Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 2

CHAPTER 2

விவாதம் – 2

By S.K Velan · October 1, 2026

0

Part 2

“உங்க பெயர் என்ன?” என்று கேட்டாள் சித்ரமகிழினி.

“என் பெயர் தெரியாம தான் நீங்க என்னை மாப்பிளை பார்க்க வந்திங்களா?” என்று அவன் கேட்டதும் மகிழினி விழித்தாள்.

“சரி சரி. அந்த அழகான கண்களை அப்படி எல்லாம் சுத்த விடாதீங்க. பிஞ்சு மனசு தாங்காது” என்று இவன் அவள் அழகை ரசித்தவனாக நின்று இருக்க,

“மாப்பிள்ளை தம்பி. வாங்க நேரமாகுது. சீக்கிரமா போய் உங்க கல்யாணத்துக்கு நாள் குறித்துப் புது துணி எல்லாம் வாங்கணும்” என்று தூரத்தில் இருந்து புரோக்கர் அழைத்தார்.

“ஓகே மகிழ். நான் கிளம்புறேன். ஹாங் நீங்க கேட்ட கேள்விக்கு நானா பதில் ஏதும் சொல்ல மாட்டேன். வேணும்னா நீங்க உங்க பாட்டியை கேட்டு தெரிஞ்சிக்கோங்க” என்று சொன்னவன் அவளுக்காக இவன் வாங்கி வந்த மல்லிகை சரத்தை மகிழினி கையில் தந்தப்படி கோவிலை விட்டு வெளியேறினான்.

“சித்து வாமா. ஆட்டோ வந்துடுசசி” என்று பாட்டி அழைத்ததும்… மகிழ் கடவுளை பார்த்து மீண்டும் கையெடுத்து கும்பிட்டவள், கோவிலில் இருந்து அவள் பாட்டி வீட்டிற்கு சென்றாள்.

“என்ன சித்து. மாப்பிள்ளை என்ன சொல்லுறாரு? உனக்கு அவரை பிடிச்சி இருக்கா?

“ம் பிடிச்சி இருக்கு பாட்டி.”

“மாப்பிள்ளை சென்னையில வேலை பாக்குறாரு. போதாக்குறைக்கு அவர் போலீஸ் வேற. அதனால  தான் நம்ம பக்கத்து வீட்டு செங்கோட்டையன்கிட்ட சொல்லி நேத்து நைட்டே மாப்பிள்ளையை பற்றி விசாரிக்க சொன்னேன். அவனும் விசாரிச்சு இன்னைக்கு தான் மாப்பிளையை பற்றி நல்ல விதமா சொன்னான். அதான் உடனே நம்ம மாப்பிளையை பார்த்துட்டு வந்துடலாம்னு உன்னை இன்னைக்கு கோவிலுக்கு அழைச்சிட்டு போனேன்” என்றார்.

“ம்” என்றாள் மெல்லிய குரலில்.

“என்ன சித்துமா, உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே?” என்றார் திரும்பவும்…

“ஏன் பாட்டி. அப்போ எனக்கு இவர் கூட கல்யாணம் நடந்தா. நானும் சென்னைக்கு போகணுமா?” எனக் கேட்க,

“ஏன் போகாம. நீ இங்க இருந்து என்ன பண்ண போற? மாப்பிள்ளை கூட போய்தான் ஆகணும்…” என்றார் பாட்டி.

“அப்போ நீங்க?” என்று கேட்டாள் மகிழ்.

“நான் மாசம் மாசம் உங்களை பாக்க மாப்பிள்ளை வீட்டுக்கு வருவேன். சரிதானே?” என்றதும் அவள்”ம்” என்று தலையசைக்க,”என்னமா? என்னாச்சு?” என்றார் பாட்டி.

“உண்மையாவே நீங்க அண்ணனை என் கல்யாணத்துக்கு கூப்பிட மாட்டிங்களா பாட்டி?”

“கண்டிப்பா கூப்பிட மாட்டேன். படிக்க போன இடத்துல ஒரு பெண்ணைக் காதலிச்சு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு, நம்ம நினைவே இல்லாமல் இருக்குற நன்றி கெட்டவனை எல்லாம் உன் கல்யாணத்துக்கு கூப்பிட முடியாது சித்து.” என்றார் கோபமாக.

“சரி சரிப்பாட்டி. நீங்க கோவப்படாதீங்க. அமைதியா இருங்க” என்று பாட்டியின் கோவத்துக்கு ஆளாகாமல் மகிழினி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தவள், இன்று தன்னை பெண் பார்க்க வந்தவனின். நடை உடை பாவனையை எல்லாம் தனக்குள் எண்ணிப் பார்த்து  தலையணை கீழ் இவள் மறைத்து வைத்து இருந்த மாப்பிளையின் புகைப்படத்தை கையில் எடுத்தாள்.

