ஓம் சரவண பவ
சொர்ணா சந்தனகுமாரின்
வே(மீ)ண்டும் ஒரு காதல்

அத்தியாயம் – 1
“ஹாய்டா! சாரி. ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா? ட்ராஃபிக்னால வந்த காலதாமதம்.” என்று தோழர்களுக்கு கை கொடுத்து தோளில் தட்டி என்று வந்தான் அவன்.
“எப்படியோடா. லேட்டா வர்றதுக்கு ஒரு காரணத்தோட வந்தாலும் வந்துட்டியே. அதுவரைக்கும் நல்லது.” என்றனர் நட்புகள்.
“சர்ரி... பர்த்டே பாய் எங்க?” என இழுக்க,
“ம்… அதுவா, அது பேபி கூட சேர்ந்து ஆட்டம் போடுது. அடுத்த வருஷம் குட்டியா ஒரு பேபியும் சேர்ந்து ஆடாமல் இருந்தா சரிதான்” என்று கிண்டல் அடித்தான் ஒரு நண்பன்.
“இப்ப சொன்ன பாரு ஆயிரத்துல ஒரு வார்த்தைடா ஜவா” என்று சிரித்தான் அவன்.
“ஹேய் எம்எம்! எப்படா வந்த?” ஆர்ப்பாட்டமாக வந்து அவனை அணைத்து விடுவித்தான் ரிச்சர்ட்.
“ஜஸ்ட் டூ மினிட்ஸ்டா அம்பி” என்ற எம்.எம்மை முறைத்த ரிச்சர்ட், தன்னுடன் சேர்ந்து ஆடிய பெண்ணை கையசைத்து அழைத்து, “ஷி இஸ் ஜுலி. மை கேர்ள்ப்ரண்ட் அன்ட் உட்பி” என்றான்.
‘ம்… ஜாடிக்கேத்த மூடிதான்’ என மனதில் நினைத்து, “கங்க்ராட்ஸ்! அன்ட் ஹேப்பி பர்த்டேடா” என்று நண்பனிடம் சொல்லி, ஜுலியிடம் திரும்பி “வாழ்த்துக்கள் சிஸ்டர்” என்றான்.
“தேங்க்ஸ்டா எம்எம்!” என்ற நண்பனின் தோளணைத்து, தான் வாங்கி வந்திருந்த பரிசுப்பொருளை கொடுத்து, ஜுலியின் நன்றியையும் தலையசைத்து புன்னகையுடன் ஏற்று, “எப்படா கல்யாணம்?” என்றான்.
பரிசுப்பொருளுக்கு நன்றி சொல்லி, “இன்னும் சிக்ஸ்த் மன்த் இருக்குடா” என்று ஒரு க்ளாஸை எடுத்து ட்ரிங்க்ஸ் என ரிச்சர்ட் நீட்டியதும்., எம்எம்மின் என்று அழைக்கப்பட்டவனின் முகம் இறுகியது.
“டேய் ரிச்! என்னடா பண்ற? அவன் ட்ரிங்க்ஸ் பண்ணமாட்டான் தெரியும்ல?” என்று அடக்கிய குரலில் ஜவகர் சொன்னான்.
“ஓ… சாரிடா எம்.எம். நான் ஏதோ நியாபகத்துல… திரும்பவும் சாரிடா” என்றான் நண்பனின் முகவாடலைப் பொறுக்க முடியாமல்.
“ஹ்ம்… ஓகேடா” என்றபடி அவனுக்காக ஜவஹர் சொல்லியிருந்த கூல்ட்ரிங்க்ஸ் வர, அதை வேண்டாம் என்று மறுத்து, தான் வைத்திருந்த மூடி கழற்றாத பவண்டோவை திறந்து கிளாஸில் ஊற்றினான்.
அவனை முறைத்த நண்பர்கள், “ஏன்டா இதை விடமாட்டியா? நாங்க மட்டும்தானடா இருக்கோம்” என்றவர்கள் குரலில் வருத்தம் அதிகம் இருந்தது.
“சாரிடா. ஒரு டைம் சூடு பட்டுட்டேனா. யாரையும் நம்பமுடியல” என்றான் ‘நான் இப்படித்தான்’ என்பதுபோல்.
“ப்ச்… யாரோ பண்ணின தப்புக்கு, எங்களுக்குத் தண்டனை கொடுக்கிற மாதிரி இருக்குடா, நீ பண்றது.” என்றனர் சலிப்பாக.
