சில மணி நேரங்கள் கடந்து, ஜீவா–மீனாவின் வரவேற்பு நிறைவடையும் நேரம் வந்தது.
அனைவரும் விருந்து உண்ணச் செல்லத் தயாரானபோது, ரேஷ்மா திடீரென கையில் மைக்கை எடுத்தாள்.
“Wait… wait… wait!”
அவளது குரல் கேட்டு அனைவரும் அவளை நோக்கித் திரும்பினர்.
“இன்னைக்கு இங்க என் அண்ணன், அண்ணிக்கு மட்டும் function இல்ல.”
சிறிது இடைவெளிக்குப் பிறகு அவள் தொடர்ந்தாள்.
“இன்னைக்கு எங்க குடும்பத்தின் வழிகாட்டி… எங்க பெரியம்மா, பெரியப்பாவுக்கு ஐம்பதாவது திருமண நாள்!”
கூடியிருந்தவர்கள் கைதட்ட, சந்திரன்–இந்திரா தம்பதிகள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களது காலில் விழுந்து பலரும் ஆசீர்வாதம் பெற்றனர்.
அப்போது கீதா கேவியை அழைத்தாள்.
“மாப்புள்ள… உங்க பொண்டாட்டியை அழைச்சிட்டு போய் நீங்களும் ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க.”
கொடிவீரன் மகிழினியைப் பார்த்தான். இருவரும் ஒன்றாக மேடைக்குச் சென்றனர்.
மீனா, கேவி–சிஎம் இருவரையும் தன் பெரியம்மா–பெரியப்பாவிடம் அறிமுகப்படுத்தினாள்.
“வணக்கம்.”
“வணக்கம் ம்மா.”
“ஹலோ சார்.”
சந்திரன் புன்னகையுடன் அவனை வரவேற்றார்.
“Hi… nice to meet you, young boy!”
“எப்படி இருக்கீங்க? ஜீவா உங்களைப் பற்றி ரொம்ப பெருமையா சொல்லியிருக்கான்.”
இந்திரா உடனே சிரித்தபடி கேட்டாள்.
“ஓ… உங்களுக்கு எங்களைப் பற்றி எல்லாம் பேச நேரம் இருக்குதா?”
ஜீவா சிரித்தான்.
“ஏன் பெரியம்மா இப்படி கேக்குறீங்க? உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்ட தமிழ் இலக்கணம்தான் எனக்கு நிறைய மதிப்பெண் வாங்க உதவியா இருந்திருக்கு. அப்போ அடிக்கடி உங்களைப் பற்றித்தான் பேசுவேன்.”
“ம்… நல்லது.”
அப்போது கீதா மைக்கை வாங்கிக்கொண்டாள்.
“வயசுல பெரியவங்க நீங்க. இப்ப இருக்குற இளசுங்க எல்லாம் திருமணம்னா என்னன்னே தெரியாம, living together, agreement, divorceன்னு ஆளுக்கொரு கதையை சொல்லிக்கிட்டு அலையுதுங்க. இவங்கள எல்லாம் திருத்துறது நம்ம வேலை இல்லதான்.
“ஆனா, இந்த மாதிரி ஒரு நல்ல நாள்ல உங்களோட இத்தனை வருட கல்யாண வாழ்க்கையில நீங்க பார்க்காத இஷ்டம், கஷ்டம் எதுவும் இருக்காது. இதெல்லாம் தாண்டி நீங்க உங்க ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாடும்போது நாங்க எல்லாம் உங்ககூட இருக்குறது நாங்க பண்ண புண்ணியம்.
“அதனால… உங்க வாயால எங்களுக்கு ஒரு சில அறிவுரை சொன்னா நல்லா இருக்கும்.”
சந்திரன் சிரித்தார்.
“ஹா… ஹா… அறிவுரை சொன்னா கேக்குற பக்குவம் எப்பவுமே நூறு பேர்ல பத்து பேருக்குக்கூட இருக்காது. So, என்னோட first advice… please, யாரும் யாருக்கும் அறிவுரை சொல்லாதீங்க!”
கூடியிருந்தவர்கள் சிரித்தனர்.
கீதாவும் சிரித்தாள்.
“ம்… சரியாத்தான் சொல்றீங்க. அப்போ எங்களுக்கு அறிவுரை வேண்டாம். உங்களோட அனுபவத்தை சொல்லுங்க.”
இந்திரா கணவரைப் பார்த்தாள்.
“இப்ப என்ன சொல்லச் சொல்லுறீங்க?”