“ம் உங்க பெயர் என்னவா இருக்கும்? நான் வேணா போய் பாட்டியை கேட்க வா? ஐயோ வேணா வேணாம். பாட்டி இப்போ தான் அண்ணன் மேல இருக்குற கோவத்துல என்கிட்ட மூஞ்சி காட்டினாங்க. ஆனா,லும்… உங்க பெயரை இப்போ நான் எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்று தனக்குள் பல கேள்விகளை கேட்டுக்கொண்டாள்.

   சில நிமிடத்தில் மீண்டும் அந்த போட்டோவை தலையணை கீழ் வைத்தப்படி பாட்டியிடம் செல்ல, “இன்னும் பத்து நாள்ல கல்யாணமா. அவ்வளவு சீக்கிரமா. எப்படி தம்பி?” என்று பாட்டி போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்ததை கேட்டவளுக்கு அப்பட்டமாக தெரிந்தது பாட்டி மாப்பிளையிடம் தான் பேசுகிறார் என்று.

“சரி மாப்பிள்ளை. நீங்க இவ்வளவு சொல்றிங்க. இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு. நான் சித்ராகிட்ட பேசிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன்” என்று சொன்ன பாட்டி அழைப்பைத் துண்டித்தார்.

“யாரு பாட்டி போன்ல.?”

“மாப்பிள்ளை தான்மா. இன்னும் பத்து நாள்ல ஒரு நல்ல நாள் இருக்காம்… அதான் நமக்கு சம்மதம்னா. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண அவரே எல்லா ஏற்பாடும் பண்ணுறேன்னு சொல்லுறாரு. நீ என்ன சொல்ற?” என்றார் அவர்.

“என்ன? இன்னும் பத்து நாள்லயா?” என்று அதிர்ந்து கேட்டாள்.

“ம் ஆமாம் சித்ராமா.”

“என்னப்பாட்டி இது. எல்லாமே இவ்வளவு சீக்கிரமாவா?”

“நானும் அதான்மா கேட்டேன். இதே மாதிரி நீ கேள்வி கேட்டா. மாப்பிள்ளை உன்னை அவருக்கு போன் பண்ண சொல்லுறாரு. அவரு உன்கிட்ட பேசிக்கிறாராம்… இந்தா அவருக்கு போன் பண்ணி பேசு.” என்று போனை நீட்டினார்.

“ஐயோ! நானா? ஹ்ம் ஹ்ம் போன்லாம் வேணா பாட்டி. எனக்கு சங்கடமா இருக்கு” என்றாள் பதறியபடி.

“அட பேசு. இந்தா பிடி. இப்போ தான் மாப்பிள்ளை தம்பி பேசிட்டு போனை கட் பண்ணாரு, நீ அந்த நம்பர்க்கே கால் பண்ணு. சரியா?” எனக் கேட்க,

“ம்” என்று தலையசைத்தாள் அவள்.

“சரி நீ பேசு. நான் பக்கத்துல போயிட்டு வரேன்.” என்று சொன்ன பாட்டி அங்கிருந்து வெளியே செல்ல,, முதலில் தயங்கிய மகிழினி தைரியத்தை வர வைத்து தன்னை பார்க்க வந்த மாப்பிளைக்கு போன் செய்தாள்.

மறுமுனையில் ‘ஹலோ” என்ற அவன் குரலை கேட்டு, மகிழினி அமைதியாக இருக்க, “ஹலோ. போன் பண்ணிட்டு ஏன் அமைதியா இருக்கீங்க. எதாவது கேளுங்க மகிழ்?” என்று அவன் கேட்டான்.

  தனக்குள் சிரித்த மகிழ்,”என்ன கேக்குறது. அதான் நான் கேட்டதுக்கே நீங்க இன்னும் பதில் சொல்லலையே.?” என்க,

“அப்படியா? நீங்க கேட்டு நான் என்ன சொல்லல.?” என்றான் பதிலுக்கு.

“நான் தான் உங்க பெயர் என்னனு கேட்டேனே.” என்று சிணுங்கினாள்.

“இன்னுமா நீங்க என் பெயரை கண்டுபிடிக்கல?”

“ஹ்ம் ஹ்ம் இல்ல.”

“ஏன். உங்க பாட்டிகிட்ட கேட்க லையா? கேட்டிருந்தா அவங்க சொல்லிருப்பாங்களே.”

“அது பாட்டி என் அண்ணன் மேல இருக்குற கோவத்துல இப்போ கொஞ்சமா டென்சன்ல இருக்காங்க. அதான் அவங்கிட்ட நானா ஏதும் கேட்க ல. கேட்டா சொல்லுவாங்க தான். ஆனா, கேட்கத் தோணலை” என்றாள் மகிழ்.

“ஓ இப்போ என்ன பண்ணலாம்…?”

“ஏன். உங்க பெயர் என்னனு நீங்க சொல்ல மாட்டீங்களா?”

“ஹ்ம் ஹ்ம்… நானா சொல்ல மாட்டேன்னு தானே சொன்னேன்.”

