அத்தியாயம் – 8
நள்ளிரவு இரண்டு மணி.
கண்களுக்கு எட்டிய தூரம் வரை பலத்த பாதுகாப்புடன் கம்பீரமாக நின்றிருந்த அந்தப் பங்களாவின் உள்ளே, நள்ளிரவின் அமைதியைக் கிழித்துச் சிதறடிக்கும் ஒரு கோரச் சூறாவளி வீசிக்கொண்டிருந்தது.
முக்தாவின் கைகளில் சிக்கியதெல்லாம் நொறுங்கித் தரைமட்டமாகின.
விலைமதிப்பற்ற அலங்காரப் பொருட்கள், கண்ணாடிக் குவளைகள், மேஜை மீது இருந்த பொருட்கள் என அனைத்தும் அவளது ஆவேசத்திற்கு இரையாகித் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்தன.
அவளது கண்கள் கோபத்தில் சிவந்து நெருப்பைக் கக்கின.
அவளுக்கு எதிரே, என்ன செய்வதென்று அறியாமல் ஸ்தம்பித்து நின்றிருந்தனர் மங்கலம், காவல்துறை ஆணையர் மற்றும் அவளது கணவன் முகேஷ்.
“போச்சு… எல்லாம் போச்சு!” என்று வெறிபிடித்தவள் போல் அலறிய முக்தா, கட்டுக்கடங்காத ஆவேசத்துடன் முகேஷை நோக்கிப் பாய்ந்தாள்.
அவளைச் சமாதானப்படுத்தும் நோக்கில்,
“முக்தா…” என்று கையை நீட்டி அருகில் வர முயன்றவனின் கரங்களைத் தட்டி விலக்கியவள், பற்களைக் கடித்தவாறு ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
“நம்முடைய பல வருட ஆசை… கனவு… நம்மோட பேர், புகழ்… எல்லாமே அந்த ஒரு சாதாரணப் பொடியனால இடிஞ்சு தரைமட்டமா போச்சு, முகேஷ்!” என்று ஆவேசமாகச் சீறினாள்.
அவளது கோபத்தைக் கண்டு பதறிப்போன மங்கலம், உடனே குறுக்கிட்டுச் சமாதானம் பேச முயன்றாள்.
“மேடம்… நீங்க கோவப்படாதீங்க மேடம். நாளைக்கு இந்நேரம் அந்த முல்லையும் உங்க வாரிசும் உங்க கையில கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன் மேடம்.”
மங்கலம் சொன்னதைக் கேட்டதும் முக்தாவின் கோபம் மேலும் கொப்பளித்தது.
“நாளைக்குக் கிடைச்சா மட்டும் உன்னால பூஜையைப் பண்ணி என் ஆசையை நிறைவேற்ற முடியுமாடி?” என்று சீறினாள்.
அவள் கேட்ட கேள்வியில் மங்கலம் சற்றுத் தயங்கினாள்.
“நாளைக்கு… நாளைக்கு முடியாது மேடம். ஆனா, இன்னும் மூணு நாள்… இல்லன்னா வர மாசத்துல சரியான கிரகம் பார்த்து…” என்று மறிக்க முயன்றவளைப் பார்த்து, முக்தா கையை உயர்த்தித் தடுத்தாள்.
“மூணு, நாலு மாசம் இல்ல!
இன்னும் ஒரு வருஷத்துக்கு உன்னால அந்தப் பூஜையைப் பண்ண முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்!” என்று முக்தா அழுத்தமாகக் கூற, மங்கலம் சற்றே நடுங்கினாள்.
“இல்லை மேடம்… ஆறு மாசத்துல கண்டிப்பா பண்ணலாம்…” என்றாள் தயக்கத்துடன்.
அப்போது அமைதியாக நின்றிருந்த முகேஷ் இடையில் புகுந்து கர்ஜித்தான்.
“பண்ணனும்! பண்ணியே ஆகணும்! எங்க குடும்பம் வாழையடி வாழையாக வளரணும். எங்களை எதிர்க்க இந்த உலகத்துல யாருமே இருக்கக் கூடாது!”
