அத்தியாயம் 1:
அதிகாலை நான்கு மணி.
சிட்டுக்குருவிகளின் “கீச் கீச்” என்ற சத்தம் காதில் விழ, கொட்டாவி விட்டபடியே எழுந்தாள் நம் கதையின் நாயகி நேகா.
கண்ணைக் கசக்கிக்கொண்டு, இருட்டில் தட்டுத் தடுமாறி விளக்கின் சுவிட்சைத் தேடி ஆன் செய்தாள். இத்தனை நேரமும் இருளுக்குப் பழகியிருந்த கண்கள், திடீரெனப் பாய்ந்த டியூப்லைட்டின் வெளிச்சத்தைத் தாங்க முடியாமல் கூசின. சில நொடிகளுக்குப் பிறகு, வெளிச்சத்திற்குப் பழகிய கண்களால் அறையைச் சுற்றிப் பார்த்தாள்.
கட்டிலில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த நேகாவின் தாயார் கீதா, விளக்கின் வெளிச்சத்தில் கண் விழித்தார். தலைமுடி நரைத்து, வயது முதிர்ந்த தோற்றத்தில் காட்சியளித்தார்.
“என்னடி… அதுக்குள்ள நாலு மணியாயிட்டா?” என்று தூக்கக் கலக்கத்துடன் கேட்டார்.
அலமாரியில் கிடந்த தன் அலைபேசியை எடுத்துப் பார்த்த நேகா, திரையில் 4:10 என்று காட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
“ஆமா மா… நேரமாச்சு. நா கிளம்புறேன்,” என்றவளின் பார்வை, கீதாவின் அருகில் திரும்பிப் படுத்து அழகுக் குட்டிச் செல்லமாய் உறங்கிக்கொண்டிருந்த தியோ குட்டியின் மீது விழுந்தது.
வாய்க்குள் ஆள்காட்டி விரலை வைத்து சூம்பியபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனைக் கண்டதும், நேகாவின் இதழோரத்தில் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது.
அறையில் இப்போது வெளிச்சம் பரவியிருந்ததால், வீடு முழுவதும் தெளிவாகத் தெரிந்தது.
ஒரு இரும்புக் கட்டில். அதில் கீதாவும் தியோ குட்டியும் படுத்திருந்தனர். கட்டிலுக்குக் கீழே இருந்த சிறிய இடத்தில் ஒரு பாய் விரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது போர்வை கலைந்து கிடந்தது. ஓர் ஓரத்தில் சிறிய அலமாரி. அதற்குள் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மற்றொரு ஓரத்தில் இருந்த இரும்புப் பீரோ, ஆங்காங்கே துருப்பிடித்து, அதிலிருந்த பச்சை நிற பெயிண்ட் உதிர்ந்து, தன் வயதைப் பறைசாற்றிக்கொண்டிருந்தது. அதற்கடுத்த சிறிய அறையில் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதுதான் சமையலறை என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டு அறைகள் கொண்ட அந்தச் சிறிய கான்கிரீட் வீட்டைத் தாண்டி, சொல்லிக்கொள்ளும்படி வேறெதுவும் இல்லை.
வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு அலைபேசியுடன் வெளியே வந்தாள் நேகா.
தென்னங்கீற்று கிடுகுகளால் ஐந்து பக்கமும் மறைக்கப்பட்டு, குடில் போன்ற அமைப்பில் இருந்த அந்த இடத்திற்குள் நுழைந்தாள். அலைபேசியில் டார்ச் லைட்டை ஆன் செய்து, அங்கிருந்த டிரம்மின் மூடியின் மீது வெளிச்சம் படும்படி வைத்தாள்.
இரும்பு வாளி, பிளாஸ்டிக் டப் என அனைத்திலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. கீழே தரைத்தளம் சிமெண்ட் பூசப்பட்டிருந்தது. இதுதான் நேகாவின் நவீன குளியலறை.
கப்பை எடுத்தவள், வாளியில் இருந்த தண்ணீரை மொண்டு முகத்தில் அடித்துக்கொண்டாள். முகத்தில் பட்டுத் தெறித்த தண்ணீர் துளிகள் கீழே சிதறி, தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய ஓட்டைக்குள் உருண்டோடின.
கிடுகில் சொருகி வைக்கப்பட்டிருந்த கோல்கேட்டையும் பிரஷ்ஷையும் எடுத்துப் பல் துலக்கிவிட்டு, மீண்டும் ஒருமுறை முகத்தைக் கழுவினாள். பின்னர் அலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தாள்.
பிளாஸ்டிக் நாற்காலியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டாள். அலமாரியில் இருந்த சீப்பை எடுத்தவள், பீரோவின் கண்ணாடி முன் நின்று தலைமுடியை வாரத் தொடங்கினாள்.