“தண்டனையை அனுபவிச்சனுக்குத் தானடா அதனோட வலி தெரியும். மத்தபடி உங்களை இன்சல்ட் பண்றதுக்காக இல்லடா.” ‘ப்ளீஸ் என்னைப் புரிந்துகொள்ளேன்’ என கண்களால் யாசித்தான்.
“சரி விடு. உன்னைப்பற்றித் தெரிந்தது தான” என்றதும் நண்பர்களுக்கு ஈடாக கூல்ட்ரிங்ஸை மெல்ல உறிஞ்சியபடி இருக்க, அதை அந்த அழகிய இருவிழிகள் முறைத்துப் பார்த்தபடி இருந்தது.
“ஏன்? அவனை இந்த முறை முறைக்கிற எம்எம்? இப்பத்தான் நீ அவனை முதல்முறை பார்க்கிற. பாவம் பையன். முறைச்சே முழியை வெளியே தள்ளிராதே.” என்று கிண்டலாகச் சொன்னான் அவள் நண்பன் கிஷோர்.
“அவன் பாவம்னா, அவள் பாவம் இல்லையா. அவ என்ன தப்பு செஞ்சாள்னு அந்தத் தண்டனை கொடுத்தான் இவன். பாரு எந்தவித உறுத்தலும் இல்லாம பார்ட்டிக்கு வந்து ட்ரிங்க்ஸ் பண்ணிட்டிருக்கான். இவனுக்கு யார் தண்டனை கொடுக்கிறது கிஷோர்?” என்றவள் குரலில் அவ்வளவு கோவம்.
“இத்தனை வருஷம் கழிச்சி உறுத்தலை எதிர்பார்க்கலாமா? அதை கடவுள் பார்த்துக்குவார் எம்எம். நீ ஏன் உன்னை குழப்பிக்கிற? அமைதியா வா போகலாம்.”
“எதை கடவுள் பார்த்துக்குவார் கிஷோர். எல்லா ஆட்டத்தையும் ஆடி முடித்து ஓய்ந்து கிழவனான பிறகு, தண்டனை என்ற பேர்ல கொஞ்சநாள் பெட் ரெஸ்ட் எடுத்துட்டு சாகுவாங்களே. அதுமாதிரியா? அதுக்கு பெயர் தண்டனையா? புல்ஷிட். அது மெடிக்கலி ரெஸ்ட். அப்பவும் தண்டனையை மத்தவங்களுக்கு தான் கொடுக்கிறான். அவனைக் கழுவித் துடைக்க ஒரு துணை இருக்குமே. தண்டனைன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? வாழ்ற வயசுல ஏன்டா இந்த உயிரை வச்சிட்டு இருக்கோம். தப்பு செஞ்சா இந்தளவுக்கு தண்டனை அனுபவிக்கணும்னு தெரிஞ்சிருந்தா, இந்த ஆட்டம் ஆடியிருக்க மாட்டோமேன்னு நினைக்கணும். அது தண்டனை!” என கண்களில் கனலுடன் சொன்னவளை சிறு பயத்துடன் பார்த்தான் கிஷோர்.
“எம்எம் கூல்மா. நீ இந்தளவு கோபப்படுறதுக்கு அவன்மேல தப்பு இல்லன்னு அக்கா சொன்னாங்க. எனக்குக் கிடைத்த தகவல்படி இந்த மாதிரி பார்ட்டிக்கு வர்றதோ, ட்ரிங்க்ஸ் பண்றதோ, முக்கியமா எந்தவித கெட்ட பழக்கமும் இவன்கிட்ட இல்லன்னு கேள்விப்பட்டேன்.” என்றான் கிஷோர்.
“அது நாம சின்னப்பசங்கன்னு அப்படி சொல்லி வச்சிருப்பாங்க.”
‘சே… இவள்கிட்ட இவனைக் காண்பிக்காமல் இருந்திருக்கலாமோ!’ என்று தோன்றியது கிஷோருக்கு. எம்எம் என்று அழைக்கப்பட்டவனை கிஷோருக்கு மட்டுமே தெரியும். அதுவும் ஐந்து வருடங்களுக்கு முன் ரேகாவுடன் பார்த்திருக்கிறான். ரேகா தங்களுக்கு நெருக்கமானவள் என்பதனாலோ என்னவோ, அவளுடன் இருந்த அவனின் முகம் மறக்கவில்லை.
