சற்று நேரத்தில் வீட்டை அடைந்திருந்தனர். இதுவரை அழுது ஓய்ந்த தியோ, அவளது தோளிலேயே உறங்கியிருந்தான்.
தங்கள் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த நபரைப் பார்த்ததும் இருவரின் கண்களிலும் ஒருவித பயம் தொற்றிக்கொள்ள, இதயம் படபடத்தது.
“ஏம்மா, நீ இவனைக் கூட்டிட்டு வள்ளி அக்கா வீட்டுக்குப் போ… தூக்கத்துல இருந்து எழுந்தா மறுபடியும் கத்த ஆரம்பிச்சிடுவான். நான் இங்க சமாளிச்சிக்கிறேன்…” என்று கீதாவை அங்கிருந்து போகச் சொன்னாள் என்பதைவிட, விரட்டினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
கீதா தியோவைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
வாசலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர் ஒரு வங்கி ஊழியர். அவரைப் பார்த்ததும் எச்சிலை விழுங்கியபடி, என்ன கூறிச் சமாளிப்பது என்று தெரியாமல் இதயம் படபடக்க அருகில் தயங்கியபடி சென்றாள் நேகா.
நேகாவைப் பார்த்ததும் வங்கி ஊழியர் கத்தத் தொடங்கினார். “நாலு மாசமா லோன் கட்டலை… இந்த மாசமாவது தருவியா, இல்லையாம்மா?” என்று கோபத்தில் கேட்டார்.
அவருடைய குரலைக் கேட்டு தெருவில் இருந்த அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் நின்றபடி நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
“கண்டிப்பா அடுத்த வாரம் கொடுத்திருவேன் சார்…”
“இப்படித்தான் இரண்டு மாசமா சொல்லிட்டு இருக்கம்மா. இன்னைக்கு கண்டிப்பா எனக்குக் காசு வேணும். யார்கிட்டயாவது வாங்கிட்டு வந்து தாங்க…” என்று வங்கி ஊழியர் விடாப்பிடியாக நின்றார்.
நேகாவின் கண்கள் கலங்கத் தொடங்கின. சுற்றி நின்று தன்னுடைய நிலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும் ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தாள். அவர்களில் ஒருவரின் கண்களிலும் நேகாவின் மீது இரக்கம் தென்படவில்லை.
“நீங்க வாங்கிட்டு வர வரைக்கும் நான் இங்கதான் நிப்பேன்…” என்று வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டார் வங்கி ஊழியர்.
என்ன செய்வதென்று அறியாமல் தேங்கி நின்ற கண்ணீர், அவளது கன்னத்திலிருந்து தரையில் சொட்டியது.
“இந்த அழுகை, டிராமா எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோம்மா. எனக்குத் தேவை காசு. இந்த மாசத்துக்கானதையாவது யார்கிட்டயாவது வாங்கிட்டு வந்து கொடுங்க…” என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதுபோல் நின்றார் ஊழியர்.
வேறு வழி தெரியாமல், வள்ளி அக்காவிடம் உதவி கேட்கலாம் என்று திரும்பினாள் நேகா.
அப்பொழுது தெருவில் வேகமாக நடந்து வந்தான் முகக்கவசம் அணிந்திருந்த அதே இளைஞன்.
அவனைக் கண்டதும், ‘இவன் ஏன் இங்கு வந்தான்?’ என்று நேகா யோசித்துக்கொண்டிருக்க, அவளைத் தாண்டி நேராக வங்கி ஊழியரிடம் சென்றான் அந்த இளைஞன்.
அந்த இளைஞன் யாரென்று தெரியாததால், கீழிருந்து மேலாக அவனைப் பார்த்தார் ஊழியர்.
“இப்படி வீட்டு முன்னாடி நின்னு காசு கட்ட முடியாதவங்களை இப்படித்தான் பேசுவீங்களா? அதுக்கு உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா?” என்று தன் முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு கோபத்துடன் கேட்டான்.
