Stories that touch hearts

Home  /  02. S.K (மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ)  /  Chapter 5

CHAPTER 5

முல்லைப்பூ – 5

By S.K Velan · October 12, 2026

10

“இவரு யார்க்கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு?” என்று நிலா தனக்குள் யோசித்தபடியே நிற்க,

“கதிர்… நாம உடனே முல்லையை இங்கிருந்து வேற இடத்துக்கு அழைச்சிட்டு போகணும்!” என்ற கந்தனின் பதற்றத்தைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.

“ஏன்? என்னாச்சு?” என்று கதிர் கேட்க,

“அந்த முகேஷோட பொண்டாட்டி முக்தாதான் பேசுனாங்க. எப்பா! என்ன வாய் டா அவங்களுக்கு!” என்று கந்தன் சலிப்புடன் சட்டை முனையால் நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டான்.

“ஏன் கந்தா? என்னாச்சு?” என்று நிலா பதற்றத்துடன் கேட்டாள்.

“முல்லையோட குழந்தைக்குத்தான் அவங்க குறி வைக்கிறாங்க!”

கந்தன் சொன்ன அந்த ஒரு வார்த்தை, முல்லையின் நெஞ்சில் இடியென இறங்கியது. சட்டென அவளது முகம் வெளுத்துப் போனது.

“ஐயோ… என் பிள்ளைக்கு மறுபடியும் அவங்களால ஆபத்து வருமா?” என்று அலறிய பயத்துடன், பக்கத்தில் படுத்திருந்த தன் பிஞ்சு மகனைப் பார்த்தாள்.

“முல்லை, பயப்படாதீங்க… நாங்க இருக்கோம்,” என்று நிலா அவளது தோளைப் பற்றி ஆறுதல் கூறினாள்.

“டேய்… அப்படி என்னதான் பிரச்சனை? இதுக்கெல்லாம் உன் மேலதிகாரி ஏன் உன் லைனுக்கு வர்றாங்க?” என்று கதிர் சந்தேகத்துடன் கேட்டான்.

“அவங்க பேசுறதை வச்சுப் பார்த்தா… அவங்களோட டார்கெட் முல்லையோட பிள்ளைதான்,” என்றான் கந்தன்.

“இந்தக் குழந்தை அவங்களுக்கு எதுக்கு?” என்று நிலா கேட்க,

“அதெல்லாம் அப்புறம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். கதிர்… நீ உடனே உன் ஸ்டாஃப்ஸ் எல்லார்கிட்டயும் முல்லையைப் பற்றி யாராவது வந்து விசாரிச்சா, அப்படி யாரும் இங்க அட்மிட் ஆகலைன்னு சொல்லச் சொல்லு,” என்றான் கந்தன் உறுதியான குரலில்.

கதிரும் அமைதியாகத் தலையசைத்தான்.

“அப்போ… முல்லையை நம்ம வீட்டுக்கே அழைச்சிட்டு போயிடலாமா?” என்று நிலா கேட்டாள்.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் கதிர் ஒரு நொடி தயங்கினான். அவனுடைய பார்வை மெதுவாக முல்லையின் பக்கம் திரும்பியது.

கலங்கிய விழிகளுடன் தன் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவளுக்கு அருகில், பிறந்து ஒரு நாள் கூட ஆகாத அந்த ஆண் குழந்தை, தன் குட்டி முஷ்டியைச் சுருட்டிக்கொண்டு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

அந்தக் குழந்தையைப் பார்த்த கதிரின் மனம் கனத்தது.

‘பிறந்து ஒரு நாள் கூட ஆகாத பிஞ்சை… எதற்காக அவங்க அம்மாகிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறாங்க?’

என்ற கேள்வி அவன் நெஞ்சைக் குடைந்தது.

“டேய் கதிரு…” என்ற கந்தனின் குரல் கேட்டதும் கதிர் சுயநினைவுக்கு வந்தான்.

“உன் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்குது. வா… நாம அதெல்லாம் வீட்டுக்குப் போய் நிதானமா விசாரிச்சுக்கலாம்,” என்று கந்தன் சொன்னதும் கதிர் சம்மதமாகத் தலையசைத்தான்.

