Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 3

CHAPTER 3

விவாதம் – 3

By S.K Velan · October 1, 2026

0

ஒரு வருடம் கடந்த நிலையில்

   ‘என் பெயர் கொடிவீரன். நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே என்னைக் கொடி என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். எனக்கு வயது 25. என் அப்பா ஆலையில் வேலை பார்க்கும் பொழுது இறந்து விட்டதால், எங்களுக்கு அவர் இழப்புக்காக கொடுத்த பணத்தை வங்கியில் போட்டு என் அம்மா குடும்பத்தை நடத்தி வருகிறார்.

   என் அக்காவுக்கு என்னை விட நான்கு வயது அதிகம்… அவள் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பால்வாடியில் பணி புரிகிறாள்.

சொந்த வீடு. மாடு கோழி வளர்ப்பதால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான செலவை பார்த்து கொள்ளும் விதமாக பணப்புழக்கம் வீட்டில் இருக்க தான் செய்தது.

என் அக்காவுக்கு ஏனோ இது வரை வரன் கிட்டவில்லை. காரணம் கேட்டால் கட்டம் சரியில்லை ராகு ரெண்டாம் வீட்டிலும்… குரு மூன்றாம் வீட்டிலும் அமர்ந்து இருக்கிறார் என்று ஜோசியக்காரர்கள் சொல்லும் கதையைக் கேட்டு புலம்புவது மட்டுமே என் அம்மாவின் முழு நேர வேலையாக மாறி இருந்தது.

நான் ஒரு பக்கம்… என் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி அலைந்தேன் எனக்கு வேலையும் கிடைத்தது. ஆனா,ல் வேலை எங்கள் சொந்த ஊரில் இருந்து 6 மணி நேர பிரயாண தூரம் என்பதால், நான் வேலை பார்க்கும் ஊரில் இருக்கும் என் நண்பன் சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் வாடகைக்கு இருக்க முடிவு செய்து, இன்று நான் என் ஊரில் இருந்து என் அம்மா அக்காவின் ஆசியுடன் வேறு ஊருக்கு வந்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் என்னை அழைத்து போக சுரேஷ் வந்து விடுவான் என்று பேருந்து நிலையத்தில் காத்திருந்த என் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல என் நண்பன்  வந்தான்.’

“ஹாய்டா மச்சான். எப்படிடா இருக்க? வீட்டுல அம்மா அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்றவன் என் பையை வாங்கி கொண்டு என்னை கட்டி தழுவினான்

 “ எல்லாரும் நல்லா இருக்காங்கடா. நீ எப்படி இருக்க? நம்ம நண்பன் பாண்டியன் சொன்ன ஒரே வார்த்தைக்காக, உன் வீட்டுல எனக்கு தங்க இடம் கொடுத்த பாரு மச்சி, உனக்கு ரொம்ப தேங்க்ஸ்டா” என்று நான் அவனுக்கு நன்றி சொன்னேன்.

  “என்னடா கொடி நீ? இந்த ஊருல உனக்கு வேலை கிடைத்து இருக்கு. நீ தங்க இங்கே எதாவது சின்னதா ரூம் ஏற்பாடு பண்ணி தர முடியுமான்னு பாண்டியன் தான் கேட்டான். சரி நீ எங்க இருந்து வெளிய எல்லாம் வீடு தேடி அலையனும்… எங்க வீட்டு மாடியிலயே ஒரு ரூம் சும்மா தான் இருக்கு, உன்னால முடிந்த வாடகையை தந்துட்டு நீ அங்கேயே இருந்துக்கலாம்னு, நான் தான் பாண்டியங்கிட்ட சொன்னேன்” என்றான் சுரேஷ்.

“இருந்தாலும் நீ பண்றது ரொம்ப பெரிய உதவிடா.” என்றான் மனதார.

