மதுமிதா தினமும் வீட்டில் அனு மேடத்தைப் பற்றியே அடுக்கடுக்காகப் பேசிக் கொண்டிருப்பாள்.
அதே நேரத்தில், வீட்டில் இருக்கும் சந்தோஷ் அவளை வம்பு இழுக்கும் பொருட்டு, “அக்கா… அக்கா…” என்று ஓய்வில்லாமல் கூப்பிட்டு அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான்.
மதுவோ, “ஏய் லூசு, பேசாம இரு!” என்று அவனை அதட்டிக்கொண்டே, மீண்டும் தன் மேடத்தைப் பற்றிய கதையைத் தொடர்வாள்.
அப்படியே மூன்று மாத காலம் சிறகடித்துப் பறந்தது. மது தன் முதல் பருவத் தேர்வை முடித்து, இரண்டாம் பருவத்திற்குள் அடியெடுத்து வைத்திருந்தாள். பள்ளியில் அவளது மதிப்பெண் சான்றிதழைப் (Progress Card) பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தவள், தாய் மீனாவிடம் அதைக் கொடுத்தாள். தரவரிசையில் ‘A1’ கிரேடு பெற்றிருந்தாள்.
மீனா புன்னகையோடு, “என் செல்லக்குட்டி ஃபர்ஸ்ட் வருவான்னு எனக்குத் தெரியுமே!” என்றாள் பெருமிதத்துடன்.
”அம்மா… எங்க கிளாஸ்ல மொத்தமே 20 ஸ்டூடென்ட்ஸ் தான். அதுல மூணு பேருக்கு A1 கிரேடு கொடுத்திருக்காங்க. அந்த A1-ல நான் தேர்ட் பிளேஸ். ஃபர்ஸ்ட் பிளேஸ் அனுஜா…” என்று சோகமாக இழுத்தாள் மது.
அருகில் ஆனந்தனும் சந்தோஷும் அமர்ந்திருந்தனர். ஆனந்தன் சந்தோஷிடம், “சந்து, பாப்பாவுக்கு ‘ப்ரூம்ம்ம்…’ சொல்லுடா!” எனத் தூண்டிவிட,
சந்தோஷோ வம்பு செய்யும் விதமாக, “அக்கா… ப்ரூம்…” என்று சொல்லிக்கொண்டே எச்சில் வடித்தான்.
கடுப்பான மது, “சின்ன லூசைத் தெளிய விடாம பெரிய லூசு பார்த்துக்கிட்டு இருக்கு!” என்றாள் எரிச்சலுடன்.
”A1 கிரேடு வாங்குனதுக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்றது நீ… இதுல எங்க ரெண்டு பேரையும் லூசுன்னு சொல்றியா?” என்று ஆனந்தன் கேட்க,
”அந்த அனுஜா, அனு மேடம்கிட்ட டியூஷன் போறா… அதான் அவ ஃபர்ஸ்ட் பிளேஸ் வாங்கியிருக்கா!” என்றாள் மது சிணுங்கலாக.
”அப்போ அனு மேடம் சீட்டிங் பண்றாங்களா? தன்கிட்ட டியூஷன் படிக்கிற பிள்ளைகளுக்குத் தான் ஃபர்ஸ்ட் பிளேஸ் கொடுப்பாங்களா பாப்பா?” என்று ஆனந்தன் மீண்டும் வம்புக்கு இழுத்தான்.
”லூசு… லூசு! அவங்க ரொம்ப நல்லா சொல்லிக் கொடுப்பாங்க. நான் எப்போ அவங்க டியூஷன் படிக்கிறவங்களுக்குத் தான் ஹையஸ்ட் மார்க் போடுவாங்கன்னு சொன்னேன்?” என்று கைகளை ஆட்டிப் படபடத்தாள் மது.
உடனே கனகம், “இந்த வாயாடி கழுதை… ஒன்றுக்கு நூறு தடவை ‘லூசு லூசு’ன்னு என் பிள்ளைகளைத் திட்டிக்கிட்டே இருக்கா பாரு!” என்று சலித்துக் கொண்டார்.