முல்லையை அவள் குழந்தையுடன் கதிரின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அனைவரும் முடிவு செய்தனர். அவளுடன் அவளுடைய ஆண் குழந்தையையும், கதிரின் பெண் குழந்தையையும் பூப்போலப் பாதுகாப்பாகத் தூக்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

—

முகேஷின் பங்களாவில்…

“யோவ்… நீயெல்லாம் ஒரு மேலதிகாரியா?” என்று கால் மேல் கால் போட்டுக்கொண்டு, திமிராக நாற்காலியில் சாய்ந்தபடி கேட்டாள் முக்தா.

அவள் அருகில் அமர்ந்திருந்த முகேஷ், “நீ கோபப்படாத முக்தா…” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றான்.

“கோபமா?” என்று முக்தா அவனை முறைத்துப் பார்த்து, “எனக்குக் கோபம் இல்லை… கொலை வெறியே ஆகுது!” என்றாள் பற்களைக் கடித்தபடி.

அவளுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அந்த மேலதிகாரிக்கு முதுகில் சில்லிட்டது.

“மேடம், நீங்க கவலைப்படாதீங்க. நான் உடனே அந்தக் கந்தன் வீட்டுக்கு ஆள் அனுப்பி, அவனைத் தூரத்துல இருந்து விசாரிக்கச் சொல்றேன்,” என்றார் பதற்றத்துடன்.

“ஏன்? அவனை நாலு மிதி மிதிச்சு விசாரிக்க மாட்டியா?” என்று முக்தா காரமாகக் கேட்டாள்.

“ஐயோ மேடம்… அவன் ரொம்ப வம்பு பிடிச்சவன்! சும்மாவே ஏழரையை இழுப்பான். இப்போ நான் பேசுனதையே ஆடியோவா ரெக்கார்ட் பண்ணி வெளியே விட்டாலும் விட்டுடுவான் மேடம்!” என்று கந்தனின் சுபாவத்தைப் பற்றிப் புலம்பினார்.

“ம்… அவன் எங்களுக்கே லைவ் போட்டவன்தான். அவன் மட்டும் இல்லைனா இந்நேரம் அந்தக் குழந்தை என் கையில இருந்திருக்கும்!” என்ற முகேஷின் வார்த்தையைக் கேட்டு முக்தாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

“யோவ்! அந்தக் கந்தனோட குடும்பத்தைத் தூக்கிட்டா, அவன் முல்லையோட குழந்தையை நம்மகிட்ட ஒப்படைக்க வாய்ப்பிருக்கா?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

“ஐயோ வேண்டாம் மேடம், அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க! எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் கொடுங்க. நானே அந்தக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடிச்சு தூக்கிட்டு வந்து உங்க கையில தர்றேன்,” என்று மேலதிகாரி கெஞ்ச, முக்தாவின் உதட்டில் ஒரு கொடூரமான, திமிரான புன்னகை அரும்பியது.

“அது மட்டும் நடக்கட்டும்! அப்புறம் என் பையன்தான் இந்த உலகத்துக்கே சிம்மசொப்பனமா இருப்பான்!” என்று முக்தா பகல் கனவில் மிதந்தாள்.

—

அதற்குள் கதிரும், கந்தனும், நிலாவும் முல்லையையும் பிஞ்சுக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கதிர்வேலனின் வீட்டை நோக்கிப் புறப்பட்டிருந்தனர்.

முல்லையின் மனதில், ‘நாம் எங்கே போகிறோம்?’ என்ற கேள்வியை விட…

‘எப்படியாவது அந்த மங்கலத்திடமிருந்து நானும் என் குழந்தையும் தப்பித்தால் போதும்…’

என்ற எண்ணம்தான் மலைபோல நின்றது.

தன் மார்போடு அணைத்திருந்த குழந்தையின் மெல்லிய மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட, அவளது விழிகளில் பயமும் தாய்மையின் தவிப்பும் கலந்திருந்தன.

காருக்குள் நிலா அந்த அமைதியைக் கலைத்தவள்,

“கந்தா… இப்போ நாம கதிர் வீட்டுக்குப் போனா மட்டும் அந்த முக்தா முல்லையோட குழந்தையை ஒண்ணும் பண்ண மாட்டாங்களா?” என்று கேட்டாள்.

“அதுக்கு வாய்ப்பு ரொம்பக் கம்மிதான் நிலா. ஏன்னா… நீயும் கதிரும் என்னோட ஃப்ரெண்ட்ஸ்ன்னு என் டிபார்ட்மென்ட் ஆளுங்களுக்குத் தெரியாது,” என்றான் கந்தன் ஸ்டீயரிங்கைத் திருப்பியபடி.

