அத்தியாயம் – 2
சுற்றிலும் பார்வையிட்டு, ‘நல்லவேளை யாரும் பக்கத்துல இல்லை’ என மனதில் நினைத்து, “அறிவிருக்கா உனக்கு? பப்ளிக் ப்ளேஸ்ல என்னை கிழவி ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்க. ஒன்லி ட்வென்ட்டி ஃபோர் தான் ஆகுது லூசு. உன்னையப் போயி எனக்கு ஃப்ரண்டா பெத்துப் போட்டாங்களே உங்கம்மா. அவங்களைச் சொல்லணும்.”
“ஏன் சொல்லமாட்ட? உன்கிட்ட மாட்டிட்டு முழிக்கணும்னு இருக்கிற, என் விதியை மாத்த முடியாம, என்னடா பண்ணலாம்னு நானே திணறிட்டு இருக்கேன்” என்றான் பாவமாய்.
“தெரிஞ்சா சரிதான்” என்றவள் திடீரென்று, “டேய் அவன் போறான் பாரு. என்ன ஒரு தள்ளாட்டம். சரியான மொடாக்குடிகாரன் போலடா. அவ அன்னைக்கே சொன்னா. இப்படின்னு தெரியாம போச்சே, தெரிஞ்சிருந்தா நான் அப்படி பண்ணியிருக்க மாட்டேனேன்னு.” வெளியே தள்ளாடியபடி வந்த எம்எம்மை பார்த்து கோவத்தில் சொன்னாள்.
“சரி ஃபீல் பண்ணாம வா எம்எம் போகலாம்’” என வெளியே வந்து அவன் தன்னுடைய பைக்கையும், அவள் தன்னுடைய ஸ்கூட்டியையும் எடுத்து வர,
அங்கு இருந்த காரில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான், ‘எம்எம் என்ற மணிமாறன்!’ பார்ட்டியில் இருந்து கிளம்பும் பொழுது, நண்பன் ஜவஹர் நிலை மோசமாகி இருக்க, அவன் கையை தன் தோளில் போட்டு, தனது ஒருகையால் அவனது இடுப்பைப் பிடித்து நடத்தி கூட்டிவர, மற்றவர்கள் பார்வையில் எம்எம்மின் தடுமாற்றமே பெரிதாகத் தெரிந்தது. அதைத்தான் கிஷோரும், ‘எம்எம் என்ற மணிமேகலை’யும் பார்த்தது.
‘ஹ்ம் ஒருகாலத்துல நானும் இந்த மாதிரி சூழ்நிலையால தான் இப்ப இந்த நிலையில் இருக்கேன். இந்த பழக்கம் வேண்டாம்டான்னு இவனுங்ககிட்ட சொன்னா கேட்குறானுங்களா? பட்டவன் சொல்றேன் கேட்க மாட்டேன்றானுங்க’ என புலம்பியது மணிமாறனின் மனம்.
காரின் அருகில் வந்ததும், “ஹேய் கிர்ரு! இவன் ப்ளாட்டாகிட்டான் போல. இவனைப்போய் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, உன் ஃப்ரண்ட் லைஃபை நீயே கெடுக்கப் பார்த்தியே. அப்படிப் பண்ணினா நான் இவனைப் பழிவாங்கினதா இருக்காது. இவன்தான் என்னைப் பழிவாங்கினதா இருக்கும். எனக்கு ஒரு டௌட் கிர்ரு?” என்றாள் தீவரமாக.
அவளின் தீவிரத்தையும் மீறி அவளை முறைத்து, “இவ்வளவு நேரம் கிஷோர்னு ஒழுங்காத்தான கூப்பிட்டிட்டு இருந்த, இப்ப என்ன கிர்ரு? ஒரு வாரம் முன்னாடி பிறந்த என்ற ஒரே காரணத்துக்காக, ஏதோ ஒன்பது வருஷம் பெரியவ மாதிரி ‘டி’ சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு வேற சொல்லிட்ட. சரி பொம்பளைப் பிள்ளையாச்சேன்னு நானும் விட்டுட்டேன். நீ என்னை ஆயிரத்தெட்டு ‘டா’ போடுற. மகளே உன்னைவிட நான் ஒரு நாள் முன்னாடி பிறந்திருக்கணும் அப்ப தெரிஞ்சிருக்கும்.”
