“என்ன டாக்டர் சொல்றிங்க.?” புரியாமல் கதிர் விழிக்க, “உங்க மனைவிக்கு இரட்டை பிள்ளை பிறக்கப்போகுது” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னார் மருத்துவர்.
“எ. என்ன சொல்றிங்க. . உண்மையாவா” என்று கதிர் நம்பாமல் மருத்துவரை கேள்வி கேட்க,
“நான் ஏன் சார் பொய் சொல்ல போறேன், இங்க பாருங்க. உங்க மனைவி வயத்துல இரட்டை கரு வளருது” என்றார் மருத்துவர்.
கதிரால் அந்த மகிழ்ச்சியை தாங்க முடியாமல் அருகே இருந்த தன் மனைவியை கட்டி அணைத்துக்கொள்ள,
முல்லைக்கோ வார்த்தை மறந்து கண்களில் ஆனந்த கண்ணீர் தான் பெறுகியது.
கணவன் மனைவி இருவரும் அவர்களை ஆஸ்வாசப்படுத்திக்கொள்ள மருத்துவர் சில நிமிடம் அவர்களுக்கு அவகாசம் கொடுக்க, கதிர் முல்லையின் முகமெல்லாம் முத்த மழை பொழிந்துகொண்டு இருந்தான்.
“சார் போதும் போதும். நீங்க மீதியை உங்க வீட்டுல போய் continue பண்ணுங்க” என்று மருத்துவர் நக்கலாக சொன்னதும்,
“சாரி டாக்டர். நாங்க கிளம்புறோம், ரவா லட்டு வா டி போகலாம்” என்று முல்லையை கை பிடித்து தன்னோடு அழைத்தான் கதிர்.
“ஐயோ சார் என்ன பண்றிங்க. இருங்க இன்னும் நான் ஒழுங்கா ஸ்கேன் எடுக்கவே இல்ல” என்று மருத்துவர் பதற்றம் அடைய.
“என்ன டாக்டர் சொல்றிங்க. அப்போ எனக்கு ரெட்ட பிள்ளை இல்லையா. மூணு பிள்ளையா” என்று கேட்டான் கதிர்.
அவனின் கேள்வியில் முல்லை வாய் விட்டு சிரிக்க, “சார். இப்படி இருந்தா ரொம்ப கஷ்டம்” என்று முணங்கிய மருத்துவர் மேற்கொண்டு முல்லைக்கு ஸ்கேன் எடுத்து முடித்தவர்.
“நீங்க வெளிய உக்காருங்க, நான் ரிப்போர்ட்டஸ் எடுத்துட்டு வரேன்” என்றார்.
முல்லையை அலுங்காமல் கதிர் வெளியே அழைத்து வந்தவன்.
அவள் வயிற்றையே குறு குறுவேன முறைத்து பார்த்து இருக்க.
“என்ன மாமா சார். என்ன அப்படி பாக்கறீங்க” என்று கேட்டாள்.
“இல்லடி. இந்த குட்டி வயத்துல எப்படி ரெண்டு புள்ள வளரும். நம்ம பிள்ளைய்ங்களுக்கு இடம் பத்தலைனா என்ன பண்றது” என்ற கதிரின் கேள்வி முடியும் முன்னே மருத்துவர் அங்கு வந்து சேர, “உங்க கேள்வியை நீங்க டாக்டர்கிட்டயே கேளுங்க” என்றாள் முல்லை.
“சார். உங்க சந்தேகம் எனக்கு புரியுது. ரெண்டு இல்ல சார். ஒரே பிரசவத்துல பத்து குழந்தைகள் கூட பிறக்கும். நீங்க அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. நான் தர மருந்து மாத்திரையை எல்லாம் சரியா அவங்கள போட வையுங்க” என்று மருத்துவர் சொல்ல.
அவர் வார்த்தையை உன்னிப்பாக கவனித்துகொண்டான் கதிர்.
சில நிமிட பேச்சுக்கு பிறகு.“இதோட ஐந்தாம் மாசம் அழைச்சிட்டு வந்தா போதும்” என்ற மருத்துவர். கதிரிடம் மருந்து சீட்டை கொடுக்க.“thanks டாக்டர்” என்று புன்னகை மாறா வண்ணம் முல்லை தன் கணவனுடன் மருத்துவரின் அறையில் இருந்து வெளியேறினாள்.
