Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 56

CHAPTER 56

முல்லை – 56

By Roja Roslin · October 29, 2026

0

ஜீவாவின் குரலைக்கேட்டு.

“மாமா. ஜீவா மாமா” என்று முல்லை கைபேசியில் அவன் பெயரை உச்சரிக்க.

சட்டென்று கைபேசி இணைப்பு துண்டிக்க பட்டு இருந்தது.

“ஹலோ. ஹலோ மாமா” என்று முல்லை மீண்டும் ஜீவாவிடம் பேச முயற்சி செய்ய. எதிர் முனையில் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போனது.

“ரோஜா. ரோஜா.“ என்று கைபேசியுடன் முல்லை தன் அறையில் இருந்து வெளியே வர, அங்கே மேசையின் அருகே அமர்ந்து இருந்தது என்னவோ கதிர் தான்.

முல்லை தன் வசம் இருந்த அவளின் கைபேசியை கதிரிடம் கொடுத்தவள்.

“இங்க பாருங்க. இப்போ தான் ஜீவா மாமா எனக்கு போன் பண்ணாரு. ஆனா அவருகிட்ட நான் பேசுறதுக்குள்ள போன் லைன் கட் ஆச்சு” என்று முல்லை சொல்ல.

“என்ன ஜீவா அண்ணனா.“ என முல்லையின் கைபேசியை தன் வசம் வாங்கிக்கொண்டான் கதிர்.

“என்ன டி இது. டிஸ்பிலேல நம்பரே இல்லையே. பிரைவேட் நம்பர்ன்னு தானே இருக்கு” என்று கதிர் கேட்க.“எனக்கு தெரியல. ஆனா ஜீவா மாமா என்கிட்ட பேசினாரு” என்றாள் முல்லை.

மீண்டும் கதிர் முல்லையின் கைபேசி திரையை கேள்வியாக பார்த்தவன். அதே கேள்வியுடன் அவளை பார்த்து.

“என்ன. தூக்க மயக்கத்துல யாரோ பண்ண போனை ஜீவா அண்ணன் பண்ணதா நினைச்சிட்டியா” என்று கதிர் கேட்க. கதிரை கடுப்பாக பார்த்த முல்லை.

“நான் என்ன உங்கள மாதிரி குடிகாரியா, எந்த நேரம் மயக்கத்துல இருக்க” என்றவள். வெடுகென்று அவன் வசமிருந்த தன் கைபேசியினை பிடுங்கிக்கொண்டு மீண்டும் அவள் அறைக்குள் சென்று இருந்தாள்.

முல்லை அங்கிருந்து சென்றதும்.

கதிர் தன் கைபேசி வாயிலாக அவன் நண்பன் நாகராஜனை அழைக்க.

“ஏண்டா நண்பா. நீ தான் உன் பொண்டாட்டி வீட்ல இருக்கியா. அங்க போயும் கூடவா என்னை தூங்க விடாம இந்த நேரத்துல போன் பண்ணி என் உசுரை எடுப்ப” என்று தன் நண்பனிடம் எறிந்து விழுந்தான் நாகராஜன்.

“நீ தூங்கி கிழிச்சது போதும். நாளைக்கு விடிஞ்சதும் நேரா நீ இங்க கிளம்பி வா” என்று கதிர் சொல்ல.

“நேரா வந்தா நான் சுவத்துல தான் முட்டிக்கணும்.“ என்று கடுப்பாக சொன்னான் நாகராஜன்.

“டேய். படுத்தாத. முல்லைக்கு ஜீவா அண்ணன் போன் பண்ணிருக்கு டா. ஆனா அந்த போன்ல நம்பர் தெரியாம பிரைவேட் நம்பர்ன்னு save ஆகி இருக்கு” என்று கதிர் சொல்ல.“என்ன நண்பா சொல்லுற.“ என்று ஆர்வமாக கேட்டான் நாகராஜன்.

“அத தான் சொல்லுறேன். சரி நீ நாளைக்கு நேரா இங்க கிளம்பி வா. மத்த கதையை நேர்ல பேசிப்போம்” என்ற கதிர் கைபேசி இணைப்பை துண்டித்தான்.