“சரி சரி. அதெல்லாம் இருக்கட்டும்… உனக்கு கல்யாணம் முடிஞ்சுதா” எனக் கேட்டான்.

“ஏய்! இல்ல இல்ல. இன்னும் என் அக்காவுக்கே கல்யாணம் முடியல. அதுக்குள்ள நான் எங்க?” என்று பதறிப்போய் சொன்னான் கொடி.

“சரிடா. வா கிளம்பலாம்… நம்ம பைக்லயே போயிடலாம்…”

“உங்க வீட்டுல இருந்து நான் வேலைக்கு போற இடம் எவ்வளவு தூரம் இருக்கும்? நான் எதுல போனா சரியா இருக்கும்னு பார்த்து சொல்லுடா.”

“ஏன்டா எல்லாதையும் பஸ் ஸ்டாண்டுல நின்னுகிட்டே கேப்பியா. வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்…” என்று சுரேஷ் சொல்ல,”ம்” என்று கொடி சொன்னான்.

 சுரேஷ் தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில்,”சுரேஷ் கொஞ்சம் இரு. நான் கோவிலுக்கு போய்ட்டு ஒரு விளக்கு போட்டுட்டு வந்துடுறேன்.” என்று வண்டியை நிறுத்தச் சொன்னான்.

“என்ன? விளக்கு போட போறியா?” எனது வித்தியாசமாக நண்பனைப் பார்த்தான் சுரேஷ்.

“போய் இறங்கினதும் விளக்குப் போட அம்மா சொன்னாங்கடா.”

“ஆனா, நம்ம வீடு பக்கத்து தெரு தான்டா. வீட்டுக்கு போயிட்டு வந்து அப்புறம் கோவிலுக்கு வரலாம் இல்ல. இப்பவே எதுக்கு?”

“இல்லடா. முதல்ல கோவிலுக்கு போட்டுட்டு வர்றேனே. அப்ப தான் மனசுக்கு நிறைவா இருக்கும்… பிளீஸ்டா” என்றான் கொடி.

“சரி உன் உணர்வை நான் தப்புன்னு சொல்ல முடியாது. நீ போயிட்டு வா. நான் இங்க இருக்கேன்.”

“டேய்!! நீ கோவிலுக்கு வரலையா?”

“நான் உள்ள வந்தா, அந்தக் கடவுளை நான் கேக்குற கேள்வியில அந்த ஆளு இந்த ஊரை விட்டே ஓடிடுவான். அதனால  நீ போயிட்டு வா. நான் இங்கேயே ஒரு தம் போட்டுட்டு நிக்குறேன்.” என்று சுரேஷ் சொன்னதும்… கொடி நெய் விளக்கை வாங்கி கொண்டு கோவிலுக்குள் நுழைந்தவன், அங்கு இருந்த குழாயில் காலை அலம்பியப்படி கோவில் சன்னதிக்கு சென்றான்.

அங்கே நிறைய பேர் சாமியை வழிபட, தன் கையில் இருந்த விளக்கை ஏற்றுவதற்காக தீப்பெட்டியைத் தேடியவன், இவன் அருகில் விளக்கேற்றி கொண்டு இருந்த பெண்ணைப் பார்த்து, “ஏங்க கொஞ்சம் தீப்பெட்டி தரீங்களா? விளக்கு ஏத்திட்டு தரேன். பிளீஸ்ங்க” என்று அந்த பெண்ணிடம் கேட்க,

அவளோ இவன் பேச்சுக்கு செவி சாய்க்காமல், அவள் கையில் இருந்த விளக்கை ஏற்றியப்படி தன் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு   அங்கிருந்து நகர்ந்தாள்.

“இந்த ஊர்ல பொண்ணுங்க எல்லாம் ரொம்ப திமிரு பிடிச்சவங்களா இருப்பாங்க போ” என்று கொடி சொல்லி முடிக்கும் முன்பு பக்கத்தில் இருந்த விளக்கை கொண்டு அவன் கையில் சூடு வைத்தான் சிறுவன் ஒருவன்.