அதில் சற்று தடுமாறிய ஊழியர், “என்ன சார், நீங்க அவங்களுக்கு வக்காலத்தா? கொடுத்த காசைத் திருப்பித் தர வக்கில்லை… நீங்க இவங்களுக்கு சப்போர்ட்டா?” என்று குரலை உயர்த்திக் கூறினார்.
“காசு கொடுக்க முடியலன்னா அதுக்காக இப்படியா? சட்டப்படி இதெல்லாம் தப்புன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று கண்களில் கோபம் தெறிக்கக் கேட்டவன், தன் உள்ளங்கையை இறுக்கமாக மூடிக்கொண்டான்.
சட்டம் என்றதும் இவனைப் பேசி சமாளிப்பது கடினம் என்று நினைத்த ஊழியர், “அவங்களுக்குப் பதிலா நீங்க பணம் கட்டுறீங்களா சார்?” என்று அவனை மடக்கும் நோக்கில் கேட்டார்.
“எவ்வளவுன்னு சொல்லுங்க… நான் தரேன்” என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறினான்.
அதை நம்ப முடியாமல் அந்த இளைஞனையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார் ஊழியர்.
பின், “இருபதாயிரம்…” என்று அவர்கள் கட்ட வேண்டிய நான்கு மாதப் பணத்தையும் மொத்தமாக வேண்டுமென்றே கேட்டார்.
“உங்க பேங்க் யுபிஐ காட்டுங்க ஜிபே பண்றேன்.”
உடனே தன் மொபைலில் இருந்த வங்கி கணக்கின் கியூஆர் கோர்ட் வங்கி ஊழியர் காட்டினார்.
“தமிழ்நாடு கிராம வங்கி தான?”
“ஆமா…” என்று தலையசைத்தார் ஊழியர்.
ஊழியருக்கு முன்னால் நின்றுகொண்டு இளைஞன் பேசிக்கொண்டிருக்க, நேகாவிற்கு அவனின் பின்பக்க முதுகு மட்டுமே தெரிந்தது.
‘இவன் எதுக்கு நமக்காகப் பணம் கட்டுறான்?’ என்று புரியாமல் அசைவற்று சிறிது நேரம் நின்றாள்.
மீண்டும் தன் முகக்கவசத்தை அணிந்துகொண்ட இளைஞன், சில நொடிகளில் இருபதாயிரம் ரூபாய் பணத்தை ஊழியர் கொடுத்த கணக்கில் அனுப்பிவைத்தான்.
பணம் வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டதும், வந்த வேலை முடிந்துவிட்டது என்ற திருப்தியுடன் வங்கி ஊழியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதுவரை நடந்தது எதுவும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த நேகா, சுற்றிலும் பார்த்தாள்.
அதுவரை நடந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் சிலர் தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.
“யாருடி அவன்? அசலூர்க்காரன் மாதிரி தெரியுது… புருஷன் செத்ததும் இவனை வச்சிருக்கான்னு நினைக்கிறேன்.”
“நானும் அப்படித்தான் நினைக்கேன் மங்கலம். இவ நடத்தையைப் பத்திதான் ஊருக்கே தெரியுமே… நாலு வருஷம் முன்னாடி எவன்கூடவோ ஓடிப்போனவ தானே?”
மேலும் அங்கிருந்து அவர்களுடைய பேச்சைக் கேட்க முடியாமல், கண்ணீருடன் வீட்டிற்குள் நுழைந்தாள் நேகா.
அவளுடைய விழியின் ஓரத்தில் மீண்டும் கண்ணீரைக் கண்டவன், சுற்றி நின்றவர்களைப் பார்த்துக் கத்தத் தொடங்கினான்.
“உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லையா? அவங்க கஷ்டம்னு நின்னப்ப யாரும் ஒத்த பைசா தரல. இப்ப புதுசா ஒரு ஆம்பளை வந்ததும் அவங்க கேரக்டரைப் பத்தி குத்தம் சொல்லுறீங்க. நல்லா கேட்டுக்கோங்க… நானும் நேகாவும் காலேஜ் பிரண்ட்ஸ். அவளைப் பார்க்க வந்த இடத்துல அவளுக்கு காசு தேவைப்பட்டதால நான் பணம் கொடுத்தேன். அவ்வளவுதான்” என்று நீளமாகப் பேசி முடித்தவன், சிறிது நேரம் அவர்களைப் பார்த்தபடி நின்றான்.
இதுவரை தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகினர். பின், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குள் சென்று வேலையைப் பார்க்கத் தொடங்கினர்.
நேகாவின் வீட்டிற்குள் செல்லத் தயங்கியபடி வெளியிலேயே முகக்கவசத்தை அணிந்துகொண்டு நின்றான் அந்த இளைஞன்.
அவனைப் பார்த்த நேகாவிற்கு, ‘அவன் யார்? எதற்காக எனக்கு உதவி செய்தான்? ஏன் நண்பன் என்று கூறினான்?’ என்று மனதில் பல கேள்விகள் உதித்தன.
ஆனால் ஏற்கனவே ஊர் மக்களின் வசைகள் அவளது இதயத்தை குத்திக் கிழித்திருந்தன. தன் தாய் இல்லாத நேரத்தில் அந்த இளைஞனை வீட்டிற்குள் அழைப்பதோ, வெளியே சென்று பேசுவதோ சரியாகப்படவில்லை.
கால் முட்டியை மடக்கி அமர்ந்து அவள் அழுவதை வெளியில் இருந்தே பரிதவிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன் யட்சன்.
சற்று நேரம் வெளியிலேயே அவளது அழைப்பை எதிர்நோக்கி நின்றுகொண்டிருந்தவன், அவளுடைய அழுகையை மேலும் பார்த்துக்கொண்டிருக்க மனமில்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
தியோவை வள்ளியின் வீட்டில் தூங்க வைத்துவிட்டு, தன் மகள் வங்கி ஊழியரை எப்படி தனியாகச் சமாளிப்பாள் என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்தார் கீதா.
கால் முட்டியை மடக்கி அழுதுகொண்டிருந்த தன் மகளின் நிலையைக் கண்டதும் பதறியவர், “என்னடி ஆச்சு?” என்று தன்னை மீறிக் கத்திக் கேட்டார்.
கீதாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்த நேகாவின் நினைவுகள் பழையதை நோக்கிச் சென்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு…
தன் கைக்குழந்தையுடன் ஊருக்குள் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க, வந்திறங்கினாள் நேகா.
சரியாகப் பேருந்திலிருந்து கால்களை வெளியில் எடுத்து வைக்க, அவள் காதில் முதலில் விழுந்தது அந்த வார்த்தை.
“உன் அப்பன் பால்டாயில் எடுத்து குடிச்சுட்டு அங்க ஆஸ்பத்திரியில சாகக்கிடக்கான் தாயி. நீ என்ன சொகுசா வந்து இங்க இறங்குற… உனக்கு விஷயம் தெரியுமா, இல்லையா?” என்று பாட்டி ஒருவர் கேட்க, அவளது தலையில் இடி இறங்கியது போல் நிலைகுலைந்தாள் .
நேகாவிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே, “அப்பன், ஆத்தாவைப் பத்தி கவலைப்படாம ஊரைவிட்டு ஓடிப்போனவ தான நீ? இருந்தா என்ன, செத்தா என்னன்னு நினைச்சிட்டியா?” என்ற பாட்டியின் கேள்வி அவளைத் துளைத்தெடுத்தது.
தேங்கி நின்ற கண்ணீர் அருவியாய் கொட்ட, அதனைத் தன் கைகளால் துடைத்துக்கொண்டு, “எந்த ஆஸ்பத்திரி ஆத்தா?” என்றாள்.