“முல்லை. நம்ம போகும் போது கோவிலுக்கு போயிட்டு போகலாம். அப்படியே அம்மாவோட சமாதிக்கும் போயிட்டு போகலாம். அப்புறம் உனக்கு என்ன சாப்பிட தோணுது சொல்லு, அதையும் சாப்பிட்டு போகலாம். அப்புறம்” என்று கதிர் மேற்கொண்டு பேசும் முன்னே அவன் வார்த்தையை தடுத்த முல்லை கண்களால் தூரமாக நின்று இருக்கும் வேலனை காண்பித்தாள்.
“என்னடி இது. உன் தம்பி யாரோ ஒரு பொண்ணுகூட பேசிகிட்டு இருக்கான். இந்த பொண்ணு. ஏய் இந்த பொண்ணு ரோஜாவோட Frined தானே” என்று கதிர் கேட்க.“ஆமா ஆமா. ஆனா இப்போ அந்த பொண்ணு என் தம்பியோட ஆளு” என்றாள் முல்லை.
“என்னடி சொல்லுற. அப்போ உன் தம்பி அந்த பொண்ணை love பண்ணுறானா. இரு அவனை என்னனு கேக்குறேன்” என்ற கதிர்.“ டேய் என்னடா காதலா” என்று கேட்டுக்கொண்டே வேலனை நெருங்க, அங்கே நர்சுடன் நின்றுக்கொண்டு இருந்தான் வேலன்.
“டேய். உன்ன தான் கேக்குறேன். என்ன லவ் பண்ணுறியா?” என்று கதிர் கேட்க,
“ஏன். ஆமா சொன்னா உங்க தலைமையில கல்யாணம் பண்ணி வைக்க போறிங்களா” என்று கேட்டான் வேலன்.
“ஆமா. நீ இந்த பொண்ணை லவ் பண்ணுறதுனா சொல்லுடா, நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று கதிர் உரிமையாக கேட்க.“எத்தனை முறை கல்யாணம் பண்ணுவாங்க. அதெல்லாம் ஆல்ரெடி ஆகிடுது” என்றான் வேலன்.
அவன் வார்த்தையை கேட்டு கதிரும் முல்லையும் குழப்பதுடன் ஒருவரை ஒருவர் பார்த்து இருக்க.
“டேய் தம்பி. என்னடா சொல்லுற. உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?” என்று கேட்டாள் முல்லை.
“போன வாரம் முருகன் கோவில்ல தான் கல்யாணம் ஆச்சு” என்று வேலன் சொல்ல.“என்னடா நீ எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம எப்படி நீ கல்யாணம் பண்ண?” என்று கேட்டான் கதிர்.
“எப்படினா. தாலி கட்டி தான்” என்று வேலன் சொல்ல.“எங்க தாலி கட்டின?” என்று அதட்டளுடன் கதிர் கேட்க.“கழுத்துல தான் கட்டினேன்” என்றான் வேலன்.
தன் தம்பியின் பதிலில் முதல் முறையாக முல்லைக்கு கோவம் எழுந்த நிலையில்,
“டேய். என்ன நீ. ஏன் எங்ககிட்ட சொல்லாம கல்யாணம் பண்ண?” என்று கேட்டதும்.
“உங்ககிட்ட எல்லாம் சொல்லுறதால என்ன ஆகிப்போகுது. கல்யாணம் எங்க ரெண்டு பேருக்கு தான். அதான் நாங்களே பண்ணிகிட்டோம்” என்றான் வேலன்.
அவன் பதிலில் கதிரும் முல்லையும் கோவமாக அவனை முறைக்க.
“இங்க பாரு அக்கா. விமர்சயா கல்யாணம் பண்றது எல்லாம் எனக்கு பிடிக்காது.
இப்போ என் கல்யாணத்துக்கு நான் உங்களுக்கு எல்லாம் சொன்னேன் வையென்,
நீ எனக்கு ஒரு பவுன் மோதிரம் போடுவ. அப்புறம் நான் அத உனக்கு ரெண்டு பவுனா தரணும். இப்போவே பவுன் ஒரு லட்சம். நான் திருப்பி தரும் போது அது மூணு லட்சம் ஆகிடும்.
நீ மட்டும் இல்ல. நம்ம சொந்த பந்ததுல எவனுக்கும் என்னை பிடிக்காது. ஏன் உன் மாமா சாருக்கே என்னை பிடிக்காது. ஏதோ நான் கூப்பிட்டேன்னு இவங்க எல்லாம் வந்து நீன்னுட்டு போறதுல எனக்கு இஷ்டம் இல்ல.