“ஒளனா பாபு! அது பப்ளிக் ப்ளேஸ் கிர்ரு. சுற்றிலும் ஆள்கள் இருந்தாங்க. உன்னோட நேமும் கெட்டுப் போயிடாம, அதோட என்னோட டீசன்சியும் நான் மெய்ண்டெய்ன் பண்ணிக்கனும்ல. அதான். மத்தபடி எத்தனை வருஷம் பெரியவனா இருந்தாலும் உன்னை இப்படித்தான் கூப்பிட்டு இருப்பேனோ என்னவோ!” என்று தோள் குலுக்கினாள்.
“ரெண்டாவதா ஒரு காரணம் சொன்னியே, உன் டீசன்சியை மெய்ண்டெய்ன் பண்ணனும்னு, அதைச் சொல்லு ஒத்துக்கறேன். இல்லன்னா இதுக்கெல்லாம் அசருற ஆளா நீ. சரி டௌட்னு சொன்னியே என்னது?”
“இல்லடா. இவன் பார்க்க சும்மா ஜம்முன்னு ஹீரோ லுக்ல இருக்கான். அவ சரியான கருவாச்சி…”
“ஏய் என்ன இருந்தாலும்…” அவள் பேச்சை இடையிட்டு ஆரம்பித்தவனை தடுத்து,
“சரி சரி. என்ன சொல்ல வர்றன்னு புரியுது. அவ கருப்பா இருந்தாலும் முகலட்சணமானவள் தான். இருந்தாலும் இரண்டே நாள்ல லவ்வு என்பதெல்லாம் ஓவர்பா. இதான் காதலுக்கு கண்ணு இல்லைன்றதோ! ச்சை… இந்த காதலிக்கிறதுங்களுக்கு ஒரு எழவும் தெரியாது போல.” அவளே பேசி அவளே சலித்து, அவளே சமாதானமாகி., “இருந்தாலும் எப்படிடா இவன் போயி… ஒருநாள் இல்லன்னா ஒருநாள் இவன்கிட்ட கேட்டே தீரணும் கிர்ரு.” என்றதும் கிஷோர் அவளை பார்க்க, “என்னடா நீ என்னை பாராட்டுதலா பார்க்கிற?” என்றாள் நக்கலாய்.
“நீ பண்ற அலும்புக்கு கொலைவெறியே வருது. நான் உன்னை முறைக்கிறேன் லூசு. சரியான செல்ஃப் டப்பா நீ.” என்றான்.
“டப்பா மட்டும் தராத கிர்ரு. அதுல கொஞ்சம் பால்கோவா வச்சிக்கொடு” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்து.
“அதான! என்னடா இன்னும் உன் ஏரியாவுக்கு வரலையேன்னு பார்த்தேன். சரியான தீனிப்பண்டாரம்” என்றான் ஆத்திரமாய்.
“ஆமா. நீ மட்டும் தின்னவே மாட்டே பாரு. நான் மட்டும்தான் தின்னுறேன். போடா.”
“ஏய்! சத்தமா பேசாத எம்எம். இவன் முழிச்சிடப் போறான்.” என்று பதறினான்.
“லூசாடா நீ!” என்று அவள் அவனைத் திட்ட,
“இப்ப ஏன் லூசுன்ற?” என எகிறியபடி வந்தான் கிஷோர்.
“பின்ன என்ன, அவனே ஓவர் லோடாகி தன்னை மறந்து, ப்ளாட்டாகி கிடக்கிறவனைப் போயி முழிச்சிருவான்னு சொல்ற. அப்படியே கேட்டாலும் எந்த குடிகாரனுக்கு இன்னைக்கு நடக்கிறது நாளைக்கு நியாபகம் இருந்திருக்கு சொல்லு. முதல்ல இவனைப் பழிவாங்க ஐடியா கொடு கிர்ரு?”
“எத்தனை தடவை முதல்ல இருந்து வர்றது. நான்லாம் அவ்வளவு அறிவாளி கிடையாது. நீயே யோசிச்சிக்கோ!” என்றவன் தோழியின் கெஞ்சல் பார்வை தாளாது, பொண்ணு கேஸ்ல மாட்ட வச்சிருவோமா?” என கண்கள் மின்ன கிஷோர் கேட்டான்.
“ஹேய்! இது நல்ல ஐடியாவா இருக்கே. ஆனா, அதுக்கு பொண்ணு வேணுமே? என்ன பண்ணலாம்?” என்று சோகமானாள்.
“ஏன் நீ பொண்ணு இல்லையா? உன்னைப் பார்த்து உனக்கே சந்தேகமா?” என்றான் நக்கலாக.