கேவி சிரித்தபடி கேட்டான்.
“உங்களோட இந்தத் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கக் காரணம் என்னன்னு என் அத்தை கேக்காம கேக்குறாங்க.”
இந்திரா புன்னகைத்தாள்.
“It’s very simple. நாங்க எப்பவுமே adjust பண்ணி வாழ மாட்டோம். ஒருவருக்கொருவர் இஷ்டம் இல்லாத விஷயத்துக்காக இன்னொருவரை மாறச் சொல்லி கட்டாயப்படுத்த மாட்டோம்.”
சந்திரன் தலையசைத்தார்.
“Right. எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடு வரும். ஆனா அதுக்காக நாங்க வாக்குவாதம் பண்ணிப்போமே தவிர, யாரையும் யாரும் வெறுத்தோ, அவமானப்படுத்தியோ பேச மாட்டோம்.”
“Exactly!” என்ற இந்திரா, “கணவன்–மனைவி உறவுல first ஒருவருக்கொருவர் தர வேண்டியது மரியாதை. அதுக்குப் பிறகுதான் காதல், அன்பு, பாசம், உரிமை எல்லாமே.”
சந்திரன் தொடர்ந்தார்.
“தாலி கட்டிட்டதால பொண்டாட்டி நமக்கு அடிமையும் இல்ல.”
இந்திரா உடனே,
“நமக்கு புருஷனா ஒருவர் வந்ததால நமக்கு அவரு சம்பாதிச்சுப் போடும் மிஷினும் இல்ல.”
கூடியிருந்தவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“Mostly husband & wifeக்குள்ள விட்டுக்கொடுத்து வாழ சொல்லுவாங்க. But please… அப்படி மட்டும் வாழாதீங்க.”
“ஆமா,” என்ற சந்திரன். “அப்படி விட்டுக்கொடுத்து வாழ்ற வாழ்க்கையில யாராவது ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும்.”
“சோ… யாருக்கு என்ன பிடிக்கலையோ, யாருக்கு என்ன வேணுமோ, அதைத் தெளிவா பேசி ஒருவருக்கொருவர் புரிஞ்சு வாழணும்.”
இந்திரா அழுத்தமாகச் சொன்னாள்.
“Adjustment எப்பவுமே எந்த உறவுக்கும் தீர்வு கிடையாது.”
சந்திரன் அவளைப் பார்த்தபடி தொடர்ந்தார்.
“அதே மாதிரி, கணவன்–மனைவி பந்தத்தைவிட புனிதமான உறவு வேறொன்றும் இருக்க முடியாது. அந்த உறவு புனிதமானது மட்டுமல்ல… இதயத்திற்கு மிக நெருக்கமானதும் கூட. நம் வாழ்வின் இறுதிவரை தொடர்ந்திருப்பதும் அந்த உறவுதான்.”
“Exactly,” என்ற இந்திரா. “Parents பார்த்துச் செய்து வைத்த திருமணமானாலும், காதலித்துச் செய்துகொண்ட திருமணமென்றாலும், கணவன்–மனைவி என்றான பிறகு இல்லற நியதிகளும் கடமைகளும் ஒன்றுதான்.
“இல்லறம் என்பது குடும்ப வாழ்வின் மூலம் இருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய அறச்செயல்களுக்கான களம். அந்த அறச்செயல்கள் அனைத்திற்கும் அன்பே அடிநாதம்.”
சந்திரன் மெதுவாகச் சிரித்தார்.
“ஒரு குடும்பத்துல புருஷன்–பொண்டாட்டி இருவரும் இரு கண்கள் மாதிரி. ஒரு கண்ணில் வலி இருந்தா மற்றொரு கண் தூங்காது. ஓருள்ளம் துயருறும்போது இணை உள்ளம் அதை பொறுத்துக்கொள்ளாது.
“பட்… இந்த விஷயமெல்லாம் உண்மையாக ஒருவரை ஒருவர் நேசிக்கிற புருஷன்–பொண்டாட்டிக்கு மட்டும்தான் சாத்தியம்.”
அந்த வார்த்தைகளைக் கேட்ட கேவியின் பார்வை இயல்பாக மகிழினியைத் தேடியது.
மகிழினியும் அவனைப் பார்த்தாள்.
ஒரு கணம் இருவரது பார்வையும் சந்தித்தது.
அந்தப் பார்வையில் சொல்லப்படாத ஏதோ ஒன்று இருந்தது.