“டேய்… ஆனா நீ லைவ் வீடியோ போட்டதுல எங்க ரெண்டு பேர் முகமும் இருக்கும்தானே?” என்று கதிர் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“நான் அந்த வீடியோவை அப்பவே டெலீட் பண்ணிட்டேன் மச்சான்,” என்று கந்தன் சொல்ல,

“ம்…” என்ற கதிர் யோசனையில் ஆழ்ந்தான்.

ஆனால் நிலாவின் கவலை மட்டும் மாறவில்லை.

“நீ டெலீட் பண்ணதெல்லாம் சரிதான். ஆனா கதிர் வேற ஹாஸ்பிடல்ல வச்சு யாரையோ அடிச்சுப் போட்டானே… அவங்கள வச்சு எதுவும் பிரச்சனை வராதா?” என்றாள் நிலா.

“அதுக்குத்தான் உங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப்கிட்ட சொல்லி, யார் வந்து கேட்டாலும் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேனே,” எனக் கந்தன் பதில் சொன்னான்.

அவனுடைய வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை, நிலாவின் மனப் பாரத்தைக் கொஞ்சம் குறைத்தது.

‘இப்போதைக்கு முல்லையின் குழந்தைக்கு எந்தப் பிரச்சனையும் வராது…’

என்று அவள் மனம் ஆசுவாசப்பட்டது.

ஆனால்… முல்லையின் மனதோ,

‘இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது… ஆனா எனக்காக இவ்வளவு தூரம் இறங்கி உதவி பண்றாங்க. நான் இவங்களுக்குப் பாரமா ஆயிடுவேனோ…’

என்ற தவிப்பில் சுருண்டு கொண்டிருந்தது.

சில நிமிடப் பயணத்திற்குப் பிறகு, கார் ஒரு கம்பீரமான வீட்டின் வாசலை அடைந்தது.

வாசலின் இருபுறமும் அடர்ந்த பசுமையான செடிகள் அசைந்தாட, வீட்டைச் சுற்றி மெல்லிய மஞ்சள் விளக்குகள் நிலவொளியோடு போட்டியிட்டு எரிந்து கொண்டிருந்தன.

இரவு நேரத்தின் அமைதிக்குள் அந்த வீட்டின் முன்புறம் ஒரு தனித்துவமான அழகுடன் மின்னியது.

வாசலில் இருந்த பித்தளைப் பெயர்ப்பலகையில்,

“Dr. கதிர்வேலன்”

என்ற எழுத்துகள் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தன.

கந்தன் காரை உள்ளே நிறுத்தினான்.

“வாங்க முல்லை…” என்று நிலா அவளை அன்புடன் அழைத்து, அவளது கைகளில் இருந்த குழந்தையைத் தன் நெஞ்சோடு பூப்போலப் பாதுகாப்பாக மாற்றிக் கொண்டாள்.

“கதிர்… நீயும் பாப்பாவை பத்திரமா தூக்கிட்டு வா,” என்று சொல்ல, கதிரும் தன் மகளைத் தன் மார்போடணைத்து காரிலிருந்து இறங்கினான்.

எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வெளிச்சம் பொங்கி வழிந்தது. சுவர்களில் நேர்த்தியான ஓவியங்கள், ஜன்னல்களில் மெல்லிய திரைச்சீலைகள், பளிங்குத் தரை… என்று அந்த வீடு வெளியிலிருந்து பார்த்ததைவிட உள்ளே அமைதியின் புகலிடமாக விளங்கியது.

ஆனால்… அந்த வீடு எவ்வளவு வெளிச்சமாக இருந்தாலும், கதிர்வேலனின் மனதுக்குள் அது இருள் சூழ்ந்த நினைவுகளையே கிளறியது.

வாசலைத் தாண்டிய அந்த நொடியிலேயே அவனுடைய மனதில் புதைந்து கிடந்த கசப்பான நினைவுகள் அலை அலையாய்ப் பொங்கின.

கண்மணி…

அவள் வீசி எறிந்த வார்த்தைகள்…

தான் அனுபவித்த ஏமாற்றம்…

தாயில்லாமல் தன் பிஞ்சு மகளைத் தனியாக வளர்க்கப் போகும் இந்த நிலை…

கடந்த காலத்தின் வலி நெஞ்சை அடைக்க, தாங்க முடியாமல் தன் கைகளில் இருந்த மகளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், யாரிடமும் ஒரு வார்த்தையும் சொல்லாமல் நேராகத் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

கதிரின் அந்த வேதனையான செயலைப் பார்த்த முல்லைக்கு நெஞ்சில் சங்கட முள் தைத்தது.