“சரி. நான் போனை வைக்கவா?

“ஹலோ ஹலோ இருங்க மகிழ். என்ன கோவமா?” எனக் கேட்டான் அவன்.

“இல்ல இல்ல.” என்றாள் வேகமாக.

“பின்ன ஏன் அதுக்குள்ள போனை கட் பண்ணறீங்க?” என்று கேட்க, அவள் அமைதியாக இருக்கவும்…”சரி. பாட்டி நம்ம கல்யாணத்தை பற்றி என்ன சொன்னாங்க?”

அவனின் ஆர்வம் புரிந்தாலும்…”இன்னும் முடிவா ஏதும் சொல்லல.” என்றாள் சித்ரமகிழினி.

“நீங்க கவலைப்படாதீங்க. இன்னும் பத்து நாள்ல நம்ம கல்யாணம் நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.”

“நான் கவலைப்படுறேன்னு உங்ககிட்ட நான் எப்போங்க சொன்னேன்.” என்று கேட்டாள்.

“அப்போ நீங்க என்னை கல்யாணம் பண்ணலைனா, நீங்க கவலைப்பட மாட்டீங்களா?”

“பெயர் தெரியாத ஆளை நினைத்து கவலைப்பட என்ன இருக்கு?” என்று பதிலடி கொடுக்கவும்…”ஓ” என்றான்.

“சரி. நான் போனை வைக்கிறேன்.” என்று அவள் சொல்ல,

“ஏங்க ஏங்க வைக்காதீங்க. வேனும்னா உங்க போன் நம்பர் தந்துட்டு இந்த போனை கட் பண்ணுங்க.” என்றான் அவனும்…

“எனக்குன்னு தனியா போன் எல்லாம் இல்ல.”

“என்னங்க சொல்றிங்க. இந்த காலத்துல போன் இல்லாத மனுஷனா. எப்படிங்க இப்படி ஆச்சர்யப்படுத்துறீங்க.?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் அவன்.

எனக்குன்னு தனியா போன் இருந்தா, நான் என் அண்ணாகிட்ட பேசிடுவேன்னு, என் பாட்டி எனக்கு போன் வாங்கி தரல.”

“ரொம்ப வில்லித்தனமான பாட்டி போல.” என்று சற்றே கிண்டலாகக் கேட்டான்.

“இங்க பாருங்க. என் பாட்டியை பத்தி இப்படி எல்லாம் பேசுனா, அப்புறம் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லிட்டேன்.” என்று கோவம் கொள்ள,

“ஐயோ இல்ல இல்லைங்க. உங்க பாட்டி ஹீரோயின் தான். வில்லி எல்லாம் இல்ல. நீங்க கோவப்படாதீங்க” என்றான் வேகமாக.

“ம்” என்றாள் சித்ரமகிழினி.

“சரி. உங்களுக்கு என்னை உண்மையாவே பிடுச்சிருக்கா?”

“அதான் கோவில்லையே சொன்னேனே. பின்ன என்னவாம்… அடிக்கடி கேட்குறீங்க?”

“அப்போ இன்னும் பத்து நாள்ல நமக்கு கல்யாண ஏற்பாடு பண்ணலாம்… இல்லையா?”

“அதெல்லாம் நீங்க பாட்டிகிட்ட கேட்டுக்கோங்க. எனக்கு எதுவும் தெரியாது என்றாள்.”

“ம்…  அது சரி.”

“அப்ப நான் போனை வைக்கவா?”

“ம்…  வையுங்க.” என்றான் அவன்.

“அப்போ நீங்க உங்க பெயரை சொல்லவே மாட்டிங்களா?” என்றவள் குரல் குறைந்திருந்தது.

“ம் அதையும் உங்க பாட்டிகிட்டே கேட்டு தெரிஞ்சிக்கோங்க” என்று கிண்டலாக சொன்ன மாப்பிள்ளை. செல் போன் இணைப்பை துண்டிக்க.

“ரொம்ப கிண்டல் பிடித்த ஆளு தான் போல.” என்று மகிழினி தனக்குள் அவனை ரசித்தவளுக்கு, அன்றைய இரவில் இருந்து அவனது பெயரை தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடிப் போனது.

மறுநாள் மாலை,”அம்மாடி சித்ரா. இன்னும் நாலு ஐந்து பேர்கிட்ட சொல்லி வச்சி மாப்பிளை தம்பியை பற்றி தீர விசாரிச்சிட்டேன்மா. அவரு ரொம்ப நல்ல பிள்ளையாம்… எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம்… எனக்கு என்னவோ உன் அம்மாவோட ஆசி தான், உனக்கு இந்த மாப்பிள்ளை அமைந்து இருக்காருன்னு தோணுது.”

