Stories that touch hearts

Home  /  25. யட்சன் (யட்சனின் நேகா)  /  Chapter 3

CHAPTER 3

முககவச இளைஞன்

By yatchan · October 5, 2026

0

முட்டிய நபரைச் சற்று நிமிர்ந்து பார்த்தாள். முகத்தில் முகக்கவசம் அணிந்துகொண்டு இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.

“ஸாரி” என்ற ஒற்றை வார்த்தை கேட்டுவிட்டு, அந்த இளைஞனைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் தியோவைப் பிடிக்க ஓடினாள்.

அவள் ஓடிச் செல்வதையே சில நொடிகள் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

சில நொடிகளில் தியோவை விரட்டிப் பிடித்தவள், மீண்டும் வரிசையில் வந்து நின்றுகொண்டாள். நின்றுகொண்டிருந்த தியோவிடம்,

“நீ ஓடாம இருந்தனா, அம்மா உனக்கு சாக்லேட் வாங்கித் தருவேனாம்” என்று ஆசை காட்டினாள்.

அதில் தன் முத்துப் போன்ற பற்கள் வெளியே தெரியும்படி சிரித்து, தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தான்.

ஒருவழியாக வரிசை முடிவுக்கு வர, குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருந்த பெண்மணியிடம் சென்று நின்றாள். அவர் நேகாவைப் பார்க்க, “கீதா, வயது நாற்பத்தைந்து” என்றாள்.

அதைக் கேட்டதும் குறிப்பேட்டில் எழுதியவர், சிறிய சதுர வடிவச் சீட்டில் அன்றைய தேதியைப் போட்டு, எண்ணையும் எழுதி அவளிடம் கொடுத்தார். அதனை வாங்கிக்கொண்டு பெருமூச்சு விட்டபடி திரும்பியவளுக்கு முன்னால், மருத்துவரைப் பார்க்க இன்னும் நீண்ட கூட்டம் வரிசையில் காத்திருப்பது தெரிந்ததும், ‘இந்தக் கூட்டம் எப்போது முடிந்து மருத்துவரைப் பார்ப்பது?’ என்ற எண்ணம் தோன்றியது.

அந்த நேரம் சரியாக அங்கு வந்தார் கீதா. அவரைப் பார்த்த நேகா, “ஏம்மா, உன்னை அங்கதான இருக்கச் சொன்னேன்… செத்த நேரம் சும்மா இருக்க உன்னால முடியாதே!” என்று கடுகடுத்தாள்.

“எவ்வளவு நேரம் டி ஒரே இடத்துல இருக்க? அவனையாவது எங்கிட்ட குடு நான் வச்சிருக்கேன்” என்று கூறியபடி, தியோவை நேகாவிடமிருந்து வாங்கிக்கொண்டு மீண்டும் இருக்கைக்குச் சென்றுவிட்டார்.

வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து, மருத்துவரைப் பார்க்க உள்ளே செல்வதற்கு முன்பாக கீதாவை அழைத்தாள். அவரும் வந்துவிட, தியோ நேகாவிடம் தாவிக்கொண்டான்.

அறையின் உள்ளே நுழைந்தனர். அதற்குள் இரு பெண் மருத்துவர்கள் இருக்க, நோயாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட மருத்துவரைப் பார்த்துவிட்டு சென்றுகொண்டிருந்தனர். அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மூவரும் மருத்துவர் முன்னால் சென்று நின்றனர்.

“சொல்லுங்க… யாருக்கு என்ன பண்ணுது?” என்று அடுத்த நோயாளியைப் பார்க்கும் அவசரத்தில் கேட்டார் அந்தப் பெண் மருத்துவர்.

நேகாவை விட்டு சற்று முன்னால் வந்த கீதா, “ஒரு மாசமா சளி, இருமலா இருக்கு தும்மா…” என்று கூறிவிட்டு, அவர் மீண்டும் அடுத்த வார்த்தையைச் சொல்வதற்குள், அவரிடம் இருந்த சீட்டை வாங்கி ஏதோ புரியாத வகையில் கிறுக்கிக் கொடுத்தார்.

“அடுத்தவங்க வாங்க!” என்று அதற்குள் அடுத்த நோயாளியை அழைத்தார் அந்தப் பெண் மருத்துவர்.

சீட்டை வாங்கிக்கொண்டு வேறு வழியில்லாமல் அறையை விட்டு வெளியேறினர்.

அதில் எழுதியிருந்த கிறுக்கல் என்னவென்று நேகாவுக்குப் புரியாததால், அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த செவிலியர் ஒருவரிடம் கேட்டாள்.

