Stories that touch hearts

Home  /  13. நிஷா ராஜன் (காலம் கடந்த காதல் அலைகள்)  /  Chapter 2

CHAPTER 2

அத்தியாயம் 1

By nisharajan · October 2, 2026

0

எழுத்தாளர்: நிஷா ராஜன்

தலைப்பு : காலம் கடந்த காதல் அலைகள்

அத்தியாயம்: 1

சுவாசக் காற்று உறைந்து போக, உடலின் உஷ்ணம் தளர்ந்து, குளிர் தொற்றிக் கொள்ள அடுத்த கணம் என்ன நிகழும் என்று தெரியாத ஒரு இடம்.

வெண்ணிற தேவதை அவள் பால் நிற மேகங்களை தன் ஆடையாக போர்த்தியது போல் அந்த பனி படர்ந்த காஷ்மீர் எல்லை செல்லும் பாதை பனியில் மூடியிருக்க, அதில் ஒரு சிறு கரும்புள்ளி போல் ஒரு உருவம் பனி போன்ற ஆடையின் மேல் நீந்தி செல்வது போல் பனிக்கு நடுவே நகர்ந்து வந்து கொண்டிருந்தான் ஒருவன்.

அவனின் உடல் முழுவதும் கடினமான உடைகளால் முற்றிலுமாக மூடப்பட்டு இருக்க, அவன் கண்கள் கூட தெரியாத அளவிற்கு அவன் பாதுகாப்பாக வருகிறானோ? இல்லையோ?

அவன் தோளில் மாட்ட பட்டிருந்த அந்த கனமான பைகள் அவனை விட மிகவும் பாதுகாப்பாக அவன் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

அவனின் பாதங்கள் அந்த வெண்ணிற பனி மலையை தன் பாதங்களால் துளவிக் கொண்டு நடக்க முடியாமல் அங்கே ஏற்பட்டு இருந்த பனிப் புயலையும் தாண்டி அடிமேல் அடிவைத்து அவன் முன்னேறி அங்கே பனியால் மூடப்பட்டு இந்திய மூவர்ண கொடி பறக்கும் இடத்தை பார்த்தான்.

அதே சமயம் “ஆதித்ய வர்மன் எங்கே?” என்று இராணுவ அஞ்சல் அதிகாரி தபால்களை பிரித்தெடுக்கும் இடத்தில் இருந்து கேட்க, “சார் ஆதித்ய வர்மன், பார்டர் கேம்ப்ல போஸ்டல் டெலிவரி செய்ய போயிருக்கார்.” என்று மற்றொரு உடன் வேலை செய்யும் சலீம் சொல்ல,

அப்போது வெளியில் கேட்ட ஹாரன் சவுண்ட் டெலிவிரி செய்ய சென்ற வாகனம் எப்படி உடனே வந்தது என்பது போல் அனைவரும் பார்க்க, உள்ளே நுழைந்த ரோஜர் “பனி புயலால் சாலை முழுவதும் அடைக்கப்பட்டு இருக்கு, ஆதித்ய வர்மன் முக்கியமான பைகளை மட்டும் எடுத்துட்டு போயிருக்கார்” என்ற தகவலை சொன்னவுடன் அங்கிருந்தவர்கள் சற்று திகைத்து போனார்கள்.

“சலீம் மறுபடியும் புயலுக்கான எச்சரிக்கை வந்திருக்கு. இந்த சமயத்துல…! ரோஜர் அவர் எப்போ போனார்” என்று அதிகாரி கேட்க, “விடியல் காலை கிளம்பியது.” என்று சொன்னவனின் நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது.

ஆனால் அதை அவர்களின் கண்களில் துளி அளவும் காட்டிக் கொள்ளவில்லை. சலீம் வெளியில் வீசிக் கொண்டிருந்த குளிர் காற்றை பார்க்க அவன் மனதில் ‘ஆதித்யா பத்திரமா வந்து சேருடா!’ என்ற எண்ணம் வேறுன்றி நின்றது.

அதேசமயம், அவனின் கண்ணில் படாத அளவிற்கு எங்கோ ஓர் மூலையில் அமைந்திருந்த அந்த எல்லை தளத்திற்கு, அடையாளமாக வேகமாக வீசிக் கொண்டிருந்த காற்றில் பனியை அள்ளி தூர வீசியது போல் மூவர்ண கொடி தலை நிமிர்ந்து நின்று அசைந்து நிற்பதை பார்த்தவன் அவன் வந்து கொண்டிருந்த, திசையை தன் கையில் வைத்திருந்த திசைக்காட்டி மூலம் பார்த்து விட்டு, மீண்டும் முன்னேற ஆரம்பித்தான்.