இந்திரா தொடர்ந்து பேசினாள்.
“வாழற கொஞ்ச காலத்துல நிம்மதியா, சந்தோஷமா… சின்ன சின்ன சண்டை, நிறைய காதல், அன்பு, அக்கறைன்னு ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தா… கண்டிப்பா எல்லா இல்லறமும் நல்லறம்தான்.”
🌹 இந்திரா–சந்திரன் தம்பதிகள் தங்களது ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாடிய அந்தத் தருணத்தில் மனதில் இருந்த சில நற்சொற்களை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர்.
அங்கே வந்திருந்த பல ஜோடிகள் அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
கேவி–சிஎம் இருவரையும் கூட அவர்கள் மனதார ஆசீர்வதித்தனர்.
“நீங்களும் new couples போலதான் இருக்கீங்க!”
இந்திரா சிரித்தாள்.
கீதா உடனே பெருமையுடன்,
“ஆமாம்மா! என் மாப்புள்ள பொண்ணுக்கு கல்யாணம் முடிந்து முழுசா ரெண்டு மாசம்கூட ஆகல.”
“ஓ… நல்லது,” என்றார் சந்திரன்.
கேவி உடனே அவர்களை அழைத்தான்.
“நீங்க எல்லோரும் கண்டிப்பா நம்ம ஊருக்கு வந்துட்டுப் போங்க சார்.”
“இந்த முறை முடியாது boy. இந்திராவுக்கு கோவில்ல நிறைய வேண்டுதல் இருக்கு. Next time வரும்போது கண்டிப்பா நம்ம எல்லாம் ஒரு trip arrange பண்ணி ஜாலியா time spend பண்ணலாம்.”
பின்னர் மனைவியைப் பார்த்து,
“என்ன இந்து darling?”
“நீங்க சொன்னா double okay தான்.”
மீனா சிரித்தாள்.
“அப்புறம் என்ன? என் அத்தை மாமாவே சொல்லிட்டாங்க. அடுத்த முறை இவங்க வரும்போது நம்ம எல்லாம் ஒரு trip போயிட்டு வருவோம்.”
“ம்… கண்டிப்பா போகலாம்,” என்ற கீதா.
சந்திரன் சிரித்தார்.
“Okay, okay… ரொம்ப நேரம் பேசுறதுலயே போகுது போல. Let’s enjoy your day!”
ரேஷ்மா உடனே குரல் கொடுத்தாள்.
“ஆமா ஆமா! வாங்க… bachelor party ஆரம்பிக்கலாம்!”
அதன்பிறகு அந்த இடம் மீண்டும் சிரிப்பும் கொண்டாட்டமும் நிறைந்தது.
சில நேரத்தில் ஜீவா தன் நண்பர்களுடன் கையில் மதுபானத்தை ஏந்தியபடி கேவியை நோக்கி வந்தான்.
“மச்சான்… have it டா.”
“நோ தேங்க்ஸ் டா.”
“ஓ… ஆமா! நீ அடிக்கிற brand இது இல்ல. Sorry மச்சான். நம்ம இன்னொரு நாள் தனியா உன் ஊருல ஒரு party celebrate பண்ணலாம்.”
“ம்… sure டா.”
“Okay. நீ பாரு… நான் போய் என் colleague கூட enjoy பண்ணுறேன்.”
“ம்… carry on.”
ஜீவா அங்கிருந்து நகர்ந்ததும், மகிழினி கேவியைப் பார்த்தாள்.
“ஓ… நீங்க குடிப்பீங்களா?”
“ம்… குடிப்பேனே.”
“சொல்லவே இல்ல.”
“யார்கிட்ட சொல்லணும்?”
“என்கிட்டதான்.”
கேவி புருவத்தை உயர்த்தினான்.
“ஏன்? நான் குடிப்பேன்னு சொன்னா நீங்க எனக்கு company தருவீங்களா?”
“ஆமா… நாலு பட்டாசு companyயை தரப்போறேன்!”
“நல்ல காமெடி.”
மகிழினி சிரித்தபடி கேட்டாள்.
“ஆமா… அது என்ன? உங்க brand இங்க இல்லன்னு சொல்லிட்டு போறாரு. அப்படி என்ன சரக்கு அடிப்பீங்க? ஒருவேளை வெளிநாட்டு சரக்கோ?”
“ம்… ஹூம். நம்ம ஊர் பானம்.”
“அப்படின்னா?”
“ஒரு மரத்து கள்ளு.”
“கல்லா?”