“டாக்டரம்மா உங்களை சளி டெஸ்ட் எடுக்கச் சொல்லி எழுதி கொடுத்திருக்காங்க” என்று கூறிவிட்டு, செவிலியர் தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

“என்னடி, அந்தப் பொண்ணு என்ன சொல்லிட்டுப் போகுது?” என்று புரியாமல் கேட்டார் கீதா.

“உனக்கு சளி, இருமல் இருக்குன்னு சொன்னதால, சளிக்கு டெஸ்ட் எடுக்கச் சொல்லி எழுதியிருக்காங்கம்மா.”

“இதுக்குத்தாண்டி நான் ஆஸ்பத்திரி வரமாட்டேன்னு சொன்னேன்… சளிக்கு மாத்திரை, மருந்து தர்றதை விட்டுட்டு டெஸ்ட், அது இதுன்னு சொல்லிட்டு இருக்க. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், வா வீட்டுக்குப் போவோம்” என்று அவசரப்படுத்தினார் கீதா.

“ஏம்மா, நீ புரியாமலே பேசிட்டு இருக்க… இது சாதாரணமா எல்லாருக்கும் எடுக்கிற டெஸ்ட்தான். நீ கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா போதும்” என்று அவரைச் சமாதானப்படுத்தினாள் நேகா.

பின், அந்த இடம் எங்கிருக்கிறது என்று நேகா கண்களால் தேடிக்கொண்டிருக்க, அவளுக்கு முன்பாக வந்து நின்றான் அவள் முட்டிய அதே இளைஞன். முகத்தை முகக்கவசத்தால் மறைத்திருந்தான்.

“சளி டெஸ்ட் எடுக்கிற இடம் அங்க இருக்கு” என்று அவர்களிடம் தன் ஆள்காட்டி விரலை நீட்டிக் காண்பித்தான்.

“தேங்க்ஸ்” என்ற ஒற்றை பதிலை கூறிவிட்டு, தான் கேட்காமலேயே இடத்தைக் காட்டிவிட்டுச் சென்ற இளைஞனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பின்னர் அவன் கூறிய இடத்தை நோக்கி சென்றாள்.

அங்கு இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். மருத்துவர் எழுதி கொடுத்த சீட்டைக் கொடுத்ததும்,

“உங்க பெயர் சொல்லுங்க” என்று கேட்டாள் இளவயது செவிலியர் ஒருத்தி.

“கீதா.”

“போன் நம்பர் சொல்லுங்க.”

“997366371” என்றாள் நேகா.

உடனே அதனை ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொண்டாள் அந்தப் பெண்.

சிறிய பிளாஸ்டிக் டியூப் ஒன்றைக் கொடுத்து, அதில் சளி சாம்பிள் கொடுக்கக் கூறினாள். கீதாவும் அதில் சாம்பிளைக் கொடுக்க, அதனை வாங்கி வைத்துக்கொண்டனர்.

“நீங்க நாளைக்கு வாங்க” என்று கூறிவிட்டு செவிலியர் வேறு வேலையைப் பார்க்கச் சென்றார்.

பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தன் தாயுடன் நகர்ந்தாள் நேகா.

அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் சற்று தொலைவில் நின்றபடியே கவனித்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

மருத்துவமனையை விட்டு இருவரும் தியோவுடன் வெளியேறினர்.

இதுவரை நீண்ட நேரம் வரிசையில் நின்றது சற்று சோர்வாக இருக்க, சாலையில் இருந்த டீக்கடை ஒன்றை நோக்கிச் சென்றனர். அங்கு நான்கைந்து ஆடவர்கள் இருக்கையில் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர்.

அங்கு சென்றதும், “இரண்டு டீ” என்றாள் நேகா.

அதைக் கேட்ட கடைக்காரர் சூடாக இரண்டு டீயைப் போட்டு, கண்ணாடி டம்ளரில் அவர்களிடம் நீட்டினார்.

அதனை வாங்கி இருவரும் குடித்து முடிக்க, தியோ அங்கிருந்த போண்டாவைக் கைகாட்டி, “ம்மா… ம்மா…” என்றான்.

“ஒரு போண்டா ஒண்ணு கொடுத்திருங்க” என்று அவள் கூற, தியோ மீண்டும் கைநீட்டி முன்னால் இருந்த பிஸ்கட்டைச் சுட்டிக்காட்டி, “ம்மா… ம்மா…” என்றான்.