எனக்கு இவங்கள பிடிச்சி இருந்துச்சு. இவங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னாங்க. அவ்ளோ தான். கல்யாணம் ஓவர்” என்று வேலன் சொல்ல, கதிரும் முல்லையும் ஒருவரை ஒருவர் என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.
“சரி சரி என் கதையை விடு. அப்புறம் வயத்துல இருக்குற குட்டி நலமா?” என்று வேலன் கேட்க.“குட்டி இல்லடா, குட்டீஸ்” என்றாள் முல்லை.
“அட. பாருடா. அப்போ என் அக்காவுக்கு இரட்ட பிள்ளையா. சூப்பர் சூப்பர், இந்த மகிழ்ச்சியை நீங்க நல்லா என்ஜோய் பண்ணுங்க. இந்தா அக்கா. என் காருல நீயும் உன் மாமா சாரும் போங்க. நான் என் மேடம் கூட கிளம்புறேன்” என்ற வேலனிடம் கார் சாவியை வாங்கிக்கொண்ட முல்லை.“சீக்கிரம் உன் பொண்டாட்டியை அழைச்சிட்டு வீட்டுக்கு வந்து சேரு” என்றாள்.
“அதெல்லாம் பொறுமையா வரலாம். நீங்க கிளம்புங்க” என்று வேலன் சொன்னதும் கதிர் முல்லையை அழைத்துக்கொண்டு வேலனின் காரில் மருத்துவ மனையில் இருந்து வெளியேறினான்.
வழியெல்லாம் முல்லை யோசனையாகவே இருக்க.
“என்னடி. என்னாச்சு. உன் தம்பி உங்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணதை எண்ணி கவலைப்படுறியா” என்று கேட்டான் கதிர்.
“இல்லிங்க. அவன் எப்பவும் இப்படி தான். இன்னேரம் ஏன் அவனுக்கு நம்மள மாதிரி இரண்டு. இல்ல இல்ல மூணு பிள்ள இருந்தா கூட ஆச்சிரியப்படுறதுக்கு இல்ல” என்று முல்லை சொல்ல.“பின்ன என்ன யோசனை” என்று கேட்டான் கதிர்.
“வேலன் சொன்னது போல, இப்போவே பவுன் விலை 1லட்சம் ஆகுதே. இன்னும் நம்ம பிள்ளைங்க காலத்துல எல்லாம் என்னங்க பண்ண முடியும்” என்று கேட்டாள் முல்லை.
அவளின் கேள்வியில் கதிர் சிரித்தவன்.
“முதல்ல தங்கத்தை சேமிப்பாவோ இல்ல முதலிடவோ பார்த்தா நமக்கு இந்த தங்க விலை ஏற்றம் பெருசா தெரியாது. ஆனா நம்ம ஆளுங்க எல்லாம் தங்கத்தை வச்சி தான் பொண்ணுங்க கல்யாணம். சீர். மண்ணாங்கட்டின்னு கணக்கு போட்டு பயப்புடுறாங்க” என்றான் கதிர்.
“ஆமாங்க. ஏன் இப்போ உங்களுக்கு பெண் பிள்ளை பிறந்தா நீங்க உங்க பொண்ணுக்கு தங்கம் போட்டு கல்யாணம் பண்ணி தர மாட்டிங்களா” என்று முல்லை கேட்க, “ வாய்ப்பே இல்ல. வரதட்சணை கேக்குற ஆளுங்களுக்கு பொண்ணை கட்டி தர மாட்டோமுன்னு எல்லா பெத்தவுங்களும் சொன்னாலே இங்க தங்க விலையை எண்ணி பயபுட வேண்டாம்ம்” என்றான் கதிர்.
“ஆமா. மாப்புள்ள வீட்டுல கேட்டாலும் கேக்காட்டியும் பொண்ணு வீட்டுல அவங்க கௌரவத்தை காட்ட நகை போட்டு தானே அனுப்புறாங்க” என்று முல்லை சொல்ல.
“ம், அதான் சொல்றேன். இங்க அடிப்படை விஷயமே தப்பா இருக்கு.
பொன்னையும் கொடுத்து பெண்ணையும் கொடுத்து இன்னோரு வீட்டுக்கு நம்ம மகளை அனுப்பி வைக்கிறோம். ஆனா அங்க பார்த்தினா இவ வாழ வந்த பொண்ணுன்னு தான் பேர் இருக்கும்” என்று சலிப்பாக சொன்னான் கதிர்.
