Stories that touch hearts

Home  /  02. S.K (மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ)  /  Chapter 9

CHAPTER 9

முல்லைப்பூ – 9

By S.K Velan · October 21, 2026

7

அத்தியாயம் – 9

கண்மணியைப் பார்த்த அந்த ஒரு நொடி, சின்னதாக ஒரு மகிழ்ச்சி கதிரின் முகத்தில் தெரிந்தது. ஆனால், அடுத்த நொடியே அவனது பார்வை கண்மணியின் பின்னால் சென்றது.

அங்கே கதிரின் நண்பன் சுவாமிநாதன் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் கதிரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மறைந்து, அதற்குப் பதிலாகக் கடுங்கோபம் பொங்கியது.

“எவ்ளோ நேரம் கதவைத் தட்டுறது?” என்று கண்மணி எரிச்சலுடன் கேட்டாள்.

கதிர் பதில் சொல்லும் முன்பே, அவன் கைகளில் இருந்த குழந்தையை ஒரு பார்வைகூடப் பார்க்காமல், அவனைத் தாண்டி வீட்டுக்குள் சென்றாள்.

நேராகத் தன் அறைக்குச் சென்றவள், சில நொடிகளில் கையில் பாஸ்போர்ட்டுடன் வெளியே வந்தாள்.

“கண்மணி… நில்லு.” என்ற கதிரின் குரலை அவள் காதில் வாங்காதவள் போல நடந்தாள்.

“சுவாமி… come on, let’s go.” என வாசலை நோக்கி நடந்தவளைப் பார்த்த கதிரின் பொறுமை உடைந்து, “ஏய்! நில்லு!” என்று கத்தினான்.

கண்மணி திரும்பிப் பார்க்கவும், “இப்போ நீ எங்கே போற?” என்று கதிர் கேட்க, அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.

கதிர் அவளருகில் சென்று, தன் கைகளில் இருந்த குழந்தையைச் சற்றே உயர்த்திக் காட்டினான். “இங்க பாரு… நம்ம பிள்ளையைப் பாரு.” என்றதும் கண்மணியின் பார்வை ஒரு நொடி குழந்தையின் மீது விழுந்தது.

“இந்தக் குழந்தை முகத்தைப் பார்க்கணும்னு கூட உனக்குத் தோணலையா?” கதிரின் குரல் உடைந்தது.

கண்மணி குழந்தையைப் பார்த்துவிட்டு, அருவருப்புடன், “இந்த அசிங்கத்தைப் பார்த்துட்டு போனா, நான் போற காரியம் உருப்படாமதான் போகும்.” என்றாள்.

“ஏய்…!” எனக் கதிரின் கண்கள் கோபத்தில் சிவந்தன. அவனது கை தன்னையும் அறியாமல் உயர்ந்தது.

ஆனால், அடுத்த நொடியே சுவாமிநாதன் அவனது கையை இறுக்கமாகப் பிடித்துத் தடுத்தான்.

“அவ மேல கை வைக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. கண்மணி வா போகலாம். ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு.” என்று அவளை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல, கதிர் அங்கேயே சிலையாக நின்றான்.

அவன் கைகளில் இருந்த குழந்தை திடீரென அழத் தொடங்கியது. அந்த அழுகை அவனைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. மெதுவாகச் சோஃபாவில் அமர்ந்தான். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது.

சில நொடிகளுக்கு முன்பு கண்மணி சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில், “இந்த அசிங்கத்தை…” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலிக்க, கதிரின் கண்களில் கண்ணீர் தேங்கியது.

அந்த நேரத்தில், நிலாவின் அறைக்குள் இருந்து அந்த உரையாடல் முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த முல்லை, குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதும் பதறியபடி வெளியே வந்தாள்.

சோஃபாவில் கதிரின் கைகளில் குழந்தை அழுதுகொண்டிருப்பதைப் பார்த்ததும், ஒரு நொடியும் தயங்கவில்லை. அவனருகில் சென்று குழந்தையை வாரி அணைத்துக்கொண்டாள்.

“அழாதே… அழாதே செல்லம்…” என்று தன் மார்போடு இறுக்கமாக அணைக்க, குழந்தையின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.

முல்லை எதுவும் பேசவில்லை. கதிரையும் பார்க்கவில்லை. குழந்தையை மட்டும் தன் உயிரைப் போல அணைத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் சென்றாள்.