முகேஷின் பேச்சைக் கேட்டுத் தைரியம் பெற்ற மங்கலம்,
“கண்டிப்பா நடக்கும் ஐயா! அதுக்காகத்தானே இவ்ளோ நாள் கஷ்டப்பட்டோம்…” என்றாள்.
அதைக் கேட்ட முக்தாவின் விழிகளில் கண்ணீரும் கோபமும் ஒருசேரப் பொங்கின.
“நான் இவ்ளோ செலவு பண்ணி… நீ இவ்ளோ கஷ்டப்பட்டு… என்ன பிரயோஜனம்? எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டமே மாறிப்போச்சே!” என்று கொலைவெறியோடு மங்கலத்தைப் பார்த்தாள்.
அடுத்த கணம் முகேஷின் பார்வை, ஓரமாகப் பயத்துடன் நின்றுகொண்டிருந்த கமிஷனர் மீது விழுந்தது.
“அரசாங்கமே உங்க கையில இருக்கும்போது, ஒரு ஏ.எஸ்.ஐ பொடியனை உன்னால கண்டுபிடிக்க முடியலையா?” என்று கமிஷனரை நோக்கிச் சுட்டெரிக்கும் பார்வையை வீசினான்.
பதறிப்போன கமிஷனர் நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக்கொண்டு,
“சார்… அவன் ஜில்லா கேடி! நான் அவனோட போன் நம்பரைக்கூட ட்ரேஸ் பண்ண ஏற்பாடு பண்ணேன். ஆனா, அந்தக் கந்தனோட சிம் கார்டு இப்போ ‘நாட் ஆக்டிவ்’னு வருது.” என்றார்.
“ஒரு பெண்ணையும், ஒரு குழந்தையையும் கண்டுபிடிக்க முடியலைன்னா… நீங்க எல்லாம் எதுக்குத்தான் இருக்கீங்க?” என்று முக்தா கொதித்தெழுந்தாள்.
“மேடம்… அந்தக் கந்தன் சிம் லாஸ்ட்டா எங்க ஆக்டிவ்ல இருந்ததோ, அங்க போய் எங்க ஆளுங்களை விசாரிக்கச் சொன்னேன் மேடம்.” என்று கமிஷனர் விளக்க முயன்றார்.
“ஆனா… அங்க விசாரிச்சதுல கூட எந்தத் தகவலும் பிரயோஜனமா கிடைக்கல மேடம்…” என்று முடித்துவிட்டுத் தலைகுனிந்தார்.
அவர் சொன்னதைக் கேட்டுப் பொறுமையிழந்த முக்தா, தன் இறுதி உத்தரவைப் பிறப்பித்தாள்.
“உன் வெத்துக் காரணம் எல்லாம் எனக்கு வேண்டாம்! எனக்கு எங்க வீட்டு வாரிசு உயிரோடவும்… என் மகன் எதிர்காலத்தை அழித்து, என் கனவுல மண்ணைப் போட்ட அந்த முல்லையைப் பிணமாகவும் என் முன்னாடி கொண்டு வந்து நீங்க நிறுத்தியே ஆகணும்!”
அவளது கொடூரமான உத்தரவு அந்த அறைக்குள் சில நொடிகள் அமைதியை ஏற்படுத்தியது.
அந்த அமைதியைத் தொடர்ந்து, மங்கலம் ஒரு பக்கமும், காவல்துறை அதிகாரிகள் மறுபக்கமும் இரவோடு இரவாகத் தீயாய் வேலை செய்ய ஆரம்பித்தனர்.
அதே நேரத்தில், கதிரின் வீட்டில்…
அவனது அறைக்குள் நுழைந்த முல்லையின் பார்வை, பேச்சு மூச்சில்லாமல் மயங்கிக் கிடந்த கதிரின் மீது விழுந்ததும், அவளது இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.
“டாக்டர் சார்…”
என்று பதற்றத்துடன் அவன் அருகில் ஓடிச் சென்றவள், அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள்.
சில நொடிகள் கழித்துக் கதிரின் புருவங்கள் லேசாகச் சுருங்கின.