அவனின் காதில் பனிக் காற்றின் சுழல் ஓசை மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

‘எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில் அவசர கடிதங்களை உடனே சேர்த்தே ஆக வேண்டும்’ என்று முழு மூச்சாக எல்லை தளத்தை வந்தடைந்திருந்தான் ஆதித்யா.

அவனை பார்த்த அடுத்த நொடி “ஓய் பள்லே! பள்லே! மெசஞ்சர் வந்துட்டாரு, ஓடி வாங்க, ஓடி வாங்க” என்று ஒரு குரல்.

அவனின் உடலும் பாதங்களும் களைத்திருந்தாலும், அங்கிருந்தவர்களின் சந்தோஷ கூச்சல், அவனுக்குள் ஒரு புத்துணர்வையும் உத்வேகத்தையும் தந்தது போல் இருந்தது.

அவனுடைய வருகைக்காகவே காத்திருந்தவர்கள் போல, அனைவருக்கும் கூச்சலும் சந்தோசமுமாக அவனை வரவேற்க, அந்த தளர் நடையிலும் மகிழ்ச்சியுடன் அவனுடைய முகத்தில் சுற்றியிருந்த முக கவசங்களை அவிழ்த்தான்.

அவனுடைய உடல் மாநிறத்தில் இருந்தாலும் அதுவரை அவன் அணிந்து வந்த உடையின் இறுக்கம் அவனின் முகத்தில் சிவந்த வரித்தடங்களாக தெரிந்தது.

அந்த வலிகள் எதையும் பொருட்படுத்தாத ஆதித்யா தன் கொண்டு வந்திருந்த அந்தப் பையை பிரித்தான். மிகவும் பத்திரமாக சீல் வைக்கப்பட்டு இருந்த அந்த பொக்கிஷங்களை கையில் எடுத்தவன் உரியவர்களிடம் ஒப்படைத்தான்.

“சுக்ரியா! பாய்சாப்! ஆதித்ய வர்மன் தண்ணியாவாத்” என்று சந்தோஷத்தில் அவனை கட்டி அணைத்துக் கொண்டு பல குரல்கள் .

அவரவரின் கடிதத்தையும் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் பிரித்துப் பார்க்க, அவர்களின் முகங்களை பார்த்து சந்தோஷப் பட்டவன். அவனுக்குள் இருந்த காயங்களை நினைத்து சிரித்தான்.

“யே எனக்கு பொண்ணு பிறந்திருக்கு,” என்று சந்தோஷத்தில் ஒருவன் சத்தமிட்டு சிரிக்க, அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல, அவனுக்கு வந்த பார்சலில் ஒரு டப்பாவில் மோதிசூர் லட்டு இருந்தது.

“ஏ வாங்க எல்லாம் எடுத்துக்கோங்க,” என்று அவன் எல்லோருக்கும் கொடுக்க நினைக்க, அவனின் சந்தோஷத்தை பார்த்த ஆதித்யாவின் கண்கள் கரைந்தது.

“ஆதித்யா உங்களுக்கு தான் முதல்ல, நான் அப்பா ஆகிட்டேன்” என்று அவனைக் கட்டிக் கொண்டு சிரித்தான்.

ஒவ்வொருவரின் மனநிலையையும் அவர்களின் முகத்தில் படித்தவன் போல் சிரித்தான் ஆதித்யா.

அங்கிருந்தவர்களின் சந்தோஷமான முகங்கள் அவனின் இதழ் புன்னகையில் கடந்த கால சோகங்களை சில கணங்கள் மறக்கச் செய்தது.

“பெண் பிறந்துட்டா!” என்று சொன்ன வார்த்தையில் அவனின் மனக் கண்முன்னே வந்து சிரித்தது அந்த குழந்தை முகம்.

ஆதித்ய வர்மனை பார்த்து “அப்பா!” என்று சொல்வது போல் அவனுக்கு தோன்ற, அவனுடைய கண்ணீர் துளிகளும் அந்த பனிக்காற்றில் உதிர்ந்து விழுந்தது.

அப்போது அங்கே இருந்து தலைமை அதிகாரி வருவதை பார்த்த ஆதித்யா எழுந்து அவருக்கு சல்யூட் அடித்தான். அதைப்பார்த்த அவரும் அவனுக்கு மரியாதை நிமித்தமாக தலையசைக்க, மிகவும் பத்திரமாக கொண்டு வரப்பட்ட சிவப்பு மையால் சீல் வைக்கப்பட்ட அந்த கடிதத்தை கொடுத்தான்.