அதனைப் பார்த்த நேகாவின் மனதில் இனம்புரியாத வலி உண்டானது. மருத்துவமனைக்குச் செல்ல என்று அவள் கொண்டு வந்தது ஐம்பது ரூபாய். வரும்போது மகளிர் விடியல் பேருந்தில் வந்ததால், இருபது ரூபாய் மீதம் இருக்க, அதில் டீ வாங்கினாள். பத்து ரூபாய் போண்டாவுக்குப் போக, அவளின் கையில் பேருந்திற்காக இருபது ரூபாய் மட்டுமே இருந்தது. அதனையும் கொடுத்து பிஸ்கட் வாங்கினால், மகளிர் பேருந்து அடுத்து எப்போது வரும் என்பது தெரியாது. ‘தன் பிள்ளை ஆசைப்பட்டுக் கேட்பதைக் கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை’ என்ற எண்ணம் முள்ளாய் அவளின் இதயத்தைத் தைத்தது.

அந்த வலியைச் சமாளித்துக்கொண்டு, “டேய் கண்ணா… வீட்டுலதான் இந்த பிஸ்கட் இருக்கே… அங்க போய் நான் எடுத்து தரேன்” என்று இல்லாத பிஸ்கட்டை இருப்பதுபோல் கடைக்காரரின் முன்பு காட்டிக்கொண்டாள்.

தியோ அதைக் கேட்காமல் அடம்பிடிக்க, “இப்ப சொன்னா கேட்பியா? இல்லையா?” என்று ஒரு அதட்டு அதட்டியதும் அமைதியாகிவிட்டான்.

போண்டாவைக் கையில் வாங்கிக்கொண்டான். அதனைத் தன் சிறிய வாயால் கொறிக்க ஆரம்பித்தான்.

“எவ்வளவு ஆச்சுனா?”

“முப்பது மா” என்று கடைக்காரர் கூற, பணத்தை அவரிடம் கொடுத்தாள்.

அருகிலேயே பேருந்து நிறுத்தம் இருந்ததால், நடந்து அங்கு சென்று நின்றுகொண்டனர். தியோ கொஞ்சம் கொஞ்சமாக போண்டாவைக் கொறித்து, பாதியை உண்டு முடித்துவிட்டு, மீதியை உண்ண முடியாமல் நேகாவிடம் நீட்டினான்.

வீட்டிற்குச் சென்றதும் மீண்டும் கேட்பான் என்பதால், தான் கொண்டு வந்திருந்த பையில் அதனைப் பத்திரமாக வைத்தாள்.

மகளிர் பேருந்தே இம்முறையும் வர, இருபது ரூபாய் மிச்சம் என்று நினைத்தபடி மூவரும் அதில் ஏறிக்கொண்டனர்.

இதுவரை நடந்த அனைத்தையும் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன். நேகா பேருந்தில் ஏறச் சென்றதும், ஓடிவந்து அதே பேருந்தில் அவனும் ஏறிக்கொண்டான்.

பேருந்தில் கூட்டம் அலைமோதியது. பேருந்தின் முக்கால்வாசி இடத்தைப் பெண்களே அடைத்திருக்க, ஓரிரண்டு ஆண்கள் மட்டுமே கண்களில் தென்பட்டனர்.

கூட்ட நெரிசலில் குழந்தையை வைத்துக்கொண்டு கம்பியைப் பிடித்தபடி நின்றுகொண்டாள் நேகா. குழந்தையை வைத்துக்கொண்டு அவள் நிற்பதைப் பார்த்த பெண்மணி ஒருவர், “குழந்தையை தா மா… நான் வச்சிக்கிறேன்” என்று வாங்கி, தன் மடியில் வைத்துக்கொண்டார்.

ஜன்னல் ஓர இருக்கை என்பதால், சில்லென்று வீசிய காற்றில் வெளியில் பார்த்து ரசிக்கத் தொடங்கினான் தியோ.

பேருந்தின் பின்னால் ஏறிய இளைஞன், கூட்டத்தைத் தாண்டி வந்து நேகா இருக்கும் இடத்திற்கு அருகில் நின்றுகொண்டான். அவளது முகம் தெளிவாகத் தெரியும் இடத்தைத் தேர்ந்துகொண்டவன், கம்பியில் சாய்ந்தபடி நின்றுகொண்டு, அந்த மூச்சுமுட்டும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் அவளையே கவனித்துக்கொண்டிருந்தான்.

நேகாவின் ஊர் வந்துவிடச் சிறிது தூரம் இருக்க, அந்தப் பெண்மணியிடம் இருந்து தியோவை வாங்கிக்கொண்டாள் நேகா. ஊர் வந்ததும் தியோவுடன் இருவரும் இறங்கிக்கொண்டனர்.