“டாக்டர் சார்… டாக்டர் சார்…” என்று அவன் தோளைப் பிடித்து முல்லை அசைத்தாள்.
மெதுவாகக் கண்களைத் திறந்த கதிர், தன் எதிரே பதற்றத்துடன் நின்றிருந்த முல்லையைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூட முயன்றான்.
“சார்… எழுந்திருங்க…” என்று பதற்றத்துடன் அவனைத் தூக்க முயன்றாள்.
ஆனால் கதிரால் எழுந்திருக்கவே முடியவில்லை.
முல்லை எப்படியோ அவனைத் தாங்கிப் பிடித்து அருகில் இருந்த கட்டிலில் அமர வைத்தாள்.
பிறகு அவசரமாக ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தாள்.
கதிர் நடுங்கிய கைகளால் அதை வாங்கிக் கொஞ்சம் குடித்தான்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், வறண்ட உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டு,
“ச… சக்கர…”
என்று மெதுவாகக் கேட்டான்.
“சக்கரையா?”
என்று புரியாமல் பார்த்த முல்லை, அவன் முகத்தைப் பார்த்ததும் சட்டெனப் புரிந்துகொண்டாள்.
“இருங்க சார்…”
என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே ஓடினாள்.
அவள் சென்ற சில நொடிகளிலேயே குழந்தையின் அழுகை அந்த அறைக்குள் கேட்டது.
கதிர் அந்த அழுகையை நோக்கித் திரும்பிப் பார்த்தான்.
எழுந்து தன் குழந்தையைத் தூக்க முயன்றான்.
ஆனால் உடலில் இருந்த சோர்வால் அவனால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை.
அதே நேரத்தில் முல்லை கையில் சர்க்கரையுடன் வேகமாக ஓடி வந்தாள்.
அவள் அதைக் கதிரிடம் கொடுத்துவிட்டு, உடனே அழுதுகொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.
“அழாதீங்க செல்லம்…”
என்று குழந்தையைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே கதிரைப் பார்த்தாள்.
கதிர் அந்தச் சர்க்கரையை வாயில் போட்டுக்கொண்டான்.
சில நொடிகளில் அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பின.
முல்லை குழந்தையைத் தோளில் வைத்துத் தட்டிக்கொடுத்துக்கொண்டே அவனைப் பார்த்தாள்.
கதிரும் சோர்வாக அவளைப் பார்த்தான்.
அந்தப் பார்வையில் சொல்ல முடியாத ஒரு நன்றியும்… ஒரு தயக்கமும் இருந்தது.
சிறிது நேரம் கழித்து முல்லை,
“இப்போ எப்படி இருக்கு?”என்று கேட்டாள்.
“ஓகே தான்…”
என்று கதிர் மெதுவாகப் பதிலளித்தான்.
அவனை விடாமல் பார்த்த முல்லை,
“உங்களுக்கு என்னாச்சு சார்?”
என்று கேட்டாள்.
கதிர் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
பிறகு தயக்கத்துடன்,
“எனக்குச் சக்கரை நோய் இருக்கு…” என்றவன்,
“ரெண்டு நாளா மருந்தும் எடுக்கல. சாப்பாடும் ஒழுங்கா இல்லை.”
என்று சோர்வாகக் கூறினான்.
அதைக் கேட்டதும் முல்லையின் முகம் மாறியது.
ஒரு வார்த்தையும் பேசாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியே சென்றாள்.
சிறிது நேரத்தில், வீட்டில் இருந்த சாப்பாட்டை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு மீண்டும் வந்தாள்.
குழந்தையை ஒரு கையில் தாங்கிக்கொண்டு, இன்னொரு கையில் இருந்த தட்டை கதிரின் முன்னால் நீட்டினாள்.
“சாப்பிடுங்க.” என்று அக்கறையுடன் சொன்னாள்.
கதிர் அந்தத் தட்டைப் பார்த்துவிட்டு, “எனக்கு வேண்டாம்.” என்றான்.