போனை பாக்கெட்டுக்குள் வைத்தவன் காதில் அடுப்பணைக்குள் யாரோ பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டு நேரே அங்கு சென்று பார்க்க.

“என்ன இது. காலையில கூட இங்க தானே வச்சிருந்தேன்” என்று வாய்க்குள் புலம்பியப்படி முல்லை அங்கே எதையோ தேடிக்கொண்டு இருக்க.“ இவ என்னத்த பூனை மாதிரி உருட்டிகிட்டு இருக்கா” என்று கதவின் ஓரமாய் நின்று முல்லையை கவனித்து இருந்தான் கதிர்.

நீண்ட நொடிகள் அடுப்பணையை ஆராய்ந்த முல்லை. ஏமாற்றதுடன் அங்கிருந்து வெளியே வர, அவள் கண்ணில் படாமல் கதிர் மீண்டும் சென்று ஹாலில் அமர்ந்துக்கொண்டான்.

நேரம் இரவு பனிரெண்டை கடந்தும் முல்லை அவள் அறையில் உறங்காமல் அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டு இருக்க.“என்னாச்சு இவளுக்கு. ஒரு வேள அவ வயத்துல இருக்குற குட்டி லட்டு எதாவது சேட்டை பண்ணுதா” என்று யோசித்தபடி இவனும் விழித்த்துக்கொண்டே அமர்ந்து

இருந்தான்.

ஒரு கட்டத்தில் கதிர் சோபாவில் அமர்ந்தப்படியே உறங்கி இருக்க.

“அக்கா.“ என்று முல்லை இருக்கும் அறையின் கதவை தட்டினான் வேலன்.

இந்த நேரத்தில் அவன் தன்னை அழைத்ததும் முருகனுக்கு தான் எதோ பிரச்சனை என்று எண்ணிய முல்லை பதற்றதுடன் கதவை திறக்க.

“அக்கா. ஏன் அந்த ஆளு இப்படி சீன் போடுறாரு” என்று கேட்க. முல்லை ஏதும் புரியாமல் சோபாவை பார்க்க. அங்கே கதிர் அமர்ந்தப்படியே உறங்கி இருந்தான்.

“சரி அப்பா தூங்கிட்டாரா.“ என்று முல்லை கதிரை கண்டுகொள்ளாதப்படி கேட்க.

“பெரியப்பாவை நான் பார்த்துக்குறேன். முதல்ல இந்த சின்ன தளபதி நடிப்பு அறக்கனை நீ குன்னக்குடிக்கு pack பண்ணு” என்ற வேலன். கையில் தண்ணீர் பாட்டிலுடன் முருகனின் அறைக்குள் நுழைய. முல்லையும் அவள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

“வேலன் சொல்லுற மாதிரி. இவரு ஏன் இப்போ இங்க வந்து இவ்ளோ சீன் போடுறாரு. இவரு இங்க வரலைன்னு யாரு அழுதாங்க” என்று கதிரை வாய்க்குள் இவள் வறுத்து எடுத்துக்கொண்டு இருக்க.

“முல்லை. முல்லை” என்று அழைத்துக்கொண்டே பார்வதி கதவை தட்டினார்.

“ஹாங் வரேன் ம்மா.“ என முல்லை கதவை திறக்க.

“என்னமா இதெல்லாம். ஏன் மாப்பிள வெளிய உக்காந்து இருக்காரு” என்று பார்வதி கேட்க.

“என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்” என்றாள் முல்லை.

“தப்புமா முல்லை. ஆயிரம் தான் இருந்தாலும் அவரு உன்னோட புருஷன். உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனா எனக்கும் உன் அப்பாவுக்கும் நடந்த விபத்து தான் நீ அவர் மேல கோவமா இருக்க காரணமுனா அத நான் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டேன்” என்று பார்வதி சொல்ல. முல்லை அந்த இடத்தில் அமைதியாக மட்டுமே இருந்தாள்.

“சரி. உங்க பிரச்சனை எதுவா இருந்தாலும் நீங்களே பேசி தீர்த்துக்கொங்க. இப்போ மாப்பிள்ளையை உள்ள போய் படுக்க சொல்லு போ” என்ற பார்வதி அவர் அறைக்கு செல்ல.