கண்ணாடியில் அவளது முகம் பிரதிபலித்தது.
கருப்பென்றும் சொல்ல முடியாது… வெள்ளையென்றும் சொல்ல முடியாது… இரண்டுக்கும் இடைப்பட்ட புதுநிறம். காதுகளைச் சிறிய ஸ்டார் வடிவக் கம்மல்கள் அலங்கரித்திருந்தன. கைகளில் சம்பிரதாயத்திற்காக நான்கு சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்கள்.
வலது கண்ணின் ஓரத்தில் இருந்த சிறிய மச்சம் அவளது அழகைக் கூட்டியிருந்தது. லிப்ஸ்டிக் போடாமலேயே அவளது இதழ்கள் மாதுளை முத்துகளைப் போலச் சிவந்து காணப்பட்டன. அவளின் இருபத்து நான்கு வயதிற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மெலிந்த தேகத்துடன் கண்ணாடி முன் நின்றிருந்தவளின் கண்களின் ஓரத்தில் மட்டும் கண்ணீர் தேங்கியிருந்தது.
‘அம்மு… இந்தப் புடவையில நீ எப்படி இருக்க தெரியுமா? அந்த ஐஸ்வர்யா ராயே தோத்துடுவா… பார்த்துக்கோயேன்!’ என்று காதுக்குள் ஒலித்த அந்தக் குரலில், அவளது இதயம் வலித்தது.
வெடித்து அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டு கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
கண்ணாடியில் ஒட்டி வைத்திருந்த சிறிய கருப்புப் பொட்டினை எடுத்துக் கவனமாக நெற்றியில் வைத்தாள்.
‘அம்மு… உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இப்படி கண்ணுக்கே தெரியாத மாதிரி சின்னப் பொட்டா வைக்காத. கொஞ்சம் பெரிய பொட்டு வைன்னு!’ என்று அதே குரல் மீண்டும் ஒலித்தது.
கண்களில் தேங்கிய கண்ணீரை அடக்க முடியாமல் போக, அவளது பார்வை தியோ குட்டியின் மீது சென்றது. அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் மனம் இன்னும் கனத்தது. அதற்கு மேல் எதையும் யோசிக்க விரும்பாதவள் சமையலறைக்குள் சென்றாள்.
கேஸ் ஸ்டவ்வை ஆன் செய்து, பாலை அடுப்பில் வைத்தாள்.அப்போது…’அம்மு… ஸ்ட்ராங்கா எனக்கு ஒரு பிளாக் டீ போடேன்’ என்று மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது. அவளது கை தானாகவே அடுப்பை ஆஃப் செய்தது.
“வீட்டை பூட்டிக்கோ… நா போறேன்,” என்று தாயிடம் சொல்லிவிட்டு, ஏற்கனவே தயாராக இருந்த கூடை ஒன்றை எடுத்தாள்.
கதவின் தாழ்ப்பாளைத் திறந்து வெளியே செல்ல முயன்றபோது, “எத்தனை நாள் தான் நீ இப்படியே இருக்கப் போறடி?” என்று கீதாவின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.
திரும்பிப் பார்த்தாள் நேகா. கீதாவின் முகத்தில் கோபத்தைவிட கவலையே அதிகமாக இருந்தது.
“காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா? நா கொஞ்ச நேரம் நிம்மதியா இருந்தா உனக்குப் பொறுக்காதே! என் வாழ்க்கையைப் பார்க்க எனக்குத் தெரியும்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது மா? மறுபடி மறுபடி அதைப் பத்தியே பேசி என்னைக் கடுப்பேத்தாம தூங்கு”
அதற்குமேல் தாயின் முகத்தைப் பார்க்க மனமில்லாதவள், கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றுவிட்டாள்.
கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைச் சேலை முனையால் மெதுவாகத் துடைத்துக்கொண்டார் கீதா.
வீட்டைத் தாண்டி சாலையில் நடக்கத் தொடங்கினாள் நேகா.
சற்று தூரத்தில் ‘வேல்முருகன் டீஸ்டால்’ என்ற போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. அதிகாலை நேரமாக இருந்தாலும், அந்தச் சிறிய டீக்கடை பம்பரமாய் இயங்கிக்கொண்டிருந்தது.
நேகா உள்ளே நுழைந்ததும், அவளைப் பார்த்த டீக்கடை உரிமையாளர் எதுவும் கேட்காமல் செய்தித்தாள் ஒன்றை எடுத்தார். அதன் மேல் வாழை இலையை வைத்து, பாத்திரத்தில் இருந்த உப்புமாவை அள்ளி வைத்து பார்சல் செய்து அவளிடம் கொடுத்தார்.
அதைத் தன் கூடைக்குள் திணித்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறினாள்.
