“அம்மா நாம இப்போ எங்கம்மா கிளம்பறோம், ஊரெங்கும் போர்பதட்டமா இருக்கே” என தன் ஏழு வயது மகன் கேட்பதை கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் அவளும் மகனும் எங்கேயோ கிளம்புவது போல உடமைகளை சிறு மூட்டையாக கட்டிக்கொண்டிருந்தாள்.
“அம்மா கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க ம்மா, நாம இப்போ எங்க கிளம்பறோம், எங்க போகப்போறோம்” என மீண்டும் கேட்க,
“அப்பாவை பார்க்க” என ஒரேவரியில் பதிலளித்து அந்த பிஞ்சு கைகளை ஒரு கையில் பிடித்து கொண்டு இன்னொரு கையில் அந்த சிறு மூட்டையை எடுத்து கொண்டு தன் குடிசையை விட்டு வெளியில் வந்தாள் இராணி.
ஊரெங்கும் ஒப்பாரி சத்தமாய் கேட்டு கொண்டிருந்தது.
போரில் இறந்த வீரர்களின் உடல்களை வீட்டு வாசலில் போட்டு உறவினர்கள் யாவரும் கதறி கூப்பாடு போட்டு கொண்டிருந்தனர்.
சுற்றி பார்த்தவளுக்கு இதயம் கனத்து தான் போனது ஆனாலும் அதை பெரிது படுத்தாமல் முன்னோக்கி நடந்தாள்.
“ஐயோ ராணி பாத்தியா எத்தனை உசுரு இந்த போர்களத்துல அனாமத்தா போய்டுச்சு” என வயதான பெண்மணி ஒருவர் அவளை கட்டி அழ அவரை மெல்ல ஒரு கையால் நகர்த்தி விட்டு மீண்டும் முன்னேறி சென்றாள்.
ஊரெங்கும் இப்படி பிணக்குவியல் குவிந்திருக்க அவள் மட்டும் எங்கே செல்கிறாள்.
போருக்கு செல்லும் போது நிச்சயம் மீண்டும் வருவேன் என தனக்கு சத்தியவாக்கு அளித்த கணவனை தேடி போகின்றாள்.
போகும் வழியெங்கும் தன்னவனின் நினைவுகள் அவள் முன் படமாய் ஓடிக்கொண்டிருந்தன.
சோழ சாம்ராஜ்ஜியத்தின் பொற்காலம் என்று அழைக்கப்படும் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் அது.
தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த எதிர்நாட்டு படைகளை துவம்சம் செய்து விட்டு வாகை சூடி விழாக்கோலம் பூண்டு இருக்கிறது சோழனின் அரண்மனை…
தஞ்சை நகரெங்கும் சிரித்த முகங்கள் யாவும் வெற்றிவாழ்த்து கூறியும் ஆடியும் பாடியும் மக்கள் ஒரு பக்கம் கோலாகலமாய் கொண்டாடி கொண்டு இருக்கையில் தான் இங்கே இன்னொரு பக்கம் போரில் இறந்தவர்களின் பிணங்களை வைத்து கொண்டு ஒப்பாரி வைத்துகொண்டிருக்கின்றனர் தஞ்சையின் மறுபகுதி மக்கள்.
இந்த இருவேறு முகங்களையும் கண்டு கொண்டே தன் மகனை கையில் பிடித்து கொண்டு போகிறாள் போர்களம் பூண்டு இத்தனை பேர் மாண்ட இடத்தை நோக்கி.
தன் கணவன் புறமுதுகு காட்டி இறந்துவிட்டான் என உடன் சென்றவர் கூறியதை நம்பாமல் நேரில் காண செல்கிறாள்.
தன்னவனை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக கூறினாலும் அவளுக்கு தெரியும் அவளவன் எப்பேர்ப்பட்ட வீரனென்று.