அவளது கண்ணீரிலேயே அவளுக்கு விஷயம் தெரியவில்லை என்பதை உணர்ந்துகொண்ட பாட்டி, “நல்லூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில தாயி…” என்றார்.
உடனே அதே பேருந்தில் திரும்பி ஏறி, மருத்துவமனையின் முன்பு போய் இறங்கினாள்.
கண்களில் வழியும் நீரைத் தன் சேலைத் துணியால் துடைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்று, தேடி அவளது அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அருகில் சென்றாள்.
மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டிருக்க, தன் மகளை கடைசியாக ஒரு தடவை காணும் ஆவலில் தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தார் சண்முகம்.
மருத்துவமனைக் கட்டிலில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் சண்முகம் படுத்திருக்க, அவரைச் சுற்றி சொந்த பந்தங்கள் கூடி அழுதுகொண்டிருந்தனர்.
கீதா அழுது அழுது அருகில் மயங்கிக் கிடந்தார். அவருக்கு தண்ணீர் தெளித்து எழுப்பிக்கொண்டிருந்தனர்.
அந்த நொடி உள்ளே நுழைந்த நேகாவை, சொந்தங்கள் அனைவரும் கோபத்துடன் முறைத்துப் பார்க்க, சண்முகமோ அவளைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் அருகில் கை அசைத்து அழைத்தார்.
அவரது அருகில் தன் குழந்தையை வைத்துவிட்டு குனிந்தாள் நேகா.
“என்னை மன்னிச்சிடுங்கப்பா… நான் உங்களை விட்டு போயிருக்கக் கூடாது. நான் போகாம இருந்திருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்காது…” என்றவள், அவருடைய கைகளைப் பிடித்தபடி அழுதாள்.
அதற்குள் மயக்கத்தில் இருந்து எழுந்த கீதா, “என்னை விட்டுட்டு ஒத்தைல போக உங்களுக்கு எப்படி மனசு வந்தது? என்னையும் சேர்த்துக் கூட்டிட்டு போயிருக்கலாமே… கடனுக்காக இப்படியா மருந்தைக் குடிக்கணும்?” என்று கதறினார்.
விவசாயத்திற்காக பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார் சண்முகம். மழை சரியாகப் பெய்யாமல் போனதும், விளைச்சல் கைகொடுக்காமல் போனதும், வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார்.
கடன் கொடுத்தவர்கள் ஒருபுறம் நெருக்கடி கொடுக்க, மறுபுறம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலை அவரை நாளுக்கு நாள் நிம்மதியில்லாமல் செய்திருந்தது.
இறுதியில், உயிரைவிட மானம் முக்கியம் என்றெண்ணி மருந்தைக் குடித்துவிட்டார்.
தன் மகளின் கைகளில் இருந்து தன் கைகளை விடுவித்து, குழந்தையின் தலையில் தடவி ஆசீர்வதித்தார்.
பின் நேகாவின் முகத்தைப் பார்த்தவரின் உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது. அவரது கண்கள் மேல்நோக்கி நிலைத்தன.
அடுத்த நொடி, அவருடைய உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தது.
“அப்பா!” என்று நேகா கதறியழுதாள்.
அந்தக் காட்சி நினைவிற்கு வந்ததும், நிகழ்காலத்திற்கு மீண்டாள் நேகா. தன்னை உலுக்கிக்கொண்டிருந்த தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
மறுபுறம்…
ஊருக்கு வெளியே பேருந்திற்காகக் காத்திருந்த யட்சன், மனதிற்குள் ஒரு முடிவெடுத்தவனாக, ‘இனி என்ன ஆனாலும் உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வர விட மாட்டேன் நேகா… உனக்கு நான் இருக்கேன்’ என்று நினைத்துக்கொண்டான்.