கதிர் அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த நொடியில், தன் குழந்தையைப் பெற்ற தாய் அவளை நிராகரித்துச் சென்றிருந்தாள். ஆனால், எந்த உறவும் இல்லாத ஒரு பெண், அந்தக் குழந்தையின் அழுகையைக் கேட்டதும் தன் குழந்தையைப் போல வாரி அணைத்துக்கொண்டாள்.

கதிரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அந்த நொடியில், முல்லை அறியாமலேயே, கதிரின் குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறியிருந்தாள்.

அப்போது மீண்டும் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இந்த முறை கதிர் எழுந்து சென்று கதவைத் திறந்தான். வாசலில் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வந்திருந்த ஒருவர், வாங்கச் சொன்ன பொருட்களுடன் நின்று கொண்டிருந்தார்.

பொருட்களை வாங்கிக்கொண்டு, பணத்தைக் கொடுத்துவிட்டு கதவை மூடிய கதிர், மேற்கொண்டு எதுவும் செய்யாமல் வந்து மேசையின் அருகில் அமர்ந்துகொண்டான். அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

சில நிமிடங்கள் கழித்து, முல்லை குழந்தைகள் இருவரையும் தூங்க வைத்துவிட்டு, மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள்.

வீட்டின் நடுவே கிடந்த பொருட்களைப் பார்த்தவள், சிறிது தயக்கத்துடன் ஒவ்வொன்றாக எடுத்து ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.

அனைத்தையும் அடுக்கி வைத்துவிட்டு கதிரை நோக்கித் திரும்பியவள், “என்ன சமைக்கட்டும்?” என்று கேட்டாள்.

கதிர் அவளைப் பார்த்தபடியே, “உங்க இஷ்டம். உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதைப் பண்ணுங்க.” என்றான்.

முல்லை சமையலறைக்குள் சென்று அங்கிருந்த பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தவள், “அரிசி எங்க இருக்கு?” என்று கேட்டாள்.

கதிர் உடனே எழுந்து சென்று அரிசியை எடுத்துக் கொடுத்தான்.

பிறகு, “பசங்க தூங்குறாங்களா?”

என்று கேட்டான்.

“ஆமா டாக்டர் சார். ரெண்டு பேரும் தூங்குறாங்க.” என்றவள் அரிசியை கழுவி முடித்தாள்.

“அவங்க எழுந்ததும் பிள்ளைங்கள குளிக்க வைக்கலாம்.” என்று கதிர் சாதாரணமாகச் சொல்ல,

முல்லை சற்றுத் தயக்கத்துடன், “எனக்குப் பிள்ளைங்கள குளிக்க வைக்கத் தெரியாது.” என்றாள்.

“நான் தான் இருக்கேனே. நான் பார்த்துக்கறேன்.” என்று சொல்லிவிட்டு கதிர் வேகமாக மாடிக்குச் சென்றான்.

சில நிமிடங்களில் கை நிறைய துணிகள், சோப்பு, துண்டு எனக் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை அள்ளிக்கொண்டு கீழே வந்தவன், அவற்றைக் குழந்தைகள் இருந்த அறையில் கொண்டு போய் வைத்தான்.

கதிரின் ஒவ்வொரு செயலையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த முல்லையின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. ஆனால், அவள் எதுவுமே கேட்கவில்லை.

அதற்குள் முல்லை சமையல் வேலையை ஆரம்பித்தாள்.

கதிரும் அருகில் வந்து, “நான் vegetables cut பண்ணுறேன்.” என்று சொல்லி அவளுக்கு உதவ ஆரம்பித்தான்.

இருவரும் அருகருகே நின்று சமையல் செய்துகொண்டிருந்தனர்.

சில நேரம் கழித்து, கதிர் எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த முல்லை,

“டாக்டர் சார்… நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க. நான் சமையல் பார்த்துக்குறேன்.” என்றாள்.

கதிர் கையில் இருந்த வேலையை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து, “ரெஸ்ட்டா…?” என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், “இனி என் மகளை ஆளாக்கிப் பார்க்குற வரைக்கும், என்னால ரெஸ்ட்டே எடுக்க முடியாது.” என்றவன் குரலில் ஒரு உறுதி இருந்தது.

முல்லையின் உதடுகளில் மெலிதான புன்னகை மலர்ந்தது.

“நீங்க நல்லா இருந்தாதான் உங்க குழந்தையைப் பார்த்துக்க முடியும்.” என்று மெதுவாகச் சொன்னாள்.

அந்த வார்த்தைகள் கதிரின் மனதைத் தொட்டன.