யானைகள் அவனை கண்டால் தூர விலகி செல்லும்,
குதிரைகள் அவனை கண்டால் உடல்சிலிர்த்து நிற்கும்,
உடன் இருக்கும் படைவீரர்களே அவன் தோற்றம் கண்டு மிரண்டு இரண்டடி தள்ளி தான் நிற்பார்கள்.
“ஏன்டா சாதாரண குடிபடை வீரன் அவன கண்டு அரண்மனைல வேலை செய்யறவன் கூட பயப்படறானே அவன் என்ன அவ்ளோ பெரிய முரடனா” என யாராவது கேட்டாள் அவ்வளவுதான்.
அவன் ஆள் தான் அத்தனை உயரம், கருநிற தேகம், பெரிய மீசை, நேர்த்தியான தலைப்பாகை, திண்மையான தோள்கள், பெரிய கண்கள் என ஐயனாரப்பனை பார்ப்பது போல் இருப்பான், ஆனால் மனம் மிகவும் மென்மையானது.
எதிரிகளை தூசியாக தட்டி எறியும் பாரபட்சமே பார்க்காதவன். அவனை எதிர்த்து நிற்பவன் மண்ணுக்கு சொந்தம்,
அவனை அணைத்து வணங்குபனுக்கு அவன் சொந்தம்.
இப்படி அவனின் புகழ் தஞ்சை நகரெங்கும் பரவி கிடப்பதால் அவனை பற்றி எவரேனும் இழிவாக பேசினால் அதைகேட்கும் மக்களே அவர்களை உண்டு இல்லையென செய்து விடுவார்கள்.
இப்பேர்ட்ட வீரனா போரில் புறமுதுகு காட்டியிருப்பான்…
வருடந்தோறும் சிறந்த வீரனுக்கான பரிசிலை அரசரிடம் தவறாமல் பெற்று விடுவான்.
ஆனால் தன்னவள் முன் சிறு குழந்தை போல பயந்து கிடப்பான்.
“ஏன்யா எத்தனை தடவை சொல்லிருக்கேன் இருட்டு கட்ட முன்ன வீடு வந்து சேருனு, இந்த தீப்பந்தத்த கொழுத்திட்டு உனக்கு கஞ்சி எடுத்து வைக்கறதுக்குள்ள நாலு தடவை எதுலயாவது இடிச்சிக்க வேண்டியதா இருக்கு ” என அவனை கடிந்து கொண்டே அவனுக்கு கஞ்சி எடுத்து வைப்பவளை மெல்ல இழுத்து மடியில் அமர்த்தி கொண்டான்.
” யோவ் என்ன இது புள்ள தூங்கறான் முழிச்சிக்க போறான், பேசாம என்ன விடு” என அவள் திமிறி வெளியில் வரும் அளவு கொண்ட உருவமா இவன்.
இவன் இறுக அணைத்தாள் ஒரு சிறு ஆட்டுக்குட்டியை போல் குறுகி அவனுள் புதைந்து கொள்ளும் அளவுதான் அவள்.
நீண்ட கூந்தல், வடிவான முகம், பருத்தி சேலை, காலில் தண்டை என குட்டையாய் மாநிரத்தில் கண்ணுக்கு அழகாய் இருப்பாள்.
“பையன் எங்கபுள்ள எந்திரிக்கபோறான் அவன் இனி காலைல தான் கண்ணு முழிப்பான்” என அவனின் ஒற்றை விரலை கொண்டு அவள் இதழில் கோலமிட்டு கொண்டே கூற,
அவள் அவனை தட்டி விட்டு ஒரு குதி குதித்து அவனிடம் இருந்து தப்பி வந்தாள்.
” ஏன் புள்ள நம்ம பையன் இன்னும் எவ்ளோ நாள் இப்படி தனியா விளையாடுவான் அவனுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ பெத்து குடுக்கனும்னு உனக்கு அக்கறையே இல்லையா” என பொய்யான கோபம் கொண்டு கேட்டான்.