“மாப்பிள்ளை சொன்னது போல இன்னும் பத்து நாள்ல கல்யாணம் வச்சிக்கலாம்… அவரு நம்மள சென்னைக்கு வர சொல்லிட்டாரு. அங்கேயே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னார். நம்ம அங்க போனதும் அவர் வீட்டுலேயே தங்கிக்கலாம்னு சொல்லுறாரு. அதைவிட முக்கியமா. அவர் உன் கழுத்துல தாலி கட்டியதும்… அவர் வளர்ந்த ஆதரவற்ற இல்லத்துல இருக்குறவங்களை பார்த்து, அவங்க கூட தான் கல்யாண சாப்பாடு சாப்பிடணுமாம்… இன்னும் என்னென்னமோ அந்த புள்ள சொல்லுது மா. ஆனா, அது என்ன சொன்னாலும்… அது பேசுற ஒவ்வொரு வார்த்தையிலும்… உன் மேல அந்த புள்ளைக்கு இருக்குற அளவுக்கடந்த அன்பு தான்மா தெரியுது.” என்றார் சந்தோசமாக.

“ஏன் பாட்டி? ஆனா,” என்று நிறுத்த,

“ஆனா,, என்னமா?” எனக் கேட்டார்.

“எனக்கு என்னமோ இதெல்லாம் ரொம்ப சீக்கிரமா நடக்குற மாதிரி தோணுது.”

“எதெல்லாம்?” என்றார் புரியாது.

“இல்ல நேத்து தான் அவரு என்னை பெண் பார்க்க வந்தாரு. அதுக்குள்ள இன்னும் பத்து நாள்ல கல்யாணம்னா, எதோ வேகமா போற மாதிரி இருக்கு.” என்றவள் மனதில் சிறு கலக்கம்…

“நீ என்ன சித்ரா இப்படி பேசுற. அங்கங்க பெண் பார்த்துட்டு போற மாப்பிள்ளைங்க, பொண்ணு வீட்டுல பணம்… வண்டி, வீடு, வாசல்னு வரதட்சணை என்ற பெயர்ல அவங்க சொத்தையே பிடுங்கி ஏப்பம் விடுவானுங்க. போதாக்குறைக்கு, மாப்பிள்ளை வீட்டுல அவங்க அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, மாமா, மண்ணாங்கட்டின்னு ஊறப்பட்ட பிக்கல் பிடுங்கல் இருக்கும்… ஆனா, இந்த தம்பி பக்கம் பார்த்தியா, உனக்கு எந்த தொல்லையும் இல்ல. அதுக்காக உன் பாட்டி இந்த பையனை பற்றி விசாரிக்காம, உன்னை கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க பாக்குறேன்னு நீ என்னை தப்பா நினைக்க போற. நான் இந்த புள்ளையை பற்றி நல்லா விசாரிச்சிட்டேன். நீ என்னை நம்பலாம்…” என்று அவளின் கலக்கம் புரிந்து விளக்கம் அளித்தார் பாட்டி.

“ஐயோ பாட்டி. இந்த உலகத்துல உங்களை தவிர நான் வேற யாரை நம்ப போறேன். நீங்க என்ன பண்ணாலும் அது என் நன்மைக்குன்னு எனக்கு தெரியும் பாட்டி.”

“ஹ்ம்… உன் அம்மா அப்பா இருந்திருந்தா. ஏன்டி என் மகளுக்கு பத்திரிகை அடித்து, ஊரை கூட்டி கல்யாணம் பண்ணலைன்னு சண்டைக்கு வருவாங்க இல்ல. உனக்கும் அந்த மாதிரி ஆசை இருக்காடா.” எனக் கேட்டார்.

“இல்ல பாட்டி. என்னதான் ஆடம்பரமாக கல்யாணம் பண்ணாலும்… வாழ போறது ரெண்டு பேர் தானே. அதனால  எனக்கு விமர்சையா கல்யாணம் பண்ணிக்கணும் என்ற ஆசை எல்லாம் இல்ல.”

“நல்லது மா. சரி. நம்ம உன் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே மாப்பிள்ளை ஊருக்கு போகனும்… அங்க போய் உங்க கல்யாணத்த முடிச்சிட்டு. மறுநாள் நீயும் மாப்பிளையும் இங்க வரும் போது, அக்கம் பக்கத்துல இருக்குறவங்கள கூப்பிட்டு சின்னதா விருந்து வச்சிடலாம்… சரியா?”

“ம் சரிப்பாட்டி.” என்று ஆமோதிப்பாய் மகிழினி சொல்ல, பாட்டி தன் பேத்தி கல்யாணத்துக்கு தேவையான ஆடை அணிகலங்களை எல்லாம் வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.

தன் திருமணத்திற்கு தன்னுடைய அண்ணன் வர போவது இல்லை என்ற கவலை ஒரு புறமும்… இன்னும் மாப்பிள்ளையின் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கோவம் மறுபக்கமுமாக மகிழினிக்கு நாட்கள் நகர, தினமும் மாப்பிளை கைபேசியில் பேசும் அரைமணி நேர உரையாடல் பாட்டியிடமும்… அதை விட இருமடங்கு அதிகமாக மகிழினியிடம் பேசும் நேரமும் கூடி இருக்க, நாட்கள் வேகமாக நகர்ந்தது.

