Stories that touch hearts

Home  /  02. S.K (மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ)  /  Chapter 7

CHAPTER 7

முல்லைப்பூ – 7

By S.K Velan · October 16, 2026

11

அத்தியாயம் 7

கதிரின் கைகளிலிருந்து கைபேசி நழுவி கீழே விழுந்ததைக் கண்ட கந்தனும் நிலாவும் பதறிப் போனார்கள்.

“டேய்… என்னாச்சு கதிர்?” என்று கந்தன் அவனை நோக்கி பதற்றத்துடன் கேட்டான்.

ஆனால் கதிரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அவன் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான்.

அவன் மனதுக்குள் மட்டும் ஒரே ஒரு வார்த்தை திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

“எல்லாம் என்னால தான். என்னால யாருக்குமே எந்த நல்லதும் நடக்காது…”

என்று புலம்பியவனின் கண்களில் கண்ணீர் தேங்கவில்லை.

அதற்கும் மேலாக அவன் முகத்தில் தெரிந்த வேதனையே அவன் உள்ளுக்குள் எவ்வளவு உடைந்திருக்கிறான் என்பதைச் சொல்லியது.

“டேய்… என்னதான் ஆச்சு?”

என்று மீண்டும் கேட்டபடியே கந்தன் கீழே கிடந்த கைபேசியை எடுத்தான்.

அதற்குள் மறுமுனையில் இருந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.

“டேய்… யார் போன் பண்ணாங்க? என்னாச்சு?” என்று நிலாவும் பதற்றத்துடன் கேட்டாள்.

கதிர் சில நொடிகள் எதுவும் பேசவில்லை.

பிறகு அவன் தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட வார்த்தைகளை எப்படியோ வெளியே கொண்டு வந்தான்.

“சித்தி…சித்திக்கு… நெஞ்சு வலி…”

அதற்கு மேல் அவனால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை.

“ஐயோ! அவங்களுக்கு என்னாச்சு?” என்று நிலா பதறிப் போனாள்.

“என்னடா சொல்ற? அவங்களுக்குத் திடீர்னு என்னாச்சு?”

என்று கந்தனும் அதிர்ச்சியுடன் கேட்டபடியே, உடனடியாகத் தன் கைபேசியை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி நகர்ந்தான்.

யாருக்கோ அழைத்துக் கொண்டிருந்த அவன் முகத்திலும் பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

ஆனால் கதிரோ அதே இடத்திலேயே அமர்ந்திருந்தான்.

“சித்தி…”

என்று மட்டும் மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தவன்,

“சித்திக்கு என்னாலதான் பிரச்சனை…”

என்ற வார்த்தையையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு கந்தன் வேகமாக அவர்களிடம் திரும்பி வந்தவன்,

“டேய் மச்சான்… வா. உடனே கிளம்புவோம்.”என்றான்.

அவனது குரலில் இருந்த அவசரம் நிலாவை மேலும் கலங்கச் செய்தது.

“என்ன கந்தா? ஊருக்கு போன் பண்ணிப் பேசுனீங்களா? சித்திக்கு பயப்படுற அளவுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?” என்று அவள் கேட்டாள்.

“அதெல்லாம் நேர்ல போய்க் கேட்டுக்கலாம். முதல்ல கிளம்புங்க.”

என்ற கந்தன், அதற்கு மேல் எதையும் சொல்லாமல் கார் சாவியை எடுத்துக் கொண்டான்.

“நீங்க இவ்வளவு அவசரப்படுறதைப் பார்த்தா எனக்கு இன்னும் பயமா இருக்கு. இருங்க… நான் சீக்கிரம் கிளம்புறேன்.”

என்ற நிலா வேகமாக எழுந்தவள் கதிரை நோக்கி,

“டேய் கதிர்… வா போகலாம்.”

என்று அழைத்தாள்.

ஆனால் கதிர் அசையவே இல்லை.

முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு, தன்னையே குறுக்கிக் கொண்டவனாக அவன் அங்கேயே அமர்ந்திருந்தான்.

அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவனுக்குப் புரியாத நிலை.

நிலாவும் கந்தனும் பேசிக் கொண்டிருந்த எதுவுமே அவன் காதுகளில் விழவில்லை.