அவள் இறங்கியதும் பின்னாலேயே அந்த இளைஞனும் இறங்கிக்கொண்டான்.

ஊருக்குள் செல்ல சிறிது தூரம் நடக்க வேண்டும். அதுவரை சுற்றிலும் பசுமை நிறைந்த வயல்வெளிகளே காட்சியளித்தன.

நேகா நடக்கத் தொடங்க, அவளைப் பின்தொடர்ந்தான் அந்த இளைஞன். தன்னைப் பின்தொடர்வதை கவனித்த நேகா, கோபத்தில் அவனை நோக்கித் திரும்பி நடந்து வந்தாள்.

அவளது கோபத்தைக் கண்டு மிரண்டவன், அங்கிருந்து ஓடிச்சென்றுவிட்டான்.

அவன் ஓடுவதைப் பார்த்து புன்னகைத்தாள் நேகா. கீதாவோ அவளை முறைத்துக்கொண்டிருந்தார்.

“இப்ப எதுக்கு டி அந்தப் பையனை துரத்துன?” என்று குரலை உயர்த்திக் கேட்டார்.

அவரது மனம் எப்படியாவது யாராவது தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்களா என்ற நப்பாசையிலேயே இருப்பது நேகாவுக்குப் புரிந்தது.

“என்னம்மா, நீயும் புரியாம பேசிட்டிருக்க… அவன் என்னைக் கல்யாணம் பண்ணவா ஃபாலோ பண்றான்? சும்மா சைட் அடிக்கத்தான் பண்ணியிருப்பான். எத்தனை பேரை இப்படி பார்த்திருக்கேன்” என்றாள்.

“அது அந்தப் பையன்கிட்ட பேசுனா தான்டி தெரியும்.”

“இப்படி என்னைக் கண்டதும் ஓடிப் போறவன், கல்யாணம் பண்ணக் கேட்க வந்திருப்பான்னு நீ நினைக்கிறியா மா?”

அவருக்கும் அது இல்லை என்றே தோன்றியது. அதன்பிறகு எதுவும் பேசாமல் கீதா அமைதியாகிவிட்டார்.

“நான் அப்படியே வயலுக்குப் போய் கொஞ்ச நேரம் களவெட்டுறேன் மா… நீ இவனைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போ.”

“என்னடி சொல்ற? காலையில்தான் என்னை அந்தப் பனிக்குள்ள வராதுன்னு சொல்லிட்ட… இப்ப நல்லா வெயில் மண்டை புளக்குது. இப்பவும் வரவேண்டாம்னு சொன்னா எப்படி டி?”

“சும்மா இருக்கிறதுல உனக்கு என்னம்மா பிரச்சனை? இவனைப் பார்த்துக்கிட்டு இரு னுதானே சொல்றேன்.”

“உன்னை ஒத்தைல களவெட்ட விட்டுட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும் டி?”

“உன்னை வச்சுக்கிட்டு…” என்று கத்திய நேகா, பின் தன்னைத் தானே சிறிது சமாளித்துக்கொண்டு அமைதியானாள்.

“சரி… இவனுக்கு சோறு ஊட்டிட்டு நீயும் வயலுக்கு வா. போதுமா?” என்று வேறுவழியில்லாமல் கூறினாள்.

அதனைக் கேட்ட கீதா தலையசைத்தார்.

சாலையில் பாதி வழியிலேயே கீதாவை விட்டு பிரிந்து வயலை நோக்கிச் சென்றாள் நேகா. அதனைப் பார்த்த தியோ,

“அம்மா… ம்மா…” என்று அழத்தொடங்கிவிட்டான்.

உடனே அவன் அருகில் மீண்டும் திரும்பி வந்தவள், “என் செல்லக்குட்டி லா… நீ பாட்டி கூட வீட்டுக்குப் போவியாம். நான் பின்னாடியே வந்திடுவேனாம்” என்று மென்மையாகக் கூறினாள்.

அவளது விரல்களைப் பிடித்தவன், அவளை விடுவதாகத் தெரியவில்லை.

அவனது அழுகையைக் கண்டவள், அவனுடன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

சற்று நேரத்தில் வீட்டை அடைந்திருந்தனர். இதுவரை அழுது ஓய்ந்த தியோ, அவளது தோளிலேயே உறங்கியிருந்தான்.

தங்கள் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த நபரைப் பார்த்த இருவரின் கண்களிலும் ஒருவித பயம் தொற்றிக்கொள்ள, இதயம் படபடத்தது.

1,091 words
← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!