“யோவ்! என்ன? என் அத்தையை பார்த்து திமிர் பிடிச்ச பொண்ணுன்னு சொல்லுற. என்னயா கோவில்ல வந்து பொண்ணுங்கள சைட் அடிக்கிறியா?” என்று அந்த சிறுவன் கேட்டதும்… அங்கே சுற்றி இருக்கும் அனைவரும் அந்த சிறுவனையும்… கொடியையும் பார்த்து முறைத்தனர்.

சட்டென்று முகம் வேர்த்து போன கொடி, அங்கே ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை. கோவிலில் இருந்து வெளியே வந்தவனை பார்த்த சுரேஷ், “என்ன மச்சான். போன வேகத்துல ஓடி வர? என்ன சாமி கண்ணை குத்திடுச்சா” என்று கிண்டல் பண்ண,

“ஐயோ மச்சான்! உள்ள ஒரு குட்டி சாத்தான், கொஞ்ச நேரத்துல என்னை ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள தள்ள பாத்துட்டான். வா வா மச்சான் உன் வீட்டுக்கு கிளம்பலாம்… நான் நாளைக்கு வந்து சாமிக்கு விளக்கு போட்டுக்குறேன்” என்று சொன்ன கொடியை சிரித்தப்படியே சுரேஷ் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.

“மச்சான் இது தான் நம்ம வீடு. மாடியில தான் நீ தங்க போற.” என்று வீட்டைக் காண்பித்தான்.

“கீழே தான் நீ இருக்கியா மச்சான்?”

“எனக்குப் பக்கத்து ஊருல வீடுடா. சோ, நான் வார இறுதியில தான் இங்க வருவேன். என் பையனும்… என் பாட்டியும்… என் தங்கச்சியும் தான் கீழ் வீட்டுல இருக்காங்க.” என்றான் அவன்.

“என்னடா அதுக்குள்ள கல்யாணம்… பிள்ளைன்னு லைப்ல செட்டில் ஆகிட்ட போல.”

“அட ஏன்டா நீ வேற. நான் படிக்கப் போன டியூஷன் வீட்டுல, என் டீச்சரோட தங்கச்சி, வீட்டுல யாருமே இல்ல எனக்குக் கொஞ்சம் முருங்கைக் கீரை உடைச்சு தாங்க. நான் அதுல அடை போடணும்ன்னு சொன்னாள். நானும் பெரிய இவனைப் போல முருங்கை கீரையை உடைச்சு அவ கையில தந்தேன். அப்பன்னு பார்த்து ஜோன்னு மழை வேற. முருங்கைக் கீரை மரத்துல இருந்த கம்பிளி பூச்சி என் மேல விழ, நான் பயந்து அவ மேல விழ”

“ஐயோ அப்புறம்” என்றான் பதறி.

“ம் அடுத்த பத்தாவது மாசத்துல முருங்க வாயை வச்சிக்கிட்டு, எனக்கு ஒரு பையன் வேணு, வேணும்னே வந்து குதிச்சிட்டான்.” என்று கதை சொன்னான்.

“உலக வரலாற்றிலே இப்படி ஒரு FB யாருக்கும் இருக்காது மச்சான்.” என்று சிரித்தான் கொடி.

“ம் ஆனா, இதெல்லாம் பதினெட்டு, பத்தொன்பது வயசுல நடந்ததால என் பாட்டி என்னை ஊரை விட்டே ஒதுக்கி வச்சிட்டாங்க.”

“ஐயோ. அப்புறம்?”