“ஆமாய்யா உம் பையனுக்கு விளையாட ஒன்னு அப்பறம் அதுக்கு விளையாட ஒன்னுன்னு வருஷா வருஷம் நான் பெத்து போட்டுட்டே இருக்கேன் எனக்கு வேற வேலை இல்ல பாரு” என அவனை பழித்து காட்டிவிட்டு ஓடினாள்.
கஞ்சியை குடித்து முடித்தவன் “சரி நீ அந்த அடுப்பங்கரைக்குள்ளயே கிட நான் அடுத்ததெருவுல கூத்து பாக்க போறேன்” என கூறி குடிசையை விட்டு வெளியே சென்றவனை எட்டி லாவகமாக கையை பிடித்து இழுத்தாள் மங்கையவள்.
“உள்ள வாயா கூத்து நான் கட்டறேன்” என கூறியவுடன் மெய்மறந்து தான் போனான் ஆடவன்.
“இருவரும் கொல்லைபுறத்தில் கயிற்று கட்டிலை போட்டு படுத்துக்கொண்டு முழுமதியை ரசித்து கொண்டிருந்தனர்.
“என்ன ராணிம்மா என்ன சொல்லுது நிலா” என அவன் கேட்க,
“ராஜா சரியில்ல கொஞ்சம் தள்ளியே இருனு சொல்லுதுயா” என கூறி சிரித்தாள்.
“எப்படி டி நமக்கு இப்படி ஒரு பேர்பொருத்தம்,
ராஜகுமாரன், யுவராணினு” என ராஜா கேட்க,
” போன பிறவில ஒருவேளை இராஜா இராணியா பிறந்திருப்போமோ என்னவோ, இந்த பிறவில பாரு சாதாரண ஒரு குடி வீட்ல பொறந்திருக்கோம்” என அவள் சலித்து கொண்டே கூறினாள்.
“குடிப்படைல பொறந்ததால மகாராணிக்கு இப்போ என்ன கெட்டுபோச்சு, அதான் ராஜாவே புருஷனா வந்திருக்கானே” என அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
“நீ உடலளவுல மட்டும் வீரன் இல்லையா, பொண்ணுங்க மனச கவரும் விதத்துலயும் பெரிய ஆள் தான் ” என அவளும் அவனை அணைத்து கொண்டாள்.
இப்படி மகிழ்வாக சென்றுகொண்டிருக்கும் வாழ்வில் தான் வந்தது அந்த போர்.
ஏனோ இந்த போருக்கு கணவனை அனுப்புவதில் பெண்ணவளுக்கு சற்றே விருப்பம் இல்லாமல் இருந்தது.
அவனிடம் கூறினாள் அவன் எப்படியும் கேட்கமாட்டான் என அவளுக்கு தெரியும்.
அதனால் அவள் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அவனிடம் கூறி இந்த போரில் இருந்து விலகச் சொல்லலாம் என நினைத்து தான் கர்பமமாக இருக்கும் செய்தியை அவனிடம் சொல்ல அவன் இவளை தூக்கி கொண்டே அந்த குடிசைகள் நிறைந்த பகுதிக்கு நடுவே ஒருமுறை வலம் வந்தான்.
“யப்பா ராஜா ரெண்டாவது குழந்தை தான ஏதோ முதல் குழந்தை மாதிரி இவ்ளோ சந்தோஷப்படற” என கேட்டவர்களிடம்,
“எத்தனை குழந்தை பொறந்தாலும் எங்க குழந்தை தான, முதல் குழந்தை மட்டும் அதிசயம் மத்ததெல்லாம் அநாவசியம் இல்லையே” என கூறிகொண்டே அவளை மீண்டும் குடிசைக்குள் இறக்கி விட்டான்.
“ஏன்யா இந்த தடவ போருக்கு போக வேண்டாமே” என அவன் கையை பிடித்து அவள் கேக்கும் போது அவளின் மை வைத்த விழிகளில் கண்ணீர் துளிகள் உருண்டோடியது.