ஆனந்தன் இடைமறித்து, “அவளைச் சொல்லி என்ன பண்ண? அவளுக்கு டிரெய்னிங் கொடுத்தாளே உன் மகள் மீனா… அவளைச் சொல்லணும்! அவளும் நம்ம சந்தோஷை இத்தனை நாளா பேர் சொல்லி கூப்பிட்டதே கிடையாது, ‘லூசு’ன்னு தான் கூப்பிடுவா. அவ மகளும் அம்மாவைப் பார்த்து கத்துக்கிட்ட பாடத்தை அப்படியே ஒப்பிக்கிறா!” என்றான்.
அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த மீனா திடீரென வெடித்தாள். “அங்கே இருந்தா மாமியார்க்காரி தொல்லை பண்றாங்க… இங்கே வந்தா நீங்க குடும்பத்தோட சேர்ந்து டார்ச்சர் பண்றீங்க! முதல்ல அவர்கிட்ட சொல்லி எனக்குச் சொந்தமா ஒரு வீடு வாங்கித் தரச் சொல்லணும்!” என்று பொரிந்து தள்ளிவிட்டு, மதுவின் கையைப் பிடித்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.
ஆனந்தன் கனகத்தைப் பார்த்து, “இப்ப வரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது… திடீர்னு இப்படி கோபப்பட்டுட்டாளே?” என்று போலி அனுதாபத்துடன் சொல்லிவிட்டு, “சந்து, மீனுக்கு ஒரு ‘ப்ரூம்’ சொல்லுடா!” என இருவருமாகச் சேர்ந்து மீண்டும் வண்டி ஓட்டும் சத்தத்தை எழுப்பிச் சிரித்தார்கள்.
மற்றொரு புறம், அனுஷாவின் வீட்டில் கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியது அவளுக்குப் பெரும் மனநிறைவைத் தந்திருந்தது. அதனால் வீட்டில் உள்ள அனைவரிடமும் இயல்பாகவும் அன்பாகவும் பேசிக் கொண்டிருந்தாள்.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.
அனுஷாவின் பெரியப்பா சுந்தரமும், பெரியம்மா வடிவும் அவளது குடும்பத்தைப் பார்க்க வந்திருந்தார்கள். இருவரும் அனுஷாவின் தந்தை வழி உறவினர்கள்; சுந்தரம், சிவத்தின் உடன்பிறந்த அண்ணன்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே வடிவு அழுதபடி அனுஷாவைத் தழுவிக் கொண்டாள். “இப்படிச் சின்ன வயசுல என் பிள்ளையைப் பரிதவிக்க விட்டுட்டுப் போயிட்டானே பாவி மகன்!” என்று அனுஷாவின் மறைந்த கணவன் வருணை வசைபாடினாள்.
அனுஷா அந்த நொடியே கலங்கிப் போனாள். அழுகையினூடே தன்னைக் கட்டிப்பிடித்திருந்த வடிவிற்கு ஆறுதல் சொன்னாள். “அவர் எங்கேயும் போகலை பெரியம்மா… என்னோடதான் இருக்காரு. நீங்க வருத்தப்படாதீங்க… அவர் இறந்துட்டதா நான் நினைக்கவே இல்லை. ப்ளீஸ்மா, அழாதீங்க…” என்று தேற்றினாள்.
சுந்தரம், “வாழ வேண்டிய பிள்ளையை இப்படிப் பார்க்க வச்சிட்டானே அந்தக்கடவுள்!” என்று வருத்தம் தெரிவித்துவிட்டு, “அனுமா… இந்த மாசம் தானே மாப்பிள்ளையோட திதி வருது?” என்று பொறுப்பாகக் கேட்டார்.
அனுஷா தலையை மட்டும் அசைத்துப் பதில் அளித்தாள். வீட்டிலிருந்த அனுஷாவின் அம்மா அமுதாவும், பெரியம்மா வனஜாவும் பற்களைக் கடித்துக்கொண்டு பொறுமை காத்தார்கள்.