“ஏன்டா என் பெயரை நானே கெடுத்துக்க ஐடியா தர்றியா? எத்தனை நாள்? இல்ல எத்தனை வருஷத்து காண்டுடா உனக்கு?” என்றாள் கோவமாக.
“ம்க்கும்… அப்படியே இவமேல காண்டாகிட்டாலும்” என சலித்து, “டைம் நைன் ஆகுது எம்எம். வா கிளம்பலாம். லேட்டானா உனக்கும் சேர்த்து என்னைத்தான் வீட்ல மொத்துவாங்க.”
“ஒரு நிமிஷம் கிர்ரு. டயர்ல காற்றைப் பிடிங்கி விட்டுட்டு வர்றேன்” என்று செல்ல,
“ரொம்பப் பெரிய பழிவாங்கல் தான் உனக்கு” என்று அவன் இருசக்கர வாகனத்தை உதைக்க,
“நில்லுடா. இப்படி ஒரு சந்தர்ப்பம் தினமுமா கிடைக்கப்போகுது. வேலையை முடிச்சிட்டுப் போகலாம்” என்றாள்.
“ஷப்பா உன்னோட தொல்லை தாங்கமுடியலை அம்மாயி. இது எல்லாத்துக்கும் காரணமான என் அம்மாவைச் சொல்லணும். ஊர் உலகத்துல ஆளே இல்லாம உன் அம்மாவைப் போயி ஃப்ரண்ட் பிடிச்சாங்க பாரு. என்னை ஆட்டி வைக்கிற நீ.” என்றான் பல்லைக்கடித்து.
“கூல் கிர்ரு கூல். இது கடவுள் போட்ட முடிச்சி. சோ, நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. ஹேய் ஐடியா!” என்று திடீரென கத்தி தன்னுடைய ஹேண்ட்பேகில் எதையோ தேட, அது இல்லை என்றானவுடன், “கிஷோர் ரெட் இங்க் பென் இருந்தா குடேன்?” என்றாள்.
“எதுக்கு?”
“கொஸ்டின் கேட்காத. தான்னா தா.”
“ஒக்க மினிட் அம்மாயி” என்று தேட,
“சரி ஒக்காருறேன்” என அவள் கிண்டலடிக்க,
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது” என்று தன் வண்டியின் முன்பகுதி உறையில் இருந்து எடுத்துக் கொடுத்தான்.
“இதோடவா அலையுற நீ” என அதற்கும் கேலி செய்து, அவனின் முறைப்பையும் பெற்றுக்கொண்டு, “உன் உதட்டுல இந்த இங்க் தடவி, அவனோட சர்ட்ல லிப் கிஸ் பண்ண மாதிரி ரெண்டு மூணு இடத்துல வை கிர்ரு. அது சூப்பரா ஒர்க்அவுட் ஆகும்.”
“ச்சை… நீயும் உன்னோட லூசுத்தனமான ஐடியாவும்.” என்று முகம் சுளித்தான்.
“வேண்டாம்டா. நீ இதுவரை குடுத்த ஐடியாவுக்கு, இது எவ்வளவோ பெஸ்ட் தெரியுமா? வீட்ல போயி என்ன ஏதுன்னு அவங்கம்மா கேட்கிற கேள்வியில மாட்டிட்டு முழிப்பான்ல. இன்னைக்கு நம்ம கோட்டா, வீட்டுல விசேஷம்!” என்று சிரித்தாள்.
“எங்கம்மா லிப்ல ரெட் கலர் பார்த்தாங்க தொலைச்சிருவாங்க. எதுவா இருந்தாலும் நீயே பண்ணு. என்னை ஆளை விடு” என்றான்.
“போடா. அத்தையை சமாளிக்கத் தெரியல உனக்கு. சரியான பயந்தாங்கொள்ளி நீ. இரு நானே ஐடியா பண்றேன்” என்றவள் தன் இதழ்களில் இங்க் தடவி கைக்குட்டையில் அச்செடுத்து, அவனை நெருங்கி சட்டையில் அழுத்தமாக வைத்து, இரண்டு மூன்று இடங்களில் ஒற்றி எடுத்து அதில் திருப்தி வந்ததும், “கிர்ரு என்னைய இவ்ளோஓஓ அறிவாளியா பெத்தவங்களுக்கு, கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்டா” என்று கர்வமாக சொன்னாள்.
“கண்டிப்பா எம்எம். இப்ப நீ செஞ்சது, இனிமேல் நீ செய்யப் போறது எல்லாம் சொல்லியே தேங்க்ஸ் சொல்லிடுவோம்.”