“டேய்… உங்கிட்டதான் பேசுறேன். எழுந்து கிளம்பு.”

என்று நிலா சற்றுக் கோபமாகக் கூறியவள்,

“நான் போய்க் குழந்தையைத் தூக்கிட்டு வரேன்.”

என்று அறைக்குள் செல்லத் திரும்பியவளுக்கு அப்போதுதான் முல்லை நினைவுக்கு வந்தாள்.

“ஐயோ கந்தா…”

என்று சட்டென நின்றவள்,

“முல்லையையும் அவ குழந்தையையும் நம்ம கூடவே அழைச்சிட்டு போகலாமா?”

என்று கேட்டாள்.

கந்தன் ஒரு நொடி யோசித்துவிட்டு,

“பின்ன, அவங்க எப்படித் தனியா இருப்பாங்க!? அவங்களும் வரட்டும்.”என்றான்.

அவர்கள் இருவரும் அவசரமாகப் பேசிக் கொண்டிருக்க, இத்தனை நேரம் முகத்தை மூடிக் கொண்டிருந்த கதிர் மெதுவாகத் தன் கைகளைக் கீழே இறக்கினான்.

அவன் முகத்தில் வழக்கமான இறுக்கம் இல்லை.

மாறாக, தன் மனதோடு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனின் வேதனை மட்டுமே இருந்தது.

“நிலா…”என்று அழைத்தவன்,

“நீ கந்தன்கூடப் போய்ச் சித்தியை பாரு”என்றான்.

கதிரை முறைத்து பார்த்த நிலா “அப்போ… நீ வரலையா?”என்று கோவமாகக் கேட்டாள்.

கதிர் தெளிவாக “நான் வரல” என்றதும்,

அவனைச் சில நொடிகள் அழுத்தமாகப் பார்த்த நிலா,

“உயிரோட இருக்கும்போது உனக்கு யாரோட அருமையும் தெரியாதா?”

என்று கேட்டாள்.

அந்தக் கேள்வி கதிரின் நெஞ்சில் நேராகப் பாய்ந்தது. அடுத்த நொடியே சட்டென்று தன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

“அவங்க இன்னும் நூறு வருஷத்துக்கு உயிரோட இருக்கணும்னு ஆசைப்படுறதாலதான் நான் உங்ககூட வரலைன்னு சொன்னேன்!”

என்று ஆவேசமாகக் கூறினான்.

அவனுடைய வார்த்தைகளில் இருந்த வலியைப் புரிந்தும் புரியாத நிலையில் நிலா கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ச்சி… நீ திருந்தவே மாட்ட!

எக்கேடோ போ!”

என்றபடி தன் அறைக்குள் வேகமாக நுழைந்தாள்.

ஆனால் அங்கே அவள் கண்ட காட்சி, அவளுடைய கோபத்தை அடுத்த நொடியே மறக்கச் செய்தது.

அறையின் ஒரு மூலையில்,

கதிரின் பெண் குழந்தையைத் தன் மடியில் ஏந்தியபடி முல்லை அமர்ந்து,

அதன் பசியைத் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன முல்லை… உங்களுக்கு ரெஸ்ட் இல்லாம இருக்கா?”

என்று கேட்டபடியே நிலா அவளுடைய பையில் தேவையான துணிகளை அவசரமாக அடுக்கினாள்.

முல்லை சோர்ந்த கண்களுடன் நிலாவைப் பார்த்து,

“பாப்பாவுக்குப் பால் கொடுத்தாதான் தூங்குறாங்க…”என்றாள்.

அவளுடைய கண்களில் தூக்கமின்மையும், கடந்த சில மாதங்களாக அவள் அனுபவித்த கொடுமைகளும் தெளிவாகத் தெரிந்தது.

“முல்லை… ஊர்ல எங்க சித்திக்கு நெஞ்சு வலி. அதனால நான் உடனே கிளம்பணும்.”

என்று நிலா சொல்லியதும், முல்லையின் முகம் சட்டென மாறியது.

அவள் எதுவும் கேட்கவில்லை.

ஆனால் அவளுடைய கண்களில் தெரிந்த அந்தத் தயக்கத்தை நிலா கவனிக்காமல் இல்லை.