“அப்புறம் என்ன, ஏதோ இப்போ தான் என் பாட்டி படுத்த படுக்கையா ஆகிட்டதால, என் மகனை மட்டும் ஏத்துக்கிட்டாங்க. அவனை காரணம் காட்டி நான் வாரக் கடைசியில் இங்க வந்துட்டு போவேன். என் பொஞ்சாதியை இந்த ஊர் பக்கமே வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அவளும் பாவம்… மீதம் இருக்குற நாலு பிள்ளையை பார்த்துகிட்டு வயித்து பிள்ளை காரி ரொம்ப கஷ்டத்தை அனுபவிக்கிறா.” என்றான் அப்பாவியாக.

“என்ன. உனக்கு 5 பிள்ளைங்களா?” என்று அதிர்ந்தான் கொடி.

“ஏய்! இல்ல இல்ல.” சுரேஷ் வேகமாய் மறுக்க,

“அதானே பார்த்தேன்” என்று நிம்மதியானான் கொடி.

“இந்த முறை ட்வின்ஸ். மொத்தம் ஆறு பிள்ளைங்க மச்சான்.” என்று பல்லைக் காட்ட,

“ஏன்டா? எப்படிடா?”

“வீட்டுல இருக்குற முருங்கை மரத்தை நான் தொடும் போதெல்லாம்… ஒரு பிள்ளை பிறக்குது. நான் என்ன மச்சான் பண்ணுறது.” அம்மாஞ்சி முகத்தை மாற்றாது சொன்னான் சுரேஷ்.

“ம் அப்ப வெட்டிடு” என்றான் பட்டென்று.

“டேய்! பாவி!” என்று அவன் அலற,

“சே நான் முருங்கை மரத்தை சொன்னேன் மச்சான். நீ வேற என்ன நினைச்ச?”

“நல்லா சொன்ன போ. சரி வா மாடிக்கு போகலாம்…”

“ம்” என்று சொன்னவனை சுரேஷ் தன் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றான்.

மொட்டை மாடியில் இருக்கும் ஒரு அறையை திறந்து,”இந்த ரூம்ல அட்டாச் பாத்ரூம் இருக்கு மச்சான். ஹாங் சாப்பாடு எல்லாம் உனக்கு இஷ்டம்னா நீ இங்க தனியா குக் பண்ணிக்கோ” என்றான்.

“இல்ல மச்சான். நான் ஹோட்டல்ல பாத்துக்கிறேன். எனக்கு குக் பண்ணத் தெரியாது.”

“டேய்!! அப்போ என் சிஸ்டர் கேட்டரிங் சர்வீஸ் தான் பண்ணுறா. அவளையே உனக்கும் சாப்பாடு தர சொல்லுறேன்.”

“ஐயோ அவங்களுக்கு ஏன்டா சிரமம்…”

“இல்ல மச்சான். அவ காலையில டிபன். மதியம் லஞ்ச். ஈவினிங் ஸ்நாக்ஸ் அண்ட் டீ. தென் டின்னர். இப்படி ஒரு IT கம்பெனிக்கு சாப்பாடு பண்ணி தருவா. அப்போ அதுல இருந்து உனக்கும் சாப்பாடு தர சொல்லுறேன்.”

“ம் அவங்க அதுக்கு காசு வாங்கிக்கிற மாதிரி இருந்தா எனக்கு ஓகே தான்.”

“நீ பணம் தரலைனாலும் என் மவன் உன்கிட்ட வாங்கிடுவான். ஏன்னா அவன் தான் என் தங்கச்சிக்கு எல்லாமே.”

“எல்லாமேனா?” புரியாது கேட்டான் நண்பனிடம்…

“அவனுக்கு ஏழு வயசு தான்டா. ஆனா, பயபுள்ள 7 ஊர் வாய் பேசுவான். சரியான ஏழரை. என் சிஸ்டர் பண்ற பிசினஸ் கணக்கு வழக்கு எல்லாம் இவன் தான் பாத்துப்பான்.”

“ஏழு வயசுல இவ்வளவு திறமையா? ஆச்சரியமா இருக்குடா” என்றான் கொடி.