அன்றைய தினம்… பாட்டியும் சித்ரமகிழினியும்… பக்கத்து வீட்டுக்காரரான செங்கோட்டையன் துணையோடு சென்னையில் உள்ள மாப்பிளையின் வீட்டுக்கு சென்று இறங்கினர்.

மாப்பிளை பையன் இவர்களை வரவேற்க வாசலில் நின்றான். மகிழினி ஓரக்கண்ணில் இவனை ரசிக்கும் அழகை இவனும் ரசித்து இருந்தான்.

“என்ன தம்பி. இந்த வீட்டுல தான் நீங்க இருக்கீங்களா” என்று ஆரம்பித்தார் பாட்டி.

“ம் ஆமா பாட்டி. வாங்க உள்ள வாங்க. வாங்க மகிழ். அண்ணா நீங்களும் வாங்க” என்று மாப்பிளை இவர்களை தன் வீட்டிற்குள் அழைத்து வந்து இருக்கையைக் காண்பித்து, உக்காருங்க. நான் தண்ணி கொண்டு வரேன்.” என்றான்.

“இல்லப்பா. வரும் போது தான் டீ குடிச்சிட்டு வந்தோம்… இப்ப எதுவும் வேண்டாம்…” என்றார் பாட்டி.

“சரிப்பாட்டி. நீங்களும் மகிழும் இங்க தங்கிக்கோங்க. அதோ அங்க ஒரு ரூம் இருக்கு. அண்ணா நம்ம மாடியில தங்கிக்கலாம் வாங்க.” என்று செங்கோட்டையனை அழைக்க,

“இருக்கட்டும் தம்பி. என் அக்கா வீடு இந்த ஊருல தான் இருக்கு. நான் போய்ட்டு நாளைக்கு காலையில வரேன். பாட்டி நான் கிளம்புறேன். சித்ரா நான் போயிட்டு வரேன்மா. தம்பி. கல்யாண வேலை எதாவது இருந்தா சொல்லுப்பா. அண்ணன் வேணா இங்கேயே இருந்து முடிச்சு தரேன்.” என்றார்.

“இல்ல அண்ணா. நான் எல்லாமே முடிச்சிட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சி மகிழ் கழுத்துல தாலி கட்ட வேண்டியது தான் பாக்கி.”

“விட்டா நீங்க இப்பவே தாலி கட்டிடுவீங்க போல.” என்றார் கிண்டலாக.

“பின்ன. ஆம்பள பிள்ளைனா இப்படி தான் இருக்கணும்… பாருங்க இந்த வீடு கூட எவ்வளவு சுத்தமா இருக்கு. தனக்கு தேவையானதை இந்த புள்ள தானாவே எப்படி எல்லாம் நடத்திக்குது பாருங்க. ஹ்ம்ம்… எனக்கும் தான் ஒரு பேரன் இருக்கானே. பிஞ்சிலே பழுத்தவன்.” என்று அலுத்துக் கொண்டார் பாட்டி.

“பாட்டி” என்று மகிழ் பாட்டியை அமைதிப்படுத்த,

“ஆமா. அண்ணனை சொன்னா இவளுக்கு பொத்திகிட்டு வந்துடும்… சரி தம்பி. நான் போய் கொஞ்ச நேரம் கண் மூடுறேன். மண்டைக்குள்ள ட்ரெயின் ஓடுற மாதிரியே இருக்கு.” என்று சொல்லிக்கொண்டே பாட்டி ஒரு ரூமுக்குள் நுழைய, மகிழினியின் பக்கத்து வீட்டு அண்ணன் செங்கோட்டையன் மாப்பிளை வீட்டில் இருந்து வெளியேறினான்.

மகிழோ அந்த வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவள், மாப்பிளை சின்ன வயதில் வாங்கிய சான்றிதழ் டிவி மேல் இருப்பதை பார்த்து வேகமாக ஓடுப்போய் அதைக் கையில் எடுக்கும் முன்பு, மாப்பிள்ளை பையன் அதை தன் வசம் எடுத்து கொண்டான்.

“பாருடா. நான் இத மறந்துட்டேனே. என்ன மகிழ் இதுல என் பெயர் இருந்தா கண்டுபிடிச்சிடலாம்ன்னு நினைச்சு எடுக்க வந்திங்களோ?” என்று மாப்பிளை கேட்டதும்… மகிழ் அவனை கோவமாக முறைத்தவள்.

“ஏன் இப்படி அநியாயம் பண்ணுறீங்க. எண்ணி இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு கல்யாணம்… ஆனா, எனக்கு உங்க பெயர் கூட தெரியல.” என்று வருத்தமாக அவள் பேசும் அழகை கண்கொட்டாமல் ரசித்தவன்,

“அச்சோ. பாப்பா வருத்தப்பட்டா அப்படியே அள்ளி முத்தம் தரணும் போல இருக்கே” என்றான்.