“நானும் கந்தன் மாமாவும் தான் போறோம். உங்ககூடக் கதிர் இருப்பான்.”

என்றாள் நிலா.

“நான் மட்டும்… அவர்கூட எப்படி?”

என்று முல்லை தயக்கத்துடன் கேட்டாள்.

அவளுடைய குரலில் பயத்தைவிடத் தயக்கமே அதிகமாக இருந்தது.

“நீ மட்டும் எங்க இருக்க? உன்கூட ரெண்டு குட்டீஸ் இருக்காங்களே!”

என்று நிலா சற்று சிரித்தபடி கூறினாள்.

ஆனால் முல்லையின் மனதில் வேறொரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

“ஒருவேளை… என்னாலதான் கதிர் ஊருக்குப் போகாம இருக்காரோ?”

அந்த எண்ணம் அவளுடைய மனதை மேலும் சங்கடப்படுத்தியது.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள்,

“நிலா… என்னை வேணும்னா… எங்காவது ஹாஸ்டல்ல…”

என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

“பைத்தியம் மாதிரி பேசாத முல்லை!”

என்று நிலா உடனே கோபமாகத் திரும்பிப் பார்த்தாள்.

“உனக்கு இருக்குற பிரச்சனைக்கு நீ இங்க இருக்குறதே safe இல்ல. இதுல தனியா எங்க போய்க் கஷ்டப்படப் போற?”

நிலாவின் கோபத்திற்குள் இருந்த அக்கறை முல்லைக்குப் புரிந்தது.

ஆனால்…

“நான் இவர்களுக்குத் தொல்லையாக இருக்கிறேனோ?”

என்ற எண்ணம் மட்டும் அவளுடைய மனதை விட்டு அகலவில்லை.

அவளுடைய முகத்தைப் பார்த்த நிலா சற்று மென்மையான குரலில்,

“முல்லை… ஜஸ்ட் ரெண்டு நாள்தான். நாங்க போய்ச் சித்தியைப் பார்த்துட்டு சீக்கிரமா வந்துடுவோம்.”என்றாள்.

பிறகு உறங்கிக் கொண்டிருந்த முல்லையின் ஆண் குழந்தையின் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டாள்.

அதன் அருகில் பால் குடித்துக் கொண்டிருந்த கதிரின் பெண் குழந்தையின் காலிலும் பாசமாக ஒரு முத்தம் பதித்தாள்.

“சரி… நான் கிளம்புறேன்.”

என்று சொல்லிவிட்டு தன் பையை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்.

வெளியே வந்ததும் கதிரைப் பார்த்த நிலாவின் கோபம் மீண்டும் தலைதூக்கியது.

“கந்தா…நீங்க இவன்கிட்ட சொல்லி முல்லையையும் ரெண்டு பிள்ளைகளையும் ஒழுங்கா பார்த்துக்கச் சொல்லுங்க. முக்கியமா… வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லுங்க.” என்றவள்,

கதிரை ஒரு முறை கூடப் பார்க்காமல் வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்த கந்தன்,

“மச்சான்… நீ எதுவும் கவலைப்படாத. நாங்க ஊருக்குப் போயிட்டு அங்க என்ன நிலவரம்னு உனக்குப் போன் பண்றேன்.”

என்று சொல்லிவிட்டு நேராக முல்லை இருந்த அறையின் கதவைத் தட்டினான்.

“சிஸ்டர்…”

என்று அழைத்தபடியே உள்ளே சென்றான்.

முல்லை அவனைப் பாவமாகப் பார்த்தாள்.

“நீங்க எதுவும் worry பண்ணாதீங்க. அந்த முக்தா பேமிலியினால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராம நாங்க பார்த்துக்குறோம். நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க.”

என்று கந்தன் ஆறுதலாகச் சொன்னான்.

பிறகு அருகில் இருந்த முல்லையின் குழந்தையின் கன்னத்தை மெதுவாக வருடிக் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

“நாங்க கிளம்புறோம் மச்சான்” என்ற கந்தன் நிலாவுடன் அவன் காரில் அவர்கள் சொந்த ஊரான மயிலாம்ப்பட்டி கிராமத்துக்குக் கிளம்பினான்.