அவள் முகத்தில் குழப்பம்.
“அதை வச்சி உங்க மண்டையை உடைக்கத்தானே முடியும்? அதை எப்படி குடிப்பீங்க?”
“ஐயோ… என் பொண்டாட்டிக்கு என்ன ஒரு அறிவு! ஏங்க… பதநீர் தெரியுமா?”
“ம்… தெரியுமே.”
“அதைப் புளிக்க வச்சி குடிச்சா கள்ளு. அப்படியே குடிச்சா பதநீர். ரெண்டுமே உடம்புக்கு ரொம்ப நல்லது.”
“ஓ… அதைதான் ஜீவா அண்ணா சொல்லிட்டு போறாரா?”
“ம்…”
“ஆமா, இவரு இப்ப கையில சரக்கு வச்சிக்கிட்டு போறாரே… நாளைக்கு எப்படி கல்யாண நேரத்துக்கு சரியா எழுந்திருப்பாரு?”
“இது bachelor partyங்க. Just ஒரு sip பண்ணுவான் போல.”
சுற்றிலும் பார்த்த மகிழினி கேட்டாள்.
“கீதா அம்மா எங்க? வேணுவையும் வேற ஆளைக் காணோம்.”
“ஐயோ… இவங்க எங்க போனாங்க? சரி, நீங்க இங்க உக்காருங்க. நான் அவங்கள எங்கன்னு போய் பார்த்துட்டு வரேன்.”
என்று கேவி எழுந்து வேணுவைத் தேடிச் சென்றான்.
வேணுவோ அவன் வயதுப் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.
“மாமா! நான் இவங்கக்கூடத்தான் இருக்கேன். எங்களுக்கு எல்லாம் தனி ரூம் இருக்கு. சோ… நீங்க போய் party enjoy பண்ணுங்க. காலையில meet பண்ணலாம்.”
என்று சொல்லிவிட்டு, கேவி பதில் சொல்வதற்குள் நண்பர்களுடன் ஓடிவிட்டான்.
“இந்தப் பையன்…”
என்று தலையசைத்த கேவி, பின்னர் தன் அத்தையைத் தேடினான்.
“எங்க போயிட்டாங்க இந்த அத்தை?”
என்று தனக்குள் முணுமுணுத்தபடி மகிழினி அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பி வந்தான்.
அங்கே அவளைக் காணவில்லை.
அவன் சுற்றிலும் பார்த்தான்.
“என் சிஎம் எங்கே?”
அவளைத் தேடியபடி terrace பக்கம் சென்றான்.
சில நிமிடங்கள் தேடியும் கீதாவையும் மகிழினியையும் காண முடியவில்லை.
அந்த நேரத்தில் அவனது செல்போன் ரிங் ஆனது.
“ஹலோ… சொல்லுங்க ரேஷ்மா.”
மறுமுனையில் ரேஷ்மா சொன்ன சில வார்த்தைகளைக் கேட்டவுடன் கேவியின் முகம் மாறியது.
ஒரு நொடியும் தாமதிக்காமல் அதே ஹோட்டலில் தான் தங்கியிருந்த அறையை நோக்கி வேகமாக ஓடினான். பதற்றத்துடன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனுக்கு ஒரு பெண் வந்து அவனை இறுக அணைக்க, அந்த நொடி பெரும் அதிர்ச்சி அவனுக்கு.
யாரென்று அவள் முகம் பார்க்க, அவனை இருகரங்களால் இறுக அணைத்துக்கொண்டு, “கொடி… என்னைவிட்டு எங்க போனீங்க நீங்க?” என்று கேட்டாள் மகிழினி.
அவர்கள் அருகில் வந்த ரேஷ்மா, “சாரி வீரா. எப்படி நடந்துச்சுன்னு தெரியல இவங்க தெரியாம டிரிங்க்ஸ் பண்ணிட்டாங்க.” என்றாள்.
“என்ன டிரிங்க்ஸ் பண்ணிட்டாங்களா!?” கொடிவீரன் அதிர,
“ஐயோ இல்ல. இல்ல கொடி இவ பொய் சொல்லுறா. நான் அதெல்லாம் பண்ணவே இல்ல. ஏய் பொய்க்காரி ஏன்டி பொய் சொல்லுற?” என்றவள் நிற்க இயலாமல் கால் தடுமாறி கீழே விழப்போன மனைவியை கொடி தாங்கி பிடித்தான்
“என்ன ரேஷ்மா இது? இவங்க எப்படி இப்படி?”
