறகு இருவரும் பெரியோர்கள் ஆசிர்வாதத்தோடு மோதிரத்தை மாற்றிக்கொண்டனர்.
அவர்கள் பேசிக்கொண்டதில் இவள் தெரிந்துக்கொண்டது என்னவென்றால், வேந்தனின் தாய் தான் தன் சின்ன தாத்தாவின் மகள் அதாவது தன் அப்பாவின் சித்தப்பா பெண்.
மதியின் காதலுக்கு பெற்றோர் மறுப்பு சொல்லவும், வேறு வழியின்றி வீட்டை விட்டு சென்று, தன்னைக் காதலித்தவரை காதல் மணம் புரிந்துகொண்டார். அவர்களின் மகள் மற்றும் கணவரை ஒரு விபத்தில் இழந்துவிட்டார்.
காயத்ரியின் தந்தை விபத்தை மட்டும் அறிந்துகொண்டு அவர்கள் குடும்பமே இறந்துவிட்டது என நினைத்துக்கொண்டார். இப்பொழுது தங்கையின் குடும்பத்தில் தங்கையும் அவள் மகனும் இருப்பதையரிந்து தன் தங்கையின் வீட்டிலேயே சம்மந்தம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், மாறனும் வேறு ஒரு பெண்ணை விரும்புவதால், காயத்ரிக்கு வெளி இடத்தில் மாப்பிள்ளை பார்க்கலாம் என்றிருந்தனர்.
அப்போதுதான் வேந்தனின் மூலம், அவன்தான் தங்கை மகன் என்றும், அவரின் தங்கை மதி நன்றாக இருக்கிறார் என்றும் சக்கரவர்த்திக்கு தெரிய வந்தது. பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் மகளை வேந்தனுக்கே திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதைப் பற்றி மாறன் வீட்டினருடன் கலந்து பேசிவிட்டு அவர்களும் சந்தோஷமாக சம்மதித்து விட்டனர்.
இதை அனைத்தையும் தெரிந்து கொண்ட காயத்ரிக்கு மிக்க மகிழ்ச்சி.
மாறனும் வேறு யாரும் அல்ல, வேந்தனின் நண்பன். இருவரும் சேர்ந்து புதிதாக ஒரு தொழிலை உருவாக்குகின்றன. அதில் இருவரும் பார்ட்னஸ். அதனால், மாறனும் இவன் காதலுக்கு ஆதரவு தான்.
தன் அக்காவின் திருமண செய்தி கேட்டு ஆகாஷிற்க்கும் மிகுந்த சந்தோஷம்.
இரண்டு நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.
திருமணமும் மிக எளிமையாக நடைபெற்றது.
வரவேற்புக்கு அனைவரையும் அழைத்துக்கொள்ளலாம் என பெரியவர்களே முடிவெடுத்தனர். இவர்கள் காதலித்ததும் அனைவருக்கும் தெரியும்.
மதியின் திருமணத்திற்கு பிறகு ஒரு நாலைந்து வருடம் கழித்து சித்தப்பாவிற்கு மதியை பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால், கௌரவம் என்ற ஒன்றிற்காக விட்டுவிட்டனர். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று கூட இருந்து பார்த்த சக்கரவர்த்திக்கு தெரியும். ஆதலால் தன் மகள், மகன் காதல் என்று வந்துவிட்டால் விசாரித்துவிட்டு சரியாகப் பொருந்தி வந்தால் திருமணம் செய்து விடலாம் என்று நினைத்திருந்தார். அதும் தன் தங்கை குடும்பம் என்றதும் அவருக்கு மிகுந்த சந்தோசம் தான்.
இனிதே திருமணம் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றது. வேந்தனின் தாத்தா பாட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சி. இவர்களின் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டுமென ஆண்டவனை பிரார்த்தித்து கொண்டனர்.
தன் திருமணத்தினால் பிரிந்து சென்ற குடும்பத்தை, தன் மகனின் திருமணத்தின் மூலம் சேர்ந்துவிட்டதில் மதிக்கு மிகுந்த மகிழ்ச்சி.
மாறனுக்கும் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது.
இரவு நேரம்.
அனைவரும் ஒன்றாக உணவருந்திவிட்டு, நேரமாக உறங்க சென்றுவிட்டனர். ஏனெனில், அதிகாலையிலேயே முகூர்த்தம் ஆதலால் நேரமாக கோவிலுக்கு சென்ற அசதி எல்லாருக்கும்.
புதுமணத்தம்பதிகளுக்கு அன்றிரவு சாந்திமுகூர்த்தம்.
அறையில் வேந்தன் ஒருவித படப்படப்போடு, ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கட்டிலில் அமர்ந்திருந்தனர்.
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் காயத்ரி. வந்தவளை கட்டிலைக் காட்டி உட்கார சொன்னான்.
என்ன பேசுவதென்றே தெரியவில்லை இருவருக்குமே.
காயத்ரி தான் முதலில் தன் தயக்கத்தை விட்டு அவனோடு பேச ஆரம்பித்தாள். “வேந்தன், திருமணத்தை ஏன் இவ்வளவு சீக்கிரமா வெச்சாங்க? எனக்கு இது மட்டும் தான் சந்தேகம்?“ என்றாள்.
வேந்தனோ, “உங்கப்பா தான் சீக்கிரமா திருமணத்தை வெச்சுக்கலாம்னு சொன்னார். ஏதோ ஜாதகம். நேரம், காலம் அதனாலென்ன நமக்கு நல்லதுதானே” என சொல்லிக்கொண்டே அவளை விழுங்குவது போல பார்க்க, அவளோ அவனை முறைத்து விட்டு, “அப்பாகிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாமே? ஏன் 2 மாசம் இங்க அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தீங்க, அப்போவே சொல்லியிருக்கலாம்” என்றாள் சினுங்களோடு.
அவனோ, “தங்க குட்டி உங்கப்பாவ பத்தி எனக்கு எதுவும் தெரியாது.
அவர் காதல எதிர்க்கிற ஆளா இல்லை ஆதரிக்கிறவரனா தெரிஞ்சுகிட்டு, அப்புறம் எங்க அம்மா மேல அவர் கோபமா இருக்காராங்குறதையும் தெரிஞ்சுக்கிட்டு, நம்மளோட காதலை சொன்னேன். அவ்வளவுதான்” என்றான் வேந்தன்.
அவளோ, அவனை மையலாக பார்க்க, வேந்தன் அவளிடம் நீ என்பதே நான்தானடி என அள்ளியணைத்துக்கொண்டான்.
அப்புறமென்ன அங்கு ஒரு அழகான இல்லறம் அரங்கேறியது. அவர்கள் சந்தோச பிரியமாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெருவோம்.
நன்றி.