அதைக் கவனித்த நிலா உடனே, “நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க முல்லை. அவன் ஏதோ பழைய நினைவுகள், டென்ஷன்ல இருக்கான்,” என்றாள்.

முல்லை அவசரமாய்த் தலையசைத்தாள்.

“ஐயோ… நான் ஏன் தப்பா நினைப்பேன்? முகவரி கூடத் தெரியாத எனக்கு இவ்வளவு பெரிய உதவி பண்றீங்க. உங்களைப் போய் நான் எப்படித் தப்பா நினைப்பேன்?” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

அவளுடைய வார்த்தைகளில் இருந்த தூய்மையான நன்றியுணர்வு நிலாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

அப்போது சமையலறைப் பக்கம் சென்று கை அலம்பி வந்த கந்தன், கைக்குட்டையில் கரங்களைத் துடைத்தபடியே திரும்பினான்.

“நிலா… என்ன நீ அவங்களை நடுவீட்டுல நிக்க வச்சுக்கிட்டு கதை பேசிட்டு இருக்க?முதல்ல அவங்களுக்கு ரூம் ஏற்பாடு பண்ணு,” என்று சொல்லிவிட்டு, சமையல் வேலையைக் கவனிக்க மீண்டும் ஓடினான்.

“முல்லை… மாடில ரெண்டு ரூம் இருக்கு. பட் உங்களுக்கு இப்போதான் ஸ்டிச்சஸ் போட்டு இருக்கு. ஸ்ட்ரெய்ன் பண்ணக் கூடாது. நீங்க கீழ இருக்குற என் ரூமையே யூஸ் பண்ணிக்கோங்க,” என்றாள் நிலா பரிவோடு.

அவள் கையில் இருந்த முல்லையின் மகனை மெதுவாக ஏந்திக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.

அவளைத் தொடர்ந்து மெதுவான எட்டுகளுடன் முல்லையும் அறைக்குள் நுழைந்தாள்.

நிலாவின் அறை மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. அடுக்கு வரிசையில் இருந்த புத்தகங்கள், ஜன்னல் திரைச்சீலையைத் தாண்டி அறைக்குள் விழுந்த மென்மையான நிலவொளி… என அறை முழுவதும் ஒரு அமைதியான சூழல் நிரம்பியிருந்தது.

சுவரின் ஒரு பகுதியில் நிலா தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தபோது எடுத்த புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

மற்றொரு சுவரில்… கதிர்வேலனும் நிலாவும் ஒரு தாய் போன்ற பெண்மணியின் இருபுறமும் அமர்ந்து, அவளை அணைத்தபடி சிரித்துக்கொண்டிருந்த புகைப்படம் ஒன்று இருந்தது.

அந்தப் பெண்மணியின் கைகளில் கதிரும் நிலாவும் பெற்றிருந்த பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் இருந்தன.

அந்தப் புகைப்படத்தைப் பார்த்த முல்லையின் பார்வை சில நொடிகள் அங்கேயே உறைந்தது.

‘இவங்க யாரு?’

என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, “முல்லை…” என்ற நிலாவின் மெல்லிய குரல் கேட்டது.

நிலா ஏற்கனவே தன் மெத்தையில் முல்லையின் மகனைப் பத்திரமாகக் கிடத்தியிருந்தாள்.

“முல்லை… உங்களை ‘வாங்க, போங்க’ன்னு கூப்பிட ஒரு மாதிரி சங்கடமா இருக்கு. நான் உன்னை ‘வா, போ’ன்னே உரிமையா கூப்பிடவா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

முல்லையின் வாடிய முகத்தில் முதல்முறையாக ஒரு மென்மையான புன்னகை பூத்து,“உங்க இஷ்டம்… நீங்க எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க.” என்றாள்.

“ம்… சரி முல்லை. அதே மாதிரி நீயும் என்னைப் பேரு சொல்லியே கூப்பிடு.”என்று நிலா சொன்னதும்,

“ம்.. ” என்றாள் முல்லை லேசான சிரிப்புடன்.

“ஓகே முல்லை… நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு குழந்தைகூடவே ரெஸ்ட் எடு. நான் போயிட்டு டின்னர் ரெடி பண்றேன்,” என்று சொல்லிவிட்டு நிலா அறையை விட்டு வெளியேறினாள்.