அவர்கள் இருவரும் சென்ற அந்தக் கணத்தில் இருந்து கதிர் அதே இடத்திலேயே அசையாமல் அமர்ந்திருந்தான்.

சித்திக்கு என்னால தான் இந்த நிலைமை…?

அவங்க இப்போ எப்படி இருக்காங்க…?

நான் அவங்கள விட்டு வந்து இருக்கக்கூடாது” என்று பலவற்றை யோசித்த அவன் மனதுக்கு எந்த நிம்மதியும் கிடைக்கவில்லை.

இறுதியாகப் பல போராட்டத்திற்குப் பிறகு அப்படியே சோபாவில் சாய்ந்து கொண்டவன், மெதுவாகக் கண்களை மூடினான்.

ஆனால்… கண்களை மூடிய பிறகும் அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் மட்டும் நின்றபாடில்லை.

சில நிமிடங்கள் கடந்தன.

சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்க, கதிர் சட்டென்று கண்களைத் திறந்தான்.

எதிரே முல்லை நின்றுகொண்டிருந்தாள்.

“என்னங்க… என்ன வேணும்?”

என அவன் எழுந்து அவளருகே சென்றான்.

முல்லை சிறிது தயக்கத்துடன்,

“தண்ணி… தாகமா இருக்கு…” என்றாள்.

“நீங்க வாங்க… நான் ஹாட் வாட்டர் வைக்கிறேன்.”

கதிர் சமையலறைக்குள் செல்ல, முல்லையும் பின்னால் வர முயன்றாள். ஆனால் அவன் அடுப்பை பற்ற வைக்க, அவள் தயக்கத்துடன் சற்று தள்ளியே நின்றுகொண்டாள்.

கதிர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்தான்.

அந்தச் சமையலறை முழுவதும் அமைதியாக இருந்தது.

அடுப்பின் மெல்லிய சத்தமும்,கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிக்கொண்டிருந்த தண்ணீரின் சத்தமும் மட்டுமே கேட்டது.

ஆனால் கதிரின் மனதுக்குள் மட்டும்

ஆயிரம் சத்தங்கள்.

அவன் சித்தியைப் பற்றிய கவலை…

நிலாவிடம் ஏற்பட்ட கோபம்…

கண்மணியின் துரோகம் …

அவனுடைய பெண் குழந்தையின் எதிர்காலம்…

என்று எல்லாமே ஒன்றோடு ஒன்று கலந்துகொண்டு அவனை உள்ளுக்குள் கிழித்துக்கொண்டிருந்தது.

நொடிகள்… நிமிடங்களாக மாறின.

அவன் முன்னால் கொதித்துக்கொண்டிருந்த தண்ணீரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“டாக்டர் சார்…”

முல்லையின் மெதுவான குரல் அவன் காதில் விழுந்தது.

ஆனால் கதிர் அதைக் கவனிக்கவில்லை.

அவன் பார்வை இன்னும் கொதிக்கும் தண்ணீரிலேயே இருந்தது.

“டாக்டர் சார்… உங்களைத்தான்…”

இந்த முறை கொஞ்சம் சத்தமாக அழைத்தாள்.

கதிர் சட்டென்று சுயநினைவுக்கு வந்தான்.

அவன் பார்வை அடுப்பின் மீது விழுந்தது.

“அய்யோ!” என

கொதித்துக்கொண்டிருந்த தண்ணீரை இறக்க அவசரமாகக் கையை நீட்டியவன், துணியை எடுத்துக்கொள்ளாமல் பாத்திரத்தை நேரடியாகத் தொட்டுவிட்டான்.

“ஆ…!” என்று

சூடு தாங்காமல் கையை உதறியபடி வலியில் துடித்தான்.

“அய்யோ டாக்டர் சார்!” என

முல்லை பதறிப்போய் உடனே அடுப்பை அணைத்தாள்.

அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு,

“காட்டுங்க… ரொம்பச் சூடு பட்டிருச்சா?” என்று பதறியபடி அவன் கையில் ஊதினாள்.