முல்லை பொறுமையாக கதிரின் அருகே சென்று அவனை எப்படி அழைப்பது என்ற யோசனையில் நின்றுக்கொண்டு இருந்தாள்.

“இவரு என்ன எப்பவும் பாயில தானே பப்பரப்பான்னு படுப்பாரு. இப்போ என்னமோ பிடித்து வைத்த பிள்ளையார் கணக்கா உக்காந்துகிட்டே தூங்குறாரு” என்று முல்லை யோசித்து இருக்க.

“வாத்தி. அண்ணி எவ்ளோ நேரமா உங்கள அவங்க ரூம்ல வந்து தூங்க சொல்லுறாங்க. சீக்கிரம் எழுந்து போய் படுங்க” என்று ரோஜாவின் குரல் தூரத்தில் இருந்து கேட்டதும் சட்டென்று கதிர் கண்களை திறந்தவன் எதிரே முல்லை திரு திருவென விழித்தப்படி நின்று இருந்தாள்.

“என்னடி மாமா கூட தூங்க போறியா. வா வா போய் தூங்கலாம்” என்ற கதிர். கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக முல்லையின் அறைக்குள் ஓடி இருக்க. ரோஜாவின் குரல் கேட்ட திசையை முல்லை கேள்வியாக பார்த்தவள் கண்ணுக்கு ரோஜாவின் உருவம் தெண்டபடவே இல்லை.

“எல்லாம் ஒரு முடிவோடு தான் இருக்காங்க” என்று மீண்டும் முல்லை புலம்பிய வண்ணம் அவள் அறைக்குள் செல்ல. அங்கே முல்லையின் பாதி கட்டிலை ஆக்கரமித்து இருந்தான் கதிர்.

“அப்போ இவ்ளோ நேரம் நீங்க தூங்கற மாதிரி ஆக்ட் பண்ணீங்களா” என்று முல்லை கோபத்துடன் கேட்க.

“பொண்டாட்டி பிள்ளையை தனியா விட்டுட்டு எந்த ஆம்பளைக்காவது சோபாவுல படுக்க மனசு வருமா டி” என்று கேட்டான் கதிர்.

“ஹ்ம். இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. சரி. நீங்க என்ன கட்டில்ல படுத்து இருக்கீங்க. போங்க. போய் கீழ படுங்க” என்று முல்லை சொல்ல.

“No No No, வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கணும் டி. இல்லைனா சாமி குத்தம் ஆகிடும். நான் கட்டில்ல தான் படுப்பேன். உனக்கு வேணும்னா நீ கீழ படுத்துக்கோ” என்றான் கதிர்.

“எல்லாம் என் தலையெழுத்து. நானே கீழ படுத்து தொலையுறேன்” என்ற முல்லை பாயை விரித்து கோவமாக அதில் தலையணையை வைத்து படுத்தவள். அலுப்பில் படுத்ததுமே உறங்கியும் போக. கட்டிலில் படுத்து இருந்த கதிரோ. திருட்டு பூனையை போல மெதுவாக வந்து முல்லையின் கால் அருகே அமர்ந்துக்கொண்டான்.

மெட்டி அணிந்து இருக்கும் அவளின் கால் விரலினை மெதுவாய் வருடியவன். அவள் பாதங்களை சுகமாய் பிடித்தும் இருந்தான்.

“சரியான பச்ச மிளகா டி நீ. கோவம் வந்தா என்கிட்டயே சண்டைக்கு வர இல்ல நீ. ம். ரொம்ப தைரியம் தான் உனக்கு” என்று தன் மனைவியை மனதினுள் மெச்சிக்கொண்டு இருந்தான் கதிர்.

தன் வலது கையை தலைக்கு கீழ் கொடுத்து. இடது கையை வயிற்று பகுதியில் வைத்துக்கொண்டு முல்லை உறங்கிக்கொண்டு இருக்க.

“மாசமா இருக்கும் போது தரையில படுத்து எழுந்தா தான் சுக பிரசவம் நடக்கும். அதனால தான் மாமா உன்ன தரையில படுக்க சொன்னேன்” என்ற கதிர். இன்றும் அவள் உறங்கும் நேரத்தில் மட்டுமே அவன் காதலை அவளுக்கு தெரியப்படுத்தி இருந்தான்.