முல்லை அவனை அழுத்தமாகப் பார்த்து, “உங்க பிரச்சனை என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா… உங்க பாப்பாவுக்காக நீங்க ஆரோக்கியமா இருக்கணும். Please… சாப்பிடுங்க.” என்று அழுத்தமாகக் கூறினாள்.
கதிர் அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
முல்லை அதற்கு மேல் எதுவும் பேசாமல், குழந்தையைத் தூக்கிக்கொண்டு நேராக நிலாவின் அறைக்குச் சென்றாள்.
கதிரின் பார்வை அவள் சென்ற திசையிலேயே சில நொடிகள் நிலைத்திருந்தது. பிறகு தன் முன்னால் இருந்த சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தான். அவள் சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
“உங்க பாப்பாவுக்காக நீங்க ஆரோக்கியமா இருக்கணும்…”
கதிர் மெதுவாகத் தன் குழந்தை இருந்த அறையை நோக்கிப் பார்த்தான். “யாருக்காகவும் இல்லன்னாலும்… என் குழந்தைக்காக நான் நல்லா வாழ்ந்துதான் ஆகணும்.” என்று தனக்குள் தைரியம் சொல்லிக்கொண்டவன், முல்லை கொடுத்திருந்த சாப்பாட்டுத் தட்டைக் தன் பக்கம் இழுத்து சாப்பிடத் தொடங்கினான்.
நேரம் கடந்து கொண்டே போனது.
நிலாவின் அறைக்குள் இரண்டு குழந்தைகளுக்கும் பால் கொடுத்து, அவர்களின் துணிகளை மாற்றி, இருவரையும் அருகே படுக்கவைத்துக்கொண்டு மெதுவாகத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாள் முல்லை.
அடிக்கடி அழுது சோர்ந்திருந்த குழந்தைகள், அவளது அரவணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகத் தொடங்கினார்கள்.
அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம், அதிகாலை 5:00 மணியைத் தாண்டியிருப்பதைக் காட்டியது.
அந்த வேளையில் முல்லையின் கண்களும் தூக்கத்தால் சொருகத் தொடங்கின.
ஆனால் அவளது மனதுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. தன் நிலைமை… தன் பிள்ளையின் எதிர்காலம்… இனி என்ன நடக்கப்போகிறது என்ற பயம்… அதோடு, தன் தாய் மாமன் செல்வத்தின் தற்போதைய நிலை… எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக அவளது மனதிற்குள் வந்து போனது.
“என்ன ஆகுமோ…?” என்ற எண்ணம் மட்டும் அவளது மனதை விடாமல் துரத்தியது. அவளுக்கென்று யாருமே இல்லாத இந்த நேரத்தில், தன்னையும் தன் குழந்தையையும் எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற கவலை அவளது நெஞ்சை அழுத்தியது.
சில நொடிகளிலேயே, பல மணி நேரமாக உடலையும் மனதையும் வாட்டிய சோர்வு அவளை முழுவதுமாக ஆட்கொண்டது.
எண்ணங்கள் அப்படியே இருக்க, முல்லை அறியாமலேயே தூங்கிப் போனாள்.
அதே வேளையில், நிலாவின் அறைக்கு வெளியே இருந்த சோஃபாவில் கதிர் படுத்திருந்தான். உடல் முழுவதும் சோர்வு. மனதில் ஆயிரம் குழப்பங்கள். அதோடு உடல்நலக்குறைவின் வேதனையும் அவனை வாட்டிக்கொண்டிருந்தது.
கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த அவனது கைபேசி திடீரெனச் சிணுங்கியது. திரையில் தெரிந்த கந்தன் என்ற பெயரைப் பார்த்ததும் கதிர் சட்டென எழுந்தவன் கைபேசியின் அழைப்பை ஏற்றான்.
“ஹலோ…”
மறுமுனையில் கந்தனின் குரல் கேட்டது.
“சொல்லுடா. சித்தி எப்படி இருக்காங்க? அவங்களுக்குப் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லையே?” என்று பதற்றமாகக் கேட்டான் கதிர்.