“இல்ல… எனக்கு ஒண்ணும் இல்லை.”என

கதிர் உடனே கையை உருவிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

முல்லை அவனைப் பார்த்தபடி,

“எனக்குப் பச்சத் தண்ணியே போதும்… நீங்க எனக்காகக் கஷ்டப்படாதீங்க.”

என்று மெதுவாகச் சொல்லிவிட்டு, தண்ணீரைக்கூட எடுக்காமல் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவள் போவதைப் பார்த்த கதிர் தனக்குள்ளேயே வருத்தப்பட்டவன், மறுபடியும் சூடான தண்ணீரை வைத்தான்.

இந்த முறை துணியைப் பயன்படுத்திப் பாத்திரத்தை எடுத்தவன், அந்தத் தண்ணீரை ஒரு flask-ல் ஊற்றி எடுத்துக்கொண்டு முல்லையின் அறைக்குச் சென்றான்.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவன் அங்கே பார்த்த காட்சி அவனை அப்படியே நிற்க வைத்தது.

முல்லை கதிரின் பெண் குழந்தையைத் தூக்கி வைத்து, அவளுடைய துணியை மாற்றிக்கொண்டிருந்தாள்.

குழந்தை அழாமல் இருக்க அவளிடம் மெதுவாகப் பேசிக்கொண்டே, பெற்ற தாய்ச் செய்ய வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாகச் செய்துகொண்டிருந்தாள்.

கதிர் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘என் குழந்தையை இவ்வளவு அன்பா பார்த்துக்கொள்வதற்கு உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது‘

என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், கையில் இருந்த flask-ஐ மெதுவாக அவளருகில் வைத்தான்.

அவன் வந்தது தெரிந்ததோ என்னவோ கட்டிலில் படுத்து இருந்த முல்லையின் ஆண் குழந்தை சட்டென்று சிணுங்கி அழ ஆரம்பித்தான்.

தன் குழந்தையின் அழுகுரல் கேட்டு முல்லை அவனைத் தூக்க முடியாமல் கதிரின் பெண் பிள்ளையைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.

“நீங்க உங்க பிள்ளைக்குப் பசியாத்துங்க. பாப்பாவை நான் பார்த்துக்குறேன்” என்ற கதிர் தன் பெண் பிள்ளையை அவளிடம் இருந்து வாங்க கையை நீட்டினான்.

“தம்பிக்கு பால் கொடுத்து தான் தூங்க வச்சேன்” என்று முல்லை சொன்னதும்,

“அப்புறம் ஏன் சார் அழறாரு” என்று குழந்தையைக் கொஞ்சியப்படி கதிர் முல்லையின் ஆண் பிள்ளையைத் தன் கையில் தூக்கிகொண்டான்.

கதிரின் கைகளுக்குள் முல்லையின் ஆண் குழந்தை அமைதியாக உறங்க ஆரம்பித்தது.

முல்லையும் கதிரின் பெண் பிள்ளையைத் தொட்டிலில் போட்டவள், “நீங்க போய்ச் சாப்பிடுங்க நான் பிள்ளைகளைப் பார்த்துக்குறேன்” என்றாள்.

அவள் வார்த்தையைக் கேட்டு மெலிதாகச் சிரித்தவன், “இவங்க ரெண்டு பேரையும் நான் பார்த்துக்குறேன் நீங்க படுத்து தூங்குங்க” என்றவன் அருகே இருந்த இருக்கையில் குழந்தையோடு அமர்ந்துக்கொண்டான்.

இதற்கு முன் பழக்கமில்லாத ஒருவன் தன்னையும் தன் பிள்ளையையும் காப்பாற்றியத்தோடு நில்லாமல் தங்க இடம் கொடுத்து அவளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கிறான் என்ற நன்றி உணர்வு கதிர் மீது முல்லைக்கு எழ ஆரம்பித்தது.

தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த முல்லையை, “தூங்கலையா!? நான் இருக்குறது உங்களுக்குத் தொந்தரவா இருக்கா!?” என்று கதிர் கேட்டான்.

அவன் கேள்வியில் பதறிய முல்லை, “ஐயோ இல்ல டாக்டர் சார். நான் தான் உங்களுக்குத் தொல்லையா இருக்கேன். என்னால தான் நீங்க ஊருக்கு கூடப் போகவே இல்லை” என்றாள் தயக்கத்துடனே.