காலையில் இருந்து முல்லை அலுப்பில் இருந்தவளுக்கு தன் கால் அடியில் அமர்ந்து அவள் பாதங்களை இதமாக பிடித்துக்கொடுக்கும் இந்த கதிரின் காதல் இந்த நொடி வரை அவள் உணர்ந்த்திட இல்லை.

அனுவனுவாக முல்லையை நேசித்த நேசிக்கும் கதிருக்கு அவன் காதலை வெளிப்படுத்தும் சூச்சமும் தெரியாமல் இருந்து இருக்க.

“உன்ன எப்படியாவது கரெக்ட் பண்ணி நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு போகல. என் பேர் கதிர் இல்ல டி.

நீ வேணா பாரு. நீ அடுத்து ஒரு முறை நம்ம வீட்டுக்கு வந்தினா. இனி நீ உன் அப்பா வீட்டையே கனவுல கூட நினைச்சு பார்க்காத அளவுக்கு உன்ன மாமன் தல மேல வச்சி தாங்குறேன் பாரு” என்று கதிர் தன் மனதில் முல்லையை எப்படியெல்லாம் கவனித்து கொள்ள வேண்டும் என்று கனவு கோட்டை கட்டிக்கொண்டு இருந்தவன் அப்படியே அவள் கால் மாட்டில் படுத்து உறங்கியும் இருந்தான்.

===============================

மறுநாள் காலை பொழுது அழகாய் மலர்ந்தது.

முல்லைக்கு முன்னதாகவே கதிர் எழுந்து குளித்து முடித்து இருந்தவன்.

முல்லையின் அல்லி விழிகள் மலர்வதற்காக காத்து இருந்தான்.

அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக முல்லை படுக்கையில் இருந்து எழுந்தவள், சூடு பறக்க தன் இரு கையை தேய்த்து அவள் முகத்தை வருடிக்கொடுத்து கண்களை திறக்க, தன் எதிரே அமர்ந்து இருந்தது என்னவோ கதிர் தான்.

தன்னவனை பார்த்தும் பார்க்காமல் அவனை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாத முல்லை குளியலறைக்கு செல்ல. அவளை பின் தொடர்ந்து சென்றான் கதிர்.

கதிரின் செயலில் திடுக்கிட்ட முல்லை.“எங்க வறீக” என்று கேட்க,

“உன்னை குளிப்பாட்ட தான் வரேன்” என்றான்.

கதிரின் பதிலில் ஏகத்துக்கும் அவனை முறைத்தவள், “என்ன விளையாடுறீங்களா?” என்று கோபத்துடன் கேட்க

“இல்ல இல்ல. விளையாட எல்லாம் நான் வரல. உன்னை குளிப்பாட்ட தான் வரேன்” என்று பவ்யமாக பதில் கொடுத்தான் கதிர்.

“உங்க டிராமா எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீக. உங்கள நம்பர அளவுக்கு நான் முட்டாள் இல்ல. ஒழுங்கா வெளியே போங்க” என்று அவன் முகத்தில் அறைந்தது போல குளியல் அறை கதவினை பட்டென்று முல்லை சாத்தி இருக்க.

“அப்படி என்ன இவளை நான் பண்ணிட்டேன்னு இவ என் மேல இவ்வளவு கோவமா இருக்கா” என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்ட கதிருக்கு அவன் செய்யும் ஒரே தவறு அவன் மனதில் இருக்கும் காதலை இந்த நொடி வரை முல்லைக்குப் புரியும்படி எடுத்து சொல்லவில்லை என்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

“சரி சரி. பொண்டாட்டிகிட்ட கௌரவம் பாக்குற புருஷன், அவன் வாழ்க்கையில உருப்பட முடியாது. அதுவும் இல்லாம நமக்கு ஒரு குட்டி லட்டு வேற பொறக்க போகுது. இந்த மாதிரி நேரத்துல நம்மளுடைய கோபத்தை ரொம்ப கண்ட்ரோல் பண்ணனும் கதிரு. அப்பதான் ஒரு நல்ல அப்பாவா உன்னால இருக்க முடியும்” என்று தனக்கு தானே தன்னை சமாதானம் படுத்திக் கொண்ட கதிர் வேகமாக அடுப்பனைக்குள் நுழைந்தான்.