அதற்குள் மறுமுனையில் இருந்து, “இவ்ளோ அக்கறை இருக்கிறவனுக்கு… ஏன் நேர்ல வந்து பார்க்க முடியல?” என்று நிலாவின் குரல் கேட்டது.
கதிர் அந்தக் குரலைக் கேட்டதும் அமைதியாகிவிட்டான்.
அதற்குள் கந்தன், “நீ சும்மா இரு நிலா…” என்று அவளை அடக்கிவிட்டு மீண்டும் கதிரிடம் பேசத் தொடங்கினான்.
“டேய் மச்சான்… மாமி இன்னும் ஹாஸ்பிடல்லதான் இருக்காங்க. நாங்க இன்னும் டாக்டர் கிட்ட பேசல. நீ பயப்படாதே.” என்றதும் கதிர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“நேரத்துக்கு நீ சாப்பிடு. அப்புறம் முல்லைக்கு நேரத்துக்குச் சாப்பாடு கொடு. நீ எங்கேயும் வெளியே போகாத. அவங்க ரெண்டு பிள்ளையை வச்சிட்டுத் தனியா பார்த்துக்க முடியாது.” என்று கந்தன் அறிவுறுத்தினான்.
அதற்குள் நிலா பின்னால் இருந்து, “அவங்களுக்குச் சாப்பாடு, மருந்து எல்லாம் கொடுக்கச் சொல்லு!” சத்தமாகக் கத்தினாள்.
கந்தன் சற்றே சலிப்புடன், “சரி… சரி… அவன் பார்த்துப்பான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கதிரிடம் பேசினான்.
“நீ எதுக்கும் பயப்படாதே. நாங்க டாக்டரைப் பார்த்துட்டு உனக்குப் போன் பண்றோம்.”என்று கந்தன் சொல்ல,
கதிர் பெருமூச்சுவிட்டான்.
“சரி… நீங்க டாக்டரைப் பார்த்துட்டு சித்திக்கு இப்போ எப்படி இருக்குன்னு எனக்குப் போன் பண்ணுங்க.” என்ற கதிர் அழைப்பைத் துண்டித்தான்.
அதே நேரத்தில்… நிலாவின் அறைக்குள் இருந்து இரண்டு குழந்தைகளின் அழுகைச் சத்தம் ஒரே நேரத்தில் கேட்டது.
கதிர் சட்டென எழுந்தவன், “குழந்தைங்க…” என்று பதற்றத்துடன் அறைக் கதவைத் தட்டினான். எந்தப் பதிலும் வரவில்லை. அழுகைச் சத்தம் மட்டும் அதிகரித்தது.
கதிர் மீண்டும் கதவைத் தட்டியவன், “முல்லை…?” என்று அழைத்தபடியே கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
அறைக்குள் பார்த்தவனுக்கு ஒரு நொடி குழப்பமாக இருந்தது. கட்டிலில் இரண்டு குழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர். ஆனால் முல்லை அங்கே இல்லை.
“ஹே… ஹே… No, no… don’t cry…”
என்று பதற்றமாகக் குழந்தைகளை நோக்கி ஓடினான்.
அவன் குழந்தைகளுக்கு அருகில் செல்லும் வேளையில், குளியலறையில் இருந்து கூந்தலில் ஈர துணியைச் சுற்றிக்கொண்டு வேகமாக வெளியே வந்த முல்லை, கதிரைப் பார்த்ததும் பதறிப்போனாள்.
“சார்…” என்று தயக்கத்துடன் நின்றாள்.
“நான்… இப்போதான் குளிக்கப் போனேன்…” என்று அவசரமாக விளக்கினாள்.
அவள் முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்த கதிர் மெதுவாகத் தலையசைத்து, “பரவாயில்லை…” என்று சொல்லிவிட்டு குழந்தைகளை நோக்கித் திரும்பினான். “நீங்க பொறுமையா வாங்க… குழந்தைங்களை நான் பார்த்துக்கறேன்.” என்று அமைதியாகக் கூறியவன், அடுத்த நொடியே அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தையை ஒரு கையில் தாங்கிக்கொண்டு, இன்னொரு குழந்தையை மறுகையில் அணைத்துக்கொண்டான்.