“இங்க பாரு புள்ள உனக்காகவும் நம்ம பசங்களுக்காவும் நான் என்ன வேணா செய்வேன், ஆனா என் உசுர் எப்போவும் இந்த தாய்மண்ணுக்கு தான்,
கண்டிப்பா போர்ல ஜெயிச்சு உன் ராஜா உன் முன்னாடி கம்பீரமா நிப்பான்” என அவளை அணைத்து ஆறுதலாய் கூறினான்.
அவனின் திடமான வார்த்தைகளில் அவளும் மதியங்கி அவனை போருக்கு திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் கையிலொன்றையும் வயிற்றில் ஒன்றையும் சுமந்து கொண்டு.
இப்படி அனுப்பியவனை புறமுதுகிட்டு போரில் இறந்ததால் அவன் உடலை எடுத்து வரவில்லை என உடன் வந்த வீரர்கள் கூறியதை நம்பாமல் தான் தன்னவனின் உடலை காண சென்று கொண்டிருக்கிறாள்.
“யார்மா அது அந்த பக்கம் போகாத போர்ல பல உசுரு அங்க அள்ளதுள்ள போயிருக்கு பொம்பள புள்ள, அதும் குழந்தை பையன கூட்டிட்டு போகாதம்மா” என ஒருவர் கூறியதை கேட்டு சுயநினைவுக்கு வந்தவளின் முன்னாள் பரந்து விரிந்திருந்தது போர்களம் கண்ட இரத்த பூமி.
மணல் மேடுகளாய், சிறு சிறு பாறைகளாய், யானைகள், குதிரைகளின் சடலங்கள் அங்கங்கே துண்டு துண்டாகி வீசப்பட்டு,
மனிதத்தலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுந்து கிடந்ததை பார்த்துக்கொண்டே சென்றாள்.
உருண்டிருக்கும் தலையில் தன்னவன் இருக்கிறானா, இல்லை சிறிது தூரத்தில் விழுந்து கிடக்கும் முண்டம்தனில் தன்னவன் இருக்கிறானா என தேடிக்கொண்டே போகிறாள்.
ஒவ்வொரு உடலையும் பயம் கொண்டு மிரண்ட விழிதனில் இவள் காண்பதை பார்த்த மகன் இவளையும் போர்பூமியையும் மிரட்சியாய் காண்கிறான்.
தூரத்தில் ஒரு உடலை கண்டு உறைந்து போய் நிற்கின்றாள்.
ஆம் அவளுடைய ராஜகுமாரனே தான், தலைகுப்பற கவிழ்ந்து கிடக்கிறான் முதுகில் ஈட்டியை ஏந்தியபடி.
அருகில் சென்றவள் அவனை அள்ளி மடியில் கிடத்தி அழுத சத்தத்தில் அங்கிருக்கும் கை கால் இல்லாத பிணங்களுக்கு கூட இரக்கம் வந்திருக்கும்.
“மாமா, அவளோ தூரம் சொன்னேனே போக வேண்டாம்னு உயிர் இந்த தாய்நாட்டுக்குதான்னு சொல்லி வாளேந்தி இங்க வந்ததுக்கு இதுதான் கதியா” என கதறிக்கொண்டிருந்தாள்.
“எதை தாய்நாடு தாய்நாடுனு சொல்றியோ அது என்ன செஞ்சுது தெரியுமா, நீ புறமுதுகு காட்டி போர்ல தோத்துட்டியாம் அதனால உன்ன இங்கயே போட்டுட்டு வந்துருச்சு,
ஆனா நாங்க அப்படி விட முடியாது,
அதான் நாங்க மூனுபேரும் உன்ன பாக்க வந்துட்டோம்” என விம்மிக் கொண்டே கூறினாள்.