கதிர் செய்யும் அனைத்து சேஷ்டைகளையும் ஓரமாக அமர்ந்து பாண்டியன், முருகன், ரோஜா மற்றும் வேலன் ஆகிய அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள்.

“என்ன தம்பி பசிக்குதா? அதான் அப்பவே நீங்க சாப்பிடுங்கன்னு சொன்னேன்” என்று இசக்கி கேட்க.“எனக்கு பசிக்கல அக்கா. முல்லை குளிக்க போயிருக்கா. அவ வந்ததும் நானும் அவளும் சேர்ந்தே சாப்பிடுறோம்” என்றான் கதிர்

“என்ன வாத்தி. பொண்டாட்டி மாசமா இருக்குறது தெரிஞ்சதும் பாசமெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. அதுவும் இல்லாம நேத்து யாரோ நான் ஏன் முல்லை வீட்டுக்கு வரணும். என்னால வர முடியாதுன்னு எல்லாம் சொன்ன மாதிரி இருந்துச்சு” என்று ரோஜா ஜாடை பேச.

“ஏம்மா. எரிகிற நெருப்புல நீங்க வேற எண்ணெயை ஊத்துறீங்க. அவ ஏற்கனவே என் மேல செம கோவத்துல இருக்கா. இப்ப நான் வர முடியாதுன்னு சொல்லி வந்திருக்கேன்னு தெரிஞ்சா இன்னும் என் மேல பயங்கர கோவத்துல இருப்பாளே” என்று கதிர் சொல்லி வாயை மூடுவதற்குள் முல்லை அவனை முறைத்தபடி அவன் எதிரே வந்து நின்றாள்.

வெள்ளை நிற புடவையில் சிவப்பு நிற பூக்கள் அங்கங்கே தூவி, ஈரக் கூந்தலில் துணியை சுற்றி இருந்தவள் அவனை முறைத்தபடியே சாமி மாடத்தில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைய, “என்னமா எழுந்து குளிச்சிட்டியா? இரு இன்னும் கொஞ்ச நேரத்துல டிபன் ரெடி ஆகிடும்” என்றார் இசக்கி

“எனக்கு இப்போ டிபன் வேண்டாம்ம் ம்மா. ஆமா, நேத்து நான் இங்கே வச்ச மாங்காய காணோமே, நீங்க எங்கேயாவது எடுத்து வச்சீங்களா” என்று முல்லை கேட்க,

“ஐயோ ஆமா பாப்பா. புதுசா வேலைக்கு வந்த பொண்ணு நேத்து மீன் குழம்புல அந்த மாங்காயை போட்டுட்டா” என்றார் இசக்கி.

“என்னம்மா நீங்க. மாங்காய் சீசனே இல்ல. நானே வேலன்கிட்ட சொல்லி அங்க இங்கன்னு அலைஞ்சு திரிஞ்சு ஒரு மாங்கா வாங்கிட்டு வந்து வச்சிருந்தேன். நீங்க ஏன் அத குழம்புல போட்டீங்க” என்று முல்லை வருத்தப்பட,

“ஓ. இந்த பூனைக்குட்டி நேத்து நைட்டு மாங்காவை தான் தேடி இருக்கா” என்று சரியாக எண்ணிகொண்டான் கதிர்.

“சரிமா. மாங்காய் இல்லனா என்ன. நார்த்தங்காய் சாப்பிடு. அதுவும் நல்லது தான்” என்று இசக்கி சொல்ல.

“இல்ல. எனக்கு மாங்கா தான் பிடிச்சு இருந்துச்சு. சரி பரவால்ல. நான் மறுபடியும் வேலனை வாங்கிட்டு வர சொல்றேன்” என முல்லை தான் எடுத்து வந்த விளக்கில் எண்ணையை ஊற்றி அதை மாடத்தில் வைத்து தீபம் ஏற்றி மனதார தெய்வத்தையும் வழிபட்டவள் வீட்டில் இருக்கும் அனைவரிடத்திலும் இன்முகத்துடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்.