“அவன் அவங்க பாட்டி ரிவால்வர் ரீட்டா மாதிரி.”

“என்ன கீதாவா?”

“ஏன்டா பாவி. நான் எங்க அப்படி சொன்னேன். ரீ ரீ ரீட்டா.” என்று கத்திச் சொன்னான்.

“ஓ இப்பப் புரியுதுடா.”

“சரி மச்சான். நீ குளிச்சிட்டு ரெடியா இரு. சாப்பிட்டுட்டு நானே உன்னை நீ வேலை பாக்க போற இடத்துக்கு அழைச்சிட்டு போறேன்.”

“ம் சரிடா” என்று கொடி சொன்னதும்… மாடியில் இருந்து சுரேஷ் கீழே இறங்கிச் செல்ல, தனக்கு தந்த அறையில் அவன் பையை வைத்த கொடி, அவன் அறையில் இருந்து வெளியே வந்தான். மொட்டை மாடியின் அழகை ரசிக்க, அங்கே அதிகப்படியான மல்லிகைச் செடிகள் இருப்பதை பார்த்தவன், அந்தப் பூக்களின் வாசத்தை நுகர்ந்தபடி புது ஊரின் அழகை மொட்டை மாடியில் நின்றபடி ரசித்து கொண்டு இருக்க, அதே சமயம் அவன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல் போன் மணி ஒலித்தது.

“சொல்லுங்க அம்மா நானே உங்களுக்குக் கால் பண்ணனும்னு நினைச்சேன்” என்று பேசியவன், மல்லி செடியில் பூத்த பூக்களினை ஒவொன்றாக பறித்து கீழே போட்டபடி  தன் அம்மாவிடம் பேச தொடங்கினான்.

“என்னப்பா புது வீடு எப்படி இருக்கு? அங்க இருக்குற மனுஷாளுங்க எல்லாம் நல்ல விதமா இருக்காங்களா? ஹாங் நான் உன் ஜாதகத்தையும்… உன் அக்கா ஜாதகத்தையும் ஜோசியர்கிட்ட காட்டினேன்பா. உன் அக்காவுக்கு இந்த வருஷம் கண்டிப்பா கல்யாணம் முடிஞ்சிடுமாம்… உனக்கும் கூட சீக்கிரம் கல்யாணம் முடியுமாம்… ஹாங் அப்புறம் நீ வேலை பாக்குற இடத்துல உன்னை கொடின்னு எல்லாம் அறிமுக படுத்திக்காத. யாராவது உன் பெயர் என்னனு கேட்டா வீரான்னு சொல்லு” என்று நான்ஸ்டாப்பாக அம்மா பேசிய பேச்சை கேட்டு சிரித்தான்.

“ஏன்டா சிரிக்குற?” என்ற தாயின் அதைட்டலில்,

“அம்மா உங்க ராசி பலன் பாக்குற வேலையை நீங்க எப்போ தான் நிறுத்த போறிங்களோ?” என்றான்.

“அதெல்லாம் உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் முடிந்த கையோடு நிறுத்திடலாம்… சரி நான் சொன்ன மாதிரி விளக்கு போட்டுட்டு தானே நீ இப்போ தங்க போற வீட்டுக்கு போன?” என்று கேட்டார்.

“இல்ல அம்மா. நான் கோவிலுக்கு போனேன் தான். ஆனா, அங்க ஒரு குட்டி சாத்தான் என்னை விளக்கு போட விடல.”

“ஐயோ என்ன தம்பி இது? சரி நாளைக்கு விளக்கு போட்டுட்டு வேலைக்கு போ புரியுதா?”

“ம் சரிம்மா.”

“சாப்பாடு எல்லாம் எப்படிப்பா?” என்று அடுத்த கேள்விக்குத் தாவினார்.