“நீயெல்லாம் ஒரு நண்பனா?” என பல்லைக்கடிக்க,
“ஹேய் ஆத்தே டிய்யோ டிய்யோ டோலே
ஹேய் ஆத்தே டிய்யோ டிய்யோ டோலே
தாந்தரக்கத்திக்கு தாந்தரக்கத்திக்கு தாந்தரக்கத்திக்கு தாந்தான்”
“என்ன ரிங்டோன் வச்சிருக்க? உன்னைத் தவிர எவனும் இந்த ரிங்டோனை வைக்கமாட்டான். வச்சிருக்கா பாரு நாலு ஊரை ஒண்ணா எழுப்புற மாதிரி” என்று சிடுசிடுத்த நண்பனிடம்,
“விடு கிர்ரு. எல்லாரைவிடவும் வித்தியாசமா இருக்கணும்ல. சரி நீ பொறுமையா திட்டு. இப்ப போனை அட்டெண்ட் பண்ணல, நமக்கு நைட் சோறு கிடையாது” என்று பிண்ணனி இசையில் அலறிய கைபேசியை எடுத்தாள்.
“அம்மா! இதோம்மா. இதோ பக்கத்துல வந்துட்டோம்மா. நோமா என் கூடத்தான் இருக்கான். கண்டிப்பா பத்திரமா கூட்டிட்டு வந்திடுறேன்மா. ம்மா… பச்சப்புள்ளைய இப்படில்லாம் திட்டக்கூடாது. உங்க நம்பிக்கையை ஒரு ட்ராப்ஸ் கூட மீறலம்மா. ம்மா… மீ யுவர் ஒன்லி ஒன் பேபி. நோமா நோ பேட்வேர்ட்ஸ். சிக்னல் ப்ராப்ளம் ஆகுதுமா? வச்சி ஐந்து நிமிஷத்துக்குள்ள வீட்ல இருப்பேன். ப்ராமிஸ்மா. கிளம்பிட்டேன்மா இதோ…” என அவசர அவசரமாக கைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.
“ஷப்பா! முடில. சரி கிர்ரு இதுக்குமேல தாமதிச்சோம், நம்ம அம்மாக்கள் காளி அவதாரம் எடுத்திருவாங்க. சோ, வேலை முடிஞ்சது வா போகலாம்” என்று ஸ்கூட்டியை எடுக்க, இன்னும் தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் நண்பனைப் பார்த்து, “என்னடா திரும்பவும் முறைச்சிட்டிருக்கிற? என கேட்டாள்.
“எப்படி இப்படி எல்லாம் சமாளிக்கிறியோ தெரியல. உன்னோடவே சுத்துறேன் ஆனாலும், இப்படி பொய் பேச வரமாட்டேன்னுது. அது எப்படி சர்வசாதாரணமா அடிச்சிவிடுற? இதையெல்லாம் அத்தை நம்புவாங்கன்ற? அதுக்கு வாய்ப்பே இல்லை” என்றான்.
“ஹா… குட்டி நானே இப்படின்னா, எங்கம்மா என்னோட டபுள் மடங்கு யோசிக்க மாட்டாங்க. அதைவிடு கிர்ரு. கடைசியா எனக்கொரு டௌட்?” என்றாள்.
“ஈஈஈ… உன் டௌட்ல தீயை வைக்க. வாயை மூடிட்டு சைலன்ட்டா வா” என்றான் கிஷோர்.
‘தண்ணி அடிச்சிருந்தா கெட்டவாடை வருமே. அவன்மேல் ஏன் வரலை?’ என்ற கேள்வி மனதிற்குள்ளாகவே அடங்கியது.
அதுவரை மூச்சைப்பிடித்து இழுத்து வைத்திருந்த மணிமாறன், ஹா…ஹா என நிறைய நேரம் வாய்விட்டுச் சிரித்தான்.
அவர்கள் வருவதற்கு முன், ஜவஹர் அதிகமாக மது அருந்தி இருந்ததால், மற்றொரு நண்பன் மூலமாக அவன் வீட்டிற்கு அனுப்பிவிட்டிருந்தான். குடியினால் தான் இழந்த இழப்பின் வலிகள் மற்றும் பழைய நினைவுகளை மறக்க முயற்சித்தும் முடியாமல், பூவும் புயலுமான அந்த நாட்களை எண்ணி கண்மூடி சாய்ந்திருந்தான்.