மருத்துவராக இருந்த அனுபவத்தால், குழந்தைகளை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இரண்டு குழந்தைகளையும் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, “சரி… சரி… அழாதீங்க…” என்று மெதுவாகத் தட்டிக்கொடுத்தான்.
அவனைப் பார்த்துக்கொண்டிருந்த முல்லையின் முகத்தில் இருந்த பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.
அவளது பார்வை கதிரின் கைகளில் இருந்த இரண்டு குழந்தைகளிடமும், பிறகு கதிரின் முகத்திலும் நிலைத்தது. அந்த நொடியில், அவளுக்குள் இருந்த பதற்றத்துக்கு நடுவே ஒரு வித்தியாசமான நிம்மதி பிறந்தது.
கதிரின் கைகளில் இருந்த இரண்டு குழந்தைகளும் அவனது அரவணைப்பில் அமைதியாகிவிட, அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த முல்லையின் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது.
குழந்தைகளை மெதுவாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்த கதிர், “காலையில டிபன் என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என்று சாதாரணமாகக் கேட்டான்.
முல்லை சற்றுத் தயக்கத்துடன் அவனைப் பார்த்து “ஆர்டரா…?” என்று கேட்க,
கதிர், “ஆமா…” என்றதும்,
சில நொடிகள் அமைதியாக இருந்த முல்லை, “நான் சமைக்கவா?” என்று கேட்டாள்.
கதிரின் புருவங்கள் சற்றே உயர்ந்தன. “ஓ… நீங்க சமைப்பீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
அவனைப் பார்த்த முல்லை, “ம்… நல்லாவே சமைப்பேன்.” என்றாள்.
அவள் சொன்ன விதத்தில் இருந்த நம்பிக்கையைப் பார்த்த கதிரின் உதடுகளில் சிறிய புன்னகை தோன்றியது.
“சரி… காலையில டிபன் ஆர்டர் பண்ணிடலாம். மதியம் லஞ்ச்க்கு என்னென்ன தேவைன்னு சூப்பர் மார்க்கெட்டுக்கு போன் பண்ணி சொன்னா அவங்க டோர் டெலிவரி பண்ணிடுவாங்க.” என்றான்.
முல்லையும் சம்மதமாகத் தலையசைத்தாள்.
அடுத்தச் சில நொடிகளில், குழந்தைகள் இருவரையும் மெதுவாகக் கட்டிலில் படுக்க வைத்த கதிர், “நான் போன்ல ஆர்டர் பண்ணிட்டு… குளிச்சிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான்.
சில நிமிடங்கள் கழித்து குளித்து முடித்துவிட்டு வந்த கதிர், முல்லை இருந்த அறையின் வாசலில் வந்தவன், “சாப்பிடலாமா?” என்று கேட்டான்.
முல்லை அவனைப் பார்த்து அமைதியாகத் தலையசைத்தாள்.
குழந்தைகள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இருவரும் ஒன்றாக அமர்ந்து ஆர்டர் செய்த உணவைச் சாப்பிடத் தொடங்கினர்.
அப்போது…
கதிரின் கைபேசி சிணுங்கியது.
திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் அவன் உடனே அழைப்பை ஏற்றான்.
“ஹலோ…டேய்… சித்தி எப்படி இருக்காங்க?”
என்று கதிர் பதற்றத்துடன் கேட்டான்.
“இப்போதான் டா டாக்டர் கிட்ட பேசினோம்…”என்று கந்தன் சொல்ல,
கதிரின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
“ஹார்ட் அட்டாக்னு சொன்னாங்கடா…”
அந்த ஒரு வார்த்தை கதிரின் காதுகளில் இடியென விழுந்தது.
“ஹார்ட்… அட்டாக்கா…?”
என்று தன்னையும் அறியாமல் முணுமுணுத்தான்.
“ஆமாடா… இனி அவங்களைப் பத்திரமா பார்த்துக்கச் சொன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரம் டாக்டர் அப்சர்வேஷன்ல வச்சிருக்காங்க.”
என்று கந்தன் சொன்னான்.
கதிர் எதுவும் பேசவில்லை.