கொடி – என் நண்பனோட சிஸ்டர் தருவாங்க போல நம்ம பே பண்ணிடனும்…”

“சரிப்பா. உடம்ப பாத்துக்கோ. தினமும் நைட்டு எனக்கு போன் பண்ணு. பொன் பண்ண மறக்காத.”

“ம் சரிம்மா. அக்காவை கேட்டேன்னு சொல்லு. நான் நைட்டு அக்காவுக்குக் கால் பண்ணுறேன்.” என்று சொன்ன கொடிவீரன் அவனை அறியாமல் தன் அம்மாவிடம் பேசியப்படி, மொட்டை மாடியில் இருந்த மல்லி செடியில் பூத்த பூக்களை எல்லாம் கீழே பிச்சி போட்டுக்கொண்டு இருந்தான்.

அதே சமயம் மாடிக்கு ஏறி வந்த பெண், “ஐயோ என் உயிர். என்ன பண்ணுறீங்க நீங்க? யாரு நீங்க? ஏன் என் பூவை எல்லாம் சாகடிச்சீங்க?” என்று இவன் நெஞ்சை உருக்கும் குரலில், ஆதங்கத்துடன் இவன் கண் முன் வந்து நின்று இருந்தவள் நெற்றியில், சந்தன பொட்டும் சாம்பல் நிற சேலையில் கூட தேவதையை போல காட்சி தந்தாள். அவளின் கண்கள் மட்டும் பொலிவு இழந்த நிலையில் இருந்தன. இவன் கோவிலில் பார்த்த அதே மங்கை.

கொடி கிள்ளிப் போட்டப் பூக்களை எல்லாம் அள்ளி எடுத்துத் தன் இதயத்தோடு அணைத்து கொண்டவள் கண் எதிரில், கொடிவீரன் ஏதும் புரியாதவனாக நின்று இருந்தான்.

“யோவ் நீ எப்படியா எங்க வீட்டுல இருக்க? என்ன கோவில்ல என் அத்தையை சீண்டி பார்த்தது போதாதுன்னு, இப்போ வீட்டுக்கே வந்துட்டியா? ஆளையும் அவனையும் பாரு. யோவ் உன்னை தான்யா” என்று ஏழு வயது சிறுவன் கத்தும் சத்தம் கேட்டு சுரேஷ் மாடிக்கு ஓடி வந்தான்.

“என்ன என்ன சத்தம் இங்க? டேய்! மச்சான் என்னடா?” என்று சுரேஷ் குழப்பத்துடன் கேள்வி கேட்க,

“இல்ல மச்சான். அது வந்து” என்று கொடிவீரன் தன் எதிரில் நின்று இருந்த பெண், அவள் கையில் அள்ளி எடுத்த மலர்களை பார்த்து முகம் வாடி நிற்பதைக் கண்டான்.

“இல்லடா. இவங்க நான் அந்த மல்லி செடியை” என்று கொடி நடந்ததை சொல்ல வருவதற்குள், சுரேஷ் என்ன நடந்து இருக்கும் என்று யூகித்து கொண்டவன்

“ஐயோ மச்சான்! நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். இதோ இங்க இருக்குற பூ செடிங்க இது மேல மட்டும் எக்காரணத்தை கொண்டும் நீ கை வச்சிடாத. அதோட உன் சாப்பாட்டுல என் பையன் உனக்கு விஷம் வச்சிடுவான். ஏன்னா என் தங்கச்சியின் உசுரே இந்த பூச்செடிங்க தான்” என்று சுரேஷ் சொல்ல, கொடி தன் எதிரில் நின்று மல்லி பூக்களை தன் இதயத்தோடு அணைத்து கொண்டு அந்த பூக்களுக்கு ஆறுதல் சொல்லும் அந்த பெண்ணை குழப்பதுடன் பார்த்தான்.

 கொடியை விரல்களால் சுண்டி அழைத்த சிறுவன், “யோவ். உன்னை பார்த்தா அவ்வளவு நல்லவன் போல இல்லையே. யாருயா நீ?” என்று அந்த சிறுவன் கேட்டதும்… சுரேஷ் அந்த சிறுவனின் வாயில் ஒரு குத்து விட்டான்.