மெயின் ரோட்டில் சில நிமிடங்கள் நடந்தவளின் கண்களுக்கு, தூரத்தில் பச்சைப் பசேல் என விரிந்திருந்த வயல்வெளிகள் தென்படத் தொடங்கின.
அதிகாலைப் பனிக்காற்று அவளது உடலைச் சில்லென்று தழுவிச் சென்றது. அதைப் பொருட்படுத்தாமல், வயல்வெளி தொடங்கிய வரப்பில் அலைபேசியின் வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு நடக்கத் தொடங்கினாள்.
சுற்றிலும் பூச்சிகளின் ரீங்காரம். அந்த அதிகாலை நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒலித்துக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் தனக்குச் சொந்தமான வயலை அடைந்தாள்.
சுற்றிலும் பூக்கள் நிறைந்திருந்தன. இரண்டு தட்டுகளில் சம்பங்கி நடப்பட்டிருந்தது. மற்ற தட்டுகளில் நந்திவட்டாம்பூ பூத்துக்குலுங்கியது.
(வயல்வெளிப் பகுதியைக் கிடைமட்டக் கோடுகளாகப் பிரித்து இருப்பர். அதனைத் ‘தட்டு’ என்பர்.)
கூடையில் இருந்து சிறிய ஹெட்லைட் பேண்ட் ஒன்றை எடுத்துத் தலையில் அணிந்துகொண்டு, பூப்பறிக்கத் தொடங்கினாள்.
அவள் தலையில் அணிந்திருந்த ஹெட்லைட்டின் வெளிச்சத்தைக் கண்டதும், பக்கத்து வயலில் நின்றிருந்த வள்ளி அக்கா, வயலோரம் இருந்த வரப்பிற்கு நேகாவிடம் பேசுவதற்காக வந்தார்.
“என்ன புள்ள, இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட? உன் அம்மையை கூட்டிட்டு வரலையா?” என்று இதுவரை வயல்வெளியை ஆக்கிரமித்திருந்த நிசப்தத்தை உடைத்துக்கொண்டு அந்தக் குரல் ஒலித்தது.
“அதுவாக்கா… மேலுக்கு சோவமில்லைனு சொல்லுச்சு. அதுதான்கா, பிள்ளை கூட இருங்க, வரவேண்டாம்னு சொல்லிட்டேன் கா. நமக்கு கிடைக்கிற நாலுகாசும் ஆஸ்பத்திரி செலவுக்கே சரியா போகுதுக்கா,” என்ற நேகாவின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது. சொல்லி முடித்தவள் பெருமூச்சு விட்டாள்.
“மேலுக்கு சோவமில்லைனா, நம்ம பக்கத்து ஊரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரில போய் ஒருதடவை காட்டிட்டு வா புள்ள. நேத்து கூட நம்ம கருப்பசாமி அண்ணன் அங்கதான் போயிட்டு வந்துட்டு, ஸ்கேன் எல்லாம் எடுத்து, முன்னமாறி இல்லாம இப்ப நல்லா பார்க்கதா சொன்னாரு. கூட்டிட்டுப் போயிட்டு வா. லேசா இருக்கும் போதே பார்த்திடு புள்ள. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிட்டுனா… உனக்குனு யாரு இருக்கா சொல்லு,” என்ற வள்ளி அக்காவின் வார்த்தைகளில் நேகா மீதிருந்த அக்கறை அப்பட்டமாகத் தெரிந்தது.
“அதுதான்கா… நானும் யோசிச்சேன். இன்னைக்கு பூ விலை என்னனு பார்த்துட்டுப் போகணும்”
“என்ன புள்ள, விலையைப் பார்த்துட்டுப் போகணும்னு சொல்லிட்டு இருக்க? ஒழுங்கா காலை மொற உன் அம்மையை கூட்டிட்டுப் போயிட்டு வர. சரியா?” என்று அதட்டுவது போலச் சொன்னாலும், அந்தக் குரலுக்குள் இருந்தது அக்கறை.
“சரிக்கா,” என்றுவிட்டு நேகா மீண்டும் பூப்பறிக்கத் தொடங்கினாள். வள்ளியும் தன் வேலையைத் தொடரச் சென்றுவிட்டாள்.
ஆனால் வள்ளி அக்காவின் கடைசி வார்த்தைகள் மட்டும் அவளது மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தன.
‘உனக்குனு யாரு இருக்கா… சொல்லு.’ அந்த வார்த்தை ஏதோ ஓர் இடத்தில் அவளை அசைத்துப் பார்த்தது. அடுத்த நொடி, அவளது கண்முன்னே தியோவின் குட்டி உருவம் தோன்றியது.
இதுவரை முகத்தில் படிந்திருந்த கவலை மறைந்து, அவளது இதழோரத்தில் மெல்லிய புன்னகை ஒன்று அரும்பியது.