அவனது கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.
அவனது சித்தி…
சிறு வயதிலிருந்து தனக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்து பார்த்துக்கொண்டவர்.
இப்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணமே அவனது நெஞ்சை உள்ளிருந்து பிசைந்து எடுத்தது.
அவனது நிலையை மறுமுனையில் இருந்த கந்தனும் புரிந்துகொண்டான்.
“டேய் மச்சான்… நீ கவலைப்படாத. எல்லாம் சரியாகும்.”
என்று ஆறுதல் கூறிய கந்தன்,
“சரி… நான் அப்புறம் போன் பண்றேன்.”
என்று அழைப்பைத் துண்டித்தான்.
கதிர் கைபேசியைத் தன் கையில் வைத்தபடியே சில நொடிகள் அசைவில்லாமல் அமர்ந்திருக்க,
அவனது கண்களுக்கு முன்னால் சித்தியின் முகம் மட்டுமே வந்து போனது.
அவனது உதடுகள் நடுங்கி,
“சித்தி…”
என்று மெல்ல முணுமுணுத்தான்.
அவன் அருகில் இருந்த முல்லை அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனது மனதுக்குள் என்ன நடக்கிறது என்பதை அவள் முழுமையாக அறிந்திருக்காவிட்டாலும், அவனது முகத்தில் தெரிந்த வேதனை அவளுக்குப் புரிந்தது.
ஆனால் அவள் எதுவும் கேட்கவில்லை.
அவனுக்கு அந்த நேரத்தில் தேவைப்படுவது கேள்விகள் அல்ல… கொஞ்சம் அமைதி என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.
அப்போது…நிலாவின் அறைக்குள் இருந்து இரண்டு குழந்தைகளின் அழுகைச் சத்தமும் ஒரே நேரத்தில் கேட்டது.
முல்லையும் கதிரும் ஒரே நேரத்தில் எழுந்து அறைக்குள் ஓடினர்.
குழந்தைகளின் ஆடைகள் நனைந்திருந்ததைப் பார்த்ததும் முல்லை அவற்றை மாற்றத் தொடங்க, கதிரும் அவளுக்கு உதவினான்.
ஒரு குழந்தையை முல்லை தூக்கிக்கொண்டிருக்க, இன்னொரு குழந்தையைக் கதிர் தூக்கிக்கொண்டான்.
இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லாமலேயே புரிந்துகொண்டு, குழந்தைகளின் ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில்…
டக்… டக்… டக்…!
வீட்டின் வாசல் கதவு வேகமாகத் தட்டப்படும் சத்தம் கேட்க, முல்லையின் முகத்தில் பயம் படர்ந்தது.
கதிர் அதைக் கவனித்தவன்,
“சூப்பர் மார்க்கெட்டுல இருந்து ஆள் வந்திருப்பாங்க.”
என்று அவளை அமைதிப்படுத்த முயன்றான்.
ஆனால்…
மீண்டும் கதவு வழக்கத்தைவிட அதிக வேகத்துடன் தட்டப்பட்டது.
முல்லையின் முகத்தில் இருந்த பயம் மேலும் அதிகரித்தது.
கதிர் உடனே முல்லையின் கையில் அவளது ஆண் குழந்தையைக் கொடுத்து,
“நான் கூப்பிடுற வரைக்கும் நீங்க வெளிய வராதீங்க.”
என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, பெண் குழந்தையைத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.
கதவின் அருகில் சென்றவன், சட்டென்று
கதவைத் திறக்க, அவன் எதிரே நின்றிருந்தாள் அவனுடைய முன்னாள் மனைவி கண்மணி.
தொடரும்.
7 comments
Nan than first paduchitu🌷varen
Kathier wife returna apo mullai baby ennavagum sk
Iyio இவ எங்கன இங்க வந்தா இனி என்னவாகும்
Good story👌👌👌👍👍
நல்லா இருக்கு வேலு கதை 🫶
Super super super super
முன்னாள் மனைவி என்றால் என்ன? அடுத்து அடுத்து என்ன பண்ணப்பொறிங்க SK.