“நான் ஊருக்கு போகாததற்கு நீங்க காரணம் இல்லை” என்ற கதிர் தன் கையில் இருந்த முல்லையின் ஆண் குழந்தையைப் பார்த்து தான் பேசிக்கொண்டு இருந்தானே தவிர முல்லையின் முகத்தை அவன் நேரே பார்க்கவே இல்லை.

கதிரின் அந்தக் கண்ணியத்தை மதித்து முல்லை தான் அமர்ந்து இருந்த கட்டிலின் விழும்பில் தலையணை வைத்துக் கால்கள் குறுக்கி படுத்துக்கொண்டவளின் மனதில் தன்னை வளர்த்த செல்வம் மாமா எங்கே என்ற கேள்வி ஓடிக்கொண்டு இருந்தது.

குழப்பத்தில் முல்லையின் விழிகள் தூக்கத்தை மறந்து இருக்க, கதிரோ முல்லையின் ஆண் பிள்ளையை மெதுவாக அவள் கட்டிலில் படுக்க வைத்தவன் தன் குழந்தையைத் தூக்கிகொண்டான்.

“நீங்க தூங்குங்க. நான் பாப்பாக்கூட என் ரூம்ல தான் படுத்து இருப்பேன். குழந்தை பசிக்கு அழுதா நான் தூக்கிட்டு வரேன்.” என்றவன் கதவை சாத்திக்கொண்டு பெண் குழந்தையோடு அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.

கதிர் சென்றதும் முல்லை அருகே இருந்த போர்வையை எடுத்துத் தன்னைப் போர்த்திகொண்டவள் மனதில் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்ற கேள்விகள் தான் ஓடிக்கொண்டு இருந்து.

எவ்வளவு யோசித்தும் அவளுக்குள் எந்தத் தீர்வும் கிடைக்காமல் போக,இறுதியாக அவளை மறந்து கண்கள் மூடியவளுக்கு நீண்ட மாதங்களுக்குப் பிறகு தூக்கம் கண்களைத் தழுவியது.

சில நிமிடங்கள் கடந்திருந்தன.

நேரம் இரவு இரண்டு மணியைத் தாண்டியிருந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முல்லையின் காதுகளில், தூரத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் மெதுவாகக் கேட்டது.

முதலில் அது தன் குழந்தையின் அழுகுரலாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள், கண்களைத் திறந்து அருகில் படுத்திருந்த தன் ஆண் குழந்தையைப் பார்த்தாள்.

அவன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

“தம்பி தூங்கிக்கிட்டு தானே இருக்கான். அப்போ… பாப்பாதான் பசிக்கு அழறாளா?”

என்று தனக்குள் முணுமுணுத்தவள், அவசரமாகப் போர்வையை விலக்கிவிட்டு எழுந்தாள்.

நிலாவின் அறையிலிருந்து வெளியே வந்த முல்லை, ஹாலில் எரிந்துகொண்டிருந்த மங்கலான விளக்கின் வெளிச்சத்தில் சுற்றிலும் பார்த்தாள்.

வீடு முழுவதும் அமைதியாக இருந்தது.

ஆனால்…

கதிரின் அறையிலிருந்து மட்டும் குழந்தையின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

“பாப்பா ஏன் இப்படி அழறா?”

என்று பதற்றத்துடன் கேட்டுக்கொண்டவள், கதிரின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள்.

“டாக்டர் சார்…”

எந்தப் பதிலும் இல்லை.

மீண்டும் சற்றுச் சத்தமாக,

“டாக்டர் சார்…”

என்று அழைத்தாள்.

ஆனால் கதிரிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.

குழந்தையின் அழுகுரல் மட்டும் இன்னும் அதிகமாகக் கேட்டது.

ஒருவித பதற்றத்துடன் கதவின் கைப்பிடியைப் பிடித்த முல்லை,

“டாக்டர் சார்… நான் உள்ளே வர்றேன்…”

என்று சொல்லியபடி மெதுவாகக் கதவைத் திறந்தாள்.

அங்கே கட்டிலில் படுத்திருந்த கதிரின் பெண் குழந்தை, பசியால் முகம் சிவந்து போகும் அளவுக்கு அழுதுகொண்டிருந்தது.