“என்ன?” என்று அதிர்ந்து கேட்க,

“ஹாங். இல்ல இல்ல. அழாதமான்னு சொன்னேன்”

“இதுக்கெல்லாம் நீங்க அனுபவிப்பிங்க.”

““ஐயோ மகிழ். சாபம் எல்லாம் விட்டுடாதீங்க. நான் உங்க கூட நிறைய வருஷம்… நம்ம பிள்ளைங்க கூட ஒரு நிறைவான வாழ்கை வாழனும்…”

“அது என்ன நிறைவான வாழ்கை?”

“ம்…  வாங்க. வந்து இப்படி உக்காருங்க.”

“ஐயோ உள்ள பாட்டி இருக்காங்க.”

““ஏங்க. நான் என்ன உங்களை என் மடி மேலேயா உக்கார சொன்னேன். இந்த சேர்ல உக்காருங்க” என்றதும்”ம்” என்றாள்.

“இந்த வீடு வாடகை வீடு தான். ஆனா, நம்ம கல்யாணம் முடிந்த கையோடு உங்க பெயருல நம்ம புது வீடு வாங்கணும்… அப்புறம் முடிந்த வரை பிள்ளைங்க பெத்துக்கணும்… இன்னொரு முக்கியமான விஷயம்… இப்போ நீங்க இந்த வீட்டு மொட்ட மாடிக்கு போய் பார்த்தா கூட. அங்க நிறைய மல்லி பூ செடி இருக்கும்… அன்னைக்கு நான் உங்களுக்கு கொண்டு வந்த பூ கூட நம்ம வீட்டுல மலர்ந்தது தான். எனக்கு என்னமோ அந்த மல்லி பூ வாசத்துல. என் அம்மா சுவாசத்தை நான் உணறுற மாதிரி இருக்கும்… இப்போ கொஞ்ச நாளா  அந்த மல்லிப்பூவை பார்த்தால் உங்க நினைவு தான் வருது. நம்ம கல்யாணத்துக்கு பிறகு. எனக்கு தினமும் என்ன வேலை இருந்தாலும்… எத்தனை வயசானாலும்… என் கையாள நான் உங்களுக்கு மல்லிப்பூ கட்டி. நானே உங்களுக்கு வச்சி விடுவேன். அண்ட் என்னோட இன்சூரன்ஸ் பணம் எல்லாம் எனக்கு பிறகு என் மனைவியை தான் சேரும்ன்னு என் வேலையில சொல்லி இருக்கேன். அப்புறம்” என்று நிறுத்தினான்.

மகிழ் அவனையே பார்த்திருக்க, “இல்ல. வேணாம். இப்பவே எல்லாம் சொல்லிட்டா எப்படி? இன்னும் நம்ம வாழ போற 75 வருஷதுக்கு மீதம் ஆசையை சொல்லுறேன்” என்று பூரிப்புடன் சொன்னான்.

மகிழினியின் மனதை கவர்ந்த அவனின் பெயர் என்னவாக இருந்தாலும்… இவன் தான் என்னவன். என்ற எண்ணம் இவள் மனதில் ஆழமாக பதிய தொடங்கியது.

மகிழினியும் பாட்டியும்… இவன் வீட்டில் தங்கிய இரண்டு நாளில். அவர்களை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் மாப்பிளை பையன்.

அன்றைய தினம் சுபமுகூர்த்த நாளில், நல்ல நேரத்தில், மாப்பிளையின் பக்கத்தில் இருந்து அவன் வளர்ந்த ஆதரவற்ற இல்லத்தின் உரிமையாளரும்… சித்ரமகிழினியின் பக்கத்தில் இருந்து அவளுக்கு இன்று வரை எல்லாமுமாக இருக்கும் பாட்டியும் கையப்பமிட, ரெஜிஸ்டர் ஆஃபிஸில் சித்ரமகிழினி கழுத்தில் மாலையிட்டு மாங்கல்யத்தை அணிவித்தான் மாப்பிளை.

பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர் தத்தும்பியது.

சித்ரமகிழினி மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி மலர்ந்து இருந்தது.

மாப்பிளையின் முகத்தில் மேலும் சந்தோஷ ரேகை படர்ந்து இருந்த தருணம் அது.

“சரி சரி. சீக்கிரம் மாப்பிளையும் பொண்ணும்… ரெஜிஸ்டர் புக்ல கையெழுத்து போடுங்க” என்று ரெஜிஸ்டரர் சொல்ல, முதலில் கையப்பமிட்ட மாப்பிளை தன் கையில் இருந்த எழுதுகோலை மகிழினியிடம் தந்தான்.