“ஏன் ரோஜா. மீனா எப்படி இருக்கான்னு கஸ்தூரி சித்திக்கு போன் பண்ணி விசாரிச்சியா” என்று முல்லை கேட்க.

“நம்ம ஏம்மா அதெல்லாம் விசாரிக்கணும். தானே ராஜா தானே மந்திரின்னு இருக்குறவங்கள பற்றி எல்லாம் இனி நான் கவலைப்படுறதா இல்ல. எவ்வளவு தைரியம் இருந்தால் நம்ம வீட்டு வாரிச நம்மளோட அனுமதியில்லாமல் அந்த பொண்ணு கலைக்க முடிவு பண்ணி இருப்பா. இதெல்லாம் குடும்ப பொம்பளைங்க செய்யற காரியமா” என்று பாண்டியன் மீனாவை கடிந்து கொள்ள,

“மாமா. சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. மீனாவுடைய தரப்பு என்னன்னு தெரியாம நம்பலா ஒரு முடிவுக்கு வருவது ரொம்ப பெரிய தப்பு. அதுவும் இல்லாம நீங்க மீனாகிட்ட அவ ஏன் இப்படி பண்ணான்னு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்” என்றாள் முல்லை.

“நம்ம கேட்டா மட்டும் நம்ம வார்த்தைக்கு அங்க என்ன மதிப்பு இருக்கும். ஜீவாவும் மீனாவும் எதுக்காக அவசர கல்யாணம் பண்ணாங்கன்னு இந்த நொடி வர நமக்கு தெரியல. அதே மாதிரி இப்போ திடுதிப்புன்னு மீனா கரு கலைச்சுட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான்னு தெரியும்ப்போது என் தலையில இடியே விழுந்த மாதிரி இருக்கு. இந்த ஜீவா பையனும் எங்கன்னு தெரியல. இவங்கள சுத்தி எல்லாமே இவ்வளவு கேள்விக்குறியா இருக்கும்பொழுது என்னை யாரென்னு கேள்வி கேட்க சொல்ற. இல்ல நான் கேள்வி கேட்டா தான் எனக்கு அதுக்குண்டான பதில் கிடைக்கப்போகுதா?” என்று பாண்டியன் கோபம் கொள்ள.“அப்பா. நீங்க டென்ஷன் ஆகி உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க” என்று பாண்டியனை சமாதானம் செய்தாள் ரோஜா.

=============================

“ஆமா. நான் தெரியாம தான் கேட்கிறேன். உங்க குடும்பத்துல யாரும் எதையுமே நெனச்சு ரொம்ப பெருசா மண்டைய ஒடச்சிக்க மாட்டீங்களோ” என்று வேலன் கேட்க.

“ஹலோ. என்ன உங்க குடும்பம் எங்க குடும்பமும் பிரிச்சு பேசுறீங்க. இது நம்ம குடும்பம்” என்றாள் ரோஜா

“நம்ம குடும்பம், நமத்து போன குடும்பம் எல்லாம் இல்லைங்க. உங்க குடும்பத்துல தான பிரச்சனை. அது உங்க குடும்பம் தான். ஜீவா முல்லை, கதிர் மீனா இப்படித்தானா முதல்ல கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிங்க, அப்புறம் திடீர்னு ஜீவாக்கும் மீனாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. இந்த நொடி வர அது எதனால் ஆச்சுன்னு நீங்க யாரும் யோசித்து கூட பாக்கல,

உண்மையை சொல்ல வேண்டிய ரெண்டு பேருமே அமைதியா இருக்குறாங்க. அப்புறம் ஜீவா எங்கே போனாருன்னு தெரியலங்கறீங்க.

அப்புறம் திடீரென்று சும்மா நின்னுகிட்டு இருந்த எங்க அக்காவ கூப்பிட்டு இதோ உலக மகா உத்தமர் உங்க வாத்தியாருக்கு எங்க அக்காவ கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க.

இப்போ இவங்க ரெண்டு பேரும் கூட முட்டிக்கிட்டு இருக்காங்க.