அப்பொழுது தன் அருகே கேட்ட, “இவன் ப்ளாட்டாகிட்டான்” என்ற பெண்ணின் குரலில் கண்விழித்தவன் கண்ணாடியில் அவளைக் கேள்வியாய் பார்த்து, ‘அடுத்தது என்ன?’ என்று தெரிந்துகொள்ள திரும்பவும் கண்மூடினான்.
கண்ணாடியில் பார்த்தபொழுது சின்னப் பெண்ணாக இருக்க, தன்னை அவன் இவனென்று பேசியது கோவத்தை வரவழைத்தது. இவனைப்போய் என்னை மேரேஜ் பண்ணிக்கச் சொல்றியே என்று பேசியது அவனை ஆச்சர்யப்பட வைத்தது, முன்னப்பின்ன தெரியாதவனை கல்யாணம் பண்றதா என்று. அதன்பின் பழிவாங்கப்போறேன் அது இதென்று பேச, ‘கல்யாணம் செஞ்சி என்னைப் பழிவாங்குற அளவிற்கு நான் என்ன செய்தேன். இதென்ன புதுவிதமான வில்லங்கம் எனக்கு’ என குழம்பினான்.
அடுத்து அவள் சொன்ன ‘காதல்!’ அது இன்றுவரை அவனுக்குள்ளும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ‘கருப்பழகி தான் தன் காதலியாகி பின் மனைவியான ரேகா. அந்த நேரங்களில் அனைத்தும் இளமையாக இனிமையாக இருந்தது. இரண்டே நாளில் காதலைச் சொல்லி, இரண்டே மாதங்கள் காதலித்து, மூன்றே மாதங்களில் தன் மனைவியாக தன்னைவிட்டுச் சென்றவள். தான் அறியாமல் நடந்த ஒன்று தன் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று அறிந்திருக்கவில்லை அவன். தற்பொழுது அதற்கு காரணமான எதையும் தன்னிடம் நெருங்கவிடவில்லை என்றாலும் அதனால் உண்டான காயங்கள் அப்படியே வடுவாக மாறி இம்சிக்கிறது.
அப்பெண் தன்னை ஹீரோ என்றது! தனது மனைவியை கருவாச்சி என்றது! டப்பாவில் பால்கோவா கேட்டது என நண்பனிடம் அவள் அடித்த அத்தனை லூட்டிகளையும் ரசித்து, சிரிப்பை அடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டான் என்றே சொல்லலாம். லிப்ஸ்டிக் மார்க் வைக்க தன்னை நெருங்குகையில், புதிதாக ஒரு பெண்ணின் நெருக்கமும், அவளின் மேலிருந்து வந்த வாசனையும், அவனை தடுமாறச் செய்தது என்னவோ உண்மைதான். அதைப் பல்லைக்கடித்து மனதை அடக்கி அமைதியாக இருந்தான்.
அந்த நேரத்தில் அந்த வித்தியாசமான பாட்டு சத்தம் வர, தானே ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனான். அந்த சத்தம் ரிங்டோன் என்றதும்தான் இன்னுமே அவள் மீது ஆர்வம் கூடியது. ‘சான்ஸ்லெஸ் பேபி!’ என்றான் மனதினுள். அவள் தாயிடம் பேசியவை யாவும் தன்னை மீறி சிரித்து விடுவோமோ என்ற பயத்தையே கொடுத்தாலும், அவர்களின் உரையாடலைக் கேட்பதில் ஒரு புதுவிதமான சுகம் கூட இருந்தது.
‘யார் இந்தப்பெண்? தன்னை, தன் காதலை, தன் திருமணத்தை தெரிந்திருக்கிறாள். ஒருவேளை ரேகா தங்கையா? சே… அவளுக்கு ஒரு அக்கா மட்டும்தானே! ப்ரண்டா இருக்குமோ? ம்கூம் இவ சின்னப்பொண்ணா இருக்காளே.’
மனம் கேட்ட கேள்விகளை ஒதுக்கியவன், “உண்மையிலேயே நீ அறிவாளிதான் பெண்ணே! இத்தனை ஆண்டுகள் மற்றவர் முன் நடிப்புக்காக சிரித்தவனை, மனம்விட்டு சிரிக்க வைத்தவள் ஆகிற்றே! உன் வாழ்வு முழுவதும் இதே புன்னகையோடு இருக்க மனமார்ந்த வாழ்த்துகள் பெண்ணே!” என்று புதிதாக பார்த்த அப்பெண்ணை மனமார வாழ்த்தினான் எம்எம் என்ற மணிமாறன்.