அறைக்குள் இப்போது முல்லையும் அவளுடைய பிஞ்சு மகனும் மட்டுமே இருந்தனர்.

முல்லை மெதுவாகக் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். அவள் உடலில் உள்ள தையல் வலி லேசாக இழுக்க, அதைச் சகித்துக் கொண்டு தன் குழந்தையின் அருகில் சாய்ந்தாள்.

அவளது மெல்லிய விரல்கள், பிறந்து ஒரு நாளே ஆன அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பஞ்சு போன்ற கன்னத்தை மெதுவாக வருடிக் கொடுத்தன.

தன் தாயின் விரல் பட்டதும், அந்தச் சிறு கை முஷ்டியைத் திறந்து முல்லையின் ஒரு விரலைத் தன் குட்டி விரல்களால் இறுக்கமாக பற்றிக் கொண்டது.

அந்த ஸ்பரிசத்தில் முல்லையின் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்த்துக் கன்னத்தில் வழிந்தது.

முந்தானை நுனியால் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டவள்,

‘எத்தனை பேரிடமிருந்து உன்னைக் காப்பாத்தணும்னு தெரியலையே என் செல்லமே…’

என்று மனதிற்குள் உருகினாள்.

—

அதே நேரத்தில்… சமையலறையில் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த கந்தனை நோக்கி நடந்து வந்த நிலா, “கந்தா…” என்று அழைத்தாள்.

“முல்லையைக் கண்மணி அறையில… தங்க வைக்கலாமா?” என்று நிலா தயக்கத்துடன் கேட்டாள்.

“ஏய்… அதெல்லாம் வேண்டாம்!” என்று கந்தன் உடனடியாக மறுத்தான்.

கதிரின் கடந்த கால நினைவுகளும் வலியும் நிறைந்த அந்த அறைக்குள் முல்லையைத் தங்க வைப்பது சரியாக இருக்காது என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

“சரி சரி… மொதல்ல எல்லாரையும் சாப்பிட வரச் சொல்லு,” என்றான் கந்தன் சமையல் கரண்டியைப் பிடித்தபடியே.

கந்தன் சொன்னதை அடுத்து, நிலா அறைக்குச் சென்று முல்லையை இரவு உணவிற்கு அழைத்து வந்தாள்.

முல்லை தயக்கத்துடன் டைனிங் டேபிள் அருகே வந்து அமர்ந்த அடுத்த நொடி…

கதிரின் அறையிலிருந்து அவனுடைய பெண் பிள்ளை பசிக்கு அழும் மெல்லிய சத்தம் கேட்டது.

“அடடா… முல்லை, உங்களை இனி என் மருமக தூங்க விட மாட்டா போலவே!” என்று சிரித்தபடி சொன்ன நிலா, வேகமாகக் கதிரின் அறைக்குள் சென்று அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து முல்லையின் கையில் கொடுத்தாள்.

முல்லை தன் தாய்மையின் இயல்போடு அந்தப் பிஞ்சைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

“நிலா… முதல்ல அவங்களைச் சாப்பிட விடுடி,” என்றபடி கதிர் அவளைத் தொடர்ந்து வெளியே வர, கதிரைப் பார்த்ததும் முல்லை மரியாதையுடன் சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.

“நீங்க உக்காந்து சாப்பிடுங்க முல்லை. குழந்தை அழுததும் உடனே பால் தரணும்னு அவசியம் இல்லை, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க,” என்று கதிர் மென்மையான குரலில் சொன்னான்.

“ஆமா ஆமா, டாக்டர் சொன்னா சரியாத்தான் இருக்கும். சோ, நீங்க முதல்ல சாப்பிடுங்க,” என்ற கந்தன், சூடான உணவைத் தட்டில் வைத்து முல்லையின் முன்னே நகர்த்தினான்.

“இல்ல… நான் குழந்தைக்குப் பால் கொடுத்துட்டே சாப்பிடுறேன்,” என்று முல்லை தயக்கத்துடன் குழந்தையை அணைக்க,

“பரவாயில்லை நீங்க சாப்பிடுங்க முல்லை… அதான் உங்ககிட்ட வந்ததும் குழந்தை அழுகையை நிறுத்திடுச்சே!” என்றான் கதிர் அவளது தயக்கத்தைப் புரிந்து கொண்டு.