மகன் எதை எதையோ பார்த்து கொண்டு வந்தவன் தன் தந்தையின் உடலை உற்று பார்த்து அவளிடம் கூறினான்.
அவளுக்கு அதற்கு மேல் அதிர்ச்சி, அதிர்ச்சியோடு கூடிய மகிழ்ச்சி.
அவனின் உடலை துளைத்த அம்பை கண்டு தான் இத்தனை மகிழ்ச்சி அவளுக்கு..
அவன் ஒன்றும் புறமுதுகை காட்டி இறக்கவில்லை.
அவனின் உடலை துளைத்த ஈட்டியின் வேல் பகுதி முதுகின் பின்புறம் இருந்தது.
அப்படியானால் இதயத்தில் பாய்ந்த அம்பு முதுகின் வழியே வெளிசென்றுள்ளது.
அரசுக்காக உயிரை விட்ட என்னவனின் உடல் இப்படி காக்கைக்கும் கழுகிற்குமா இரையாக வேண்டும் என எண்ணியவள் கையில் இருந்த மூட்டையை மகனிடம் கொடுத்துவிட்டு அவனை மெல்ல எழுந்து நின்று தூக்கினாள்.
அவனை இழுத்து செல்வது சற்று ஆகாத காரியம் ஆதலால் தனது முழு ஆற்றலையும் ஒன்றாக செலுத்தி அத்தனை பெரும் உருவம் கொண்டவனை தன் தோள் மீது தூக்கி போட்டாள் பெண்ணவள்.
மகன் தன் தாயை விழிஅகல கண்டு வியந்தான்.
ஒரு தோளில் அவனை கொண்டு இன்னொரு கையால் மகனை பிடித்தவள் சென்றாள் தஞ்சை நகரின் கோலாகலம் நிறைந்த பகுதிக்கு.
இவள் தூரத்தில் வருவதை கண்ட மக்கள் யாவும் திகைத்து நின்றனர்.
ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும் ஏதேதோ கிசுகிசுத்து கொண்டும் அந்த இடமே பித்து பிடித்தவர்களை சுமந்து நிற்பது போல் ஆனது.
ஆறடி கணவனை தோளில் சுமந்து ஐந்தடி சிறுஉருவம் கண்ணில் அனல் பறக்க முகமெங்கும் கோபத்தில் சிவந்திருக்க, தண்டைகளின் சத்தம் ஜல் ஜல் என ஒலிக்க கூட்டத்தின் நடுவே வருவதை பார்த்தவர்கள் அரசரிடம் சென்று கூறினார்கள்.
அரசர் செய்தி கேட்டு அதிர்ச்சியில் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டு விரைவாக அரண்மணை வாயிலுக்கு வந்தார்.
வந்தவர் வருபவளின் கோலம் கண்டு சற்று கலங்கிதான் நின்றிருந்தார்…
“என்ன மக்களே பாக்கறிங்க, என் புருஷன், என் ராஜகுமாரன் ஏதோ போர்ல புறமுதுகு காட்டிடார்னு சொல்லி இவர அங்கயே போட்டுட்டு வந்து இங்க வெற்றி விழா கொண்டாடறிங்களோ” என கர்ஜிக்கும் தோணியில் கேட்க அனைவரும் நடுங்கி போயினர்.
“நல்லா பாருங்க ஈட்டியோட வேல் பகுதி என் புருஷன் நெஞ்சுல பாஞ்சு முதுகு வழியா வெளிய வந்திருக்கு” என அவனை மெல்ல கீழே நிற்க வைத்து ஊருக்கே காண்பித்தாள்.
அனைவரும் தாங்கள் செய்த தவறை நினைத்து வெட்கி தலைகுனிந்தார்கள் அரசர் உட்பட.