சிறிது நேரத்தில் சம்பங்கியைப் பறித்து முடித்திருந்தாள். வயிறும் பசிக்கத் தொடங்கியிருந்தது.
பக்கத்து வயலில் அதிகாலையிலேயே தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதில் கைகளைக் கழுவிவிட்டு வந்தவள், டீக்கடையில் வாங்கியிருந்த உப்புமா பொட்டலத்தை அவிழ்த்து வைத்து உண்ணத் தொடங்கினாள்.
தூரத்தில், வாழை மரங்களுக்கு நடுவே மறைந்திருந்த ஓர் உருவம், நேகாவையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது.
தன்னை யாரோ பார்க்கும் உணர்வு ஏற்பட, சுற்றுமுற்றும் கண்களால் துலாவினாள். இன்னும் முழுதாக விடியாத இருட்டிற்குள் ஒன்றும் தெரியாததால், மீண்டும் உப்புமாவை உண்ணத் தொடங்கினாள்.
உண்டு முடித்தவள், அருகில் வரப்பிற்கு நடுவே சிறிய வாய்க்காலில் போய்க்கொண்டிருந்த தண்ணீரால் தன் கைகளை கழுவினாள்.
பின்,கூடையில் இருந்த கையுறை ஒன்றை எடுத்து அணிந்தவள், மெல்லமாக எழுந்து நந்திவட்டாம்பூக்களைப் பறிக்கத் தொடங்கினாள்.
ஒவ்வொரு மொட்டாகப் பார்த்துக் கிள்ளி, சற்று மெதுவாகவே பறித்தாள். நந்திவட்டாம்பூக்களின் பால் என்னதான் கையுறை அணிந்தாலும், அதன் தரம் மலிவானதால் அதனைத் தாண்டியும் ஓரிரு தடவை பால் பட்டு, கொப்புளங்களாக மாறியிருந்தன. அதனால் அதனைப் பறிப்பதில் சற்று நிதானம் காட்டவே செய்தாள்.
அதிகாலை ஏழு மணி.
சூரியன் பளிச்சென்று தன் ஒளிக்கதிர்களை நேகாவின் மீது வீசிக்கொண்டிருந்தான்.
ஒருவழியாக பூவைப் பறித்து முடித்தவள், இதுவரை பறித்த பூக்களை எல்லாம் சாக்கு ஒன்றில் கட்டினாள். அவள் வேலையை முடிக்கச் சரியாக அவளின் முன் வந்து நின்றாள் வள்ளி.
“என்ன புள்ள, இன்னைக்கு பூ குறையத்தான் போல… சீக்கிரமா எடுத்து முடிச்சிட்ட”
“ஆமாக்கா… இந்த ஒருவாரமா பூவே இல்லை…” என்றவளின் முகத்தில் கவலை படிந்திருந்தது.
“டி.ஏ.பி. வாங்கிப் போட்டுவிடு புள்ள. வெறும் தண்ணி மட்டும் விட்டா எங்கிருந்து புள்ள பூ வரும்?”
“உரம் போடுறதவிட களைவெட்ட ஆள்கூலி கொடுத்து முடியலக்கா… அதுதான் பெரும்பாடா இருக்கு,” என்று அவளது உதடுகள் உச்சரித்தாலும், உரம் வாங்குவதற்குத் தன்னிடம் காசு இல்லை என்ற நிதர்சனம் அவளுக்குப் புரிந்தே இருந்தது.
“அதுவும் சரிதான் புள்ள…” என்றவர், அவளது முன்னால் ஒரு வாழைச்சீப்பை நீட்டினார்.
“என்னக்கா, இதெல்லாம் வேண்டாம்,” என்று தன்மையாக மறுத்தாள்.
“அட என்ன புள்ள நீ… எதக் கொடுத்தாலும் வேண்டாம், வேண்டாங்கிறது. இந்த அக்கா மேல பாசம் இல்லை உனக்கு, அப்படித்தான?”
“அப்படிலாம் இல்லைக்கா…” என்றவள், என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தாள்.
அவளின் அமைதியையே சம்மதமாக எடுத்துக்கொண்டவர், நேகாவின் கைகளில் அதனைத் திணித்தார்.
“அக்கா, சாக்கு இங்க இருக்கு…” என்று அதன் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தினாள்.
“சரிப்புள்ள… நா மாமாவைக் கொண்டுவந்து தரச் சொல்றேன். நீ வீட்டுக்குப் போ,” என்றார்.
உடனே, தன் கூடையை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
மீண்டும் யாரோ தன்னை கண்காணிப்பது போலிருக்க, அந்த இடத்திலேயே நின்று சுற்றுமுற்றும் தேடினாள். யாருமில்லை என்றதும் மீண்டும் நடக்கத் தொடங்கினாள்.
தூரத்திலிருந்து இரு கண்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தன.