“ஆமாங்க. இதெல்லாம் அப்படியே கால காலமா பழகி விட்டுட்டாங்க” என்று முல்லை சொல்லு, “ஆனா நான் என் பொண்ணுங்கள அப்படி வளர்க்க மாட்டேன். அவங்களுக்கு எவ்ளோ தேவையோ அவ்ளோ படிப்ப கொடுத்துடனும். நம்ம பொண்ணுங்க அவங்க சம்பாதியத்துல வாழறதுக்கு நம்ம பாதை அமைத்து தரணும். மத்தப்படி இந்த கல்யாணம் காட்சிக்கு எல்லாம் கவலை படுறவன் நான் இல்லை” என்று கதிர் சொன்னதும் முல்லை அவள் வயிற்றில் உள்ள குழந்தையை வருடி பார்த்தாள்.
“ஏன் மாமா சார். உங்களுக்கு பெண் குழந்தை தான் பிடிக்குமா” என்று முல்லை கேட்க.“ ஆமாடி. பொம்பள பிள்ளை தான் புடிக்கும்.“ என்றான் கதிர்.
“ம். ஒரு வேள நமக்கு ரெண்டும் ஆம்பள பிள்ளையா பிறந்தா என்ன பண்ணுவிங்க” என்று முல்லை கேட்க. இந்த முறை கதிர் அவள் வயிற்றை மென்மையாக வருடியவன், “ மீண்டும் முயற்சிப்பேன்” என்றதும் முல்லை சட்டென்று அவன் தாடியை பிடித்து இழுத்து இருந்தாள்.
“ஆ. வலிக்குது” என்று கதிர் அலறியதும், “இந்த பிள்ளைக்கே நான் என்ன ஆகப்போறேன் தெரியல. இதுல இவருக்கு இன்னும் வேற பிள்ளைங்க வேணுமா” என்று முல்லை பொய்யான கோவத்தில் முகத்தை திருப்பிக்கொள்ள. தன் மனைவியின் அழகினை ரசித்தபடியே காரை கோவிலை நோக்கி விரட்டினான் கதிர்.
இருவரும் ஒன்றாக கோவிலுக்கு சென்றவர்கள். அங்கிருந்து நேரே கதிரின் அம்மா சமாதிக்கு மலர் தூவி ஆசிர்வாதம் வாங்கியவர்கள், நேரே இனிப்புக்கடைக்கு சென்று. வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிப்பை வாங்கிக்கொண்டு பாண்டியனின் இல்லத்திற்கு சென்றார்கள்.
முல்லையை பார்த்ததும் ரோஜா தண்ணீரை கொடுக்க, “டாக்டர் என்ன சொன்னாங்க முல்லை. குழந்தை ஆரோக்கியமா இருக்கா?” என்று கேட்டார் முருகன்.
“மாத்திரை மருந்தேல்லாம் ஒழுங்கா எழுதி வாங்கிட்டு வந்தியா கதிர்” என்று பாண்டியன் கேட்க.
இவர்கள் பேச்சுகுரலை கேட்டு ஜீவாவும் மீனாவும் அவர்கள் அறையில் இருந்து வெளியே வந்தார்கள்.
“என்னமா முல்லை. ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று பார்வதி சிறு அச்சதுடன் கேட்டதும்.
“அப்பா. ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்று தன் கையில் இருந்த இனிப்பை நீட்டினான் கதிர்.
“என்ன வாத்தி. எல்லோரும் அப்பாவாக போறேன் என்ற சந்தோஷத்துல தானே ஸ்வீட் தருவாங்க. நீங்க என்ன இத்தனை நாள் கடந்து தரிங்க” என்று ரோஜா சொல்ல.“எல்லாம் காரணமா தான்” என்ற கதிர் அங்குள்ள அனைவருக்கும் இனிப்பை கொடுக்க, கஸ்தூரியின் முகம் மட்டும் வாடித்தான் இருந்தது.
“என்ன கதிர். உன் முகத்துல எப்பவும் இல்லாம இன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சி தெரியுது” என்று ஜீவா கேட்க.
“இருக்காத பின்ன. அதான் என் நண்பனுக்கு இரட்ட பிள்ளை பிறக்கப்போகுதே” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் நாகராஜன்.
அவன் வார்த்தையை கேட்டு அனைவரின் முகத்திலும் புன்னகை மலர.