தனக்கு அவனைத் தெரியும் என்று தோழிக்குத் தெரிந்ததும், அவளின் நச்சரிப்பில் அவனைப் பார்த்தால் காண்பிக்கிறேன் என்று சொல்லி வைத்திருந்தான். இன்று இருவரும் வேலை முடித்து, வெட்டியாக சுற்றிவிட்டு வரும் வழியில் ஒரு பப் முன் அவன் அந்த எம்எம் நிற்கவும், ஒரு சந்தேகத்தில் பார்த்தவனுக்கு அவன்தான் என்ற உண்மை புரிய அடையாளமும் காட்டிவிட்டான்.
“உண்மையிலேயே அவன்தானா? நல்லா நியாபகம் இருக்கா?” அவள் தன் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்ள,
“ம்… இவங்க தான். பெயர்தான் மறந்திருச்சி” என்றான்.
“ப்ச்… பெயரா முக்கியம். விடுடா. இப்ப பப்புக்குள்ள போறானே. என்ன செய்யலாம்?” என்ற சில வினாடிகளில் ‘உள்ளே போகலாம்’ என முடிவெடுத்து நண்பனை அழைத்தாள்.
“அந்த இடம் நமக்கு செட்டாகாது எம்எம். வெளியில வரட்டும் பார்த்துக்கலாம். உள்ளே யார் யார் எப்படியோ? இந்த மாதிரி இடத்துக்கு போக வேண்டாம். அது தப்பாகவும் வாய்ப்பு இருக்கு” என்று சொன்னான்.
“ம்கூம்… முடியாது. அவனை எதாவது பண்ணனும். வரமுடியுமா? முடியாதா?” என்று அடம் பிடிக்க,
“உன்னுடைய பிடிவாதம் இருக்கே. சரி வா” என்றழைத்து வந்திருந்தான். நினைவுகளைக் களைத்து, “சரி உன் பாய்ண்ட் ஆஃப் வியூலயே வருவோம். இப்ப என்ன? அவனோட தண்டனையை நாம முடிவு பண்ணனும். அப்படித்தான? இத்தனை வருஷம் கழிச்சி நம்ம கண்ணுல மாட்டியிருக்கான். நாம இந்த மாதிரி இடத்துக்கு வந்தோம்னு தெரிஞ்சாலே அம்மாங்க நம்மளை அம்மிக்கல்லுல வச்சி அரைச்சிருவாங்க. அது தெளுசா அம்மாயி?” என்றான் சிறு கோவத்துடன்.
“ப்ச்… எப்படி பண்ணலாம் சொல்லுடா?”
“படங்கள்ல, சீரியல்ல, கதைகள்ல வர்ற மாதிரி, அவனோட ஆஃபீஸ்ல இருந்து கெட்ட பெயரோட அனுப்ப ட்ரை பண்ணுவோமா? இது சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்.”
“சே…சே… இதுக்காக அவனோட ஆஃபீஸைத் தேடிப்போய், வேலைக்கு சேர்ந்து, அவன் பின்னாடி அலைஞ்சி, லாங் டைமாகும் கிஷோர். இது சுத்தி வளைக்கிற வேலை. அவன் சொந்தமா தொழில் எதாவது செஞ்சிட்டிருந்தா என்ன பண்றது? அதுவும் இல்லாம அவன் வேலை பார்க்கிற கம்பெனி பெருசா இருந்தா? பெரிய கம்பெனில வேலை கிடைக்கிற அளவுக்கு நாம ப்ரில்லியண்டா படிக்கவும் இல்ல. மார்க்கும் எடுக்கலை. எத்தனை அரியர்ஸ் வச்சி முடிச்சோம்னு தெரியும் தான!? அரியர்ஸை ஆஃபீஸில் அலோ பண்ணமாட்டாங்க. சோ, நெக்ஸ்ட் சொல்லு?”
“ஆங்… அப்ப அவன் கார் ப்ரேக் வயரை கழட்டிவிட்டு, ஆக்ஸிடெண்ட் பண்ணி முடமாக்கிடலாமா?” என்றான் வேகமாக.
அவனை முறைத்து, “என்னை கொலைகாரியா ஜெயில்ல பார்க்கணும்னு எத்தனை நாள்டா ஆசைப்பட்ட? ஆக்ஸிடெண்ட்னா கைகால் மட்டுமா, மண்டையும் உடைஞ்சி, உயிர் கூட போயிரும்டா. மடையா! ஐடியா சொல்றான் பாரு” என்று அவனைத் திட்டினாள்.