“ம்… சாப்பிடுங்க முல்லை,” என்று அனைவரும் அன்புடன் வற்புறுத்த, கந்தன் கழுவி வைத்த தட்டில் முல்லை கொஞ்சமாகச் சாப்பிட்டு முடித்தாள்.

சாப்பிட்டு முடித்துத் தன் முந்தானையிலேயே கையைத் துடைத்துக் கொண்டவளின் மனதில், அடுத்து தன் வாழ்விலும் தன் குழந்தையின் வாழ்விலும் என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வியும் பயமும் ஒரு சேர நிழலாடிக் கொண்டிருந்தன.

அவளின் மனதை அறிந்துகொண்ட நிலா,

​”இப்போவாவது சொல்லுங்க முல்லை… உங்க குடும்பம் எங்க இருக்கு? இந்த ஊர்ல வேற யாராவது உங்களுக்குச் சொந்தக்காரங்க இருக்காங்களா?” என்று அக்கறையுடன் வினவினாள்.

​அங்கே இருந்த கதிரும் கந்தனும் கூடத் தங்களின் உரையாடலை நிறுத்திவிட்டு, முல்லையின் பதிலுக்காக அவளையே பார்த்துக் கொண்டிருக்க… முல்லையின் முகத்தில் பதற்றம் குடிகொண்டு அவளுடைய கைகள் தானாகவே நடுங்கத் தொடங்கின.

​நிலா அவளது நடுங்கும் கரங்களை மெதுவாக பற்றி,

​”சரி முல்லை… உங்களால எதுவும் பேச முடியலைனா விடுங்க. ஆனா உங்க குழந்தைக்காகவாவது நீங்க உண்மையச் சொல்லி ஆகணும். உங்க புருஷன் எங்க இருக்காரு? என்று கேட்டாள்.

​‘புருஷன்’ என்ற வார்த்தையைக் கேட்டதும், முல்லையின் உடம்பு ஒரு நொடி அதிர்ச்சியில் சிலிர்த்தது.

அவளுடைய அந்த அதிர்ச்சியைக் கண்ட கந்தன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.

“ஆமா முல்லை… உங்க புருஷன் எங்க? உங்க கழுத்துல தாலி இருக்கே! அப்போ உங்களுக்குக் கணவர் இருக்கார் தானே?” என்று கேட்டான்.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் முல்லையின் பார்வை மெல்லத் தன் கழுத்தை நோக்கித் தாழ்ந்தது.

அங்கே தொங்கிக்கொண்டிருந்த தாலியைக் கண்டவளின் முகம் அப்படியே மாறியது.

‘இந்தத் தாலி…’ என்று அவளுடைய விரல்கள் நடுங்கின.

மெதுவாகக் கையை உயர்த்தியவள், தன் கழுத்திலிருந்த தாலியைத் தொட்டுப் பார்த்தாள்.

அதைத் தொட்ட அந்த நொடியே, அவளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போலிருந்தது.

தாலியை இறுகப் பற்றிக்கொண்ட முல்லையின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. உதடுகள் துடிக்க, மூச்சு திணற, அவளால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை.

அடுத்த நொடியே, தாலியைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கதறி அழத் தொடங்கினாள்.

“முல்லை!” என்று பதறியபடி நிலா அவளை நெருங்கினாள்.

ஆனால், முல்லையோ எதற்கும் பதிலளிக்காமல் அந்தத் தாலியை இறுகப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

“எனக்குத் தெரியாது. என் கழுத்துல தாலி கட்டினது யாருனும் எனக்குத் தெரியாது. என் வயத்துல பிறந்த பிள்ளைக்கு அப்பா யாருனும் எனக்குத் தெரியாது” என்ற முல்லையின் வார்த்தையைக் கேட்டு அங்குள்ள மூவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்

– தொடரும்…

← Previous All Chapters Next →

5 comments

Jacqueline October 12, 2026 - 11:36 pm

அருமை

kanveer October 13, 2026 - 2:15 pm

Wowolewwwwweeee நான் வந்துட்டேன் sk darlu💐💐💐💐💐💐💐கதை அருமையோ அருமை சீக்கிரமா அடுத்தடுத்து part போடுங்க சீக்கிரம் வாங்க

jo October 13, 2026 - 5:27 pm

Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe

Kathirvelan Mullai October 13, 2026 - 7:29 pm

நன்று 💜💐💐💐💐💐

Sam Sam October 14, 2026 - 4:56 am

Super sk

Leave a Comment

error: Content is protected !!