“உண்மைதான்…” என்று தலையைக் குனிந்தவன், குழந்தையை நினைத்தபடி, “பெத்த தாய் முகத்தைக்கூட பார்க்காத என் பொண்ணுக்கு, இனி எல்லாமே நான் தான்.” என்றான்.

முல்லை அவனைப் பார்த்து, “தகப்பன் யாருன்னே தெரியாத, என் பிள்ளையையே நான் தைரியமா வளர்க்க நினைக்கிறேன்

அப்படி இருக்கும்போது, உங்க பிள்ளையை வேண்டாம்னு சொல்லிட்டு போன, உங்க மனைவியை நினைச்சு நீங்க வருத்தப்படுறதுல எந்த அர்த்தமும் இல்லை.” என்றாள்.

அவள் அந்த வார்த்தைகளைச் சொன்ன விதத்திலேயே, இன்று கண்மணி வீட்டுக்கு வந்து சென்றதை முல்லை அறிந்திருக்கிறாள் என்பதை கதிர் புரிந்துகொண்டான்.

அவன் சில நொடிகள் முல்லையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

முல்லை அவன் பார்வையை உணர்ந்தாலும், சமையல் வேலையைத் தொடர்ந்தாள்.

பிறகு, “உங்க மனைவி சாகலைன்னு எனக்குத் தெரியும் டாக்டர் சார்.” என்று அவள் சொன்னதும், கதிரின் முகம் சட்டென்று மாறியது.

“என் வாழ்க்கையில இருக்குற பிரச்சனை போலவே… உங்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. அதனாலதான் நீங்க அன்னைக்கு… உங்க குழந்தையைப் பெற்றெடுத்த அம்மா இறந்துட்டாங்கன்னு என்கிட்ட சொன்னீங்க.” என்றாள்.

கதிரின் உதடுகளில் மிக மெலிதான புன்னகை ஒன்று மலர்ந்தது.

“Clever தான் நீங்க…” என்றான்.

முல்லையின் இதழ்களிலும் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.

ஆனால் அடுத்த நொடியே கதிரின் முகம் மீண்டும் சோகமாக மாறியது.

“ஆமா… அவ உயிரோடதான் இருக்கா.” என்று சில நொடிகள் அமைதியாக இருந்தவன், கண்களில் தெரிந்த வேதனையுடன், “ஆனா… அவளால நான் தான் நடைப்பிணமா ஆகிட்டேன்.” என்றான்.

அந்த வார்த்தைகளுக்குப் பிறகு சமையலறையில் மீண்டும் அமைதி நிலவியது.

அந்த அமைதியை உடைக்கும் விதமாக, குழந்தைகள் இருந்த அறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.

சட்டென்று முல்லை பாதியில் இருந்த சமையல் வேலையை அப்படியே விட்டுவிட்டு, அவசரமாக அறைக்குள் ஓடினாள்.

அங்கே அழுதுகொண்டிருந்தது அவளுடைய ஆண் குழந்தை.

அவனை வாரி அணைத்துக்கொண்ட முல்லை, பசியாற்றியபடி மீண்டும் குழந்தையைத் தூங்க வைக்க முயன்றாள்.

அதே நேரத்தில், சமையல் வேலையை முடித்துவிட்டு, கதவை மெதுவாகத் தட்டியபடி கதிரும் அறைக்குள் வந்தான்.

“சாப்பாடு வேலை முடிஞ்சிடுச்சு. குழந்தைகளைக் குளிக்க வைக்கலாமா?” என்று கேட்டான்.

முல்லை குழந்தையைப் பார்த்துவிட்டு, “தம்பி இப்பதான் தூங்குறான். முதல்ல பாப்பாவை குளிக்க வைக்கலாமா?” என்று கேட்கவும் கதிர் தலையசைத்தான்.

தன் பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டவன், அருகில் இருந்த பிங்க் நிறத் துண்டையும், குழந்தையின் மாற்றுத் துணிகளையும் எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தான்.

அவனைத் தொடர்ந்து முல்லையும் சென்றாள்.

குளியலறைக்குள் நுழைந்த கதிர், முதலில் ஹீட்டரை ஆன் செய்தான்.

வெதுவெதுப்பான தண்ணீரைத் தயாரித்தவன், குழந்தையைத் தன் கைகளில் ஏந்தியபடியே அதன் காலில் மெதுவாகத் தண்ணீரை ஊற்றினான்.

தண்ணீர் பட்டதும் குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.