 அதை பெற்றுக்கொண்டவள் கண்ணில், தன் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தவனின் பெயரை முதல் முறையாக தன் மனதிற்குள், “வீரவேல்” என்று வாசித்தவள், தன் ஆட்கொல்லும் பார்வையால் அவனை பார்த்தாள்.

“ஒரு வழியா. Mrs. வீரா. என் பெயரை கண்டு கொண்டீர்கள் போல?” என்று புன்னகையுடன் அவன் சொன்னதும்… தன் கையப்பத்தை. அவள் பெயரின் பக்கத்தில் போட்டவள்,

“உங்களை நான் வீரான்னு கூப்பிடணுமா. இல்ல வேலான்னு கூப்பிடணுமா?” என்று பொறுமையாக கண் சிமிட்டிக்கொண்டே கேட்டதும்…

“நீங்க எப்படி வேணாலும் கூப்பிடுங்க. ஆனா, என்னை நீங்க கூப்பிட்டா மட்டும் போதுங்க” என்று அவன் சொன்னதும்… மகிழினியின் முகம் வெட்கத்தாலும் இன்பத்தாலும் சிவந்த தருணம்…

“சரி சரி. நல்ல நேரத்துல கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க. நாங்க அதுக்குள்ள போய் வீட்டுல பண்ண வேண்டிய சடங்கை எல்லாம் பண்ண ஆரம்பிக்குறோம்…” என்றார் பாட்டி.

“பாட்டி. நாங்க கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஆஸ்ரமத்துக்கும் போயிட்டு வந்துடுறோம்” என்றான் வீரவேல்.

“ம் சரிப்பா. அப்படியே செய்யுங்க.”

“சரிப்பாட்டி. நான் உங்களுக்கு கார் சொல்லிருக்கேன். நீங்க அதுல போயிடுங்க. நான் மகிழினியை என் காருல அழைச்சிட்டு போறேன்.”

“நல்லதுப்பா.”

“மகிழ் வாங்க. பாட்டிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிப்போம்…” என்று மாப்பிளை பையன் வீரா சொல்ல, திருமண ஜோடிகள் இருவரும் அங்கிருந்த பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

“என்ன தம்பி. போட்டோ எடுக்க கூட ஆள் சொல்லலையா? கல்யாணம்னா அதெல்லாம் இருக்கனும் தானே?” எனக் கேட்டார் பாட்டி.

“இல்ல பாட்டி. அடிக்கடி போட்டோ எல்லாம் எடுத்தா ஆயுசு கம்மியாகும்… வேணும்னா நம்ம உங்க ஊருக்கு போய், அங்க நம்ம எல்லாம் சேர்ந்து ஒண்ணா ஒரே ஒரு போட்டோ எடுப்போம்…” என்று அவன் சொன்னதும்… அவன் சொல்லுக்கு சம்மதம் சொன்னபடி பாட்டி வீராவின் வீட்டுக்கு கிளம்பினார்.

புது மண ஜோடிகள் இருவரும் காரில் பயணிக்க, வீரா காரை பொறுமையாக விரட்டியவன் மகிழினியை பார்த்து சிரித்தான்.

“இப்போ எதுக்கு இந்த சிரிப்பு?”

“என் பெயரே தெரியாம என் கையாள தாலி கட்டிக்கிட்ட புதுமை பெண் தான் என் பொண்டாட்டின்னு நினைச்சு சிரிச்சேன்.”

“யாரு சொன்னா. அதெல்லாம் ஒன்னும் இல்லையே. எனக்கு உங்க பெயர் எப்போவோ தெரியுமே.”

“ஹ்ம் ஹ்ம்… பொய்.” என்று சிரித்தான்.

“ஆமா. பொய் தான். இப்போ என்ன நான் பொய் சொன்னா, நீங்க என்னை கைதி பண்ணுவீங்களோ?”

“அட. நானே உங்க இதயத்துல ஆயுள் கைதியாக மாறி பத்து நாள் ஆகிடுச்சி. இதுல நான் எங்கேங்க உங்களை கைது பண்ண.”

“ம்…  நல்லா தான் பேசுறீங்க.”

“பிடிச்சிருக்கா?”

“என்ன?”

“நான் பேசுறது உங்களுக்கு பிடிச்சி இருக்கான்னு கேட்டேன்.”

“உங்க பேச்சும் பிடிச்சி இருக்கு. உங்க பெயரும் பிடிச்சி இருக்கு.” என்றாள்.

“நான் வளர்ந்த ஆசிரமத்துல எங்க பெரிய ஐயா பழனி. எல்லாருக்கும் முருகரோட பெயர் தான் வைப்பாரு. அதனால தான் எனக்கும் வீரவேல்னு பெயர் வச்சாரு. வேலையில நிறைய பேரு என்னை வேலுன்னும் கூப்பிடுவாங்க, வீரானும் கூப்பிடுவாங்க. பட் உங்களுக்கு எப்படி கூப்பிடனும் தோணுதோ நீங்க அப்படியே கூப்பிடுங்க. ஆனா,” என்று நிறுத்த,

“புரியுது. நான் உங்களை கூப்பிட்டா மட்டும் போதும்… அப்படித்தானே?” என்றாள் புன்னகையுடன்.