நான் தெரியாம தான் கேட்கிறேன் ஏன் பாண்டிய மாமா, நீங்க உண்மையாவே பஞ்சாயத்து தலைவர் தானா.?

உங்க வீட்டிலேயே இத்தனை பிரச்சனை இருக்குதே, அத சரி பண்ண முடியாத நீங்க எப்படி இந்த ஊருக்கு தீர்ப்பு சொல்லுவீங்க.?” என்று வேலன் கேட்க,

“டேய். நான் மறுபடி மறுபடி சொல்றேன். நீ என்கிட்ட அடி வாங்கிட்டு போயிடுவ” என்று வேலனை கதிர் கண்டிக்க, முல்லை கதிரை முறைத்து பார்க்க,

“கதிர். கண்ட்ரோல் யுவர் செல்ப். தம்பியை பத்தி சொன்னா இவளுக்கு கோபம் வரும். அப்புறம் நம்மளை கெட் அவுட் சொல்லிட்டான்னா நமக்கு ரொம்ப அசிங்கமா போயிடும். கொஞ்சம் நீ இந்த இடத்தில் அமைதி காக்க வேண்டும்” என்று தனக்குத் தானே தன்னை கதிர் சமாதானம் படுத்திக் கொண்டான்.

“வேலா. நீ சொல்றதும் சரிதான் ப்பா. ஊருக்கே தீர்ப்பு சொன்ன எனக்கு என் குடும்பத்துக்கு அடுத்து என்ன பண்ணனும்னே தெரியல” என்று பாண்டியன் சொல்ல,

“சரி. உங்களுக்கு தான் வயசு ஆச்சு. உங்களுக்கு தான் தெரியல. இதோ, ஏழு ஊருக்கு சண்டியர் கணக்கா நிக்கிறாரே உங்க சின்ன புதல்வன், அவருடைய அண்ணன் எங்க போனாருன்னு இவருக்கு கூடவா தெரியாது. இல்ல. திடீரென்று மீனாவுக்கும் ஜீவாவுக்கும் ஏன் கல்யாணம் ஆச்சுன்னு இவரால கூட கண்டுபிடிக்க முடியாதா?” என்று வேலன் கேட்க,

“ஹலோ. எங்க வாத்தி என்ன சினிமாவுல வர ஹீரோவா. சும்மா பேப்பரை டேபிளில் விரிச்சு வச்சுக்கிட்டு டேபிளுக்கு கீழே பார்த்த உடனே நாலு பைப் லைன் போட்டு கனெக்ஷன் கொடுக்கிறதுக்கு. இது உண்மை. அதெல்லாம் எங்க வாத்தி நாகராஜ் கூட சேர்ந்து ஜீவா அண்ணன் மீனா கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு நாலா பக்கமும் விசாரிச்சு பாத்தாச்சு. ஆனா யாருக்கும் எந்த உண்மையையும் தெரியல. மீனா அண்ணியும் வாயைத் திறந்து பேச மாட்றாங்க. உண்மையை சொல்ல வேண்டிய ஜீவா அண்ணனும் இங்கே இல்ல” என்றாள் ரோஜா

“ம். உங்க அண்ணா ஹீரோன்னு நீங்க மட்டும் தான் சொல்றீங்க. நான் என்னிக்குமே சொன்னது இல்ல. சரி அந்த கதையை விடுங்க. ஜீவா மீனா கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு ஜீவா மீனாவே உங்ககிட்ட சொல்லலனாளும் இன்னொரு ஆள் சொல்ல வாய்ப்பிருக்கே” என்று வேலன் கேட்க, “யாருப்பா அது” என்றார் பாண்டியன்.

“வேற யாரு, கண்டிப்பா இதுக்கு பின்னாடி மீனாவோட அம்மா இருப்பாங்க. நீங்க கஸ்தூரிய நாளு காட்டு காட்டி இருந்தா அவங்களே உண்மையை சொல்லி இருப்பாங்க” என்று வேலன் சொல்ல.

“நீ என்ன. பெரியவங்கள மட்டு மரியாதை இல்லாமல் பேர் சொல்லி கூப்பிடுற” என்று வேலனை கண்டித்தார் பார்வதி.