“நோ, நோ. அழக் கூடாது, அழக் கூடாது…” என்று குழந்தையைச் சமாதானப்படுத்தியபடியே குளிப்பாட்டத் தொடங்கினான்.

அவனது ஒவ்வொரு அசைவையும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்த முல்லை, “எங்க கிராமத்துல எல்லாம் பாட்டி கால்ல வச்சு தான் குழந்தையைப் போட்டு, துணி துவைக்கிற மாதிரி தூக்கி எடுப்பாங்க. இப்படி கையில வச்சுக்கிட்டெல்லாம் குளிப்பாட்ட மாட்டாங்க.” என்றாள்.

அவள் பேச்சைக் கேட்டுக் கதிர் மெலிதாகச் சிரித்தான்.

“என் சித்தியும் குழந்தைகளை அப்படித்தான் குளிப்பாட்டுவாங்க. எங்க ஊர்ல எந்தக் குழந்தை பிறந்தாலும் எங்க சித்திதான் அவங்களுக்கு வைத்தியம் பார்க்குறதுல இருந்து, குழந்தையைக் குளிப்பாட்டுறது வரைக்கும் எல்லா வேலையும் அவங்கதான் பண்ணுவாங்க.” என்றான்.

அவன் குரலில் சித்தியைப் பற்றிய பெருமை வெளிப்படையாகத் தெரிந்தது.

ஒரு வழியாகக் குழந்தையின் அழுகையையும் பொருட்படுத்தாமல் குளிப்பாட்டி முடித்த கதிர், அவனே குழந்தையைத் துண்டால் நன்றாகத் துடைத்து, மாற்றுத் துணியை அணிவித்தான்.

அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் முல்லை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் குழந்தை மட்டும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது.

“நான் வேணா பாப்பாக்கு பால் கொடுத்துத் தூங்க வைக்கட்டுமா?”

என்று முல்லை கேட்டாள்.

கதிர் உடனே, “புள்ளை அழுததும் பால் கொடுக்கக் கூடாது. குழந்தை அழுதாலே அது பசிக்குத்தான் அழுதுன்னு அர்த்தம் கிடையாது. தட்டிக்கொடுத்து தூங்க வைக்கலாம்.” என்று சொல்லியபடி குழந்தையைத் தன் மார்பில் போட்டு மெதுவாகத் தட்டிக்கொடுத்தான்.

ஆனால் குழந்தையோ தூங்காமல் தொடர்ந்து அடம்பிடித்தது.

“நீங்கக் குடுங்க. நான் தூங்க வைக்கிறேன்.” என்று முல்லை கதிரிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

முல்லையின் கைகளுக்குள் வந்த குழந்தை, அவளிடமிருந்து வீசிய பால் வாசனையையும், தாயின் அரவணைப்பையும் உணர்ந்ததுபோல், அடுத்த சில நொடிகளிலேயே அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது.

அதைப் பார்த்த கதிர் மெலிதாகச் சிரித்தான்.

“பாப்பா நல்லா கை சுகம் கண்டுட்டாங்க. அதனாலதான் குழந்தை அழும்போது தூக்கிப் பழக்கக்கூடாதுன்னு என் சித்தி சொல்லுவாங்க.” என்றான்.

முல்லை அவனைப் பார்த்தபடி சிரித்தாள்.

“எல்லாத்துக்குமே நீங்க உங்க சித்தியையே சொல்றீங்களே. அப்போ உங்க அம்மா?” என்று இயல்பாகக் கேட்டாள்.

அந்த ஒரு கேள்வி கதிரின் முகத்தில் இருந்த சிரிப்பை உடனே மறையச் செய்தது.

அவனது முகம் மாறியதைப் பார்த்த முல்லை பதறி, “சாரி. நான் எதுவும் அதிகப்பிரசங்கித்தனமா கேட்டுட்டேன் போல.” என்று சொல்லியபடி, குழந்தையை மெதுவாகத் தட்டிக்கொடுத்தாள்.

கதிர் சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.

“நீங்கக் கேட்டதில் தப்பில்லை. எனக்கு அம்மா, அப்பா எல்லாமே என் சித்திதான்.” என்றான்.

முல்லை அமைதியாக அவனைப் பார்த்தாள்.

கதிரின் குரலில் இப்போது இருந்தது பெருமை மட்டும் இல்லை. பல வருடங்களாக மனதுக்குள் புதைத்து வைத்திருந்த வலியும் இருந்தது.