“நீங்கெல்லாம் இப்படி தலைய குனிஞ்சு நிக்க இவர இங்க கொண்டு வரல,
இந்த அரசுக்காக அவரோட மூனு உசுற விட்டுட்டு போருக்கு போன மனுஷனுக்கு நீங்க செஞ்ச மரியாதைய சொல்லி மெச்சிட்டு போலான்னு வந்தேன்” என கூறியவள் மீண்டும் தன்னவனை தூக்கி தோள் மேல் போட்டுக்கொண்டு தன் வீடு நோக்கி புறப்பட்டாள்.
அனைவரும் அவள் செல்லும் திசையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தனர் செய்வதறியாமல்.
அவளை தடுத்து நிறுத்தும் தைரியம் எவருக்கும் இல்லை.
தன்னவனை தன் வீட்டிற்கு கொண்டு சென்றவள் அவனை வாசலில் கிடத்தி அவனுக்கு அத்தனை சடங்குகளையும் மகனை வைத்து செய்ய வைத்து காவிரிக்கரையோரம் இருக்கும் இடுகாட்டிற்க்கு மீண்டும் அவளே தூக்கி சென்று அவனுக்கு இறுதி காரியம் செய்தாள்.
அவனின் பூதவுடலில் தீ கொழுந்துவிட்டு எரியும் போது அதில் இருந்து வந்த புகை ஆடவனை போல தோற்றம் கொண்டு அவளிடம் நன்றியுரைத்து காற்றோடு காற்றாய் கலந்து போனது.
திடீரென மீண்டும் போர் முரசு கொட்ட பெரியவன் “அம்மா நான் போருக்கு போறேன்” என கேட்டவுடன் ராணியின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
“இந்த போருக்கு போற வேலையெல்லாம் உன்னோட நிறுத்திக்கைய்யா, என் பசங்களுக்கு எதையாவது பழக்கி விட்ட நீ அவ்வளோதான் சொல்லிட்டேன்” என ராணி கூற,
” நீ எது வேணா சொல்லு, பையன எப்படி வேணா கண்டிச்சு வை, ஆனா என் பசங்க அரசாங்கத்துக்காக போருக்க போறேன்னு சொன்னா மட்டும் மறுத்து பேசாம அவங்கள அனுப்பி விட்டுடுடி ” என கைகூப்பி கேட்க,
“ஏய் என்னய்யா இது என்கிட்ட போய் கையெடுத்து கும்பிடற” என அவனின் கைகளை இறக்கிவிட்டு அவனை இறுக அணைத்து கொண்டாள்.
“நான் எதும் சொல்லமாட்டேன் உன் பசங்க போகனும்னு நெனச்சா தாராளமா போகட்டும்” என கூறி அவன் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள்.
“ம்மா, போர் முரசு கொட்டுது நான் இந்த தடவை போருக்கு போறேன்னு சொன்னேன்” என மீண்டும் ஒரு முறை கத்த நிகழ்காலத்திற்கு வந்தவள் மறுப்பேதும் கூறாமல் சரியென தலையாட்டினாள்.
“போய்ட்டு வாப்பா வெற்றியோட திரும்பி வா, உன் அப்பாவோட பேருக்கு பெருமை சேத்துட்டு வா, தம்பிய நான் பாத்துக்கறேன்” என அவனிடம் கூறிவிட்டு சென்றாள் காவிரிக்கரையோரம்.
அந்த காவிரிக்கரையில் தான் அவளின் ஆடவனின் அஸ்தி கரைக்கப்பட்டதால் அவனின் இனிமையான நிகழ்வுதனை அங்கே சென்று சுவாசித்து திரும்புவாள்.
என்றும் பிரியாமல் பிண்ணி பிணைந்து ஒன்றோடு ஒன்று இணைந்து இருப்பது மட்டுமே காதல் அல்ல…
ஒருவர் இல்லாத போதும் அவர்களின் நினைவுதனை நெஞ்சில் சுமந்து தனது மீதி வாழ்நாளை நினைவுகளிலேயே நகர்த்தும் இவர்களை போன்றோரின் காதல் இன்னும் சிறப்பே.