“அட ஆமால்ல. சாரி எம்எம் அவசரத்துல மூளை வேலை செய்யல.”
“ம்… சமோசா சாப்பிடு தன்னால வேலை செய்யும்” என்றாள் சர்வசாதாரணமாக.
“வாட் சமோசாவா? ஒய்?”
“மோட்டு அதை சாப்பிட்டுத்தான் மூளையை வளர்த்துப்பான்.”
“யாரு மோட்டு?”
“தி ஃபேமஸ் கார்ட்டூன் ஹீரோடா அவன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அந்த வாய்ஸ் அண்ட் பட்லுவோட அவன் அடிக்கிற லூட்டி சூப்பரா இருக்கும்” என்றாள் காட்சிகளை கண்முன் கண்டு.
“ச்சீ… லூசு. சின்னப்பிள்ளைங்க மாதிரி கார்ட்டூன் பார்க்கிற நீ, பழிவாங்கப் போறியா? அந்த சமோசாவை நீயே தின்னு மூளையை வளர்த்துக்கோ” என்றான் முறைப்புடன்.
“ஸ்ஸ்… எனக்கு இருக்கிற மூளை போதும். பேசாம வேற ஐடியா சொல்லு மேன்.”
“இவனுக்கு பிடிச்சவங்களுக்கு பிரச்சனை குடுத்தா அவனுக்கே கிடைச்சமாதிரி. அப்படிப் பண்ணலாமா?”
“இவனை என்ன செய்யலாம் என்பதுபோல் பார்த்து, அவன் சிங்கிள் பீஸுன்னு ரேகாக்கா சொல்லியிருக்காங்க. மத்தவங்க பெரியவங்க. இதுல தண்டனை யாருக்கு கொடுக்கணும் சொல்ற? தப்பு செஞ்சது இவன்.. தண்டனை பெத்தவங்களுக்கா? செல்லாது செல்லாது நெக்ஸ்ட் யோசி” என்றாள்.
“ஏய்! ச்சீ… பே… நீயே யோசிச்சிக்கோ. என்னைய ஆளை விடு” என்று கையெடுத்து கும்பிடுபோட்டான்.
“ஹேய்! மீ யுவர் ஒன் அன்ட் ஒன்லி ஃப்ரண்ட்யா. ப்ளீஸ் ஹெல்ப் மீ. காலை வாரிடாதடா” என்று கெஞ்சலில் இறங்கினாள்.
“மக்கும்… அதனாலதான எல்லாத்தையும் சகிச்சிக்க வேண்டியிருக்கு. சரி ஃபைனல் டச். பேசாம அவனை கல்யாணம் செஞ்சிட்டு கூடவே இருந்து கொடுமைபடுத்து. பொண்டாட்டி கொடுமையை விட பெரிய கொடுமை இந்த உலகத்துலயே ஒரு ஆணுக்கு இல்லன்னு அனுபவப்பட்டவங்க சொல்லி இருக்காங்க தெரியுமா?” என்றான் உர்ரென முகத்தை வைத்து.
“உன்னை…” என்று அவனுக்கு இரண்டு அடிபோட்டு, “என்னடா உன் ஆண்குலத்தை ஏற்றி, எங்க பெண்குலத்தை இறக்குற. கொன்னுடுவேன் உன்னை. அதுலயும் ரெண்டாந்தாரமா, உவ்வே… ஐடியா தர்றான் பாரு லூசு.”
“இதான் நல்லதுக்கே காலம் இல்லைன்றது.” என்றான் சோகமாக,
“நீ என்ன நல்லது சொல்லிட்டேன்னு, இப்ப அதுக்கு காலம் இல்லாம போச்சி” என எரிச்சலில் கேட்க,
“எவ்வளவோ சொன்னேன். லாஸ்ட் உள்ளதை ஃபைனல் பண்ணிக்கோ. இதைவிட வேற ஐடியா நாகு தெலியது ரா.”
“ஆமா. இதுல தெலுங்கு வேற. நாக்கு தள்ளுதுன்னுட்டு.” யோசித்தவளுக்கு மண்டைக் குழப்பம் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. “வேற ஐடியா இல்லையாடா?” என குரல் இறங்க கேட்டாள்.
“பேசாம இந்த பழிக்குப் பழிவாங்குற எண்ணத்தை விட்டுட்டு, மேரேஜ் பண்ணி செட்டிலாகிரு எம்எம். உனக்கும் வயசாகிட்டேப் போகுதுல்ல” என்றான் நல்ல நண்பனாய்.