“அப்படிதான். ஆனா, நீங்க வீரானு கூப்பிட்ட அடுத்த நொடி நான் உங்க பக்கத்துல இருப்பேன்.”

“அது சரி. இப்போ நம்ப எந்த கோவிலுக்கு போறோம்… இவ்வளவு நேரம் போய்க்கிட்டே இருக்கீங்க?”

“இப்ப நம்ம கோவிலுக்கு போகல.”

“வேற எங்க போறோம்?”

“உங்களோட அண்ணனை பார்க்க போறோம்…” என்றான் அவன்.

“என்ன சொல்றீங்க? என்னோட அண்ணனா? என்னோட அண்ணனை பார்க்க போறமா?”

“ஏன் இவ்வளவு ஆச்சரியப்படுறீங்க? உங்க அண்ணன் நம்ம கல்யாணத்துக்கு வரலைன்ற ஏக்கம் உங்க மனசுல இருக்குன்னு எனக்கு தெரியும்… யாருமே இல்லாம நான் அனாதையா இருந்தேன். அதனால  அந்த வலி என்னன்னு எனக்கு உணர முடியும்… உங்க பாட்டி இப்போ ஏதோ கோவத்துல இருக்காங்க. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்… அதனால தான் நம்ம கல்யாணம் முடிஞ்ச கையோட என் பொண்டாட்டி ஆசை பட்ட விஷயத்தை நிறைவேற்றனும் என்று முடிவு பண்ணி, உங்க அண்ணனை பார்க்க இப்ப நம்ப போகிறோம்…” என்று மகிழினி கழுத்தில் மாங்கல்யம் அணிவித்த மணவாளன் வீரவேலன் சொன்னதும்… மகிழினியின் மனதில் மகிழ்ச்சி பெருகி அவன் கரங்களை பற்றிக் கொண்டவள் கண்கள் கலங்கியது.

“உண்மையாவே நீங்க என் அண்ணனை பார்க்க அழைச்சிட்டு போறீங்களா வீரா? என் மனசுல இருக்குற ஆசையை நிறைவேற்றனும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு. உங்களை மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்… ஐ லவ் யூ வீரா.” என்று அவள் சொன்ன ஒரு வார்த்தையில், தன் மொத்த வாழ்க்கையும் முழுமை அடைந்த திருப்தியோடு அவள் கண்களைப் பார்த்து அவள் நெற்றியில் இவன் முத்தமிட்ட தருணம்

“வீரா எதிர்ல வண்டி.” என்று  மகிழினி கத்தும் குரல் கேட்டு, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த வீரன், தன் செயல் நிலை இழந்து கார் ஸ்டேரிங்கை திருப்ப, எதிரில் இருந்த வண்டி இவர்களைக் கடந்து செல்ல, வீரன் ஒட்டிய கார் ட்ரான்ஸபோர்மேரில் மோதி. காரின் கண்ணாடி சில்லு சில்லாக உடைந்த சமயம்… வீரவேலன். மகிழினியின் மேல் ஒரு துரும்பும் படக்கூடாது என்று எண்ணியவன், அவளை பாதுகாக்கும் அரணாக அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.

“மகிழ் உங்களுக்கு ஒன்னும் ஆகல இல்ல.” என்று கேட்டவனின் கண்கள் முழுவதுமாக இரத்த வெள்ளத்தில் நிறைந்து இருந்தாள் மகிழினி.

“வீரா என்ன ஆச்சு வீரா. ஐயோ உங்க மேல எல்லாம் ரத்தம்” என்று மகிழினி இவன் நிலை கண்டு பதற.

“எனக்கு ஒன்னும் இல்ல. நீங்க நல்லா இருக்கிங்க இல்ல. நீங்க நல்லா இருக்கணும் மகிழ். I💙U டி.” என்று சொன்ன வீரவேலின் உடல் மகிழினியின் தேகத்தின் மீது சரிய, விபத்தில் நின்றிருந்த இவர்களின் காரை பின்னிருந்து ஒரு வண்டி இடித்ததும்… மேலும் வீரனும் மகிழினியும் இருந்த கார் சேதமடைந்த நிலையில். வீரனை தன் தேகத்தில் தாங்கிக் கொண்ட படி. காரின் இருக்கையில் உள்ள கம்பி மகிழினியின் பின் தலையில் இறங்க, இரத்த வெள்ளத்தில் காரில் மயங்கி இருந்தாள் மகிழினி.

Author – அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. அதைனால் முடிந்த வரை மற்றவரை வம்பு செய்து, நாமும் இன்புற்று, நமக்கு எதிராக வாதாடுபவர்களையும் இன்புற செய்வோம்…

Urs

SK💙

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!