“இன்னைக்கு நானும் நிலாவும் ஒரு டாக்டரா இருக்கோம்னா… அதுக்கு மூல காரணமே என் சித்திதான்.” என்று கதிர் சொன்னான்.

அந்த வார்த்தைகளுடன் அவன் மனதுக்குள் பல வருடங்களாகப் பூட்டிக் கிடந்த காயங்களின் கதவு, அந்த நொடி முதல் முறையாக மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது.

முல்லை எதுவும் கேட்கவில்லை. அவன் சொல்ல விரும்புவதைச் சொல்லட்டும் என்று அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு அம்மா, அப்பா எல்லாமே… என் சித்திதான்.” என்ற கதிர் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

அவனுடைய கண்கள் குழந்தையின் மீது இருந்தாலும்… அவன் மனம் பல வருடங்களுக்குப் பின்னால் சென்றிருந்தது.

“நானும் நிலாவும் ரெட்டை குழந்தைங்க. நாங்க பிறந்த அடுத்த நிமிஷமே எங்க அம்மா இறந்துட்டாங்க.”

முல்லை அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“காலங்காலமா நடக்குற அதே அநியாயம் தான்… எங்க சித்திக்கும் நடந்துச்சு.”

அவன் சொன்னது முல்லைக்கு புரியவில்லை.

“எந்த அண்ணன் இறந்தாலும், அவன் பொண்டாட்டிக்கு அவனோட தம்பியைக் கட்டி வைக்காத இந்த உலகம், அக்கா இறந்துட்டா மட்டும், அவங்க புருஷனுக்கு மனைவியோட தங்கச்சியை கட்டி வைப்பாங்க. அப்படித்தான் என் அம்மாவோட தங்கச்சியை எங்க அப்பாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க.”

முல்லை அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

“ஆனா, எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்தே, என் சித்தி எங்க அப்பாகூட பேசினதையோ, அவர்கூட சந்தோஷமா இருந்ததையோ, நானோ நிலாவோ பார்த்ததே இல்லை. நானும், நிலாவும் எப்பவுமே எங்க சித்திகூடத்தான் தூங்குவோம். எங்களுக்கு எங்க அப்பா மேல கூட அவ்ளோ பிரியம் இருக்காது. ஆனா, எங்க சித்திதான் எங்களுக்கு எல்லாமே.” என்ற கதிரின் குரல் கொஞ்சம் உடைந்தது.

“எங்களுக்கு அப்போ ஆறு வயசு இருக்கும். எனக்கு இன்னும் அந்த நாள் நல்லா நினைவு இருக்கு. என்னையும் நிலாவையும் சித்தி ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வந்தாங்க. வீடு முழுக்க கூட்டம். என்ன நடக்குதுன்னே எங்களுக்குப் புரியல. உள்ள போய்ப் பார்த்தப்போ… எங்க அப்பா…” கதிர் சில நொடிகள் பேச முடியாமல் தலையைத் தாழ்த்தினான்.

 “உயிரில்லாத சடலமா அங்க கிடந்தாரு.”

முல்லையின் மனமும் கனத்தது.

“எங்க அப்பா வருவாய்த்துறையில வேலை பார்த்துட்டு இருந்தாரு. அன்னைக்கு ஆபீஸ்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போதே, திடீர்னு நெஞ்சுவலி வந்து கீழ விழுந்துட்டாரு. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுக்குள்ளயே எல்லாம் முடிஞ்சிடுச்சு…” கதிர் கண்களை மூடிக்கொண்டான்.

சில நொடிகள் அந்த அறையில் அமைதி மட்டுமே இருந்தது.

“அவரு போனதுக்கப்புறம்… அவரோட வேலை எங்க சித்திக்கு வந்துச்சு. பொண்ணா இருந்து இந்த வேலையை எப்படி பார்க்கப் போறா? ரெண்டு குழந்தைகளை எப்படி வளர்ப்பா? என்று எங்க குடும்பத்துல இருந்த எல்லாரும் பேசினாங்க. எங்க அம்மம்மா கூட… எங்கள ரெண்டு பேரையும் ஹாஸ்டல்ல சேர்த்துட்டு, எங்க சித்திக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணாங்க.”

கதிரின் உதடுகளில் ஒரு வலி கலந்த சிரிப்பு வந்தது.

“ஆனா, எங்க சித்தி எங்கள விட்டுட்டு போகல. எனக்காகவும், நிலாவுக்காகவும், அவங்க வாழ்க்கையையே அர்ப்பணிச்சாங்க.”