“அய்யோ… பாப்பா…”

என்று பதறிய முல்லை வேகமாக உள்ளே சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.

“அழாதீங்க… அழாதீங்க… இதோ நான் வந்துட்டேன்…”

என்று குழந்தையைத் தட்டிக்கொடுத்தபடி சமாதானப்படுத்தினாள்.

சில நொடிகளில் குழந்தையின் அழுகுரல் சற்றுக் குறைந்தது.

“டாக்டர் சார்…”

என்று கதிரை அழைத்தபடி அறை முழுவதும் பார்வையைச் சுழற்றினாள்.

அவன் அங்கே இல்லை.

“எங்க போயிட்டாரு?”

என்று முல்லை குழப்பத்துடன் முணுமுணுத்தாள்.

கதிர் எங்கே சென்றிருப்பார் என்று தேடியவள், கட்டிலின் மறுபக்கம் பார்வையைச் செலுத்தினாள்.

அப்போது…

கதிர் கட்டிலிலிருந்து கீழே விழுந்து, தரையில் சுயநினைவின்றிக் கிடந்தான்.

“டாக்டர் சார்…!”

என்று பதறிய முல்லை, குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேகமாக அவன் அருகில் மண்டியிட்டாள்.

“டாக்டர் சார்… என்னாச்சு?”

என்று அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள்.

எந்த அசைவும் இல்லை.

“டாக்டர் சார்… கண்ணைத் திறங்க…”

மீண்டும் அவனை உலுக்கியவளின் குரல் நடுங்கியது.

ஆனால் கதிரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

என்ன செய்வதென்றே தெரியாமல் அவனைப் பார்த்தபடி சில நொடிகள் அப்படியே உறைந்து போன முல்லையின் கண்களில் கண்ணீர் திரண்டது.

“ஐயோ… நான் என்ன பண்ணுவேன்…?”

என்று பதற்றத்துடன் முணுமுணுத்தவள், சுற்றிலும் உதவிக்கு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள்.

ஆனால் அந்த வீட்டில் அவளையும்…

இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் தவிர வேறு யாருமே இல்லை.

“டாக்டர் சார்…”

என்று மீண்டும் பதறியவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியாமல் போனது.

– தொடரும்…

← Previous All Chapters Next →

16 comments

Kishore Key October 16, 2026 - 12:22 pm

👍

Kathirvelan Mullai October 17, 2026 - 3:00 am

🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

Vasu Sai October 16, 2026 - 12:46 pm

Iyqiyo

Kathirvelan Mullai October 17, 2026 - 3:00 am

ஐயையோ 🤣🤣🤣

Vasu Sai October 16, 2026 - 12:47 pm

Thambi ena paniruka akka heartpatient maran mama kuda ipadi pannala pavam kathiri save pannu sk

Yashni Benjamin October 16, 2026 - 1:13 pm

அருமையான கதை sk வித்தியாசமா இருக்கு அடுத்த பார்ட் படிக்க kathuuken 🌷❤️👌🥰😎😘🌸💐

Kathirvelan Mullai October 17, 2026 - 3:00 am

Thanks🌷🌷

jo October 16, 2026 - 4:38 pm

Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe

Kathirvelan Mullai October 17, 2026 - 2:59 am

Thanks🌺🌺🌺

Sam Sam October 16, 2026 - 5:23 pm

Kathiruku ennachu ivanga epadi onnu seruvanga mullai kathir pasanga epadi seruvanga

Kathirvelan Mullai October 17, 2026 - 2:59 am

Thanku

வென்மதி October 16, 2026 - 9:52 pm

Super story sk sariyana placela continue poatinga😡😡😡

Kathirvelan Mullai October 17, 2026 - 2:59 am

நன்றி 🕊️🕊️

kanveer October 17, 2026 - 12:49 am

கதிரும் முல்லையும் தனியாக இருக்கிற நேரம் கதையின் போக்கு மாறும் என்று எண்ணுகிறேன்

kanveer October 17, 2026 - 12:50 am

👌👌👌

Kathirvelan Mullai October 17, 2026 - 2:58 am

நன்றி ngo🕊️🕊️

Leave a Comment

error: Content is protected !!