சுந்தரம் தொடர்ந்து, “மாப்பிள்ளைக்குத் திதி கொடுக்க நம்ம ஊருக்கு வர்றீங்களா, இல்ல இங்க வச்சுப் பண்ணிக்கப் போறீங்களா? நம்ம ஊர்ல பண்றதா இருந்தா வீட்டை வெள்ளை அடிக்கணும் இல்லையா?” என்று பொறுப்பான பெரியப்பாவாகக் கேட்டுக்கொண்டிருக்க,
வனஜா பொறுமையிழந்து பேசத் தொடங்கினாள்.
”நம்ம வீட்ல இதைச் செய்யக் கூடாது மாமா…”—மனமில்லாமல் ‘மாமா’ என்று அழைத்தாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்—”மருமகனோட வீட்ல தான் செய்யணும். அவங்க கூப்பிட்டு விட்டா நம்ம போய் கூட நின்னுட்டு வரணும், அவ்வளவுதான். நமக்கு வேற வேலையில்லை” என்று வெட்டொன்று துண்டு இரண்டாகச் சொன்னாள்.
வடிவு, “அதைத்தான் நானும் இவர்கிட்ட சொன்னேன், கேட்க மாட்டேங்கிறாரு.
மருமகன் வீட்ல இருந்து கூப்பிட்டு சொன்னாங்களாமா?” என்று அனுஷாவிடம் திரும்பிக் கேட்டாள்.
”இல்லைம்மா… கூப்பிடும்போது நான் உங்களுக்குத் தகவல் சொல்றேன்” என்றாள் அனுஷா அமைதியாக.
”சரிம்மா… அப்பா ஊருக்குப் போயிட்டு உனக்குக் கூப்பிட்டுக் கேட்டுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, சுந்தரம் மனைவியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
அவர்கள் சென்ற மறுநொடி, அமுதா ஆத்திரம் தாங்காமல் வெடித்தாள். “புருஷனைப் பறிகொடுத்த மகளைப் பாக்குறதுக்கு பஸ் பிடிச்சு வந்த கழுதைங்க, ஒரு மிட்டாய் கூட வாங்கிட்டு வராம துக்கம் விசாரிக்க வந்திருக்குதுங்க! இதுங்களோட தொல்லை தாங்காமல் தானே கடலளவு இருக்குற வீட்டை விட்டுப் போட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தோம்? மோப்பம் பிடிச்சு இங்கேயும் வந்துடுச்சுங்க கடைஜென்மங்கள்!” என்று பொரிந்து தள்ளினாள்.
அனுஷா குழப்பத்துடன், “அப்போ… பெரியம்மாவுக்கு உடம்புக்கு முடியலைன்னு நாம போய் கூட இருந்து பார்த்துக்கணும்னு சொன்னதெல்லாம் பொய் தானா அம்மா?” என்று கேட்டாள்.
வனஜா உடனடியாக, “எனக்கு உடம்புக்கு முடியாதது உண்மைதான் அனுமா… உன்னோட அண்ணன் கல்யாணம் முடிச்சு என்னைத் தனியா விட்டுட்டுப் போனதும் உண்மைதான். அதே நேரத்துல உனக்கும் ஒரு மாறுதல் அவசியம்கிறதுனால தான் உங்களை இங்கே வரச் சொன்னேன். ஆனா உன்னோட பெரியப்பா மனசாட்சியே இல்லாம, அவர் பெத்த பொண்ணு சந்தோஷமா இருக்கும்போது, தம்பி பொண்ணு இப்படி ஆயிடுச்சேங்கிற எந்த எண்ணமும் இல்லாம உன்னை அழ வச்சுப் பார்க்கணும்னே இவ்வளவு தூரம் வந்திருக்காரு! அது தப்புதான்மா… அதை அம்மா சொல்லி வருத்தப்படுறா, அவளோட ஆதங்கம் தப்புன்னு சொல்றியா அனு?” என்று கேட்டாள்.