அந்த வார்த்தைகள் முல்லையின் மனதைத் தொட்டது.

அவளுக்கு உடனே தன் தாய் மாமா செல்வம் நினைவுக்கு வந்தார்.

‘தன் வாழ்க்கையை விடத் தான் பெறாத பிள்ளைகளுக்காக வாழ்றவங்க…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“எங்க சித்தி எங்கள நல்லா படிக்க வச்சாங்க. நாங்களும் நல்லா படிச்சோம். அவங்க என்ன சொன்னாலும் கேப்போம். ஏன்னா, எங்களுக்கு என்ன நல்லதோ… அதைத்தான் அவங்க சொல்லுவாங்க.”

அவன் முகத்தில் முதல் முறையாக ஒரு பெருமை தெரிந்தது.

“நானும் நிலாவும் டாக்டர் படிக்கணும்னு ஆசைப்பட்டோம். அவங்க சக்திக்கு மீறி எங்கள படிக்க வச்சாங்க. எங்களுக்காக எதையும் செய்யத் தயங்கல.”

கதிரின் குரல் மெதுவானது. “எங்க ஊரை விட்டு நானும் நிலாவும் மட்டும் எங்க சித்தியைப் பிரிஞ்சி இந்த ஊருக்கு வந்தோம். எங்க கூடவே எங்க அத்தையோட பையன் கந்தனும் இதே வீட்டுல தங்கி இருந்தான்.”

அவன் ஒரு பெருமூச்சு விட்டான்.

“எல்லாம் நல்லாத்தான் போச்சு. நாங்களும் நல்லா படிச்சோம். எங்க சித்திக்குப் பெருமை வர்ற மாதிரி நடந்துக்கிட்டோம்.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்.

“அன்னைக்கு எங்க காலேஜோட லாஸ்ட் டே.”

அவன் கண்களில் அந்த நாள் மீண்டும் தெரிந்தது.

“எல்லாரும் ஜாலியா பப் போகலாம்னு ஃப்ரெண்ட்ஸ் கம்பல் பண்ணி எங்கள அழைச்சிட்டு போனாங்க. நிலா மட்டும் கந்தனை அழைச்சிட்டு கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டா. அதனால நான் மட்டும் என் ஃப்ரெண்ட்கூட பப் போனேன்.”

கதிர் அந்த நினைவுகளை மீண்டும் கடந்து செல்வது போல மெதுவாகப் பேசினான்.

“அதுதான் எனக்கு முதல் முறை. அங்க நிறைய ஆண்களும் பெண்களும் எந்தப் பாரபட்சமும் இல்லாம குடிச்சிட்டு ஆடிக்கிட்டு இருந்தாங்க.”

ஒரு நொடி அவன் அமைதியாக நின்றான்.

“அப்போதான் நான் முதல் முதலா கண்மணியைப் பார்த்தேன். அவள்… என் நண்பன் சுவாமிநாதனோட தோழின்னு எனக்கு அறிமுகமானா. அங்கிருந்துதான் எங்க நட்பு ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா அந்த நட்பு காதலா மாறுச்சு.”

கதிரின் முகத்தில் இப்போது சிரிப்பும் இல்லை… கோபமும் இல்லை. அவனுடைய கண்களில் மட்டும் பழைய வலி.

“அவளுக்காக நான் நிறைய விட்டுக்கொடுத்தேன். ஒவ்வொரு தடவையும், பரவாயில்லை… அவளுக்காகத்தானே’ன்னு நினைச்சு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.”

முல்லை அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நான் நிறைய விட்டுக்கொடுத்தேன், கடைசியா ஒரு கட்டத்துல, எனக்காக அவங்க வாழ்க்கையையே விட்டுக்கொடுத்த என் சித்தியையே, அவளுக்காக நான் விட்டுக்கொடுக்குற நிலைமையும் வந்துச்சு.” என்ற கதிரின் கண்களில் கண்ணீர் தேங்க,

முல்லை அசையாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்…

← Previous All Chapters Next →

4 comments

Sam Sam October 21, 2026 - 2:41 pm

பாவம் கதிர் km நட்பு அருமையா போகுது

வென்மதி October 21, 2026 - 3:57 pm

💐e🌸🌷❤️🌷👍👌super sk kathirai mulakikuda serthydunga

Yashni Benjamin October 21, 2026 - 4:46 pm

Nallathoru நகர்வு

Vasu Sai October 21, 2026 - 8:28 pm

Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe

Leave a Comment

error: Content is protected !!