“டேய்! வாண்டு, இவன் என் நண்பன். இவனுக்கு இந்த ஊருல வேலை கிடைச்சு இருக்கு. இவன் இனிமே மாடியில இருக்குற ரூம்ல தான் தங்க போறான்” என்ற சுரேஷ் கொடியை பற்றி அந்த சிறுவனிடம் சொல்ல, கொடியோ. தன் எதிரில் பூக்களை பார்த்து வருந்தியப்படி நின்று இருந்த பெண்ணை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தான்.

“ஏன்யா தகப்பா. உன்னையே ஏதோ என் பாட்டி என் முகத்துக்காக பாவம் பார்த்து தான் இந்த வீட்டுக்குள்ள சேர்த்து இருக்காங்க. அப்படின்னு பார்த்தா நீயே வேஸ்ட் லக்கேஜ். இப்போ இதுல வேற உனக்கு ஏன் எக்ஸ்ட்ரா லக்கேஜ்” என்று அந்த சிறுவன் சொன்னதும் சுரேஷ் மீண்டும் அந்த சிறுவனை பார்த்து ஒரு குத்துவிட்டான்.

“மச்சான் இவன் தான் நான் பெத்த ஏழரை. பெயர் வேணு. ரொம்ப பேசுவான். ஆனா,, இவன் வாயை அடைக்க எனக்கிட்ட ஒரு வழி இருக்கு. இதோ பாரு முருங்கை குச்சி. இத இவன் வாயில சொருகிட்டா போதும் பயபுள்ள கொஞ்ச நேரத்துக்கு வாயை திறக்க மாட்டான்.” என்று சுரேஷ் சொன்னப்படி தன் பாக்கெட்டில் இருந்த முருங்கை கீரை குச்சியை வேணு வாயில் திணித்தான்.

“சரி மச்சான். நான் இவனை தூக்கிகிட்டு கீழே போறேன். நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா. நம்ம நீ வேலை பாக்க போற இடத்தை போய் பார்த்துட்டு வந்துடுவோம்” என்று சொல்லிக்கொண்டே சுரேஷ் வேணுவை தூக்கிக்கொண்டு கீழே சென்றான்.

“ஏங்க சாரிங்க. நான் வேணும்னே இந்த பூவை எல்லாம் கிள்ளி கீழே போடல. ஏதோ தெரியாம தான்” என்று கொடி மனம் வருந்தி அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க,

அவளோ இவனை ஏறெடுத்து கூடப் பார்க்கவில்லை. அந்தப் பூக்களை எல்லாம் தன் சேலை முந்தானையில் முடிந்து வைத்து கொண்டவள், மாடியில் இருந்த ஒரு வாளி தண்ணீரை எடுத்து. மல்லிச் செடிகளுக்கு ஊற்றியப்படி அந்த இடத்தை அழகாக சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அவளின் செயலைப் பார்த்துக் கொண்டு இருந்த கொடி வீரனின் தோளை தட்டினான் சுரேஷ்.

“என்னடா. இன்னுமா நீ குளிக்க போகல. போ குளிச்சிட்டு வா” என்றான்.

“இவங்க?” என்று கொடி அந்த பெண்ணை சுட்டி காட்டி கேட்டதும்…

“நான் தான் சொன்னேனே. இவ என் தங்கச்சி.” என்றான்.

“நான் அவங்ககிட்ட சாரி சொல்லுறேன். ஆனா, அவங்க…”

“சரி சரி விடு. தெரியாம தானே பண்ண. போ போய் குளிச்சிட்டு வாடா.” என்று சுரேஷ் கொடியின் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக ரூமுக்குள் தள்ளியவன் தானும் கீழே இறங்கி சென்றான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!