“பெரியம்மா பெரியம்மா இருங்க. வயசுக்கு மரியாதை குடுக்கணும்ன்றதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனா அந்த வயசுக்கு உண்டான பக்குவத்தோட நடந்துக்குறவங்களுக்கு மட்டும் தான் இந்த வேலன் மரியாதை கொடுப்பான். இல்லனா பேர் சொல்லி கூப்பிடுறதே என் அகராதியில பெரிய விஷயம் தான். சரி அத விடுங்க. அப்போ ஜீவா மீனா கல்யாணம் நடந்தது எப்படின்னு கஸ்தூரிக்கு தெரியும்தானே” என்று வேலன் கேட்க

“எனக்கும் அந்த சந்தேகம் இருக்குதான். கண்டிப்பா கஸ்தூரி அத்தைக்கு இந்த உண்மை தெரிஞ்சிருக்கும்” என்றாள் ரோஜா.

மீனாவை பற்றி பேச பேச கதிர் முகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருக்க. முல்லை அதையும் உன்னிப்பாக கவனித்திருக்க. முல்லையை கவனித்த வேலன், “ ஏன் அக்கா. நீ என்னமோ இந்த ஆளு மீனாவை காதலிச்சாருன்னு சொன்ன. ஆனா மீனாவ பத்தி பேச பேச இந்த ஆளுக்கு மூஞ்சில ஒரு ரசமும் வரலையே” என்று வேலன் முல்லையிடம் கதிரை பற்றி விசாரிக்க.

“நானும் அத தான் டா தம்பி யோசிக்கிறேன். மீனா தான் அடிக்கடி இவரு அவளை காதலிக்கிறதா சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா நேத்து மீனா கருவ கலைச்சுட்டு வந்து அத்தனை பேர் எதிர்ல அழுதுகிட்டு இருக்கா. இவரு அவளை ஒரு பொருட்டாவே பாக்கலையே. எனக்கும் அதான்டா சந்தேகமாக இருக்கு” என்று முல்லை தன் தம்பியிடம் கதிரை பற்றி பேசிக்கொண்டு இருக்க. இந்த நொடி வரை கதிர் மீனாவைப் பற்றி எந்த ஒரு அபிப்பிராயத்தையும் தன் முகத்தில் வெளிப்படுத்தாமல் தான் இருந்தான்.

“அக்கா. எனக்கு என்னமோ இந்த ஆளு மீனாவை லவ் பண்ணிருப்பாருனு நம்ப முடியல அக்கா” என்று வேலன் சொல்ல.

“ஏய். அதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன அவரை இந்த ஆளு அந்த ஆளுன்னு சொல்லுற. அவரு நமக்கு மாமா. ஒழுங்கா மரியாதையா மாமான்னு கூப்பிடு.“ என்று முல்லை வேலனை கண்கள் உருட்டி கண்டித்தாள்.

“உன்ன அந்த ஆளு இந்த காட்டு காட்டும் போதே நான் அவருக்கு மரியாதை கொடுக்கணும்னு நினைக்கிறியா” என்று வேலன் கேட்க.

“அவர் என்னை கை நீட்டி அடிச்சது எந்த அளவுக்கு தப்போ. அதே மாதிரி நீ அவரை மரியாதை இல்லாம பேசுறதும் தப்பு தான்.“ என்று முல்லை கதிருக்காக வாதாடிக்கொண்டு இருக்க.

“ஐயா ஐயா. நம்ம வீட்டுக்கு போலீஸ் வராங்க ஐயா.“ என்று முருகன் வீட்டில் பணிபுரியும் பணியாளர் உள்ளே ஓடி வந்தார்.

“இதோடா. சொந்த அண்ணன் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்த ஆசைப்பட்டு, அதுக்கு இடைஞ்சளா இருந்த அண்ணனையே போட்டு தள்ளிட்டு. இப்போ மாமியார் வீட்டுல மாப்புள சார் விருந்து சாப்புட வந்து இருக்கீங்களா?” என கேட்டுக்கொண்டே முருகனின் இல்லதினுள் காவலாலி சுந்ததேரேசன் உள்ளே நுழைய.

முல்லையும் கதிரும் ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக்கொண்டார்கள்.

தொடரும்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!