கொடிவீரனின் குரலில் குழப்பமும் பதற்றமும் கலந்திருந்தது.
ரேஷ்மா உடனே கைகளை உயர்த்தி மறுத்தாள்.
“Promise வீரா… எனக்கு ஏதும் தெரியாது. என் ஃப்ரண்ட்தான் சொன்னா… உங்க வொய்ப் தலையில கையை வச்சிக்கிட்டு ஒரு ஓரமா உக்காந்து தனக்குத்தானே பேசிக்கிட்டு இருக்காங்கன்னு. நான் என்னன்னு போய்ப் பார்த்தா, இவங்க நார்மலா இல்ல. சரி, அங்கே வச்சி உங்ககிட்ட சொன்னா ஏதாவது issue ஆகிடப் போகுதுன்னு உங்க ரூமுக்கே அழைச்சிட்டு வந்தேன்.”
“ப்ச்… என்னங்க இதெல்லாம்…”
கொடிவீரன் தலையைப் பிடித்துக்கொண்டான்.
பிறகு மகிழினியைப் பார்த்தான்.
“ஏங்க சிஎம்… நீங்க ஏன் போய்க் கண்டதை எல்லாம் குடிக்கிறீங்க?”
“நானா…!? ஐயோ!”
மகிழினி கண்களைப் பெரிதாக்கினாள்.
“நோ நோ… நானா குடிக்கல. கொடிவீரா… உன் அத்தை இல்ல… அந்தக் கண்ணாடிக்காரி… அந்தப் பொம்பளதான் என்னத்தையோ எனக்குக் கொடுத்துச்சு.”
“என்ன… என் அத்தையா!?”
“ம்… ஆமா. அவங்கதான்.”
ரேஷ்மா இடையில் மெதுவாகச் சொன்னாள்.
“இவங்க… கிளாஸ் மாத்தி ஏதோ எடுத்து குடிச்சிட்டாங்க போல.”
“சரி… என் அத்தை இப்போ எங்கே?”
“தெரியலையே!”
“ப்ளீஸ் ரேஷ்மா… நீங்க கொஞ்சம் இவங்களைப் பார்த்துக்கோங்க. நான் போய் அத்தை எங்கேன்னு பார்த்துட்டு வர்றேன்.”
என்றவன், தன் சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டு பிதற்றிக் கொண்டிருந்த தன் மனைவியை ரேஷ்மாவிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு திரும்பிய அடுத்த நொடியே—
மகிழினி அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
“எங்கே போறீங்க நீங்க!? என்னைத் தனியா விட்டுப் போகாதீங்க! நானும் வரேன்… என்னையும் அழைச்சிட்டுப் போங்க!”
“நீங்க கொஞ்ச நேரம் ரேஷ்மா கூட இருங்க. நான் போய் அத்தை எங்கேன்னு பார்த்துட்டு வர்றேன்.”
“ஹ்ம்… ஹ்ம்… மாட்டேன். இவக்கூட நான் இருக்க மாட்டேன். இவ ரொம்பக் கெட்டவ!”
கொடிவீரன் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.
ரேஷ்மாவோ சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை கடித்தாள்.
“இவ உங்கள என்கிட்ட இருந்து பிரிக்க வந்த சீரியல் வில்லி. இவளை முதல்ல இங்கிருந்து போகச் சொல்லுங்க.”
“ப்ச்… சிஎம், அவங்களை அப்படி எல்லாம் பேசாதீங்க. பாவம் இவங்க.”
“யாரு? இவளா பாவம்?”
மகிழினியின் முகத்தில் கோபம் தெரிந்தது.
“இவ… இவ என்னை என்ன சொன்னா தெரியுமா!?”
“என்னங்க? ரேஷ்மா… அப்படி என்ன சொல்லி வச்சீங்க?”
“நோ நோ… நான் ஏதும் சொல்லல டார்லிங்.”
“ஏய்! பொய் சொல்லாதடி மேனாமினிக்கி!”
கொடிவீரன் மீண்டும் புருவத்தை உயர்த்தினான்.
“இவ சொல்றா… நான் படுக்க மாட்றேனாம்! தள்ளியும் படுக்க மாட்றேனாம்! நான் எங்க படுத்தா இவளுக்கு என்ன!? இவளுக்கு படுக்க இடம் இல்லனா ரோட்டுல போய்ப் படுக்கச் சொல்லு கொடி. இவ ஏன் நம்ம லைஃப்ல வரணும்?”