அனுஷா, “நீங்க என்ன திட்டம் போட்டாலும் என் மனசு என்னோட வருணனுக்கு மட்டும்தான் சொந்தம். நான் ஒத்துழைச்சா தானே உங்களோட திட்டமெல்லாம் பலிக்கப் போகுது? என்னமோ செய்யுங்க… என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு எதுவும் புரியலை. என்னோட வருண் இந்நேரம் இருந்திருந்தா இப்படி ஒரு சூழ்நிலையை நான் சந்திச்சிருக்கவே மாட்டேன்!” என்று கணவனை நினைத்து மீண்டும் அழத் தொடங்கினாள்.
’பால் பொங்கி வரும் வேளையில் பானையை உடைத்துவிடக் கூடாது’ என்பதை உணர்ந்து, அமுதா அனுஷாவின் அருகில் அமர்ந்து அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துத் தேற்றினாள்.
அதேநேரத்தில் வெளியே சென்றிருந்த சிவம் வீட்டிற்குள் வர, மூன்று பெண்களும் அழுதுகொண்டு சுவரில் சாய்ந்திருப்பதைப் பார்த்தார். “என்ன அமுதா ஆச்சு? ஏன் எல்லாரும் இப்படிச் சோகமா உக்காந்திருக்கீங்க?” என்று கேட்டார்.
அமுதா, “நாம சிரிச்சுப் பேசி இருந்தா தான் கடவுளுக்குப் பொறுக்காதே! உங்க அண்ணனை அருப்புக்கோட்டையில இருந்து அனுப்பி வச்சுட்டாரு… வந்தவரு எல்லாரையும் அழ வச்சுட்டுப் போயிட்டாரு!” என்றாள்.
சிவம் பதற்றத்துடன், “அவன் என்ன சொன்னான்? எதுக்காக எல்லாரும் அழுறீங்க?” என்றார்.
வனஜா, “கொழுந்தனாரே… உங்க மருமகனுக்கு வருஷத் திதி இந்த மாசம் வருதே, எப்ப செய்யப் போறீங்க, எங்க செய்யப் போறீங்கன்னு கேட்டுட்டு வந்துட்டாரு!” என்று கூறினாள்.
சிவம் மனதிற்குள், ‘ச்சை… சனியன் பிடிச்சவன், அதை என்கிட்ட போன்ல கேட்டிருக்கலாமே!’ என்று நினைத்துக்கொண்டார். “அவனுக்கு இந்த மாதிரி யோசனை எல்லாம் எப்படித் தோணுது? என்னோட மதினி தான் அவனைத் தூண்டிவிட்டு இருப்பா!” என்று உரக்கச் சொன்னார்.
அமுதா, “உங்க அண்ணனும் கையைக் கொடுத்தா கடிக்கத் தெரியாத சின்னப் பாப்பா… சும்மா இருங்க!” என்று ஆவேசமாகச் சொல்லிவிட்டு, அனுவை நோக்கித் திரும்பினாள். “மாமியார் வீட்ல இருந்து போன் போட்டு கூப்பிட்டா ஒரு எட்டு போயிட்டு வரப் போறா… அதை உங்க பெரியப்பா வந்து சொல்லித் தான் போகணும்னு அவசியமில்லை! எப்படினாலும் தாலி கட்டுனவனுக்குச் செய்ய வேண்டிய கடமைனு ஒன்னு இருக்குல்ல, அதை செஞ்சுட்டு வந்துடுவா!” என்று அவளைத் தேற்றும் வழி தெரியாமல் சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தாள்.
வனஜா, “அமுதா, பொறுமையா பேசுடி! நாம என்னமோ திட்டம் தீட்டுறோம், ஆனா அவர் ரொம்ப நல்லவருனு அனுஷா நினைச்சுகிட்டு இருக்கா. அதை நிரூபிக்கிற மாதிரி நடந்துக்காத!” என்று அமுதாவிடம் எச்சரித்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.
சிவத்திற்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. “அனுமா… அப்பாவுக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுடா…” என்று கூறி அவளது கவனத்தைத் திசை திருப்ப முயன்றார்.