“ஓகே ஆதித்யா! டேக் ரெஸ்ட், பிறகு போகலாம். நீங்க வந்ததை ஃபீல்ட் குவாட்ரசில் இன்பார்ம் பண்ணிறோம்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அப்போது தான் அவனுக்கு கால் வலி நன்றாக தெரிய ஆரம்பித்தது. அங்கிருந்த கூடாரத்தின் படுக்கையில் மெதுவாக கண்ணயர்ந்தான்.

“அப்பா, எப்போ வருவீங்க.” என்று மழலை அதன் மொழியில் பேசி பழக, உறக்கத்திலும் அவன் முகம் மெல்ல சிரித்தது.

“யாழி அப்பா சீக்கிரம் வந்திடுவேன் டா” என்று கண்ணீருடன் விடைபெற்ற தருணம் இன்னும் அவனின் மனதில் வந்து போனது.

“அப்பா கவலை படாதீங்க. நான் யாழியை பத்திரமாப் பாத்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க.” என்று சொன்ன நவிலனை பார்த்து ஆதித்யாவின் கண்களுக்கு வயதில் முதிர்ந்த சிறு பிள்ளையாக கண்முன் தோன்றினான் அந்த சிறு பாலகன் நவிலன்.

யாழியை தூக்கிக்கொண்டு நின்றிருந்த நவிலனின் அருகில் இருந்த வெறுமை அவனின் இதயத்தை பாரமாக்கியது.

அங்கு நின்றிருந்த தன் தாயையும் தந்தையையும் பார்த்த ஆதித்யா! அவர்கள் இருவரையும் பார்த்து “உங்கள நம்பி என் பிள்ளைகளை இங்க விட்டுட்டு போறேன். இவங்க ரெண்டு பேரையுமாவது பத்திரமா பாத்துக்கோங்க” என்று சொன்ன அவன், அவர்களின் முகத்தை பாராமல் இராணுவத்தின் உடையில் அவனுடைய தோளில் பைகளை சுமர்ந்து கொண்டு அவனுடைய மன பாரங்கள் அங்கே நின்றிருக்க, விட்டு வர முடியாமல் வேகமாக அவனின் கிராமத்தில் இருந்து வெளியேறினான்.

அந்த சமயம், “எப் பி ஓ காலிங்! எப் பி ஓ காலிங்” என்று அங்கிருந்த வாக்கி டாக்கியில் ஒலி வந்துந்து கொண்டிருக்க, அவனுடைய உறக்கத்தை களைத்திருந்தது அந்த சப்தம்.

“எ பி எஸ் ஆதித்யா வர்மனிற்கு, அவசர தந்தி (டெலிகிராம்). அவரோட ஹோம் டவுனில் (சொந்த ஊரில்) இருந்து வந்திருக்கு, அவர் அங்கே இருக்கிறார் தானே” என்று ஒலியைக் கேட்டு அவனுக்கு பதைபதைப்பானது.

அந்த சமயங்களில் டெலிகிராம் என்பது, அவசர செய்திகளுக்கு மட்டும் தரப்படக் கூடியது. இன்று வந்திருக்கிறது என்றால், ‘யாருக்கு என்ன ஆயிருக்கும்’ என்று அவனுக்குள் பயம் அதிகமானது. ஒரு இராணுவ வீரனாக பனிபுயலையும் தாண்டி வரும் தைரியம் கொண்டவன். அவன் குடும்பம் என்று வந்ததும் குழந்தைப் போல் பதட்டப் பட ஆரம்பித்தான்.

அவனை மறந்து கண்களில் நீர் கசிய, “என்ன மன்னிச்சிடுங்க!” என்ற அவளின் கடைசி வார்த்தை அவனின் காதுகளில் கூட கேட்க முடியாமல் மற்றவர்கள் சொன்னதை கேட்ட அந்த கணம் அவனின் நினைவுகளில் வந்து அவனுடைய பயத்தை இன்னும் அதிகரித்தது.

அவளின் மாசு மருகுறையாத அவளின் சிரித்த முகம் அவளின் மை விழிகள் என்று அவனை கடைசியாக பார்த்த நினைவுகள் அவனுக்குள் அனலாக வந்து அந்த பனியிலும் அவனின் உடலில் வேர்வை துளிகள் மின்னியது.