ரேஷ்மாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ஏய்! சிரிக்காதடி நாடகக்காரி!”
“என்ன? ரேஷ்மா… இதெல்லாம் ஏன் இப்படி எல்லாம் பேசி வச்சிருக்கீங்க?”
“ஐயோ டார்லிங்… நான் இதெல்லாம் உங்க நல்லதுக்குத்தான் பண்ணேன்.”
கொடிவீரனின் முகம் சீரியஸானது.
“எங்க நல்லது, கெட்டத நாங்க பார்த்துக்குறோம் ரேஷ்மா. எங்களைச் சேர்த்து வைக்கிறோம்னு நீங்க உங்க character-ஐ spoil பண்ணிக்காதீங்க. நீங்க இன்னொரு வீட்டுக்குப் போய் வாழ வேண்டியவங்க. So, please… எங்க விஷயத்துல நீங்க தலையிடாதீங்க.”
மகிழினியும் உடனே தன் பங்குக்கு ஆரம்பித்தாள்.
“ம்… ஆமா! தலை மட்டும் இல்ல… கை, கால், மூக்கு, நாக்குன்னு நீ எதையும் விடக்கூடாது. மீறி விட்ட… உன்னை நான் கொன்னு களையும்!”
“சரி சரி… அவங்க இனி உங்க வம்புக்கு வர மாட்டாங்க. நீங்க இவங்ககூட இருங்க. நான் போய் அத்தை எங்கேன்னு பார்த்துட்டு வர்றேன்.”
“ம்… ஹூம்… மாட்டேன். நான் உங்ககூடத்தான் இருப்பேன்.”
ரேஷ்மா உடனே சொன்னாள்.
“வீரா… நீங்க உங்க மிஸஸ் கூட இருங்க. உங்க அத்தையை நான் பார்த்துக்குறேன்.”
“Are you sure?”
“ம்… நான் பார்த்துக்குறேன் வீரா.”
“அப்படியே வேணுவையும் பார்த்துக்கோங்க.”
“ம்… கண்டிப்பா.”
“Thanks ரேஷ்மா.”
“It’s okay. Carry on. ஏதாவதுனா எனக்கு call பண்ணுங்க.”
“அதெல்லாம் பண்ண மாட்டாரு. நீ போடி!”
மகிழினியின் வார்த்தையைக் கேட்ட ரேஷ்மா சிரித்தாள்.
“உங்க வொய்ஃப்க்கு உங்க மேல love இருக்கான்னு எனக்குத் தெரியல. ஆனா… பயங்கரமான possessive இருக்கு.”
“ம்…”
“Okay வீரா… take care. காலையில அண்ணன் marriage-ல meet பண்ணலாம்.”
என்று சொல்லிவிட்டு ரேஷ்மா அறையை விட்டு வெளியேறினாள்.
கதவு மூடியதும் கொடிவீரனின் பார்வை முழுவதும் மகிழினியின் மீதே நிலைத்தது.
அவளை மெதுவாகக் கட்டிலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்தவன், அவளுடைய காலணிகளைக் கழற்றிவிட்டான்.
“ஏங்க… இந்தாங்க நைட் டிரஸ். போய் change பண்ணிட்டு வாங்க.”
“ஹ்ம்… ஹ்ம்… மாட்டேன். எனக்கு இந்த டிரஸ்தான் பிடிச்சிருக்கு. நான் இதையே போட்டுக்குறேன்.”
“சரி. ஏதாவது சாப்பிட்டீங்களா?”
“ம்… ஹூம். இல்ல. ஜூஸ் குடிச்சேன். ரெண்டு கிளாஸ் குடிச்சேன். Once more கேட்டேன். ஆனா, உங்க அத்தை தர மாட்டேன்னு சொல்லி… அவங்க மீதி எட்டு கிளாஸ் ஜூஸையும் குடிச்சிட்டாங்க.”
கொடிவீரன் வாயைப் பிளந்தான்.
“ஹ்ம்… ரெண்டு பேரும் மாறி மாறி ஜூஸ்னு சரக்கு அடிச்சிருக்கீங்க இல்ல?”
“என்ன சரக்கா!? நோ நோ… நான் நல்ல பொண்ணு. சமத்து பொண்ணு. நான் அதெல்லாம் குடிக்க மாட்டேன்.”
“ஆமா ஆமா… நீங்க ரொம்ப நல்ல பெண்குட்டிதான்.”
என்று சிரித்தபடி தன் மாற்றுத் துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றான்.