“என்ன ரெட்ட பிள்ளையா. ஐயோ சூப்பர் சூப்பர் அண்ணி.“ என்று முல்லையை கட்டி அணைத்து வாழ்த்துகள் சொன்னாள் ரோஜா.
கூடி இருக்கும் அனைவரும் கதிர் முல்லைக்கு வாழ்த்து சொல்ல, பெரியவர்கள் அவர்களுக்கே உரிய சில நல்லது கெட்டத்தை முல்லைக்கு எடுத்து சொன்னார்கள்.
“ரொம்ப சந்தோசமா இருக்கு கதிர். சீக்கிரமா ஒரு நாள் கோவில் போய் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு வரணும்” என்று பாண்டியன் சொல்ல.
“வாழ்த்துகள் முல்லை. உடம்ப பார்த்துக்கோ” என்ற மீனா, அங்கே நீண்ட நேரம் இல்லாமல் அவள் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.
மீனாவின் மனநிலையை ஜீவா அறிந்து இருந்தவன் அவனும் அவளை தொடர்ந்து உள்ளே சென்றவன்.“என்னாச்சு?” என்று கேட்டான்.
“நான் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருந்தா இந்நேரம் நம்ம பிள்ளையையும் இந்த வீட்டுல இப்படி தானே கொண்டாடி இருப்பாங்க” என்று கேட்டாள் மீனா.
அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.
அவளை எப்படி சமாதானம் செய்வது என்று ஒரு நொடி யோசித்த ஜீவா, அவள் அருகே அமர்ந்து அவளை அரவணைத்துக் கொண்டான்.
அவன் அணைப்பில் அவளது அழுகை மேலும் தொடர.“பழசை பேசி ஒன்னும் ஆகப்போவது இல்ல, இனி நம்ம வாழ்க்கையை நம்ம சந்தோசமா வாழலாம். இப்போ என்ன குழந்தை தானே. இன்னைக்கு இல்லைனா கூட அடுத்த வருஷம் நமக்கும் பிள்ளை பிறக்க தானே போகுது” என்று ஜீவா சொல்ல. அவனை ஆச்சிரியமாக பார்த்தாள் மீனா.
“என்ன அப்படி பாக்குற” என்று ஜீவா கேட்க.
“நீங்க முல்லையை எந்த அளவுக்கு விரும்புனிங்கனு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இப்போ எப்படி முல்லையை மறந்துட்டு என்னை ஏத்துக்க உங்களுக்கு மனசு வருது” என்று மீனா கேட்டதும் ஜீவா மெலிதாக சிரித்தான்.
“நான் இப்பவும் முல்லையை மறக்கல. ஏன்.? சாகும் வரை என்னால மறக்கவும் முடியாது. ஒருவர் இன்னோருவரை காதலித்தால் அவங்கள மறந்து தான் வாழனும்ன்னு இல்ல. என்னைக்குமே முல்லை மீது எனக்கு இருக்குற காதல் கண்ணியமானது. உன் கழுத்துல தாலி கட்டினதால முல்லை மேல நான் வச்சி இருக்கும் காதல் ஒரு துளிக்கூட குறையாது. இது எனக்கு மட்டும் இல்ல. நீயும் கதிரை எந்த அளவுக்கு நேசிச்சன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன் காதலுக்கு நீ உண்மையா இரு. நம்ம அவங்க மேல வச்சி இருந்த காதல் என்னைக்குமே பொய் ஆகாது. ஆனா நம்ம இனி வாழ போற வாழ்க்கையில நமக்குள்ள ஏற்படுற புரிதலும் காதலா மாறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்ற ஜீவாவை ஆச்சிரியமாக பார்த்தாள் மீனா.
“சரி. இனிமே நீ தேவையில்லாம உங்க அம்மா பேச்சை கேட்டு இந்த குடும்பத்த பிரிக்க எல்லாம் திட்டம் போடாத. உன் அம்மா சொன்னது போல நீ தான் இந்த வீட்டோட மூத்த மருமக. அதனால. அந்த ஸ்தானதுக்கு ஏற்ற மாதிரி ரோஜா கல்யாணத்துல தொடங்கி, முல்லை சீமந்தம் வரை நீயும் நானும் தான் முன்ன நின்னு எல்லாமே பண்ணனும். பாவம் அப்பாவுக்கும் வயசாகிடுது. இனி நம்ம அவங்கள கவனுச்சக்கணும்” என்று ஜீவா சொல்ல. அவன் சொன்ன அனைத்தையும் கேட்டு இனி மீனாவும் அவள் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாள்.