அப்படியே அவனின் சுயநினைவை மறந்தது போல் அந்த இடத்திலேயே மயக்கமாகி விழுந்திருந்தான்.

“ஓடி வாங்க. ஆதித்யா சார் மயங்கிட்டார்” என்று சத்தமிட மருத்துவ குழு அவனை முழுமையாக சோதனை செய்து விட்டு பயப்பட ஒன்னும் இல்ல. தடவழி சரியானதும் அவரை மெயின் கேம்ப்க்கு அனுப்புங்க” என்று மருத்துவ அதிகாரி சொல்லிவிட, அந்த எல்லையோர கூடாரத்திலே அவனுக்கு தற்காலிக சிகிச்சை தரப் பட்டு, போக்குவரத்துக்கான பாதை சரிசெய்த உடன், அவனை டிரான்ஸ்போர்ட் வேன் மூலமாக அவனுடைய அலுவலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருந்தனர்.

அவனுடைய கடினமான பயமும் அவனுடைய பதட்டத்தில் வந்த மயக்கத்திற்கும் மருத்துவர் தந்திருந்த மருந்தின் வீரியம் அவனை நன்றாக உறங்க வைத்திருந்தது.

சில மணி நேரங்கள் கழித்து—

அவனின் கண்கள் மெதுவாக திறந்தது. எதிரில் நின்றிருந்த சலீமை பார்த்தவன் திகைத்து போனான். “நான் எப்படி இங்கே?” என்று திகைப்புடன் கேட்டான்.

“சார் தடவழி சரியான உடனே அங்க இருந்து வர டிரான்ஸ்போர்ட் வேன்ல கூட்டிட்டு வந்தாங்க” என்று சொன்னவனை பார்த்த ஆதித்யா, “என்ன தந்தி வந்தது” என்று அவசரமாக கேட்டான்.

“அர்ஜெண்ட், கம் ஹோம், எமர்ஜென்சி” என்று வந்திருந்த அந்த தட்டச்சு வார்த்தைகளை அவனிடம் காண்பித்தான்.

“இது எப்போது வந்தது.” என்று கேட்டவனின் கண்கள் கலங்கியது. தொலைபேசி இல்லாத காலகட்டம். ஏதாவது தகவல் என்றால் அவர்களின் கிராமத்தில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்தின் மூலமாக மட்டும் தான் தகவல் பகிர்ந்து கொள்ள முடியும்.

அப்படி இருந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் டிரங்க் கால் செய்த ஆதித்யா அதன் இணைப்புக்கு தாமதம் ஆக, கண் கலங்கியவன். என்ன ஆனது என்று தெரியாமல் அலுவலகத்தில் விடுமுறைக்காக விண்ணப்பித்தவுடன் அவனுக்கு கிடைக்கவும், உடனே அவனுடைய சொந்த ஊருக்கு கிளம்பினான்.

என்ன ஆனது அங்கிருக்கும் யாருக்கும் எந்த ஒரு தீங்கும் ஏற்பட்டிருக்க கூடாது என்ற பதட்டம் அவனுக்குள் தொற்றிக் கொள்ள இரயிலில் ஏறிய அவன் கண்களை மூடினான்.

அவனின் கண்முன்னே தேவதையாக அவள் தோன்றினாள். ‘அவள் ஒன்றும் பெரிய அப்சரஸ் இல்லை. ஆனால் அவள் என் தேவதை மாம்பழ நிறத்தில் பச்சை நிற பார்டர் வைத்த சரிகை சேலையில் அதற்கு எடுப்பாக பச்சை நிற ரவிக்கையும், பூநூல் மஞ்சளில் குளித்து அவளின் கழுத்திற்கு அழகாக, நான் அவளின் நாயகன் என்று எடுத்துக் காட்டா,

அவளின் பளிங்கு கழுத்தில் நான், கட்டிய மாங்கல்யத்தை எடுப்பாக காட்டிட, அவளின் வகுட்டில் குங்குமம் சூடி. நெற்றியில் பொட்டிட்டு, தலை நிறைய மல்லிகை வைத்து பார்க்கவே அவள் எனக்கு என்னுடைய தேவதையாக தோன்றினாள்.

ஆனால் இன்று அவள்…’ என்று அவன் அவளை நினைத்த தருணம், அவளின் இறுதியாக அவனுக்காக காத்திருந்த அந்த நிலை குத்திய பார்வை அவனின் நித்திரையை கலைத்திருந்தது.

பயணம் தொடரும்…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!